பதினெட்டாவது பாசுரம்
(இப்பாசுரத்திற்குள் புகுமன் ஒரு சிறிய நிகழ்வு பகவத் இராமானுஜர் வாழ்வில் நடைபெற்றதை இங்கு முதலில் தெரிவித்து ஆரம்பிக்கலாம். பகவத் இராமானுஜர் தினமும் திருப்பாவை அனுசந்தானம் அதாவது உச்சரித்துக் கொண்டே நடந்து செல்வார். அவருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்றே பட்டப்பெயர். அப்படி ஒரு நாள் பதினெட்டாவது பாசுரமான இந்த ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தை உச்சரித்து தன் ஆசார்யர் பெரிய நம்பிகளின் இல்லம் வந்து சேர்ந்தார். ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்தேலோரெம்பாவாய்’ என்று உச்சரித்து முடித்ததும் பிக்ஷைக்காக ஒருவர் வந்துள்ளார் என்று பெரிய நம்பிகளின் திருகுமாரத்தி ‘அத்துழாய்’ கதவை திறந்து கொண்டு வர பகவத் இராமானுஜருக்குத் திருமகளே கதவை திறந்து வந்தது போல் தோன்றி அத்துழாயின் காலில் விழுந்தார். அத்துழாய் பயந்து தன் தந்தையிடம் சொல்ல அவரோ இன்று இராமானுஜருக்கு ‘உந்துமதகளிற்றன்’ பாசுர அனுபவம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தாராம். அப்பேற்ப்பட்ட தாயார் சம்பந்தமுள்ள பாசுரம் இது.
திருப்பாவையில் இனி வரும் மூன்று பாசுரங்களும் திருமகள் விஷயமாக இருக்கும் பாசுரங்களே. மூன்றும் ஒன்றையொன்று இணைப்புடனே இருக்கும். வைணவத்தில் ‘புருஷாகாரம்’ என்பது முக்கியமான ஒன்றாகும். நம்மை பற்றி தாயார் பெருமாளிடம் சிபாரிசு செய்து நமக்கு அருள் புரிவதைத் தான் ‘புருஷாகாரம்’ என்று அழைப்பர். கோதை நாச்சியார், சென்ற பாசுரத்தில் கண்ணனை ‘ஓங்கி உலகளந்த உம்பர்க் கோமானே’ என்று அழைத்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால், நாம் தவறு செய்துவிட்டோம் தாயாரை முன்னிட்டு செல்லாததே காரணம் என்று நினைத்தாள். எனவே தாயார் சயனித்திருக்கும் அறைக்குச் செல்கிறாள். இனி பாசுரத்திற்கு செல்வோம்.)
“கோதே, நாம் எவ்வளவு பாடியும் கண்ணன் பதிலளிக்கவில்லை. நம் மேல் கோபமா.”
“இல்லை பாவாய், நாம் தான் தவறு செய்துவிட்டோம். நாம் தாயாரை முன்னிட்டுச் செல்ல வேண்டும். அங்கே அடுத்த அறையில் நப்பின்னை பிராட்டி படுத்துக் கொண்டிருக்கிறாள், அவளை எழுப்புவோம் வாருங்கள்.”
‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்’…..
“கோதே, உந்து மதகளிற்றன் என்றால் நம் கண்ணன் குவலாயபீடம் எனும் யானையை கொன்றானே அதை குறிக்கிறாயா.”
“பாவாய், அந்த அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் சொல்ல வந்தது, மதக்களிறு, மதம் உந்தும் களிறு மற்றும் உந்து மதக் களிறு என்று மூன்று அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். மதக்களிறு - யானையைப் போன்றவன் பரமாத்மா என்றும், மதம் உந்தும் களிறு என்றால் மதநீர் பெருகும் யானையைப் போன்றவன் பரமாத்மா என்றும், மதநீர் பெருகிய குவலாயபீடம் போன்ற யானையை அழித்தவன் நம் பரமாத்மா என்றும் அறியலாம். ஆக எல்லாம் அவனே. மதக்களிறு போன்றிருக்கும் நம் பரமாத்மாவையே கட்டிக் காக்கும் நந்தகோபரின் மருமகளே.”
“கோதே, ஏன் நந்தகோபரின் மருமகள் என்று குறிப்பிடவேண்டும்.”
“பாவாய், ஒரு நிகழ்ச்சியை உனக்குச் சொல்கிறேன். இராமாயணத்தில் சீதையைக் அசோகவனத்தில் கண்டு திரும்பிய அனுமனிடம் இராமபிரான் என் சீதை எவ்வாறு உள்ளார் என்று வினவ, அனுமனோ பிரானின் திருவடி தொழுது ‘தசரதரின் மருமகள்’ நன்றாய் உள்ளார், ‘இராமனின் தர்மபத்தினி’ என்ற நிலையில் உயர்ந்துக் காணப்படுகிறாள், ‘ஜனகரின் திருமகளாய்’ பெருமை சேர்க்கிறாள் என்று முதவில் ‘தசரதரின் மருமகள்’ என்றே குறிப்பிடுகிறார். அனுமன் கூறியதையே இங்கும் சுட்டிக் காட்டியுள்ளேன் பாவாய். மேலும் அவரின் கூந்தல் எப்பொழுதும் மனம் வீசிக் கொண்டிருக்கும். அப்பேர்ப்பட்ட நப்பின்னாய் கதவு திறவாய். பொழுது புலர்ந்து கோழிகள் அழைத்தன, மாதவிப் பந்தல் மேல் பலவேறுப்பட்ட குயிலினங்கள் கூவுகின்றன, ‘பந்தாற் விரலி உன் மைத்துனன்…..”
“கோதே, பந்தாற் விரலி என்பது”….
“பாவாய், நம்மையெல்லாம் பந்து போல் உருட்டி, ஆட்டி, ஓடவிட்டு, விளையாடும், விளையாட்டு காட்டும் அக்கண்ணனையே பந்தாக்கி அவள் விரலிடையே உருட்டி விளையாடுகின்றாளே நப்பின்னை, அவளை குறிப்பிடுகின்றேன். அவளுடைய கணவன் கண்ணனின் திருநாமங்களை நாம் பாடிவர மகிழ்ந்து தன் கை வளையல்கள் கலகலவென்று சப்தமிட்டு தன் அழகிய செந்தாமரைக் கைகளால் கதவை திறப்பாய் நப்பின்னை பிராட்டியே.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.