41. பரதன் திரும்பினான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

நான்கு அரசகுமாரர்களும் மூன்று பட்டமகிஷிகளும் ஓர் இடத்தில் மறுபடியும் கூடிவிட்டார்கள் என்ற செய்தி அறிந்த உடனே, தூரத்தில் மரியாதைக்காக நின்றுகொண்டிருந்த படையினரும் ஜனங்களும் உடனே அந்தச் சந்தோஷக் காட்சியைப் பார்க்க ஓடி வந்துவிட்டார்கள். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். இனி ராமன் அயோத்தியைக்குத் திரும்பி விடுவான் என்றே நிச்சயித்துக் கொண்டு குதூகலப்பட்டார்கள். ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு மங்களம் கொண்டாடினார்கள்.


மகாராஜாவும் தந்தையுமான தசரதன் இவ்வுலகம் துறந்து விட்டானே என்று சீதையும் ராம-லக்ஷ்மணர்களும் துக்கக் கடலில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் ஜனக்கூட்டத்தில் ராம தரிசனத்தினால் பெருத்த மகிழ்ச்சி பொங்கிற்று.

*

வசிஷ்ட முனிவர் தேவிமார்களைப் பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார். வழியில் மந்தாகினி நதியைப் பார்த்தார்கள். “இந்தத் துறையில் இறங்கித்தான் ராஜகுமாரர்கள் தங்களுக்கு வேண்டிய தண்ணீர் எடுத்துப் போவார்கள்” என்று ஒரு இடத்தைக் காட்டியதும் கௌசல்யா தேவியும் சுமித்திரையும் 'ஐயோ'வென்று அழுதார்கள்.


“சுமித்திரையே, என் மகனுக்காக இந்தத் துறையில் தினமும் உன் மகன் ஆற்றில் இறங்கிச் சுத்தமான ஜலம் ஆசிரமத்துக்கு எடுத்துப் போய் வைக்கிறான் பார்த்தாயா? அண்ணனுக்காக எந்த வேலையும் சந்தோஷமாகச் செய்வான் உன் மகன். குடத்தில் ஜலத்தை நிரப்பித் தோளின் மேல் வைத்து எடுத்துப் போவது அவனுக்குக் கஷ்டமாகத் தோன்றாது” என்றாள்.


ஆற்றங்கரையில் ராம லக்ஷ்மணர்கள் தந்தைக்காக ஜலக்கிரியை செய்த இடத்தைப் பார்த்தார்கள். தர்ப்பைப் புல் நுனி தெற்கு நோக்கி வைத்திருப்பதைக் கண்டார்கள். பித்ருக்களுக்காக அங்கே எள்ளுப் பிண்ணாக்கு வைத்திருப்பதையும் கண்டார்கள்.


“மகாராஜாவின் பசி தீர்ப்பதற்காகப் பிண்ணாக்கு வைத்திருப்பதைப் பார்த்தாயா? ஆகா, இறந்த பின் உலகம் ஆண்ட ராஜாக்களின் போஜனம் இதுவே! என் இதயம் வெடிக்கவில்லையே!” என்று சுமித்திரையை அணைத்துக் கொண்டு அழுதாள் கௌசல்யா தேவி.


பர்ணசாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே முகத்தில் தெய்விக ஒளி வீசும் ராஜ குமாரர்கள் ஓலைக் குடிசையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து நிற்கச் சக்தியிழந்து கீழே விழுந்தார்கள்.


இரு ராஜ குமாரர்களும் எழுந்து, தாய்மார்களைத் தூக்கி எடுத்தார்கள். தன்னுடைய தாமரைக் கைகளால் கோசலை ராமனைத் தடவிக் கொடுத்து, இது துக்கமோ, ஆனந்தமோ என்பதை அறியாமல் மயக்கத்தில் மூழ்கினாள். பிறகு சீதையைத் தழுவி, “மகளே, ஜனகனுக்கு மகளாய்ப் பிறந்து அயோத்தி மன்னனுக்கு மருமகளாக என் வீட்டில் புகுந்த நீ, இந்தக் காட்டில், இந்தக் குடிசையில் வசித்து வருகிறாயா? வாடிய தாமரை மலரே! தூசி படிந்த தங்க விக்கிரகமே! உன்னைப் பார்த்து நான் படும் துக்கத்தை எப்படிச் சொல்வேன்? நெருப்பில் எரியும் விறகுபோல் என் மனம் எரிகிறது, குழந்தாய்!” என்றாள்.


மண்ணின் மேல் நின்ற பிருகஸ்பதியைப் போல் விளங்கும் வசிஷ்டருடைய பாதங்களில் சக்கரவர்த்தித் திருமகன் விழுந்து வணங்கி, அவருக்கு அருகில் அன்புடன் உட்கார்ந்தான். பரதனும் அடக்கமே வடிவமெடுத்து வந்தது போல் ராமசந்திரன் எதிரில் உட்கார்ந்தான். பல பெரியோர்களும் சுற்றி உட்கார்ந்தார்கள். ராமனுடைய மனம் மாறுமா, பரதன் என்ன பேசப் போகிறான் என்றெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்து உட்கார்ந்தார்கள்.


“பரதனே! எதற்காக இந்த உடை தரித்துக் கொண்டு வனத்துக்கு வந்தாய், சொல்! ராஜ்ய பரிபாலன காரியங்களை விட்டு விட்டு மான்தோலும் சடையுமாக ஏன் இங்கே வந்து சேர்ந்தாய்? இதை எனக்குச் சரியாகச் சொல், தம்பி!” என்றான்.


“அண்ணா!” என்று பரதன் பல தடவை சொல்ல ஆரம்பித்து, மேலே பேச்சு வராமல் திக்கித் திணறினான். பிறகு தைரியம் செய்து கொண்டு மெள்ளப் பேச ஆரம்பித்தான்:


“உன்னைக் காட்டுக்கு அனுப்பி விட்டு, 'யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்து விட்டேனே' என்ற துக்கத்தில் வெந்து, மேலுலகம் போய் விட்டார் தந்தை. என்னைப் பெற்றவளும் தான் விரும்பிய சந்தோஷத்தைப் பெற முடியாமல், மகா பாவம் செய்தவளாகி, விதவையுமாகி, சோகத்தில் மூழ்கி நிற்கிறாள். உலகத்தால் பழிக்கப்பட்டு உயிருடன் நரக வேதனையடைந்திருக்கிறாள். எங்களை நீ காப்பாற்ற வேண்டும். இன்றே நீ பட்டாபிஷேகத்துக்குச் சம்மதித்து, உனக்குரிய ராஜ்யத்தை அடைய வேண்டும். இதற்காகவே ராஜ்யத்துப் பொது மக்களும், சேனையும், சுவர்க்கம் எய்திய அரசனுடைய தேவிமார்களும் எல்லாரும் இங்கே வந்து காத்திருக்கிறார்கள். நீ இதை அருள வேண்டும் மறுக்கக் கூடாது. இதுவே அனைவருடைய துக்கத்தையும் தீர்த்து, குல தருமத்தையும் கெடாமல் காப்பாற்றும். உரிய அரசனில்லாமல் ராஜ்யம் ஒரு விதவையின் நிலையிலிருக்கிறது. அதை அகற்றி, மங்களகரமாக்கக் கடவாய்! பூரண சந்திரனைப் போல் இருட்டை அகற்றி நாட்டை ஜொலிக்கச் செய்வாய். இதோ மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்களும் நானும் உன் பாதங்களில் விழுந்து வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். அண்ணா! இந்தப் பிரார்த்தனையை மறுத்துத் தள்ளி விடாதே!”


இப்படிச் சொல்லி ராமசந்திரனுடைய காலைப் பிடித்துக் கொண்டான். தீரனான பரதன் கண்களில் நீர் ததும்பியது.


பரதனைத் தழுவியெடுத்து ராமன் சொல்லுகிறான்: “அப்பனே! நாம் நற் குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப் பட்டோம். நீயும் நானும் ஒருநாளும் தவறு செய்ய மாட்டோம். உன்னிடத்தில் எள்ளளவேனும் நான் குற்றங் காணவில்லை. நீ துக்கப்பட வேண்டாம். பெற்ற தாயையும் நீ குற்றம்கூற வேண்டாம். நம்முடைய பண்பாட்டுக்கு இது தகாது. நம்மைப் பெற்ற தந்தை நமக்கு எந்த ஆணையும் இடலாம். அது அவருடைய உரிமை. வனத்துக்கு அனுப்புவதும், ராஜ்யாபிஷேகம் செய்வதும் இரண்டும் அவருடைய உரிமை. தாயையும் தந்தையையும் கௌரவிப்பது புதல்வர்களாகிய நம்முடைய கடமை. அவர்கள் இருவரும் எனக்கு இட்ட ஆணையை நான் ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியுமா? 'வனம் போ!' என்று தந்தை சொன்னதை நான் மறுப்பது தகுமா? உனக்கு ராஜ்யப் பொறுப்பைத் தந்தார். எனக்கு வனவாசம் தந்தார். இப்படி நம்மிருவருக்கும் வாழ்க்கையை வகுத்துக் கொடுத்து மரணமடைந்தார். அதை நாம் புறக்கணிக்கலாகாது. நீ ராஜ்ய பரிபாலனம் செய்து அவர் ஆணையை நிறைவேற்றுவதில் ஒரு குற்றமுமில்லை. அது உன் கடமையுமாகும். நானும் பதினான்கு வருஷங்கள் தண்டகாரண்யத்தில் தந்தையின் அந்திமக் கட்டளையை நிறைவேற்றுவேன். அதுவே தருமம். தேவராஜனுக்குச் சமமாக இருந்த நம்முடைய தந்தை சொன்னதை நாம் பக்தியுடன் செய்து தீர்க்க வேண்டும். தகப்பனார் ஆணையை நிறைவேற்ற இயலாமல், அதற்குப் பதில் உலகமெல்லாம் எனக்குக் கிடைப்பதானாலும் அதைப் பெற்றுக் கொண்டு நான் திருப்தியடைய முடியாது” என்றான் ராமன்.


இதைக் கேட்டபிறகும் பரதன் மீண்டும் மீண்டும் ராமனைக் கேட்டுக் கொண்டான். தன்னைக் குறித்து வந்த அனர்த்தம், அது திருத்தப்படாமல் போனால் தன்னுடைய பாவம் தீராமல் நின்று போகும் என்று பரதன் வருத்தப் படுகிறான் என்பதைக் கண்டு ராமன், “நீ உன்னை நிந்தித்துக் கொள்ள வேண்டாம். உன் பொருட்டு இது நடந்து விட்டது என்று எண்ண வேண்டாம். அனைத்துக்கும் விதியே காரணம். துக்கத்தை விடு. அயோத்தியைக்குத் திரும்பிப் போய் ராஜ்ய பரிபாலனம் செய். நம்முடைய தந்தை சொன்னபடி நாம் இருவரும் நடக்க வேண்டும். அவருடைய கட்டளையை நாம் நிராகரித்தல் தகாது. உன்னிடத்தில் ஒப்புவித்த ராஜ்ய பாரத்தை நீ தாங்கியே தீர வேண்டும்” என்றான்.


பரதனுடன் வந்த அயோத்தி நகரத்து மக்களுக்குச் சக்கரவர்த்தித் திருமகனுடைய உறுதியைப் பார்த்து ஒரு பக்கம் மகிழ்ச்சியும் ஒரு பக்கம் துக்கமும் உண்டாயிற்று. பரதனுடைய அன்பையும் பக்தியையும் களங்கமற்ற உள்ளத்தையும் பார்த்துப் பார்த்து, “இத்தகைய ராஜ குமாரர்களைப் பெற்றோமே நாம்!” என்று மகிழ்ந்தார்கள்.

*

“தந்தையின் சொல்லை நான் புறக்கணிக்க முடியாது. வீணாக முயற்சி செய்யாதே! உனக்கு உதவியாகச் சிறந்த தம்பி சத்ருக்னன் இருக்கிறான். எனக்கும் இங்கே ஒரு தம்பியிருக்கிறான். லக்ஷ்மணன் இருக்க எனக்கு என்ன குறை? நான்கு புத்திரர்களாகிய நாம் நம் தந்தையின் ஆணையைச் சரிவர நிறைவேற்றுவோம்” என்று ராமன் முடிவாக பரதனுக்குச் சொன்னான்.


பரதனுடன் வந்த புரோகிதக் கூட்டத்தில் ஒருவராயிருந்த மகா வித்துவான் ஜாபாலர் இந்தச் சமயத்தில் நடுவில் புகுந்து ராமசந்திரனுக்கு லோகாயதம் உபதேசித்தார். “தந்தையின் ஆணை என்று திரும்பத் திரும்ப ஏதோ சொல்லுகிறாய். தசரதன் என்பது ஓர் உடல். அது பஞ்சத்துவம் அடைந்து விட்டது. ஐம்பெரும் பூதங்களோடு கலந்து போய் விட்டது. முடிந்துபோன அந்த உருவத்துக்கும் உனக்கும் இப்போது ஏதோ சம்பந்தம் இருப்பது போல் பேசுகிறாய். இது அறியாமை. கண்ணெதிரிலுள்ள சுகங்களை விட்டு விட்டுத் தருமம் என்றும் பரலோகம் என்றும் மூடர்களுடைய பேச்சை நீயும் பேசுகிறாய். துயரத்தில் மூழ்கிக் கூந்தலை வாரி எடுத்துக் கட்டாமலிருக்கும் ஒரு ஸ்திரீயைப் போல் அயோத்தி நகரம் துக்கத்தில் கிடக்கிறது; உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. போய்ப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு சுகங்களையனுபவித்துச் சந்தோஷமாய் இருப்பாய். பரதன் சொல்லுவதைக் கேள்! தந்தையின் கட்டளை என்று சொல்லிக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யாமலிருக்கிறாய்” என்று கூறினார்.


ராமனுக்கு ஜாபாலி சொன்னது மிகுந்த அதிருப்தியை உண்டாக்கிற்று. “சத்தியத்தை நீர் ஒரு பொருளாக மதிக்கவில்லை போலும். நீர் சொல்வது சரியாக இல்லை. நாஸ்திகம் பேசுகிறீர். சத்தியத்தை விட மேலான ஒரு பொருள் உலகத்தில் இல்லை” என்றான் ராமன்.


வசிஷ்டர் அப்போது சமாதானப்படுத்தினார். “ராம! ஜாபாலி நாஸ்திகரல்ல. உன்னை எப்படியாவது அயோத்திக்குத் திரும்பிப் போகச் செய்ய வேண்டும் என்பதும் பரதனுடைய துக்கத்தை அகற்ற வேண்டும் என்பதும் அவருடைய கருத்து. உனக்குரிய ராஜ்யத்தை நீ பெற்றுக் கொண்டு மக்களைப் பரிபாலிக்க வேண்டும் என்கிற பெரு நோக்குடன் அவர் அவ்வாறு பேசினார். அவர் மேல் கோபிக்க வேண்டாம். ராஜ்யபாரத்தை ஏற்றுக் கொள்ளுவது உன் குல தருமம். அதைப் பற்றிச் சந்தேகம் இல்லை. அது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் தந்தையின் ஆணை என்கிற பெரிய விஷயம் இருக்கிறது. இதைப் பெரிதாக நீ கருதுவதும் சரியே. ஆனால் பரிதாப நிலையிலுள்ள தம்பி பரதன், பழிக்கு அஞ்சி உன்னைத் தஞ்சமடைந்திருக்கிறான். அதை எப்படி நீ மறுக்கலாம். உன் பிராணனைப் போல் அவனிடம் நீ வைத்துள்ள அன்பு எங்கள் அனைவருக்கும் தெரியும். அண்டியவர்களைக் கைவிடுவது உன் சுபாவம் அல்ல. பரதனுடைய விண்ணப்பத்தை எப்படி நீ மறுக்கலாம்? தஞ்சமடைந்தவர்களைக் கைவிடுவதில்லை என்பதும் உன் விரதம் அல்லவா?”


ராமன் இசைவதாகக் காணவில்லை. அச்சமயம் பரதன் சுமந்திரனைப் பார்த்து, “அண்ணன் என் பேரில் இரக்கம் கொள்ள மறுக்கிறான். சுமந்திரரே, தர்ப்பை கொண்டு வந்து பரப்புவீர். நான் இங்கே உபவாசம் இருந்து உயிர் விடுவேன்” என்றான்.


சுமந்திரன் தயங்கி ராமசந்திரனைப் பார்த்தான். பரதன் தானே தர்ப்பைப் புல் எடுத்துப் பரப்பி அதன் மேல் அமர்ந்தான்.


“குழந்தாய், இது தகாது. எழுந்திரு. அயோத்திக்குப் போய் உன் கடமையைச் செய். க்ஷத்திரிய தருமத்துக்கு விரோதமான செயலைச் செய்யாதே!” என்றான் ராமன்.


பரதன் எழுந்து நின்று, “அயோத்தி நகரத்து ஜனங்களே! ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ராமசந்திரன் உங்களுக்கு வேண்டாமா? ஏன் பேசாமலிருக்கிறீர்கள்?” என்றான்.


ஜனங்கள், “ராமசந்திரன் சத்தியம் தவறமாட்டான். பிதுர் வாக்கியம் ஒன்றையே பிடித்து அசையாமல் நிற்கிறான். அவன் குணம் நமக்குத் தெரியும். அவன் அயோத்திக்கு வரமாட்டான். அவனை வற்புறுத்துவதில் என்ன பயன்?” என்றார்கள்.


“தம்பி, இவர்கள் பேச்சைக் கேள். இவர்கள் நம் இருவருடைய ஹிதத்தையும் விரும்புகிறவர்கள், தரும புத்தி கொண்டவர்கள்” என்றான் ராமன்.


பரதன் எழுந்து நின்று, “நான் ஒரு பாவமும் அறியாதவன். மகாராஜாவினுடைய ஆணையை நடத்தியே தீரவேண்டுமென்றால் நான் வனத்தில் ராமனுக்குப் பதிலாக இருப்பேன். எனக்குப் பதிலாக அண்ணன் அயோத்தியையில் ராஜ்ய பரிபாலனம் செய்யட்டும்” என்றான்.


ராமன் இதைக் கேட்டுச் சிரித்து, “இந்த 'வினிமய பரிவர்த்தன' முறை இந்த விஷயத்தில் பொருந்துமா? இது கடை வியாபாரம் அல்லவே? ஒருவன் கடமையை மற்றொருவன் ஆபத்துக் காலங்களில் செய்வதுண்டு. செய்ய வேண்டிய விரதத்துக்கு வேண்டிய தேக சக்தியில்லாத காரணத்தினால் செய்யலாம். அண்ணன் இருக்க வேண்டிய நியமத்தைத் தம்பி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எப்போது? அண்ணனுக்கு விரதத்தை நிறைவேற்றும் சக்தியில்லாமலிருந்தால் அப்படிச் செய்யலாம். என் விஷயத்தில் அது பொருந்தாது. வனவாசத்துக்குப் போதிய சக்தி எனக்கு இல்லை என்றும், பரதனுக்கு உண்டு என்றும் நீங்கள் யாராவது சொல்லுவீர்களா?” என்று கேட்டான்.


அப்போது வசிஷ்டர் பரதனைப் பார்த்து, “ராமனுடைய அதிகாரத்தைக் கொண்டு சக்கரவர்த்தித் திருமகனுக்காக நீ ராஜ்ய பரிபாலனம் செய், அப்படிச் செய்தால் பழியுமில்லை; சத்தியமும் காக்கப்படும்” என்றார். பரதனைத் தன் மடிமேல் உட்கார வைத்து ராமன், “தம்பி, நான் தந்த ராஜ்யமாகவே எண்ணி நீ ஒப்புக் கொண்டு தந்தை சொற்படி நட” என்று தன் அன்பின் சக்தியை யெல்லாம் செலுத்திக் கேட்டுக் கொண்டான்.


அந்தச் சமயம் ராமன், பரதன், இருவர் திருமேனிகளும் இரு சூரிய பிம்பங்களைப்போல் ஒளி வீசி விளங்கின.


“அண்ணா, நீயே என் தந்தை, என் தெய்வம், நீ சொல்லுகிறபடியே செய்கிறேன். உன் மிதியடியை எனக்குத் தந்தாயானால் உனக்குப் பதிலாக அதை வைத்துக்கொண்டு நான் பதினான்கு ஆண்டுகள் முடியும் வரையில் நகரத்துக்கு வெளியிலிருந்து கொண்டு உனக்காக ராஜ்ய பரிபாலன காரியங்களைச் செய்து, உன் பாதுகைக்கு என் பணியைச் சமர்ப்பிப்பேன். பதினைந்தாவது வருஷம் நீ நகரத்துக்கு வந்து ராஜ்யத்தை ஒப்புக்கொள்வாயாக” என்று கூறிப் பரதன் முடித்தான்.


“அப்படியே!” என்றான் சக்கரவர்த்தித் திருமகன்; தன் கால்களை அன்புடன் பாதுகை மேல் வைத்து எடுத்து பரதனிடம் தந்தான். அவனும் வணங்கிப் பெற்றுக் கொண்டு தன் தலைமேல் வைத்துக் கொண்டான்.


பரதனும் பரிவாரமும் அயோத்தியை நோக்கிச் சென்றார்கள். வழியில் பரத்வாஜ முனிவரைக் கண்டு நடந்த விஷயங்களை அவரிடம் சொன்னார்கள். அவரும் பரதனுடைய குணத்தையும் முயற்சியையும் பாராட்டி, “உன் சீலமும் உன் குணமும் என்றென்றும் விளங்கும். தசரதன் மகன் அல்லவோ நீ? தண்ணீர் எப்படிப் பள்ளத்தை நோக்கி ஓடுகிறதோ அப்படி நெறி தவறாமல் உன் குலத்தின் சீலம் உன்னை அடைந்திருக்கிறது. உன்னைப் பெற்ற தசரதன் பாக்கியவான். அவன் இறக்கவில்லை. உயிருடனே உன் சொரூபத்தில் அமரனாக வாழ்கிறான்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.


அவ்விடமிருந்து குகனுடைய இருப்பிடத்திற்குச் சென்று கங்கையைத் தாண்டி அயோத்தியை அடைந்தார்கள். பரதனும் பரிவாரமும் நகரத்துக்குள் நுழைந்தார்கள். தந்தையும் தமையனுமில்லாத நகரத்தை நெருங்கி வந்ததும், “சாரதியே, பாழாய்க் கிடக்கிறதே, ஊர்!” என்றான் பரதன்.


அவன் கண்ணுக்கு நகரம் அமாவாசை இருள் சூழ்ந்து, துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதாகத் தோன்றியது. முன்பு கேகய தேசத்திலிருந்து வேகமாக வந்து நகரப் பிரவேசம் செய்தபொழுது, 'என்ன நடந்ததோ' என்று திகிலுடன் பிரவேசித்தான். இப்போது எல்லாம் நன்றாகத் தெரிந்த நிலையில் பிரவேசித்தான். ஒவ்வொன்றையும் எண்ணி எண்ணித் துக்கப் பட்டான்.


அரச மாளிகைக்குள் சென்றான். தந்தை இல்லாத சூன்னியமான அந்த மாளிகையில் தாய்மார்களை இறக்கி விட்டு, விடை பெற்றுக்கொண்டு, சபா மண்டபத்தில் வசிஷ்டர் முதலானவர்களுக்குச் சொன்னான்.


“என் துக்கம் மிகப் பெரிது, அதை நந்திக் கிராமத்திலிருந்து சகித்துக்கொண்டு, நான் ராமனிடம் வாக்குக் கொடுத்தபடி காரியங்களை அங்கிருந்து கொண்டே பார்ப்பேன். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்றான்.


அவ்வாறே செய்யப்பட்டு, சபை கூட்டி, “இந்த ராஜ்யம் ராமனுடையது. தாற்காலிகமாக என்னிடம் ஒப்புவித்திருக்கிறான். அண்ணனுக்குப் பதிலாக அவன் மிதியடியை ஆசனத்தில் அமர்த்தியிருக்கிறேன். அதன் அடிமையாக நான் அரசாங்கம் நடத்தி வருகிறேன்” என்று பரதன் ராஜ சபையில் பிரதிக்ஞை செய்தான்.


அப்படியே ராஜ்ய பாரத்தை மந்திரிகளுடைய உதவியைக் கொண்டு நல்ல முறையில் நந்திக் கிராமத்திலிருந்து கொண்டு ராமனுடைய வனவாசம் முடிந்து, சீதா சமேதமாக சக்கரவர்த்தித் திருமகன் திரும்பி வரும் வரையில் ஒரு தவமாகக் கருதி நடத்தி வந்தான்.


தனக்கென்றல்லாமலும், வேறு எவ்விதப் பற்றும் கொள்ளாமலும் பகவானுடைய சரணங்களில் பலனைச் சமர்ப்பித்து லோகோபகாரத்தை முன்னிட்டுக் கடமைகளைச் சரிவரச் செய்வது தவமேயல்லவா? ராமன் காட்டில் தவமிருந்த பதினான்கு வருஷ காலம் பரதன் அயோத்தியையில் நந்திக் கிராமவாசியாகத் தவம் செய்து வந்தான் என்பது பெரியோர்களுடைய விளக்கம்.

*

சித்திரகூடப் பிரதேசத்தில் கொடிய ராக்ஷசர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலைவன், ராவணனுடைய தம்பி கரன். இவனுக்கு ராமன் பேரில் வெகு துவேஷம். இந்தக் காரணத்தால் கரனும் அவனைச் சேர்ந்தவர்களும் சித்திரகூட வனத்துக்குள் அடிக்கடி பிரவேசித்துத் தங்களை இம்சை செய்து வருவதால், ரிஷிகள் அவ்விடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக நிச்சயித்திருப்பதாக ராமனிடம் அவர்கள் தெரிவித்தார்கள். ராமன் எவ்வளவு தைரியம் சொல்லியும் அவர்கள் கேட்காமல், அவ்வாறே அந்த இடத்தை விட்டு வேறிடம் போய் விட்டார்கள்.


பரதன் திரும்பிப் போனது முதல் ராமனுக்குச் சித்திரகூடத்தில் மன நிம்மதியில்லை. தாய்மார்களும் தம்பியும் வந்து தன்னைச் சந்தித்துப் பேசியது அவனுக்குச் சதா நினைவிலிருந்து வந்தது. சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்கும். அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்வது நலம் என்று அவனுக்கும் தோன்றிற்று. ரிஷிகள் போய்விட்டபிறகு ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் சித்திரகூடத்தை விட்டு, தண்ட காரண்யத்தில் வேறு இடம் பார்த்துக்கொள்ள நிச்சயித்தார்கள்.


இவ்வாறு தீர்மானித்த பின் ராம லக்ஷ்மணர்கள் சீதையுடன் அத்திரி மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்று அவரை வணங்கித் தங்கள் யோசனையைத் தெரிவித்தார்கள். அத்திரி மகரிஷியின் மனைவி மகா தபஸ்வியான அனசூயை. சீதை அவளை வணங்கி அவளுடைய ஆசியைப் பெற்றாள். “வனம் சென்ற புருஷனுடன் நீ கஷ்டங்களை அனுபவித்து எல்லோருக்கும் வழிகாட்டி வருகிறாய்” என்று சீதையை மிகவும் பாராட்டித் தன் அன்புக்கு அடையாளமாக வஸ்திரமும், மங்கள ஆபரணங்களும், மஞ்சள் குங்குமமும், பரிமளப் பொடியும் கொடுத்தாள். அனசூயை மகா பாக்கியவதி. அவள் கொடுத்த வஸ்திராபரணம் சீதைக்கு அழியாத அழகும் ஆன்ம சக்தியும் தந்தன.


அவற்றைச் சீதை பெற்றுக் கொண்டு, “என் கணவர் சக்கரவர்த்தித் திருமகன் என் மேல் பெற்ற

தாயின் அன்பையும் ஒன்று சேர்த்துச் செலுத்தி வருகிறார். எனக்கு என்ன குறை?” என்றாள்.

பிறகு போக வேண்டிய வழி கேட்டுத் தெரிந்து கொண்டு மூவரும் சென்றார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அருணகிரிநாதர் வழங்கிய அற்புத ராமாயணம்! - பி.என்.பரசுராமன்

ஆண்டாள் கூறும் நப்பின்னை பிராட்டி யார்? - வேளுக்குடி கிருஷ்ணன்

ஸ்ரீ ஆண்டாளின் அழகிய காதல் - அரவிந்தா பார்த்தஸாரதி