சனி, 2 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 245

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இருபத்தொன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன்,  கோபிகைகளுடன் விளையாட விரும்பி வேணுகானம் செய்ய (குழல் ஊத),  அதைக்கேட்டுக் கோபிகைகள் அவ்விடம் போய், அவனுடன் கலந்து விளையாடுதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, ஸ்ரீக்ருஷ்ண பகவான் சரத்ருது (இலையுதிர் காலம்) வந்திருக்கையில்,  மல்லிப் பூக்கள் மலர்ந்து அழகாயிருக்கின்ற அக்காலத்து ராத்ரிகளைக் கண்டு, கேவலம் தன்  ஸங்கல்பத்தையே காரணமாகக் கொண்டு, கோபிமார்களுக்குத் தான் முன்பு சொன்னவண்ணமே அவர்களுடன் கலந்து விளையாட மனங்கொண்டான். அப்பொழுது, அச்சரத்காலத்து சந்த்ரன்,  நெடுங்காலம் தேசாந்தரம் (வெளியூர்) சென்று, திரும்பி வந்து, காட்சி கொடுக்கின்ற காதலன் தன் காதலியின் முகத்தைக் குங்குமத்தினால் பூசுவது போல, கிழக்கு திக்கின் முகத்தை மிகவும் இனியவைகளான தன் கிரணங்களாகிற கைகளால் உதயராகமாகிற குங்குமத்தினால் பூசுகின்றவனும், ஓஷதிகளுக்கும், மனுஷ்யர்களுக்கும், உள்ள வருத்தங்களைப் போக்குகின்றவனுமாகி உதித்தான். 

ஸ்ரீக்ருஷ்ணன், பரிபூர்ண மண்டலத்துடன் உதித்திருப்பவனும், குங்குமம் போலச் சிவந்திருப்பவனும்,  குங்குமத்தினால் சிவந்த மாதரார் (பெண்கள்) முகம் போலத் திகழ்கின்றவனுமாகிய சந்த்ரனையும், அந்தச் சந்த்ரனுடைய இனிய கிரணங்கள் படிந்து ரமணீயமாயிருக்கின்ற வனத்தையும் கண்டு, அவ்யக்த மதுரமாயிருக்குமாறும் (விவரிக்க ஒண்ணாத இனிமையாய் இருக்குமாறும்), கோப ஸ்த்ரீகளின் (இடையர் பெண்களின்) மனத்தைப் பறிக்குமாறும், வேணுகானம் செய்தான் (குழல் ஊதி இசைத்தான்). கோபஸ்த்ரீகள், மன்மத விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) விளைக்கின்ற அவ்வேணுகானத்தைக் (குழல் இசையைக்) கேட்டு, ஸ்ரீக்ருஷ்ணனால் இழுக்கப்பட்ட மனமுடையவர்களாகி, ஒருவர் முயற்சி மற்றொருவர்க்குத் தெரியாதபடி விரைந்து நடக்கையால் குண்டலங்கள் அசையப் பெற்று, தங்கள் மனத்திற்கினியனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் எவ்விடத்தில் இருக்கிறானோ, அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். 

சில கோபிமார்கள், பால் கறந்து கொண்டேயிருக்கையில், வேணுகானம் (குழல் இசை) கேட்டவுடனே பேராவலுற்று, பால் கறப்பதைத் துறந்து போனார்கள். வேறு சிலர், பாலைக் காய்ச்சுவதற்காக அடுப்பேற வைத்து, அது பொங்கி வழியுமென்பதைப் பொருள் செய்யாமலே, அதை விட்டுப் போனார்கள். வேறு சிலர், அடுப்பில் பக்வமான கோதுமைக் கஞ்சியை இறக்காமலே விட்டுப் போனார்கள். வேறு சிலர், கணவன், குழந்தை முதலியவர்க்கு அன்னம் பரிமாறிக் கொண்டிருப்பதை அப்படியே விட்டுப் போனார்கள். வேறு சிலர், குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதை அப்படியே விட்டுப்போனார்கள். வேறு சிலர், கணவர்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்து கொண்டிருப்பதை அப்படியே விட்டுப் போனார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர், இலையில் அன்னத்தை அப்படியே விட்டுப் போனார்கள். உள்ளே மெழுகிக்கொண்டிருந்த சிலர், மெழுகுவதையும், விளக்கிக்கொண்டிருந்த சிலர், விளக்குவதையும், கண்களுக்கு மை இட்டுக்கொண்டிருந்த சிலர், மை இடுவதையும் துறந்து போனார்கள். சிலர், போகிற வேகத்தில் ஒன்றும் தெரியாமல், ஆடையாபரணங்களை மாறுபாடாகத் தரித்து, ஸ்ரீக்ருஷ்ணன் அருகில்  சென்றார்கள். 

அவர்களில் சிலர், கணவர், தந்தைமார், உடன் பிறந்தவர், பந்துக்கள் இவர்களால் தடுக்கப்பட்டும்,  ஸ்ரீக்ருஷ்ணனால் மனம் பறியுண்டவர்களாகையால், அவர்களைக் கடந்து திரும்பாமலே போய்ச் சேர்ந்தார்கள். சிலர், வீட்டிற்குள் தடுக்கப்பட்டு வெளிப்பட முடியாமல், ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின பாவனை (எண்ணம்) என்றும் மாறாதிருப்பவர்களாயினும், அப்பொழுது கண்களை மூடிக்கொண்டு, அவனை விசேஷமாக த்யானித்தார்கள். அவர்கள், வருந்தியும் பொறுக்க முடியாத தங்கள் அன்பனுடைய பிரிவினால் உண்டாகும் பெருந்துயரத்தை அனுபவிக்கையால் பாப கர்மங்களும், த்யானத்தினால் நெஞ்சில் தோற்றின அவ்வச்சுதனை அணைக்கையால் உண்டான ஸந்தோஷத்தை அனுபவிக்கையால், புண்ய கர்மங்களும் க்ஷீணிக்கப் (அழியப்) பெற்றார்கள். அந்தக் கோபிமார்கள், பரமாத்மாவான ஸ்ரீக்ருஷ்ணனையே கள்ள புருஷனென்னும் (திருட்டுக் காதலன் என்னும்) புத்தியினால் புணர்ந்தவர்களாயினும், தத்க்ஷணமே (அந்த வினாடியே) ஸம்ஸார பந்தத்திற்கு (பிறப்பு, இறப்பு மாறி மாறி வரும் இந்த உலகியல் தொடர்புக்கு) ஹேதுவான (காரணமான) புண்ய பாப கர்மங்களெல்லாம் க்ஷீணிக்கப் (தீரப்) பெற்று, ஸத்வாதி குணமயமான தேஹத்தைத் (உடலைத்) துறந்தார்கள்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- முனிவரே! கோபிகைகள் ஸ்ரீக்ருஷ்ணனைத் தங்கள் மனத்திற்கினிய புருஷனென்று அறிவார்களேயன்றி, அவனைப் பரப்ரஹ்மமென்று அறிந்தவர்களல்லர். அவர்கள், சப்தாதி விஷயங்களில் தாழ்ந்த மனமுடையவர்களாக அவனை விரும்பினார்களேயன்றி, வேறில்லை. இத்தகையர்களான அந்தக் கோபிமார்களுக்கு, ஸத்வாதி குணங்களின் பரிணாமமான (மாறுபாடான) தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) எவ்வாறு நீங்கிற்று?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இதைப்பற்றி நான் உனக்கு முன்னமே மொழிந்திருக்கின்றேன். சிசுபாலன், ஸ்ரீக்ருஷ்ணனை த்வேஷித்துக் கொண்டிருப்பினும், ஸித்திபெற்றான். அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அன்பர்களான கோபிகைகள், ஸித்தி பெறுவதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஈச்வரன் ஜீவனைப் போலக் கர்மத்தினால் விளையும் பிறவி முதலிய விகாரங்களுடையவனல்லன்; தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறைகள்) அற்றவன். வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத மஹிமையுடையவன்; ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸு முதலிய ப்ராக்ருத (ப்ரக்ருதியின்) குணங்களற்றவன்; கல்யாண குணங்களுக்கு விளை நிலமாயிருப்பவன். இத்தகையனான பகவான், இவ்வுலகத்தில் தோன்றுவது ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவே (நன்மைக்காகவே). 

காமம் (கோபிகைகள்), கோபம் ( பகை - சிசுபாலன்), பயம் (கம்ஸன்), ஸ்னேஹம் (அன்பு – யசோதை), உறவு (பாண்டவர்கள்), பக்தி (நாரதர்) ஆகிய இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் என்றும் மாறாமல் நடத்திக் கொண்டு வருவார்களாயின், அவர்கள் அவனிடத்தில் மாறாத மதியுடையவர்களாகி, மோக்ஷத்தைப் பெறுகின்றார்கள். ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ஏதேனுமொரு விதத்தில் ஸம்பந்தமுடைய ஸ்தாவராதிகளும் (மரம் செடிகளும்) மோக்ஷம் அடைவதைப்பற்றி நீ வியப்புற வேண்டியதில்லை. அவன் இந்திரியங்களுக்கு விஷயமாகாதவன். தன்னிடத்தில் காமம், கோபம் முதலியன செய்பவர்களுடைய இந்த்ரியங்களையும், அவன் வேறு விஷயங்களில் போகவொட்டாமல், தன்னிடத்திலேயே நிலை நிறுத்தும் திறமையுடையவன்; யோகேச்வரர்களுக்கும் ஈச்வரன்; ஜ்ஞானாதி (அறிவு, ஆனந்தம் முதலிய) குணங்களுக்கு விளை நிலமாயிருப்பவன். ஆகையால், அவன் விஷயத்தில் சேராதது எதுவுமே இல்லை. பிறகு, ஸ்ரீக்ருஷ்ண பகவான் அவ்வாறு வந்திருக்கின்ற அந்தக் கோபிகைகளைக் கண்டு, பேசுவோர்களில் சிறந்தவனாகையால், அழகிய உரைகளால் அவர்களை மயங்கச் செய்பவனாகி, மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மிகுந்த பாக்யமுடையவர்களே! உங்களுக்கு நல்வரவாகுக? கோகுலம் க்ஷேமமாயிருக்கின்றதல்லவா? நீங்கள் இப்பொழுது எதற்காக வந்தீர்களோ, அந்தக் காரணத்தைச் சொல்வீர்களாக. உங்களுக்கு என்ன ப்ரியம் செய்ய வேண்டும்? இப்பொழுது பயங்கரமான இரவாயிருக்கிறது. அதிலும் துஷ்ட ஜந்துக்கள் உலாவும் ஸமயம் இது. ஆகையால், நீங்கள் இடைச்சேரிக்குத் திரும்பிப் போவீர்களாக. அழகிய இடையுடையவர்களே! பெண்களாகிய நீங்கள் இச்சமயம் இங்கிருக்கலாகாது. உங்கள் தாய் தந்தைகளும், புதல்வர்களும், உடன் பிறந்தவர்களும், கணவர்களும், உங்களைக் காணாமல் தேடித் தடுமாறுவார்களல்லவா? அவ்வாறு பந்துக்களுக்குப் பயத்தை விளைக்க வேண்டாம். 

இவ்வனம் பூத்து அழகாயிருக்கிறது; மற்றும் பூர்ண சந்த்ரனுடைய கிரணங்கள் படர்ந்து, ரமணீயமாயிருக்கின்றது; யமுனையின் காற்றினால், மெல்ல மெல்ல அசைகின்ற வ்ருக்ஷங்களின் (மரங்களின்) தளிர்களால், சோபித்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய இவ்வனத்தின் சோபையைக் கண்டீர்களல்லவா? இனித் திரும்பிப் போவீர்களாக. தாமதம் செய்யவேண்டாம். சேரிக்குப் (கோகுலத்திற்குச்) போய்ச் சேருங்கள். பதிவ்ரதைகளாகி, கணவர்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்வீர்களாக. முன் குழந்தைகளும், பின் குழந்தைகளும், உங்களைக் காணாமல் அழும். அவற்றிற்குப் பால் கொடுப்பீர்களாக. கன்றுகள் கதறும். அவற்றை ஊட்ட விட்டு, பசுக்களைக் கறப்பீர்களாக. அல்லது, நீங்கள் என்னிடத்தில் ஸ்னேஹத்தினால் கட்டுண்ட மனமுடையவர்களாகி வந்திருப்பீர்களாயின், அப்பொழுது நீங்கள் வந்தது யுக்தமே (ஸரியே). ஏனென்றால், ஸமஸ்த ஜந்துக்களும் என்னிடத்தில் ப்ரீதியுடையவைகளாகவே இருக்கின்றன. ஸர்வாந்தர்யாமியும் (எல்லா ஜீவராசிகளின் உள்ளே ஆத்மாவாய் இருப்பவனும்), ஸர்வ ஸுஹ்ருத்துமாகிய (எல்லோரிடத்தும் நல்லிதயம் படைத்தவனும்) என்னிடத்தில், ஸமஸ்த ஜந்துக்களூக்கும் பொதுவான ப்ரீதி, உங்களுக்கும் இருக்குமாயின், அது யுக்தமே (ஸரியே). கபடமில்லாமல் (வஞ்சனையின்றி) பர்த்தாவுக்குச் (கணவனுக்கு) சுச்ரூஷை (பணிவிடை) செய்கையே ஸ்த்ரீகளுக்கு (பெண்களுக்கு) மேலான தர்மம்.  

நல்லியற்கை உடையவர்களே! மற்றும் அந்தப் பர்த்தாவின் (கணவனின்) தந்தை, உடன் பிறந்தவர் முதலிய பந்துக்களுக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்கையும், பிள்ளை, பெண் முதலிய குழந்தைகளைப் போஷிக்கையும் (போற்றி வளர்ப்பதும்), ஸ்த்ரீகளுக்கு மேலான தர்மம். கணவன்,  துராசாரமுடையவனாயினும் (தீய பழக்கம் உடையவனாயினும்), குரூபியாயினும் (அழகற்றவன் என்றாலும்), அறிவிலியாயினும், கிழவனாயினும், ரோகியாயினும் (நோயுற்றவன் என்றாலும்), பணமில்லாதவனாயினும், மஹாபாதகி (ப்ராஹ்மணனைக் கொல்லுதல், கள் குடித்தல், திருடுதல், ஆசார்யனின் மனைவியைப் புணர்தல், இப்பாபங்களைச் செய்தவர்களோடு சேருதல் என்கிற ஐந்தும் மஹாபாதகங்கள் – மிகப் பெரும் பாபங்கள்) அல்லாதிருப்பானாயின், புண்ய லோகங்களை விரும்பும் பெண்கள், அவனைத் துறக்கலாகாது. மற்றும், குலத்தில் பிறந்த மடந்தைக்குக் கணவன் இருப்பினும், இல்லாமற் போயினும், வேறு புருஷனுடன் புணர்ச்சியென்பது ஸுகத்திற்கிடமன்று; புகழுக்கு இடமன்று, மிகவும் அற்பத்தனம் (கீழான செயல்); துக்கத்தை விளைக்கும்; பயத்திற்கும் இடம்; எல்லா இடங்களிலும் நிந்திக்கப்பட்டது. ஆகையால், நீங்கள் கணவர்களைத் துறந்து, என்னுடன் கலந்தனுபவிக்க விரும்புவது யுக்தமன்று (ஸரியன்று). 

ஒருகால் “ஜகத்திற்கெல்லாம் பதியாகிய நீ எங்களுக்கும் பதியே” என்று நினைப்பீர்களாயின், அது யுக்தமே (ஸரியே). நான், என்றும் அழியாதவன். நான் நிஷ்காரணமாகவே (எந்த ஒரு காரணமும் இல்லாமலே) ஸமஸ்த ஜந்துக்களுக்கும், பதியும் (கணவனாயும்), பந்துவுமாய் (உறவினனுமாய்) இருப்பவன். ஆயினும், ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளைக் கேட்பதனாலும், காண்பதனாலும், த்யானிப்பதனாலும், என் குணங்கள், என் நாமங்கள், இவற்றை வாயால் சொல்லுவதனாலும், என்னிடத்தில் எவ்வளவு ப்ரீதி உண்டாகுமோ, அவ்வளவு ப்ரீதி என்னோடு கலந்திருப்பதனால் உண்டாகாது. ஆகையால், நீங்கள் வீட்டிற்குச் செல்வீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைகள், இவ்வாறு கோவிந்தன் மொழிந்த அனிஷ்டமான (விரும்பத்தகாத, மனதிற்கு இனிமையல்லாத) வசனத்தைக் கேட்டு,  தங்கள் நினைவு ஈடேறப்பெறாமையால் வருந்தி, எல்லையில்லாத சிந்தையில் ஆழ்ந்தார்கள். அவர்கள், முகங்களைக் கவிழ்த்து, சோகத்தினால் வருகின்ற உஷ்ணமான மூச்சுக்காற்றுக்களால் கொவ்வை (சிவந்த) கனிவாய்கள் (உதடுகள்) உலரப்பெற்று, இடக்கால் கட்டை விரலால் பூமியைக் கீறுபவர்களும், கண் மையைக் கரைத்துக் கொண்டு பெருகி வருகின்ற கண்ணீர்களால் கொங்கை மேல் அணிந்த குங்குமத்தின் குழம்புகளை அலம்புகிறவர்களும், பெரும் துக்கமாகிற பாரமுடையவர்களுமாகி, வெறுமனே நின்றிருந்தார்கள். அனந்தரம் (பிறகு), ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த அனுராகமுடையவர்களும் (அன்பு உடையவர்களும்), அவனுக்காக மற்ற மனோ ரதங்களை (விருப்பங்களை) எல்லாம் துறந்தவர்களுமாகிய அந்தக்கோபிகைகள், அழுத கண்ணீர்களால் ஓயாமல் மறைக்கப்பட்டு, காட்சியற்றிருக்கின்ற கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டு, கொஞ்சம் கோபத்தினால் தழதழத்த மொழியுடையவர்களாகி, தங்களுக்கு மிக்க அன்பனாயினும் அன்பற்ற சத்ருவைப்போல (எதிரியைப்போல) மொழிகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து மேல் வருமாறு கூறினார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! நீ இவ்வாறு கொடுமையாகக் கூறுவது யுக்தமன்று (ஸரியன்று). ஒருவர்க்கும் பிடி கொடாமல் ஸ்வதந்த்ரமாயிருப்பவனே (தன்னிச்சையாய் இருப்பவனே)! ஸமஸ்த விஷயங்களையும் துறந்து, உன் பாத மூலங்களைப் பணிய வந்திருக்கின்றோம். ஆகையால், நீ எங்களைத் துறக்கலாகாது. எங்களுக்கு நீ அனுகூலனாயிருக்க வேண்டும். ஆதிபுருஷனாகிய பகவான், மோக்ஷத்தில் விருப்பத்துடன் தன்னைப் பணிகின்றவர்களை எவ்வாறு கைவிட மாட்டானோ, அவ்வாறே நீயும் எங்களைக் கைவிடலாகாது. ஓ க்ருஷ்ணனே! தர்மங்களை உணர்ந்த நீ, கணவன், குழந்தை, நண்பர் முதலியவர்களுக்குத் தொடர்ந்து சுச்ரூஷை (பணிவிடை) செய்கையே பெண்களுக்கு மேலான தர்மமென்று மொழிந்தாயே. இது நாங்கள் உன்னிடத்தில் தர்மோபதேசம் கேட்க வந்திருப்போமாயின், இப்படியே இருக்கலாம். 

ஜகதீசனே! நாங்கள் இப்பொழுது உன்னிடத்தில் உபதேசம் கேட்க வரவில்லை. நீ எங்களுக்கு மிக்க அன்பனென்று உன்னுடன் கலந்து களிக்க வந்திருக்கின்றோம். “நான் உங்களுக்கு அன்பன்  என்பது எவ்வாறு தெரியும்” என்னில், கேட்பாயாக. நீ ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாக நிஷ்காரண (எந்த ஒரு காரணமும் இல்லாமலே) பந்துவுமாய் (உறவாய்) இருப்பவனல்லவா? ஆகையால், நீ எங்களுக்கு அன்பனென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? மற்றும், நீ கணவன் குழந்தை, நண்பன் முதலியவர்களைத் தொடர்ந்து சுச்ரூஷை (பணிவிடை) செய்கையே பெண்களுக்கு உரிய தர்மமென்று மொழிந்தது யுக்தமே (ஸரியே). அவ்வாறு தொடரத் தகுந்தவர்களென்று உபதேசிக்கப்படுகிற கணவன் முதலிய ஸமஸ்த பந்துக்களும் தானேயாயிருக்கின்ற உன்னிடத்திலேயே, அவர்களிடத்தில் செய்யும் சுச்ரூஷைகளெல்லாம் (பணிவிடைகளெல்லாம்) நடக்கட்டும். நீ ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவும், மிகுந்த அன்பனுமாயிருப்பவனல்லவா?ஆகையால், உன்னைப் பணிய வந்திருக்கின்ற எங்களை நீ துறக்கலாகாது. 

சாஸ்த்ரங்களைக் கற்றறிந்த நிபுணர்கள், அந்தராத்மாவாயிருப்பவனும் என்றும் அன்பனுமாகிய உன்னிடத்திலேயே, ப்ரீதியைச் செய்கின்றார்கள். துக்கத்தை விளைப்பவர்களும், காரணத்தைப்பற்றி ஏற்பட்டவர்களுமான கணவர், பிள்ளை, முதலியவர்களால் என்ன ப்ரயோஜனம்? ஆகையால், எங்களுக்கு அருள் புரிவாயாக. நெடுநாளாக உன்னிடத்தில் வளர்த்திக் கொண்டு வந்த எங்களுடைய ஆசையை வீண் செய்ய வேண்டாம். 

வேண்டும் வரங்களைக் கொடுப்பவனே! ஜகதீச்வரனாகையால் அனைத்து திறமைகளும் அமைந்தவனே! தாமரைக் கண்ணனே! எங்கள் விருப்பத்தையும் நிறைவேற்றுவாயாக. வீட்டுக் கார்யங்களில் ஊக்கமுற்றிருந்த எங்கள் மனத்தை, நீ அனாயாஸமாகப் (எளிதாக) பறித்துக் கொண்டாய். மற்றும், வீட்டு வேலைகளில் தொடர்ந்திருந்த எங்கள் கைகளும், அவ்வேலைகளைச் செய்யவொட்டாதபடி ஸ்வாதீனமற்றவைகளாகச் செய்யப்பட்டன. அவ்வாறே, எங்கள் பாதங்களும், உன் பாதமூலத்தினின்று அப்புறம் ஓரடியும்கூட அசைய மாட்டாதிருக்கின்றன. எங்களை இடைச்சேரிக்குத் திரும்பிப் போகும்படி நியமிக்கின்றாய். இத்தசையிலிருக்கின்ற நாங்கள், எவ்வாறு சேரிக்குத் திரும்பிப் போவோம்? இதற்கு மேல் நாங்கள் என் செய்வோம்? “ஆனால் நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்?” என்றால், சொல்லுகிறோம், கேட்பாயாக. 

ஸ்ரீக்ருஷ்ணா! புன்னகையோடு கூடின உன் கண்ணோக்கத்தினாலும், மதுரமான உன் வேணுகானத்தினாலும் (குழல் இசையாலும்), எங்களுக்கு உண்டாயிருக்கின்ற காம விகாரமாகிற (காதல் கிளர்ச்சியாகிற) அக்னியை, உன் கோவைக் கனிவாயின் (சிவந்த அதரங்களின்) அம்ருத வெள்ளத்தினால் அணைப்பாயாக. நண்பனே! இப்படி செய்யாது போவாயாயின், நாங்கள் உன் பிரிவாகிற அக்னியால் தேஹம் (உடல்) தஹிக்கப் (எரிக்கப்) பெற்று, உன்னையே த்யானித்து, உன் பாதாரவிந்தங்களின் பதவியைப் பெறுவோம். தாமரைக் கண்ணனே! “உங்கள் கணவர்களே தங்கள் வாய் அம்ருதத்தினால் உங்கள் காமாக்னியை (காதல் தீயை) அணைப்பார்களே” என்று நினைப்பாயாயின், சொல்லுகிறோம், கேட்பாயாக. 

அரண்யத்தில் (காடுகளில்) வஸிக்கின்ற முனிவர்களுக்கு அன்பனே! ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு மஹோத்ஸவத்தை (மிகுந்த இன்பத்தை) விளைப்பதாகிய உன் பாத மூலத்தை  நாங்கள் எப்பொழுது ஸ்பர்சித்தோமோ (தொட்டோமோ), நீயும் எங்களை எப்பொழுது அபிநந்தனம் செய்தனையோ (வரவேற்று, பராட்டி மகிழ்ந்தாயோ) அந்நாள் முதலாக நாங்கள் இதர புருஷர்களின் முன்னிலையில் நிற்கவும் கூட வல்லமையற்றிருக்கின்றோம். அற்பர்களாகிய மற்ற புருஷர்கள், எங்களுக்கு ருசிக்கவில்லை. எவளுடைய கண்ணோக்கத்தை விரும்பி ப்ரஹ்மா முதலிய மற்ற தேவதைகள் அனைவரும் தவம் செய்து ப்ரயாஸப்படுகிறார்களோ (முயற்சிக்கிறார்களோ), அப்படிப்பட்ட ஸ்ரீமஹாலக்ஷ்மி உன் மார்பில் மற்றவருடைய இடைஞ்சலில்லாமல் உயர்ந்த பதவியைப் பெற்றும், உன் ப்ருத்யர்கள் (பக்தர்கள்) அனைவரும் விரும்புகிற உன் பாதாரவிந்தத்தின் தூளியைத் துளஸியோடு  ஒக்கத் தானும் அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாளல்லவா? ஸ்ரீமஹாலக்ஷ்மியைப்போல நாங்களும், உன் பாதாரவிந்தங்களின் தூளியைப் பணிய வந்திருக்கின்றோம். 

துக்கங்களைப் போக்கும் தன்மையனே! உன்னைப் பணிய வேண்டுமென்றே விரும்புகின்ற நாங்கள், வீடு, வாசல்களைத் துறந்து, யோகிகளைப் போல, உன் பாத மூலத்தைப் பற்றினோம். ஆகையால், எங்களுக்கு அருள் புரிவாயாக. புருஷ ச்ரேஷ்டனே (மனிதர்களில் சிறந்தவரே)! அழகிய புன்னகையோடு கூடின உன் கண்ணோக்கத்தினால் பொறுக்க முடியாமல் கிளர்ந்தெரிகின்ற தீவ்ரமான மன்மத தாபத்தினால் (காதல் தீயினால்) எரிக்கப்பட்ட தேஹங்களையுடைய (உடல்களை உடைய) எங்களுக்கு உன்னிடத்தில் தாஸ்யத்தைக் (அடிமைத்தனத்தைக்) கொடுப்பாயாக. “போகத்திற்கு (அனுபவத்திற்கு) இடமான வீடு, வாசல் முதலியவற்றைத் துறந்து, என்னிடம் தாஸ்யத்தை (அடிமைத்தனத்தை) ஏன் விரும்புகிறீர்கள்?” என்பாயாயின், சொல்லுகிறோம், கேட்பாயாக. 

குண்டலங்களால் திகழ்கின்ற கபோலங்கள் (கன்னங்கள்) உடையதும், கனி வாயில் அமுதம் பெருகப் பெற்றதும், புன்னகையோடு கூடின கண்ணோக்கம் அமைந்திருப்பதும், முன்னெற்றி மயிர்களால் மறைக்கப்பட்டதுமாகிய உன் முகத்தையும், ஆச்ரிதர்களுக்கு (உன்னை வந்து அடைந்தவர்களுக்கு) அபயம் கொடுப்பவைகளாய்த் திரண்டு உருண்டு நீண்ட பாஹுதண்டங்களையும் (கைகளையும்), ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு முக்யமாய் ப்ரீதியை விளைக்கவல்ல உன் மார்பையும் கண்டு, உனக்கே தாஸிகளாயினோம் (அடிமைகள் ஆயினோம்). ஸ்ரீக்ருஷ்ணா! மதுரமான பதங்களையுடைய உன் வேணு கானத்தினுடைய (குழல் இசையினுடைய) நீண்ட மூர்ச்சனையைக் கேட்டு, மதிமயங்கி, மூன்று லோகங்களிலும் அழகியதான உன்னுருவத்தையும் காண்பார்களாயின், மூன்று லோகங்களிலும் எவள் தான் நன்னடத்தையினின்று நழுவமாட்டாள். 

பசுக்கள், வ்ருக்ஷங்கள் (மரங்கள்), பக்ஷிகள், ம்ருகங்கள் இவைகளும் கூட உன் வேணுகானத்தைக் (குழல் இசை) கேட்ட மாத்ரத்தில் மயிர்க் கூச்சம் அடைகின்றன. எங்களைப் போன்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஆதிபுருஷன், தேவதைகளின் வருத்தம் போக்குவதற்காக உபேந்த்ராதி ரூபனாக (இந்த்ரன் தம்பியான வாமனனாக) அவதரிப்பது போல், நீயும் இடைச்சேரியிலுள்ள ஜனங்களின் வருத்தங்களைப் போக்குவதற்காக அவதரித்தாய். இது நிச்சயம். வருந்தினவர்களுக்குப் பந்துவாயிருப்பவனே! மன்மத தாபத்தினால் (காதல் தீயினால்) எரிக்கப்பட்டவைகளான உன் வேலைக்காரிகளாகிய எங்கள் கொங்கைகளிலும், தலைகளிலும், தாமரை மலர் போன்ற உன் கரத்தை வைத்து, எங்கள் வருத்தத்தைப் போக்குவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு உடம்பு தெரியாமல் தழதழத்துச் சொல்லுகிற கோபிகைகளின் வார்த்தையைக் கேட்டுச் சிரித்து, யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனாயினும், தன்னைத் தானே அனுபவிக்கையால் களிப்புற்று, சப்தாதி விஷயங்களை (உலகியல் பொருட்களை) விரும்பாதவனாயினும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனாகையால், மன இரக்கமுற்று, அவர்களுடன் க்ரீடித்தான் (விளையாடினான்). அன்பனாகிய தன்னைக் கண்ட ஸந்தோஷத்தினால் மலர்ந்த முகமுடையவர்களும், கூட்டம் கூடியிருப்பவர்களுமாகிய அந்தக் கோபிகைகளுடன், தன்னைப் பற்றினவர்களைக் கைவிடாத அவ்வச்சுதன், கம்பீரமான புன்னகையில்,  முல்லை போன்ற பற்களின் ஒளி விளங்கப் பெற்று, நக்ஷத்ரங்களால் சூழப்பட்ட சந்த்ரன் போல விளங்கினான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கோபிகைகளால் பாடப் பெற்று, தானும் உரக்கப்பாடிக் கொண்டு, பெண் யானைகளின் கூட்டத்தினிடையில் விளங்கும் மத்தகஜம் (மதம் கொண்ட யானை) போன்று வைஜயந்தியெனும் பூமாலையை அணிந்து, வனத்தையெல்லாம் விளங்கச் செய்து கொண்டு, உலாவினான். 

அலைகளால் அசைகிற ஆம்பல் புஷ்பங்களின் பரிமளத்தை ஏந்திக் கொண்டு வருகின்ற மந்த மாருதத்தினால் (தென்றலால்) வீசப்பட்டதும், ஸ்வர்ண மயமான மணல்கள் அமைத்திருப்பதுமான, யமுனையின் மணற் குன்றில் சென்று, கோபிகைகளுடன் விளையாடினான். தோளின் மேல் கைகளை நீட்டுவது, அணைப்பது, கைகளால் முன்னெற்றி மயிர்கள், துடை, அரையாடையின் முடி, ஸ்தனங்கள் இவற்றை ஸ்பர்சிப்பது, பரிஹாஸ (கேலி) வாக்யங்களைப் பேசுவது, நகம் பதிப்பது, இவைகளாலும் மற்றும் பல விளையாடல்களாலும், கண்ணோக்கங்களாலும், புன்னகைகளாலும் ஸ்ரீக்ருஷ்ணன், கோபிகைகளுக்கு மன்மத விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) எழச் செய்து கொண்டு, விளையாடினான். 

இவ்வாறு, மஹானுபவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று தாங்கள் விரும்பினபடி கலவி (சேர்த்தி) கொடுக்கையாகிற வெகுமதியைப் பெற்று, கர்வமுடையவர்களாகி, அந்தக் கோபிகைகள் தங்களைப் பூமியிலுள்ள மடந்தையர்களுக்குள் மேன்மையுடையவர்களாக நினைத்தார்கள். ப்ரஹ்ம, ருத்ரர்களுக்கும் நியாமகனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்தக் கோபிமார்களுக்குத் தங்களைக்காட்டிலும் மேற்பட்ட அழகிகளே இல்லையென்னும் அபிமானத்தினால் உண்டான மதத்தையும், மன உயர்த்தியையும் கண்டு, அந்த மதம், மன உயர்த்தி, ஆகிய அவையிரண்டும் அடங்கும் பொருட்டும், மேன்மேலும் அவர்களுக்குத் தன்னிடத்தில் அபிநிவேசத்தை (ஈடுபாட்டை) விளைவிக்கையாகிற அனுக்ரஹம் செய்யும் பொருட்டும், அந்த மணற் குன்றிலேயே மறைந்தான். 

இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக