செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 242

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தாறாவது அத்தியாயம்

(கோபிமார்கள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அமானுஷ (மனித சக்திக்கு அப்பாற்பட்ட) சரித்ரங்களைப் பற்றிச் சங்கிக்க, நந்தன் கர்க்கருடைய வசனங்களைச் சொல்லி, அவர்களைத் தெளிவித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கோபர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய இத்தகைய பற்பல அற்புத சரித்ரங்களை நினைத்து, அவனுடைய மஹிமையை உள்ளபடி அறியாதவர்களாகையால், வியப்புற்று,  நந்தனிடம் வந்து மொழிந்தார்கள்.

கோபர்கள் சொல்லுகிறார்கள்:- இப்பாலகன் செய்கிற இத்தகைய பல செயல்களும் மிகவும் அற்புதங்களாயிருக்கின்றன. ஆகையால், க்ராம்யர்களான (ஒன்று மறியாத மூடர்களான) கோபர்களிடத்தில், இவன் தனக்கு ஜுகுப்ஸிதமான (வெறுக்கத்தக்க) ஜன்மம் பெறுதற்கு எவ்வாறு உரியவனாவான்? ஏழு வயதுள்ள பாலனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், மத்த கஜம் (மதம் பிடித்த யானை) துகிக்கையால் தாமரை மலரைத் தரிப்பதுபோல, இப்பெருமலையை ஒற்றைக் கையினால் எப்படி தரித்துக் கொண்டிருந்தான்? மற்றும், 

1. இவன் கண்ணைத் திறக்கவும் முடியாத இளங்குழந்தையாயிருக்கும் பொழுது, சரீரத்தின் யௌவன (இளம்) வயதைக் காலம் அனாயாஸமாகப் பறிப்பது போல, மிகுந்த பலமுடைய பூதனையின் ஸ்தன்யத்தை (தாய்ப்பாலை) ப்ராணன்களோடு (உயிரோடு) பானம் செய்தானே (குடித்தானே). அது எப்படி? 

2. இவன் மூன்று மாதக் குழந்தையாயிருக்கும் பொழுது, வண்டியின் கீழ் படுத்துக் காலைக் குறுக்கும் மேலுமாய் உதைத்து அழுது கொண்டிருக்கையில், அச்சகடம் (வண்டி) இவனுடைய  நுனிக்காலால் அடியுண்டு, தலை கீழாய் விழுந்ததே. அது எப்படி? 

3. இவன் ஒரு வயது குழந்தையாயிருக்கும் பொழுது, பூமியில் உட்கார்ந்திருக்கையில், த்ருணாவர்த்தனென்னும் அஸுரன் இவனை ஆகாச மார்க்கத்தினால் எடுத்துக் கொண்டு போகையில், அவனை இவன் கழுத்தில் பிடித்துக் கொண்டு வருத்திக் கொன்று விட்டானே. இது எப்படி? 

4. ஒருகால், இவன் வெண்ணெய் திருடினானென்று இவனுடைய தாய் கோபித்து, இவனை உரலோடு இணைத்துக் கட்டி வைக்கையில், அவ்வுரலை இழுத்துக் கொண்டே கைகளால் தவழ்ந்து, மருத மரங்களினிடையில் நுழைந்து, அம்மரங்களை வேருடன் விழத் தள்ளினானே. இது எப்படி? 

5. இவன், பலராமனோடும், மற்ற இடைப் பிள்ளைகளோடும் கூடி, வனத்தில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், தன்னைக் கொல்ல வேண்டுமென்று விரும்பி, வந்த பகாஸுரனைக் கைகளால் வாயில் பிடித்துக் கொண்டு கிழித்து விட்டானே, இது எப்படி? 

6. இவன் தன்னைக் கொல்ல வேண்டுமென்று கன்றின் உருவம் கொண்டு, கன்றுகளோடு கன்றாய் மறைந்து வந்த வத்ஸாஸுரனைக் கொன்று, அவனுடைய தேஹத்தை அவலீலையாக   (விளையாட்டாக) விளாமரத்தின் மேல் வீசியெறிந்து, விளாம் பழங்களையும் விழத் தள்ளினான். 

7. இவன் பலராமனோடு கூடச்சென்று, தேனுகாஸுரனையும், அவன் பந்துக்களையும் கொன்று, நன்கு பழுத்த பழங்கள் நிறைந்த பனங்காட்டை எல்லோரும் நிர்பயமாய் (பயமின்றி) நுழைந்து அனுபவிக்கும்படி க்ஷேமப்படுத்தினானே. இது எப்படி? 

8. மிகுந்த பலசாலியான பலராமனைக் கொண்டு, கொடியனாகிய ப்ரலம்பாஸுரனைக் கொல்வித்து, தான் கோகுலத்துப் பசுக்களையும், கோபர்களையும் காட்டுத் தீயினின்று விடுவித்தானே. இது எப்படி? 

9. இவன் மிகவும் கொடிய விஷமுடைய ஸர்ப்பஸ்ரேஷ்டனான காளியனைச் சிக்ஷித்து (தண்டித்துத் திருத்தி), கர்வம் தொலைந்த அக்காளியனை, மடுவினின்று பலாத்காரமாகத் துரத்தி, யமுனையை விஷஸம்பந்தமின்றிப் பரிசுத்தமான ஜலமுடையதாகச் செய்தானே. இது எப்படி ? 

10. ஓ, நந்தனே! உன் பிள்ளையாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில், இடைச்சேரியிலுள்ள எங்கள் எல்லார்க்கும் அனுராகம் (பேரன்பு) துறக்க முடியாததாயிருக்கின்றது. அவனுக்கும், எங்களிடத்தில் பிறந்த நாள் முதல், ப்ரீதி மாறாது வளர்ந்து வருகின்றது. எப்படி?

11. ஏழு வயதுள்ள இப்பாலகன் எங்கே? பெரிய மலையைக் கையினால் தாங்குவது எங்கே? 

கோகுல நாதனே! ஆகையால், உன் புதல்வனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஸர்வ சக்தியும், ஸர்வஞ்ஜனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய, பரம புருஷனாயிருக்க வேண்டுமென்று நாங்கள் சங்கிக்கிறோம். இல்லையாயின், இவையெல்லாம் எவ்வாறு சேரும்.

நந்தன் சொல்லுகிறான்:- ஓ கோபர்களே! இக்குமாரனைப் பற்றிக் கர்க்கர் என்ன மொழிந்தாரோ, அதைச் சொல்லுகிறேன், கேட்பீர்களாக. உங்களுக்கு இக்குழந்தை விஷயத்தில் ஸந்தேஹம் தொலையுமாக. “இவன் யுகங்கள் தோறும் திருவுருவங்களைக் கொள்கின்றான். இந்த என் புதல்வன், கீழ் மூன்று யுகங்களில் வெளுப்பு, சிவப்பு, மஞ்சள் என்கிற மூன்று நிறங்களை ஏற்றுக் கொண்டிருந்தான். இப்பொழுது, கறுப்பு நிறத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றான். ஆகையால், இவன் ஸ்ரீக்ருஷ்ணனென்று பெயர் பெறுவான். பெருஞ் செல்வமுடைய இக்குமாரன், வஸுதேவனாகிய உனக்கு முன்பு ஒருகால் பிள்ளையாகப் பிறந்தானாகையால், அறிஞர்கள் இவனை வாஸுதேவனென்று சொல்லுகிறார்கள். உன் புதல்வனாகிய இவனுக்கு, குணங்களுக்கும், செயல்களுக்கும் உரிய பல நாமங்களும் (பெயர்களும்) உருவங்களும் உண்டு. அவற்றையெல்லாம், என்னைப் போன்றவர்கள் அறிவார்களேயன்றி, மற்ற ஜனங்கள் அறிய மாட்டார்கள். கோபர்களையும், கோகுலத்தையும் மனக்களிப்புறச் செய்யும் தன்மையுடைய இப்புதல்வன், உங்களுக்கு இஹலோகத்து (இந்த உலகத்து) நன்மைகளையும், பரலோகத்து (பிற உலகத்து) நன்மைகளையும் விளைக்கப் போகிறான். நீங்கள், இவனால் எல்லா வருத்தங்களையும் சீக்ரத்தில் தாண்டப் போகிறீர்கள்.

கோகுலத்திற்கு நாதனே! முன்பு ஜகத்தெல்லாம் அராஜகமாய்த் (அரசர்கள் இன்றி) துஷ்டர்களால் (கொடியவர்களால்) பீடிக்கப்பட்டிருக்கையில், தர்மத்தைத் தொடர்ந்து நடத்தும் ஸாதுக்கள், உன் பிள்ளையாகிய இவனால் பாதுகாக்கப்பட்டு, வளர்ந்து, அந்த துஷ்டர்களை வென்றார்கள். மிகுந்த பாக்யமுடையவனே! மனுஷ்யர்களில் எவரேனும் இந்த உன் பிள்ளையிடத்தில் ப்ரீதி செய்வார்களாயின், விஷ்ணுவின் பக்ஷத்தில் சேர்ந்தவர்களை அஸுரர்கள் பாதிக்க முடியாதிருப்பது போல, அவர்களைச் சத்ருக்கள் (எதிரிகள்) பரிபவிக்க (துன்பறுத்த) மாட்டார்கள். நந்தா! இந்த உன் பிள்ளை, குணங்களாலும், செல்வத்தினாலும், கீர்த்தியினாலும், ப்ரபாவத்தினாலும், ஸ்ரீமந் நாராயணனோடு ஒத்தவன். ஆகையால், அவன் செயல்களைப் பற்றி ஆச்சர்யப்பட வேண்டியதில்லை” என்று எனக்குக் கர்க்க முனிவர் ஸ்பஷ்டமாக (தெளிவாக) உண்மையை மொழிந்து, தன் க்ருஹத்திற்குப் போகையில், எப்படிப்பட்ட கார்யத்தையும் அனாயாஸமாகச் (உடல் நோகாமல்) செய்து முடிக்கும் திறமையுடைய ஸ்ரீக்ருஷ்ணனை, நான் அது முதல் ஒன்றான ஸ்ரீமந்நாராயணனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு கர்க்க முனிவர் மொழிந்ததாகச் சொன்ன நந்தனுடைய வசனத்தைக் கோகுல வாஸிகள் கேட்டு, வியப்பு நீங்கியவராக, ஸந்தோஷம் அடைந்து, நந்தனையும், ஸ்ரீக்ருஷ்ணனையும் பூஜித்தார்கள். தன் யாகத்திற்கு விக்னம் (இடையூறு) செய்தான் என்னும் கோபத்தினால், இந்த்ரன் மழை பெய்கையில், தன்னையே ரக்ஷகனாகவுடையதும், தன்னையொழிய வேறு ரக்ஷண உபாயத்தை (காப்பாற்றும் வழியை) அறியாததுமாகிய கோகுலத்திலுள்ள சிறுவர்களும், பசுக்களும், ஸ்த்ரீகளும் வருந்துவதைக் கண்டு, மனஇரக்கமுற்று, தன் மஹிமையை வெளியிட முயன்று, சிரித்துக் கொண்டே, தான் சிறுவனாயினும், கோவர்த்தன கிரியை விளையாட்டிற்காக நாய்க் குடையைப் பிடுங்குவது போல ஒற்றைக் கையினால் பிடுங்கி, தரித்து, கோகுலத்தையெல்லாம் பாதுகாத்து, மஹேந்த்ரனுடைய கொழுப்பை (செருக்கை) அடக்கினவனும் பசுக்களுக்கு இந்த்ரனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், நமக்கு ப்ரியனாயிருப்பானாக. 

இருபத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக