ஶ்ரீமத் பாகவதம் - 241

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்

(இந்த்ரன் தன்னுடைய யாகம் தடைபட்டமையால் கோபித்து, கோகுலத்தை அழிக்க விரும்பி மழை பெய்கையில், ஸ்ரீக்ருஷ்ணன் கோவர்த்தன பர்வதத்தைக் குடையாகத் தாங்கி கோகுலத்தைப் பாதுகாத்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அப்பொழுது தேவேந்த்ரன், அப்பூஜையை ஸ்ரீக்ருஷ்ணன் தடுத்ததை அறிந்து, ஸ்ரீக்ருஷ்ணனையே நாதர்களாகவுடைய கோபர்களின் மேல் கோபித்துக் கொண்டு, உலகங்களை அழிக்கும் தன்மையுடையவைகளான ஸாம்வர்த்தகம் (ப்ரளய (ஊழிக்) காலத்தில் அழிவை உண்டாக்கும் மழையைப் பொழியும் மேகக்கூட்டம்) என்கிற மேகக்கூட்டத்தைத் தூண்டினான். மற்றும் அவ்விந்த்ரன் அம்மேகங்களைக் குறித்து மேல்வருமாறு கூறினான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- காட்டில் வாஸம் செய்பவர்களான இடையர்களுக்குச் செல்வப் பெருக்கினால் உண்டான கொழுப்பின் பெருமை மிகவும் அற்புதமாயிருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் மரணம் அடையும் தன்மையுள்ள மானிடப் பயலான க்ருஷ்ணனை அவலம்பமாகக் கொண்டு (சார்ந்து நின்று), தேவனாகிய என்னை அவமதித்து, என் யாகத்தைப் பங்கம் (அழிவு) செய்தார்களல்லவா? கர்மாக்களில் ஊக்கம் உடையவர்கள், உறுதியற்றவைகளும், பெயருக்கு ஓடங்கள் போன்றவைகளுமான, பலனைக் கருதி செய்யப்படும் கர்மங்களாகிற யாகங்களால் ஸம்ஸாரமாகிற ஸாகரத்தைத் (இந்த பிறப்பு இறப்பாகிற ஸம்ஸாரக் கடலைத்) தாண்ட விரும்புவது போல் இருக்கிறது அவர்களின் செயல்; மோக்ஷத்திற்கு உபாயமான ஆத்ம ஜ்ஞானத்தோடு கூடிய ‘ஆன்வீக்ஷிகீ’ என்கிற த்யான ரூபமான ப்ரஹ்ம வித்யையை விட்டு விட்டு, பலனை விரும்பிச் செய்யும் யாகம் முதலிய கர்மாக்களால் எப்படி மோக்ஷத்தை அடைய முடியும்? இப்படியிருக்க, வீணாக வாயாடும் தன்மையனும், மூர்க்கனும், வணக்கமற்றவனும், தன்னைத் தானே பண்டிதனாக நினைத்துக் கொண்டிருப்பவனும், என்னுடைய  நிக்ரஹத்தினால் (தண்டனையினால்) மரணம் அடையப்போகிறவனும், ஸாதாரண மனுஷ்யனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனை அவலம்பமாகக் (பற்றாகக்) கொண்டு, இந்த இடையர்கள் எனக்கு அனிஷ்டம் (தீங்கு) செய்தார்கள். செல்வத்தினால் செருக்குற்றவர்களும், ஸ்ரீக்ருஷ்ணனால் வளர்க்கப்பட்ட தேஹமுடையவர்களுமான இந்த இடையர்களின் செல்வப் பெருக்கினால் உண்டான கொழுப்பின் மிகுதியை உதறி விடுவீர்களாக. மற்றும், பசுக்களை அழிப்பீர்களாக. நானும் ஐராவதமென்கிற என்னுடைய யானையின் மேல் ஏறிக்கொண்டு மிகுந்த வேகமுடைய “மருத்” என்னும் காற்றுக் கூட்டங்களோடு கூடி,  நந்தன் முதலிய கோபர்களைக் கொல்லுவதற்காக உங்கள் பின்னோடு புறப்பட்டு வருகின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தேவேந்த்ரனால் ஆஜ்ஞை (கட்டளை) செய்யப்பட்ட மேகங்கள், கட்டுத் தரியினின்று அவிழ்த்து விடப் பெற்று வந்து, பலமுள்ளவளவு விடாமழைகளைப் பெய்து, நந்த கோகுலத்தைப் பீடித்தன. அம்மேகங்கள், மின்னி, இடித்துப் பெருங்காற்றுக்களால் தூண்டப்பட்டு, கல் மழைகளைப் பெய்தன, மற்றும் அவை ஸ்தம்பங்கள் (தூண்கள்) போலப் பருத்திருக்கின்ற மழைத் தாரைகளை ஓயாமல் பெய்து கொண்டிருக்கையில், மேடும் பள்ளமுமாயிருந்த பூமி முழுவதும் ஜல ப்ரவாஹங்களால் (வெள்ளத்தால்) சூழப்பட்டு, ஒரே வெள்ளமாகி, கண்ணுக்குப் புலப்படவேயில்லை. பெரிய விடா மழையினாலும், பெருங்காற்றினாலும், பசுக்கள் நடுக்கமுற்றன. இடையர்களும், இடைச்சிகளும், குளிரினால் வருந்தி, கோவிந்தனைச் சரணம் அடைந்தார்கள். 

அவர்கள், தலைகளையும், குழந்தைகளையும், உடம்பினால் மறைத்துக் கொண்டு, நடுக்கமுற்று, ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய பாத மூலத்திற்கு வந்து, “க்ருஷ்ண! க்ருஷ்ண! ப்ரஜைகளைப் பாதுகாப்பதற்கு வேண்டிய ஜ்ஞானம், சக்தி முதலிய குணங்கள் அமைந்திருக்கையாகிற பெரும் பாக்யமுடையவனே! பக்தர்களின் தோஷத்தையே குணமாகக் கொள்ளும் தன்மையனே! உன்னையே  நாதனாகவுடைய கோகுலத்தைக் கோபமுற்றிருக்கின்ற பர்ஜன்ய (மழை) தேவனிடத்தினின்று பாதுகாக்க வேண்டும்” என்று முறையிட்டுக் கொண்டு, சரணம் அடைந்தார்கள். 

கோகுலமெல்லாம் உரத்துப் பெய்கின்ற கல் மழையினால் பீடிக்கப்பட்டு, குளிரினால் வருந்தி, ஒன்றும் தெரியாமல் மோஹித்துக் (மயங்கிக்) கிடப்பதைக் கண்டு ஸ்ரீக்ருஷ்ணன், ஷாட்குண்ய பூர்ணனாகையால் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனாகையால்), “இது இந்த்ரன் கோபித்துச் செய்த கார்யம்” என்று தெரிந்து கொண்டான். அந்த பகவான், தனக்குள் “இப்பொழுது வர்ஷ ருதுவுக்கு (மழைக் காலத்திற்கு) ப்ரஸக்தி (வாய்ப்பு) இல்லை. அது கழிந்து வெகு நாளாய் விட்டது. இப்பொழுது பெருங்காற்றுடன் கொடிய கல் மழை பெய்கின்றது. நாம் இந்த்ரனுடைய யாகத்தைத் தடுக்கையில், அவன் கோபமுற்று, நம்மை அழிப்பதற்காக இவ்வாறு கொடிய மழை பெய்கின்றான். அதற்கு, நான் என்னுடைய ஸாமர்த்யத்தினால் பரிஹாரம் செய்கிறேன்.

மூடத்தனத்தினால் தன்னை உலகங்களுக்கெல்லாம் ஸ்வதந்த்ர ப்ரபுவாக (தன் விருப்பப்படி ஆளும் தலைவனாக) நினைத்துக் கொண்டிருக்கிற இவ்விந்த்ரனுக்கு, ஐச்வர்யத்தினால் உண்டாகியிருக்கும் கொழுப்பாகிற தமோ குணத்தை இப்பொழுது பறித்து விடுகிறேன். என்னிடத்தில் நிலைகின்ற மனமுடையவர்களும், ஸத்வ குணம் தலையெடுக்கப் பெற்றவர்களுமாகிய தேவர்களுக்கு, “நாம் ஸ்வதந்த்ர ப்ரபுக்கள்” (தன் விருப்பப்படி ஆளும் தலைவர்கள்) என்னும் கர்வம் எப்பொழுதும் உண்டாகாது. ஆயினும், ப்ரக்ருதி (முக்குணங்களோடு கூடிய சரீர) ஸம்பந்தத்தின் (சேர்க்கையின்) கொடுமையால், ஒரு கால் அந்தக் கர்வம் உண்டாகுமாயின், அவர்களுடைய அக்கர்வத்தை, நான் பங்கப்படுத்துவது அவர்களுக்குச் சாந்தியின் பொருட்டே ஆகும். 

“நான் உபேந்த்ராதி (இந்த்ரனுடைய தம்பியான வாமன) ரூபனாய் அவதரித்து தேவதைகளை ரக்ஷித்துக் கொண்டிருப்பினும், அவர்கள் வீண் கர்வம் கொள்வார்களாயின், அதை அழித்து, சாந்தியை விளைப்பதற்கான முயற்சி செய்வது எனக்கு யுக்தமே. ஆகையால், என்னைச் சரணம் அடைந்திருப்பதும், என்னையே சரண்யனாகப் பற்றியிருப்பதுமாகிய கோகுலத்தை, நான் என்னுடைய ஸாமர்த்யத்தினால் பாதுகாக்க வேண்டும். சரணமடைந்தவர்களைப் பாதுகாப்பதும், என் பக்தர்கள் வீண் கர்வப்படுவார்களாயின், அவர்களுக்குக் கர்வ பங்கம் (அழிவு) செய்வதுமாகிய இந்த வ்ரதத்தை நான் ஏற்றுக் கொண்டிருப்பவனல்லவா?” என்று மொழிந்து, ஒற்றைக்கையினால் கோவர்த்தன பர்வதத்தைப் (மலையைப்) பிடுங்கி ஏழு வயதுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், நாய்க் குடையைப் போல அவலீலையாகப் (விளையாட்டாகப்) பிடித்தான். பிறகு, அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான் கோபர்களைப்பார்த்து, “அம்மா! அண்ணா! கோபர்களே! நீங்கள் பசு மந்தைகளுடன் பர்வதத்தைப் (மலையைப்) பிடுங்கின இந்தப் பள்ளத்தில் ஸுகமாக நுழைந்திருப்பீர்களாக. என் கையினின்று பர்வதம் (மலை) விழுமோ என்னவோ என்று நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. காற்று, மழையைப் பற்றியும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அதினின்று உங்களைப் பாதுகாப்பதற்கு உபாயம் செய்து விட்டேன்” என்று மொழிந்தான். கோபர்கள் அனைவரும் ஸ்ரீக்ருஷ்ணனால் ஆச்வாஸப்படுத்தப்பட்ட  (ஆறுதல் அளிக்கப்பட்ட) மனமுடையவர்களாகிப் பசு மந்தைகளோடும், பிள்ளை, பேரன் முதலிய ப்ரஜைகளோடும், ப்ருத்யர்களோடும் (வேலைக்காரர்களோடும்), புரோஹிதர் முதலியவர்களோடும் கூடி, நெருக்கமில்லாமல் ஸுகமாக அந்தப் பர்வதத்தின் (மலையின்) கீழ்ப் பள்ளத்தில் ஒதுங்கினார்கள்.

கோபர்கள் எல்லாரும் பசி, தாஹங்களால் விளையும் வருத்தத்தையும், ஸுகாபேக்ஷையையும்  (இன்பத்தில் விருப்பத்தையும்) துறந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஸ்ரீக்ருஷ்ணனும், அவ்வாறு அவர்களால் பார்க்கப்பட்டவனாகி, ஏழு நாள் வரையில் அந்தக் கோவர்த்தன பர்வதத்தை (மலையை) இடக்கைச் சுண்டு விரலின் நகத்து நுனியால் தரித்துக் கொண்டிருந்தான். பர்வதத்தைப் (மலையைப்) பெயர்த்தெடுத்து தரிக்கும் பொழுது, எவ்விடத்தில் அடி வைத்தானோ, அவ்விடத்தினின்று ஓரடியும் கூட அசையவில்லை. அவ்விடத்திலேயே நின்றிருத்தான். பிறகு, தேவேந்த்ரன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அந்தத் திறமையின் ப்ரபாவத்தைக் கண்டு மிகவும் வியப்புற்று, தன் ஸங்கல்பம் கைகூடப் பெறாமல், கர்வத்தைத் துறந்து, மேகங்களைத் தடுத்தான். பிறகு, கோவர்த்தன பர்வதத்தைத் (மலையை) தரித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணன், காற்றும், மழையும் நின்று, மேகங்களெல்லாம் தொலைந்து, ஸூர்யனும் விளக்கமுற்று, ஆகாயம் நிர்மலமாய் (தூய்மையாய்) இருக்கக் கண்டு, கோபர்களைப் பார்த்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- கோபர்களே! நீங்கள் ஸ்த்ரீகளோடும் (பெண்டிரோடும்), கோதனங்களோடும் (பசுக்களோடும்), குழந்தைகளோடும் கூடி வெளியே போவீர்களாக. பயத்தைத் துறப்பீர்களாக. காற்று, மழை ஓய்ந்து விட்டது. நதிகளும் ஜலப்ரவாஹம் (வெள்ளம்) குறையப் பெற்றன.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவான் மொழிகையில், ஸ்த்ரீகள், சிறுவர்கள், கிழவர்கள்,  வயதுள்ளவர்கள் ஆகிய கோபர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கோதனங்களுடன் கருவிகளையெல்லாம் வண்டிகளின் மேல் ஏற்றிக் கொண்டு, மெல்ல மெல்ல வெளிக் கிளம்பிச் சென்றார்கள். 

ஸ்ரீக்ருஷ்ண பகவானும், ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், அவலீலையாக (விளையாட்டாக) அந்தப் பர்வதத்தை (மலையை) அது இருந்த இடத்தில் முன் போலவே ஸ்தாபித்தான் (நிறுத்தினான்). வனவாஸிகளான அந்தக் கோபர்கள், ப்ரேம வேகத்தினால் (அன்பு மிகுதியால்) அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி உரியபடி அணைப்பது முதலியன செய்து, ஸந்தோஷம் அடைந்தார்கள். அவ்வாறே, கோபிமார்களும் ஸ்னேஹம் விளங்குமாறு ஸந்தோஷத்துடன் அவனைத் தயிர், அக்ஷதை முதலியவைகளால் பூஜித்து, மேலான ஆசீர்வாதங்களையும் செய்தார்கள். யசோதை, ரோஹிணி, நந்தன், பலிஷ்டர்களில் சிறந்த பலராமன் ஆகிய இவர்கள் ஸ்னேஹத்தினால் மனங்கலக்கப் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனை அணைத்துக் கொண்டு, ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். 

மன்னவனே! ஆகாயத்தில் தேவக் கூட்டங்களும், ஸாத்யர், ஸித்தர், கந்தர்வர், சாரணர் இவர்களும் ஸ்தோத்ரங்கள் செய்து, எல்லாரும் புஷ்ப வர்ஷங்களைப் பெய்தார்கள். நரேந்த்ரனே! சங்கு, துந்துபி முதலிய வாத்யங்கள் ஆகாயத்தில் தேவதைகளால் வாசிக்கப்பட்டு, முழங்கின. மேன்மையுடைய தும்புரு முதலிய கந்தர்வர்கள், பாடினார்கள். ராஜனே! அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் தன்னிடத்தில் மிகுந்த அனுராகமுடைய (அன்பு மிக்க) கோபாலர்களோடும், பலராமனோடும், கூடித் தன்னுடைய கோகுலத்திற்குப் போனான். கோபிமார்களும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அத்தகைய அமானுஷ (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) சரித்ரங்களைப் பாடிக் கொண்டு, அவன் மனத்திற்கினியர்களாகி, மனக்களிப்புடன் கோகுலம் போய்ச் சேர்ந்தார்கள்.

கோவர்த்தன கிரிதாரி

ஆயர்கள் இந்திரனுக்காகச் செய்யும் விழாவைத் தடுத்த கண்ணன், இந்திரனுக்குப் பதிலாகக் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்யும்படி அறிவுறுத்தினான். அதை ஏற்று ஆயர்களும் கோவர்த்தன மலைக்குப் பூஜை செய்ய, அதனால் கோபம் கொண்ட இந்திரன், ஆயர்பாடியில் கனமழையைப் பொழிந்தான். அப்போது கண்ணன் கோவர்த்தன மலையையே குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்களையும் ஆநிரைகளையும் அம்மழையிலிருந்து காத்தருளினான். இதன் தத்துவம் என்னவென்றால், இவ்வுலக வாழ்க்கையில் ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று விதமான தாபங்கள் கல்மழை போல் நம்மை வந்து தாக்குகின்றன. நம் உடல் ரீதியாக நமக்கு வரும் உபாதைகளுக்கு ஆத்யாத்மிகம் என்று பெயர். இயற்கைச் சீற்றங்களால் வரும் இடையூறுகளுக்கு ஆதிதைவிகம் என்று பெயர். பிற உயிரினங்களால் நமக்கு உண்டாகும் தீங்குகளுக்கு ஆதிபௌதிகம் என்று பெயர். இவற்றிலிருந்து மீள என்ன வழி?

அன்று ஆயர்கள் கண்ணனைச் சரணடைந்தது போல், நாமும் கண்ணனைச் சரணடைந்தோமானால், குன்றைப் போல் உயர்ந்த தனது கல்யாண குணங்களையே குடையாகப் பிடித்து ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் எனப்படும் தாபத்ரய மழையிலிருந்து அவன் நம்மைக் காத்தருள்வான்.

இருபத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை