திங்கள், 4 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 247

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தொன்றாவது அத்தியாயம்

கோபிகா கீதை

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- கோகுலம், உன்னுடைய ஜன்மத்தினால் மிகவும் மேன்மையுற்று விளங்குகின்றது. நீ இங்கு வந்து பிறந்தமையால், ஸ்ரீமஹாலக்ஷ்மியும் இவ்விடத்தில் என்றும் மாறாமல் வாஸம் செய்து கொண்டு உன்னைப் பணிகின்றாள். அன்பனே! இவ்வாறு கோகுலமெல்லாம் பெருங்கிளர்த்தியுடன் (மிகுந்த செல்வச் செழிப்புடன்) ஸந்தோஷமுற்றிருக்கையில், உன்னுடையவர்களோவென்றால் வருத்தம் பொறுக்க முடியாமல், ப்ராணன்களை (உயிர்களை) விட வேண்டியிருப்பினும், உனக்காகவே அவற்றை ப்ரயத்னப்பட்டுத் (கஷ்டப்பட்டு) தரித்துக் கொண்டு, உன்னையே தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், நீ எங்கள் கண்ணுக்குப் புலப்படுவாயாக.  

ஸம்போகத்தை (ஆனந்தத்தை) வளர்ப்பவனே! வேண்டும் வரங்களையெல்லாம் கொடுப்பவனே! சரத்காலத்தில், தாமரையோடையில் ஆழத்தில் நன்கு முளைத்தெழுந்த அழகிய தாமரை மலருடைய உள்ளிதழின் சோபையைப் பறிக்கின்ற கண்ணால் அனன்ய ப்ரயோஜனமாக (வேறு எந்த பலனையும் விரும்பாமல்) உனக்குத் தொண்டு பட்ட பணிக்காரிகளான எங்களை, ஹிம்ஸிக்கின்ற (கொல்கின்றாயே!) இது வதமன்றோ? (ஆயுதத்தினால் செய்யும் வதம்தான் வதமோ? கண்ணால் வதிப்பது வதமாகாதோ? ஆகையால், உன் கண்ணால் பறித்துக் கொண்டு போன எங்கள் ப்ராணன்களை (உயிர்களை) மீட்டுக் கொடுக்கும் பொருட்டு, எங்களுக்குப் புலப்படுவாயாக.) 

சிறப்புடையவனே! காளிய மடுவின் விஷ ஜலத்தைப் பானம் செய்தமையால் உண்டான அபாயத்தினின்றும், மலைப் பாம்பின் உருவம்கொண்ட அகாஸுரனிடத்தினின்றும், பெருமழை, பெருங்காற்று, இடி, நெருப்பு இவற்றினின்றும், அரிஷ்டாஸுரனிடத்தினின்றும், வ்யோமாஸுரனிடத்தினின்றும் மற்றும் பலவகைப் பயங்களினின்றும், நீ எங்களைப் பலவாறு பாதுகாத்தனையே. (அப்படிப்பட்டவன், ஏன் இப்பொழுது வெறும் கண்ணால் எங்களை வதிக்கின்றனை?) 

நண்பனே! நீ, யசோதையின் புதல்வனில்லை. பராக்ருத (முன் வினைப் பயனால் பிறவி எடுக்கும்) சிசுக்களைப் போல யசோதைக்குப் பிறந்த சிசுவல்ல. நீ, ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவான பரமபுருஷனே. ஆகையால், நீ எல்லாமறிந்தவன்; ப்ராணிகள் செய்யும் சுப அசுப கர்மங்களுக்கு ஸாக்ஷியாயிருப்பவன். நீ, ப்ரஹ்ம தேவனால், உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வேண்டப்பட்டு, உன் பக்தர்களான யாதவர்களின் வம்சத்தில் கேவலம் உன்னுடைய ஸங்கல்பத்தினால் அவதரித்தனையன்றி, ப்ராக்ருதர்களைப் (முன் வினைப் பயனால் பிறவி எடுப்பவர்) போல் காமத்தினால் (காதல் சேர்க்கையால்) பிறந்தவனல்ல. 

இவ்வாறு ஜகத் (உலகைக்) ரக்ஷணத்திற்காக (காப்பதற்காக) அவதரித்தவனும், ஆச்ரிதர்களிடத்தில் பக்ஷபாதமுடையவனுமாகிய (விசேஷித்து அன்பும் அருளும் புரிபவனுமாகிய) நீ, எங்களை உபேக்ஷிப்பது (ஒதுக்குவது) யுக்தமன்று (ஸரியன்று). நாங்கள், உன்னையொழிய மற்றொன்றையும் அறியாத உன் பக்தைகளல்லோமோ? ஸாதாரணமாக உலகத்தவர்களைப் பாதுகாப்பது போலாயினும் எங்களைப் பாதுகாக்கலாகாதோ? நாங்கள், உலகத்தில் அடங்கினவர்களல்லோமோ! ஆகையால், எங்களை நீ இவ்வாறு உபேக்ஷிக்கலாகாது (ஒதுக்கலாகாது). வ்ருஷ்ணிகளில் (ஸ்ரீக்ருஷ்ணன் பிறந்த குலம்) சிறந்தவனே! அழகா! ஸம்ஸாரத்தினின்று பயந்து, உன் பாதார விந்தங்களைச் சரணம் அடைபவர்களுக்கு அபயங்கொடுப்பதும், ஸ்ரீமஹாலக்ஷ்மியின் கையைப் பிடிப்பதுமாகிய உன் தாமரைக் கையை, எங்கள் சிரஸ்ஸில் வைப்பாயாக. 

இடைச்சேரியிலுள்ள ஜந்துக்களின் வருத்தங்களைப் போக்குக்தன்மையனே! வீரனே! தன்னைச் சேர்ந்த ஜனங்களின் கர்வத்தை அழிக்கவல்ல புன்னகையுடையவனே! நண்பனே! எங்கள் ஸுக-துக்கங்களை, உன்னுடையவைகளாகப் பாவிக்கும் தன்மையனே! உன் பணிக்காரிகளான எங்களுக்கு அனுகூலனாயிருப்பாயாக. தாமரை மலர் போன்ற உன் முகத்தை, எங்களுக்குக் காட்டுவாயாக, உன்னைப் பணியும் ப்ராணிகளின் பாபங்களைப் போக்குவதும், பசுக்களைப் பின்தொடர்ந்து செல்லுவதும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு இருப்பிடமும், காளிய நாகத்தின் பணங்களில் (படங்களில்) வைக்கப்பட்டதுமாகிய உன் பாதார விந்தத்தை எங்கள் கொங்கைகளின் (முலைகளின்) மேல் வைப்பாயாக; வைத்து, எங்கள் காம வேதனையை (காதல் வருத்தத்தை) அறுப்பாயாக. 

தாமரைக் கண்ணனே! பண்டிதர்களின் மனத்திற்கினியதும், அழகிய வாக்யங்கள் அமைந்திருப்பதும், செவிக்கின்பம் விளைப்பதுமாகிய, உன் தேன்மொழியால், இவ்வாறு மதிமயங்கிக் கிடக்கிற எங்களை, உன் வாய் அமுதத்தினால் பிழைப்பிப்பாயாக. ஸம்ஸார தாபங்களால் வருந்தினவர்களைப் பிழைக்கச்செய்வதும், ப்ரஹ்மதேவன் முதலிய பண்டிதர்களால் புகழப்படுவதும், பாபங்களைப் போக்குவதும், கேட்ட மாத்ரத்தில் பெரிய நன்மையை விளைப்பதும், சம (மனதை அடக்குதல்) தம (இந்த்ரியங்களை அடக்குதல்) ஆதி (முதலிய) குணங்களை விளைவிக்கையாகிற மேன்மையுடையதும், எங்கும் நிறைந்திருப்பதுமாகிய, உன் கதையாகிற அம்ருதத்தை இப்புவியில் எவர்கள் பாடுகிறார்களோ, அவர்கள் பெருங் கொடையாளர்கள். (ஜன்மாந்தரத்தில், மிகப் பெரிய தானாதி தர்மங்களை அனுஷ்டித்த பெரும் புண்யசாலிகள்). 

அன்பனே! வஞ்சகனே (ஏமாற்றுபவனே)! உன் புன்னகையும், ப்ரேமம் (அன்பு) வழிந்த உன் கண்ணோக்கமும், நினைத்த மாத்ரத்தில் மஹானந்தத்தை (பேரின்பத்தை) விளைப்பதாகிய உன் விளையாடலும், எங்கள் மனத்தினின்று மாறாமல் வேரூன்றியிருக்கின்ற உன் ரஹஸ்ய சேஷ்டைகளும், எங்கள் மனத்தைக் கலக்குகின்றன. நாதா! எங்கள் மனத்திற்கினியனே! அன்பனே! நீ, பசுக்களை மேய்க்கும் பொருட்டு, இடைச்சேரியினின்று புறப்படுகையில், தாமரை மலர் போல் மென்மையமைந்து ஸுந்தரமுமான உன் பாதம், முள்போல் உறுதியுள்ள புற்களின் முளைகளால் வருந்துமேயென்று எங்கள் மனம் மோஹத்தை (கலக்கத்தை) அடைகின்றது. இத்தகைய எங்களை, நீ வஞ்சிக்கலாகுமா? 

வீரா! நீ ஸாயங்காலத்தில் கறுத்த முன்னெற்றி மயிர்களால் சூழப்பட்டிருப்பதும், வனத்தில் பசு மேய்க்கும் பொழுது, அவற்றின் குளம்புகளால் கிளம்பின தூட்கள்படிந்திருப்பதும், தாமரை மலர் போன்றதுமாகிய முகத்தை அடிக்கடி காட்டிக் கொண்டு வந்து, எங்கள் மனத்தில் மன்மத விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) விளைவிக்கின்றாய். {ஆனால், கலவியை (சேர்த்தியை) மாத்ரம் கொடுக்கிறதில்லை. ஆகையால், நீ வஞ்சகன் (ஏமாற்றுபவன்)}. ப்ரீதியை விளைப்பவனே! மன வருத்தங்களைப் போக்குந்தன்மையனே! தன்னை வணங்கினவர்களின் விருப்பங்களை ஈடேற்றிக் கொடுப்பதும், ப்ரஹ்மாதி தேவதைகளால் ஆராதிக்கப்படுவதும், பூமண்டலத்திற்கெல்லாம் அலங்காரமாயிருப்பதும், ஆபத்காலத்தில் த்யானிக்கத்தக்கதும், பணியும் பொழுது மிக்க ஸந்தோஷ மயமாயிருப்பதுமாகிய உன் பாதார விந்தத்தை எங்கள் கொங்கைகள் (முலைகள்) மேல் வைத்துக் காமாக்னியைத் (காதல் நெருப்பைத்) தணிப்பாயாக. 

வீரனே, ப்ராணிகளுக்கு மற்ற ஸுகங்களின் விருப்பத்தை மறக்கடிப்பதும், இனிதாக ஒலிக்கின்ற வேணுவோடு (குழலோடு) நன்றாக இணைந்திருப்பதும், ஸம்ஸார தாபங்களால் விளையும் துக்கங்களை அழிப்பதும், மேன்மேலும் ப்ரீதியை வளர்ப்பதுமாகிய உன் கனிவாயின் அம்ருதத்தை  எங்களுக்குக் கொடுப்பாயாக. நீ, பகல் வேளையில், பசுக்களை மேய்த்துக் கொண்டு, வனத்தில் திரியும் பொழுது, உன்னைக் காணப் பெறாத ப்ராணிகளுக்கு, அரை க்ஷண காலமும் ஒரு யுகம் போல வளர்கின்றது. மீளவும் நீ, ஸாயங்காலத்தில் திரும்பிவரும்பொழுது, சுரி குழல்கள் (சுருண்ட முடிக்கற்றை) அமைந்திருப்பதும், மிகுந்த சோபையுடையதுமாகிய உன் முகத்தை ஆவலுடன் பார்க்கும் ப்ராணிகளின் (மனிதர்கள், விலங்குகளின்) கண்களுக்கு இமைகளைப் படைத்த ப்ரஹ்மதேவன், புத்தியில்லாத மூடனே. (ஒரு இமைப் பொழுதுங்கூட உன்னைக் காணாதிருக்க முடியாது). 

அச்சுதனே! எங்கள் வரவை அறிந்த உன்னுடைய உரத்த வேணுகானத்தினால் (குழல் இசையால்) மோஹித்து, நாங்கள் கணவர்களையும், பிள்ளைகளையும், அவர்களைச் சேர்ந்த மற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும், மற்றுமுள்ள பந்துக்களையும் கடந்து, உன் ஸந்நிதானத்திற்கு வந்தோம். 

துஷ்டனே! இத்தகையர்களான பெண்களை, இரவில் உன்னைத் தவிர மற்ற எவன் தான் துறந்து மறைவான்? எவனும் துறந்து மறைய மாட்டான். ரஹஸ்யத்தில் செய்கிற உன் சேஷ்டைகளையும், மன்மத விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) விளைப்பதும், ப்ரீதி அமைந்திருப்பதுமாகிய உன் கண்ணோக்கத்தையும், புன்னகையோடு கூடின உன் அழகிய முகத்தையும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமும் (இருப்பிடமும்), அகன்றதுமாகிய உன் மார்பையும் கண்டு, எங்களுக்கு உன்னைப் புணர வேண்டுமென்று பெரு விருப்பம் உண்டாகின்றது. விருப்பத்தின்படி புணர நேராமையால், எங்கள் மனம் அடிக்கடி மோஹத்தை அடைகின்றது. 

ஓ க்ருஷ்ணா! உன்னுடைய அவதாரம், கோபர்களின் துக்கத்தையும், முனிவர்களின் துக்கத்தையும், அடியோடு போக்குவதற்கும், ஜகத்திற்கெல்லாம் மங்களத்தை விளைப்பதற்குமே ஏற்பட்டது. உன்னிடத்தில் விருப்பமுற்று அது நிறைவேறாமல் வருந்துகின்ற உன்னுடையவர்களான எங்கள் மன வியாதியைப் போக்குவதான ஏதேனுமொரு ஒளஷதத்தைக் (மருந்தைக்) கொடுப்பாயாக. 

அன்பனே! மென்மைக்கிடமான உன் பாதார விந்தத்தை, உறுதியுள்ள எங்கள் ஸ்தனங்களில் (முலைகளில்) நோகுமோ என்று பயந்து மெல்ல மெல்ல வைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட உன் பாதார விந்தத்தினால், காடு மேடெல்லாம் திரிகின்றனை. அப்பாதம் பறற்கல் (சிறு கல்) முதலியவைகளால் எப்படி வருந்தாதிருக்கும்? வருந்தவே வருந்தும்; என்று உன்னையே ப்ராணனாகவுடைய எங்கள் மதி (புத்தி) மயங்குகிறது. 

முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக