சனி, 26 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 239

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கோபாலர்களைக் கொண்டு அன்னம் வேண்டுகிற வ்யாஜத்தினால் (சாக்கினால்) ப்ராஹ்மண பத்னிகளை அனுக்ரஹித்து, யாகத்தில் தீக்ஷித்துக் கொண்டிருக்கிற ப்ராஹ்மணர்களுக்கு அனுதாபத்தை விளைத்தல்.)

கோபர்கள் சொல்லுகிறார்கள்:- ராமா! ராமா! மிகுந்த வீர்யமுடையவனே! க்ருஷ்ணா! துஷ்டர்களை அழிக்குந் தன்மையனே! இந்தப் பசி எங்களை வருத்துகின்றது. அதை அடக்கும் வழி தேடுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தேவகிக்குப் பிள்ளையாகப் பிறந்து, மனுஷ்யனாய் நடனம் செய்து கொண்டிருப்பினும், ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) தன்னிலைமை மேன்மேலும் விளங்கப் பெற்றிருக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு கோபாலர்களால் விண்ணப்பம் செய்யப்பெற்று, தன்னிடத்தில் மிகுந்த பக்தியுடைய ப்ராஹ்மண பத்னிகளை அனுக்ரஹிக்க முயன்று, அந்தக் கோபாலர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான். 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வேதங்களை ஓதி உணர்ந்து உபதேசிக்கும் திறமையுடையவர்களான ப்ராஹ்மணர்கள், ஸ்வர்க்கத்தை விரும்பித் தேவதைகளின் ஆராதன ரூபமான ஆங்கிரஸமென்னும் ஸத்ரயாகத்தை அனுஷ்டிக்கிறார்கள். அவ்விடம் போவீர்களாக. கோபர்களே! அங்கு போய் மஹானுபாவனும், நம் மன்னனுமாகிய பலராமனுடைய பெயரையும், என்னுடைய பெயரையும் சொல்லி, எங்களால் அனுப்பப்பட்டோம் என்பதை அறிவித்து, அன்னம் வேண்டுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு  பகவானால் கட்டளை இடப்பெற்ற அந்தக் கோபாலர்கள், அப்படியே சென்று, இரண்டு கைகளையும் குவித்து, பூமியில் தண்டம் போல் விழுந்து, ப்ராஹ்மணர்களை நமஸ்கரித்து, அன்னம் வேண்டினார்கள்.

கோபாலர்கள் சொல்லுகிறார்கள்:– ஓ, ப்ராஹ்மணர்களே! நாங்கள் சொல்லுவதைக் கேட்பீர்களாக. நாங்கள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கட்டளைப்படி நடக்குந்தன்மையரான கோபாலர்கள். உங்களுக்கு க்ஷேமம் உண்டாகுக. நாங்கள், இப்பொழுது அந்த ஸ்ரீக்ருஷ்ணனாலும், அவனுடைய தமையனாகிய பலராமனாலும் அனுப்பப்பட்டு, வந்திருக்கின்றோம். அதை அறிவீர்களாக. இதோ ஸமீபத்திலேயே பசுக்களை மேய்த்துக்கொண்டிருக்கிற அந்த ராம க்ருஷ்ணர்கள், பசியினால் பீடிக்கப்பட்டு உங்களிடத்தினின்று அன்னத்தை விரும்புகிறார்கள். 

ப்ராஹ்மணர்களே! தர்மத்தை உணர்ந்தவர்களில் சிறந்தவர்களே! இந்த விஷயத்தில் உங்களுக்கு ச்ரத்தை (ஊக்கம், தீவிர விருப்பம்) இருக்குமாயின், வேண்டுகிற அந்த ராம க்ருஷ்ணர்களுக்கு, அன்னம் கொடுப்பீர்களாக. தீக்ஷிதனுடைய (யாக விரதம் பூண்டுள்ளவரிடம்) அன்னத்தைப் புசிக்கலாகாதேயென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். பசு ஹிம்ஸை உடைய யாகத்திலும், ஸௌத்ராமணி யாகத்திலும் தான் யஜமானனுடைய அன்னத்தைப் புசித்தால் தோஷமேயொழிய, மற்றதில், யாகம் செய்பவர்களின் அன்னத்தைப் பசியுள்ளவன் புசிப்பானாயின், தோஷம் கிடையாது. ஆகையால், எங்களுக்கு அன்னம் கொடுப்பீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அற்பமான பலனை ஆசைப்பட்டுப் பெரிய கார்யம் செய்பவர்களும், மூடர்களும், தங்களை வ்ருத்தர்களாக (பெரியவர்களாக) நினைத்துக் கொண்டிருப்பவர்களுமாகிய அந்த ப்ராஹ்மணர்கள், மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கோபாலர்கள் மூலமாய் அன்னம் வேண்டின வேண்டுகோளைக் கேட்டும், கேளாதவர்கள் போலவே இருந்து விட்டார்கள். தேசம், காலம், பலவகையான த்ரவ்யம், மந்த்ரம், தந்த்ரம், ருத்விக்குகள், அக்னிகள், தேவதை, யஜமானன், யாகம், தர்மம் ஆகிய இவையெல்லாம் எவனுடைய உருவங்களோ அப்படிப்பட்டவனும், ஒன்றான பரப்ரஹ்மமும், ஷாட்குண்ய பூர்ணனும், இந்திரியங்களால் விளையும் அறிவுகளுக்கு விஷயமாகாதவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை, கர்ம விசாரத்திற்குரிய (யாகம் முதலிய கர்மங்களைப் பற்றி மட்டுமே விவாதிப்பவர்களான) அற்ப மதியுடையவர்களும், மரணம் அடையும் தன்மையதான தேஹத்தை (உடலை) ஆத்மாவென்று ப்ரமித்திருப்பவர்களுமாகிய அவ்வந்தணர்கள், ஸாதாரணமான ஒரு மனுஷ்யனென்றே நினைத்தார்கள். 

சத்ருக்களை அழிக்குந் திறமையுடைய மஹாராஜனே! அவ்வந்தணர்கள், அன்னம் கொடுக்கிறோமென்றாவது, கொடுக்கமாட்டோமென்றாவது ஒன்றும் போசாதிருக்கையில், கோபர்கள் அன்னம் கிடைக்குமென்கிற ஆசையற்று, ஸ்ரீக்ருஷ்ண ராமர்களிடம் திரும்பி வந்து, அதை அப்படியே சொன்னார்கள். ஜகத்திற்கெல்லாம் ஈச்வரனும், மஹானுபாவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், அதைக் கேட்டுச் சிரித்து, “கார்யம் கைகூட வேண்டுமென்று விரும்புகிறவர்கள், ப்ரயத்னம் (முயற்சி) வீணானதைப் பற்றி வெறுக்கலாகாது. யாசிக்கப் போனால், அவமதி வருவது ஸித்தமே” என்கிற லோக  ந்யாயத்தை அறிவிப்பவன் போல், மீளவும் கோபர்களைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நான், தமையனாகிய பலராமனுடன் வந்திருப்பதை ப்ராஹ்மண பத்னிகளுக்கு அறிவியுங்கள். என்னிடத்தில் மிகுந்த நட்புடையவர்களும், புத்தியினால் என்னிடத்தில் வாஸம் செய்பவர்களுமாகிய அவர்கள், உங்களுக்கு வேண்டிய அளவு அன்னம் கொடுப்பார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கோபர்கள் அவ்வாறே சென்று, பத்னீ சாலையில் (ப்ராஹ்மணர்களின் மனைவிகள் இருக்கும் இடத்தில்) நன்கு அலங்கரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்ற ப்ராஹ்மண பத்னிகளைக் கண்டு, நமஸ்கரித்து, வணக்கத்துடன் இவ்வாறு மொழிந்தார்கள்.

கோபர்கள் சொல்லுகிறார்கள்:- ப்ராஹ்மண பத்னிகளாகிய உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்பீர்களாக. இவ்விடத்திற்கு அருகாமையில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனால் அனுப்பப்பட்டு, நாங்கள் இவ்விடம் வந்திருக்கிறோம். பலராமனோடு கூடிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டு வெகுதூரம் வந்தான். பசியினால் வருந்துகின்ற அவனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும், அன்னம் கொடுப்பீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைக் கேட்டதனால் மனம் பறியுண்டு அவனைப் பார்க்கவேண்டுமென்று எப்பொழுதும் பேராவலுற்றிருக்கிற அந்த ப்ராஹ்மண பத்னிகள், அவன் வந்திருப்பதாகக் கேட்டு, புறப்பட்டு போவதில் பரபரப்புற்றார்கள். அவர்கள், பக்ஷ்யம் (கடித்து உண்ணப்படுபவை), போஜ்யம் (விழுங்கி உண்ணப்படுபவை), லேஹ்யம் (நக்கி உண்ணப்படுபவை) , பேயம் (குடித்து உண்ணப்படுபவை) என்று  நான்கு வகைப்பட்டிருப்பதும், பல குணங்கள் அமைந்திருப்பதுமாகிய அன்னத்தை, பாத்ரங்களில் எடுத்துக் கொண்டு, ஆறுகள் ஸமுத்ரத்தைக் குறித்துப் போவது போல, எல்லோரும் தங்கள் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்துச் சென்றார்கள். 

அவர்கள், வெகுகாலமாய் ஸ்ரீக்ருஷ்ணனுடைய குணங்களைக் கேட்டு, அவனிடத்தில் நிலை நின்ற மனமுடையவர்களாகையால், கணவன், தந்தை, உடன் பிறந்தவன், மற்றுமுள்ள பந்துக்கள் இவர்களால் தடுக்கப்பட்டும், அவர்களைப் பொருள் செய்யாமல், புறப்பட்டுப் போனார்கள். அப்பெண்மணிகள், யமுனைக்கரையில் அசோக வ்ருக்ஷங்களின் (மரங்களின்) புதிய தளிர்களால் அலங்கரிக்கப்பட்டது போன்றிருக்கிற உபவனத்தில், கோபர்களால் சூழப்பட்டு, தமையனும் தானுமாய் உலாவிக் கொண்டிருப்பவனும், கறுத்துப் பொன்னிறமான பீதாம்பரம் உடுத்துக் காட்டிலுள்ள புஷ்பங்களால் தொடுத்த பூமாலை, மயில் தோகை, சிவப்பு நிற தாதுப் பொடிகள், தளிர்கள் இவற்றால் அலங்கரித்துக் கொண்டு, நடனம் ஆடுபவன் போல் வேஷம் பூண்டிருப்பவனும், தன்னைத் தொடர்ந்திருக்கின்ற ஒரு கோப குமாரனுடைய தோளின் மேல் ஒரு கையை வைத்துக்கொண்டு, மற்றொரு கையினால் தாமரை மலரைச் சுழற்றிக்கொண்டிருப்பவனும், காதுகளில் நெய்தல் புஷ்பங்களைத் தரித்திருப்பவனும், கபோலங்களில் (கன்னங்களில்) முன்னெற்றி மயிர்கள் தொங்கப்பெற்று புன்னகையினால் விளங்குகின்ற தாமரை மலரை  நிகர்த்த முகமுடையவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனுடைய மேன்மைகளைப் பலகாலும் கேட்டிருந்தமையால், காதுக்கு ஆபரணங்கள் போன்ற அம்மேன்மைகளால் அவனிடத்தில் ஆழ்ந்த மனமுடைய அந்த ப்ராஹ்மண பத்னிகள், அவனை அப்பொழுது கண்களால் மனத்தில் தேக்கிக்கொண்டு, பண்டிதர்கள் பரமாத்மாவை த்யானத்தினால் ஹ்ருதயத்தில் ஸாக்ஷாத்கரித்து, வருத்தங்களைத் துறப்பதுபோல, அவனை நெடு நேரம் மனத்தினால் அணைத்து, வருத்தங்களைத் துறந்தார்கள். ஸர்வஜ்ஞனாகிய (எல்லாவற்றையும் அறிந்தவனான) ஸ்ரீக்ருஷ்ணன், எல்லா ஆசைகளையும் துறந்து, தன்னைப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பத்தினால் வந்திருக்கின்ற அந்த ப்ராஹ்மண பத்னிகளைக் கண்டு, அவர்கள் கருத்தையும் அறிந்து, சிரித்த முகமுடையவனாகி, இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மிகுந்த பாக்யவதிகளே! உங்களுக்கு நல்வரவாகுக. உட்காருங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்னால் ஆகவேண்டிய கார்யம் ஏதேனும் உளதாயின், அதைச் சொல்வீர்களாக. அதை நான் அவச்யம் செய்து முடிக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பத்தினால் வந்தீர்களென்பது உங்களுக்கு உரியதே. ஏனென்றால், ப்ராஹ்மண பத்னிகளே! ஹிதாஹிதங்களைப் (நன்மை, தீமைகளைப்) பற்றின விவேகமுடையவர்களும், தங்கள் ப்ரயோஜனத்தை அறிந்தவர்களுமாகிய ஜனங்கள், தன்னைக் காட்டிலும் அன்பிற்கிடமான என்னிடத்தில் வேறு ஒரு பலனையும் விரும்பாமல், என்றும் மாறாத பக்தியைச் செய்கிறார்கள். நீங்களும் அப்படியே என்னிடத்தில் பக்தி உண்டாகப் பெற்றவர்களாகையால், நீங்கள் என்னைப் பார்க்க விரும்பி வந்தது யுக்தமே (ஸரியே). ப்ராணன், புத்தி, மனம், ஜீவன், தேஹம், பெண்டிர், பிள்ளை, பணம் இவை முதலியவையெல்லாம் எவனுடைய ஸம்பந்தத்தினால் ப்ரீதிக்கிடமாகின்றனவோ, அப்படிப்பட்ட என்னைக் காட்டிலும் மற்ற எவன்தான் அன்பனாவான்? நீங்கள் எதை உத்தேசித்து வந்தீர்களோ, அந்த ப்ரயோஜனம் உங்களுக்குக் கைகூடிற்றாகையால், நீங்கள் மீண்டு யாக பூமிக்குப் போவீர்களாக. இல்லறத்தில் ஊக்கமுடைய அந்தணர்களாகிய உங்கள் பர்த்தாக்கள், உங்களைக் கொண்டே யாகத்தை முடிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் போய்ச் சேருவீர்களாக.

ப்ராஹ்மண பத்னிகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! நீ  இப்படி மன இரக்கமில்லாமல் கொடுமையாகச் சொல்லுவது யுக்தமன்று (ஸரியன்று). “என்னிடத்தில் பக்தியுடையவர்கள், எனக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருப்பார்கள்” என்றும், “என்னுடைய பக்தன், எப்பொழுதும் அழியமாட்டான்” என்றும் “என்னை அடைந்தவர்கள் என்னை விட்டு மீளமாட்டார்கள்” என்றும் நீ மொழிந்த வசனங்களை உண்மை செய்வாயாக. நாங்களோ என்றால், ஸமஸ்த பந்துக்களையும் கடந்து, உன் காலால் உதைத்துத் தள்ளப்பட்ட துளஸி மாலையைத் தலை மயிர்களால் தரிக்க விரும்பி, உன் பாதமூலத்திற்கு வந்தோம். எங்கள் கணவர்களாவது, தாய் தந்தைகளாவது, பிள்ளைகளாவது, உடன் பிறந்தவர்களாவது, மற்ற பந்துக்களாவது, நண்பர்களாவது, எங்களை அங்கீகரிக்கமாட்டார்கள். மற்றவர்கள், எவ்வாறு அங்கீகரிக்கப் போகிறார்கள்? சத்ருக்களை அழிப்பவனே! ஆகையால், உன் பாதார விந்தங்களில் ஆத்ம ஸமர்ப்பணம் செய்திருக்கிற (சரணாகதி செய்திருக்கிற, ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்துள்ள) எங்களுக்கு வேறு கதி கிடையாது. ஆகையால், நீயே எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- உங்கள் பர்த்தாக்களாவது, தாய், தந்தைகள், ப்ராதாக்கள், பிள்ளைகள் முதலியவர்களாவது, மற்ற உலகத்தவர்களாவது, உங்கள் மேல் குற்றம் கொள்ள மாட்டார்கள். என்னை முதலாகவுடைய தேவதைகளும் கூட, உங்கள் மேல் குற்றம் கொள்ள மாட்டார்கள். குற்றம் கொள்ளாமை மாத்ரமே அன்றி, உங்கள் செயலைப் புகழவும் புகழ்வார்கள். ப்ராணிகள் (ஜீவாத்மாக்கள்) தேஹம் படைத்தது (உடலுடன் இருப்பது) சப்தாதி விஷய (உலகியல்) ஸுகங்களை அனுபவிப்பதற்காகவன்று; என்னிடத்தில் பக்தி செய்வதற்காகவே. என்னிடத்தில் பக்தி உண்டாகப் பெறுகையே ஜன்மம் படைத்ததற்குப் பலனன்றி, மற்றொன்றுமன்று. மற்றும், ப்ராணிகள் என்னோடு கலந்திருப்பது தற்காலத்தில் ப்ரீதியை விளைக்குமேயன்றி, காலாந்தரத்திலும் (பிற்காலத்திலும்) தொடர்ந்து நிலை நின்றிருக்கும்படியான ப்ரீதியை விளைக்காது. பிரிந்திருப்பது, காலாந்தரத்திலும் (பிற்காலத்திலும்) ப்ரீதியைத் தொடர்ந்து வருமாறு வளர்க்கும். ஆகையால், நீங்கள் கண் மறைவிலும் என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்திக் கொண்டிருப்பீர்களாயின், சீக்ரத்தில் என்னை அடைவீர்கள். என்னைக் காதால் கேட்பது, கண்ணால் காண்பது, மனத்தினால் த்யானிப்பது, வாயால் சொல்லுவது இவைகளால் என்னிடத்தில் எவ்வளவு ப்ரீதி உண்டாகுமோ, அவ்வளவு ப்ரீதி என்னோடு கலந்திருப்பதனால் உண்டாகாது. ஆகையால், நீங்கள் உங்கள் க்ருஹத்திற்குத் திரும்பிப் போவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானால் இவ்வாறு மொழியப்பட்ட அந்த ப்ராஹ்மண பத்னிகள், மீண்டும் யாக பூமிக்குப் போனார்கள். அந்த ப்ராஹ்மணர்களும், தங்கள் பார்யைகளிடத்தில் அஸுயையின்றி (பொறாமையின்றி), அவர்களைக் கொண்டு யாகத்தை முடித்தார்கள். அந்த ப்ராஹ்மண பத்னிகளில் ஒருத்தி, தன் பர்த்தாவினால் தடுக்கப்பட்டு, தான் கேட்டபடி பகவானை மனத்தினால் அணைத்து, பூர்வ ஜன்ம கர்மத்தினால் ஏற்பட்டதாகிய சரீரத்தைத் (உடலைத்) துறந்தாள். ப்ரபுவும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணனும், நான்கு வகையான அந்த அன்னத்தைக் கொண்டே, கோபாலர்களையும் புசிப்பித்து, தானும் புசித்தான். 

லீலையினால் மானிட உருவங்கொண்ட ஸ்ரீக்ருஷ்ணன், மனுஷ்ய லோகத்தின் தன்மையை அனுஸரித்து, உருவம், வாக்கு, செயல் இவைகளால் பசுக்களையும், கோபர்களையும், கோபிமார்களையும், களிப்புறச் செய்து கொண்டு, அவற்றின் இடையில் க்ரீடித்துக் கொண்டிருந்தான். பிறகு, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அபராதப்பட்ட அவ்வந்தணர்கள், மனுஷ்யலோகத்தை அனுஸரித்திருக்கின்ற ஒன்றான ஸர்வேச்வரர்களான ராம க்ருஷ்ணர்களுடைய வேண்டுகோளை வீண் செய்தோமே என்று அதை நினைத்துக்கொண்டு, பரிதபித்தார்கள். ஸ்த்ரீகளுக்கு, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் லோக விலக்ஷணமான (உலக வழக்கிற்கு வேறான) பக்தி உண்டாயிருப்பதையும், தங்களுக்கு அது நேராதிருப்பதையும் பார்த்து பரிதபித்து, தங்களை  நிந்தித்தார்கள். “உயர்ந்த மனிதப் பிறவியைப் பெற்று, உபநயனம் என்னும் சடங்கு நிறைவேறி, காயத்ரீ மந்த்ர தீக்ஷை பெற்று, அந்தணர்களான நம் ஜன்மத்தைச் சுடவேண்டும். வேதங்களைக் கற்று, வேள்விகளைச் செய்யும் நம் செயலையும் சுட வேண்டும். நம் வ்ரதத்தையும் சுட வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்தறிந்த நம் அறிவையும் சுட வேண்டும். நம் குலத்தையும் சுட வேண்டும். யாகம் முதலிய கர்மங்களில் நமக்குள்ள திறமையையும் சுட வேண்டும். 

ஏனென்றால், இவையெல்லாம் அமைந்திருந்தும், நாம் பகவானிடத்தில் உள்ளம் செல்லாதவர்களாய் இருக்கின்றோமல்லவா? ப்ராணனில்லாத தேஹத்தைச் சுடவேண்டுமல்லவா? பிறவி முதலியவற்றிற்கு, பக்தியல்லவோ ப்ராணன். பக்தியில்லாத இவற்றைச் சுடவேண்டியது ஸரியே. பகவானுடைய மாயை, யோகிகளுக்குங்கூட மதி மயக்கத்தை விளைக்கும் தன்மையுடையது. இது நிச்சயம். ஏனென்றால், நாம் ப்ராஹ்மணர்கள்; அதிலும், ப்ராணிகளுக்கு ஹிதோபதேசம் செய்யும் (நன்மையை போதிக்கும்) குருக்களாயிருக்கின்றோம். ஆயினும், நாம் ப்ரயோஜனத்தில் (அற்பப் பயன்களில்) மதிமயங்குகிறோமல்லவா? 

ஆ! என்ன ஆச்சர்யம்! ஜகத்திற்கெல்லாம் குருவாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில், ஸ்த்ரீகளுக்கும் கூடப் பக்தி உண்டாயிருக்கின்றது; பாருங்கள். இவர்களுக்கு அந்த பக்தி, இல்லறமென்று பெயருடைய ஸம்ஸாரமாகிற பாசத்தை அறுத்து விட்டது. இவர்களுக்கு, உபநயனம் முதலிய ப்ராஹ்மண ஸமஸ்காரமும் கிடையாது. குருகுல வாஸமும் கிடையாது. தவமும் கிடையாது. தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவைப் பற்றின விசாரமும் (சிந்தனையும்) கிடையாது. ஸ்னானாதிகளால் விளையும் சுத்தியும் கிடையாது. சுபமான கர்மங்களும் கிடையாது. 

ஆயினும், யோகேச்வரர்களுக்கும், ஈச்வரனும், உத்தமச்லோகனுமாகிய (உயர்ந்தவனான) ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில், திடமான பக்தி உண்டாயிருக்கின்றது. நாம் ஸம்ஸ்காரம் முதலிய எல்லாம் அமைந்திருப்பினும், நமக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் சிறிதும் பக்தி உண்டாகவில்லை. நாம் க்ருஹஸ்தாச்ரம (இல்லற) வ்யாபாரங்களால் மனவூக்கமற்று, நம்முடைய ஹிதத்தில் மதி மயங்கியிருக்கிறோம். ஸத் புருஷர்களுக்குக் கதியாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கோபர்களின் வாக்யங்களால் அத்தகைய நமக்குத் தன் ஸ்வரூபத்தை நினைவு மூட்டினான், ஆ! இது நிச்சயம், இல்லாத பக்ஷத்தில், அவாப்த ஸமஸ்தகாமனும் (வேண்டியது அனைத்தும் கிடைக்கப் பெற்றவனும்), மோட்சம் முதலிய புருஷார்த்தங்களையெல்லாம்  நிறைவேற்றிக் கொடுப்பவனும், ஸர்வ நியாமகனுமாகிய (எல்லாவற்றையும் நியமிப்பவனுமான) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தன் நியமனத்திற்கு உட்பட்டவர்களாகிய நம்மால், என்ன ப்ரயோஜனம் கைகூட வேண்டும்? இது, மனுஷ்யர்களின் நன்மையை அனுஸரித்துச் செய்த கார்யமேயன்றி, உண்மையன்று. 

ஸ்ரீமஹாலக்ஷ்மி மற்றவர்களையெல்லாம் துறந்து, இவனுடைய பாதாரவிந்தங்களை ஸ்பர்சிக்க வேண்டுமென்னும் விருப்பத்தினால், நிலையற்றவளென்கிற தன் தோஷத்தையும் போக்கிக்கொண்டு, ஸர்வ காலமும் இவனைப் பணிகின்றாள். அவன், நிறைவாளன் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? இத்தகையனாகிய அவன், நம்மிடம் உணவு வேண்டியது, தன்னுடைய அவதார வ்ருத்தாந்தத்தைக் கேளாதவர்களுக்குத் தன் மஹிமை தெரியாதிருக்கும்படி அதை மறைப்பதற்காகவேயன்றி வேறில்லை. 

எவன், தேசம், காலம், சரு, புரோடாசம் முதலிய பலவகையான வஸ்துக்கள், மந்தரம், தந்தரம், ருத்விக்குகள், அக்னிகள், தேவதை, யஜமானன், யாகம், யாகத்தினால் விளையும் தர்மம் ஆகிய இவையெல்லாம் தானேயாய் இருக்கின்றானோ, அத்தகையனும் யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஒன்றான விஷ்ணுவே யாதவர்களினிடையில் வந்து அவதரித்திருக்கிறானென்று நாம் கேள்விப்பட்டிருந்தும், மூடர்களாகையால், அறியவில்லை. 

ஆ! நாம் மிகுந்த பாக்யசாலிகள். ஏனென்றால், நமக்கு இப்படிப்பட்ட பெண்டிர்கள் சேர்ந்தார்களல்லவா! நமக்கு, இவர்களுடைய பக்தியினாலல்லவோ, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மாறாத மதி உண்டாயிற்று. நாம்,  எவனுடைய மாயையினால் மதிமயங்கி, கர்ம மார்க்கங்களில் (யாகம் போன்ற கர்மங்களில்) சுழன்று கொண்டிருக்கிறோமோ, அத்தகையனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய), எங்கும் தடைபடாத மதியுடையவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நமஸ்காரம். தன் மாயையினால் மதி மயங்கி, தன் மஹிமையை அறியாத நம்முடைய அபராதத்தை, அந்த ஆதிபுருஷன் பொறுத்தருள்வானாக” என்று தமக்குள்  நினைத்து வருந்தினார்கள். இவ்வாறு, ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் அபராதப்பட்ட அவ்வந்தணர்கள், தம்முடைய அபராதத்தை நினைத்து, ஸ்ரீக்ருஷ்ணனை நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்னும் விருப்பமுடையவர்களாயினும், கம்சனிடத்தில பயந்து, தங்கள் ஸ்தானத்தினின்று அசையாமலே இருந்து விட்டார்கள். 

இருபத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக