வியாழன், 7 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 250

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்து  நான்காவது அத்தியாயம்

(ப்ராஹ்மண சாபத்தினால் ஸர்ப்ப (பாம்பு) ஜன்மம் (பிறவி) பெற்ற ஸுதர்சனனென்னும் வித்யாதரனை சாபத்தினின்று விடுவித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒரு ஸமயம் கோபாலர்கள், சிவராத்ரியில் பரமசிவனுடைய யாத்ரோத்ஸவத்தைப் பணியவேண்டுமென்னும் விருப்பம் உண்டாகப் பெற்று, எருதுகள் பூட்டப்பெற்ற வண்டிகளின்மேல் ஏறிக் கொண்டு அம்பிகா வனத்திற்குச் சென்றார்கள். அவர்கள், அவ்வனத்திற்கு அருகாமையிலுள்ள ஸரஸ்வதீ நதியில் ஸ்னானம் செய்து, சந்தனம், புஷ்பம், முதலியவைகளால் ப்ரபுவான பசுபதியையும் அம்பிகா தேவியையும் பக்தியுடன் பூஜித்தார்கள். மற்றும், அவர்கள் “தேவனாகிய பசுபதி நம் விஷயத்தில் ப்ரீதி அடைய வேண்டும்” என்னும் அபிப்ராயமுடையவர்களாகி, ப்ராஹ்மணர்களுக்குப் பசுக்களையும் ஸ்வர்ணத்தையும், வஸ்த்ரங்களையும் தேனோடு கூடின மதுரமான அன்னத்தையும் கொடுத்தார்கள். நந்தன் முதலிய அந்தக் கோபர்கள், அப்பால் ஜலத்தை மட்டுமே உட்கொண்டு, ப்ரஹ்மசர்ய வ்ரதத்தில் ஊக்கமுற்று, அன்றிரவெல்லாம் அந்த ஸரஸ்வதி நதியின் கரையிலேயே வஸித்திருந்தார்கள். 

அந்த அம்பிகாவனத்தில் பேருருவமுடைய ஒரு ஸர்ப்பம் (பாம்பு) மிகவும் பசித்து வலித்திருந்தது. அந்த ஸர்ப்பம் (பாம்பு) திடீரென்று அவ்விடம் வந்து, படுத்துக் கொண்டிருக்கின்ற நந்தகோபனைப் பிடித்து விழுங்க முயன்றது. அவ்வாறு ஸர்ப்பத்தினால் (பாம்பினால்) பிடியுண்ட அந்நந்தகோபன், “க்ருஷ்ணா! க்ருஷ்ணா! அப்பனே! பெரிய ஸர்ப்பமொன்று (பாம்பு) என்னைப் பிடித்து விழுங்குகின்றது. உன்னைச் சரணம் அடைந்த என்னை இந்த ஸர்ப்பத்தினின்று (பாம்பிடமிருந்து) விடுவிப்பாயாக” என்று முறையிட்டான். அந்த நந்தனுடைய கூக்குரலைக் கேட்டு கோபாலர்கள் அனைவரும் விரைவுடன் எழுந்து, நந்தன் ஸர்ப்பத்தினால் (பாம்பினல்) பிடியுண்டிருப்பதைக் கண்டு கலக்கமுற்று, அந்த ஸர்ப்பத்தைக் (பாம்பைக்) கொள்ளிக்கட்டைகளால் அடித்தார்கள். அது அவற்றால் அடியுண்டும், அந்நந்தனை விடவில்லை. 

அப்பால், தன்னைச் சரணம் அடைந்தவர்களுக்கு ரக்ஷகணாகிய ஸ்ரீக்ருஷ்ணன் வந்து, அந்த ஸர்ப்பத்தைத் (பாம்பைத்) தன் பாதத்தினால் ஸ்பர்சித்தான். அந்த ஸர்ப்பமும் (பாம்பும்) ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதம் பட்ட  மாத்திரத்தில் பாபம் தீரப்பெற்று, ஸர்ப்ப (பாம்பு) சரீரத்தைத் துறந்து, வித்யாதரர்களால் புகழத் தகுந்த வித்யாதர உருவம் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனை நமஸ்கரித்து நிற்க, மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனும், எதிரில் நமஸ்காரம் செய்து ஒளிப் பெருக்குடன் திகழ்கின்ற மேனியைப் பெற்று நிற்கின்றவனும், ஸ்வர்ணமாலை தரித்திருப்பவனுமாகிய அப்புருஷனை நோக்கி இவ்வாறு வினவினான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- அழகிய காட்சியுடையவனே! நீ யார்? பெரிய ஒளிப் பெருக்குடன் திகழ்கின்றாய். இப்படிப்பட்ட நீ, நிந்தைக்கிடமான இந்த ஸர்ப்ப (பாம்பு) ஜன்மத்தை (பிறவியை) அடையும்படி எப்படி மெய்மறந்து நடந்தாய்?

புருஷன் சொல்லுகிறான்:- நான் ஸுதர்சனன் என்று ப்ரஸித்தனான ஒரு வித்யாதரன். செல்வப் பெருக்குடனும், பெரிய ஸௌந்தர்ய (அழகு) ஸம்ருத்தியுடனும் கூடிய நான், ஒருகால் விமானத்தின் மேல் ஏறித் திசைகளையெல்லாம் சுற்றிக் கொண்டு வருகையில், ஸௌந்தர்யத்தினால் (அழகினால்) கர்வமுற்றுக் குரூபிகளான (அழகற்ற) அங்கிரஸ ரிஷிகளைக் கண்டு பரிஹாஸம் (கேலி) செய்தேன். அப்பொழுது என்னால் பரிஹாஸம் (கேலி) செய்யப்பட்ட அம்முனிவர்கள், என்னுடைய பாபத்தினால் தூண்டப்பட்டு, எனக்கு இந்த ஸர்ப்ப (பாம்பு) ஜன்மத்தை இயன்றார்கள். அவ்வங்கிரஸ முனிவர்கள் என்னால் பரிஹாஸம் (கேலி) செய்யப்பட்டும், மன இரக்கமுடையவர்கள் ஆகையால், என்னை அனுக்ரஹிக்கும் பொருட்டே, எனக்கு இச்சாபம் கொடுத்தார்கள். ஏனென்றால், நான் மூன்று லோகங்களுக்கும் குருவாகிய உன் பாதத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டு, பாபங்களெல்லாம் தீரப் பெற்றேனல்லவா? 

பயங்களைப் போக்கும் தன்மையனே! ஸம்ஸாரத்தினின்றும் பயந்து உன்னைச் சரணம் அடைந்தவர்களுடைய பயத்தைப் போக்குபவனும், ஜகத் குருவுமாகிய உன்னை, உன் பாத ஸ்பர்சத்தினால் சாபத்தினின்றும் விடுபட்ட நான் போய் வருகிறேனென்று கேட்டுக் கொள்ளுகிறேன். சிந்திக்க முடியாத பலவகை ஆச்சர்ய சக்திகளுடையவனே! மஹாபுருஷா! ஸத்புருஷர்களுக்கு ரக்ஷகனே! உன்னை நான் சரணம் அடைந்தேன். ஸமஸ்த லோகங்களுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! ஆச்ரிதர்களைக் (பக்தர்களைக்) கைவிடாத மஹாநுபாவனே! உன்னைக் கண்ட மாத்ரத்தில் ப்ராஹ்மண சாபத்தினின்று விடுபட்டேனென்பது ஆச்சர்யமன்று. ஏனென்றால், உன்னுடைய நாமத்தை உச்சரிக்கும் புருஷன், தன்னையும், கேட்கிற ஸமஸ்த ஜனங்களையும், அந்த க்ஷணமே பரிசுத்தம் செய்கிறான். அத்தகைய ப்ரபாவமுடைய நாமங்கள் அமைந்த உன் பாதத்தினால் நேரே ஸ்பர்சிக்கப்பட்ட நான் சாபத்தினின்று விடுபட்டதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? உன் பெருமைக்கு இது ஒரு பொருளோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸுதர்சனன் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, அவனை ப்ரதக்ஷிணம் (வலம்) செய்து நமஸ்கரித்து, ஸ்வர்க்கம் போய்ச் சேர்ந்தான். நந்தனும் ஸர்ப்பத்தினால் (பாம்பினால்) நேரும் வருத்தத்தினின்று விடுபட்டான். மன்னவனே! அப்பால் கோபர்கள் ஸ்ரீக்ருஷ்ணனுடைய அஸாதாரணமான வைபவத்தைக் கண்டு வியப்புற்ற மனமுடையவர்களாகி, அந்த அம்பிகாவனத்தில் நியமத்துடன் இருக்கையாகிற வ்ரதத்தை முடித்து, ப்ரீதியுடன் ஸ்ரீகருஷ்ணனுடைய ப்ரபாவத்தை மொழிந்து கொண்டே கோகுலத்திற்கு வந்து சேர்ந்தார்கள். 

பிறகு, ஒரு காலத்தில், அற்புதமான பராக்ரமமுடைய ராமக்ருஷ்ணர்கள் இருவரும் ராத்ரியில் அரண்யத்தில் சென்று, கோகுலத்திலுள்ள கோபஸ்த்ரீகளின் இடையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். உடம்பெல்லாம் நன்றாக அலங்கரித்துக் கொண்டு, சந்தனம், குங்குமம் முதலியன பூசிப் பூமாலைகள் சூடி, நிர்மலமான வஸ்த்ரங்களைத் தரித்து, நிலை நின்ற நட்புடைய கோபஸ்த்ரீகளால் இனிதாகப் பாடப் பெற்று விளங்குகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ண, ராமர்கள், சந்த்ரனும், நக்ஷத்ரங்களும் உதித்து மலர்ந்த மல்லிப் பூக்களின் வாஸனையால் மதித்த மதுகரங்கள் (வண்டுகள்) சூழ்ந்திருப்பதும், நெய்தல் முதலிய புஷ்பங்களின் மணத்தைக் கொண்டு வருகிற மந்த மாருதத்தினால் (தென்றல்) வீசப் பெற்றிருப்பதுமாகிய முன் இரவைப் புகழ்ந்து கொண்டு, ஸமஸ்த பூதங்களின் மனத்திற்கும், செவிகளுக்கும், இனிதாயிருக்கும் படி ஷட்ஜாதி ஸ்வரங்களின் (நிஷாத, ரிஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத, பஞ்சம என்ற ஏழு வகை ஸ்வரங்களின்) ஸமூஹங்களை மூர்ச்சனையில் நிறுத்தி, இருவரும் ஒரே ஸமயத்தில் பாடினார்கள். 

மன்னவனே! கோபிகைகள் அந்த கானத்தைக் கேட்டு, மதிமயங்கி, அரையில் உடுத்தின பட்டாடையும் அவிழ்ந்து, தலைமயிர்களில் சூடின பூமாலையும் நழுவித் தாங்கள் அவ்வாறு இருப்பதையும் அறியாதிருந்தார்கள். இவ்வாறு ராம க்ருஷ்ணர்கள் மதித்தவர்கள் போன்று (மனம் நெகிழ்ந்து, வெளி உலக உணர்வின்றி) யதேஷ்டமாகப் பாடுவதும், ஆடுவதுமாயிருக்கையில், சங்கசூடனென்னும் பெயர் பெற்ற குபேரனுடைய வேலைக்காரன் ஒருவன் அவ்விடம் வந்தான். அவன் மனத்தில் சிறிதும் அச்சமின்றி, அந்த ராம க்ருஷ்ணர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், அவர்களை நாதர்களாக உடையதும், “க்ருஷ்ணா! ராமா” என்று முறையிடுவதுமாகிய கோப ஸ்த்ரீகளின் கூட்டத்தைப் பலாத்காரமாக வடதிசைக்குத் துரத்திக் கொண்டு போனான். அப்பொழுது, ப்ராதாக்களாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள் இருவரும் தங்கள் பரிக்ரஹமாகிய (பரிவாரம், உடன் இருப்பவர்களான) கோபஸ்த்ரீகள், புலியினால் பிடியுண்ட கோக்கள் (பசுக்கள்) போன்று “க்ருஷ்ணா! ராமா!” என்று முறையிடுவதைக் கண்டு பின் தொடர்ந்தோடினார்கள். 

மஹாபலிஷ்டர்களாகிய அந்த ராம க்ருஷ்ணர்கள், கையில் ஸால வ்ருக்ஷங்களைப் பிடுங்கியெடுத்துக் கொண்டு, பயப்பட வேண்டாமென்று உரக்க அபயம் மொழிந்து கொண்டே, விரைந்தோடிச் சென்று, யக்ஷர்களில் அதமனாகிய (தாழ்ந்தவனாகிய) அந்தச் சங்கசூடனைக் கிட்டினார்கள் (அடைந்தார்கள்). அந்த யக்ஷாதமன் கால ம்ருத்யுக்களைப்போல அருகாமையில் வந்திருக்கின்ற அந்த ராம க்ருஷ்ணர்களைக் கண்டு பயந்து, ஸ்த்ரீ ஜனங்களை விட்டு, பிழைக்க விரும்பி, சரணாகதியை அறியாத மூடனாகையால், அவர்களை வணங்கிப் பிழைக்காமல், வெறுமனே ஓடிப் போனான். ஸ்ரீக்ருஷ்ணன், அவன் சிரத்திலுள்ள ரத்னத்தைப் பறிக்க விரும்பி, அவன் எங்கெங்கு ஓடுகிறானோ அங்கெல்லாம் துரத்திக் கொண்டோடினான். பலராமனோவென்றால், ஸ்த்ரீகளைக் காத்துக் கொண்டு அவ்விடத்திலேயே இருந்தான். 

மன்னவனே! அப்பால், பகவான் அருகாமையில் எதிரே வந்து, துர்ப்புத்தியனான (கெட்ட புத்தி உடைய) அந்தச் சங்கசூடனுடைய சூடாமணியோடு கூடிய சிரத்தை முட்டியினால் அடித்தான். ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு சங்கசூடனைக் கொன்று, அவன் தலையிலிருந்த மணியைக் கொண்டு வந்து, கோப ஸ்த்ரீகள் பார்த்துக் கொண்டிருக்கையில், ப்ரீதியுடன் தமையனான பலராமனுக்குக் கொடுத்தான். 

முப்பத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக