ஶ்ரீமத் பாகவதம் - 246

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பதாவது அத்தியாயம்

(கோபிகள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய விரஹத்தைப் பொறுக்க முடியாமல் வருந்தி, அவனைத் தேடுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் மறைகையில், கோபிகைகள் அவனைக் காணாமல், கூட்டத்தில் தலைமையுள்ள ஆண் யானையைக் காணாத யானைப்பேடுகள் (பெண் யானைகள்) போல உடனே பரிதபித்தார்கள் (வருந்தினார்கள்). அந்தக் கோபிகைகள், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு அன்பனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய புன்னகை அமைந்த அழகிய கடைக் கண்ணோக்கம், இனிய உரைகள், விளையாடல்கள், மற்றும் பலவகை விலாஸங்கள் (திருவிளையாடல்கள்), இவைகளால் இழுக்கப்பட்ட மனமுடையவர்களாகி, அவனிடத்திடலேயே மனம் குடிகொண்டு, அந்தப் பகவானுடைய பலவகையான அந்தந்த விளையாடல்களை அனுஸரித்தார்கள். அன்பனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நிலைநின்ற மனமுடையவர்களும், நடை, புன்னகை, நோக்கம், உரை இவை முதலியவற்றை அனுஸரிக்க முயன்ற மாத்ரத்தில் அவனுடைய உருவங்களெல்லாம் நன்றாக மனத்தில் படியப் பெற்றவர்களும், அவனுக்கு அன்பர்களுமாகிய கோபிகைகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய விளையாடல்களைப் போன்ற விளையாடல்களை நடத்தத் தொடங்கி, “இதோ நான் க்ருஷ்ணனாய் விட்டேன். இதோ நான் க்ருஷ்ணனாய் விட்டேன்” என்று ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். 

ஒரு கூட்டமாய்க் கூடியிருக்கின்ற கோபிகைகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனையே பாடிக்கொண்டு, பித்தம் பிடித்தவர்கள் போன்று ஒருவனத்தினின்று மற்றொருவனத்திற்குச் செல்பவர்களாகி, ஆகாயம் போல ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த பூதங்களிலும் உள்ளும், புறமும் நிறைந்திருக்கின்ற பரமபுருஷனைத் தேடினார்கள்; ஆங்காங்கு வ்ருக்ஷங்களைப் (மரங்களைப்) பார்த்து வினவுதலும் செய்தார்கள்.

“அரச மரமே! கல்லால மரமே! ஆல மரமே! நந்தகோபன் மகன், ப்ரீதியும், புன்னகையும் அமைந்த கண்ணோக்கங்களால் எங்கள் மனத்தைப் பறித்துக்கொண்டு, திருடன் போல் போனான். நீங்கள் அவனைக் கண்டீர்களா? மருதாணி மரமே! அசோக மரமே! நீர்க் கடம்ப மரமே! சந்தன மரமே! கர்வமுடைய மடந்தையர்களின் கொழுப்பைப் பறிக்கவல்ல புன்னகையுடைய எங்கள் இராமானுசன் (பலராமனின் தம்பி) இப்படி சென்றானா? 

துளஸி! கோவிந்தனுடைய பாதார விந்தங்களுக்கு ப்ரியமாயிருப்பவளே! நல்ல பாக்யமுடையவளே! வண்டினங்களோடு உன்னைத் தரிப்பவனும், உனக்கு மிக்க அன்பனுமாகிய அச்சுதனைக் கண்டாயோ? மாலதி! மல்லீ! ஜாதிமல்லீ! யூதிகே (பிச்சிப்பூவே)! நீங்கள் மாதவனைக் கண்டீர்களோ? அவன் தன் கையால் உங்களை ஸ்பர்சித்து, உங்களுக்கு ப்ரீதியை விளைத்துக் கொண்டு இப்படி சென்றானோ! மா மரமே! ப்ரியாள (முரள்) மரமே! பலா மரமே! அஸன (வேங்கை) மரமே! கோவிதார (மலையகத்தி) மரமே! நாவல் மரமே! எருக்கம் செடியே! வில்வ மரமே! மகிழ மரமே! பிறர்க்காகவே உபயோகப்படும் பிறவியுடையவைகளாகி, யமுனையின் கரையில் இருக்கின்ற மற்றும் பல மரங்களே! ஸ்ரீக்ருஷ்ணனிடம் மனத்தைக் கொள்ளை கொடுத்து, பிரிவால் வாடுகின்ற எங்களுக்கு அவன் போன வழியைச் சொல்வீர்களாக. 

பூமி தேவி! நீ என்ன தவம் செய்தனையோ? ஏனென்றால், நீ கேசவனுடைய பாதார விந்தங்களின் ஸ்பர்சமாகிற மஹோத்ஸவம் (பேரின்பம்) நேரப்பெற்று, மயிர்க்கூச்சம் அடைந்து, விளங்குகின்றாய். ஆ! உன்னுடைய பாக்யமே பாக்யம். பூமீ! இந்த மயிர்க்கூச்சம் இப்பொழுது ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களின் ஸ்பர்சத்தினால் ஏற்பட்டதா? அல்லது த்ரிவிக்ரமாவதாரம் செய்த பரமபுருஷன் உலகமெல்லாம்  நிரம்ப விரித்து வைத்த பாதத்தின் ஸ்பர்சத்தினால் (திருவடிகள் பட்டதால்) ஏற்பட்டதா? அல்லது, வராஹ உருவங்கொண்ட பகவானுடைய ஆலிங்கனத்தினால் (அணைப்பால்) ஏற்பட்டதா? ஓ மான் பேடே (பெண் மானே)! அச்சுதன் அழகியவைகளான கை, கால் முதலிய அங்கங்களால், உங்கள் கண்களுக்கு மிகுந்த ஸந்தோஷத்தை விளைத்துக்கொண்டு, காதலியுடன் இவ்வழியாக வந்தானா! அன்பிற்கிடமான காதலியின் அங்கத்தை அணைக்கையால், அவள் பூசியிருந்த குங்குமக் குழம்பு படியப் பெற்றதான ஸ்ரீக்ருஷ்ணனுடைய குந்தப் பூமாலையின் (குருக்கத்திப்பூ) மணம் இங்கு வீசுகின்றது. ஆகையால், அவன் இங்கு வந்திருக்கவேண்டும். 

ஓ மரங்களே! ஸ்ரீக்ருஷ்ணன் வலக்கையில் தாமரை மலரை ஏந்தி, அன்பிற்கிடமான காதலியின் தோள்மேல் இடக்கையை வைத்து, துளஸியின் பரிமளத்தை விரும்பி மேல் விழுந்து வருகின்ற வண்டினங்களால் தொடப்பெற்று, இங்கு உலாவிக்கொண்டிருந்து, ப்ரீதியமைந்த கண்ணோக்கங்களால் உங்கள் நமஸ்காரத்தை ப்ரீதியுடன் அங்கீகரித்தானா? 

தோழிகளே! இதோ புலப்படுகின்ற இக்கொடிகள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸம்பந்தம் பெற்றன. இவை, தங்கள் காதலனான வ்ருக்ஷத்தின் (மரத்தின்) கிளைகளாகிற புஜங்களைத் தழுவியிருப்பினும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய நகங்களால் ஸ்பர்சிக்கப்பட்டன. பாருங்கள். இது நிச்சயம். ஏனென்றால், இவை மயிர்க் கூச்சம் உண்டாகப் பெற்றிருக்கின்றன. தங்கள் காதலர்ளோடு கலந்தமையால் உண்டானதன்று. இப்படிப்பட்ட மயிர்க்கூச்சம் இவற்றிற்கு மற்ற எப்பொழுதும் உண்டானதில்லை. ஆகையால், இது ஸ்ரீக்ருஷ்ணனுடைய கரம் பட்டமையால் உண்டானதே!

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பித்து ஏறினவர்கள் (பைத்தியம் பிடித்தவர்கள்) போல் பேசுகின்ற அந்தக் கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணனைத் தேடின ஆயாஸத்தினால் (களைப்பால்) தழதழத்து, அவனிடத்திலேயே மனங் குடிகொள்ளப்பெற்று, அந்தப் பகவானுடைய அந்தந்த விளையாடல்களை அனுஸரிக்கத் தொடங்கினார்கள். 

1. ஸ்ரீக்ருஷ்ணனைப் போல நடனம் செய்கின்ற ஒரு கோபிகை, பூதனையைப் போல் நடனம் செய்கின்ற மற்றொரு கோபிகையின் ஸ்தனத்தைப் பானம் செய்தாள். 

2. ஒருத்தி சிசுவாயிருந்த க்ருஷ்ணனை அனுஸரித்துச் சகடாஸுரனை அனுஸரித்த மற்றொருத்தியைப் பாதத்தினால் உதைத்துத் தள்ளினாள். 

3. ஒருத்தி, த்ருணாவர்த்தனென்னும் அஸுரனைப்போல் பாவனை செய்கின்ற மற்றொருத்தியை எடுத்துக் கொண்டு போனாள். 

4. ஒருத்தி, ஒலிக்கின்ற ஆபரணங்களின் ஒலி அமைந்த பாதங்களை இழுத்துக்கொண்டு, முழங்கால்களால் நகர்ந்தாள். 

5. இரண்டு கோபிகைகள், க்ருஷ்ண ராமர்களைப்போல் நடனம் செய்தார்கள். மற்றவர்கள், இடையர்களும் கன்றுகளுமாக நடனம் செய்தார்கள். 

6. ஒருத்தி, வத்ஸாஸுரனைப் போல் பாவனை செய்து, வந்த மற்றொருத்தியைப் பிடித்துச் சுழற்றி எறிந்தாள். 

7. க்ருஷ்ணனைப்போல் பாவித்த ஒருத்தி, பகாஸுரனைப்போல் பாவனை செய்து, வந்த மற்றொருத்தியைப் பிடித்து வதிப்பதுபோல் நடனம் செய்தாள். 

8. பசுக்களைப்போல் பாவனை செய்து வெகுதூரம் சென்ற சில கோபிகைகளை, ஒருத்தி ஸ்ரீக்ருஷ்ணன் பசுக்களை அழைப்பது போலவே அழைத்தாள். 

9. க்ருஷ்ணனைப் போல் பாவித்து, வேணுகானம் (குழல் இசை) செய்கின்ற ஒருத்தியை, சில கோபிகைகள் இடையர்களைப் போல் பாவித்து “நன்றாயிருக்கிறது. நன்றாயிருக்கிறது” என்று கொண்டாடினார்கள். 

10. ஒருத்தி, தன்னை ஸ்ரீக்ருஷ்ணனாகவே நினைத்து, ஒருத்தியின் தோள்மேல் தன் புஜத்தை வைத்து, அடிகளையிட்டு நடந்து கொண்டே, மற்றவர்களை நோக்கி, “ஓ ஸகிகளே!  நான் க்ருஷ்ணன். மிகவும் அழகியதான எனது நடையைப் பாருங்கள்”! என்றாள். 

11. அவ்வாறே மற்றொருத்தி, நான் க்ருஷ்ணனென்று மொழிந்து, “மழையினின்றும், காற்றினின்றும், நீங்கள் பயப்பட வேண்டாம். அவற்றினின்று உங்களைப் பாதுகாக்க  நான் உபாயம் செய்தேன்” என்று மொழிந்து ஒரு கையால் உத்தரீயத்தை விரித்து, மேல் தூக்கிப் பிடித்தாள். 

12. மன்னவனே! மற்றொருத்தி காளிய ஸர்ப்ப ராஜனைப் போல் பாவனை செய்கின்ற ஒருத்தியை, தலையில் காலால் மிதித்து, மேலேறி, “துஷ்ட ஸர்ப்பமே! நீ, இந்த மடுவினின்று புறப்பட்டுப் போவாயாக, ஓ ஸர்ப்ப ராஜனே! நான் துஷ்டர்களைத் தண்டிக்கும் பொருட்டு அவதரித்திருக்கின்றேனல்லவா? ஆகையால் நீ இனி இங்கு  நிற்கலாகாது” என்று மொழிந்தாள். 

13. அவர்களில் மற்றொருத்தி, “ஓ கோபர்களே! பொறுக்க முடியாததும், கிளர்ந்து பரந்து எரிகின்றதுமாகிய காட்டுத் தீயைக் காண்பீர்களாக. நீங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சீக்ரத்தில் அனாயாஸமாக (எளிதாக) க்ஷேமம் (நன்மை) செய்கிறேன்” என்றாள். 

14. ஒருத்தி, மற்றொருத்தியைப் பூமாலையால் பந்தனம் செய்துகொண்டே, “அட! க்ருஷ்ணா! இப்பொழுது நீ வெண்ணெயைத் திருடினாயல்லவா! மற்றும், அந்த வெண்ணெய்த் தாழியையும் உடைத்து விட்டாய். ஆகையால், உன்னை உரலில் கட்டுகிறேன்” என்றாள். 

15. அவ்வாறு சொல்லிக் கட்டுண்ட மற்றொருத்தியும், பயந்தவள் போன்று அழகிய கண்கள் அமைத்த தன் முகத்தைக் கைகளால் மறைத்து, பயந்த க்ருஷ்ணனுடைய சேஷ்டையை நடனம் செய்தாள். 

இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனுடைய லீலைகளை நடனம்செய்து, பொழுது போக்கி, மீளவும் ப்ருந்தாவனத்தில் உள்ள கொடிகளையும், செடிகளையும், மரங்களையும், க்ருஷ்ணனைக் கண்டீர்களாவென்று வினவிக் கொண்டே சென்று, வன பூமியில் பரமாத்மாவான ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடிகளைக் கண்டார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- இவை மஹானுபாவனாகிய நந்தகுமாரனுடைய அடிகளே. நிச்சயம். ஏனென்றால், இவை த்வஜம், தாமரை மலர், வஜ்ரம், மாவெட்டி, கொடி முதலிய ரேகைகளால் விளங்குகின்றன. ஆகையால், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடிகளே.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தந்த அடிவைப்புக்களால் ஸ்ரீக்ருஷ்ணனுடைய மார்க்கத்தைத் தேடிக்கொண்டு செல்கின்ற அம்மாதரசிகள், அப்பொழுது அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய காலடிகள், ஒரு மடந்தை காலடிகளால் இடையிடையில் கலந்திருக்கக் கண்டார்கள்; கண்டு வருந்தினார்கள்; மற்றும், மேல் வருமாறு கூறினார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- யானையுடன் யானைப்பேடு (பெண் யானை) போல, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தோள் மேல் கையை வைத்து, அவனுடன்  நடந்து சென்ற ஒரு பெண்மணியின் அடிகள் இவை. கோபிகைகளே! பாருங்கள். இல்லையாயின், இவ்வாறு அடிகள் கலந்திருப்பதற்கு இடமில்லை. இம்மடந்தையர் மணி, ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பணிந்தவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய ஸர்வேச்வரனைப் பூர்வ ஜன்மத்தில் நன்றாக ஆராதித்தாள். இது நிச்சயம். ஏனென்றால், கோவிந்தன் நம்மெல்லோரையும் விட்டு, ஏகாந்தமாக இவளை அழைத்துக்கொண்டு போனானல்லவா? (ஜன்மாந்தரத்தில் ஈச்வரனை ஆராதியாதவர்களுக்கு, ரஹஸ்யத்தில் கோவிந்தனுடைய கலவி (சேர்த்தி) கிடைப்பது அரிது.) 

தோழிமார்களே! இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களின் பராகங்கள் (தூள்கள்) மிகுந்த மஹிமையுடையவை. ஏனென்றால், ப்ரஹ்ம, ருத்ராதி தேவதைகள், பரமபுருஷனைப் பெறுதற்குத் தடையான தங்கள் பாபம் தீரும் பொருட்டு, இப்பராகங்களைத் (தூள்களைத்) தலைகளில் தரிக்கின்றார்களல்லவா? நாமும் இந்தத் தூளியை அபிஷேகம் செய்து கொள்வோமாயின், அவ்வாறே ஸ்ரீக்ருஷ்ணனைப் பெறக் கூடும். தோழிகளே! ஸ்ரீக்ருஷ்ணனுடன் சென்ற அம்மாது சிரோமணியின் இவ்வடிகள், நமக்கு மிகவும் மனக் கலக்கத்தை விளைவிக்கின்றன. ஏனென்றால், அவள் கோபிகைகள் அனைவர்க்கும் பொதுவான அச்சுதனுடைய கொவ்வைக் கனிவாயின் அம்ருதத்தைத் தானொருத்தியே ரஹஸ்யத்தில் அனுபவிக்கின்றாளல்லவா? 

ஓ கோபிகைகளே! அப்பெண்மணியின் அடிகள் இங்குப் புலப்படவில்லை. ஏனென்றால், முள்ளுகள் போலப் குத்துகின்ற புல் முளைகளில், ஸுகுமாரமான (மிருதுவான) பாதங்களை ஊன்ற முடியாமல் வருந்துகிற அன்பிற்கிடமான அம்மாதரசியை, அன்புள்ள அவ்வச்சுதன் தோள் மேல் தூக்கி எடுத்துக் கொண்டு போனான் போலும். கோபிகைகளே! அவன் அப்பெண்மணியை எடுத்துக்கொண்டு நடந்து போகின்றமையால் அவனடிகள் பாரத்தினால் அழுந்தியிருக்கின்றன. இதோ பாருங்கள், மஹானுபாவனும் (மிகுந்த பெருமை உடையவனும்), காமுகனுமாகிய (காதலனுமான) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இங்கு புஷ்பம் பறிக்கும் பொருட்டு, அப்பெண்மணியைக் கீழே இறக்கிவிட்டான். இங்கு, அன்பிற்கிடமான அம்மாதரசியை அலங்கரிக்கும் பொருட்டு, மிகவும் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், புஷ்பங்களைப் பறித்தான். இதோ பாருங்கள். அவன் குதிக் கால்களைத் தூக்கிக்கொண்டு புஷ்பம் பறித்தானாகையால், அவனடிகள் பூமியில் முழுவதும் படியாமல் பாதி படிந்திருக்கின்றன. பாருங்கள். காமக் கலவியில் (காதல் சேர்க்கையில்) ஆழ்ந்த மனமுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இங்குக் காமக்கலவியில் (காதல் சேர்க்கையில்) திறமையுடையவளாகிய அம்மாதரசியின் தலைமயிர்களைக் கோதி, வகுடும் எடுத்து, புஷ்பங்களைச் சூட்டி முடித்தான். அன்பிற்கிடமான அப் பெண்மணிக்குப் புஷ்பங்கள் சூட்டும் பொருட்டு, ஸ்ரீக்ருஷ்ணன் இங்கு உட்கார்ந்தான். இது நிச்சயம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கோபிகைககள், இவ்வாறு ஒருவருக்கொருவர் மொழிந்து கொண்டு, மனம் கலங்கப் பெற்று, பித்தம் பிடித்தவர்கள் போன்று, ஆங்காங்கு திரிந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைத் தானே அனுபவிக்கையாகிற மஹானந்தத்தில் (பேரின்பத்தில்) ஆழ்ந்திருப்பவனாயினும், அவாப்த ஸமஸ்தகாமனாயினும் (விரும்பியது அனைத்தும் கிடைக்கப் பெற்றவனாகினும்), அந்தக் கோபிமார்கள் கண்டு, ஊஹித்தவண்ணமே, ஒரு பெண்மணியை மாத்ரம் தனியே அழைத்துக் கொண்டு சென்று, அவளுடன் ரஹஸ்யத்தில் சென்று, காமக் கலவியில் (காதல் சேர்க்கையில்) ஆழ்ந்த மனமுடைய ஸம்ஸாரிகளுடைய தைன்யத்தையும் (தாழ்ந்த நிலையையும்), ஸ்த்ரீகளின் (பெண்களின்) துஷ்ட ஸ்வபாவத்தையும் (பிடிவாதத் தன்மையையும்) வெளியிட முயன்று, விளையாடினான். 

ஸ்ரீக்ருஷ்ணன், மற்ற மடந்தையர்களையெல்லாம் துறந்து, எவளைத் தனியே அழைத்துக் கொண்டு சென்றானோ அம் மடந்தையர்மணி, அப்போது “காமவிகாரத்தினால் (காதல் கிளர்ச்சியினால்) தூண்டப்பட்டு வீடு, வாசல்களை எல்லாம் துறந்து வந்திருக்கின்ற மற்ற மடந்தையர்கள் எல்லோரையும் துறந்து, இந்த ஸ்ரீக்ருஷ்ணன் அன்புடையவனாக என்னைத் தொடர்ந்து வருகின்றான். ஆகையால்,  நான் மேன்மையுடையவள்” என்று எல்லாப் பெண்களிலும் தன்னை மேன்மையுடையவளாக  நினைத்துக் கொண்டாள். அப்பால், அவள் வனத்தில் கொஞ்ச தூரம் சென்ற பின்பு, கர்வமுடையவளாகி, ஸ்ரீக்ருஷ்ணனைப் பார்த்து “நான் நடக்க முடியாதிருக்கின்றேன். நீ எங்கு போக வேண்டுமென்று விரும்புகின்றனையோ, அவ்விடத்திற்கு என்னை எடுத்துக் கொண்டு போவாயாக” என்று மொழிந்தாள். ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மொழியப் பெற்று, அன்பிற்கிடமான அம்மடந்தையை நோக்கி “என்தோள் மேல் ஏறிக்கொள்வாயாக” என்று மொழிந்தான். அனந்தரம் (பிறகு) அவன் மறைந்தான். 

அவள் அப்பொழுதே, “ஆ ! நாதா! என்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவனே! மிகவும் அன்பிற்கிடமாயிருப்பவனே! எங்கிருக்கின்றனை? எங்கிருக்கின்றனை? மன இரக்கத்திற்கிடமாயிருக்கின்ற உன் தாஸியாகிய (அடிமையாகிய) எனக்கு, நீ இருக்குமிடத்தைக் காட்டுவாயாக. நண்பனே! நீ இப்படி வஞ்சிக்கலாகுமா?” என்று பரிதாபத்துடன் புலம்பினாள்.  பகவானுடைய மார்க்கத்தைத் தேடிக்கொண்டு செல்கின்ற அந்தக் கோபிமார்கள், அன்பிற்கிடமான அப்பரமனுடைய விரஹத்தினால் (பிரிவினால்) மதி மயங்கி வருந்துகின்ற அப்பெண்மணியை, அருகாமையில் கண்டார்கள், பிறகு, அவள் தான் மாதவனிடத்தினின்று வெகுமதி அடைந்ததையும், துஷ்டத் தனத்தினால் (தவறான செயலினால்) அவமானம் அடைந்ததையும் சொல்லக் கேட்ட கோபிமார்கள் அனைவரும் மிகவும் வியப்புற்றார்கள. அப்பால், அந்தக் கோபிகைகள், அவளுடன் கூடி, எவ்வளவு தூரம் நிலவு திகழ்கின்றதோ அது வரையில், ஸ்ரீக்ருஷ்ணனைத் தேடிக்கொண்டு காடு காடாகத் திரிந்தார்கள். அதற்கு மேல் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அடர்ந்து இருள் மூடிக்கொண்டிருப்பதைக் கண்டு, அப்பெண்கள் திரும்பினார்கள். அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலேயே மனம் குடிகொண்டு, அவனுடைய பேச்சுக்களையே பேசிக்கொண்டு, அவனுடைய சேஷ்டைகளையே அனுசரித்து (நடித்து), தம்மை அவனாகவே பாவித்துக் கொண்டிருக்கின்ற அந்தக் கோபிமார்கள், பேரிருளைக் கண்டும், தங்கள் வீடு, வாசல்களை நினைக்கவேயில்லை. ஸ்ரீக்ருஷ்ணனையே பாவித்துக் கொண்டிருக்கின்ற அம்மடந்தையர்கள், முன்பு அவனுடன் எவ்விடத்தில் கலந்திருந்தார்களோ, அந்த மணற் குன்றிற்குத் திரும்பி வந்து, ஒன்று சேர்ந்து, ஸ்ரீக்ருஷ்ணன் வருவதை விரும்பி எதிர்பார்த்து, அவனையே பாடிக்கொண்டிருந்தார்கள். 

முப்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை