திருப்பாவை - 25 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்து ஐந்தாவது பாசுரம்

“கோதே, நாம் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கண்ணன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். நாம் நோற்ற பாவை நோன்பையும் அதற்கான பலனையும் கேட்டுப்பெறலாமே.”


“இல்லை பாவாய், நாம் அவனுக்கு பல்லாண்டு பாடியும் அவர் சந்தோஷம் அடையவில்லை என்று நினைக்கிறேன். அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. அவரின் வீரத்தைப் பற்றி பாடிவிட்டோம் ஆனால் அவரின் அவதாரத்தை பற்றிப் பாடினால் ஒருகால் அவருக்கு திருப்தி உண்டாகுமோ என்று தோன்றுகிறது.”


“அப்படியா கோதே, அவரின் அவதாரத்தை பற்றியென்றால்….”


“பாவாய் பாடுகிறேன் கேளாய். ‘ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர...’


“கோதே ஒரு சந்தேகம். பாசுரத்தில் கண்ணனின் அன்னையின் பெயரையே குறிப்பிடலாமே. ஏன் அவ்வாறு பாடவில்லை.”


“பாவாய் நாம் நம்முடைய மாமியார் பெயரை சொல்லலாமா. கூடாதல்லவா அதனால் தான். மேலும் நம் கண்ணன் ஒரே நாளில், ஒரே இரவில் மதுராவில் சிறையில் பிறந்து, ஆயர்ப்பாடிக்கு இடம் பெயர்ந்தான். ஒரு தாய்க்கு மகனாக பிறந்து அதே இரவில் இன்னொரு தாய்க்கு மகனாக ஒளித்து வளர்ந்தார்.”


“ஏன் கோதே, அவ்வாறு ஒளித்து வளர்ந்தார்.”


“பாவாய், நம் கண்ணனின் மாமா கம்சனுக்கு எட்டாவது கர்ப்பத்தில் பிறக்கும் சிசுவால் மரணம் என்று அசரீரி ஒலித்ததால் தன் தங்கை என்றும் பாராமல் அவரை சிறையிலிட்டான். தன் அவதார நோக்கம் நிறைவேற சிறைச்சாலையிலேயே பகவான் பிறந்தார்.” 


“கோதே, ஏன் நம் பகவான் கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார்.”


“பாவாய், நம் பகவானுக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்றாம் எப்பொழுதென்றால் இராமாவதாரத்தின் போது. தாய் சீதை பத்து மாதங்கள் அசோகவனத்தில் சிறையிலிருந்தபோது பரமாத்மா தானும் சிறைக்குள் இருக்கவேண்டும் என்று நினைத்தானாம். அதனை அப்பொழுது நிறைவேற்ற முடியாததால் இப்பொழுது பிறக்கும்போதே சிறையில் இருந்தார்.”


“சரி கோதே, நம் பகவான் நினைத்த நேரத்தில் நரசிம்மாவதாரம் எடுத்ததைப் போல் கம்சனை ஒரு நொடியில் அழிக்கலாமே அதை விடுத்து ஏன் மற்றோரிடத்தில் ஒளிந்து வளர வேண்டும்.”


“நங்காய், கம்சனுக்கு திருந்துவதற்கு வாய்ப்புக் கொடுக்கவே அப்படி செய்தாரடி. கம்சன் திருந்தினானா இல்லையே., ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பி வைத்து கண்ணனை அழிக்க நினைத்தான். ஆனால் நம் கண்ணனோ அவற்றையெல்லாம் முறியடித்து கம்சனின் வயிற்றில் நெருப்பாய் நின்றான். அப்படிப்பட்ட கண்ணனை மட்டுமே நம்பி அவனிடம் மட்டுமே யாசிக்க வந்துள்ளோம். எதை யாசிக்கவென்றால் அவன் அருள், அவனுக்கு சேவை செய்ய அவனை மட்டுமே பாட நமக்கு அருள பிரார்த்திக்கின்றோம். அருள்வாய் கண்ணா.


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கில னாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை