பத்தொன்பதாவது பாசுரம்
(இந்தப் பாசுரத்திற்கு விளக்கம் சொல்வது எப்பேற்ப்பட்டவருக்கும் சற்று சிரமமாகவே இருக்கும். என் சிற்றறிவிற்கு எட்டியதையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளையும் படித்து பாதிதான் புரிந்து விளக்குகிறேன். கண்டிப்பாக பிழைகள் இருக்கும். தவறிருப்பின் சுட்டிக் காட்டவும்.
சென்ற பாசுரத்தில் நப்பின்னை பிராட்டியை எழுப்பி, நம் கண்ணன் தரிசனத்திற்காக கதவை திறப்பாய் என்று ஆண்டாள் கோருகிறாள். நப்பின்னையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை., ஏன் ஒன்றும் சொல்லாமல், கதவைத் திறக்காமல் இருக்கிறாள் என்று அறிய கதவின் அருகில் உள்ள ஜன்னலை எட்டிப் பார்க்கிறாள் ஆண்டாள். அங்கே அவள் கண்ட காட்சியினை விவரிக்கிறாள் இந்தப் பாசுரத்தில். இப்பாசுரத்தின் கருத்தைக் கொண்டே ஶ்ரீபட்டர் இத்திருப்பாவைக்கு தனியன் அருளியதாக பெரியோர் தெரிவிப்பர். அத்தனியன் மூலம் மொத்தத் திருப்பாவையின் சாரத்தை, அதாவது பகவானுக்கு சேஷத்வம் - தொண்டு செய்வதே நம் கடமை என்பதை நாச்சியார் ஆனித்தரமாக அறிவிக்கிறாள் என்று விவரித்திருப்பார். பகவான் ஒருவன் தான் புருஷன் நாமெல்லோரும் பெண்கள் தான். அம்மகாபுருஷனை எல்லோரும் அடைவதற்கான வழிகளை, தன் பிரபந்தம் மூலம் காட்டியவளே ஆண்டாள் தான்.
இப்பாசுரத்தை மேலோட்டமாக பார்க்கும்போது, தற்போதுள்ள வார்த்தை பிரயோகங்களை வைத்து பார்க்கும்போது அர்த்தம் சற்று மாறுபடும். ஆண்டாள் நமக்கு சிற்றின்பத்தைத் தூண்டுவதற்கு பாடவில்லை. நமக்குரிய கடமைகளை உணர்த்தி, நம்மை உய்வித்து பேரின்பத்தைக் காட்டவே அருளிச்செய்தாள். நாம் அந்த வழியிலேயே இப்பாசுரத்தை அனுகுவோம்.)
“கோதே, நாம் எவ்வளவு சொல்லியும் நப்பின்னை கதவைத் திறக்கவேயில்லையே. அவள் உள்ளேதான் இருக்கிறாளா அல்லது என்னாயிற்று, அங்கே ஒரு ஜன்னல் உள்ளது அதன் வழியாக பார்க்கலாமா…”
“நங்காய், கண்டிப்பாக பார்க்கலாம்.”
ஜன்னல் வழியாக பார்க்கின்ற கோதை பாட ஆரம்பிக்கிறாள்.
“நங்காய், ஆங்கே குத்துவிளக்கெறிகிறது கோட்டுக்கால் தெரிகின்றது.”
“கோதே, குத்துவிளக்கெறிவதெல்லாம் பெரிய விஷயமா அதை ஏன் விவரிக்கிறாய்.”
“நங்காய், குத்துவிளக்கு என்பது எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம். சென்ற இடத்தில் இருளை போக்கி வெளிச்சத்தை அளிக்கும். அதே போன்று நம் மனதில் உள்ள அஞ்ஞானம் அகற்றி, குழப்பங்களை நீக்கி எல்லோருக்கும் ஞான விளக்கேற்றுகிறேன் புரிகின்றதா. நான் ஜன்னல் வழியாக பார்த்தவுடன் என் முகத்திற்கு பகவான் இருக்குமிடம் ஞானவிளக்கேற்றி வைத்திருந்தது போன்றும் அவன் திருவடியிலிருந்த கோடுகள் அதாவது காலில் இருந்த ரேகைகள் தெரிகின்றது என்றேன்.”
“ஆகா கோதே, கண்ணன் திருவடியின் கோடிற்கு அவ்வளவு முக்கியமா.”
“என்ன இப்படி கேட்டுவிட்டாய், பகவானின் திருவடிகளில் ஆயிரத்தெட்டு ரேகைகள் உள்ளதாம். அப்பேற்ப்பட்ட பகவானின் திருவடிகளை நாம் வணங்கவேண்டும். ‘கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி….’
“கோதே, மெத்தென்ற பஞ்ச சயனம் என்றால்….”
“பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். இதில் இரண்டு அர்த்தங்களை கொடுத்துள்ளேன். ஒன்று பஞ்சால் ஆன மெத்தை அதில் சயனத்திலிருக்கும் என்றும், மற்றொரு அர்த்தமாய் அர்த்த பஞ்சகத்தை குறித்துள்ளேன்.”
“கோதே, அர்த்த பஞ்சகம் என்றால் என்ன.”
“பாவாய், நம் வைணவத்தில் மொத்தம் ஐந்து முக்கிய விஷயங்கள் உள்ளன. பரமாத்மா என்றால் யார், ஜீவாத்மாக்கள் யார் அவர்களின் பணி என்ன, பரமாத்மாவான பகவானை ஜீவாத்மாக்களான நாம் அடைய வேண்டிய வழிகள் யாவை, அவ்வாறு அடைவதற்கு தடையாக இருப்பவை எவை, அப்படி எல்லாவற்றையும் கடந்து அவனை அடைந்த பின் நமக்கு கிடைக்கும் பலன் இவைகளே அவை என்பதை பற்றி விரிவாக நம் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அதனையே குறிப்பிட்டேன் பாவாய். ‘கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்…’ நப்பின்னைக்கு நம் கோரிக்கை புரிந்துவிட்டது நமக்கு அருள எழுந்திருக்க முனைகிறாள் ஆனால் நம் கண்ணனோ அவளை எழுந்திருக்கவிடாமல் அழுத்துகிறான்.”
“கோதே, ஏன் அவ்வாறு செய்கிறான்.”
“நங்காய், நப்பின்னை தாயாருக்கு நாம் வாசலில் நின்று விண்ணப்பிப்பது தெரிகிறது. அவள் தான் கருணையே வடிவானவளல்லவா அதனால் உடனே நமக்கு அருள் தர எழுந்திருக்கிறாள். ஆனால் நம் கண்ணனோ. ‘நானே அவர்களுக்கு வேண்டியதை தரத் தயாராக இருக்கிறேன் நீ ஏன் அவசரம் கொள்கிறாய்’ என்று நம் நப்பின்னையை பிடித்துத் தள்ளுகிறான். அப்படி தள்ளியதில் அவன் முகம் நப்பின்னையின் மார்பில் படிகிறது அதைத்தான் பாடினேன்.”
(இந்தவிடத்தில் ‘கொங்கை மேல்’ அதாவது மார்பின் மேல் என்று அர்த்தம் வரும்படி எழுதியிருக்கிறாளே என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். நப்பின்னை யார் சாட்சாத் நீளா தேவி என்கின்ற பூமா தேவிதான். அவளுக்கு கொங்கைகள் என்பதே மலைகள் தான். மலைகளை உயரத்திற்கு உதாரணமாக எடுக்கும்போது. நெடிதுயர்ந்த இடத்தில் இருக்கும் கண்ணன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். இங்கே திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பாடல் ஒன்றை பார்ப்போம், ‘காரார் வரைக் கொங்கை கண்ணார் கடலுடுக்கை’ என்று, இதன் அர்த்தம் ‘கார்மேகம் வரையில் நீண்டு நெடிதுயர்ந்த மலைகள் கொண்ட பூமாதேவியே’ என்று ஆரம்பித்திருப்பார்.)
“விசாலமான கண்களையுடைய நப்பின்னையே, நீ உன் மணவாளன் கண்ணனை இப்படி துயிலெழுப்பாமல் அவன் உனக்கே சொந்தமென்றிருக்கிறாய். அவன் பரமாத்மா எங்கள் எல்லோருக்கும் சொத்து. அதனால் நீ அவனை எங்களுக்குக் காட்ட வேண்டும் நாங்கள் எங்கள் கோரிக்கையை வைக்கிறோம். நீ செய்வது சரியேயன்று. இதை தத்துவமென்று தகவேலோர் எம்பாவாய்.”
(தத்வமென்று தகவேலோரெம்பாவாய் என்பதை வேதத்தின் ‘தத்வமஸி’ என்பதாக ஆசார்யர்கள் விவரிப்பர்.)
‘குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்’
ஆண்டாள் திருவடிகளே சரணம்.