செவ்வாய், 29 டிசம்பர், 2020

திருப்பாவை - 15 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினைந்தாவது நாள்

(இந்தப் பாசுரம் மிகவும் சிறப்பு வாய்ந்த பாசுரம். இப்பாசுரம் திருப்பாவைக்கே ஒரு திருப்பாவை என்பார்கள் பெரியோர்கள். இப்பாசுரம் ஒரு உரையாடலைப் போன்றே அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது. இப்பாசுரம் மூன்றாவது ஐந்து பாசுரங்களின் கடைசிப் பாசுரம். எல்லோரையும் அழைத்து நம் கண்ணன் திருமாளிகைக்கு செல்வதற்கு தாயராகும் முதல் பாசுரம் என்றும் கூறுவர். வாருங்கள் இப்பாசுரத்திற்குள் புகுவோம்.)


“கோதை இன்று பதினைந்தாவது நாளிற்கு வந்துவிட்டோம். நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டனர். வழக்கம்போல் ஒருத்தித் தான் வரவில்லை.”


“அப்படியா வாருங்கள் அவள் இல்லம் செல்வோம்.”


அவளின் இல்லத்திற்கு வந்து…..


“ஏலே, இளங்கிளியே இன்னுமா உறங்குகிறாய்?”


உள்ளே இருப்பவள் கோபத்துடன், 


“இப்படி வீட்டின் முன் நின்று சில் சில் என்று பலரும் உறைய கத்தாதீர்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பார்ப்பார்கள். நங்கைகளே நானே வருகிறேன்.”


“உன்னைப் பற்றித்தான் எங்களுக்குத் தெரியுமே. வாய்ச்சொல்லிலேயே பந்தலிடுவாய். நீ இப்படித்தான் சொல்வாய், ஆனால் வர மாட்டாய். ஏமாற்றுவாய்.”


“என்னையா சொல்கிறீர்கள். அப்படி செய்பவர்கள் நீங்கள் தான்.”

“ஆமாம்டி, நாங்கள் தான் தப்புச் செய்தவர்கள். இதுவரைக்கும் ஆன எல்லா குற்றத்திற்கும் நானே பொறுப்பு போதுமா. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு உன்னைச் சொல்லிவிட்டேன். நீ என்னை கோபித்துக் கொள்ளாதே.”


(இப்படி ‘நானே தானாயிடுக’ என்று ஆண்டாள் கோதை சொல்லவே அவதரித்தாள். யாராவது தப்பு செய்து மாட்டிக் கொண்டால், அதை இன்னொருவர் மீது பழி போடுவதைத் தான் நாம் காண்கிறோம். ஆனால் இங்கே கோதை அனைத்தையும் தன் மீது தாங்கிக் கொள்கிறாள். அவள்தான் பூமிப்பிராட்டியின் மறு அவதாரமாயிற்றே. இதே போன்று இராமாயணத்தில், மந்தரை சூழ்ச்சியால் கைகேயியின் மகன் பரதன் நாடாள, இராமர் பதினான்கு ஆண்டுகள் காடாளப் போகின்றார். இந்த செய்தியை பின்னர் அறிந்த பரதன், எல்லாம் என்னால் தான் நடந்தது, நான் பிறக்காமல் இருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது என்கின்றான். இதையும் ஆண்டாளின் ‘நானே தானாயிடுக’ என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.)


“சரி போகட்டும் கோதே, நான் வேறு ஆடை மாற்றிக் கொண்டு வருகிறேன்.”


“அடியே இளங்கிளியே, நீ எப்பொழுதும் நல்ல ஆடையைத் தானே அணிந்திருப்பாய். ஏற்கனவே நீ அழகான இளங்கிளி. இந்த ஆடையே போதுமடி.”


“எல்லோரும் வந்துவிட்டார்களா கோதே.”


“எல்லோரும் வந்துவிட்டார்களடி. ஐயம் வேண்டாம், அப்படியிருப்பின் வந்து எண்ணி கணக்கிட்டுக் கொள். நீ உடனே வா. நாம் உடனே சென்று நம் மாயன் வைகுந்தன், அன்று குவலாயபீடம் என்ற யானையை அழித்தவனும், கம்சன் போன்றவர்களின் கொடிய செயல்களை வீழ்த்தி அவனை மாற்று இல்லாதபடி அழித்தவனுமான நம் கண்ணன் மாமாயன் மாதவனை பாடுவதற்கு நீ வர வேண்டும். உடனே வா என் இளங்கிளியே.”


எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க

வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக