இருபத்து நான்காவது பாசுரம்
(கண்ணன், சிங்கம் காட்டில் பிடறி சிலிர்த்து எழுந்து எப்படி முழங்கி வருமோ, அதுபோல் கட்டிலில் இருந்து இறங்கி ஆண்டாள் கூறியபடி சிங்காசனத்தில் அமரச்சென்றான். ஆண்டாள் மற்றும் அவளது தோழியர்களுக்கு கண்ணனின் ‘கிடந்த’ அழகை பார்த்தாகி விட்டது, அடுத்து அவனது ‘நடை’யழகை அனுபவிக்க வேண்டும் அல்லவா? அது தான், கண்ணனை அவனது திருமாளிகையை விடுத்து 'நடந்து' அரசவை மண்டபத்துக்கு வருமாறு கோதை வேண்டுகிறாள்! அவ்வாறு வரும் கண்ணனை போற்றிப் பாடுகிறாள் இப்பாசுரத்தில். இவள் தந்தையோ ‘பல்லாண்டு’ பாடியவர். இவளுக்கும் அந்த ஆசையிருக்காதா என்ன. வாருங்கள் இப்பாசுரத்தில் உட்புகுவோம்.)
“கோதே, அருமையடி நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க கண்ணன் கட்டிலிலிருந்து இறங்கி வருகிறாரடி.”
“ஆம் பாவாய். அதோ முதலடி தரையில் வைக்கிறார். ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’....”
“என்ன கோதை ‘அன்று’ என்று கூறிவிட்டாய். அவர் என்றும் தானே அளந்து கொண்டு இருக்கிறார்.”
“பாவாய், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, அன்று இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வேண்டிக் கொண்டதற்காக வாமணனாய் அவதாரம் செய்து மகாபலியிடம் மூவடி மண் கேட்டு இவ்வுலகத்தையே அளந்தார். இரண்டு அடிகளில் வானையும் மண்ணையும் அளந்து மூன்றாமடியில் மாவலியின் தலையில் வைத்து அவனை பாதாளலோகம் அனுப்பி வைத்தான். இன்று நாம் அனைவரும் அவனுக்காக காத்திருந்தும் கணிய இவ்வளவு நேரமா என்பதை அவருக்கு தெரிய படுத்தவே இவ்வாறு பாடினேன். மேலும் இவ்வளவு பெரிய கார்யத்தை செய்தருளிய நம் வாமனப் பெருமானுக்கு ‘பல்லாண்டு’ யாரும் பாடவில்லையே என்பதால் தான் நான் முதல் வார்த்தையாக தெரிவித்தேன்.”
கண்ணன் முதல் அடி எடுத்து இரண்டாம் அடி எடுத்து வைத்தான். ஆண்டாள் ஆரம்பித்தாள்.
‘சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திரல் போற்றி’
“கோதே, ‘செற்றாய் திரல்’ என்றால்….”
“பாவாய், சீதையை கடத்திச் சென்ற இராவணனை கால்நடையாகவே தேடிப்போய் இலங்கை நகரத்திற்கேச் சென்று இலங்கேசுவரனை அழித்து அவன் அதுவரை சேர்த்து வைத்த திரல் அதாவது பராக்ரமம் புகழ் அனைத்தையும் ‘செற்றாய்’ அதாவது அழித்தவனே உன்னை வணங்குகிறேன் நான். உன் நாமத்தைப் போற்றுகிறேன்.”
கண்ணன் நின்றான் திரும்பி பார்த்தான். நேராக ஆண்டாளை நோக்கி…
“ஆண்டாள், எனை ஆண்டவளே, என் கடந்த கால அவதாரப் புகழ்களை மட்டும் பாடுகின்றாயே. நான் இப்பிறவியில் ஏதும் செய்யவில்லையா அல்லது உனக்குத் தெரியவில்லையா.”
“என்ன சுவாமி இப்படி கேட்டுவிட்டீர்கள். நீங்கள் செய்த பராக்ரமங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல இதோ ஆரம்பித்துவிடுகிறேன்.”
‘பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி’ நீங்கள் சின்னஞ்சிறுவயதில் வண்டி வடிவில் வந்த சகடாசுரனை காலால் உதைத்து அதை தூள் தூளாக்கி அவ்வசுரனை அழித்தாயே உன் புகழை போற்றுகின்றோம்.”
“கோதே, அவ்வளவுதானா….”
ஏக்கப்பார்வையுடன் கண்ணன்….
“இல்லை சுவாமி, ‘கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி’ தாங்கள் அதே சிறு வயதில் மாடு மேய்க்கும்போது கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தூக்கி அவனை, விளாமரத்தின் வடிவில் வந்த கபித்தாசுரன் மேல் வீசியெறிந்து அவனையும் சேர்த்து அழித்த உன் லீலையை என்னவென்று சொல்வது. இந்நிகழ்வையே என் தந்தை ‘கன்றினை வாலோலைக் கட்டிக் கனிகள் உதிர எறிந்து' என்று பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறாரே அது மறந்துவிட்டதா சுவாமி.”
“சரி கோதை, என் கைகளால் தான் வத்சாசுரனை தூக்கி எறிந்தேன் என் கைகளை போற்றிப் பாடாமல் என் கால்களை போற்றிப் பாடுகிறாயே.”
“ஆம் கண்ணா, எங்களுக்கு தெரிந்ததெல்லாம் உமது திருவடிகள் மட்டுமே. நீங்கள் கண்று வடிவ அசுரனை தூக்கியெறிய சுழன்றபோது உன் கால்களின் அழகிருக்கிறதே., ஆகா என்ன அழகு என்ன வேகம் அவையே என் கண்களில் இன்னும் இருக்கின்றதே.”
“அற்புதம் கோதை, மேலும் ஏதாவது உள்ளதா.”
“ஆம் கண்ணா, ‘குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி’ அன்று இந்திரனுக்கு பாடம் புகட்ட அவனுக்கு நடத்தப்பட்ட இந்திரவிழாவினை தடுத்து நிறுத்தி கோவர்த்தன மலைக்கு பூஜையெடுக்க வைத்தாய். அதனால் கோபமுற்ற இந்திரன் பெருமழையாய் பெய்தபோது அந்த கோவர்த்தன மலையையே குடையாய் உன் சுண்டுவிரலில் தூக்கி நின்றதோடு மட்டுமல்லாமல் உன் மற்றொரு கையால் அருகிலிருந்த கன்றைத் தடவி நின்றாயே அந்நிகழ்வை, அக்குணத்தை நாங்கள் போற்றாமல் இருப்போமா. மேலும் பகைவர்களை வேரோடு அழிக்க எப்பொழுதும் உன் கையில் வீற்றிருக்கும் வேலையும் போற்றுகிறேன். என்றென்றும் உன்னை பாடி பணிந்து உன் அருள் எனும் பரிசினை நாங்கள் பெற எங்களுக்கு அருள வேண்டும். கண்ணா மணிவண்ணா.
‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்’
ஆண்டாள் திருவடிகளே சரணம்.