தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தெட்டாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் வருண லோகத்தினின்று நந்தனை திரும்பக் கொண்டு வருதலும், வருணன் ஸ்ரீக்ருஷ்ணனை ஸ்தோத்ரம் செய்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் கோபர்களுக்கு தன் வைகுண்ட லோகத்தைக் காட்டுதலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒரு கால் நந்தன் ஏகாதசியினன்று ஆஹாரம் புசியாதிருந்து, பரமபுருஷனை நன்றாக ஆராதித்து, மற்றை நாள் த்வாதசி ஒரு கலையளவு (மிகச்சிறிய கால அளவு 1 நிமிடம் (அ) 48 வினாடி (அ) 8 வினாடி) மாத்ரமே மிகுந்திருக்கையால், அதற்குள் பாரணை செய்ய வேண்டுமென்னும் ஆவலால் ஆஸுர வேளையான (அஸுரர்கள் விழித்திருக்கும் நேரமான) அர்த்தராத்ரியில் (நடு இரவில்) எழுந்து, பொழுது தெரியாமல், அப்பொழுதே ஸ்னானம் செய்வதற்காக யமுனையின் ஜலத்தில் இழிந்தான். அவ்வாறு ராத்ரியில் நீராட விழிந்த அந்நந்தனை வருணனுடைய ப்ருத்யனாகிய (சேவகனான) ஓர் அஸுரன் பிடித்து, வருணனிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். அப்பால், பொழுது விடிகையில், கோபர்கள் நந்தனைக் காணாமல், “க்ருஷ்ணா! ராமா!” என்று முறையிட்டார்கள். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ண பகவான், அவர்கள் முறையிடுவதைக் கேட்டு, தந்தையாகிய நந்தனை வருணன் கொண்டு போனான் என்பதையும் அறிந்து, தன்னுடையவர்க்கு அபயம் கொடுப்பவனும், ஸமர்த்தனுமாகையால் அவ்வருணனிடம் சென்றான். லோகபாலனாகிய அவ்வருணனும் இருடீகேசனாசிய (இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவன்) பரம புருஷன் தன்னிடம் வந்திருப்பதைக் கண்டு, அவனுடைய காட்சியே பெரிய உத்ஸவமாகப் பெற்று, பூஜைக்கு வேண்டிய கருவிகளை அபரிமிதமாகக் (அளவற்ற அளவில்) கொண்டு வந்து, அவனைப் பூஜித்து, இவ்வாறு மொழிந்தான்.
வருணன் சொல்லுகிறான்:- ப்ரபூ! இப்பொழுது நான் தேஹம் தரித்தவனானேன் (உடலோடு கூடியவன்). தேஹம் படைத்தமைக்குப் பயன் உன்னைக் கண்டு பூஜிக்கையேயல்லவா? ஆகையால், இப்பொழுது தான் நான் தேஹம் படைத்தமைக்குப் பயன் பெற்றேன். மற்றும், இப்பொழுது தான் எனக்குப் புருஷார்த்தம் கைகூடிற்று. நான், ரத்னங்களுக்கு விளைநிலமாகிய ஸமுத்ரத்திற்கு நாதனாயிருந்தும், இதற்கு முன்பு நான் இத்தகைய பயன் பெறவில்லை. உன்னைக் கண்டமையால், இப்பொழுது என் கண்கள் பயன்பெற்றன. என்னுடையவர்க்கும், உன்னைப் புகழ்கையால், இப்பொழுது பயன்பெற்றது.
ப்ரபூ! ஷாட்குண்யபூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! உன் பாதங்களைப் பணிந்தவர்கள் பலரும் ஸம்ஸார மார்க்கத்தின் (பிறப்பு, இறப்பு மாறி மாறி வரும் இந்த உலகியல் வாழ்வின்) அக்கரையாகிய உன்னை அடைந்தார்கள். உன்னுடைய காட்சியைப் பெற்ற நான், இந்த ஸம்ஸாரத்தினின்று விடுபட்டு, உன்னைப் பெறுவேனென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும், அளவற்ற பெருமையுடையவனும், உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களிலும் உள்புகுந்து, அவற்றின் குணங்கள் தன் மேல் தீண்டப் பெறாமல் அவற்றை நியமித்து, தரித்துக்கொண்டிருப்பவனுமாகிய உனக்கு நமஸ்காரம். ஜீவலோகத்தின் ஜ்ஞானத்தைப் பலவாறு மாற்றும் தன்மையுடைய மாயையின் பெயரும்கூட உன்னிடத்தில் செயல்படாது.
இனி, அதன் கார்யம் உன்னிடத்தில் புலப்படாதென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? மற்றும், நீ தன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக் கொண்ட அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹமுடையவன். இத்தகைய உனக்கு நமஸ்காரம். என் பணியாளன் கார்யம் செய்யும் முறை அறியாத மூடனாகையால், உன் தந்தையென்பதை அறியாமல், இவனைக் கொண்டு வந்து விட்டான். இவன், உன் ப்ரபாவத்தை அறியான். நிக்ரஹம் (தண்டனை) செய்யவும், அனுக்ரஹம் (பரிவு, ஆசியுடன் அளிக்கும் பலன்) செய்யவும் வல்லவனே! நீ இதைப் பொறுத்தருள்வாயாக. உன் தந்தையாகிய இந்நந்தனைக் கொண்டு வந்தமையால், எவர்க்கும் கிடைக்க அரிதான உன் காட்சி எனக்கு நேரிட்டது. என் ப்ருத்யன் (பணியாளன்) செய்த அபராதமும் பெரிய நன்மையின் பொருட்டே ஆயிற்று. கோவிந்தனே! தந்தையினிடத்தில் பேரன்புடையவனே! உன் தந்தை இதோ இருக்கின்றான். இவனை அழைத்துக் கொண்டு போவாயாக. ப்ரபூ! உன் ப்ரஜைகளாகிய நாங்கள் அபராதம் செய்திருப்பினும், அனுக்ரஹிக்கத் தகுந்தவர்களே.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸர்வலோகேச்வரனான ஸ்ரீக்ருஷ்ண பகவான், இவ்வாறு வருணனால் அருள் புரியும்படி வேண்டப்பட்டு, தன் தந்தையை அழைத்துக் கொண்டு, பந்துக்களுக்கு (உறவினர்களுக்கு) ஸந்தோஷத்தை விளைப்பவனாகித் திரும்பி வந்து சேர்ந்தான். நந்தனோவென்றால், தான் என்றும் காணாத வருணனுடைய பெரிய ஐச்வர்யத்தையும், அந்த வருணாதிகள், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் வணக்கத்துடன் இருப்பதையும் கண்டு, மிகவும் வியப்புற்று, அதைத் தன் பந்துக்களுக்குச் (உறவினர்களுக்குச்) சொன்னான். மன்னவனே! பிறகு, அந்த நந்தனுடைய பந்துக்களான (உறவினர்களான)கோபர்கள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனை ஸாக்ஷாத் பரமபுருஷனாக நினைத்து, ஆவலுற்ற மதி (புத்தி) உடையவர்களாக “ஸர்வேச்வரனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ணன், இந்த்ரியங்களுக்கு விஷயமாகாத தன் ஸ்வரூப, ரூப, குண விபூதிகளின் நிலைமையை நமக்குக் காண்பிப்பானா?” என்று நினைத்தார்கள்.
எல்லாவற்றையும் அறியும் திறமையுடைய ஸ்ரீக்ருஷ்ணன், தன்னுடையவர்களான கோபர்கள் இவ்வாறு நினைப்பதைத் தானே அறிந்து கொண்டு, அவர்களுடைய மனோரதம் (விருப்பம்) ஸித்திக்கும் (நிறைவேறும்) பொருட்டு, மன இரக்கத்துடன் தனக்குள் இவ்வாறு சிந்தித்தான்.
“கோபர் (இடையர்) ஜன்மம் பெற்ற இந்த ஜனங்கள், இவ்வுலகத்தில் அவித்யை (அறியாமை), காமம் (ஆசை), கர்மம் செயல்) – அறியாமையால் ஆசை வசப்பட்டு, அதற்காக செயல்படும் இந்த மக்கள் - இவைகளால் மேன்மையும், தாழ்மையும், நடுத்தன்மையுமான தேவர், திர்யக்கு, மனுஷ்யர் முதலிய தேஹங்களில் நுழைகையாகிற கதிகளில் சுழன்று கொண்டு, என்னுடைய அஸாதாரணமான நிலைமையை அறிகிறதில்லை. இது என்ன வருத்தம். ஆகையால், இவர்களுக்கு நானே இரங்க வேண்டும்” என்று சிந்தித்து, பேரருளாளனும் (பெரும் கருணை கொண்டவனும்), ஜ்ஞானாதி (அறிவு, ஆனந்தம் முதலிய) குண ஸாகரனுமாகிய (குணங்களின் கடலுமான) ஸ்ரீக்ருஷ்ணன், விகாரமற்றதும் (மாறுபாடு இல்லாததும்), என்றும் அழியாமல் அளவற்ற ஞானத்திற்கு ஆதாராமாயிருப்பதும், அத்தகைய ஞானமே வடிவாயிருப்பதும், தேச, கால, வஸ்து பரிச்சேதங்களற்றதும் (வரையறை அற்றதும்) அளவற்ற பெருமையுடையதும், ஸ்வயம்ப்ரகாசமும் (தானே தோன்றுவதும்), ஆதி (முதல்) அந்தங்கள் (முடிவு) அற்றதுமாகிய தன் ஸ்வரூபத்தையும், அத்தகையதும், ப்ரக்ருதி மண்டலத்திற்கு அப்புறத்திலிருப்பதும், ஸமாதியில் நிலை நின்ற முனிவர்களால் ஸத்வ, ரஜ்ஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களே வடிவமாகப் பெற்ற ப்ரக்ருதி ஸம்பந்தம் (பிறப்பு, இறப்பு மாறி மாறி வரும் இந்த உலகியல் தொடர்புக்குக் காரணமான நம் முன் வினைகள் முழுவதும்) கழிந்த பின்பு காணத் தக்கதுமாகிய தன் வாஸஸ்தானமான (இருப்பிடமான) பரமபதமென்னும் வைகுண்டலோகத்தையும் அவர்களுக்குக் காட்டினான்.
முன்பு அக்ரூரர் எவ்விடத்தில் இழிந்து ஸ்னானஞ் செய்யும் பொழுது, ப்ரஹ்மலோகத்தைக் கண்டாரோ, அந்த ப்ரஹ்மஹ்ரதம் என்னும் நீர்நிலையில், ஸ்ரீக்ருஷ்ணனால் அவர்கள் கொண்டு போய் ஸ்னானம் செய்விக்கப் பெற்று, அதினின்று கரையேறி (அவ்வளவில் ஸமாதி சிஷ்டர்களாகி) ப்ரஹ்மலோகத்தைக் கண்டார்கள். நந்தன் முதலிய அந்தக் கோபர்கள், ப்ரஹ்ம லோகத்தைக் கண்டு, மிகவும் ஆநந்த ஸாகரத்தில் முழுகி, ஸ்ரீக்ருஷ்ணனை நன்றாகத் துதித்து, வெகுமதித்து, மிக்க வியப்புற்றார்கள்.
இருபத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.