புதன், 6 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 249

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்து மூன்றாவது அத்தியாயம்

(ராஸக்ரீடையும் (குரவை கூத்து), பரீக்ஷித்து மன்னவன் வினவுதலும், ஸ்ரீசுகர் ஸமாதானம் கூறுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைகள் இவ்வாறு மொழிந்த பகவானுடைய இனிய உரைகளைக் கேட்டு, அவனுடைய அங்கத்தை (உடலை) அணைத்து, மனோரதம் (விருப்பம்) கை கூடப்பெற்று, அவனைப் பிரிந்தமையால் உண்டான தாபத்தைத் (வருத்தத்தைத்) துறந்தார்கள். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைத் தொடர்ந்தவர்களும், மிகுந்த அன்புடையவர்களும், ஒருவர்க்கொருவர் கைகோர்த்துக் கொண்டிருப்பவர்களுமாகிய அப்பெண்மணிகளுடன் அம்மணற்குன்றில் ராஸக்ரீடை (குரவை கூத்து) செய்யத் தொடங்கினான். 

யோகேச்வரனான அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கோபிகைகளின் மண்டலங்களால் அழகாயிருப்பதான ராஸக்ரீடையாகிற (குரவை கூத்தாகிற) மஹோத்ஸவத்தை  நடத்தினான். அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மண்டலமாயிருக்கின்ற அக்கோபிகைகளின் இடையில், இரண்டிரண்டு பேர்களின் நடுவில் நுழைந்து, தான் இரு பக்கங்களிலும் இருக்கின்ற கோபிகைகளைக் கண்டத்தில் (கழுத்தில்) கைகளால் தழுவிக் கொண்டு நின்றான். அவன், சிந்திக்க முடியாத பலவகை விசித்ர சக்திகளுடையவனாகையால், பல உருவங்கள் கொண்டு, இரண்டிரண்டு பேர்களின் நடுவில் நுழைந்து, ஒவ்வொருத்தியும் “ஸ்ரீக்ருஷ்ணன் என் பக்கத்திலேயே என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறான்” என்று நினைக்குமாறு அவர்களை மதி மயக்கினான்.  

தேவதைகள் அப்பொழுதே பெரிய ஆவலால் மனம் பறியுண்டு, மடந்தையர்களுடன் விமானங்களின் மேல் ஏறிக் கொண்டு, அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். அதனால், ஆகாசமெல்லாம் விமானமாய் ஆகிவிட்டது. சிறப்புடைய கந்தர்வர்கள், தத்தம் மடந்தையர்களுடன் வந்து, பரிசுத்தமான அப்பகவானுடைய புகழைப் பாடினார்கள். ராஸமண்டலத்தில் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடன் நர்த்தனம் (நடனம்) செய்கின்ற அக்கோபிமார்களின் வளைகள், தண்டைகள், சிறு சதங்கைகள், ஆகிய இவற்றின் சப்தங்கள் ஒன்று சேர்ந்து பெரும் சப்தமாயிற்று. நீலமேக ச்யாமளனான அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ராஸ மண்டலத்தில் பொன்னிறமுடைய அக்கோபிமார்களால் சூழப்பட்டிருப்பினும், பொன்மணிகளின் இடையில் பெரிய மரகத ரத்னம் போல நன்கு விளங்கினான். (அத்தனை மடந்தையர்கள் நடுவிலும் அவனொருவனே ப்ரகாசித்தான்). 

ஸ்ரீ க்ருஷ்ணனுடைய மனத்திற்கினிய மடந்தையர்களாகிய கோபிமார்களும், நர்த்தனம் (நடனம்) செய்யும் பொழுது நேரிடுகின்ற அடி வைப்புக்களோடும், கைகளை அசைக்குவதோடும், புன்னகையோடு கூடின புருவ நெரிப்புக்களோடும் முரிகின்றவை போன்ற நுண்னிடைகளோடும், ஆடைகளோடும், கபோலங்களில் (கன்னங்களில்) தொங்குகின்ற குண்டலங்களோடும் கூடி முகங்கள் வேர்க்கவும், தலைச்சொருக்கு, அரைநாண் மாலை இவைகள் அவிழ்ந்து  அலையவும் பெற்று, அந்த ஸ்ரீ க்ருஷ்ணனைப் பாடிக் கொண்டு, அவனுடன் கூடி, மேக மண்டலத்தில் மின்னல்கள் போல விளங்கினார்கள். நர்த்தனம் (நடனம்) செய்கின்ற அந்தக் கோபிமார்கள், பல ராகங்களால் இனிய குரலுடையவர்களாகி, ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸ்பர்சத்தினால் மனக்களிப்புற்று, உரக்கப் பாடினார்கள். 

அவர்களுடைய ஸங்கீதம், இந்த ப்ரபஞ்சம் (உலகம்) முழுவதும் நிரம்பிற்று. அவர்கள் பாடின கானத்தின் சிறிது பாகத்தையே இப்பொழுது இந்த ப்ரபஞ்சத்திலுள்ளவர் (உலகத்தில் உள்ளவர்கள்) பாடுகிறார்கள். அந்தக் கோபிகைகளில் ஒருத்தி, ஷட்ஜம் முதலிய (நிஷாத, ரிஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத, பஞ்சம) என்ற ஏழு வகை ஸ்வரங்களையும் ஒன்றோடொன்று கலக்காமல், ஸ்ரீக்ருஷ்ணனோடு கூட அவன் பாடுகிற ஸ்வரங்களைக் காட்டிலும் விலக்ஷணமாயிருக்குமாறு (வேறுபாடு இருக்குமாறு) மூர்ச்சனையில்  நிறுத்திப் பாடினாள். ஸ்ரீக்ருஷ்ணன், அதற்கு ஸந்தோஷம் அடைந்து, நல்லது  நல்லதென்று புகழ்ந்தான். அவள் மேலும் உத்ஸாஹமுற்று, அதற்கே தானம் பாடி மூர்ச்சனையில் நிறுத்த, ஸ்ரீக்ருஷ்ணன் மீளவும் மிகுந்த ஸந்தோஷம் அடைந்து, அவளுக்கு வெகுமானம் செய்தான். ஒருத்தி  ராஸக்ரீடை (குரவை கூத்து) செய்த பரிச்ரமத்தினால் (களைப்பால்) இளைப்புற்று, கை வளைகளும், தலையில் சூட்டின மல்லிப் புஷ்பங்களும், நழுவப் பெற்று, தன் கையினால் பார்ச்வத்தில் (பக்கத்தில்) இருக்கின்ற பகவானுடைய தோளைப் பற்றினாள். 

அவர்களில் ஒருத்தி, தன் தோள் மேல் இருப்பதும், நெய்தல் பூமணமுடையதும், நிரம்பச் சந்தனம் பூசப் பெற்றிருப்பதுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜத்தை மோந்து, மயிர்க் கூச்சம் உண்டாகப்பெற்று, அதைச் சும்பனஞ் செய்தாள் (முத்தமிட்டாள்). ஒருத்தி, நர்த்தனம் (நடனம்) செய்கையால் அசைகின்ற குண்டலங்களின் காந்தியால் திகழ்கின்ற கபோலத்தை அத்தகைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய கபோலத்துடன் சேர்க்க, அவன் தன் வாயில் மென்று கொண்டிருக்கிற தாம்பூலத்தை அவளுக்குக் கொடுத்தான். நர்த்தனம் (நடனம்) செய்து கொண்டே பாட்டும் பாடிக் கொண்டிருக்கிற ஒருத்தி, தண்டையும், அரை நாண்மாலையும், ஒலிக்கப்பெற்று, இளைப்புற்று, அழகியதும் தாமரை மலர்போன்றதுமாகிய பக்கத்திலிருக்கின்ற அச்சுதனுடைய ஹஸ்தத்தைத் (கைகளைத்) தன் ஸ்தனங்களின் (மார்பகத்தின்) மேல் வைத்துக் கொண்டாள். 

கோபிகைகள், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு மிகவும் அன்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைக் காதலனாகப் பெற்று,  அவனைப் பாடிக்கொண்டு விளையாடினார்கள். காதுகளில் அணிந்திருக்கின்ற நெய்தல் புஷ்பங்களாலும், முன்னெற்றி மயிர்களால் அலங்கரிக்கப்பட்ட கபோலங்களாலும் (கன்னங்களாலும்), வேர்வை ஜலத்துளிகளாலும், திகழ்கின்ற முகங்களையுடைய அந்தக் கோபிகைகள், தங்கள் தலை மயிர்களினின்று பூமாலைகள் நழுவப் பெற்று, வண்டுகளாகிற பாடகர்களை உடைய கோஷ்டியில் கைவளை, சிலம்பு, சிறு சதங்கைகள், வாத்யங்கள் ஆகிய இவற்றின் கோஷங்களோடு பகவானுடன் நர்த்தனம் (நடனம்) செய்தார்கள். 

இவ்வாறு ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு நாதனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானும், கோப ஸ்த்ரீகளை அணைப்பதும்,  கையால் அவர்கள் ஸ்தனங்களை (மார்பகங்களை) ஸ்பர்சிப்பதும் (தொடுவதும்), ப்ரேமம் விளங்குமாறு நோக்குவதும் மற்றும் பலவகை விலாஸங்களைச் (திருவிளையாடல்களை) செய்வதும், புன்னகை செய்வதுமாகிச் சிறுவன் தன் ப்ரதி பிம்பங்களோடு விளையாடுவது போல தன்னுருவங்களாகிய கோப ஸ்த்ரீகளோடு க்ரீடித்து கொண்டிருந்தான். கோபிகைகள், அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய  திருமேனியின் ஸ்பர்சத்தினால் மஹத்தான ஆனந்தம் அடைந்து, இந்திரியங்களெல்லாம்  ஸ்வாதீனமற்று, பூமாலைகளும், ஆபரணங்களும் நழுவப்பெற்று, அவிழ்ந்தலைகின்ற கூந்தலையும், ஆடையையும், மேலாடையையும், நழுவிய கழுத்திலிட்ட மாலையையும், நகைகளையும் திரும்பச் சீர் செய்ய இயலாது நின்றனர்.

ஆகாசத்தில் வேடிக்கை பார்க்க வந்த தேவதாஸ்த்ரீகளும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ராஸக்ரீடையைக் (குரவை கூத்தைக்) கண்டு, காம விகாரத்தினால் (காதல் கிளர்ச்சியால்) வருந்தி மயங்கினார்கள். சந்த்ரனும், சுக்ரன் (வெள்ளி), அங்காரகன் (செவ்வாய்), குரு (வியாழன்) முதலிய க்ரகங்களுடன் வியப்புற்று நின்றான். 

சந்த்ரன் வியப்புற்று தான் போக வேண்டியதை மறந்து நிற்க, மற்ற க்ரஹங்களும் தங்களது கதியையும் மறந்து, அவ்விடங்களிலேயே நின்றார்கள். ஸ்ரீக்ருஷ்ணன் தானும் கோபஸ்த்ரீகள் எத்தனை பேர்களோ அத்தனை உருவங்கொண்டு, தன்னைத்தானே அனுபவிக்கையால் மஹானந்தம் அடைந்து, அவாப்தசமஸ்தகாமனாய் (விரும்பியது அனைத்தும் அடையப் பெற்றவனாய்) இருப்பினும் லீலைக்காகவே அவர்களுடன் க்ரீடித்தான்.

ஓ குருச்ரேஷ்டனே! ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இரக்கமுடையவனாகையால், ஸம்போகத்தினாலும், மற்றும் பல விளையாடல்களாலும் இளைப்புற்றிருக்கிற அந்த கோபிகைகளின் வேர்த்திருக்கின்ற முகங்களை மிகவும் ஸந்தோஷத்தை விளப்பதாகிய தன் கையினால் ப்ரேமத்துடன் துடைத்தான். அந்தப் பகவானுடைய நகங்களின் ஸ்பர்சத்தினால் ஸந்தோஷம் அடைந்திருக்கின்ற கோபிகைகள், திகழ்கின்ற ஸ்வர்ணமயமான குண்டலங்களின் காந்தியாலும், முன்னெற்றி மயிர்களின் காந்தியாலும் விளங்குகின்ற கபோலங்களின் (கன்னங்களின்) சோபையாலும், அம்ருதம் போன்ற புன்னகையோடு கூடின கண்ணோக்கத்தினாலும், தங்கள் நாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு வெகுமதி செய்து கொண்டு, புண்யங்களான அவனுடைய செயல்களைப் பாடினார்கள். 

அந்த கோபிகளைக் கட்டியணைக்கும் பொழுது அவர்களுடைய அங்கங்களால் கசக்கப்பட்டிருப்பதும்,  அவர்களுடைய ஸ்தனங்களின் குங்குமக்குழம்பு படிந்து நிறம் மாறி இருப்பதுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூமாலையைத் தொடர்ந்து வருகின்ற, மிகவும் இனிதாகப் பாடுகிற வண்டுகளின் இனங்களால் சூழப்பட்ட அந்த ஸ்ரீக்ருஷ்ணன் ஸம்போகத்தினாலும் (சேர்த்தியாலும்) விளையாடல்களாலும் நேர்ந்த ச்ரமத்தைத் (களைப்பைத்) தீர்க்கும் பொருட்டுத் தலைமையுள்ள மத்தகஜம் (மதம் கொண்ட யானை) இளைப்புற்றுத் தன் பேடைகளுடன் (பெண் யானைகளுடன்) அணைகளையெல்லாம் உடைத்துக் கொண்டு ஜலத்தில் இழிவதுபோல, லோக மர்யாதைகளையும் வேத மர்யாதைகளையும் கடந்து அவர்களுடன் ஜலக்ரீடை செய்ய ஜலத்தில் இழிந்தான் (இறங்கினான்). ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன் ஆத்மானுபவத்தினால் மஹானந்தமுற்று, நிறைவாளனாயினும், யானை தன் பேடைகளோடு (பெண் யானைகளோடு) விளையாடுவது போல, ஜலத்தில் இழிந்து மிகவும் ஸந்தோஷமுற்று, நகைக்கின்ற கோப ஸ்த்ரீகள் ப்ரீதியுடன் ஜலங்களை வாரியிறைத்து, நனைத்துக்கொண்டு தானும் அவர்கள்மேல் ஜலத்தை இறைத்து நனைத்துக்கொண்டு, ஆகாயத்தில் புஷ்பங்களைப் பெய்கின்ற தேவதைகளால் துதிக்கப் பெற்று விளையாடினான். 

அப்பால், ஜலத்திலும், நிலத்திலும் பூக்கின்ற புஷ்பங்களின் பரிமளங்களை ஏற்றுக்கொண்டு, வருகிற காற்றினால் வீசப்பெற்ற திசைகளையுடையதும், அழகாயிருப்பதுமாகிய யமுனைக் கரையிலுள்ள உபவனத்தில் மதஜலங்களைப் பெருக்குகின்ற மத்த கஜம் (மதம் கொண்ட யானை) பெண்யானைகளுடன் திரிவது போல, வண்டினங்களாலும், மடந்தையர் மணிகளின் கூட்டங்களாலும், சூழப்பட்டு உலாவிக்கொண்டிருந்தான். ஸத்ய ஸங்கல்பனும் (நினைத்ததை செய்து முடிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், மடந்தையர் மணிகள் ப்ரேமத்துடன் கூட்டம் கூட்டமாய்த் தொடரப் பெற்று, காமத்தையும் அதன் செயற்பாடுகளையும் தன்னிடத்திலேயே அடக்கிக்கொண்டு (காமத்தை வென்று), சந்த்ர கிரணங்களால் திகழ்பவைகளும், காவ்யங்களில் சொல்லப்படும் கதா ரஸங்களுக்கெல்லாம் இடமாயிருப்பவைகளுமான சரத்காலத்து (சந்த்ரன் மேகங்களால் மறைக்கப் படாமல் முழுவதுமாக ப்ரகாசிக்கும் இலையுதிர் காலத்து) ராத்ரிகளெல்லாம் அவர்களோடு விளையாடினான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பகவான், தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டும், அதர்மத்தை அழிக்கும் பொருட்டுமல்லவோ தன்னுடைய அம்சமாகிய பலராமனுடன் தன் ஸங்கல்பத்தினால் அவதரித்தான். ப்ரஹ்மர்ஷீ! அத்தகையனான ஸர்வேச்வரன், தர்ம மர்யாதைகளைத் தானும் அனுஷ்டித்தும், பிறர்க்கும் உபதேசித்துப் பாதுகாக்க வேண்டியவனாயிருந்தும், பிறர் தாரங்களைப் (மனைவிகளைப்) புணர்கையாகிற விபரீத கார்யத்தை எப்படிச் செய்தான்? யாதவர்களில் அவதரித்த மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தான் அவாப்த ஸமஸ்தகாமனாயிருந்தும் (விரும்பியது அனைத்தும் அடையப் பெற்றவனாய் இருந்தும்), நிந்தைக்கிடமான கார்யத்தைச் செய்தமைக்கு என்ன அபிப்ராயம்? இவ்விஷயத்தில் எங்களுக்கு ஸம்சயமாயிருக்கின்றது (ஸந்தேஹமாய் இருக்கிறது). நன்கு வ்ரதங்களை அனுஷ்டிக்கும் தன்மையுடையவரே! அதைப் போக்குவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சாஸ்த்ர நிபந்தனைகளுக்கு உட்படாத பெரியோர்கள், சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட தர்மங்களைக் கடப்பதும், சாஸ்த்ரார்த்தங்களை ஆராயாமல் தோன்றியபடி செய்வதும் புலப்படுகின்றது. ஆயினும், தேஜிஷ்டர்களான (ப்ரஹ்ம ஒளி பொருந்திய) பெரியோர்களுக்கு அது தோஷத்தை விளைக்காது. எல்லாவற்றையும் தஹிக்கின்ற அக்னிக்கு, தஹிக்கப்படுகிற வஸ்துக்களின் தோஷம் ஸம்பந்திக்குமோ? ஸம்பந்திக்காதல்லவோ? சாஸ்த்ர வச்யர்களல்லாத (சாஸ்த்ர நிபந்தனைகளுக்கு உட்படாத) ஈச்வரர்கள் (பெரியோர்கள், நியமிப்பவர்கள்) செய்கிற இத்தகைய தவறான கார்யங்களை, சாஸ்த்ர நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவர்கள், ஒரு காலும் மனத்திலும் கூட நினைக்கலாகாது. மூடத்தனத்தினால், தான் சாஸ்த்ரத்திற்கு உட்பட்டு  நடக்க வேண்டுமென்பதை அறியாமல், அந்த விபரீத கார்யங்களைச் செய்வானாயின், சீக்கிரத்திலேயே நசித்துப் போவான். ஸமுத்ரத்தினின்று உண்டான விஷத்தை ருத்ரன் பக்ஷித்தாற் (பருகினாற்) போல இன்னொருவன் பக்ஷிப்பானாயின் (பருகுவானாயின்), சீக்கிரத்தில் நசிப்பானல்லவோ? ஆனால், பெரியோர்களின் நடத்தையெல்லாம் மற்றவர்களுக்கு ப்ரமாணமல்லவா? என்றால் சொல்லுகிறேன், கேட்பாயாக! 

பெரியோர்கள், “இதைச் செய். இதைச் செய்ய வேண்டாம்” என்று சொல்லும் வார்த்தைகள் எல்லாம், ப்ரமாணமே (ஆதாரமே). நடத்தையோ, வேறு ஏதாவதோ ப்ரமாணமன்று (ஆதாரம் அன்று); அவ்வார்த்தைக்கு விபரீதமல்லாத சிலவற்றையே அனுஷ்டிக்கலாமன்றி, மற்றவைகளை அனுஷ்டிக்கலாகாது. ஆகையால், புத்தியுடையவன் பெரியோர்கள் தாங்கள் நிரூபித்துச் சொல்லும் சொற்களுக்கிணங்கின ஆசாரத்தையே அனுஷ்டிக்க வேண்டும். பெரியோர்களுக்கு, இவ்வுலகத்தில் நன்னடத்தையை அனுஷ்டித்து ஸாதிக்க வேண்டிய ப்ரயோஜனம் எதுவுமே இல்லை. அவர்கள், விபரீத கார்யங்களைச் செய்யினும், அதனால் தேஹத்தை ஆத்மாவாகப் ப்ரமித்தவர்களாக ஆகமாட்டார்கள். 

தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) பூர்வ ஜன்ம கர்மத்தினால் உண்டாகின்றது. மேன்மேலும் கர்மங்களைச் செய்வதற்கு காரணமாயிருக்கும். பெரியோர்கள் அத்தகைய தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) அற்றவர்களாகையால், அவர்கள் கர்ம வச்யர்களல்லர் (புண்ய பாப கர்மங்கட்கு உட்பட்டவர்கள் அல்லர்). கர்மத்திற்கு உட்படாமையைப் பற்றியே அவர்கள் சாஸ்த்ர நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களல்லர். ஆகையால், அவர்களுக்குத் தர்மங்களைச் செய்கையால் ஒரு நன்மையும், அதர்மங்களைச் செய்கையால் ஒரு கெடுதியும், கிடையாது. இப்படியிருக்க, திர்யக்கு (விலங்கு), மனுஷ்யர், தேவர்கள் என்று பலவகையாகப் பிரிந்திருப்பவைகளும், நியமிக்கத் தகுந்தவைகளுமாகிய ஸமஸ்த ஜந்துக்களுக்கும் நியாமகனான (நியமிப்பவனான) ஸர்வேச்வரனுக்கு, நன்மை, தீமைகளில் ஸம்பந்தமில்லையென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

இவனுடைய பாதார விந்தங்களின் பராகத்தைப் (தூள்களைப்) பணிகையால், திருப்தி அடைந்து, சப்தாதி விஷயங்களில் விருப்பம் தீரப்பெற்று, அப்பாதாரவிந்தங்களை த்யானிப்பதின் மஹிமையால், ஸமஸ்த கர்ம பாதங்களையும் உதறின ஸனகாதி முனிவர்கள், சாஸ்த்ர நிபந்தனைகளால் கட்டப்படாதவர்களாகி, நினைத்தபடி ஸஞ்சரிக்கின்றார்கள். தன்னிச்சையினால், சுத்த ஸத்வ மயமான திவ்யமங்கள விக்ரஹங்களை ஏற்றுக்கொள்பவனும், பாபங்கள் தீண்டப்பெறாதவனுமாகிய அத்தகைய பகவானுக்கு, கர்ம பந்தம் (வினைகளால் உண்டாகும் கட்டு) எங்கிருந்து நேரப்போகின்றது? 

அவன் நினைத்தபடி எதைச் செய்யினும், அதனால் அவனுக்குப் பந்தம் உண்டாகாது. இந்த ஸர்வேச்வரன், கோபிகளுக்கும், மற்றுமுள்ள ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் அந்தராத்மாவாய் நிறைந்து, நியமித்துக் கொண்டிருப்பவன்; அவரவர்கள் செய்யும் கார்யங்களுக்குத் தகுந்தபடி, ஸுகம், துக்கம் முதலிய பலன்களைக் கொடுப்பவன். ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்). இவன்  நம்மைப் போல் கர்மபலனான ஸுக துக்கங்களை அனுபவிப்பதற்காகத் தேஹம் (உடல்) கொண்டவனல்லன்; விளையாட்டிற்காகவே இம்மானிட உருவம் பூண்டு அவதரித்தவன். பக்தர்களை அனுக்ரஹிப்பதற்காக இவன் மானிட உருவத்தை ஏற்றுக் கொண்டான். 

எவைகளைக் கேட்ட மாத்ரத்தில் உலகமெல்லாம் தன்னிடத்தில் மனவூக்கமுறுமோ, அத்தகைய விளையாடல்களைச் செய்கிறான். ஆகையால், அவனுடைய விளையாடல்களும், ப்ராணிகளை தன்  வசமாக்கி அனுக்ரஹிப்பதற்காகவே. (அவனுடைய அவதாரங்கள், விளையாட்டிற்காக. விளையாட்டு பக்தர்களை அனுக்ரஹிப்பதற்காக.) கோபிகைகளின் கணவர்களும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் மதிமயங்கி, தங்கள் தாரங்களைத் (மனைவிகளைத்) தங்கள் பக்கத்தில் இருப்பதாகவே நினைத்து, அவன் மேல் அஸுயைப் (பொறாமைப்) படவில்லை. அப்பால், ப்ராம்ஹ முஹுர்த்தம் பராப்தமாகையில், ஸ்ரீக்ருஷ்ணன், அந்தக் கோபிகைளை அனுமோதனஞ் செய்து (அனுமதி தந்து), நீங்கள் போய் வாருங்களென்று விடை கொடுத்தனுப்பினான். 

ஆயினும், அவர்கள் அவனிடத்தில் மிகுந்த அன்புடையவர்களாகையால், திரும்பிப் போக மனவிருப்பமில்லாமலே மிகவும் வருந்தித் தத்தம் க்ருஹங்களுக்கு மீண்டு சென்றார்கள். ஸ்ரீக்ருஷ்ணன்,  கோபஸ்த்ரீகளோடு கூடி நடத்தின இந்த ராஸக்ரீடையை (குரவை கூத்தை) எவன் ச்ரத்தையுடன் கேட்கிறானோ, அல்லது கேட்பிக்கிறானோ, அவன் பகவானிடத்தில் மிகுந்த பக்தியைப் பெற்று, இந்திரியங்களை வென்று, ஸம்ஸாரமாகிற மனோவியாதியை விளைப்பதாகிய அஜ்ஞானத்தைக் காலதாமதம் இன்றி சீக்கிரத்தில் உதறிவிட்டு, மஹானந்தத்தை அடைவான். 

ராச லீலை

சரத் காலத்தில், மாலை வேளையில், சந்திரோதயத்துக்குப் பின், ஒரு செண்பக மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்தபடி கண்ணன் குழலூதத் தொடங்கினான். அதைக் கேட்டு அவனிடம் ஓடி வந்த கோபிகைகளோடு சேர்ந்து இரவு முழுவதும் பிருந்தாவனத்தில் குரவைக்கூத்து என்று சொல்லப்படும் ராசலீலையைச் செய்தருளினான் கண்ணன். கோபிகைகளும் மெய்மறந்து கண்ணனோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

இதன் மூலமாக ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள முக்கியமான உறவான மனைவி - கணவன் உறவைக் கண்ணன் உணர்த்தினான். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே சொல்லப்பட்ட ஒன்பது உறவுகளுள் இதுவும் ஒன்றாகும். 

1. மகன் - தந்தை

2. காப்பாற்றப்படுபவர் - காப்பவர்

3. தொண்டு செய்பவர் - தொண்டுகளைப் பெறுபவர்

4. மனைவி - கணவர்

5. அறிபவர் - அறியப்படுபவர்

6. தொண்டன் - எஜமானன்

7. தாங்கப்படுபவர் - தாங்குபவர்

8. உடல் - உயிர்

9. மகிழ்விப்பவர் – மகிழ்பவர்

இந்த ஒன்பது உறவுகளுள் ஒன்றான மனைவி - கணவன் என்னும் உறவை ராசலீலையால் உணர்த்தினான் கண்ணன்.

முப்பத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக