ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 240

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் இந்த்ர யாகத்தைத் தடுத்து, கோவர்த்தன பர்வதத்திற்குப் பூஜை செய்யும்படி நியமித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பலராமனுடன் அந்த ப்ருந்தாவனத்திலேயே வஸித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ண பகவான், இந்த்ர யாகத்திற்காக முயற்சி செய்கின்ற கோபாலர்களைக் கண்டான். எல்லார்க்கும் அந்தராத்மாவாயிருப்பவனும் (ஆத்மாவாக உள் இருப்பவனும்), ஸர்வஜ்ஞனுமாகிய (எல்லாம் அறிந்தவனுமான) ஸ்ரீக்ருஷ்ணன், அவர்கள் செய்யும் முயற்சி இன்னதற்காக என்பதை அறிந்தவனாயினும், அறியாதவன் போல் வணக்கத்துடன் நந்தன் முதலிய வ்ருத்தர்களைப் (பெரியவர்களைப்) பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தந்தையே! உங்களுக்கு இப்பொழுது என்ன பரபரப்பு உண்டாயிருக்கின்றது? இதை எனக்குச் சொல்வீர்களாக. இது யாகமாயின், இதற்கு என்ன பலன்? இது யாரை உத்தேசித்தது? இதற்கு ஸாதனம் யாது? தந்தையே! எனக்கு இதைக் கேட்க வேண்டுமென்று பெரிய விருப்பம் உண்டாயிருக்கின்றது. ஆகையால், இதை எனக்குச் சொல்வீராக. எல்லா ஆத்மாக்களையும் தங்களோடு துல்யமாகப் பார்க்கும் தன்மையுடைய பெரியோர்களுக்கு மறைத்து வைக்கும்படியான கார்யம் எதுவுமே இராதல்லவா? தன் தேஹத்திலும் பிறர் தேஹங்களிலும் ஆத்மாவென்னும் ப்ரமமின்றி (மனக்கலக்கம் இன்றி), தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவர்களும், சத்ரு (எதிரி), மித்ரன் (நண்பன்), உதாசீனன் (எதிரி என்றோ, நண்பன் என்றோ பாராட்டாத நடுநிலையாளன்) என்னும் பேதமில்லாதவர்களுமான பெரியோர்களுக்கு எது தான் மறைக்கத்தக்கது? எதுவுமேயன்று, சத்ரு (எதிரி), மித்ரன் (நண்பன்) என்னும் பேத புத்தியுள்ளவர்களுக்கும், சத்ருவைப் போல உதாசீனனும் துறக்கத் தகுந்தவனே. ஸ்னேஹிதனோ (நண்பனோ) என்றால், தன்னைப் போலவே பார்க்கத் தகுந்தவனென்று சொல்லுகிறார்கள். ஆகையால், ஸ்னேஹிதனாகிய நான், ரஹஸ்யத்தையும் கேட்கத் தகுந்தவனே. 

இவ்வுலகத்தில் அறிவுள்ள ஜனங்கள், கார்யங்களை நண்பர்களுடன் அடிக்கடி கலந்தாலோசித்தே நடத்துகிறார்கள். நண்பர்களுடன் கலந்தாராய்ந்தறிந்து செய்பவர்களுக்குக் கார்யம் ஸித்திப்பது போல, அவர்களுடன் கலந்து ஆராயாமல் செய்கிறவனுக்கு, கார்யம் ஸித்திக்காது. ஆகையால், நண்பர்களுடன் கலந்து சாஸ்த்ர விதியின்படி ஆராய்ந்தறிந்து கொண்டு செய்கிறீர்களா? அல்லது, உலக வழக்கத்தின்படி கண் மூடித்தனமாகவே செய்கிறீர்களா? இதைக் கேட்கிற எனக்கு நன்றாகச் சொல்ல வேண்டும்.

நந்தகோபன் சொல்லுகிறான்:- மஹானுபாவனாகிய இந்த்ரன், நமக்கு மழை பெய்யும் தேவதை. மேகங்கள் அவ்விந்தரனுக்குச் சரீரம் போன்றவை. அம்மேகங்கள், பூதங்களுக்கு ப்ராணாதாரமாயிருப்பதும் (வாழ்வாதாரமாய் இருப்பதும்), அவற்றிற்குப் புஷ்டியை (செழிப்பை) விளைப்பதுமாகிய ஜலத்தைப் பெய்கின்றன. அப்பா! மேகங்களுக்கு ப்ரபுவும் நியாமகனுமாகிய அவ்விந்த்ரனை அவன் பெய்த ஜலத்தினால் விளைகின்ற பலவகையான வஸ்துக்களைக் கொண்டு யாகங்களால் நாமும் மற்றவர்களும் ஆராதிப்பது வழக்கம். இவ்வாறு தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) என்கிற பலன்கள் கைகூடும் பொருட்டு அவ்விந்த்ரனை ஆராதித்து அந்த யாகத்தில் மிகுந்த வஸ்துக்களைக்கொண்டு ஜீவிக்கிறார்கள். ப்ராணிகளுக்குத் தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமங்களை (இன்பங்களை) விளைப்பவர்களுக்குள் பர்ஜன்யன் (மழை பெய்விப்பவன்) என்கிற இந்த்ரனே மழை முதலியவற்றின் மூலமாய் பலன்களைக் கைகூடுவிக்கிறான். பெரியோர்கள் பரம்பரையாக அனுஷ்டித்துக் கொண்டு வருகிற இந்த தர்மத்தை எவன் காமத்தினாலாவது (வேறு ஆசையினாலாவது), லோபத்தினாலாவது (பேராசை, புத்தி மயக்கத்தினாலாவது), பயத்தினாலாவது, த்வேஷத்தினாலாவது (பகைமையினாலாவது) அனுஷ்டிக்காமல் துறக்கிறானோ, அவன் ஸுகத்தை அடையமாட்டான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்னனும், நந்தகோபனும் மற்ற கோபாலர்களும் இவ்வாறு சொல்லுகிற சொல்லைக்கேட்டு இந்த்ரனுக்கு கோபத்தை விளைத்து அதன் மூலமாய் அவன் கர்வத்தை அழிக்க விரும்பித் தந்தையாகிய நந்தகோபனைப் பார்த்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஸமஸ்த ஜந்துவும் தன் கர்மத்தினால் பிறக்கின்றது; கர்மத்தினாலேயே அழிகின்றது. இஹலோக (இந்த உலக) ஸுக, துக்கம், பயம் பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகம், இவற்றையும் கர்மத்தினாலேயே அடைகின்றது. கர்மம் செய்கிறவனுக்குப் பலன் கொடுக்கும் தேவதையாகிய ஈச்வரன் இருப்பானாயின், அவனும் தன்னுடைய ஆராதன ரூபமான கர்மங்களைச் செய்கிறவர்களுக்கே பலன் கொடுப்பானன்றி அத்தகைய கர்மங்கள் செய்யாதவனுக்கு அவன் பலன் கொடுக்க வல்லனாகமாட்டான். ஆகையால் தங்கள் புண்ய, பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸுகதுக்கங்களை அனுபவிக்கிற ப்ராணிகளுக்கு இந்த்ரனால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கிறது? 

ப்ராணிகள் தங்கள் கர்மங்களுக்கு உரியபடி பலன்களை அனுபவிக்கிறார்களாயினும் அவரவர் கர்மங்களால் நிக்ரஹ (தண்டனை) அனுக்ரஹங்களைச் (பரிவு, ஆசியுடன் அளிக்கும் பலன்) செய்யும் ஈச்வரனல்லவோ பலன் கொடுப்பவனென்னில், இந்த்ரன் ஈச்வரனோ? ப்ராணிகள் ராஜஸம் முதலிய தங்கள் ஸ்வபாவத்திற்குத் தகுந்தபடி செய்கிற கர்மங்களால் விளையும் பலன்களை வேறாக மாற்ற வல்லனோ? இல்லை. இவ்வாறு அஸமர்த்தனாகிய (திறமையற்ற) இந்த்ரனால் நமக்கு ஆகவேண்டியது என்ன இருக்கிறது. இவ்வுலகத்திலுள்ள ஜந்துக்கள் (பிராணிகள்) எல்லாம் தங்கள் ஸ்வபாவத்திற்கு (தன் முன்வினைப் பயனால் ஏற்பட்ட இயற்கைத் தன்மைக்கு) உட்பட்டு நடக்கின்றன. தேவதைகள், அஸுரர்கள், மனுஷ்யர்கள் இவர்களோடு கூடிய ஜகத்தெல்லாம் ஸ்வபாவத்தில் நிலைநின்றிருக்கின்றது. ஸ்வபாவத்திற்கு உட்படாத ஜந்து எதுவுமே இல்லை. ஜந்துக்கள் தங்கள் ஸ்வபாவத்திற்குரிய கர்மத்தினால் பலவகையான தேஹங்களைப் பெறுவதும், துறப்பதுமாய் இருக்கின்றன. சத்ரு (எதிரி), மித்ரன் (நண்பன்), உதாசீனன் (எதிரி என்றோ, நண்பன் என்றோ பாராட்டாத நடுநிலையாளன்) என்கிற பேதமும் கர்மத்தினால் உண்டாகிறது தான். இந்த்ராதிகளிடத்திலுள்ள ஐச்வர்யமும் கௌரவமும் கர்மத்திற்கு உட்பட்டதே. ஆகையால் ஸ்வபாவத்திற்கு உட்பட்ட புருஷன் தன் ஸ்வபாவத்திற்கு உரிய கர்மத்தைச் செய்து கொண்டு கர்மத்தையே வெகுமதிக்கவேண்டும்.  

புருஷன் எதனால் ஸுகமாக ஜீவிக்கிறானோ, அவனுக்கு அதுவே தெய்வமாம். எவன், தான் வேறொரு வஸ்துவைக் கொண்டு ஜீவித்து வேறொரு வஸ்துவைத் தொடர்கின்றானோ, அவன் அதனால் க்ஷேமத்தை அடைய மாட்டான். கணவனைத் துறந்து கள்ள புருஷனைத் தொடரும் மாது அவனிடத்தினின்று க்ஷேமம் பெறுவாளோ? ப்ராஹ்மணன் வேதத்தினால் ஜீவிக்க வேண்டும். க்ஷத்ரியன் பூமியின் ரக்ஷணத்தினால் (காப்பதால்) ஜீவிக்க வேண்டும். வைச்யன் தொழில்களால் ஜீவிக்க வேண்டும். கீழ்ச்சாதி, ப்ராஹ்மணன் முதலிய மூன்று வர்ணத்தவர்களுக்கும் சுச்ரூஷை (பணிவிடை) செய்து ஜீவிக்கவேண்டும். வேறு வர்ணத்தவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட வ்ருத்தி (செயல்) நேராத பக்ஷத்தில் தொழிலால் ஜீவிக்கலாம். அந்த தொழில் க்ருஷி (விவசாயம்), வர்த்தகம் (வாணிபம்), கோ ரக்ஷணம் (பசுக்களைக் காத்தல்), வட்டி ஜீவனம் (வட்டிக்கு பணம் தருதல்) என்று நான்கு வகைப்பட்டிருக்குமென்று சொல்லுகிறார்கள். அவற்றில் நாம் எப்பொழுதும் கோ ரக்ஷணத்தினால் (பசுக்களைக் காத்து) ஜீவிப்பவர்கள். 

ஸத்வம், ரஜஸ், தமஸ்ஸு என்னும் இம்மூன்று குணங்கள் ஜகத்தின் ஸ்திதி, உத்பத்தி, ஸம்ஹாரம் இவற்றிற்குக் காரணங்கள். அவற்றில் ரஜோ குணத்தினால் தூண்டப்பட்டு ஸ்த்ரீ (பெண்கள்) புருஷர்கள் (ஆண்கள்) ஒருவரோடொருவர் கலக்கையால் ஜகத்து உண்டாகின்றது. மேகங்கள் ரஜோ குணத்தினால் தூண்டப்பட்டு நதி, ஸமுத்ரம், பர்வதம் (மலை) முதலிய எல்லா இடங்களிலும் மழை பெய்கின்றன. இப்படியிருக்க மஹேந்த்ரனால் என்ன செய்ய முடியும்? அவன் எந்தக் கெடுதியையாவது, எந்த நன்மையையாவது ஒன்றும் செய்யவல்லன் அல்லன். நமக்குப் பட்டணங்களாவது, தேசங்களாவது, க்ராமங்களாவது, வீடுகளாவது எவையும் கிடையாது. நாம் வனத்தையே இருப்பிடமாக உடையவர்கள்; காடுகளிலும், பர்வதங்களிலும் (மலைகளிலும்) வாஸம் செய்பவர்கள். ஆகையால் நம் பிழைப்பிற்குக் காரணங்களான பசுக்களுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், கோவர்த்தன பர்வதத்திற்கும் (மலைக்கும்) ஸந்தோஷத்தை விளைக்கவல்ல யாகத்தைத் தொடங்குவீர்களாக. 

இந்த யாகத்திற்காகச் சேர்த்து வைத்திருக்கின்ற ஸாமக்ரிகளைக் (பொருட்களைக்) கொண்டே இந்த யாகத்தை நடத்துவீர்களாக. பாயஸம் முதல் பருப்பு வரையிலுள்ள பலவகையான பாகங்களையெல்லாம் (பாகம் - சமையல், இங்குச் சமைக்க வேண்டிய பொருட்களைச் சொல்லுகிறது) பக்வம் செய்வீர்களாக (சமைப்பீர்களாக). அப்பம், வடை, முருக்கு முதலிய பணியாரங்களையும் பண்ணுவீர்களாக. இடைச்சேரியிலுள்ள பாலை எல்லாம் கறந்து சேர்த்து வைப்பீர்களாக. வேதங்களை ஓதியுணர்ந்து உபதேசிக்கும் திறமையுடையவர்களான அந்தணர்கள் அக்னிகளில் நன்கு ஹோமம் செய்வார்களாக. 

நீங்கள் அந்த ப்ராஹ்மணர்களுக்குப் பல குணங்கள் அமைந்த அன்னத்தையும், பசுக்களையும், தக்ஷிணைகளையும் கொடுப்பீர்களாக. மற்றுமுள்ள நாய், சண்டாளர் (தாழ்ந்த ஜாதியர்), பதிதர் (சமுதாயத்தால் விலக்கி வைக்கப்பட்டவர்) இவர்களுக்கும் உரியபடி அன்னம் கொடுக்க வேண்டும். பசுக்களுக்குப் புல்லை வேண்டியவளவும் கொடுத்துக் கோவர்த்தன பர்வதத்திற்கும் (மலைக்கும்) பலி கொடுக்க வேண்டும். பிறகு நல்ல வஸ்த்ரங்களை உடுத்து நன்கு அலங்கரித்துக் கொண்டு நன்றாகப் புசித்துச் சந்தனம், குங்குமக்குழம்பு முதலிய நல்ல பூச்சுக்களையும் பூசிக்கொண்டு பசுக்கள், ப்ராஹ்மணர்கள், அக்னி, பர்வதம் (மலை) இவற்றை ப்ரதக்ஷிணமும் (வலமும்) செய்வீர்களாக. இவ்வாறு செய்வதே எனக்கு ஸம்மதம். அண்ணா! இது ருசிக்குமாயின் நடத்துவீர்களாக. இப்பொழுது நான் சொன்ன இந்த யாகம் பசுக்களுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், பர்வதத்திற்கும் (மலைக்கும்) எனக்கும் மிகவும் ப்ரியமானது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கால ஸ்வரூபனாகிய பகவான் இந்த்ரனுடைய கொழுப்பை அழிக்க விரும்பி மொழிந்த இவ்வுரையை நந்தாதிகள் கேட்டு அவனுடைய அபிப்ராயத்தை அறியாதவர்களாயினும் அதை நல்லதென்று அப்படியே ஒப்புக்கொண்டார்கள். மதுஸுதனனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் எப்படி மொழிந்தானோ அப்படியே எல்லாவற்றையும் நடத்தினார்கள். அந்த நந்தாதிகள் மிகுந்த ஆதரவுடன் புண்யாஹவாசனம் செய்வித்து இந்த்ர யாகத்திற்காகச் சேர்த்து வைத்த அந்த வஸ்துக்களைக் கொண்டே பர்வதத்தையும் (மலையையும்), ப்ராஹ்மணர்களையும் உத்தேசித்து எல்லாப் பலிகளையும் கொடுத்துப் பசுக்களுக்கு வேண்டியவளவு புல்லிட்டுப் பசு மந்தைகளை முன்னிட்டுக்கொண்டு பர்வதத்தை (மலையை) ப்ரதக்ஷிணம் (வலம்) செய்தார்கள். நந்தன் முதலிய அந்தக் கோபாலர்களும், கோபிமார்களும் நன்கு அலங்கரித்து எருதுகள் பூட்டின வண்டிகளின்மேல் ஏறி ப்ராஹ்மணர்களால் ஆசீர்வாதம் செய்யப்பெற்று ஸ்ரீக்ருஷ்ணனுடைய இச்செயல்களைப் பாடிக்கொண்டு பர்வதத்தை (மலையை) ப்ரதக்ஷிணம் (வலம்) செய்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால் “அசேதனமான (அறிவற்ற ஜடப்பொருளான) பர்வதம் (மலை) பலியை எவ்வாறு பெற்றுக்கொள்ளும்? எப்படித்தான் நம்மை அனுக்ரஹிக்கும்?” என்ற நந்தாதிகளின் ஸந்தேஹத்தையெல்லாம் போக்க அவர்களுக்கு நம்பிக்கை விளைவிக்கும் பொருட்டு வேறொரு உருவத்தை ஏற்றுக்கொண்டு பெரும் சரீரமுடையவனாகிய பர்வதத்தின் (மலையின்) நுனியில் இருந்து நான் பர்வதம் (மலை) என்று சொல்லிப் பலியைப் புசித்தான். மற்றும் கோபர்களின் இடையில் இருந்து “ஓ கோபர்களே! பாருங்கள். இந்தப் பர்வதம் உருவத்துடன் தோன்றி நமக்கு அனுக்ரஹம் செய்தது. நினைத்தபடி வடிவங்கொள்ளவல்ல இப்பர்வதம் (மலை) தன்னை அவமதிக்கின்ற வனவாஸிகளான மனுஷ்யர்களை வதித்துவிடும். ஆகையால் நாம் இதை அவமதிக்காமல் நமக்கும், பசுக்களுக்கும் க்ஷேமத்தின் பொருட்டு இந்தப் பர்வதத்திற்கு நமஸ்காரஞ்செய்வோம்” என்று மொழிந்து கோபர்களுடன் பெரும் சரீரமுடைய பர்வதஸ்வரூபியான (மலை வடிவான) தனக்குத் தானே நமஸ்காரம் செய்தான். இடையர்கள் வாஸுதேவனால் தூண்டப்பட்டுக் கோவர்த்தன பர்வதத்தையும் (மலையையும்), பசுக்களையும், ப்ராஹ்மணர்களையும் குறித்து விதிப்படி யாகம் செய்து ஸ்ரீக்ருஷ்ணனுடன் கூடிக் கோகுலத்திற்குப் போனார்கள்.

இருபத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக