வியாழன், 31 டிசம்பர், 2020

திருப்பாவை - 17 - கோமான் ஶ்ரீ பாலாஜி

பதினேழாவது பாசுரம்

(சென்ற பாசுரத்தின் தொடர்ச்சியாகவே இப்பாசுரத்தையும் பார்க்க வேண்டும். சென்ற பாசுரத்தில் கண்ணனின் திருமாளிகைக்கு உள்ளே செல்வதற்கு வாயில் காப்போனிடம் அனுமதி வாங்கினாள் ஆண்டாள். உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக பார்த்து வருகிறாள். முதலில் அவளின் கண்ணில் பட்டது கண்ணனின் தகப்பனார் நந்தகோபரின் அறை. இனி பாசுரத்திற்குள் செல்வோம்.)


“ஐயா, மனிதர்கள் மானம் காக்கும் அம்பரம் அதாவது துணி, உயிர் காக்கும் தண்ணீர், பசியாற்றும் உணவு இவற்றை கணக்கின்றி யாசிப்பவர்களுக்கு அவர்கள் திருப்திப்படும் அளவிற்கு தர்மம் செய்யும், எங்கள் ஆயர்குலத்துத் தலைவரே நந்தகோபரே தாங்கள் எழுந்தருளவேண்டும்.”


“சிறுமியர்களே உங்களுக்கு என்ன வேண்டும்.” 


“ஐயா, நாங்கள் தங்கள் திருக்குமாரன் தேவாதி தேவன் கண்ணனை கண்டு பரிசு வாங்க வந்துள்ளோம். அவர் எந்த அறையில் சயனித்திருப்பார்.”


“அப்படியா, அந்த அறையில் தன் தாயார் யசோதையுடன் கண் வளர்ந்திருக்கின்றார் பாருங்கள்.”


“மிக்க நன்றி ஐயா.”


ஆண்டாள் தன் தோழியருடன் நந்தகோபரின் அறையிலிருந்து அடுத்ததாக யசோதையின் அறைக்குச் சென்றார்கள். அங்கு யசோதையை கண்டதும்.


“தாயே யசோதா என்ன தவம் செய்தீர்கள். எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க. கொடி போன்ற இடைகளையுடைய ஆயர்குலப் பெண்களுக்கு தலைவியான, கொழுந்தை போன்று இளகிய மனம் கொண்ட தாயே. ஆயர்குலத்திற்கே எம்பெருமானை பெற்று பெருமை சேர்த்த குலவிளக்கே, எம்பெருமானை எப்பொழுதும் குளிர குளிர அனுபவிக்கும் எம்பெருமாட்டியே அனுமதி தருவீர்களாக. தங்கள் மகன் எங்களுக்கு சிறுபரிசு தருகிறேன் என்றார். அவரைக் காண வேண்டும் எங்கிருக்கிறார் அண்ணையே.”


“சிறுமியர்களே, அதிகாலை நேரத்தில் தூய உள்ளத்துடன் வந்து என் மகன் கண்ணனை காண வந்திருக்கிறீர்கள். அதோ அங்கே அவன் தன் அண்ணன் பலராமனுடன் படுத்துக் கொண்டிருக்கிறான். பாருங்கள்.”


ஆண்டாள், யசோதையிடம் அனுமதி பெற்றபின் திரும்பிப் பார்க்கிறாள் அவள் கண்களில் முதலில் பட்டது கண்ணனின் திருவடிகள், உடனே கண்கள் கலங்கிற்று ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ என்று மூன்றாவது பாசுரத்தில் பாடிய வாமன அவதாரம் மனக்கண் முன் வர பாட ஆரம்பிக்கிறாள். பகவானை காட்டிலும் அவன் திருவடி உயர்ந்ததல்லவா.


“அம்பரம் ஊடறுத்து - ஆகாயம் இடையே கிழித்து அறுத்து, ஓங்கி உலகளந்த உத்தமனே உம்பர்கோமானே, தேவர்களுக்கெல்லாம் தேவனான தேவாதிராஜனே, உன் திருவடி மேலே போனபோது நான்முகன் தன் கமண்டல தீர்த்தத்தினால் உன் பாதங்களை அலம்பினார். கங்கை உருவானாள். அப்பேற்பட்ட கோமானே நீ உறங்காது எழுந்திராய்.”


(இவ்விடத்தில் ஒரு சிறிய விஷயம், கோதை நாச்சியார், வாமனவதாரத்தை மிகவும் போற்றி தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் பாடுகின்றாள். இரண்டாவது பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ என்றும் இப்பாசுரத்தில் ‘அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்க்கோமானே' என்றும் இருபத்திநாலாவது பாசுரத்தில் ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்றும் பாடியிருக்கிறாள். ஸ்வாமி நம்மாழ்வார், இப்பாசுரத்தில் ஆண்டாள் தெரிவித்தாற்போன்று எம்பெருமான் திரிவிக்ரமானாய் அவதரித்து மூவடி மாவலியிடம் பெற்று ஓங்கி வளர்ந்ததை, 

‘ஆழியெழச் சங்கும் வில்லும் எழத் திசை

வாழியெழத் தண்டும் வாளும் எழ அண்டம்

மோழை எழமுடி பாதம் எழ அப்பன்

ஊழியெழ உலகங் கொண்ட வாறே’ 

என்று வானம் கிழித்து வாமனன் வளர்ந்ததை விவரிக்கிறார்.)


கண்ணனிடம் இருந்து எந்த பதிலுமில்லை. ஆண்டாள் யோசித்தாள் ஓ அண்ணன் பலராமன் அவர்களை முதலில் அழையாமல் நம் பகவானை எழுப்பியதால்தான் அவன் பதிலளிக்கவில்லை போலும் என்று நினைத்து உடன் அருகிலுள்ள பலராமனை பார்த்து.,


(இங்கே வைணவத்தின் புருஷாகாரம் விவரிக்கப்பட்டுள்ளது. நாம் நேரிடையாக எம்பெருமானை பார்க்கக்கூடாதாம். தாயாரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பார்கள்.)


“செம்பொன்னால் ஆன சிலம்புகளை அணிந்துள்ள செல்வா, பலதேவா, பலராமா நீயும் எங்களை சோதிக்கலாமா. நீயும் உன் தம்பியும் உறக்கத்திலிருந்து எழுந்து எங்களுக்கு அருள்வாய் பலதேவா.”


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக