புதன், 6 ஜனவரி, 2021

திருப்பாவை - 23 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்து மூன்றாவது பாசுரம்

(ஆண்டாள் தன் தோழியருடன் கண்ணனின் திருமாளிகையில், அவன் கால்மட்டில் நின்றுக் கொண்டு எங்களை கண் விழித்துப்பார்த்து எங்கள் சாபங்களைத் தீர்த்துவிடு என்கிறாள் முந்தைய பாசுரத்தில். இப்பாசுரத்தில் அவனை சிங்காசனத்தில் எழுந்தருளப் பிரார்த்திக்கின்றாள். அதுவும் எவ்வாறு ஒரு சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடுகிறாள். வாருங்கள் பாசுத்திற்குள் புகுவோம்.)


“கோதே, உன் ‘அங்கன்மா ஞாலத்தரசர்’ என்ற பாசுரத்தைக் கேட்டவுடன் நம் மன்னன் கண்ணன் செவ்வரி ஓடிய அவன் செந்தாமரைக் கண்களை சிறிதுச்சிறிதாகத் திறக்கின்றான். அவன் கண் விழித்ததும் நாம் நமது கோரிக்கைகளை தெரிவித்துவிடலாமா.”


“இல்லை நங்காய், அவனை நம் கோரிக்கைகளை கேட்பதற்கு உரிய ஆசனமாம் சிங்காசனத்தில் அமர வைக்க பிரார்த்திக்க வேண்டும்.”


“எப்படி பிரார்த்திக்கப் போகிறாய் கோதே.”


“அவன் அழகு இருக்கிறதே அதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் நங்காய், கம்பீரமாய் காட்டிற்கு ராஜாவான சிங்கம் போன்று இருக்கிறது.”


“சிங்கம் போன்றா என்ன கோதை, நீ ஏதோ இந்திரன் போலும், மன்மதன் போல் வர்ணிப்பாய் என்று பார்த்தால் சிங்கத்தை சொல்கிறாயே.”


“அடியே, சிங்கம் என்றால் வெறும் சிங்கமல்லடி ‘நரசிங்கம்’. நான் ஏற்கனவே என் கனவில் வந்தவனைப் பற்றி உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன். 


‘அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கை வைத்து

பொரிமுகந்தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்’


என்று ‘அரிமுகன் அதாவது நரசிம்மன்’ தன் கைம்மேல் என் கை வைத்த காட்சியை நான் கனாவாகக் கண்டேன். அதனால் இங்கு நம் கண்ணனை நரசிம்மமாய் தான் பார்க்கின்றேன்.”


“கோதே, நீ ஏற்கனவே முதல் பாசுரத்தில் ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனை சிங்கத்துடன் ஒப்பிட்டு பாடியுள்ளாய். ‘நரசிம்மம்’ எதற்கடி ஏதாவது விசேஷம் உண்டா”


“பாவாய், நாம் இந்த பாவை நோன்பு நோற்றிருந்து இங்கு வந்திருப்பது எதற்காக என்று ஆராய்ந்தறிந்து நமக்கு அருள ஒருவர் வேண்டும். அப்படி ஆராய்ந்தருளும் ஒரே தெய்வம் நரசிம்மன் தானடி. அவன் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தான். ஹிரண்யகசிபுவை கொல்வதற்காகவா, இல்லை, பிரகலாதனை காக்கவா, இல்லை. ஒரே விஷயத்திற்காக மட்டுமே அந்த அவதாரம். அது பிரகலாதன் வாக்கைக் காப்பாற்ற. ‘சாணினும் உளன் அணுவினை சதகூறிட்ட கோணினும் உளன்’ என்ற பிரகலாதன் வாக்கை நிறைவேற்ற காத்திருந்தான். ஒவ்வொரு துரும்பாக தூணாக மாறி மாறி காத்திருந்தான் நரசிம்மன். அப்பேற்ப்பட்ட ஆராய்ந்து அருளும் தெய்வமடி அவன். நரசிம்மன் ரூபத்தில் நீ வா கண்ணா என்று அழைப்பது தானே முறை.”


“அற்புதம் கோதே, நீ உன் பாசுரத்தை ஆரம்பி.”


“மழைக்காலத்திலே மலையிலிருக்கும் குகையில் நீண்டநாட்கள் தங்கி படுத்து உறங்கி, மழை முடிந்ததும் தன் பசி தாபத்தைத் தீர்க்க தன் கண்களை தீப்பிழம்பாக மாற்றி ஏதாவது இரை கிடைக்காதா என்று ஆராய்ந்து தன் பிடறி முடியனைத்தும் சிலிர்த்துக் கொண்டு தன் உடம்பின் எல்லா அங்கப் பிரதேசத்தையும் உதறி விரித்துக் கொண்டு சோம்பலை முறிக்க நீண்டு நெடிதுயர்ந்து முழங்குகின்ற சிங்கம்போல்…”


“கோதே, ஒரு நிமிஷம். ‘சிங்கம் முழங்குமா? கர்ஜிக்கும்’ என்று தானே பாரோர் சொல்லுவார்கள்.”


“நங்காய், ‘கர்ஜனை’ என்பது வடமொழியடி. நம் தாய் மொழியாம் தமிழில் இதற்கென விசேடமாக சங்க இலக்கியத்தில் ‘முழங்குதல்’ என்று உள்ளதடி. ‘இடிமுழக்கம்’ என்ற வார்த்தைத் தொடர் நம்மிடையே பழக்கத்திலுள்ளது. அந்த முழக்கத்தை தான் நான் கர்ஜனைக்கு மாற்றாக வைத்துவிட்டேனடி. இதில் ஏதும் பிழையில்லையே, மேலும் சிங்கத்தின் கர்ஜனை இடிமுழக்கத்தைப் போல் தானே இருக்கும்.”


“அருமை கோதை, நீ ஏற்கனவே ‘ஆழிமழைக்கண்ணா’ பாசுரத்தில் ‘பத்மநாபன்’ என்பதற்கு ‘பற்பநாபன்’ என்று வடமொழி கலக்காமல் பாடியிருந்தாய்.”


“சரிசரி பாவாய் பாசுரத்திற்கு மீண்டும் வருவோம். நீண்ட நாட்கள் மழைக்காலத்தில் மலையின் குகையிலேயே படுத்துக்கிடந்த சிங்கம் மழை விட்டபின் எவ்வாறு நிமிர்ந்து, தன் உடல் சிலிர்த்து, முழங்கிப் புறப்படுமோ அதேபோல் நீயும் இக்கட்டிலை விட்டு இறங்கி வா பூவைப்பூவண்ணா. உன் கோயிலில் உள்ள சீரிய சிங்காசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரணத்தையும் எங்கள் கோரிக்கைகளையும் ஆராய்ந்து எங்களை அருளப் பிரார்த்திக்கின்றேன் கண்ணா. மணிவண்ணா. பூவைப்பூவண்ணா.”


‘மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்’


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக