சனி, 9 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 251

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தைந்தாவது அத்தியாயம்

யுகள கீதம் (இரண்டு இரண்டு ச்லோகங்களாக அர்த்தம் கொள்ள வேண்டும்)

(கோபிகைகள் பகலில் ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்திருக்க முடியாமல் புலம்புதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீக்ருஷ்ணன், பசுக்களை ஓட்டிக் கொண்டு வனத்திற்குப் போகையில், அவனைத் தொடர்ந்த மனமுடைய கோபிகைகள், அவனுடைய லீலைகளை ஒருவருக்கொருவர் பாடிக் கொண்டு, பகல்களையெல்லாம் பெரும் வருத்தத்துடன் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- கோபிமார்களே! ஸ்ரீக்ருஷ்ணன், வலக் கபோலத்தை (கன்னத்தை) வலத்தோள் மேல் சாய்த்துப் புருவங்களை உயர நெரித்து, மேல் விரல்களால் புல்லாங்குழல் ரந்த்ரங்களை (துளைகளை) ஸ்பர்சித்துக் (தொட்டுக்) கொண்டு, வேணுவைத் (குழலைத்) தன் கனிவாயில் வைத்து, ஊதுகையில், தெய்வ மடந்தையர்கள் விமானங்களில் தத்தம் கணவர்களுடன் கலந்திருப்பினும், அந்த வேணுகானத்தைக் (குழல் இசையைக்) கேட்டு, முதலில் வியப்புற்றுத் தங்கள் மனத்தை மன்மத பாணங்களுக்கு அர்ப்பணம் செய்து, வெட்கமுற்று, அரையாடையின் முடி அவிழ்ந்திருப்பதையும் அறியாதபடி மோஹித்தார்கள். இத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய விரஹத்தை (பிரிவை) எவ்வாறு பொறுப்போம்? 

பெண்களே! இந்த ஆச்சர்யத்தைக் கேட்பீர்களாக! இது மிகவும் ஆச்சர்யம்! முத்து மாலைகளில் படிந்த நிர்மலமான மந்தஹாஸமுடையவனும், மார்பில் மின் போல் திகழ்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியுடையவனுமாகிய இந்நந்தகோப குமாரன் தன்னைப் பிரிந்து வருந்துகின்ற நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் துக்கத்தை விளைப்பவனாகி, வேணுகானம் (குழல் இசை) செய்கையில், கோகுலத்திலுள்ள எருதுகளும், மிருகங்களும், பசுக்களும் வேணுகானத்தை (குழல் இசையை) வெகு தூரத்தில் கேட்டு, மனம் பறியுண்டு, திண்பதற்காகக் கவ்வின புற்கவளங்களைப் பற்களில் கடித்து, காதுகளை நெரித்து, உறக்கமுற்றவை போன்று எழுதின சித்ரங்களோடு ஒத்திருந்தன. 

தோழீ! மயில் தோகை, பூங்கொத்து இவற்றை தலையில் சூடி, சிவப்பு தாதுப்பொடி, தளிர் இலைகள்  இவைகளால் உடலை மறைத்து அலங்கரித்துக்கொண்டு, யுத்தத்திற்கு முயன்ற மல்லர்களைப் போல கச்சை கட்டி வேஷம் தரித்த ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடும் கோபர்களோடும் கூடிய பசுக்களை வேணுகானத்தினால் (குழல் இசையால்) அழைக்கையில், அசேதனங்களாகிய (அறிவற்ற ஜடப்பொருட்களான) நதிகளும் காற்றில் அடித்துக் கொண்டு வருகின்ற அவனுடைய பாதார விந்தங்களுடைய பராகத்தைப் (திருவடித் தாமரையின் தூள்களைப்) பெற விரும்பி, நடையற்று, நிரம்பவும் புண்யம் செய்ய பெறாதவையாகையால், நம்மைப்போலவே அது நேரப்பெறாமல், அலைகளாகிய புஜங்களைப் ப்ரேமத்தினால் அசைத்து, மேல் பெருகிப் போக முடியாத ஜலமுடையவைகளாகி, அப்படியே நிற்கின்றன. 

ஆதிபுருஷன் போல அழியாத செல்வப்பெருக்குடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைத் தொடர்ந்து வருகின்ற கோபர்களால் பாடப்பட்ட வீர்யமுடையவனாகி, வனத்தில் திரிந்து கொண்டு, மலைச் செறிவுகளில் மேய்கின்ற பசுக்களை அவ்வவற்றின் பெயர்கள் உள்ளடங்கப் பெற்ற வேணுகானத்தினால் (குழல் இசையால்) அழைக்கையில், பாரத்தினால் தழைத்த கிளைகளுடையவைகளும், பூ, காய், பழம் இவை நிறைந்தவைகளுமாகிய காட்டுக் கொடிகளும், மரங்களும், தேன் தாரைகளைச் சொறிந்தன. இதென்ன ஆச்சர்யம்! அழகர்களில் சிறந்தவனும், அழகிய நெற்றித் திலகமுடையவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வனமாலையில் கோர்க்கப்பட்ட திவ்யகந்தமுடைய (நறுமணம் உடைய) துளஸியின் தேனைப் பருகி மதித்த வண்டினங்கள், உரக்கப்பாடுகிற இஷ்டமான கானத்தை ஆவலுடன் அங்கீகரித்துத் தன் கொவ்வை செவ்வாயில் வேணுவைத் (குழலைத்) தொடும் பொழுது, தாமரைத் தடங்களிலுள்ள ஹம்ஸங்களும், மற்றுமுள்ள பறவைகளும், அழகியதான அந்த வேணுகானத்தினால் (குழல் இசையால்) இழுக்கப்பட்ட மனமுடையவைகளாகி, அருகாமையில் வந்து, வேறு விஷயங்களினின்று மனத்தை இழுத்து, அம்மனத்தில் அவன் உருவத்தை மனனம் செய்து கொண்டு, அவனைப் பணிந்தன.  

ஆ! அப்படிப்பட்ட ஸ்ரீக்ருஷ்ணனை நாம் பிரிந்திருக்கலாயிற்றே! இதென்ன வருத்தம்! ஓ, கோபிகைகளே! ஸ்ரீக்ருஷ்ணன் பலராமனோடு கூடிப் பூமாலைகளால் காதுக்கு அலங்காரம் செய்து, சிரத்தில் முத்து மாலைகளை அணிந்து, மிகவும் அழகனாகிப் பர்வதத்தின் (மலைகளின்) தாழ்வரைகளில் திரிந்து கொண்டு, ஸந்தோஷமுற்று, ஜகத்தையெல்லாம் ஸந்தோஷம் அடையச் செய்பவனாகி வேணுகானம் (குழல் இசை) செய்கையில், மேகம் மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய எதிரில் சென்று, அவனுடைய வேணுகானத்திற்கு (குழல் இசைக்கு) விரோதமாக நாம் கர்ஜனை செய்வோமாயின், பெரியோர்களை அதிக்ரமித்த (மீறிய) அபசாரத்தில் விழுவோமென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), அவனெதிரில் வருகிறதுமில்லை; உரக்கக் கர்ஜிக்கிறதுமில்லை; அவ்விடத்திலேயே இருந்து வேணுவின் (குழலின்) சப்தத்தை அனுஸரித்து, மெல்ல மெல்ல கர்ஜனை செய்கின்றது; மற்றும், மேனியின் ஒளியாலும், ஜகத்தின் தாபங்களைப் போக்குகையாலும், தனக்கு  நண்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் மேல் பூமழை பொழிந்து, தன் நிழலால் அவனுக்குக் குடையும் பிடித்தது. 

நல்லியற்கையுள்ள யசோதே! பலவகையான இடையர் விளையாட்டுக்களில் ஸமர்த்தனாகிய உன் புதல்வன், கொவ்வைப், பழம் போன்ற தன் செவ்வாயில் வேணுவை (குழலை) வைத்து, வேணு (குழல்) வாத்ய விஷயங்களில் பலவகையான விகல்பங்களைத் (பல ஸ்வர ஆலாபனைகளைத்) தானே ஊஹித்து, நிஷாத - ருஷபாதி - ஸ்வர ஜாதிகளை ஆலாபிக்கையில், இந்த்ரன், ருத்ரன், ப்ரஹ்மன் முதலிய தேவதைகள் அவ்வேணுகானம் (குழல் இசை) எத்திசையினின்று அடிக்கடி கேட்கின்றதோ, அத்திசையில் கழுத்தையும், மனத்தையும் தாழ்த்தி, அதை  நன்றாகக் கேட்டு, பண்டிதர்களாயினும், அது இன்ன பிரிவில் சேர்ந்ததென்கிற அதன் உண்மையை அறிய முடியாமல் மயங்கினார்கள். த்வஜம், வஜ்ரம், தாமரைமலர், மாவெட்டி முதலிய விசித்ரமான அடையாளங்கள் அமைந்த அடிகளாகிற தாமரையிதழ்களால் பசுக்களின் குளம்படிகள் (காலடிகள்) குத்தி வருந்துகின்ற கோகுல பூமியின் வருத்தத்தைப் போக்கிக் கொண்டு உலாவுகின்றவனும், பெரிய மத்த கஜத்தின்  நடை போன்ற நடையுடையவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், வேணுகானம் (குழல் இசை) செய்து கொண்டு நடக்கையில், விலாஸங்களோடு கூடின அவனுடைய கண்ணோக்கத்தினால் காம விகாரம் (காதல் கிளர்ச்சி) வேகமாக விளையப் பெற்று, நாங்கள் அசையாப் பொருள்களான வ்ருக்ஷங்கள் (மரங்கள்) போல எவ்வகைச் சேஷ்டையும் (செயலும்) இன்றி, மதிமயங்கித் தலை அவிழ்ந்திருப்பதையாவது, ஆடை அவிழ்ந்திருப்பதையாவது அறிகிறதில்லை. 

பசுக்களை எண்ணுவதற்காக மணிகளைக் கோர்த்து, மாலையாகத் தரித்திருப்பவனும், மனத்திற்கினிய மணமுடைய துளஸியின் மாலையை அணிந்தவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அந்த மணிகளால் பசுக்களை நாற்புறத்திலும் எண்ணுபவனாகி, அன்பிற்கிடமான அனுசரனுடைய (நண்பனின்) தோளின் மேல் புஜத்தை வைத்துக் கொண்டு, வேணுகானம் (குழல் இசை) செய்கையில், மான்பேடுகள் (பென் மான்கள்) அவ்வேணுகானத்தினால் (குழல் இசையால்) மனம் பறியுண்டு, குணகணங்களுக்கு (குணங்களின் கூட்டங்களுக்கு) இடமான ஸ்ரீக்ருஷ்ணனக் கிட்டி, இல்லற வாழ்க்கையில் ஆசையைத் துறந்து, அவனையே பணிந்திருந்தனவன்றி, அவ்விடத்தினின்று திரும்பிப் போகவில்லை. 

பாபமற்ற யசோதே! குருக்கத்திப் பூமாலைகளால் காண்பவர் மனம் களிக்கும்படி அழகிய வேஷம் பூண்ட உன் புதல்வனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், சாயம் காலமாகையில், பசு நிரைகளை திருப்பிக் கொண்டு, கோபர்களோடு யமுனைக்கரைக்கு வந்து, நண்பர்களுக்கு சந்தோஷம் விளைப்பவனாகி விளையாடிக் கொண்டிருக்கையில், மந்தமாருதம் (தென்றல்) சந்தனம் போல குளிர்ந்த ஸ்பர்சத்தினால் ஸ்ரீக்ருஷ்ணனை மகிழ்வித்து, அவன் விருப்பப்படி வீசுகிறது. ஸ்துதி பாடகர்களால் ஸித்தர், கங்காதரர் முதலிய உபதேவதைகள் வாத்யங்களை முழங்கி, ஸங்கீதங்களைப் பாடி உபஹாரங்களை ஏந்திக்கொண்டு வந்து நாற்புறத்திலும் அந்த ஸ்ரீகிருஷ்ணனைப் பணிந்தார்கள்.  

கோகுலத்திலுள்ள கோக்களிடத்திலும், நம்மிடத்திலும் மன இரக்கமுற்று அன்புடன் ஹிதம் (நன்மை) செய்பவனும், கோவர்த்தன கிரியைத் தரித்தவனும், வழியில் ப்ரஹ்மா, சிவன் முதலியோரால் வணங்கப்படுகின்ற பாதார விந்தங்களுடையவனும், கண் படைத்தவர்களுக்குத் “திருவிழா” போன்ற  மஹானந்தத்தை விளைப்பவனும், நண்பர்களாகிய நம் மனோரதத்தை நிறைவேற்றும் பொருட்டு தேவகியின் வயிற்றில் சந்த்ரன் போல உதித்தவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஸாயங்காலமாகையில் பசு மந்தைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, வேணுகானம் (குழல் இசை) செய்து கொண்டு, அனுசரர்களால் (நண்பர்களால், தன்னைப்பின் தொடர்ந்து வரும் கோபர்களால்) பாடப்பட்ட புகழுடையவனும், பசுக்களின் குளம்படிகளால் (காலடிகளால்) கிளம்பின தூட்கள் படிந்த பூமாலையுடையவனுமாகி இதோ வருகின்றான். 

மத்ய பானஞ் செய்த (மது அருந்திய) மதத்தினால் சிறிது சுழல்கின்ற கண்களுடையவனும், தன் நண்பர்களுக்கு வெகுமதியளிப்பவனும், சிறிது பக்வமான இலந்தம் பழம் போல் வெளுத்த முகமுடையவனும், ஸ்வர்ண மயமான குண்டலங்களின் காந்தியினால் மெல்லிய கபோலங்களை (கன்னங்களை) உடைய முகத்தை விளங்கச் செய்பவனும், யானைகளில் சிறந்த ஐராவதத்தை நிகர்த்த (ஒத்த) விளையாடலுடையவனும், யாதவ ச்ரேஷ்டனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஸாயங்காலத்தில் சந்திரன் போன்று தெளிந்த முகமுடையவனாகி, பகலில் தன்னைப் பிரிந்திருக்கின்ற இடைச் சேரியிலுள்ளவர்களின் அபாரமான தாபத்தையெல்லாம் போக்கிக் கொண்டு இதோ அருகாமையில் வருகின்றான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! கோபிகைகள் இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணனுடைய லீலைகளைப் பகல்களில் பாடிக் கொண்டிருந்து, அவனிடத்தில் தங்கின ஜீவனமும், மனமும் உடையவர்களாகி, மஹோத்ஸவத்துடன் க்ரீடித்துக் கொண்டிருந்தார்கள். 

முப்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக