தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்து இரண்டாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் கோபிகைககளுக்குத் தோன்றி அவர்களை சமாதானப்படுத்துதல்)
ஸ்ரீசுகர்சொல்லுகிறார்:- மன்னவனே! இவ்வாறு பகவானுடைய குணங்களைப் பாடுவதும், பலவாறு பிதற்றுவதுமாயிருக்கின்ற அந்தக் கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணனைக் காண்பதில் பேராவலுடையவர்களாகி, இனிய குரலுடன் உரக்கப் புலம்பினார்கள். பீதாம்பரம் உடுத்திருப்பவனும், வனமாலை அணிந்தவனும், உலகங்களை மயக்குகின்ற ஒன்றான மன்மதனுக்கும் மயக்கத்தை விளைக்கும்படியான பேரழகனும், புன்னகையோடு கூடின தாமரை மலர் போன்ற முகமுடையவனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வாறு புலம்புகின்ற அந்தக் கோபிகைகளின் எதிரே வந்து தோன்றினான். மிகவும் அன்பிற்கிடமான ஸ்ரீக்ருஷ்ணன் வந்திருப்பதைக் கண்டு, ஸந்தோஷத்தினால் கண்கள் மலரப் பெற்று, ப்ராணன் (உயிர்) வந்திருக்கையில் சரீரங்கள் (உடல்கள்) எழுந்திருப்பது போல, எல்லோரும் ஒரே தடவையில் எழுந்திருந்தார்கள்.
பெரியோர்கள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களை எவ்வளவு பணிந்தும் த்ருப்தி அடையாதிருப்பது போல அம்மடந்தையர்கள், அவனுடைய முக சோபையாகிற அம்ருதத்தைத் தங்கள் கண்களாகிற பாத்ரங்களால் ஏந்திப் பருகிப்பருகியும் திருப்தி அடையவில்லை.
1. அவர்களில் ஒருத்தி, ஸந்தோஷத்தினால் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய தாமரை மலர் போன்ற கையைத் தன் அஞ்சலியினால் (கையால்) பிடித்துக் கொண்டாள்.
2. ஒருத்தி, நிரம்பவும் சந்தனம் பூசப்பெற்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜத்தைத் தன் தோள்மேல் எடுத்து வைத்துக் கொண்டாள்.
3. ஒருத்தி, அவன் மென்ற தாம்பூலத்தைத் தன் கையில் வாங்கிக் கொண்டாள்.
4. ஒருத்தி, விரஹதாபத்தினால் (பிரிந்த துக்கத்தினால்) தபிக்கப்பட்ட (எரிக்கப்பட்ட) தன் கொங்கைகளில் (முலைகளில்) அவன் பாதார விந்தத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.
5. ஒருத்தி, புருவத்தை நெரித்து, ப்ரணய கோபத்தினால் (காதல் அன்பினால் ஏற்படும் பொய் கோபத்தினால்) தழதழத்து, உதட்டைக் கடித்துக் கொண்டு, கடைக் கண்ணோக்கத்தினால் அவனை அடிப்பவள் போல நோக்கினாள்.
6. ஸத்புருஷர்கள் அவனுடைய பாதார விந்தங்களை எவ்வளவு பணிந்தும் திருப்தி அடையாதிருப்பது போல, ஒருத்தி இமை கொட்டாத கண்களால் அவன் முகத்தைப் பானம் செய்தும், மேன்மேலும் அதையே ஸேவித்துக் கொண்டிருந்து, சிறிதும் திருப்தி அடையவில்லை.
7. ஒருத்தி, அவனைக் கண் த்வாரத்தினால் (கண் வழியாக) மனத்தில் நிறுத்திக் கொண்டு, நன்றாக ஆலிங்கனம் செய்து (அணைத்து), கண்ணைத் திறந்து உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்று, ஆனந்த ஸாகரத்தில் அழுந்தி யோகியைப் போன்றிருந்தாள்.
யோகிகள், பரமாத்ம ஸாக்ஷாத்காரம் (நேராகப் பார்ப்பது) உண்டாகப் பெற்று, ஆத்யாத்மிகம் முதலிய ஸம்ஸார தாபங்களைத் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான உலகியல் வாழ்வின் துன்பங்களைத்} துறப்பதுபோல, அந்தக் கோபிகைகள் அனைவரும் அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய காட்சியாகிற மஹோத்ஸவத்தினால் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, அவனைப் பிரிந்தமையாலுண்டான தாபத்தைத் துறந்தார்கள்.
அப்பா! மன்னவனே! விரஹ தாபத்தைத் (பிரிந்த துக்கத்தைத்) துறந்த அந்தக் கோபிகைகளால் சூழப்பட்ட அவ்வச்சுதன், இருபத்து நான்கு தத்வங்களாகிற (மூலப்ரக்ருதி, அதன் மாறுபாடுகளான மஹத், அஹங்கரம், 5 ஜ்ஞான இந்த்ரியங்கள், 5 கர்ம இந்த்ரியங்கள், மனது, 5 தன்மாத்ரைகள் (பூதங்களாக மாறுவதற்கு முந்தைய நிலை), 5 பூதங்கள் என அசேதன தத்வங்கள் மொத்தம் 24; ஜீவாத்மா 25வது தத்வம்; பரமாத்மா 26வது தத்வம்) சக்திகளால் சூழப்பட்ட பரமபுருஷன் போல விளங்கினான். அப்பால், ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவ்விடத்தினின்று அவர்களை அழைத்துக் கொன்டு ராஸக்ரீடைக்கு உரியதாகிய வேறொரு மணற் குன்றிற்குச் சென்றான். அங்கு காற்று, மலர்ந்த குந்த புஷ்பங்களிலும், மந்தார புஷ்பங்களிலும் பட்டு நல்ல பரிமளத்துடன் வீசிக் கொண்டிருந்தது. வண்டுகள், அந்தக் காற்றை தொடர்ந்து வந்து, அவ்விடத்தில் ஜங்காரஞ் செய்து (சுற்றிச் சுற்றி வந்து ஒலி எழுப்பிக்) கொண்டிருந்தன.
முழு நிலாவுடன் திகழ்கின்ற சரத் கால (இலையுதிர் கால – இந்த காலத்தில் சந்த்ரன் மேகங்களால் மறைக்கப்படாமல் நன்றாக ப்ரகாசிப்பான்) சந்த்ரனுடைய கிரண ஸமூஹங்களால், இரவின் இருட்டெல்லாம் தொலைந்து, அவ்விடம் மிகவும் அழகாயிருந்தது. அங்கு, யமுனா நதியின் கரையில், கரங்கள் (கைகள்) போன்ற அலைகளால் மென்மையான மணல்கள் குவிக்கப்பட்டிருந்தன. இத்தகையதான மணற் குன்றிற்கு ஸ்ரீக்ருஷ்ணன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று, அங்கு அம்மடந்தையர்களால் சூழப்பட்டு விளங்கினான்.
பூர்வ பாகங்களென்றும், உத்தர பாகங்களென்றும் இரண்டு வகையாகப் பிரிந்த வேதங்கள், பரமபுருஷனை மொழிந்து, தங்கள் மனோரதமெல்லாம் நிரம்பப் பெறுவதுபோல, அக்கோபிமார்கள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டமையால் உண்டான ஸந்தோஷத்தினால் மன வருத்தங்களையெல்லாம் துறந்து, தங்கள் மனோரதங்களெல்லாம் (விருப்பங்களெல்லாம்) நிறைவேறப் பெற்றார்கள். அவர்கள், தம் கொங்கைகளின் மேல் அணிந்த குங்குமங்கள் படிந்த உத்தரீயங்களால் தங்கள் பந்துவாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஆஸனம் (அமருவதற்குரிய இடம்) அளித்தார்கள்.
ஸர்வேச்வரனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், யோகீச்வரர்களின் ஹ்ருதய கமலத்தில் வாஸம் செய்பவனாயினும், அந்தக் கோபிகைகள் விரித்த உத்தரீயமாகிற ஆஸனத்தின் மேல் அவர்களின் நடுவே உட்கார்ந்து, மூன்று லோகங்களிலுமுள்ள ஸௌந்தர்ய (அழகு) சோபைகளுக்கெல்லாம் முக்யாதாரமான உருவத்துடன் அவர்களுக்குத் தர்சனம் கொடுத்துக் கொண்டு விளக்கமுற்றிருந்தான். அந்தக் கோபிகைகள், காம விகாரத்தை (காதல் கிளர்ச்சியை) மேன்மேலென விளைக்கின்ற அப்பகவானைப் புன்னகையமைந்த அழகிய கடைக் கண்ணோக்கத்தினால், விலாஸத்துடன் (மென்மையான நெரித்தலுடன்) திகழ்கின்ற புருவத்தினால் கௌரவித்துத் தங்கள் மடியில் இடப்பட்ட அப்பகவானுடைய பாதங்களைக் கரங்களால் ஸ்பர்சித்துத் திடமாகப் பிடித்துக் கொண்டு சிறிது கோபத்துடன் மொழிந்தார்கள்.
கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- சிலர், தங்களை அனுஸரிப்பவர்களைத் (அன்புடன் பழகுபவர்களைத்) தாங்கள் அனுஸரிக்கின்றார்கள் (அன்புடன் பழகுகிறார்கள்). சிலர், தங்களை அனுஸரியாதவர்களை (அன்புடன் பழகாதவர்களிடமும்) அனுஸரிக்கின்றார்கள் (அன்புடன் பழகுகிறார்கள்). சிலர், தங்களை அனுஸரிக்கிறவர்களையும் (அன்புடன் பழகுபவர்களிடமும்), அனுஸரிக்கிறதில்லை (அன்புடன் பழகுவதில்லை); அனுஸரியாதவர்களையும் (அன்புடன் பழகாதவர்களுடனும்), அனுஸரிக்கிறதில்லை (அன்புடன் பழகுவதில்லை). ஓ, க்ருஷ்ணா! இதை எங்களுக்கு நன்றாக விவரித்துச் சொல்வாயாக (இதற்குக் காரணத்தையும், பலனையும், இதிலுள்ள குண தோஷங்களின் தாரதம்யத்தையும் (ஏற்றத்தாழ்வுகளையும்) எங்களுக்கு விவரித்துச் சொல்லவேண்டும்).
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தோழிகளே! எவர்கள் ஒருவரையொருவர் அனுஸரிக்கிறார்களோ (அன்புடன் பழகுகிறார்களோ), அவர்கள் தத்தம் ப்ரயோஜனத்தை நிறைவேற்றிக் கொள்வதில் திடமான முயற்சியுடையவர்கள். ஆகையால், அவ்வாறு ஒருவரையொருவர் அனுஸரிப்பதற்கு (அன்புடன் பழகுவதற்கு) ஸ்னேஹம் (அன்பு, நட்பு) காரணமன்று. மற்றும், அதில் தர்மமும் கிடையாது. அதில், அவரவர் ப்ரயோஜனம் கைகூடுகை மாத்ரமே உள்ளதன்றி, மற்றொன்றும் இல்லை.
நுண்ணிடையுடையவர்களே! எவர்கள் தங்களை அனுஸரியாதவர்களை (அன்புடன் பழகாதவர்களிடமும்) அனுஸரிக்கிறார்களோ (அன்புடன் பழகுகிறார்களோ), அவர்கள் தந்தைகள் போலக் கருணையுடையவர்கள். ஸமஸ்த பூதங்களிடத்திலும் நட்பு உடையவர்களாய் இருக்கையே இதற்குக் காரணம். இதில் அழிவில்லாத தர்மம் உண்டாகும். தங்களை அனுஸரிக்கிறவர்களையும் (அன்புடன் பழகுபவர்களையும்) அனுஸரியாதவர்கள் (அன்புடன் பழகாதவர்கள்), அனுஸரியாதவர்களை (அன்புடன் பழகாதவர்களிடம்) எப்படி அனுஸரிப்பார்கள் (அன்புடன் பழகுவார்கள்)? அவ்வாறு அனுஸரியாதவர்களில் (அன்புடன் பழகாதவர்களில்) சிலர், தங்கள் தேஹபோஷண (உடலை வளர்ப்பது) மாத்ரத்தில் ஊக்கமுடையவர்கள். சிலர், சப்தாதி விஷய போகங்களும், அவற்றிற்கு வேண்டிய கருவிகளும், அவற்றிற்குரிய ஸ்தானங்களும் ஸம்ருத்தமாய் இருக்கப் பெற்றவர்கள். சிலர் பிறர் செய்த நன்றியை நினையாமல் மறந்து, குருக்களுக்கும் த்ரோஹம் செய்பவர்கள்.
தோழிகளே! நான் என்னை அனுஸரிக்கிறவர்களையும் (அன்புடன் பழகுபவர்களிடம்) அவர்கள் என்னிடம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும் என்று அனுஸரிக்கிறதில்லை (சற்றே விலகி இருப்பேன்). ஆயினும், நான் பிறர் செய்த நன்றியை நினையாமல் மறப்பவனல்லேன். ஆனால், நான் ஏன் அனுஸரிக்கிறதில்லை (சற்றே விலகி இருப்பேன்) என்றால், பணமில்லாதவன், தெய்வாதீனமாய் பணம் கிடைத்து, அதை ஒருகால் திடீரென்று இழப்பானாயின், அதையே சிந்தித்துக் கொண்டு, அதிலேயே மனம் ஆழ்ந்து, மற்றொன்றையும் நினையாதிருப்பது போல, ஒருகால் என்னைக் கண்டு அனுபவித்தவர்கள், மேன்மேலும் என்னைக் கண்டு அனுபவிக்க விரும்பி என்னை அனுஸரிக்கினும் (அன்புடன் பழகினாலும்), அவர்கள் என்னையே நினைத்து என்னிடத்திலேயே மனம் ஆழ்ந்து, மேன்மேலும் மற்றொன்றையும் நினையாதிருப்பதற்காகவே, நான் அவர்களுக்கு தர்சனம் கொடுக்காமல் சற்றே விலகி இருப்பேன் (அனுஸரிக்கிறதில்லை).
நான், அவர்களை அனுஸரித்திருப்பேனாயின் (அவர்களுக்கு தரிசனம் கொடுத்து நெருங்கி இருப்பேனாயின்), நெடுநாள் பணமில்லாதிருந்தவன், ஒருகால் பணத்தைப் பெற்று, அதை இழக்காமல் இருந்தால், சப்தாதி விஷயங்களில் (உலக இன்ப விஷயங்களில்) மனம் ஆழ்ந்து, அந்தப் பணத்தையும், மற்ற எதையும் நினையாமல் கொழுத்திருப்பதுபோல, அவர்களும் கொழுத்து என்னையும் மறந்து, மற்ற எதையும் மதிக்கமாட்டார்கள். ஆகையால், அவர்கள் என்னை மறவாமல் பெரிய ஆவலுடன் அனுஸரிப்பதற்காகவே (அன்புடன் பழகுவதற்காகவே), நான் அவர்களை அனுஸரிக்கிறதில்லை (அவர்களிடமிருந்து சற்றே விலகி இருக்கிறேன்).
மாதர்களே! எனக்காக நீங்கள் லோக மர்யாதையையும், வேத மர்யாதையையும், பந்துக்களையும் கடந்து வந்தீர்கள். அத்தகைய உங்களுக்கு, மேன்மேலும் மனத் தொடர்ச்சி விளையும் பொருட்டு உங்களுக்கு உபகாரம் செய்ய முயன்றே நான் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தேன்.
அன்பிற்கிடமாய் இருப்பவர்களே! ஆகையால் நீங்கள் உங்கள் அன்பனாகிய என் மேல் அஸுயைப் (பொறாமை) படலாகாது. நிஷ்கபடமாக (சூது வஞ்சனை இன்றி) என்னை அனுஸரிக்கின்ற (என்னிடம் அன்பு பூண்டிருக்கும்) உங்களுக்கு, நன்றாக ப்ரதியுபகாரம் செய்ய (கைம்மாறு செய்ய, நன்றி காட்ட) ப்ரஹ்மாயுஷத்தினாலும் (சதுர்முக ப்ரஹ்மாவின் ஆயுட் காலம் முழுவதும் ஆனாலும் – பல கோடி மனித வருடங்கள் ஆனாலும்) வல்லன் அல்லேன். எவ்வளவு வருந்தியும் அறுக்க முடியாததான இல்லற வாழ்க்கையாகிற சங்கிலியை நன்றாக அறுத்து, என்னைத் தொடர்ந்து வந்தீர்கள். ஆகையால், அத்தகைய உங்களுக்கு அச்சங்கிலி மீளவும் தொடாமல் இப்பொழுது அடியோடு அறுந்து போகுமாக! இது தவிர, நீங்கள் செய்த உபகாரம் உங்களிடத்திலேயே ஜீர்ணமாக வேண்டுமன்றி, அதற்கு என்னால் தகுமாறு பதில் உபகாரம் செய்ய முடியாது.
முப்பத்து இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.