திருப்பாவை - 16 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினாறாவது நாள்

(ஆறாவது பாசுரத்திலிருந்து பதினைந்தாவது பாசுரம் வரை ஆண்டாள் தன் தோழியர்களை எழுப்பினாள். இப்பொழுது அடுத்த கட்டமாக கண்ணனின் திருமாளிகைக்கு வருகிறாள். இந்தப் பாசுரம் நாம் எவ்வாறு கோயிலுக்குச் சென்று, அங்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நன்றாக விவரிக்கிறாள் கோதை உள்ளர்த்தத்தில். கோயிலுக்குச் செல்லும் முன் முதலில் நமக்கு அடக்கம் வரவேண்டும். அங்கே வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் எப்பொழுதும் பகவானோடே இருப்பதால். கொடிமரத்தை வணங்கவேண்டும். உடல் தூய்மையாக மனமும் தூய்மையாக அவன் புகழ் பாடிக் கொண்டுச் செல்ல வேண்டும். ‘மணிக்கதவம் தாள் திறவாய்’ என்ற பதத்திற்கு வியாக்யானத்தில் ஆசார்யர்களின் ஆசியுடன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று இருக்கிறது. வாருங்கள் பாசுரத்திற்குச் செல்வோம்)


“கோதே, இன்று நாம் பதினாறாவது நாள் வந்துவிட்டோம். இத்துடன் நமது பாவை நோன்பு முடிந்துவிட்டதா. அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்.”

 

“பாவாய், ஏற்கனவே இரண்டாம் நாள் நம் பாவை நோன்பு நோற்பதற்கான நோக்கம் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தெரிவித்திருக்கிறேன் அல்லவா. இப்பொழுது தான் நாம் நம் பாவை நோன்பின் முக்கிய கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆயர்ப்பாடியின் மன்னன், நம் கண்ணனின் தந்தை நந்தகோபரை அவர் மாளிகைக்கே சென்று பார்க்கப் போகிறோம்.”

 

“அப்படியா கோதை. கண்ணனின் மாளிகையைப் பார்க்கப் போகிறோமா எனது பிறவிப்பயன் இன்றுதான் கிடைக்கப்போகிறது. இன்று நம் தோழிகள் அனைவரும் வந்துவிட்டார்கள் இதுதான் சரியான தருணம்.”

 

“வாருங்கள் நாம் அனைவரும் ஆயர்பாடிக்குச் செல்வோம்.”

 “கோதை, எவ்வளவு அருமையாக உள்ளது கண்ணனுடைய திருமாளிகை.”

 

“ஆம் பாவாய், அவன் நம் மன்னன் மாமாயன் நீலமேக சியாமளன், வைகுந்தன், பத்மநாபன். அவன் கோயிலின் முன்னே வாயில் காப்போன் நிற்கின்றார் பார் அவரை வணங்கி, அவரிடம் உள்ளே செல்ல அனுமதி பெற வேண்டும்.”

 

“கோதை நாம் கண்ணனுடைய மாளிகைக்கு வந்திருக்கிறோம். நீ கோயில் என்கின்றாயே.”

 

“பாவாய் நம் மன்னன் கண்ணன் இருக்குமிடம் நமக்கு கோயிலடி. மாளிகையல்ல. மேலும் அழகிய கொடித் தோரணங்களால் சூழப்பட்ட வாயிலை காவல் காப்போனும் இருக்கிறார். அவரிடமும் அனுமதி கேட்போம்.”

 

“ஐயா, நம் ஆயர்ப்பாடிக்கு காவலனாய், நாயகனாய் திகழும் நந்தபோனுடைய கோயில் காப்போனே வணங்குகின்றோம். கொடி தோன்றும் தோரணவாயில் காப்போனே தங்களையும் வணங்குகின்றோம்.”

 

“பெண்களே இது கண்ணன் திருமாளிகை இங்கு எதற்காக அதிகாலையிலேயே வந்துள்ளீர்கள். மாய உருக்கொண்டு எங்கள் கண்ணனுக்கு ஏதேனும் தீங்குச் செய்ய வந்துள்ளீர்களா.”

 

“ஐயா, நாங்கள் ஆயர்ச்சிறுமிகள் கண்ணனை காண்பதற்காக வந்துள்ளோம். மாமாயன் மணிவண்ணன் எங்களின் பாவை நோன்பிற்கு பரிசாக கொட்டும் பறையை கொடுப்பதாக நேற்றே எங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.”

 

“ஓகோ உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தால் எங்களிடம் தெரிவித்திருப்பாரே அவர்கள் வருவார்கள் உள்ளே விடுங்கள் என்று. சரி அப்படியே அனுமதித்தாலும் உள்ளே போய் என்ன செய்வதாக உத்தேசம்.”


“ஐயா கண்ணன் துயிலெழக் காணப் ஆசைப்படுகிறோம். அவர் பள்ளிக் கொள்ளும் அழகை பார்த்துக் கொண்டேயிருக்க விரும்புகிறோம். மேலும் அவரை பாடித் துயிலெழுப்பவும் வேண்டிக் கொள்கிறோம்.”


“நன்றாய் இருக்கிறது உங்கள் நியாயம். மன்னன் தூக்கத்தை கலைத்து பாடி எழுப்புவதா.”


“ஐயா திருவரங்கத்து அரங்கநாதரை நாள்தோறும், 

‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்

கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய்,

மதுவிரிந் தொழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி,

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களிற்று ஈட்டமும் பிடியடு முரசும்,

அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.’ 

என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடி தானே எழுப்புகின்றார். மேலும் நாங்கள் தூய்மையாக நீராடிவிட்டு தூய்மையான மனதுடன் வந்திருக்கிறோம். எங்களை மாட்டேன் என்று மறுதலித்துப் பேசாமல் அனுமதிக்க வேண்டும் ஐயா. மணிக்கதவம் திறக்கின்றீர்களா ஐயா.”


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை