செவ்வாய், 5 ஜனவரி, 2021

திருப்பாவை - 22 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்து இரண்டாவது பாசுரம்

(ஆண்டாள் ஒருவழியாக கண்ணனின் அறையில் நின்றுக் கொண்டிருக்கிறாள். அவனோ கண் திறக்கவில்லை. அவளும் பார்த்தாள் எவ்வளவோ முயற்சி செய்தும் மாதவன் விழிக்கவேயில்லை. ஒருகால் அவன் எதிரில் நின்றாள் நம் மூச்சுக்காற்று அவன் மேல் பட்டால் அதனால் அவன் எழுந்திருக்கலாமோ என்று நினைக்கிறாள். உடனே செயல்படுத்துகிறாள்.)


“கோதே, நமது முயற்சி ஒவ்வொன்றும் தோற்றுக் கொண்டேயிருக்கிறதே. கண்ணன் முகமலரவேயில்லை.”


“நங்காய், அவன் அறைக்குள் வந்துவிட்டோம். இதுவே பெரிய விஷயம் எப்படியிருந்தாலும் சற்று நேரத்தில் கண்ணன் விழித்தெழுவான் அல்லவா. நாம் அனைவரும் அவன் காலடியில் நிற்போம்.”


“எதற்காக கோதே, அவ்வாறு நிற்பதால் நமக்கு என்ன பயன்.”


“நங்காய், நமக்கு என்ன பயனா. அவன் திருவடி சம்பந்தம் பெறவே நாம் பாவை நோன்பு நோற்றிருக்கிறோம். மறந்துவிட்டாயா. மேலும் சொல்கிறேன் கேள். இந்த ஞாலத்தில் அதாவது இந்த உலகத்தில் பெரிய அழகழகான இடங்களை எல்லாம் ஆட்சி செய்யும் அரசர்கள் எல்லோரும் பயந்துபோய் இவன் காலடியில் விழுகின்றனர்.”


“என்ன கோதே, பயந்து போகிறார்களா. அதுவும் அரசர்களா.”


“ஆம் நங்காய், நம் கண்ணனை அழிக்க அவன் மாமா கம்சன் பூதனை, சகடாசுரன், பகாசுரன் போன்ற பல அசுரர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் ஒவ்வொருவரையும் அழித்து கம்சனையும் அழித்தான் நம் கோவிந்தன். இச்செய்தியை கேட்ட பெரிய அரசர்கள், சக்கரவர்த்திகள் எல்லோருக்கும் தான் தான் பெரியவன், வல்லவன் என்ற அகந்தை அழிந்து கண்ணனிடம் பயந்து அவன் காலடியில் வரிசையாக நிற்கின்றனர். அதேபோன்று நாமும் அவன் கட்டிலின் கீழ் கூட்டமாய் திரண்டு நிற்போம். அவன் அழகைப் பாரேன்.”


“என்ன கோதை, என்ன சொல்கிறாய்.”


“ஆம் நங்காய், அவன் அழகைப் பார். அவன் பாதி இமை மூடிய கண்களைப் பார். கிங்கிணி எனும் கால் கொலுசின் சிறு மணிகள் பாதி திறந்தே இருக்குமல்லவா, அவற்றின் வாய் போன்று பாதி திறந்திருக்கும் கண்கள்., செந்தாமரை மலர்கள் போன்று செக்கச் சிவந்த கண்கள் அவனுக்கு செந்தாமரைக்கண்ணன் என்றே திருநாமம் திருவெள்ளறையில் கோவில் கொண்டுள்ளான். அப்பேற்ப்பட்ட கண்களை உடைய கண்ணனே, நீ உன் கண்களை சிறிதுச்சிறிதாக திறக்க மாட்டாயோ. உதிக்கின்ற சூரியன் போலே பிரகாசத்தையும் சந்திரனின் குளிர்ச்சியையும் கொண்டு உன் அழகிய கண்களால் எங்களை சற்றுதான் பாரேன். உன் ஒவ்வொரு அவயமும் ஒவ்வொரு சாபத்தைத் தீர்த்தது. உன் திருவடி அகலிகையின் சாபம் தீர்த்தது. உன் திருமுழந்தாள் மரங்களாய் இருந்த குபேரனின் பிள்ளைகளின் சாபம் தீர்த்தது. இப்போது உன் கண் பார்வை எங்களின் சாபத்தைத் தீர்க்காதா, இது என் கோரிக்கை இதை ஆராய்ந்து அறிந்து ஏற்றுக்கொள் மாதவா, செந்தாமரைக்கண்ணா துயிலெழாய்.”


அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,

அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக