இருபத்தி ஒன்றாவது பாசுரம்
(ஆண்டாள் மற்றும் கோபியர்கள், நப்பின்னை நங்காயிடம் வேண்டிக் கொண்டதை செவி சாய்த்த நப்பின்னை அவர்களை பார்த்து, ஆண்டாள் நீங்கள் அனைவரும் ‘தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்’ என்று கோரினீர்கள். எனக்கு மிகவும் சந்தோஷம் உங்களை நான் கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சிப் பாட அனுமதிக்கிறேன். வாருங்கள் உள்ளே, என்று அவர்களை கண்ணனுக்கு அருகில் அனுமதிக்கிறாள். கோதை கண்ணனின் முகத்தை பார்த்துக் கொண்டு உள்ளம் பூரிக்கிறாள். பாடல் பிறக்கிறது.)
“கோதே, நாம் பாவை நோன்பு நோற்றதன் பலனை இன்று அடைந்துவிட்டோம். நாம் கண்ணனுக்கு அருகாமையில் நின்று அவனை துயிலெழுப்பப் போகிறோம்.”
“உண்மைதான் பாவாய், நம் பூர்வ ஜென்மப் பலன் தான் இது.”
கண்ணனைப் பார்த்து பாட ஆரம்பிக்கிறாள் ஆண்டாள்.
“ஏற்றக் கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப….”
“கோதே, நேரடியாக கண்ணனைப் பற்றிப் பாடாமல் ஏன் ஏதேதோ பாடுகிறாய்.”
“பாவாய், கண்ணனைப் பற்றி பாடுமுன் அவரின் தந்தைப் பற்றி பாடினால் நம் கண்ணனுக்கு உவப்பாயிருக்கும். ஆகையால் தான் நான் ஆயர்ப்பாடியிலிருக்கும் பசுக்களை வைத்து ஆரம்பிக்கிறேன். இதிலும் நம் மன்னன் கண்ணனுக்கு ஒரு செய்தி வைத்து பாடியுள்ளேன் அதைப் பாரேன்.”
“என்ன செய்தியது கோதே”
“நம் ஆயர்ப்பாடியில் இருக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் அவற்றின் மடியில் பாத்திரங்களை வைத்தால் அதனை நிரப்பி, வழியத் தொடங்கும் அளவிற்கு பால் சுரக்கும். அத்தகைய பசுக்களை நிரம்பப் பெற்ற ஆற்றல் படைத்த நந்தகோபரின் மகனே புரிந்துகொள்.”
“கோதே, இதில் என்ன செய்தியிருக்கிறது.”
“பாவாய், நம் ஆயர்ப்பாடியிலுள்ள பசுக்களே அவ்வாறு வள்ளல் தன்மை கொண்டிருக்கும்போது நம் ‘கோவிந்தன்’ எப்படியிருக்க வேண்டும் அப்பசுக்களை விட அதிக அளவில் நம்மீது கருணை பொழிய வேண்டுமல்லவா. அதைப் புரியாமல் படுத்துக்கொண்டிருக்கிறாயே, தெரிந்து நடந்துக் கொள் என்று அவனுக்கு ஆணையிடுகிறேன்.”
“கோதே, என்னடி இது கண்ணனுக்கே ஆணையிடுகிறாயா.”
“ஆம் பாவாய், நாம் எவ்வளவு நேரம் அவனைப் பாடிக் கொண்டிருக்கிறோம். அவன் அதை கேட்டும் கேட்காதது போல் நடிக்கின்றான். ஆகையால் தான் அவனுக்கு ஆணையிடுகிறேன். மேலும் அவன் ஊற்றம் உடையவன் அதாவது வலிமை உடையவன், இந்த உலகினில் பெரியவன். தான் தோற்றுவித்த இப்பூவுலகில் அனைத்து காரியங்களும் சரியாக நடக்கின்றதா என பார்த்து அவ்வப்போது பல அவதாரங்கள் செய்து சரிசெய்யும் மாயோன். இந்த மண்ணுலகில் முதலில் தோன்றிய சுடரே அவன் தான் அப்படிப்பட்ட அவனுக்கு தூக்கம் ஏது. உன்வீட்டு வாசலில் உன் எதிரிகள் உன்னிடம் தோற்று உன் திருவடிகளை பணிவது போலே நாங்கள் நிற்கின்றோம் நீ அதை அறிந்து புரிந்து எங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என் கண்ணா ஆகவே நீ துயிலெழாய்.”
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
ஆண்டாள் திருவடிகளே சரணம்.