ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருப்பாவை - 20 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபதாவது பாசுரம்

(ஆண்டாள் பதினெட்டாவது பாசுரமான ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் தாயாரின் புருஷாகாரமே நம்மை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் என்று நப்பின்னையை கதவைத்திறவாய் என்கிறாள். அவளோ கதவை திறக்கவில்லை எந்த பதிலளிக்கவுமில்லை, பத்தொன்பதாவது பாசுரத்தில் ஜன்னல் வழியாக பார்த்தால் நப்பின்னை மார்பில் கண்ணன் படுத்திருக்கிறான் என்று தெரிகிறது. அப்பொழுதும் துயிலெழுந்து கதவைத்திறவாய் நாங்கள் கண்ணனை காண வந்திருக்கிறோம் என்கிறாள் ஆண்டாள். அப்பொழுதும் அவளிடமிருந்து எந்த பதிலுமில்லாததால் இனி நேரடியாக கண்ணனையே துயிலெழுப்புவோம் என்று இப்பாசுரத்தை ஆரம்பிக்கின்றாள்.)


“கோதே, நாம் எவ்வளவு பாடியும் கதவை திறக்கவேயில்லை. நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.”


“ஆம் பாவாய், நப்பின்னையை அழைத்தோம் அவர்கள் வரவில்லை, இனி நம் மன்னன் கண்ணனையே அழைப்போம்.”


‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று….’


“கோதே, முப்பத்து மூவர் என்றால் நம் பகவான் அவர்களுக்கு மட்டும்தான் கருணை காட்டுவானா.”


“பாவாய், வேதங்களின் தொடர்ச்சியான உபநிஷத்களில் ஒன்றான ‘ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் யாக்ஞவல்கியர்,’ முப்பத்து மூன்று அமரர்களை பட்டியலிடுகின்றார். எட்டு வசுக்கள், பதினொரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள், இந்திரன் மற்றும் ப்ரஜாபதி இவர்களே அந்த முப்பத்து மூன்று பேர் என பட்டியலிட்டுள்ளார்.” 


“அருமை கோதே, அவர் பட்டியலிட்டுள்ளவர்களுக்கு மட்டும் தான் நம் பகவான் கருணை காட்டுவாரா.”


“பாவாய், நான் பாடியுள்ள வரிகளின் முதல் அர்த்தம் அது, இன்னொரு அர்த்தமாய் ஒரு சம்பவத்தை கூறுகிறேன், கஜேந்திரன் என்ற யானை, முதலையின் வாயில் அதன் கால் அகப்பட்டு வெகு நாட்களுக்குப் போராடியது. பின்னர் ‘ஆதிமூலமே என்னை காப்பாற்று’ என்று அழைத்தவுடன் இருக்கின்ற முப்பது முக்கோடி தேவர்களுக்கும் ‘யானை தன்னை அழைத்ததா, அவரை அழைத்ததா’ என்ற எண்ணம் தோன்றும் முன் அந்த யானையை முதலையிடமிருந்து காப்பாற்றினார் நம் பகவான் நாராயணன். ஏனென்றால் அனைவருக்கும் மூலம், ஆதிமூலமே அவன்தான். மற்றொரு அர்த்தமாய் கண்ணனை அவர்கள் அழைக்காமலேயே ஓடிச் சென்று அமரர்களைக் காப்பாற்றுவாயா., இத்தனைக்கும் அவர்கள் சாகாவரம் பெற்ற அமரர்கள் ஆனால் நாமோ அருள்வாய் என்று ஏங்குகின்றோம். ‘செப்பமுடையாய் திறலுடையாய்…’


“கோதே, செப்பம் என்றால்…”


“பாவாய், நம் பகவானை முன் வார்த்தையில் தேவர்களுக்கு மட்டும் அருள்கிறாயே என்று சொன்னதால் அவனுக்கு நம் மேல் கோபம் வரக்கூடாது. அதனால் தான் செப்பமுடையாய் என்று பாடினேன். அவன் யாரிடமும் வித்தியாசம் பார்க்க மாட்டான் எந்த ஓரவஞ்சனையும் கிடையாது. மேலும் செய்ய வேண்டிய செயல்களை திறம்பட செய்து முடிப்பவன். எதிர்த்து வரக்கூடியவர்களை சாம்பலாக்கும் தன்மையன். ‘செற்றாற்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்….’


“கோதே, பகவான் நமக்கு வெப்பம் கொடுப்பதா, புரியவில்லையே.”


“பாவாய், தங்கம் இருக்கிறது அதை பூமியிலிருந்து வெட்டி எடுக்கும்போது மினுமினுப்புடனா இருக்கும் அசுத்தங்களுடன் கறுப்பாக இருக்கும். அதில் வெப்பத்தை காட்டக் காட்ட அதன் பொன் நிறம் வெளி வரும். அதேபோன்று நம் மனதிலுள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கி நம்மை புடம் போட்ட தங்கமென ஆக்கி நமக்கு கருணை மழை பொழிபவன் அவன். அதனையே வெப்பம் கொடுப்பவன் என்றேன்.” 


“கோதே, அங்கே பாரேன் நீ பாடியவுடன் நம் கண்ணன் நப்பின்னையின் மார்பிலிருந்து நகர்ந்து திரும்பி படுத்துவிட்டான் அப்படியென்றால் அவன் உடனே எழுந்து வந்துவிடுவான்.”


“நல்ல செய்தி சொன்னாய் பாவாய், ஆனால் அவன் இன்னமும் விழிக்கவில்லை. கண்கள் மூடியவண்ணமே உள்ளது. இப்பொழுதுதான் நப்பின்னையின் அழகு முழுதும் தெரிகிறது பாவாய். சரி இவளை கண்ணன் எங்கும் நகரவிடாமல் செய்திருந்தான் இனி நாம் நப்பின்னையை எழுப்புவோம் அவளாவது வந்து நமக்கு அருளட்டும்.”


“கவசம் போன்றும், அழகிய மென்மையான மார்புகளை உடைய, சிவப்பான உதடுகளையுடைய, நுண்ணிய இடைகளையுடைய நப்பின்னை நங்காய், எங்களுக்கு என்றும் அருளும் பெரிய பிராட்டியே, நீ இப்போதாவது துயிலெழுந்து வா. வந்து எங்களின் பாவை நோன்பிற்கு தேவையான உக்கமும் அதாவது விசிறியும், தட்டொளி அதாவது கண்ணாடியும் தாயேன். மேலும் உன் மணாளன் கண்ணனை எங்களுடன் நீராட அனுமதியளிக்க வேண்டும்.” 


(இங்கு ஆண்டாள் வெறும் விசிறியும் கண்ணாடியுமா கேட்கப் போகிறாள். இரண்டிற்கும் வியாக்யானத்தில் என்ன அர்த்தம் என்று பார்க்குங்கால், திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதருக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார் வரதருக்கு வியர்க்காத அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தார். அதேபோன்று பாகவதர்கள் கூட்டத்தில். ஒரு பாகவதர் மற்றொரு பாகவதர் வியர்க்காத அளவிற்கு அவருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமாம். அதற்கு உக்கம் அதாவது விசிறி தேவை. மேலும் கண்ணாடி எதற்காகவென்றால் பாகவதர்கள் கண்ணாடியைப் பார்த்து திருமண் இடுவார்கள் என்பதற்காக இரண்டையும் பிராட்டியிடம் தாயேன் என்று கேட்கிறாள். கடைசியில் நீராட்டம் என்பது வெறும் குளியல் மட்டுமல்ல பகவானின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து அவனுக்கு கைங்கர்யம் செய்வதையே குறிப்பிடுகிறாள்.  ஆண்டாள் வெறும் எதுகை மோனைக்கு வார்த்தைகளை போடமாட்டாள் இவற்றிற்கு இன்னும் ஆழ்ந்த அர்த்தங்கள் கண்டிப்பாக இருக்கும்.)


‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்

செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்

செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்) சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.’


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக