42. விராதன் தீர்ந்தான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

மூவரும் தண்டகாரணியப் பெருங்காட்டுக்குள் நடந்து சென்று ரிஷிகள் பலர் வாசம் செய்துகொண்டிருந்த பிரதேசத்தை அடைந்தார்கள். போகும் போதே அங்கே வேள்விக்கான பொருள்களும், முனிவர்கள் உடுத்தும் மரவுரி, ஆசனத்துக்குரிய தோல் முதலியனவும் இங்குமங்கும் இருப்பதைக் கண்டார்கள். அந்த இடமே பார்ப்பதற்கு மிக லக்ஷணமாக இருந்தது. பறவைகளும் மிருகங்களும் பயமின்றிச் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தன. பழங்கள் நிறைந்து தொங்கும் பல மரங்களைக் கண்டார்கள். வேத மந்திர சப்தம் காதுக்கு இனிமையாக இருந்தது. அருகில் சென்றதும் வயோதிக முனிவர்களுடைய ஒளி வீசும் முகங்களைக் கண்டார்கள்.

ரிஷிகள் மூவரையும் கண்டு அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார்கள். “அரசனே! நீ எங்களைக் காப்பவன். வனத்திலிருந்தாலும் நகரத்திலிருந்தாலும் நீ எங்களுடைய அரசன்” என்றெல்லாம் சொல்லி உபசரித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்து தங்க இடமும் காட்டினார்கள்.


மறுநாள் காலையில் எழுந்து, ரிஷிகளிடம் விடை பெற்றுக் கொண்டு காட்டுக்குள் சென்றார்கள். பெருங்காடு. புலி, சிங்கம், ஓநாய் முதலிய மிருகங்களும் பலவித பறவைகளும் நிறைந்த காடு. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாகச் சென்றார்கள்.


திடீர் என்று மலைபோன்ற ஒரு பெரிய உருவம் எதிர்ப்பட்டது. நர மாமிசம் தின்னும் ராக்ஷசன் இடி போல் கர்ஜனை செய்தான். அவன் வடிவம் சகிக்க முடியாத கோர சொரூபமாக விருந்தது. மாமிசமும் ரத்தமும் படர்ந்த புலியின் தோல், இன்னும் நன்றாக உலரவில்லை, அதைப் போர்த்திருந்தான். கையில் ஒரு பெரிய சூலாயுதம். அதில் அப்பொழுது குத்திக் கொன்ற மூன்று சிங்கங்கள், ஒரு யானைத் தலை முதலியவை தொங்கிக் கொண்டிருந்தன.


ராக்ஷசன் ஆயுதத்தைத் தூக்கி, பயங்கரக் கூப்பாடு போட்டுப் பாய்ந்து சீதையை அப்படியே பிடித்துத் தூக்கிக்கொண்டு, “யாரடா நீங்கள் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறீர்கள்? நீங்கள் யார்? பார்ப்பதற்குப் பாலர்கள் போல் இருக்கிறீர்கள், வேஷமோ ஜடையும் மரவுரியும் தரித்து முனிவர்கள் போல் நடிக்கிறீர்கள்! கையில் வில்லும் அம்பும்; பக்கத்தில் ஒரு பெண்! ஏன் இப்படிப் பொய் வேஷம் போட்டுத் திரிகிறீர்கள்? வெட்கம் இல்லையா? நீங்கள் ரிஷிகளின் சம்பிரதாயத்துக்கும் விரத உடைக்குமே அபகீர்த்தி கொண்டு வருகிறீர்கள். ஏமாற்றித் திரியும் வஞ்சகர்களே! நான் யார் தெரியுமா? நான்தான் விராதன். ரிஷிகளைத் தின்று வருபவன். இந்த அழகி என் பாரியையாக இருக்கட்டும், தெரிந்ததா? உங்கள் ரத்தத்தைக் குடிக்கப் போகிறேன். பாவிகளே!” என்று கர்ஜனை செய்தான்.


சீதை அவன் கையில் பிடிபட்டு நடுங்கித் துடித்துக் கொண்டிருந்தாள். மனைவியை அரக்கன் பிடித்து எடுத்திருப்பதைக் கண்ட ராமன் தன் அமைதியை இழந்து, “ஐயோ லக்ஷ்மணா, பார்த்தாயா? எதையும் பொறுக்கும் என்னால் இதைப் பொறுக்க முடியவில்லையே! இதைத் தெரிந்தே பாவி கைகேயி நம்மைக் காட்டுக்கு அனுப்பினாளோ!”என்று கதறினான்.


சீதையைத் தூக்கி நின்ற அரக்கனை எந்த விதத்தில் எதிர்ப்பது என்று தோன்றாமல் இந்தச் சந்தர்ப்பத்தில் ராமன் தைரியமும் அமைதியும் இழந்து போய்ப் பேசினதைக் கேட்ட லக்ஷ்மணன் குழப்பமடையாமல், பாம்பைப் போல் சீறி, “ராம! இந்திரனுடைய பலம் பெற்றவன் நீ. உன் பக்கத்தில் நானும் இருக்க ஏன் இப்படிப் பேசுகிறாய்? பார், இப்போது என் வில்லும் அம்பும் என்ன செய்யப் போகின்றன என்பதை! இவன் மடிந்து கீழே விழுந்து. இவன் ரத்தத்தை மண் குடிக்கப் போகிறது. அயோத்தியில் என் ரோஷத்தை நீ அடக்கினாயே, அந்த ரோஷம் இவன் மேல் இப்போது பாயப்போகிறது! சிறகு கொண்ட மலைகளை இந்திரன் தாக்கியது போல், இவனைத் தாக்கி இவன் உயிரை வாங்கப் போகிறேன்” என்றான்.


விராதன் அச்சமயம் மறுபடியும் கர்ஜித்து, “ஏ! வாலிபர்களே! யார் நீங்கள்? உடனே சொல்லுங்கள்!” என்றான்.


ராமன் அதற்குள் தெளிந்துவிட்டான். கலவரம் தீர்ந்து முகத்தில் வீரம் ஜொலிக்க ஆரம்பித்தது.


“நாங்கள் இக்ஷ்வாகு வம்சத்து ராஜ குமாரர்கள். வனவாசம் செய்ய வந்திருக்கிறோம். நீ யார் சொல்லுவாய்?” என்றான் ராமன்.


“அப்படியா தசரத குமாரனே, கேள், சொல்லுகிறேன். என் தகப்பனார் பெயர் ஜயன், தாயார் சதஹ்ரதை. விராதன் என்று என்னை ராக்ஷசர்கள் அறிவார்கள். ஆயுதம் தரிக்கும் க்ஷத்திரியப் பயல்களே, உங்களுடைய ஆயுதங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கிறேன். இந்தப் பெண்ணை விட்டுவிட்டு ஓடிப் போங்கள். உயிருடன் தப்புங்கள்!” என்றான் ராக்ஷசன்.


இதைக் கேட்டதும் ராமனுடைய கண்கள் சிவந்து கோபம் மேலிட்டு, “யமனிடம் நீ போகும் சமயம் நெருங்கி விட்டது!” என்று சொல்லி வில்லை வளைத்து, கூரிய அம்பொன்றை அரக்கன் மேல் விடுத்தான். அம்பும் அவன் உடலைத் துளைத்து விட்டு ரத்தத்தோடு நெருப்பைப் போல் பிரகாசித்துக்கொண்டு பூமியை அடைந்தது. ஆனால் அரக்கன் அப்படியே நின்றான். அவன் வலியினால் கோபங் கொண்டு சீதையைக் கீழே வைத்து விட்டுச் சூலத்தைத் தூக்கி வாயைத் திறந்து கொண்டு ராமலக்ஷ்மணர்கள் மேல் பாய்ந்தான். உடனே ராஜ குமாரர்கள் இருவரும் அவன் மேல் அம்பு மாரி பெய்தார்கள். அம்புகள் பாய்ந்து அவன் உடலில் குத்தி நின்றன. பெரியதொரு முள்ளம் பன்றியைப் போல் காட்சி தந்தான். அரக்கன் சிரித்து விட்டு, ஒரு முறை நெட்டி முறித்து உடலை ஒரு சிலுப்புச் சிலுப்பினான். குத்தி நின்ற அம்புகள் எல்லாம் பல பல வென்று கீழே உதிர்ந்தன. அதன் பிறகு சூலாயுதத்தைத் தூக்கி நின்றான். ராம லக்ஷ்மணர்கள் இரண்டு அம்புகளை விட்டுச் சூலத்தைத் துண்டு படுத்தி விட்டு, கத்திகளை எடுத்துக் கொண்டு அரக்கன் மேல் பாய்ந்தார்கள். அவனே இருவரையும் இரண்டு கைகளில் தூக்கி எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொண்டு, வனத்துக்குள் குதித்துச் சென்றான். அடர்ந்து இருள் மூடிய வனத்துக்குள் ராம லக்ஷ்மணர்கள் மறைந்து போனதைக் கீழே நின்ற சீதை கண்டு உரக்கப் புலம்பினாள்.


அரக்கனுடைய தோளின் மேலிருந்த ராமனும் லக்ஷ்மணனும் அவனுடைய இரு கரங்களையும் ஒடித்துப் பிய்த்து எறிந்தார்கள். ராக்ஷசன் கீழே விழுந்தான். ஆயுதத்தால் இவனுக்குச் சாவில்லை என்பதையறிந்து கைகளால் அவனை நொறுக்கியும் காலால் மிதித்தும் பிண்டமாக்கினார்கள். அப்படியும் அவன் சாகவில்லை. வரத்தின் பலத்தால் உயிர் போகவில்லை. ஆனால் இம்சையைப் பொறுக்க முடியாமற் கதறினான். கேட்டு அடைந்த வரத்தில் இது விட்டுப் போன அம்சம்! மரணம் வந்து அவனுக்குச் சாந்தி தரவில்லை. ஒரு பெருங்குழி வெட்டி அவனை அதில் போட்டு மூடி விட நிச்சயித்தார்கள்.


அவனே ராமனை இவ்வாறு செய்யும்படி கேட்டுக் கொண்டான். அவன் கழுத்தின் மேல் கால் வைத்து மிதித்துக் கொண்டு நிற்கையில் அரக்கன் சொன்னான்:


“பகவானே! உன் பாதம் என்மேல் பட்டது. எனக்கு அறிவு வந்தது. என் சாபம் உன்னால் தான் தீரவேண்டும். நான் பிறப்பில் அரக்கன் அல்ல. நான் ஒரு கந்தர்வன். நான் பெற்ற வரமே என் விமோசனத்துக்குத் தடையாக இருக்கிறது. எப்படியாவது என் உயிரை மாய்த்தாயானால் நான் மறுபடி என் சொரூபத்தையடைந்து மேலுலகம் செல்வேன்” என்றான்.


அவ்வாறே ராம லக்ஷ்மணர்கள் ஆயுதமின்றி அவன் உடலை நொறுக்கிப் பிண்டமாக்கிப் பெருங்குழியில் போட்டுப் புதைத்து விட்டார்கள். அரக்கனும் கந்தர்வர்களுக்குரிய மேலுலகம் எய்தினான்.


பிறகு ராஜகுமாரர்கள் தனியே நின்ற சீதையை அடைந்து அவளுக்கு விஷயத்தைச் சொல்லி, மூவரும் சரபங்க ரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார்கள்.


அவ்விடம் இந்திரன் தன் தேவகணங்களுடன் வந்து முனிவருடன் பேசிக் கொண்டிருந்தான். ராமன் வந்ததை இந்திரன் அறிந்து தன் பேச்சைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு மறைந்தான், பிறகு ராமனும் தம்பியும் சீதையும் சரபங்க ரிஷியை வணங்கினார்கள்.


வயோதிக ரிஷியானவர் “உனக்காகத் தான் காத்திருக்கிறேன். நான் என் உடலை நீத்து மேலுலகம் செல்ல வேண்டிய காலம் வந்த போதிலும் உன்னைக் காணாமல் போக விரும்பவில்லை. அதனால் காத்திருந்தேன். இப்போது என் விருப்பம் பூர்த்தியாயிற்று. என் புண்ணிய பலன்களை உனக்குத் தந்தேன்” என்றார்.


ரிஷி சொன்னதைக் கேட்ட ராமன், “பகவானே, என் புண்ணியத்தை நானே செய்து பெற வேண்டும். எனக்குத் தாங்கள் கொடுத்து நான் பெறுவதில் என்ன இருக்கிறது? நான் எல்லாவற்றையும் விட்டு விட்டுக் காட்டில் வசிக்க வந்திருக்கிறேன்” என்றான்.

*

ரிஷி அவதார விஷயத்தையறிந்தவரானபடியால், “சுதீக்ஷண ரிஷியைக் கேட்டு இந்த வனத்தில் நீ எங்கே வசிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வாய்” என்றார்.


அதன் மேல் சரபங்க ரிஷி தீ வளர்த்து அதில் பிரவேசித்தார். நெருப்பில் உடல் எரிந்து போய், அதனின்று ஒரு திவ்விய குமார உருவத்தோடு கிளம்பி மேல் உலகம் சென்றார்.

*

விராதன் மாண்ட செய்தி ரிஷி கூட்டங்களில் பரவியதும் ராமனைப் பார்க்க அந்தப் பிரதேசத்துத் தபஸ்விகள் எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். ராக்ஷசர்களால் தாங்கள் அனுபவித்து வரும் உபத்திரவங்களையெடுத்துச் சொல்லி, “அரசனே, நீ இங்கே வாசம் செய்ய வந்தது நம்முடைய பாக்கியம். இனி நம்முடைய தவங்களும் விரதங்களும் இடையூறின்றி நடைபெறும். வனத்தில் விழுந்து கிடக்கும் எலும்புகளைப் பார்! அவையெல்லாம் ராக்ஷசர்களால் கொல்லப்பட்ட தபஸ்விகளுடைய அஸ்திகள் என்று அறிவாயாக. ராக்ஷசர்களின் உபத்திரவத்தால் பம்பை நதிக் கரையிலும் மந்தாகினி நதிக்கரையிலும் உள்ள ரிஷிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அரசனுடைய கடமை பிரஜைகளைக் காப்பாற்றுவதாகும். இந்தக் கடமையைச் செய்யாத அரசன் அதருமம் செய்தவனாவான். குடும்பங்களுடன் இருப்பவர்கள் வரி செலுத்துவது போல் ரிஷிகளுடைய தவத்தின் பயனில் நான்கில் ஒரு பங்கு சொல்லாமலே அரசனுக்குப் போகும். தேவராஜனுடைய தேஜஸுக்குச் சமானமான தேஜஸ் பெற்றவனாய் இருக்கிறாய். எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்கள் கஷ்டம் மிகப் பெரிது. சொல்லுக்கு அடங்காது. நீயே சரணம்!” என்று மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.


“பெரியோர்களே! ஏன் வருந்துகிறீர்கள்? நீங்கள் இட்ட ஆணையைச் செய்யக் கடமைப் பட்டவன் நான். அயோத்தியில் என் ஸ்தானத்தை நீத்துத் தந்தையின் ஆணையை நடத்த நான் வனம் வந்தேன். தந்தையின் ஆணைப்படி நடந்து கடன் தீர்ப்பதில் இத்தகைய நன்மையும் என்னால் உங்களுக்கு உண்டாவது என் பாக்கியமல்லவா? நான் வனத்திலிருந்து கொண்டு ராக்ஷசர்களை ஒழித்து உங்களுடைய உபத்திரவத்தை நீக்குவேன். தைரியமாக இருங்கள்” என்று ராமன் மிக வினயமாகச் சொன்னதைக் கேட்டு ரிஷிகளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் சுதீக்ஷண முனிவர் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்கள்.


சமீபத்தில் ஒரு பெரிய மலையும் நல்ல அடர்த்தியான வனமும் காணப்பட்டன. அதுவே சுதீக்ஷணருடைய ஆசிரமம் இருக்கும் பிரதேசம் என்று அறிந்து அதை நோக்கி ஆசிரம வனத்துக்குள் சென்றார்கள். மரவுரிகள் காயப் போட்டிருந்ததைக் கண்டார்கள். பிறகு வயோதிக ரிஷியையும் தரிசித்தார்கள். அவரை நமஸ்கரித்துச் சக்கரவர்த்தித் திருமகன், “என் பெயர் ராமன். தங்களைத் தரிசிக்க வந்தேன். அடியேனை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.


வீரனைப் பார்த்ததும் முனிவர் எழுந்து கட்டியணைத்துக் கொண்டார்.


“தருமத்தைக் காக்கும் சிரேஷ்டனே! உனக்கு நல்வரவு. நீ வந்து இந்த ஆசிரமம் ஒளி பெற்று விளங்குகிறது. நீயே இதற்கு எஜமானன். நான் உன் வரவுக்காகக் காத்திருந்தேன். இல்லையேல் இதற்கு முன்னமே நான் இந்த உடலை நீத்திருப்பேன். நீ ராஜ்யத்திலிருந்து நீக்கப்பட்டு, சித்திரகூடம் வந்திருப்பதைப்பற்றி நான் கேள்விப் பட்டேன். நான் சம்பாதித்திருக்கும் புண்ணியம் உனதாகும். வீரனே! நீயும் உன் பாரியையும் லக்ஷ்மணனோடு அதைப் பெற்றுக்கொண்டு அனுபவிப்பீர்களாக” என்றார் சுதீக்ஷண முனிவர்.


இவ்வாறு ஆசீர்வதிப்பது முனிவர்களுடைய வழக்கம். ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய மறு மொழியும் ராமன் சொன்னதிலிருந்து பார்த்துக் கொள்ளலாம். இவையெல்லாம் அந்தக் காலத்தில் வழங்கிவந்த அழகிய பண்பாடு.


உக்கிர தவம் செய்து பொலிவடைந்த முகத்தைப் பெற்ற முனிவரை வணங்கி ராமன் சொன்னான்:


“முனிவரே! என் புண்ணியத்தை நானே செய்து அடைய வேண்டும். தங்களுடைய ஆசீர்வாதத்தால் நான் அவ்வாறே செய்வேன். காட்டிலிருந்து கொண்டு வனவாசம் செய்ய நான் விரும்புகிறேன். மகாத்மா சரபங்கர் ஆணையின் பேரில் எல்லாம் அறிந்த தங்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற வந்தேன்” என்றான்.


முனிவருடைய முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. குறிப்பாகப் பேசினார்:


“இந்த ஆசிரமத்தையே நீ உன் இருப்பிடமாக வைத்துக் கொள்ளலாம். ரிஷிகள் பலர் அருகே வாசம் செய்கிறார்கள். நல்ல பழமும் கிழங்குகளும் நிறைந்த வனம். ஆனால் ரிஷிகளுடைய தவங்களைக் கெடுக்கத் துஷ்ட மிருகங்கள் அநேகம் இந்தப் பிரதேசத்தில் திரிந்து கொண்டிருக்கின்றன. அவைகளின் தொந்தரவை ரிஷிகள் சகிக்க முடியவில்லை. இந்தத் துஷ்ட மிருகங்களைத் தவிர இவ்விடம் ஒரு குறையுமில்லை” என்றார். ரிஷியினுடைய சொல்லின் பொருளைச் சக்கரவர்த்தித் திருமகன் தெரிந்து கொண்டான். தன்னுடைய கோதண்டத்தை வளைத்து நாண் பூட்டி, “பகவான் முனிவரே! இந்தத் துஷ்ட மிருகங்களை அடியோடு ஒழிப்பது என் பணியாகும். என் வில்லும் கூர்மையான பாணங்களும் வீண் போகாது. இந்த ஆசிரமத்திலேயே நாங்கள் இருப்பது அவ்வளவு உசிதமல்ல. தங்களுடைய தவத்துக்குத் தடையாகும். அருகில் ஓரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும். அனுக்கிரகிப்பீராக!” என்று சொன்னான்.


அன்றிரவு முனிவருடைய ஆசிரமத்திலேயே அதிதிகளாகத் தங்கினார்கள்.


அதிகாலையில் மூவரும் எழுந்திருந்து கருங்குவளை வாசனையோடு சுகமாகக் குளிர்ந்திருந்த ஜலத்தில் ஸ்நானம் செய்து, ஹோமம் செய்து விட்டு முனிவரை வணங்கி நின்றார்கள்.


“தங்களுடைய அருளினால் இரவு நன்றாகக் கழிந்தது. இந்தப் பிரதேசத்திலுள்ள பல ரிஷி சிரேஷ்டர்களையும் தரிசித்து ஆசிபெற விரும்புகிறோம். எங்களுடன் வந்திருக்கும் இந்த மகான்கள் அழைத்துப் போவார்கள். வெய்யிலுக்கு முன் புறப்பட்டுப் போவது நலமான படியால் விடை கொடுக்க வேண்டும்” என்று ராமன் சொல்ல மூவரும் முனிவருடைய பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தார்கள்.


ராஜகுமாரர்களை முனிவர் அன்புடன் ஆலிங்கனம் செய்து, “க்ஷேமமாகப் போய் வாருங்கள். தண்டகாரணியத்து ரிஷி சிரேஷ்டர்களைப் பார்த்து ஆசி பெறுங்கள். அனைவரும் தவம் செய்து சித்தியடைந்தவர்கள். மிக ரம்மியமான வனம், மான்களும், பறவைகளும், புஷ்பங்கள் நிறைந்த தடாகங்களும், மலையருவிகளும், மயில்களும்-எல்லாம் மிக அழகாக இருக்கும். லக்ஷ்மணா, அண்ணனும் நீயும் சீதாதேவியுடன் போய் வாருங்கள். இஷ்டமானபோது ஆசிரமத்துக்குத் திரும்ப வாருங்கள்” என்றார்.


மூவரும் முனிவரை வலம் செய்துவிட்டுப் புறப் பட்டார்கள். இருவருடைய கத்தி, வில், அம்பறாத் தூணி முதலியவற்றைச் சீதை எடுத்துத் தர அவர்களும் அவற்றைத் தரித்து ஆயுதபாணிகளாகப் புறப்பட்டார்கள். முனிவருடைய ஆசியைப் பெற்று ராஜகுமாரர்களுடைய அழகும் காந்தியும் முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தன.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத ராமாயணம்! - பி.என்.பரசுராமன்

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி