46. கம்ப சித்திரம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

தோட்டத்தில் மேய வந்த ஒரு கழுதையைத் தடியாலடித்து ஓட்டுவது போல் சூர்ப்பனகையைத் துரத்தி விட்டார்கள். வால்மீகி இந்த நிகழ்ச்சியை வெகு சுருக்கமாகச் சிக்கல் ஒன்றுமின்றி எழுதி விட்டார்.

கம்பர் இந்தச் சங்கதியை அவ்வளவு சுலபமாக முடித்துவிடவில்லை. சூர்ப்பனகை பட்ட பாட்டை ஒரு பெரிய தனி நாடகமாக்கி அதில் எல்லாவித ரஸங்களையும் தீட்டி விட்டிருக்கிறார். சூர்ப்பனகைப் படலம் கம்ப ராமாயணத்துக்குள் ஒரு தலைசிறந்த படலம்; அதன் அலங்கார அழகுகளை நண்பர்களுக்கு எடுத்துக் காட்டுவதில் டி.கே.சி. அவர்கள் தெவிட்டு அடைய மாட்டார்.

*

ஆற்றங்கரைப் படுகையில் ராமன் உட்கார்ந்து கொண்டு அங்கு ஓர் அன்னம் மெள்ள நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுச் சீதையைப் பார்த்தான். அவளும் நடந்து கொண்டிருந்தாள். இரண்டு நடையும் ஒன்று போலிருந்ததைக் கண்டு ஒரு புது மகிழ்ச்சி உண்டாகி, அந்த மகிழ்ச்சி ராமன் முகத்தில் ஒரு புன்முறுவலாயிற்று. அதற்குப் போட்டியாக தேவியும் அவ்விடம் கொஞ்ச தூரத்தில் ஒரு யானை வந்து தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பிப் போய்க் கொண்டிருந்ததை நோக்கி அவளும் தன் கணவன் அழகை நினைத்துப் புன்னகை பூத்தாள். இவ்வாறு பஞ்சவடி ஆற்றங்கரையில் பகவான் கண்ணன் சொன்னபடி “தருமத்துக்கு விரோதப்படாத துறையில்” காதல் உணர்ச்சி சென்று கொண்டிருந்த சமயத்தில் விதியின் சூழ்ச்சியானது சூர்ப்பனகையை, தன் பாட்டுக்குக் காட்டில் திரிந்து கொண்டிருப்பவளை அதைவிட்டு, ராமனண்டை போகச் செய்தது. 


“வைகலும் தமியள் அவ் வனத்துள் வைகுவாள், 

நொய்தின் இவ் வுலகெலாம் நுழையும் நோன்மையள், 

வெய்யதோர் காரணம் மேவி உண்மையின், 

எய்தினள் இராகவன் இருந்த சூழல்வாய்.”


அரக்கர்களைத் தீர்ப்பதற்கென்றே பாற்கடலை விட்டுத் தசரதன் மகனாக வந்த ஆண்டவனைக் கண்டவுடன், சூர்ப்பனகை, “இந்த அழகிய உருவம் மன்மதனா, இந்திரனா, மகாதேவனா, மகாவிஷ்ணுவா!” என்று யோசித்தாள். “மன்மதனுக்கு உடலில்லையே, இந்திரனுக்கு ஆயிரம் கண்களாயிற்றே, மகாதேவனுக்கு நெற்றியில் ஒரு கண்ணுண்டே, இவனுக்குக் கைகள் நான்கு இல்லையே, இவன் இந்திரனுமல்ல, பரமசிவனுமல்ல, விஷ்ணுவுமல்ல, ஒரு வேளை பரமசிவனால் சாம்பலாகிய மன்மதன்தான் தவம் செய்து மறுபடி உடல் சம்பாதித்திருக்கிறானோ” என்று ஆலோசித்தாள்,


“கற்றயஞ் சடையவன் கண்ணிற் காய்தலால்

இற்றவன் அன்றுதொட்(டு) இன்று காறுந்தான் 

நற்றவம் இயற்றி அவ் அனங்கன் நல்உருப்

பெற்றன னாம்எனப் பெயர்த்தும் எண்ணுவாள்.”


“இந்த அழகான புருஷன் ஏன் வீணாகத் தன் உடம்பை வருத்திக் கொண்டு விரதம் நோற்கின்றான்? செந்தாமரை போன்ற கண்களையுடைய இவன் ஏன் தவம் செய்துகொண்டு காலத்தை வீணாக்குகிறான்?” இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு ராமனைப் பார்த்து நின்றாள். கண்களை அதை விட்டு வேறு பொருளின் மேல் செலுத்த முடியாமல் நின்றாள். என்ன செய்வது என்று யோசித்தாள். “இவன் என் உருவத்தைக் கண்டு என்னை வெறுப்பான். நான் மாறு வேஷம் போட்டுக் கொண்டு இவனண்டை போகவேண்டும்” என்று எண்ணினாள். மாயத்தால் தன்னுடைய அரக்கி உருவத்தை மறைத்துக்கொண்டு மிகச் சுந்தர வடிவம் எடுத்துக் கொண்டாள். “குயில் தொடர் குதலை” மொழியும் “கொவ்வைச் செய்ய” வாயும் “மயில் தொடர் இயலி” யாய்த் தன்னை மாற்றிக்கொண்டு,


“திங்களில்ச் சிறந்தொளிர் முகத்தள் செவ்வியள்,

பொங்கொளி விசும்பினில்ப் பொலியத் தோன்றினாள்.”


தேவலோகத்துக் கற்பக மரத்தில் ஏறி வளர்ந்த ஒரு பொன் கொடியைப் போன்ற மேனியும் காம வெறியூட்டும் இதழ்களும் முத்துக்களைப் போன்ற பற்களும் மான் விழியும் கொண்டு “மயில் வந்ததென” வந்தாள். நூபுரமும் மேகலையும் செய்த ஒலியானது ஒரு பெண் வருவதை ராஜகுமாரனுக்குத் தெரிவித்தது.


ராமன் பார்த்தான். எல்லை கடந்த அழகைப் பெற்ற ஒரு ஸ்திரீ வந்து நிற்பதைக் கண்டான். ராமனுடைய பாதங்களைத் தொட்டுப் பணிந்தாள். பிறகு சிறிது நாணத்தோடு எட்டி நின்றாள்.


'”உம் வரவு நல்வரவு ஆகுக. வெகு தூரத்திலிருந்து வந்திருக்க வேண்டும். உம் ஊர் எது? உம் பெயர் என்ன? உம் உறவினர் யார்?” என்று ராமன் கேட்டான்.


“நான் பிரும்மாவின் பேரனுக்குப் புதல்வி. குபேரனுடைய தங்கை. வெள்ளி மலையை எடுத்த ராவண மன்னனுக்கு உடன் பிறந்தவள். காமவல்லி என்ற கன்னி” என்று கூறினாள்.


“என்ன காரியத்தை உத்தேசித்து இங்கே வந்தது?” என்றான்.


“பெண்கள் தங்களுடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொள்வதற்கில்லை. ஆயினும் நான் சொல்லுகிறேன். காமதேவன் என் உள்ளத்தைத் துன்புறுத்துகிறான். நீ என்னைக் காக்க வேண்டும்” என்றாள்.


ராமனுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. அவள் மேலும் சொல்லிக் கொண்டு போனாள்:


“என்னைக் கந்தர்வ விவாக முறையில் மனைவியாக்கிக் கொள்வாய். அந்த முறை 'காதலில் கலந்த சிந்தை கொண்ட மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்துக் கூறும்.' இது நடந்து விட்டால் எனக்குச் சந்தோஷம் தருவதுடன் என் அண்ணன் ராவணனுக்கும் உனக்கும் நல்ல சிநேகம் ஏற்பட்டுப் போகும். இந்த வனத்தில் நீ தனியாக இருக்கிறாய். ராக்ஷஸர்கள் உன்னைத் துன்புறுத்துவார்கள். நீ முனிவர் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதால் காரணமின்றியே அவர்கள் உன்னைத் தொந்தரவு செய்வார்கள். நீ என்னை உடனே மணந்து விட்டால் அந்த அபாயம் நீங்கும். அது மாத்திரம் அல்ல. அதன் பயனாக அந்தப் பலவான்கள் உன்னுடைய வேலைகளையெல்லாம் செய்யத் தயாராக இருப்பார்கள். இதை யோசிப்பாயாக” என்று நீதி சாஸ்திரத்தையொட்டிச் சொன்னாள் சூர்ப்பனகை.


ராமன் பெருஞ் சிரிப்புச் சிரித்தான். 


“அரக்கர்களுடைய கருணையையும் ஒரு அழகிய புது மனைவியையும் நான் பெற்றுவிடுவேன் அல்லவா? உன்னோடு சுகமாக எங்கு வேண்டுமானாலும் உல்லாசமாகத் திரியும் சௌகரியத்தையும் பெறுவேனல்லவா? மிகச் சரி! அயோத்தியைவிட்டு நீங்கி நான் செய்த தவம் இன்று நல்ல பயன் தந்தே விட்டது!” என்று சொல்லித் தன் வெண்மையான பற்கள் விளங்க வாய் திறந்து சிரித்தான் ராமன்.


ஜானகி இந்தச் சமயத்தில் செடிகளுக்கிடையில் வந்து கொண்டிருந்தாள்.


லக்ஷ்மி தேவியே இந்தப் பூமியில் அவதரித்த பூங்கொடி போன்ற சீதை ராமனிருந்த இடம் வந்து கொண்டிருந்ததை சூர்ப்பனகை பார்த்தாள். சீதையின் அழகைக் கண்டு வியந்தாள்.


காமத்தால் பீடிக்கப்பட்ட அரக்கிக்கு ஒரு யோசனை தோன்றிற்று.


“இதோ வருகிறாளே இந்தப் பெண், இவள் ஒரு மாயவித்தை செய்யும் ராக்ஷஸ ஸ்திரீ. இவள் உன்னை ஏமாற்றுவாள். ஜாக்கிரதை! இவள் உருவம் இதுவன்று. இவள் பச்சை மாமிசம் தின்னும் அரக்கி. இவளைத் தூரத் தள்ளு” என்றாள்.


ராமன் மறுபடி சிரித்தான். “நீ எவ்வளவு அறிவாளி! இவளை நீயல்லவா சரியாகக் கண்டுகொண்டாய்” என்றான்.


இதற்குள் சீதை ராமன் பக்கத்தில் வந்துவிட்டாள். சூர்ப்பனகைக்கு ராமனுடைய பரிகாசம் தெரியவில்லை. அவளுடைய காம வேதனை அவளுடைய மூளையை முற்றிலும் அழித்துவிட்டது. சீதையைப் பார்த்துச் சீறினாள்:


“நீ ஏன் இந்த வீரனண்டை வருகிறாய், அரக்கி?” 


நீயிடை வந்ததென்னை, நிருதர்தம் பாவை!


என்று கோபத்தோடு, “தூரப்போ!” என்று அதட்டிச் சொன்னாள்.


சீதை இதுவென்ன விபரீதம் என்று ஒன்றும் விளங்காமல் நடுங்கி, மேகத்தை மின்னற் கொடி தழுவுவது போல் சக்கரவர்த்தித் திருமகனுடைய தோளைத் தழுவிக் கொண்டாள்.


விளையாடியது இனிப் போதும் என்று சூர்ப்பனகையைப் பார்த்து, “நங்காய், இனி நிறுத்து, என் தம்பி இருக்கிறான். உன் விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டால் அவன் கோபித்துக் கொள்வான். அவன் பெருங் கோபக்காரன். என்ன நடக்குமோ எனக்குத் தெரியாது. சீக்கிரம் நீ வந்த வழியே திரும்பிப் போய்விடு!” என்றான்.


இதைச் சொல்லி ராமனும் சீதையும் பர்ணசாலைக்குள் போய்விட்டார்கள்.


இதன் பின் அரக்கிக்குக் காதல் வெறி அதிகமாகி விட்டது. இரவு எப்படியோ எங்கேயோ கழிக்கிறாள். விடிந்தவுடன் யோசனை செய்கிறாள்:


“இவனை அடையாவிட்டால் என் உயிர் போகும் போலிருக்கிறது. இந்தப் பெண் ஒருத்தி இருக்கும் வரையில் இவன் என்னைத் தீண்டப் போவதில்லை. இவளை நான் எப்படியாவது தூக்கிக் கொண்டுபோய் ஒளித்து வைத்து, பிறகு இவனுடைய காதலைப் பெற வேண்டும்” என்று தீர்மானித்து அதிகாலையில் ஆசிரமத்துக்குள் நுழைந்தாள். ராமன் தடாகத்தண்டை சந்தி உபாசனையிலிருந்தான். சீதை ஆசிரமத்திலிருந்தாள். தனியாக இருந்தாள். இவளைத் தூக்கிப் போக இதுதான் சமயம் என்று எண்ணினாள். அண்டையில் சோலையில் லக்ஷ்மணன் இருப்பதைப் பார்க்கவில்லை.


“வந்து நோக்கினள், வள்ளல்போய் ஒருமணித் தடத்துச் 

சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள்; தம்பி 

இந்து நோக்கிய நுதலியைக் காத்(து)அயல் இருண்ட 

கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள்.”


“தனிஇ ருந்தனள், சமைந்த(து) என் சிந்தனை தாழ் உற்(று) 

இனி இருந்தெனக்(கு) எண்ணுவது இல்' என எண்ணாத் 

துனிஇ ருந்தவல் மனத்தினள் தோகையைத் தொடர்ந் தாள்; 

கனிஇ ரும்பொழில்க் காத்தயல் இருந்தவன் கண்டான்.” 


லக்ஷ்மணனுக்குச் சீதை மேல் யாரோ ஒருத்தி பாய்ந்ததாகத் தெரிந்தது. “நில்!” என்று சப்தம் போட்டுப் பாய்ந்தான். மயிரைப் பிடித்து உதைத்து வாள் உருவினான். அரக்கி தன்னுடைய பருத்த உருவத்தைக் கொண்டு லக்ஷ்மணனைத் தாக்கி ஆகாயத்தில் கிளம்பிப் போகப் பார்த்தாள். லக்ஷ்மணன் அவளை எளிதில் பிடித்துத் தள்ளி அங்கவீனம் செய்துவிட்டு, “துஷ்டை, ஜாக்கிரதை!” என்று எச்சரித்து, “போ” என்று துரத்திவிட்டான்.


சூர்ப்பனகை அப்போது தன் உண்மை உருவத்தோடு இரத்தப் பெருக்காக ஓடித் தன் இனத்தாரைப் பெயரிட்டுச் சொல்லிப் பலமாகப் புலம்பினாள்.


“உரம்நெறிந்து விழ, என்னை உதைத்துருட்டி மூக்கரிந்த 

நரன்இருந்து தோள்பார்க்க, நான்கிடந்து புலம்புவதோ 

கரன்இருந்த வனம்அன்றோ; இவைபடவும் கடவேனோ! 

அரன்இருந்த மலைஎடுத்த அண்ணாவோ! அண்ணாவோ!” 


“ஓ தம்பி கரனே, ஓ அண்ணா ராவணனே, ஓ இந்திரஜித்தே!”


“தானவரைக் கருஅறுத்துச், சதமகனைத் தளையிட்டு,

வானவரைப் பணிகொண்ட மருகாவோ! மருகாவோ!


“கல்லீரும் படைத்தடக்கை அடல்கரதூ டணர்முதலா 

அல்லீரும் சுடர்மணிப்பூண் அரக்கர்குலத்(து) அவதரித்தீர்! 

கொல்லீரும் படைக்கும்ப கருணனைப்போல் குவலயத்துள் 

எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ?” 


என்று அரக்கிக்கு உள்ள பலமான தொண்டையைச் செலுத்திப் புலம்பினாள்.


இது கம்பருடைய சித்திரம். சூர்ப்பனகை ராக்ஷஸப் பிறப்பை மறைத்துக் கொண்டு, ஒரு அழகிய பெண்ணுருவம் தரித்து, ராமனை வரித்தாள் என்பது கம்பருடைய கைவண்ணம். அதன் மேல் கவியின் சக்தி தன் பாட்டுக்கு வேலை செய்கிறது. வால்மீகி ராமாயணத்திலும் சூர்ப்பனகை "காமரூபிணி" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இஷ்டப்பட்ட வடிவத்தை எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவள். ராமனைக் கண்டு மோகித்ததும், இந்தச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டதும் இயற்கை நிகழ்ச்சியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத ராமாயணம்! - பி.என்.பரசுராமன்

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி