புதன், 30 டிசம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 243

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தேழாவது அத்தியாயம்

(இந்த்ரன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய வைபவத்தைக் கண்டு, காமதேனுவுடன் வந்து, கோவிந்த பட்டாபிஷேகம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், கோவர்த்தன பர்வதத்தை (மலையை) எடுத்து, தரித்து, கோகுலத்தை விடா மழையினின்று பாதுகாக்கையில், இந்த்ரனும், காமதேனுவும், ஸ்வர்க்க லோகத்தினின்று புறப்பட்டு வந்தார்கள். இந்த்ரன் தான் அபராதம் செய்தமையால் வெட்கமுற்று, ஏகாந்தத்தில் (தனிமையில்) ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி, ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியுடைய கிரீடத்தினால் இந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பாதங்களில் ஸ்பர்சித்தான் (தொட்டான்). அமித ப்ரபாவமுடையவனாகிய (அளவற்ற பெருமை உடையவனான) ஸ்ரீக்ருஷ்ணனுடைய வைபவத்தைக் கேட்டிருந்த தேவேந்திரன், அவ்வைபவத்தை நேரில் கண்டு அனுபவித்தானாகையால், மூன்று லோகங்களுக்கும் தானே ஸ்வதந்த்ர ப்ரபுவென்னும் (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்னும்) கர்வம் அழியப்பெற்று, கைகளைக் குவித்துக் கொண்டு, இவ்வாறு மொழிந்தான்.

இந்த்ரன் சொல்லுகிறான்:- உன்னுடைய வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) பரமபதம் சுத்தஸத்வ மயமானது. ரஜஸ்-தமஸ்ஸுக்கள் தீண்டப்பெறாதது. ராக-த்வேஷாதிகளின் ஸம்பந்தமற்றது. கேவலம் உன்னுடைய உபாஸனா ரூபமான தவத்தினால் அடையத் தகுந்தது. உன் ஸங்கல்ப மாத்ரத்தினால் ஏற்பட்டதும், ஸத்வாதி குணங்களின் பரிணாமமுமாகிய இந்த ஸம்ஸாரமும், அதன் மூலமாய் வருவதும், சரீர ஸம்பந்தத்திற்குக் (உடல் தொடர்புக்குக்) காரணமுமாகிய கர்மானுபந்தமும் (முன் வினையாகிற கட்டும்), உன் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிற) அந்தப் பரமபதத்தில் கிடையாது. 

ஸர்வேச்வரனே! அந்தச் சரீர (உடல்) ஸம்பந்தத்தினால் விளைபவைகளும், மீளவும் மற்றொரு சரீர (உடல்) ஸம்பந்தத்திற்குக் காரணமாய் இருப்பவைகளுமான ராகாதிகள் (விருப்பு முதலியவைகள்) உனக்கு ஏது? கிடையாது. அவை, தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கம்) உடையவர்களுக்கு அடையாளமாயிருக்கும் பதார்த்தங்களல்லவா (பொருட்கள், விஷயங்கள் அல்லவா)? ராகாதிகளால் (விருப்பு, வெறுப்பு முதலியவைகளால்) அல்லவோ ப்ராணிகளின் தேஹாத்மப்ரம (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கம்) ரூபமான அஜ்ஞானம் (அறியாமை) வெளியாகிறது. ஆகையால், ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) உனக்குக் கிடையாது. ஷாட்குண்யபூரணனே! (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே!) ஆயினும், நீ தர்மத்தை  நிலை நிறுத்துவதற்காகவும், துஷ்டர்களை (கொடியவர்களை) நிக்ரஹிப்பதற்காகவும் (தண்டிப்பதற்காகவும்), தண்டனை விதிக்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்றனையன்றி, ராகாதிகளாலன்று (விருப்பு, வெறுப்பு முதலியவைகளால் அன்று). நீ, ஸமஸ்த லோகங்களுக்கும் தந்தை. ஹிதோபதேசம் செய்பவன் (நன்மையைக் கற்பிப்பவன்); கடக்க முடியாத நியாமகன் (நியமிப்பவன்); உரிய காலங்களில், அவரவர்க்குத் தகுந்தபடி தண்டனை செய்பவன். ஆகையால், நீ, தம்மையே ஜகத்திற்கெல்லாம் ஸ்வதந்த்ர ப்ரபுவாக (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்று) அபிமானித்துக் (பெருமையாக நினைத்துக்) கொண்டிருக்கின்ற என்னைப் போன்றவர்களுடைய கர்வத்தை உதறிக் கொண்டு, எங்கள் ஹிதத்திற்காகவே (நன்மைக்காகவே) உன் ஸங்கல்ப மாத்ரத்தினால் அப்ராக்ருதமான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களுடன் கூடிய மூலப்ரக்ருதியின் தொடர்பு இல்லாத, சுத்த ஸத்வ மயமான) திவ்ய மங்கள விக்ரஹங்களை ஏற்றுக் கொண்டு, நடையாடுகின்றாய். என்னைப் போன்ற அறிவில்லாத மூடர்கள் எவரெவர் தம்மை ஜகத்திற்கெல்லாம் ஸ்வதந்த்ர ப்ரபுக்களாக அபிமானித்திருக்கிறார்களோ (தன் விருப்பப்படி ஆளும் தலைவன் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ), அவர்களுக்கு உரிய காலத்தில் தண்டனை அளிப்பதால், பயங்கரனாயிருக்கின்ற உன்னைக் கண்டு, தாங்களே ஜகத்திற்கெல்லாம் ப்ரபுக்களென்கிற துரபிமானத்தை (தவறான எண்ணத்தை) விரைவில் துறந்து, கர்வமும் தொலையப் பெற்று, பெரியோர்களின் மார்க்கத்தைத் தொடர்ந்து நடக்கின்றார்கள். 

ஆகையால், உன்னுடைய நடையாட்டமும் கூடத் துஷ்டர்களுக்குச் (கொடியவர்களுக்கு) சிக்ஷையே (தண்டித்துத் திருத்துதலே). நான் இந்த்ராதி பத்யத்தினால் (பதவியினால்) மதம் தலை கொண்டு, வழி தப்பி, உன் ப்ரபாவத்தை அறியாமல், உன் விஷயத்தில் அபராதப்பட்டேன். இத்தகைய நீ, என்னுடைய அந்த அபராதத்தைப் பொறுத்தருள்வாயாக. நிக்ரஹம் (தண்டனை) செய்யவும், அனுக்ரஹம் (பரிவு, ஆசியுடன் அளிக்கும் பலன்) செய்யவும் வல்லவனே! மதிகேடனாகிய (புத்தி கெட்டவனான) எனக்கு, ஸர்வேச்வரனான உன் விஷயத்தில் மீளவும் இப்படிப்பட்ட துர்ப்புத்தி (கெட்ட சிந்தனை) உண்டாகாதிருக்கும்படி அருள் புரிவாயாக. 

இந்திரியங்களால் விளையும் அறிவுகளுக்கு விஷயமாகாதவனே! தேவா! பூமிக்குப் பெரும் பாரமான பிறவி உடையவர்களும், பற்பல ஸைன்யங்களுக்கு (படைகளுக்கு) ப்ரபுக்களுமான மன்னவர்களுக்குத் தண்டனை விதித்து, அவ்வழியால் அவர்களுக்கு ஸம்ஸார பந்தத்தை (பிறப்பு, இறப்பு மாறி மாறி வரும் இந்த உலகியல் தொடர்பை) அறுத்து, மோக்ஷம் கொடுப்பதற்காகவும் உன் பாதார விந்தங்களைத் தொடர்ந்து பணியும் பெரியோர்களுக்கு உன் பணிவிடையை மேன்மேலும் வளர்த்திக் கொடுப்பதற்காகவும், நீ இவ்வுலகத்தில் அவதரிக்கின்றாய். நீ ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); சரணமென்ற சப்தம் சொன்ன மாத்ரத்தில், அவன் செய்த அபராதங்களையெல்லாம் மறந்து, அவனை அனுக்ரஹிப்பதில் தாழ்ந்த மனமுடையவனே! வஸுதேவனுக்குப் பிள்ளையாய் வந்து அவதரித்தவனே! ஜகத்திற்கெல்லாம் க்ஷேமம் (நன்மை) செய்பவனே! பக்தர்களைப் பாதுகாப்பவனே! பரமபுருஷனே! ஸ்ரீக்ருஷ்ணா! உனக்கு நமஸ்காரம். 

கேவலம் ஸங்கல்பத்தினால் திவ்யமங்கள விக்ரஹத்தை ஏற்றுக் கொள்பவனே! மலர்தல், குவிதல் முதலிய விகாரங்களற்ற (மாறுபாடுகள் இல்லாத) ஜ்ஞானத்தையே (அறிவையே) வடிவாகவுடையவனே! எல்லாப் பொருள்களும் தானேயாயிருப்பவனே! எல்லாப் பொருள்களுக்கும் காரணனே! ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம். 

என்னைக் குறித்து இடையர்கள் செய்யும் யாகத்தை நீ தடுக்கையில், தேஹாத்மாபிமானமுடைய (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம் உடைய) நான் கடுங்கோபமுடையவனாகி, ஷாட்குண்யபூரணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்ற) உன்னால் பாதுகாக்கப்பட்ட கோகுலத்தை அழிக்கும் பொருட்டு, விடாமழைகளையும், பெருங்காற்றையும், விளைத்து இவ்வாறு செய்யத் தகாத கார்யம் செய்தேன். ஆயினும், என்னுடைய முயற்சியை வீணாக்கி, என் கர்வத்தைப் போக்கி, என்னை அனுக்ரஹித்தாய். இப்பொழுது, நியாமகனும் (நியமிப்பவனும்), தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) முதலிய துர்க்குணங்களைப் (தீய குணங்களைப்) போக்கி, ஹிதம் (நன்மை)  செய்யும் ஆசார்யனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய (எல்லா பிராணிகட்கு உள்ளும் ஆத்மாவாய் இருப்பவனாகிய) உன்னை நான் சரணம் அடைந்தேன். இப்பொழுதுள்ள என் மன நிலைமை, அந்தராத்மாவாகிய உனக்கே தெரிந்திருக்கும்.  நான் சொல்ல வேண்டியதில்லை.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தேவேந்த்ரனால் மொழியப்பட்ட ஸ்ரீக்ருஷ்ண பகவான் சிரித்துக் கொண்டே மேக கர்ஜனம் போல் கம்பீரமான வாக்கினால் அந்த இந்த்ரனைக் குறித்து மேல் வருமாறு கூறினார்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தேவேந்த்ரனே! ஐச்வர்யத்தினால் மிகவும் மதித்திருந்த உனக்கு, என்னைப் பற்றின நினைவை உண்டாக்கி, உன்னை அனுக்ரஹிக்கும் பொருட்டு நான் உன் யாகத்தைப் பங்கம் செய்தேன் (கெடுத்தேன்). ஜனங்கள் ஐச்வர்யத்தினாலும், செல்வப் பெருக்கினாலும் உண்டான மதத்தினாலும் (கர்வத்தினாலும்) விவேகமற்று, அபராதம் செய்தவர்களைத் தண்டிக்கும் தன்மையனான என்னைப் பார்க்கிறதேயில்லை. ஆகையால், எவனை நான் அனுக்ரஹிக்க விரும்புகிறேனோ, அவனைச் செல்வத்தினின்று நழுவச் செய்கிறேன். ஓ இந்த்ரனே! உங்களுக்கு இனி க்ஷேமம் உண்டாகும். ஆனால், என்னுடைய கட்டளையைத் தவறாமல் நடத்த வேண்டும். அதாவது, நீங்கள் அவிநயம் செய்யாமல் (பணிவின்றி இல்லாமல்) கர்வத்தைத் துறந்து, மனவூக்கத்துடன் உங்கள் அதிகாரத்தில் நிலை நின்றிருக்கையேயாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பால், அவரவர் விரும்பும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பதில் ஊக்கமுற்ற சிறந்த மனமுடைய காமதேனு, தன் ஸந்ததிகளுடன் வந்து, கோபால உருவம் கொண்ட ஸாக்ஷாத் பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை நமஸ்கரித்து மொழிந்தது.

காமதேனு சொல்லுகிறது:- க்ருஷ்ண! க்ருஷ்ண! ஜகத்திற்கெல்லாம் (உலகிற்கெல்லாம்) அந்தராத்மாவாயிருப்பவனே (உள்ளே ஆத்மாவாய் இருப்பவனே)! ஜகத்காரணனே! (ஜகத்திற்குக் காரணமே) அளவிறந்த கல்யாண குணங்களுடையவனே! யோகேச்வர்களுக்கும் ஈச்வரனே! நாங்கள் உலகங்களுக்கெல்லாம் நாதனாகிய உன்னால் நேரே நாதன் (தலைவன்) உடையவர்களாகச் செய்யப்பட்டோம். தன்னுடையவர்களைக் கைவிடாது ரக்ஷிக்கையாகிற உன் தன்மை எங்களிடத்தில் வெளியாயிற்று. நீயே எங்களுக்கு மேலான தெய்வம். ஜகத்திற்கெல்லாம் நாதனே! பசுக்களுக்கும், ப்ராஹ்மணர்களுக்கும், தேவதைகளுக்கும், ஸாதுக்களுக்கும், க்ஷேமத்தின் பொருட்டு நீயே இந்த்ரனாயிருப்பாயாக, அவரவர்களுக்கு அதிகாரம் கொடுப்பவனாகிய ப்ரஹ்மதேவனால் தூண்டப்பட்ட நாங்கள், உன்னையே இந்த்ரனாக அபிஷேகம் செய்யப்போகிறோம். ஸர்வ ஜகத் ஸ்வரூபனே! நீ பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு அவதரித்த பரமபுருஷனல்லயோ. ஆகையால், நீயே இந்த்ரனாயிருப்பதற்கு உரியவனன்றி மற்றெவருமல்லர்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு காமதேனு ஸ்ரீக்ருஷ்ணனை ப்ரார்த்தித்து, தன் பால்களால் அபிஷேகம் செய்தது. அவ்வாறே, இந்த்ரனும் அதிதி முதலிய தேவ மாதாக்களால் தூண்டப்பட்டு, தேவதைகளோடும், ரிஷிகளோடும் கூடி, ஐராவதத்தின் துதிக்கையால் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கையின் ஜலங்களால் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்து, கோவிந்தனென்று பெயரும் இட்டான். அவ்விடம் வந்திருந்த தும்புரு, நாரதர் முதலியவர்களும், கந்தர்வர், வித்யாதரர், ஸித்தர், சாரணர் இவர்களும், உலகங்களின் பாவங்களைப் போக்கவல்லதாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய புகழைப் பாடினார்கள். அரம்பை முதலிய தெய்வ மடந்தையர்கள், ஸந்தோஷமுற்று, நன்றாக ஆடினார்கள். 

தேவக்கூட்டங்களில் தலைமையுள்ள தேவர்கள், அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள்; மற்றும், அவன் மேல் நாற்புறத்திலும் பூமழை பொழிந்தார்கள். மூன்று லோகங்களும் மிகுந்த ஆநந்தம் அடைந்தன. பசுக்கள் பூமியைப் பால்களால் நனைத்தன. ஆறுகள், பால், தயிர் முதலிய பல ரஸங்களைப் பெருக்கின. வ்ருக்ஷங்கள் (மரங்கள்) தேன்களைப் பெருக்கின. பர்வதங்களில் (மலைகளில்) ஓஷதிகள் (மூலிகைச் செடிகள்) உழுது பயிரிடாமல் தானே வளர்ந்தன. மற்றும், பர்வதங்கள் (மலைகள்), மேலான ரத்னங்களை வெளித் தோன்றும் படி தரித்தன. ஸ்ரீக்ருஷ்ணன் அபிஷேகம் செய்யப் பெற்று, இந்த்ரனாயிருக்கையில், கொடும் தன்மை உடையவைகளான இவ்வுலகத்திலுள்ள ப்ராணிகள் அனைத்தும் வைரம் (பகைமை) அற்றிருந்தன. அந்தத் தேவந்த்ரன், இவ்வாறு பசுக்களுக்கும் கோகுலத்திற்கும் ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கோவிந்த பட்டாபிஷேகம் செய்து, அவனால் அனுமதி கொடுக்கப் பெற்று, தேவாதிகளுடன் ஸ்வர்க்க லோகம் போய்ச் சேர்ந்தான். 

இருபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக