45. சூர்ப்பனகை (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பஞ்சவடியை அடைந்ததும், “பார்த்தாயா, லக்ஷ்மணா! எவ்வளவு மனோகரமான இடத்தை அகஸ்தியர் நமக்கு அமைத்துக் கொடுத்தார்!” என்று அங்கு கண்ட அழகை மெய்ம்மறந்து அனுபவித்து ராமன் பேசுகிறான்.


“நானும் நீயும் சீதையும் இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு எவ்வளவு காலமேனும் சந்தோஷமாக இருக்கலாம். மலைகளைப் பார்! அதிக தூரத்திலுமில்லை, அதிக அண்மையிலுமில்லை. மான் கூட்டங்களைப் பார். மரங்களும் மரங்களில் விளையாடும் பறவைகளின் இனிய நாதங்களும் புஷ்பங்களும் தண்ணீரும் நீர்ப் பறவைகளும் மணலும் எல்லாம் எவ்வளவு ரமணீயமாக இருக்கின்றன. இங்கே நீ ஒரு சரியான இடத்தைப் பார்த்து ஆசிரமம் அமைப்பாய்” என்று லக்ஷ்மணனுக்குச் சொன்னான்.


ஒரு இடத்தைக் கண்டு லக்ஷ்மணன் மிகச் சாமர்த்தியமாக ஆசிரமம் கட்டி முடித்து விட்டான். இங்கே வால்மீகி முனிவர் நின்று லக்ஷ்மணனுடைய சாமர்த்தியத்தையும் சுறுசுறுப்பையும் விளக்குகிறார். ஆசிரமம் கட்டினதையெல்லாம் நன்றாக விவரிக்கிறார். மண் சுவர் எழுப்பியது, மேலே கூரை பரப்பியது எல்லாவற்றையும் விஸ்தாரமாகச் சொல்லுகிறார். கட்டி முடிந்ததும் ராமன் தம்பியை அணைத்துப் பரவசமாகி, “லக்ஷ்மணா! நீயே எனக்குத் தகப்பன் ஆனாய்!” என்று சொல்லி உள்ளம் உருகி ஆனந்தக் கண்ணீர் விட்டான்.


அரண்மனையில் வசித்த இராஜகுமாரன் இதையெல்லாம் எப்படி, எங்கே கற்றான் என்று நாமும் ஆராய வேண்டும். காட்டில் சாமான்களைத் தேடியடைந்து, குடிசையைக் கச்சிதமாகக் கட்டுவதற்கு வேண்டிய அறிவும் பயிற்சியும் அந்தக் காலத்தில் அரசகுமாரர்கள் பெறும் கல்வியில் அடங்கியிருந்தன என்று கண்டு கொள்ளலாம்.

*

பஞ்சவடி ஆசிரமத்தில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனுடைய அன்புப் பணியைப் பெற்றுச் சுகமாகக் காலம் கழித்தார்கள்.


ஒரு நாள், முன் பனிப் பருவ ஆரம்பத்தில் மூவரும் அதிகாலையில் கோதாவரி நதிக்கரை நோக்கி வழக்கப்படி சென்றார்கள். குளித்து, காலை வந்தனம் முடித்துப் பாத்திரங்களைச் சுத்தி செய்து தங்களுக்கு வேண்டிய ஜலம் எடுத்துப் போவதற்காகச் சென்றார் ள். அந்தப் பருவத்தின் விசேஷங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே போனார்கள்.


மாதங்களில் மார்கழி மாதமே சிறந்தது என்பது நம் முன்னோரும் பெரியோரும் கண்ட உண்மை. லக்ஷ்மணன் பரதனை நினைத்துக் கொண்டான்.


“இந்தச் சமயத்தில் அன்புக்குரிய பரதன் விரதங்களை அனுசரித்து வருவான். எவ்வளவு சுகமாயிருக்க வேண்டியவன். நாம் வனம் சென்றுவிட்டோம் என்று தானும் கஷ்டமான விரதங்களை மேற்கொண்டிருக்கிறான். அவனை நினைக்க நினைக்க என் உள்ளம் வருத்தம் அடைகிறது. ஐயோ பாவம், சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு இந்தக் குளிர் காலத்திலும் தரையில் படுப்பான். குளிரில் சரயூ நதியில் குளிக்கப் போவான். அண்ணா! நாம் எவ்வளவு நல்ல சகோதரனைப் பெற்றோம். அவன் பேச்சு, அவன் நடை, அவன் உள்ளம் எல்லாம் எவ்வளவு சுத்தம். அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டு விட்டு நமக்காக விரத வாழ்க்கை நடத்துகிறான். அவனை நினைத்தால் மிகவும் துக்கமாக இருக்கிறது. நம் தந்தையை அவன் எல்லாவிதத்திலும் ஒத்திருக்கிறான். ஜனங்கள், தாயைப்போல் மகன் இருப்பான் என்று சொல்லுவார்கள். அது பரதன் விஷயத்தில் தவறாக இருக்கிறது. இவன் தந்தையின் சுபாவமே கொண்டிருக்கிறான். இந்தக் கைகேயி ஏன் இப்படிக் குரூர சுபாவம் பெற்றாள்? அவளுக்கு எப்படி இவ்வளவு நல்ல குமாரன் பிறந்தான்” என்று லக்ஷ்மணன் பொங்கி வந்த நினைவுகளைப் பேசிக்கொண்டே போனான்.


“தம்பி, கைகேயியைத் தூஷிக்க வேண்டாம். பரதனைப் பற்றிச் சொல். நம் தந்தையைப் பற்றிச் சொல். ஆனால், நம் சிறிய தாயாரைப் பற்றிக் குறை சொல்லவேண்டாம். பரதனைப் பற்றி நீ சொன்னதெல்லாம் உண்மை. நான் எவ்வளவு நிச்சய புத்தியுடன் ஊரை மறந்து வனவாசம் செய்தாலும், பரதன் ஞாபகமாகவே இருக்கிறது. அவனை இப்போதே பார்க்க வேண்டுமென்று ஆசையுண்டாகிறது, லக்ஷ்மணா! நாம் எப்போது அவனைப் பார்த்து மகிழ்வோம்? நாம் நால்வரும் மறுபடி எப்போது ஓரிடத்திலிருப்போம்? பரதனுடைய அமிருதம் போன்ற பேச்சு என் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.”


இவ்வாறு மார்கழி மாதத்தில் ஊரையும் பரதனையும் நினைத்துக் கொண்டு அதிகாலையில் கோதாவரியில் ஸ்நானம் செய்தார்கள். இந்தக் கட்டம் படிக்கும் போது நம்முடைய உள்ளம் கரைகிறது.


பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் பண்ணிவிட்டுச் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, மகாதேவனைப் போல் ஜடை தரித்த ராமன் தெய்விக ஒளி வீச சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் ஆசிரமம் திரும்பிப் போனான்.


காலையில் செய்யவேண்டிய காரியங்களையெல்லாம் செய்துவிட்டு விச்ராந்தியாக ஆசிரமத்தில் உட்கார்ந்து கொண்டு, புராண இதிகாசக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் ராமனுடைய முகம் சித்திரை மாதத்துப் பூரண சந்திரனைப் போல் பொலிவு பெற்றுப் பிரகாசித்தது. பேசிக்கொண்டிருந்த கதையில் மனம் லயித்திருந்த அந்தச் சமயம் திடீர் என்று ஒரு ராக்ஷஸ ஸ்திரீ அங்கே வந்து சேர்ந்தாள். அவள்தான் சூர்ப்பனகை, ராவணனுடைய சகோதரி.


தேவலோக வாசி ஒருவனைப் போல் அழகில் வடிவம் கொண்ட ராஜகுமாரனை அவள் பார்த்தாள். அவலக்ஷணமே உருக்கொண்ட அந்த அரக்கி மன்மதனுடைய அழகு பெற்ற ராமசந்திரனைப் பார்த்ததும் காம பரவசமாகிப் போனாள். மகா விகாரமான அவள், காமத்தால் பீடிக்கப்பட்டுப் பேச ஆரம்பித்தாள்.


“தவம் செய்பவர்களைப் போல் ஜடை தரித்துக் கொண்டு, மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராக்ஷசர்களுடைய காட்டுக்கு வந்திருக்கும் நீ யார்? எதற்கு வந்திருக்கிறாய்? உண்மையைச் சொல்வாய்!” என்றாள்.


இத்தகைய சந்தர்ப்பங்களில் தன் பெயர், ஊர், சரித்திரம் முழுதும் சரியாகச் சொல்லிவிட்டு, கேட்டவருடைய குலம், காரியம் ஆகியவற்றைக் கேட்பது அக்காலத்துப் பண்பாடு. அந்தப் பாண்பாட்டில் பழகின ராமன், “தேவர்களுக்குச் சமானமான சௌரியம் பொருந்திய தசரத மகாராஜனுடைய மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். இவன் என் தம்பி லக்ஷ்மணன். இவள் என் மனைவியாவாள். இவள் பெயர் சீதை. என் தாயும் அரசனான தந்தையும் சொல்லியனுப்பியபடி தருமத்தை விரும்பி இந்தக் காட்டில் வனவாசம் செய்ய இங்கே வந்திருக்கிறேன். தயவு செய்து சொல்வாய், நீ யார்? எந்தக் குலம்? உன் சொரூபத்தைப் பார்த்தால் ராக்ஷஸப் பெண் என்று தோன்றுகிறது. இவ்விடம் என்ன காரியம் பற்றி வந்தாய்? சரியாகச் சொல்வாய்” என்றான்.


“ராவணனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? விச்ரவஸனுடைய வீர புத்திரனும் ராக்ஷஸர்களுடைய அரசனுமான அந்த ராவணனுடைய சகோதரியாவேன் நான். என் பெயர் சூர்ப்பனகை. ராவணனுடைய சகோதரர்களான கும்பகர்ணனும் விபீஷணனும் மகா பலவான்கள். தவிர இக்காட்டில் அரசு புரியும் கரனும் தூஷணனும் என் சகோதரர்கள். இவர்களுடைய தேக பலமும், அதிகாரமும் பெரிது. ஆனால் நான் அவர்களுக்கு உட்பட்டவள் அல்ல. என்னிஷ்டப்படி எதையும் செய்வேன். இந்த வனத்தில் என்னைக் கண்டு யாரும் பயப்படுவார்கள். உன்னைக் கண்டது முதல் உன் மேல் அடங்காத காதல் கொண்டு விட்டேன். நீ தான் என் கணவன். ஏன் இந்தச் சிறு பூச்சியைப் போன்ற ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு அலைகிறாய்? காட்டில் உனக்குத் தகுந்த மனைவி நான் தான். என்கூடச் சேர்ந்து எங்கும் சஞ்சரித்து சந்தோஷமாக இருப்பாய். நான் எந்த வடிவத்தையும் எடுப்பேன். பயப்படாதே! இந்தப் பெண்ணையும் உன் தம்பியையும் உடனே தின்று முடித்து விடுவேன். வா, என்கூட! தயங்க வேண்டாம்” என்று காமத்தால் பீடிக்கப்பட்டு ராக்ஷஸ ஜாதியின் பண்பாட்டின்படி பிதற்றினாள்.


ராமனுக்கு இந்த அரக்கியின் காம விகாரமும் நடவடிக்கையும் பேச்சும் ஒரு விநோதமாக இருந்தது. சிரித்துவிட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தான்;


“அழகியே, என்னைக் குறித்து நீ ஆசைப்படுவது உனக்குத் துன்பமாகும். இந்தப் பெண், என் மனைவியானவள், கூட இருக்கிறாள். இரண்டு மனைவிகள் வியாபாரம் தொந்தரவுக்கு இடமாகும். இது உனக்குத் தெரியுமல்லவா? இதோ இருக்கிறான் என்னுடைய தம்பி. தனியாக இருக்கிறான். அழகிலும் பலத்திலும் எனக்குச் சமம். இவன் உனக்குத் தகுந்த புருஷன். இவனைக் கேட்டுப் பார். என்னை விட்டு விடு” என்றான்.


மேல் நடக்கவேண்டியதை லக்ஷ்மணன் பார்த்துக் கொள்ளுவான் என்று இவ்வாறு ராமன் சொன்னான். அரக்கியும் ராமன் சொன்னபடி அவனை விட்டு விட்டு ராமனுடைய அழகுக்குக் குறையாத லக்ஷ்மணனை வரித்துப் பேச ஆரம்பித்தாள். “வீரனே!. வா என்னுடன். இருவரும் இந்த தண்டகாரண்யத்தில் சந்தோஷமாகக் கூடிக் குலாவித் திரியலாம்” என்றாள்.


லக்ஷ்மணனும் அண்ணன் ராமனுடைய பரிகாசத்தில் சேர்ந்து கொண்டு, “பைத்தியக்காரி, ஏமாந்து போகாதே! நீ யார்? நான் யார்? நான் அண்ணனுக்கு அடிமையாக இங்கே இருக்கிறேன். நீயோ அரச குமாரத்தி, ஓர் அடிமையைக் கட்டிக் கொண்டு அடிமைக்கு அடிமையாக நீ வாழலாமா? ஏமாந்து போகாதே! என் அண்ணன் ராமனுக்கு இரண்டாம் தாரமாக அமைவதே மேலானது. இந்தச் சீதைக்காக நீ பயப்பட வேண்டியதில்லை. ராமனுடைய காதல் உன் பேரில்தான் வேகம் கொள்ளும், சீதையை அலட்சியம் செய்து விடுவான். நீ சுகமாக இருக்கலாம் நீ” என்றான்.


ஒரு பெண்ணை, அதிலும் காதல் கொண்ட பெண்ணை, இப்படியெல்லாம் வேதனை செய்யலாமா என்று சில மேதாவிகள் கேட்கலாம். எதிரில் ஒரு விகார மிருக சொரூபத்தை வைத்துக் கற்பனைச் சக்தியைப் பயன்படுத்தினால் அவ்வாறு கேட்க மாட்டார்கள்.


பிராகிருத கிராமிய வேகத்தால் பீடிக்கப்பட்ட அரக்கி லக்ஷ்மணனுடைய பேச்சை அப்படியே எடுத்துக் கொண்டு மறுபடியும் ராமனிடம் சென்று பக்கத்திலிருந்த சீதையைப் பார்த்தாள்.


“இந்தப் பூச்சியல்லவா எனக்கும் உனக்குமிடையில் தடையாக இருக்கிறாள். வயிறு ஒட்டிப் போய்க் கிடக்கும் இவள் மேல் உனக்கு ஒரு மோகமா? இதோ, இவளை இந்தக் கணம் முடித்து விடுகிறேன். உன்னை அடையாமல் நான் உயிருடன் இருக்க முடியாது. இவளை இப்போதே ஒழித்து விடுகிறேன். பிறகு நீ என்னுடன் சந்தோஷமாகச் சேருவாய்” என்று சொல்லி அந்த அரக்கி சீதையின் மேல் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தாள்.


அந்தச் சமயம் ராமன் இடையில் புகுந்ததால் சீதை தப்பினாள். வேடிக்கை வலுத்துப் போயிற்று என்று எண்ணி ராமன், “லக்ஷ்மணா! இவளைப் பார்த்துக் கொள்! சீதை எப்படியோ தப்பிப் பிழைத்தாள். இந்த அரக்கிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்” என்றான்.


சீதையைத் தாக்கிக் கொல்லப் போன அரக்கியை உடனே லக்ஷ்மணன் கத்தியை எடுத்து, அவளை அங்கவீனம் செய்து விட்டு, “சீ! போ!” என்றான்.


அவமானப்பட்டு ரத்த காயமடைந்த அரக்கி பெருங்குரலில் வீறிட்டு அழுது கொண்டு வனத்துக்குள் மறைந்தாள்.

*

ரத்தம் பெருக நேராக ஓடிப் போய் சூர்ப்பனகையானவள் கரன் இருந்த இடம் சென்று அவன் முன்னிலையில் ஆகாயத்திலிருந்து இடி விழுவது போல் “ஐயோ!” என்று அலறி விழுந்தாள்.

அரக்கர்கள் சூழ அமர்ந்திருந்த ராக்ஷஸத் தலைவனான கரன், “என்ன செய்தி?” என்று விசாரித்தான்.


“என்னைப் பார்! இந்த அநியாயத்தைச் செய்த ராமனும் லக்ஷ்மணனும் இந்தக் காட்டில் வசிக்கிறார்கள். நீயும் இருக்கிறாய்!” என்றாள்.


கரன் எழுந்து, “தங்காய்! என்ன இது? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புத்தி சுவாதீனம் செய்து கொண்டு விவரமாகச் சொல். யார் உனக்கு இந்த அங்கவீனம் செய்யத் துணிந்தது? இந்த வனத்தில் என் கோபத்துக்கு ஆளானது யார்? எவன் காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக விரும்பி உன்னை இப்படி அவமதித்தான்? சும்மா இருந்த கிருஷ்ண சர்ப்பத்தை யார் கால் விரலால் குத்தினது? அந்த மடையன் யார்? எங்கே? எல்லாம் விவரமாகச் சொல். இதோ அவன் மடியப் போகிறான்! அவன் ரத்தத்தை மண் உறிஞ்சிக் குடிக்கப் போகிறது. எழுந்து, நின்று நடந்ததைச் சரியாகச் சொல்!” என்றான்.


சூர்ப்பனகை சொன்னாள்:


“இரண்டு அழகிய மனிதர்கள் தசரதன் குமாரர்களாம், தவ வேஷம் பூண்டு ஒரு பெண்ணுடன் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணைக் காரணமாக வைத்துக் கொண்டு என்னைத் தாக்கி இந்த அக்கிரமம் செய்து விட்டார்கள். இந்தத் துஷ்டர்களின் ரத்தத்தைக் குடிக்க ஆசைப்படுகிறேன். இவர்களை நீ வதம் செய்வாய். இதை நீ முதலில் செய்ய வேண்டும் தம்பி, பிறகு வேறு வேலை” என்றாள்.


கரன் உடனே தன் சேனாபதிகளுக்கு உத்தரவிட்டான். “இந்தக் கணம் சென்று அந்த இரு துஷ்டர்களையும் கொன்று, அவர்கள் பிரேதங்களை இவ்விடம் கொண்டு வாருங்கள். இவள் சொல்லும் பெண்ணையும் இழுத்து வாருங்கள். தாமதிக்க வேண்டாம்!” என்றான்.


பதினான்கு சேனாதிபதிகளும் உடனே புறப்பட்டார்கள்.


கம்பருடைய ராமாயணத்தில் காதல் கொண்ட சூர்ப்பனகை ஒரு அழகிய மானிடப் பெண்ணின் வடிவம் பூண்டு ராமனை வரித்ததாகவும் அதன் பேரில் நிகழ்ச்சிகள் தனிப் போக்கில் சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. சூர்ப்பனகை நிகழ்ச்சியைக் கம்பர் வால்மீகியை விட்டுத் தனிப் போக்கில் கொண்டு போயிருக்கிறார். கம்பராமாயணத்தில் இது ஒரு அழகான கட்டம். ராமசந்திரனைப் பற்றி “இவன் பெண்ணைக் கொன்ற வீரன், காமம் வீரன், காமம் மேலிட்டு அணுகிய ஒரு ஸ்திரீயை இவன் அவமதித்து ஹிம்சை செய்தான், மறைந்து நின்று வாலியைக் கொன்றான், எதிர்த்து நின்று அவனிடம் தோல்வி பெறத் துணியவில்லை. சீதையை அக்கிரமமாகக் காட்டுக்கு அனுப்பினான். அக்கிரமம் அல்ல என்றால் சீதையை அவன் சந்தேகப் பட்டான் அல்லவா? அவளுடைய சீலம் எமக்கும் ஐயமே” - இவ்வாறும் இன்னும் பலவிதத்திலும் அசூயையில் பிறந்த விமரிசனங்களில் இறங்கிச் சிலர் களிப்படைவதைக் காண்கிறோம். அறிவுக்கும் விமரிசன சாமர்த்தியத்துக்கும் நாட்டில் குறைவில்லை. அன்பும் ஆர்வமும் கலந்த சுத்த அறிவு காணவில்லை. ராமனுடைய குணத்தில் குற்றம் தேடுவோர்கள் தேடுக. ராமனைவிட நல்ல முறையில் தருமத்தைக் கைப்பிடித்துத் தாங்கள் காட்டும் குறைவுகளின்றித் தங்கள் வாழ்க்கையை நடத்த முயல்வார்களானால் பிழைத்த ராமனுடைய ஆன்மாவும் ராம பக்தர்களுடைய உள்ளமும் பெருமகிழ்ச்சி அடையும். ராமனுடைய நற்குணங்களை விட்டுவிடாமல் ராமனிடம் கண்ட குறைகளைத் தாம் அகற்றினால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத ராமாயணம்! - பி.என்.பரசுராமன்

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி