43. பத்து ஆண்டுகள் கழிந்தன! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)
இப்போது ஆரம்பிப்பது அரண்ய காண்டம். சீதைக்கு ஏற்படப்போகும் விபத்துக்கு, கவி நம்மை ஆயத்தப்படுத்துகிறார். தண்டகாரண்யத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு ஒரு புதுக்கடமை ஏற்பட்டு விட்டது; ரிஷிகளைத் துன்புறுத்தும் அரக்கர்களைக் கொல்லும் கடமை. வரப்போகும் கஷ்டத்தின் சூசனையாகச் சீதையின் மனத்தில் ஒரு பயம் தோன்றிற்று.
“வனவாசத்தில் இந்த க்ஷத்திரிய காரியத்தைத் தாபசிகளான நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? நாம் வந்தது தந்தையின் ஆணையை நிறைவேற்ற, அவர் வாக்கைச் சத்திய வாக்காகச் செய்வதற்காக வனவாசம் வந்தோம். ரிஷிகளைக் காப்பாற்றும் கடமை நாட்டையாளும் அரசனுடையது. மக்களைத் தொந்தரவு படுத்தும் ராக்ஷசர்களைத் தண்டிப்பது பொதுவாக க்ஷத்திரிய தருமமானாலும், அது சிம்மாசனம் ஏறிய அரசனுடைய கடமை. நாமோ தவமிருக்க வந்திருக்கிறோம். அரக்கர்களைக் கொன்று ரிஷிகளைக் காப்பது நம்முடைய கடமையாகாது. நம்மை எதிர்க்க வராதவர்களைக் கொல்லுவது வனவாச விரதத்துக்கும் விரோதமாகும். இங்குள்ள ரிஷிகளுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுத்து விட்டீர்கள். 'ரிஷிகளைத் தொந்தரவு செய்யும் அரக்கர்களை நான் வதம் செய்வேன்' என்று பிரதிக்ஞை செய்து விட்டீர்களே? இது நம்மை எங்கே கொண்டுபோய் விடுமோ, தெரியவில்லை.”
இவ்வாறு சீதை ராமனுடன் பிரியமான மொழிகளில் வாதம் செய்தாள். சுதீக்ஷண முனிவருடைய ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு தண்டகாரண்யத்திலுள்ள மற்ற ரிஷிகளுடைய ஆசிரமங்களுக்குப் போகும் போது இதைப்பற்றிப் பேசிக்கொண்டே சென்றார்கள்.
“என் நாதனே! எதிர்த்துப் பேசுகிறேனே என்று கோபிக்க வேண்டாம். பெண்ணாகிய எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். எது தருமம் எது கடமை என்பது உங்களுக்குத் தெரியும். ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். ஆசையினால் தூண்டப்பட்டு மக்கள் செய்யும் பெரும் பாவங்கள் மூன்று என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். பொய் பேசுவது, பர ஸ்திரீயைத் தீண்டுவது, நம்மை 'எதிர்த்துத் தீங்கு செய்யாதவர்களைத் துன்புறுத்துவது. இம்மூன்றில் பொய் என்பது உங்களிடம் அண்டாது. சத்தியத்தைக் காக்க ராஜ்யாதிகாரத்தையும் போகங்களையும் விட்டு விட்டு இங்கே வனவாசம் செய்கிறீர். என் பிரிய நாதனே! பரஸ்திரீயை மனத்தில்கூட நினைக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியுமல்லவா ? இப்போது நான் பயப்படுவது மூன்றாவது விஷயத்தைப் பற்றித்தான். அதாவது நம்மை எதிர்க்காத ஒருவனை நாம் வதம் செய்யலாமா என்பது. ராக்ஷசர்களாயினும் யாராயினும் நம்மை எதிர்க்க வராதவர்களை நாம் ஏன் கொல்ல வேண்டும்? அவசரப்பட்டு இந்த வனத்தில் வசிக்கும் முனிவர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. தீயவர்களை அழிப்பது க்ஷத்திரிய தர்மமே. ஆனால் நாம் வனவாசத்தில் அந்தத் தர்மத்தை அனுசரிப்பது சரியல்ல. அரச பதவியிலிருப்பவர்களுக்கல்லவா அந்தக் கடமை சேர்ந்தது? மரவுரி உடுத்தித் தலைமயிரை ஜடையாக்கி, விரத வேஷம் பூண்ட உங்களுக்கு இந்தக் கடமை எப்படி ஏற்படும்? இது வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றில்லை. என் அபிப்பிராயத்தைச் சொன்னேன். யோசித்துச் செய்யவும்” என்றாள் ஜானகி.
இவ்விதம் சந்தேகப்பட்டுப் பேசிய சீதையிடம் ராமனுக்குள்ள பிரியமும் மதிப்பும் முன்னைவிட அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.
“காதலி! ஜனகர் மகள் அல்லவா நீ? ஆனபடியால் இத்தகைய உயர்ந்த லக்ஷ்யம் கொண்ட பேச்சைப் பேசினாய். சீதையே, நீயே சொன்னாயல்லவா, க்ஷத்திரியர்கள் தரிக்கும் ஆயுதம் பிறரை ரட்சிப்பதற்காகவென்று? கஷ்டப்பட்டு ஜனங்கள் அழுதால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா ஒரு க்ஷத்திரியன் எப்படி இருக்கலாம்? இங்கே நாம் வந்தவுடன் என்ன கேட்டோம்? இந்த முனி சிரேஷ்டர்கள் தங்களுடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டு, 'நாதனே, நீயும் உன் தம்பியும் எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று முறையிட்டார்கள். இந்த வனத்தில் தவம் செய்து கொண்டிருக்கிற ரிஷிகளைக் கொன்று தின்று வரும் இந்த ராக்ஷசர்களுடைய இம்சையைப் பொறுக்க முடியாமல் முறையிட்டார்கள் ‘எலும்புக் குவியலைப் பார்’ என்று அவர்கள் எனக்குக் காட்டினார்கள்.
எந்தை! மற்(று)யாருளர் இடுக்கண் நீக்குவார்
வந்தனை யாம்செய்த தவத்தின் மாட்சியால்'
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளிடை வைகினேம் இரவி தோன்றினாய்
அருளுடை வீரநின் அபயம் யாம்
“ஆயுதம் தரிக்கும் ராஜகுமாரர்களாகிய நாம் இந்தப் புலம்புதலைக் கேட்டுச் சும்மா இருக்கமுடியுமா? அரசனுடைய கடமையாயினும் க்ஷத்திரிய குலத்தின் கடமையுமாகும். என்னுடைய நன்மையை உத்தேசித்து நீ சொன்னாய். நீ சொன்னது சரியே என்று வைத்துக் கொண்டாலும் நான் வாக்குக் கொடுத்து விட்டேன். 'நீயே சரணம்!' என்றார்கள். நானும் 'உங்களைக் காப்பேன்' என்று சொல்லிவிட்டேன். இவ்வாறு பிரதிக்ஞை முடிந்து போயிற்று. இனி அதைப் பொய்யாக்க முடியுமா? நான் பொய்யனாகப் போனால் நீ பார்த்துச் சகிப்பாயா ? 'என்ன கஷ்டம் வந்தாலும் நான் காப்பாற்றுகிறேன்' என்று சொல்ல வேண்டிய சொல் சொல்லியாகிவிட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது என் கடமை. சக தரும சாரிணியான உன்னுடைய தருமமும் ஆகும். நீ வேறு நான் வேறு அல்லவே!” என்றான் ராமன்.
இப்படியாக அவர்கள் பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.
இவையெல்லாம் மழைக்கு முன் வரும் காற்றைப் போல் நடக்கப் போகும் அனர்த்தங்களுக்குச் சூசனையாகக் கவி அமைத்திருக்கிறார். பக்கம் நிரப்புவதற்கல்ல.
*
தண்டகாரண்யத்தில் ரிஷிகளினிடையில் பத்து வருஷங்கள் ராம லக்ஷ்மணர்களும் சீதையும் யாதொரு கஷ்டமுமில்லாமல் கழித்தார்கள்.
தண்டகாரண்யப் பெருங்காட்டில் ராமலக்ஷ்மணர்கள் இருந்த இடம் ஒரு ரிஷி மண்டலம். அநேக ரிஷிகள், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக்கொண்டு தவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆசிரமத்தில் ஒரு மாதம், இன்னொரு ஆசிரமத்தில் மூன்று மாதம் இப்படிப்பல ஆசிரமங்களில் மாதக் கணக்கிலும் வருஷக் கணக்கிலும் ராம லக்ஷ்மணர்களும் சீதையும் சந்தோஷமாகக் காலங்கழித்தார்கள். வனத்தின் அழகு சொல்ல வேண்டியதில்லை. மான் கூட்டங்கள், காட்டு எருமைகள், வராகங்கள், யானைகள், பறவைகள், அழகிய மரங்கள், செடிகள், கொடிகள், கண்ணைக் கவரும் நீலோற்பல - தாமரைத் தடாகங்கள், நீர்ப் பறவைகள் இவற்றையெல்லாம் கவி வர்ணித்திருக்கிறார். இப்படி இயற்கை அழகுகளை அனுபவித்துப் பாடும் கவிகளில் வால்மீகி முதல் இடம் பெற்றவர். அதில் அவருக்கு அடங்காத ருசி. பாட்டின் நாதமும் அரண்யம் போலவே கம்பீரமாக இருக்கும்.
ரிஷிகளினிடையில் வாசம் செய்வதில் உண்டான சத்ஸங்க மகிழ்ச்சியைப் பத்தாண்டு ராமன் அனுபவித்தான். கூட லக்ஷ்மணனும் தேவியும் இருந்ததனால் ராமனுடைய ஆனந்தம் மும்மடங்காயிற்று.
பத்து ஆண்டுகளை ஒரு அத்தியாயத்தில் முடித்து விடுகிறேனே என்று குறைப்படலாகாது. சந்தோஷமாகவும் சுகமாகவும் கழியும் காலம் இலக்கியத்தில் சுருக்கமாகத்தான் முடியும்.
*
இப்படிப் பத்து ஆண்டுகள் கழிந்து, வனவாச விரதத்தின் காலவரை அனேகமாகத் தீர்ந்து போனதாக எண்ணும் சமயத்தில் அகஸ்திய முனிவரைத் தெரிசிக்க வேண்டுமென்ற ஆசை ராமனுக்கு உண்டாயிற்று.
அகஸ்தியர் விசுவாமித்திர முனிவரைப் போலவே மூவுலகிலும் புகழ் பெற்ற முனிவர். இமயமலை முதல் விந்தியமலை வரையில் உள்ள அறிவும் தவ வன்மையும் ஒரு தட்டில் வைத்து, அகஸ்திய முனிவர் ஒருவர் தென் தட்டில் அமர்ந்தால் அவருடைய பாரத்தினால் தென் தட்டு கீழே இறங்கிவிடும் என்று சொல்வார்கள். பார்வதி - மகாதேவ விவாகத்தைப்பற்றிச் சொல்லப்படும் கதை அனைவருக்கும் தெரியும். எல்லா முனி சிரேஷ்டர்களும் கைலாசம் சென்று பூபாரம் அங்கே அதிகமாகப் போனபடியால் அகஸ்தியர் தெற்கே இருந்து கொண்டு பூமியின் நிலையைக் காத்தார் என்பது அகஸ்தியருடைய மகிமையைக் காட்டும். ஒரு காலத்தில் விந்தியமலை வளர்ந்து மிக உயர்ந்து கொண்டே போய், சூரியனுடைய தக்ஷணாயன உத்தராயணப் போக்கைத் தடுப்பதாகப் பயந்து அகஸ்தியரைத் தேவர்கள் இறைஞ்சினார்கள் என் றும், முனிவர் விந்தியமலைக்கு எதிரில் நின்ற போது மலை தெண்டனிட்டு வணங்கிற்று என்றும், முனிவர், “நீ என்றென்றைக்கும் இவ்வாறே குறையாமல் இருப்பாய்!” என்று ஆசீர்வதித்தார் என்றும், அதனால் விந்தியமலை மிக நீண்ட மலையாய்ப் படுத்துக் கிடக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அரக்கர்கள் ரிஷிகளை மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். வாதாபி ஒரு வரம் பெற்றிருந்தான். அவன் உடல் எவ்வளவு வெட்டித் துண்டு துண்டாகச் செய்யப்பட்டாலும் பிறகு ஒன்று சேர்ந்து உயிருடன் தோன்றும் என்கிற வரம் பெற்றிருந்தான். இல்வலன் ரிஷிகள் ஆசிரமத்துக்குப் பிராமண வேஷம் தரித்துப் போவான். “சுவாமி! என் இல்லத்துக்கு வந்து சிராத்த போஜனம் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும்” என்று கேட்பான். சாஸ்திர விதிப்படி இத்தகைய விண்ணப்பத்தை எந்தக் காரணம் கொண்டும் மறுக்கக் கூடாது. ரிஷிகள் போய்ச் சிராத்தமும் போஜனமும் முடிந்த பிறகு, “திருப்தியா?” என்று இல்வலன் சிராத்த விதிப்படி கேட்பான். அவர்களும் வழக்கப்படி “திருப்தி” என்பார்கள். அப்போது இல்வலன் “வாதாபி! வெளியே வருவாய்” என்பான். வாதாபி வஞ்சகமாக ஆட்டு உடல் தரித்து வெட்டிச் சமைக்கப் பட்டு, சிராத்த போஜனத்துடன் பித்ருக்கள் திருப்திக்காக போஜனம் உண்டவர்களுடைய வயிற்றிலிருப்பான். இல்வலன் “வா!” என்றதும் வயிற்றிலிருந்த வாதாபி பிராமணருடைய வயிற்றைக் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து விடுவான். இம்மாதிரி பல ரிஷிகள் மாண்டார்கள். வாதாபி தான் அடைந்த வரத்தின் நிபந்தனைப்படி ஆயுதமின்றியும் எதிர் நின்று எதிர்க்காமலும் ரிஷிகளை இவ்விதமாகக் கொன்று வந்தான்.
ஒருநாள் அகஸ்தியரை இந்த வஞ்சக முறையில் சிராத்தத்துக்கு இல்வலன் அழைத்தான். அவர்களுடைய சூழ்ச்சியின்படி வாதாபி அகஸ்தியருடைய வயிற்றுக்குள் சிராத்த போஜனத்துடன் மேஷ மாமிசமாகப் பிரவேசித்தான். அகஸ்தியருக்கு இது தெரியும். அவர் கணபதியை உபாசித்து அடைந்திருந்த சக்தியினால் அரக்கனை முற்றிலும் ஜீரணித்து விட்டார். “திருப்தியா?” என்று கேட்டான் இல்வலன். “ஆகா! திருப்தி!” என்றார் அகஸ்தியர்.
“வாதாபி, வெளியே வா!” என்றான் இல்வலன். அகஸ்தியர் சிரித்தார். “வாதாபி ஜீரணமாய்ப் போனானே” என்றார்.
இதைக் கேட்ட இல்வலன், “என் சகோதரனைக் கொன்றீரா?” என்று ரோஷத்துடன் அகஸ்தியர் பேரில் பாய்ந்தான். அகஸ்தியருடைய கோபப் பார்வையினால் அந்தக் கணமே இல்வலன் எரிக்கப்பட்டான்.
அகஸ்தியர் இருந்த இடத்தில் எந்த ராக்ஷசரும் வரமாட்டார்கள். அவர் மற்ற முனிவர்களுக்குப் பெருங் காப்பாக இருந்தார்.
*
இராமன் அகஸ்தியருடைய தம்பியின் ஆசிரமத்துக்குச் சென்று முனிவரைக் கண்டு ஆசி பெற்றுக் கொண்டு அகஸ்தியர் இருப்பிடம் சென்றான். தெற்கே சென்று அவர் ஆசிரமம் இருந்த இடத்தை அடைந்து, தூரத்திலிருந்தே அந்தப் பிரதேசத்தின் காந்தியையும், மிருகங்களும் பறவைகளும் பயமின்றி விளையாடிக் கொண்டிருந்ததையும், பிராமணர்கள் பூஜைக்குப் புஷ்பம் கொய்துகொண்டிருப்பதையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தான்.
“லக்ஷ்மணா! நீ சென்று முனிவருக்குத் தெரியப்படுத்தி உத்தரவு பெறுவாய்” என்றான் ராமன்.
இளையவன் சென்று முனிவருடைய சீடன் ஒருவன் மூலம், “தசரதன் குமாரன் ராமசந்திரனும் தம்பியும் ஜானகியும் முனிவரின் ஆசியைப் பெற்று மேன்மையடைய வந்து காத்திருக்கிறார்கள்” என்று சொல்லி அனுப்பினான்.
அனுமதி பெற்றதுடன் முனிவரே எழுந்து அவசரமாகச் சக்கரவர்த்தித் திருமகனை வரவேற்றுக் கிரமப்படி உபசரித்து ஆலிங்கனம் செய்தார்.
“நீங்கள் சித்திர கூடம் வந்த போதே எனக்கு விஷயம் தெரிந்தது. எப்படியும் ஒரு நாள் நீங்கள் வருவீர்கள் என்று இவ்வளவு காலம் எதிர் பார்த்துக் கொண்டேயிருந்தேன். நீங்கள் எடுத்துக் கொண்ட விரதம் பூர்த்தியாகும் காலம் சமீபித்தது. இவ்விடம் நீங்கள் சுகமாக இருக்கலாம். இங்கே ராக்ஷசர்களுடைய தொந்தரவு இல்லை” என்றார்.
“முனிவருடைய ஆசி பெற்று நான் பாக்கியவான் ஆனேன்! ஆனால் நான் தண்டகாரண்ய ரிஷிகளுக்கு வாக்குத் தந்திருக்கிறேன். முனிவருடைய ஆசி பெற்றுக் கொண்டு நாம் தண்டகாரண்யம் திரும்ப வேண்டும்” என்றான் ராமன்.
“நீ சொல்லுவது சரியே!” என்று அகஸ்தியர் சொன்னார்.
பிறகு அகஸ்தியர் ராமசந்திரனுக்கு மகா விஷ்ணுவுக்காக விசுவகர்மா செய்த வில்லும், என்றும் குறையாத அம்பறாத் தூணியும், கத்தியும் தந்தார். “ராமனே, ராக்ஷசர்களை ஒழிப்பாயாக. முன் மகா விஷ்ணுவானவர் இந்த ஆயுதங்களைத் தந்தார். நீயும் இவற்றைத் தரித்து அவர்களை ஒழிப்பாயாக” என்று ஆசீர்வாதம் செய்தார்.
பிறகு அகஸ்தியரை யோசனை கேட்டுச் சக்கரவர்த்தித் திருமகன் பஞ்சவடியில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அங்கே மிகுதியிருந்த வனவாச காலத்தைக் கழிப்பது என்று தீர்மானித்தான்.
“ராஜகுமாரர்களே, போய் வாருங்கள். சீதையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவள் காட்டில் வசிக்கத் தகாத ராஜகுமாரி. ராமனே, உன்னிடம் அவளுக்குள்ள பிரீதியால் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் வனவாசம் செய்து வருகிறாள். பெண்கள் சாதாரணமாக சுகத்தையே விரும்புவார்கள். கஷ்ட நிலையை விட்டு அகல்வார்கள். ஸ்திரீகளுடைய உள்ளம் மின்னலைப் போலச் சஞ்சல சுபாவமும் கத்தியைப் போன்ற கூர்மையும் கருடனையும் வாயுவையும் போன்ற விரைவும் பட படப்பும் கொண்டது. இவையெல்லாம் சாதாரணமாகப் பெண்களின் சுபாவத்திலுள்ள தோஷங்கள். இது ஈசுவர சிருஷ்டி. ஆயினும் சீதையினிடத்தில் இந்தத் தோஷங்கள் இல்லை. அருந்ததியைப் போன்றவள். ராமசந்திரனே! லக்ஷ்மணனுடனும் வைதேஹியுடனும் நீ எங்கே இருந்தாலும் அந்த இடம் அழகு பெறும். பஞ்சவடி மிக சுந்தரமான இடம். உணவுக்கு வேண்டிய பழமும் கிழங்கும் கிடைக்கும் இடம். அவ்விடத்தில் இருங்கள். கோதா வரி நதிக்கரையின் அழகைச் சீதை மிக அனுபவிப்பாள். சீதையையும் ரிஷிகளையும் அவ்விடம் நீ இருந்து கொண்டு ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவாயாக. தசரத சக்கரவர்த்தி உனக்கு விதித்த விரதகாலம் முடிந்து வருகிறது. யயாதியைப் போல் தசரதனும் மூத்த மகனான உன்னால் கடைத்தேறினான்.”
இவ்வாறு மகாஞானி அகஸ்தியர் ராமலக்ஷ்மணர்களையும் சீதையையும் மிக்க அன்புடன் திரும்பத் திரும்ப ஆசீர்வதித்துப் பஞ்சவடிக்கு அனுப்பினார்.