44. ஜடாயு (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)
ராஜகுமாரர்களும் சீதையும் அகஸ்தியர் சொன்ன வழியைப் பின்பற்றிப் பஞ்சவடிக்குச் சென்றார்கள்.
ஏகிஇனிது அவ்வயின் இருந்துறை மின்என்றான்
மேகநிற வண்ணனும் வணங்கி விடைகொண்டான்
பாகனைய சொல்லியொடு தம்பி பரிவில்பின்
போகமுனி சிந்தைதொட ரக்கடிது போனான்.
அகஸ்திய முனிவருடைய சிந்தையானது, மூவருடன் நான்காவது பிரயாணியாகச் சென்றது என்கிறார் கம்பர். அதிலும் லக்ஷ்மணனுடன் சென்றது என்று சித்திரிக்கிறார். வரப்போகும் விஷயங்கள் அறிந்தவரல்லவா முனிவர்? கவிக்குத் தெரியும் ஞானிகளுடைய சிந்தையின் போக்கைக் கண்டு சொல்ல!
போகும் வழியில் ஒரு பெரிய கழுகைக் கண்டார்கள். கழுகின் அற்புத வடிவத்தைக் கண்டு இது ஒரு ராக்ஷசனாகத்தான் இருக்க வேண்டும் என்று ராமன் எண்ணி, “நீ யார்?” என்றான்.
அந்தக் கழுகு மிகுந்த பிரியத்துடன், “குழந்தாய்! நான் உங்கள் தந்தையின் சினேகிதன் என்றது.
பிறகு அந்தப் பெரும் பறவை தன் குலத்தை விவரித்துச் சொல்லிற்று. கருட பகவானுடைய தம்பியான அருணனுடைய மகன் சம்பாதியின் தம்பி ஜடாயு என்று தெரிந்து கொண்டார்கள்.
“நீங்கள் இங்கே வனவாசத்தில் இருக்கும்போது சீதையைத் தனியாய் விட்டு விட்டு வேட்டைக்குப் போகும் காலத்தில் நான் அவளுக்குத் துணையாக இருப்பேன்” என்றான்.
இப்படித் தங்கள் பிதா தசரதனுக்கு நெருங்கிய நண்பனான ஜடாயு சொன்னதைக் கேட்டு அவனை ராம லக்ஷ்மணர்கள் மிகப் பிரியமாக ஆலிங்கனம் செய்து, “காட்டில் நாம் ஒரு பெருந் துணையைப் பெற்றோம்” என்று மகிழ்ச்சியடைந்து விடைபெற்றுக் கொண்டார்கள்.
ஜடாயுவை முதன் முதலில் பார்த்த இந்த நிகழ்ச்சியைப்பற்றி வால்மீகி சுருக்கமாக இவ்வளவு தான் சொல்லுகிறார். பிறகு ஜடாயு சீதைக்காக ராவணனுடன் சண்டையிட்டு, காயமுற்று ராம லக்ஷ்மணர்கள் வரும் வரையில் எப்படியோ உயிரை வைத்துக்கொண்டிருந்து விஷயத்தை அவர்களிடம் கூறிவிட்டு இறந்து போனது, ராமன் ஜடாயுவின் வீரத்தையும் அன்பையும் பாராட்டிப் பிரலாபித்தது - இவற்றைப் பின்னால் வால்மீகி சொல்லுகிறார். ஜடாயுவை முதலில் ராமன் சந்தித்த இந்த நிகழ்ச்சி வால்மீகி ராமாயணத்தில் இவ்வாறு மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதை ஒரு குறையாகக் கம்பர் நினைத்தார் என்று தெரிகிறது. அந்தக் குறையைத் தம் ராமாயணத்தில் கம்பர் மிக அழகாகப் பூர்த்தி செய்து தமிழருக்குத் தந்திருக்கிறார். வால்மீகியில், அதாவது அக்காலத்தில் கிடைத்த வால்மீகி ஏடுகளில், ராஜகுமாரர்கள் ஜடாயுவைக் கண்ட படலம் நியூனமாக இருக்கிறதே என்று வருத்தப்பட்டு, தம்முடைய ராம கதையில் அதற்கு என்று ஒரு தனிப் படலம் கொடுத்துப் பாடி விட்டார். கம்பர் தம் கவிதா சக்தியைச் செலுத்தி நடந்ததைத் தெய்விகக் கண்ணால் கண்டு பாடியிருக்கிறார். அரண்ய காண்டத்தில் இருக்கும் 1200 பாட்டுக்களில் 350 பாடல்களைத் தான் கம்பருடைய கவிதா முத்திரையிருப்பதாக டி. கே. சி. எடுத்தார்கள். இந்த ஜடாயுவைக் கண்ட படலத்திலோ 47 பாடல்களில் 37 தேர்ந்தெடுத்திருக்கிறார். தள்ளி விட்டது மிகக் குறைவு.
ஜடாயுவைப் பார்த்ததும் இவன் ஒரு அரக்கனாக இருக்கலாம் என்று சந்தேகித்து அருகில் போய்ப் பார்க்கிறார்கள். அதே சமயம் வில் ஏந்தி மரவுரி தரித்த வீரர்களை ஜடாயுவும் உற்று நோக்கிப் பார்க்கிறான். “இவர்கள் யார், இரண்டு தேவர்களோ?” என்று அவர்கள் அழகையும் காந்தியையும் பார்த்து வியப்படைகிறான். தேவர்களை நேரில் கண்டு நன்றாகப் பழகிய ஜடாயுவே இப்படிச் சந்தேகப் படுகிறான். முடிவில் “இவர்கள் தேவர்கள் அல்ல?” என்று தீர்மானித்துக் கொள்ளுகிறான். பிறகு, “இவன் மன்மதனேயோ!” என்று ராமனைப் பற்றி எண்ணுகிறான். பிறகு இருவர் சாயலையும் நன்றாகக் கவனித்து “இவர்களைப் பார்த்தால் நண்பன் தசரதன் சாயலாகத் தோன்றுகிறது” என்று சந்தேகப்பட்டு, “நீங்கள் யார்?” என்று ராஜகுமாரர்களைக் கேட்கிறான். அவர்கள், “நாங்கள் தசரத மகாராஜாவின் குமாரர்கள்” என்று சொல்லுகிறார்கள். சொன்னவுடன் ஜடாயு கீழே இறங்கி அவர்களைத் தன் சிறகுகளைக் கொண்டு தழுவிக் கொண்டு, “அரசன் சுகமா?” என்று கேட்கிறான்.
“என்றென்றும் உலகம் மறக்காத முறையில் வாய்மையைக் காத்த தந்தை சுவர்க்கம் சென்று விட்டார்” என்று சொல்லுகிறான்.
ஜடாயு இந்தச் செய்தியைக் கேட்டதும் துயரப்பட்டு மூர்ச்சையடைந்து பிறகு ராம லக்ஷ்மணர்களுடைய கண்களினின்று பெருகிய நீர் அவன்மேல் பட்டு நினைவடைந்து பேசுகிறான்.
“தசரதன் உடலாகவும் நான் உயிராகவும் இருந்தோம். யமன் ஏன் உயிரை விட்டு விட்டு உடலைக் கொண்டு ஏகினான்? அவன் என்னையல்லவோ கொண்டு போயிருக்க வேண்டும்” என்றெல்லாம் சொல்லி ராஜகுமாரர்கள் ஒருவாறு மறந்திருந்த துயரத்தை மறுபடி எழுப்புகிறான். இறந்த தந்தையை மறுபடி அடைந்து விட்டதாகவே ராம லக்ஷ்மணர்கள் ஜடாயுவைத் தழுவி ஆறுதலும் சந்தோஷமும் அடைந்தார்கள். “எங்கள் தந்தை சத்திய நெறியை விட்டுத் தவறக்கூடாது என்கிற உறுதியில் நின்று, அதனால் சகிக்க முடியாத துன்பத்தையடைந்து உயிர் நீத்தார். எங்களைப் பெற்ற அன்னைமாரையும் ஊரையும் விட்டு நீங்கி நாங்கள் வனத்திலிருக்கிறோம். உன்னைப் பார்த்து ஆறுதல் பெற்றோம்” என்றார்கள்.
“நீங்கள் வனவாசம் பூர்த்தி செய்யுங்கள். அது வரையில் உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன். பிறகு நானும் தசரதன் இருக்கும் உலகத்துக்குப் போவேன்” என்றான் ஜடாயு.
பிறகு “தந்தை இறந்த பின் நீங்கள் அயோத்தியில் இருந்து கொண்டு நாட்டை ஆள்வதற்குப் பதில் ஏன் வனத்தில் இந்தத் தவ வேஷத்துடன் இருக்கிறீர்கள்? எந்தப் பகைவன் உங்களைக் காட்டுக்குத் துரத்தினான்? இக்ஷ்வாகு குலத்துக்கு, துரோகம் செய்த அந்தப் பகைவனை எனக்குச் சொல்லுங்கள். அவனை ஒழித்துத் தீருவேன்” என்று கோபமாகக் கேட்கிறான்.
நடந்ததையெல்லாம் லக்ஷ்மணன் சொன்னான். “என்னப்பனே! உனக்குச் சமானம் உலகில் யார்?” என்று ஜடாயு ராமனைத் தழுவிக் கொண்டான்.
பிறகு சீதையைப் பார்த்து, “இந்தத் தேவி யார்?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறான். மேலே கிளம்பிப் பறந்து அகஸ்தியர் குறித்த இடத்தை ராஜ குமாரர்களுடன் கூடவே சென்று காட்டுகிறான்.
இது கம்பருடைய சித்திரம். வால்மீகி ராமாயணத்தில் நாம் காணும் விஷயத்திலிருந்தே இப்படித்தான், கம்பர் பாடியிருக்கிறபடி, நிகழ்ந்திருக்கும் என்று எண்ண வேண்டியதாகும். விட்டுப் போனதைக் கம்பர் சொல்லி விட்டார் என்றே நாம் வைத்துக் கொள்ளலாம். கம்பர் வால்மீகியை எவ்வளவு கூர்ந்து பின்பற்றிச் செல்லுகிறார் என்பதையும் கம்பர் எவ்வளவு அழகாக உணர்ச்சி பாவத்துடன் அங்கங்கே குறைகளைப் பக்தியுடன் பூர்த்தி செய்கிறார் என்பதையும் இம்மாதிரியே பல இடங்களில் நாம் காண்கிறோம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆய்விட்டது, வால்மீகி பாடிய ராமாயணத்துக்கு. ஏடுகளுக்கு எத்தனையோ விபத்து. விட்டுப் போனதைப் பக்தர்களும் கவிஞர்களும்தான் காண்பார்கள். குறையாக இருப்பதோடு இரண்டாந்தரக் கவிகளும் சும்மா விடுவதற்கு இஷ்டப் படாமல் சேர்த்தும் இருப்பார்கள். இதற்கெல்லாம் வருந்திப் பயனில்லை. இருப்பதையாவது எல்லாரும் படிக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக