ஞாயிறு, 27 டிசம்பர், 2020

திருப்பாவை - 13 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதிமூன்றாவது நாள்

“கோதை, இன்று பதிமூன்றாவது நாளுக்கு வந்துவிட்டோம். இன்றுடன் நிறைவடைந்துவிட்டதா நம் பாவை நோன்பு.”


“இல்லை பாவாய், நாம் இன்னும் நம் மன்னன் கண்ணன் திருமாளிகைக்கேச் செல்லவில்லை. அவனை நேரில் பார்த்து நம் கோரிக்கையை தெரிவிக்க வேண்டாமா. அதற்குள் ஏன் அவசரம். இன்றாவது அனைவரும் வந்துவிட்டார்களா.”


“இன்றும் ஒருத்தி வரவில்லை கோதை. அவளுக்கு ஏதோ மனதில் ஒரு குழப்பம். நாம் செய்யும் இந்தபாவை நோன்பு சரிதானா என்று, நேற்று என்னிடம் வினவினாள்.”


“அப்படியா வாருங்கள் அவள் இல்லத்திற்கேச் செல்வோம். அவளின் குழப்பத்தைத் தீர்ப்போம்.”


அவளின் இல்லத்தின் முன்.


“அடியே போதரிக் கண்ணினாய், பறவைகள் உறக்கத்திலிருந்து எழுந்து இரைத் தேட புறப்பட்டுவிட்டது. அவற்றின் இரைச்சல் கேட்கவில்லையா.  இதே பறவை வடிவில் அதாவது கொக்கின் வடிவில், நம் கண்ணணைக் கொல்ல, கம்சனால் ஏவப்பட்ட அரக்கன் பகாசுரனின் வாய் கிழித்து அவனைக் கொன்றவனை, முன்பு சீதையை கடத்திச் சென்ற இலங்காதிபதி இராவணின் பத்துத் தலைகளை ஒவ்வொன்றாய் தன் பானத்தால் கிள்ளி எறிந்தானே நம் இராமன், அவனின் கீர்த்திகளை நாங்கள் அனைவரும் பாடிக் கொண்டு வருகிறோம். கிழக்கில் வெள்ளி முளைத்து மேற்கில் விழாயன் உறங்கிற்று இன்னும் என்ன உறக்கம்.”


“கோதை, ஒரு சின்ன சந்தேகம். வெள்ளி விழாயன் என்பது கிழமைகளை குறிக்கவா அல்லது கிரகங்களை குறிக்கவா. கிழமை என்றால் வியாழனுக்கு பிறகுதானே வெள்ளி.”

“பாவாய், நாம் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கும் இந்த மார்கழி மாதத்தில் மட்டுமே இந்நிகழ்வு நிகழும்.  கிழக்கில் வெள்ளி வரும்பொழுது மேற்கில் வியாழன் மறையத் தொடங்கும். இதில் இந்த சமயமே அதாவது இந்த வருடமே வியாழன் நமக்குத் தெரியும் மற்றக் காலங்களில் அது தெரியாது.  இதுவும் இக்காலத்திற்கு சிறப்பு. பொதுவாக சூரியன் உதயமாவதை தெரிவிக்கும் விதமாக ‘விடிவெள்ளி முளைத்தது பொழுது விடியப் போகிறது’ என்று நம் முன்னோர்கள் தெரிவிப்பார்களே அது தெரியாதா. வெள்ளி சுக்ரனையும், வியாழன் குருவையும் குறிக்‌கும் கிரகங்கள் இரண்டுமே ‘ராஜகிரகங்கள்’ என்றே குறிப்பார்கள்.”


“கோதை, உனக்கு கிரகங்களைப் பற்றியும் தெரியுமா.”


“ஆம் பாவாய், நான் விட்டுசித்தன் மகள். எனக்கு கண்ணனின் பாகவதக் கதைகளை மட்டுமல்ல அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார் என் தந்தை. அவரும் தன் திருமொழியில் நட்சத்திரங்களைப் பற்றியும் கோள்களைப் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். சரி வாருங்கள் அவளை எழுப்புவோம். அடியே, அழகிய தாமரை மலர்களைப் போன்ற கண்ணுடையாய், போதரிக் கண்ணினாய், இன்னும் என்னடி உறக்கம்.  எங்களுடன் வந்து உள்ளமும் உடலும் குளிர நீராட வருவாய். இன்றே நல்ல நாள். இந்நன்னாளிளே உன் மனதிலுள்ள குற்றங்களையும் குறைகளையும் விலக்கி எங்களுடன் நோன்பு நோக்க வாராய் போதரிக் கண்ணினாய்.”


"புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்."


ஆண்டாள் திருவடிகளே சரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக