திருப்பாவை - 14 - கோமான் ஶ்ரீ பாலாஜி

 பதினான்காவது நாள்

“பாவாய், இன்று யாரடி வரவில்லை. கண்டிப்பாக ஒருத்தியாவது வராமல் இருப்பாளே. தினமும் அவர்களை எழுப்புவதே நமக்கு வேலையாகிவிட்டது.”


“ஆம் கோதே, இன்றும் ஒருத்தி வரவில்லை. அவள் நேற்று, நம்மிடம் பெரிய பெருமை பேசினவள். தன்னை யாரும் எழுப்ப வேண்டாம், தானே முன்னர் எழுந்து நம் அனைவரையும் எழுப்புவதாகச் சொன்னாளே அவள் தான் வரவில்லை.”


“சரி தான். அவளுக்கு வாய் மட்டும் தான் இருக்கிறது. செயலில் இல்லை. வாருங்கள் அவள் இல்லம் செல்வோம்.”


“நங்காய், உன் வீட்டு புழக்கடையில் உள்ள வாவியுள்…”


“கோதே, ‘புழக்கடை வாவியுள்’ என்றால்…..”


“பாவாய், நம் வீட்டு முகப்பு வாசலை விட மிக குறுகியதான வாசலுடன். வீட்டின் கடைசியில் நாம் புழங்கும் இடம், அதனுள் உள்ள சிறிய குளம் என்று கூறுகிறேன். நம் அனைவரின் வீட்டிலும் இருக்குமே நீ பார்த்ததில்லையா அல்லது உனக்கு பெயர் தெரியாதா. சரி பரவாயில்லை மேலும் கேள். முக்தி தரும் நகரேழில் முக்கியமான காஞ்சியின் அருகே ‘நடவாவி கிணறு’ என்றே ஒன்று உள்ளது. அங்கே நம் வரதர் சித்திரை மாத பௌர்ணமியன்று அக்கிணற்றில் இறங்கி கிணற்றை மூன்று முறை வலம் வருவார். அதேபோன்று இருக்கும் இவள் வீட்டு வாவியில் செங்கழுநீர் அதாவது செந்தாமரை மலர்ந்து ஆம்பல் அதாவது அல்லி வாய் மூடிவிட்டது.”


“கோதே, தாமரை மலர்வதும் அல்லி மூடுவதிலும் என்ன புதுமையிருக்கிறது.”

“பாவாய், செந்தாமரை மலரானது சூரியன் உதயமானதும் மலரும், அதே சமயம் இரவில் சந்திரனை கண்டதும் மலர்ந்த அல்லி மலர் வாய் மூடுவதும் தினசரி நடப்பவைதான். என் தந்தை குழந்தைக் கண்ணனுக்கு தன் திருமொழியில், 

‘செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி

எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்ட வாவென்று

மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை

பண்பகர் வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே.’ 

என்று எத்தனையோ மலர்களை நம் மலர்வண்ணன் மாதவனுக்கு ‘பூச்சூட்ட வாராய்’ என்று 

சூடி மகிழ்வார். அதனால்தான் இதனை தெரிவித்தேன் பாவாய்.”


“கோதே, உன்னிடம் கற்பதற்கு நிறைய இருக்குதடி. சரி நாம் வந்த வேலையை பார்ப்போம்.”


“அடியே நல்ல நாவுடைய நங்காய், நேற்று அப்படிப் பேசினாயே, இன்று நாங்கள் அனைவரும் உன் வீட்டு வாசலில் நின்று உன்னை எழுப்புகிறோம். கொஞ்சமும் நாணம் இல்லாதவளே, தூய்மையான செந்நிற ஆடையணிந்த பல தவம் செய்வோர் குளித்து, கோயிலுக்கு சென்று சங்கு ஊத போகின்றார்களே. நாம் சங்கையும் சக்கரத்தையும் ஏந்திய பெரிய கையன் பங்கயக்கண்ணன் செந்தாமரைக் கண்ணனை பாட வேண்டாமா. அதற்காகவே விரைந்து எழுந்து வா, நாவுடைய நங்காய்.”


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை