சனி, 26 டிசம்பர், 2020

திருப்பாவை - 12 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பன்னிரெண்டாவது நாள்

“கோதே, நாம் மார்கழி மாதத்தின் பாதிக்கு வந்துவிட்டோம். பனி அதிகமாக பெய்ய ஆரம்பித்துள்ளது.”


“ஆம் நங்காய், நல்ல பனி பொழிகிறது. அனைவரும் வந்துவிட்டனரா. அல்லது யாரேனும் வராமல் உள்ளனரா.”


“கோதே எனக்கு என்னமோ யாராவது ஒருவர் வேண்டுமென்றே வராமல் இருக்கின்றனரோ என்று தோன்றுகிறது.”


“ஏன் எதை வைத்து அவ்வாறு சொல்கிறாய்.”


“யாராவது ஒருவர் வரவில்லையென்றால் உன்னிடமிருந்து ஒரு பாசுரம் கிடைக்கின்றதே. நீ பாடினால் அக்கண்ணனே இங்கு வருவான் என்பதால் வராமல் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.”


“ஆகா நன்றாக இருக்கிறது நியாயம். சரி பரவாயில்லை நமது நோக்கமே அனைவரும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். இன்று யார் வரவில்லை.”


“இன்று நம் ஆயர்பாடியிலேயே அதிக கன்றும் எருமையும் உள்ள நற்செல்வன் தங்கைதான் வரவில்லை. அவள் இல்லம் இங்கே அருகே தான் உள்ளது, செல்வோமா கோதை.”


நற்செல்வன் தங்காய் இல்லத்திற்கு முன்.


“தோழிகளே நில்லுங்கள் இங்கே வீட்டுவாசல் முன் சேறாக இருக்கின்றது. நேற்று மழை பெய்ததா.”


“இல்லை கோதே மழை எழவும் பெய்யவில்லை. பின் என்னவாக இருக்கும்.”


“புரிந்துவிட்டது. அங்கே பாருங்கள். கன்றுகள் எங்கோ விளையாடிக் கொண்டிருக்க அதன் தாயோ தன் கன்றுக்காக இரங்கி தானாகவே மடி சுரந்து வெளியெங்கும் பால் வழிந்து அவன் வீடெங்கும் சேறாக்குகின்றது. அத்தாயின் நிலையறியாது தூங்கிக் கொண்டிருக்கிறான். அவ்வளவு பொறுப்புள்ளவன் நம் நற்செல்வன். நிறைய செல்வமுடையவன் நல்ல சோம்பேறி அவன் தங்கையோ கேட்டகவே வேண்டாம் போலிருக்கிறது.”


“ஆம் கோதே நீ சொல்வது சரிதான்.”


“அடியே நற்செல்வன் தங்காய், உன் இல்லம் முழுதும் கன்றுக்கு இரங்கும் எருமையின் பால் பெருகி, சேறாகி உள்ளே வரமுடியாமல் நாங்கள் நல்ல பனியில் வெளியே நின்றுக்கொண்டிருக்கிறோம். நீ நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறாய். தன் மனைவியை கடத்திச் சென்ற இலங்காதிபதி இராவணனை தேடிப்போய் சினங்கொண்டு அவனை வீழ்த்திய நம் மனதிற்கு இனியவனாம் இராமனை பாட வேண்டாமா. அதற்கு நீ உடனே வா.”


“கோதே, இராமனை மனத்துக்கு இனியான் என்கின்றாயே அப்படியானால் நம் கண்ணன் மனத்துக்கு இனியவன் இல்லையா.”


“நன்றாய் கேட்டாய் நங்காய். ராமன் ஒரு பெண்ணுக்காக தன் மணைவிக்காக படாத பாடுப் பட்டான். ஆனால் நம் கண்ணனோ பல பெண்களை நம்மையுங்கூட படாத பாடுப் படுத்துகிறான். அப்படியெனில் மனதிற்கு இனியவன் இராமன் தானே.” 


“அடியே நற்செல்வன் தங்காய், உன் வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கிறோம் இனித்தான் எழுந்திருக்க வேண்டுமா. இதென்ன பேருறக்கம். அக்கம் பக்கத்தார் எல்லாரும் பார்க்கிறார்கள் அதை புரிந்து கொண்டு விரைவில் வா என் நற்செல்வன் தங்காய்.”


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி 

நினைத்து முலை வழியே நின்று பால் சோர 

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் 

பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி 

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் 

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக