ஶ்ரீமத் பாகவதம் - 219

 தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – மூன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணாவதாரமும், தேவகி வஸுதேவர்களின் ஸ்தோத்ரமும், வஸுதேவன் ஸ்ரீக்ருஷ்ணனைக் கோகுலம் கொண்டு போய்ச் சேர்த்து வருதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, கர்மத்தினால் விளையும் பிறவியற்ற ஸர்வேச்வரனான பகவான், பிறக்கவேண்டுமென்று நினைக்கையில், அக்காலம் எல்லாக் குணங்களும் அமைந்து மிகவும் அழகாயிருந்தது. பகவானுடைய ஜன்ம நக்ஷத்ரமாகிய ரோஹிணி நக்ஷத்ரத்திற்கு, மற்ற நக்ஷத்ரங்களில் இருக்கிற ஸூர்யாதி க்ரஹங்களும், அச்வினி முதலிய மற்ற நக்ஷத்ரங்களும் அனுகூலங்களாயிருந்தன. திசைகளெல்லாம் தெளிவுற்றிருந்தன. ஆகாயத்தில் உதித்த நக்ஷத்ரங்களெல்லாம் சாந்தமாயிருந்தன. பட்டணங்களும், க்ராமங்களும், இடைச்சேரிகளும் அமைந்த பூமி முழுவதும் மங்களங்கள் நிறைந்திருந்தது. நதிகள், தெளிந்த ஜலமுடையவைகளாகப் பெருகின. ஜலாதாரங்களில் தாமரைகள் அழகாய் மலர்ந்தன. வனங்களெல்லாம் பக்ஷிகளும், வண்டுகளும், கூட்டம் கூட்டமாய் ஒலிக்கப்பெற்ற பூங்கொத்துக்கள் நிறைந்து விளங்கின. காற்று ஸுகமான ஊறலும், நல்ல வாஸனையும் அமைந்து, சிறிதும் தூசியின்றி வீசிற்று. முன்பு சாந்தமாயிருந்த ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களின் அக்னிகள், அப்பொழுது கலக்கமின்றிக் கொழுந்து விட்டெரிந்தன. தேவதைகளின் மனங்களும், ஸாதுக்களின் மனங்களும், ப்ரஸன்னமாயின. அந்தப் பகவான் அவதரிக்கும் பொழுது, ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. கின்னரர்களும், கந்தர்வர்களும் பாடினார்கள். ஸித்தர்களும், சாரணர்களும், துதித்தார்கள். வித்யாதர, அப்ஸர ஸ்த்ரீகளும், நர்த்தனம் செய்தார்கள். முனிவர்களும், தேவதைகளும், மனக்களிப்புடன் பூ மழை பொழிந்தார்கள். பேரிருள் மூடின அர்த்தராத்ரி ஸமயத்தில் ஜனார்த்தனன் தோன்றும் பொழுது, மேகங்கள் மெல்ல மெல்ல ஸமுத்ரங்கள் போல் கர்ஜித்தன. இத்தகைய மங்களமான ஸமயத்தில், கிழக்கு திக்கில் பூர்ண சந்த்ரன் உதிப்பதுபோல, தேவதை போன்ற தேவகியிடத்தில், ஜ்ஞானம், சக்தி முதலிய ஸமஸ்த கல்யாண குணங்களும் அமைந்த ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவிர்பவித்தான். 

செந்தாமரைக் கண்களும், நான்கு புஜங்களும், சங்கம், கதை முதலிய ஆயுதங்களும், திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்கிற அடையாளமும், கழுத்தில் திகழ்கின்ற கௌஸ்துப மணியும், பீதாம்பரமும், மிகவும் விலையுயர்ந்த வைடூர்ய ரத்னங்கள் இழைத்த க்ரீடம், குண்டலம், இவற்றின் காந்தியால் சூழப்பட்டு விளங்குகின்ற திருக்குழற்கற்றையும் (தலைமயிர் கற்றையும்) அமைந்து, நீல மேகம் போலக் கறுத்துப் பார்க்கப் பதினாயிரம் கண்களும் போராதபடி மிகவும் அழகாகி, சிறந்த அரை, தோள்வளை, கைவளை, முதலிய ஆபரணங்களால் திகழ்வுற்று, அற்புதமான உருவமுடைய பாலகனாய்த் தோற்றுகின்ற பகவானை, வஸுதேவன் கண்டான். அவ்வஸுதேவன், ஸாக்ஷாத் பரமபுருஷன் தனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கக் கண்டு, ஆச்சர்யத்தினால் கண்கள் மலர்ந்து, பகவானுடைய அவதாரமாகிய மஹோத்ஸவத்தினால் (பெரும் திருவிழாவினால்) பரபரப்புற்று, அப்பொழுதே ஸ்நானஞ் செய்து (நீராடி), ப்ராஹ்மணர்களுக்குப் பதினாயிரம் பசுக்களைப் கொடுப்பதாக மனத்தில் ஸங்கல்பித்துக் கொண்டான் (தீர்மானித்தான்). 

பாரதனே! பிறகு வஸுதேவன், தன் தேஹ காந்தியால் ப்ரஸவ க்ருஹத்தை (பிறந்த இடத்தை) விளங்கச் செய்கின்ற குமாரனை பரமபுருஷனென்று நிச்சயித்து, உடம்பு வணங்கப்பெற்று, கைகளைக் குவித்து, மனவூக்கமுற்றுக் கம்ஸனிடத்தினின்று பயமற்று, அந்தப் பகவானுடைய ப்ரபாவத்தை (பெருமையை) அறிந்து ஸ்தோத்ரம் செய்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- நீ சேதனாசேதனங்களைக் (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) பரமபுருஷன்தான் எனக்குத் தெரிந்தது. நீ ஜ்ஞானானந்த ஸ்வரூபன் (அறிவு மற்றும் இன்ப வடிவானவன்); ஸமஸ்த புத்திகளையும், அவற்றின் வ்யாபாரங்களையும், ஸாக்ஷாத்கரிப்பவன் (அறிபவன்). அத்தகைய நீ, இந்த உலகங்களைப் படைப்பதற்கு முன்பு ஸூக்ஷ்ம (பெயர் உருவம் அற்ற மிக நுட்பமான) சேதனாசேதனங்களை (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகக்கொண்டு காரணனாயிருந்து, உன் சரீரமாகிய ப்ரக்ருதியினால் (ஜடப்பொருட்களின் மூல காரணமான மூலப்ரக்ருதியினால்) ஸ்தூல (பெயர் உருவங்களுடன் கூடிய) சேதனாசேதன ரூபமான (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுடன் கூடிய) இந்த ஜகத்தையெல்லாம் படைத்து, அப்பால் அதைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் (தனது மனக்கருத்தினால்) அதில் ப்ரவேசித்தும், அதன் விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாமையால், ப்ரவேசிக்காதவன் போலத் தோற்றுகின்றாய். மஹத்து, அஹங்காரம், தன்மாத்ரங்கள் (பஞ்ச பூதங்களின் நுட்பமான முந்தய நிலை) ஆகிய ப்ரக்ருதியின் பரிணாமங்களான (மாறுபாடுகளான) ஏழு தத்வங்களும், அவற்றின் பரிணாமங்களான (மாறுபாடுகளான) ஆகாசம் முதலிய ஸ்தூல பூதங்களும் (ஐந்து பூதங்களும்), இந்த்ரியங்களும், வெவ்வேறு சக்தியுடையவைகளாகையால், ஒன்றோடொன்று சேராமல் தனியேயிருந்து, ப்ரஹ்மாண்டமாகிய கார்யத்தை விளக்கும் திறமையற்று, ஒன்றோடொன்று சேர்ந்து கலந்து, ப்ரஹ்மாண்டத்தை (ப்ரபஞ்சத்தை) உண்டு பண்ணுகின்றன; பிறகு, அந்த ப்ரஹ்மாண்டத்தில் (ப்ரபஞ்சத்தில்) உண்டானவை போலத் தோற்றுகின்றன. வாஸ்தவத்தில் (உண்மையில்) அவை முன்னமே இருக்கின்றவையாகையால், அந்த ப்ரஹ்மாண்டத்தில் (ப்ரபஞ்சத்தில்) உண்டானவையன்று. இவ்வாறே, நீ இந்த ப்ரபஞ்சம் (உலகம்) உண்டாவதற்கு முன்னமே இதற்குக் காரணமாயிருந்து, இதைப் படைத்து, இதற்குள் ப்ரவேசித்து, நிறைந்திருக்கின்றாய். ஜ்ஞானத்தினால் நிரூபிக்கத் தகுந்த ஸ்வபாவமுடைய தேவ, மனுஷ்யாதி பூதங்களில் நீ அமைந்திருப்பினும், அவற்றின் விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப்பெறாமல், நித்ய சுத்தனாயிருக்கின்றாய். நீ என்றும் குவியாது மலர்கின்ற ஜ்ஞான ப்ரகாசமுடையவன் (அறிவு உடையவன்). கர்மத்தினால் ஜ்ஞான ஸங்கோசம் (அறிவில் குறைபாடு) உண்டாவது ஜீவாத்மாக்களுக்கேயன்றி, உனக்குக் கிடையாது. 

உனக்கு உள்ளென்றும், புறமென்றும், கிடையாது. நீ எங்கும் நிறைத்திருப்பவன். இந்த ப்ரபஞ்சத்திலுள்ளவை எல்லாம் நீயே, நீ எல்லாவற்றையும் சரீரமாகவுடையவன். தேஹத்தின் (உடலின்) குணங்கள், ஆத்மாக்களிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. ஆத்மாக்கள், அஜ்ஞானத்தினால் தேஹ குணங்களைத் தங்களிடத்தில் ஏறிட்டுக் கொள்கிறார்களன்றி, அது உண்மையன்று. அவ்வாறே, பரமாத்மாவாகிய உன்னிடத்தில், உன் சரீரமான சேதனாசேதனங்களின் (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களின்) குணங்கள் ஸம்பந்திக்கிறதில்லை. இவ்வுலகத்தில் புலப்படும் வஸ்துக்களை, பரமாத்மாவைக் காட்டிலும் ஸ்வதந்த்ரமாய் இருப்பவை (பரமாத்மாவிற்கு உட்படாமல் தன் இச்சையாக செயல்பட வல்லவை) என்று எவன் நினைக்கிறானோ, அவன் புத்தியற்றவன். அவனுடைய மதத்தை (கொள்கையை), இது ஸரியன்று என்று தூஷிப்பதற்காக (இகழ்வதற்காக) எடுத்துரைக்கலாமன்றி, மற்றப்படி அதை  நெஞ்சிலும் நினைக்கலாகாது. பெரியோர்கள் இது ஸரியன்று என்று கழித்ததை அவன், இதுவே ஹிதம் (நல்லது) என்று எடுத்துக்கொண்டிருக்கிறான். ஆகையால், அவனுடைய மதம் (கொள்கை) ஸரியன்று. உனக்கு ஸங்கல்பம் தவிர மற்றொரு வ்யாபாரமும் கிடையாது. நீ ஸத்வாதி (ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற) குணங்களற்றவன்; நிர்விகார ஸ்வரூபன் (மாறுபாடு அற்ற ஒரே படியான தன்மையன்). ஆயினும், உன்னிடத்தினின்று இந்த ஜகத்தின் (உலகின்) ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்கள் (அழித்தல்) உண்டாகின்றனவென்று வேதாந்தங்கள் சொல்லுகின்றன. ஆனால், “நிர்விகாரனான (மாறுபாடு அற்ற) எனக்கு விகாரத்திற்கிடமான  (மாறுபாட்டிற்கு இடமான) ஜகத்காரணத்வம் (ஜகத்திற்குக் காரணமாயிருக்கை) எவ்வாறு சேரும்?” என்னில், ப்ரக்ருதி புருஷர்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), அவற்றைச் சரீரமாகவுடையவனும், ஜ்ஞானம், சக்தி, முதலிய குணங்கள் அமைந்தவனும், ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் அளவற்றவனுமாகிய உன்னிடத்தில், அந்த ஜகத்காரணத்வம் (ஜகத்திற்குக் காரணமாயிருக்கை) சேராததன்று. ஸூக்ஷ்ம (பெயர் உருவம் அற்ற மிக நுட்பமான) சேதனாசேதனங்களை (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய நீயே ஸ்தூல (பெயர் உருவங்களுடன் கூடிய) சேதனாசேதனங்கள் (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்) அடங்கின இந்தப் ப்ரபஞ்சமாய் விரிகின்றனையாகையால், ஸ்வபாவம் மாறுதல், ஸ்வரூபம் மாறுதல், முதலிய விகாரங்களெல்லாம் உன் சரீரமான சேதனா சேதனங்களுக்கேயன்றி, உனக்குக் கிடையாது. ஆகையால், உனக்கு ஜகத்காரணத்வம் (ஜகத்திற்குக் காரணமாயிருக்கை) கூடும். ஆனால், நீயே ஜகத்தாகப் பரிணமிக்கிறாயென்பது எவ்வாறு சேருமென்னில், சேதனாசேதன ரூபமான ப்ரபஞ்சத்திற்கு, நீ ஆதாரமாகி அந்தராத்மாவாய்த் தரித்துக் கொண்டிருக்கின்றாயாகையால், உன் சரீரமான அந்தச் சேதனா சேதனங்களின் பிறவி முதலிய பரிணாமங்களை (மாற்றங்களை), உன்னிடத்தில் ஏறிட்டுச் சொல்லுகிறது மாத்ரமேயன்றி, உனக்கு நேரே பரிணாமங்கள் (மாற்றங்கள்) எவையும் கிடையாது. அத்தகைய நீ, மூன்று லோகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, சுத்த ஸத்வமயமான உருவங்களை நேரே ஏற்றுக்கொள்கின்றாய். இந்த ஜகத்தின் ஸ்ருஷ்டிக்காக ரஜோகுணமாயிருப்பதும், சிவந்த நிறமுடையதுமான, சரீரத்தை ப்ரஹ்மதேவனென்னும் ஜீவன் மூலமாய் ஏற்றுக்கொள்கின்றாய். ப்ரளயத்திற்காகத் தமோகுணமயமாயிருப்பதும், கறுத்த நிறமுடையதுமாகிய சரீரத்தை, ருத்ரனென்னும் ஜீவன் மூலமாய் ஏற்றுக்கொள்கின்றாய். 

ப்ரபூ! ஸர்வேச்வரனே! நீ இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, என் க்ருஹத்தில் அவதரித்தாய். ராஜாக்களென்னும் பேருடைய கோடி கோடியான அஸுரக் கூட்டங்களால் தூண்டப்பட்ட ஸைன்யங்களையெல்லாம் அழிக்கப்போகின்றாய். தேவதேவனே! பெரியோர்களின் கோஷ்டியில் நுழையத் தகாத பெரும் துஷ்டனாகிய (கொடியனான) இக்கம்ஸன், நீ என் க்ருஹத்தில் பிறக்கப்போகிறாயென்று கேள்விப்பட்டு, அந்த த்வேஷத்தினால் (பகைமையினால்), உன்னுடைய முன் தோன்றல்களையெல்லாம் கொன்றான். அவன், தன் புருஷர்கள் மூலமாய், உன்னுடைய அவதாரத்தைக் கேட்டு, இப்பொழுதே கையும் கத்தியுமாய் வந்து சேருவான். எனக்குப் பயமாயிருக்கிறது. ஆகையால், நீ இவ்வுருவத்தை மறைத்துக்கொள்வாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு தேவகி, மஹாபுருஷனுக்கு அஸாதாரணமான லக்ஷணங்கள் அமைந்த அப்புதல்வனைக் கண்டு, பரமபுருஷன் என்றறிந்து, முன்பு கம்ஸனிடத்தினின்று பயந்திருப்பினும் பயம் தீர்ந்து, பரிசுத்தமான புன்னகையுடையவளாகி, அவனை இவ்வாறு துதித்தாள்.

தேவகி சொல்லுகிறாள்:- இந்திரியங்களுக்கு விஷயமாகாததும், இந்த ப்ரபஞ்சம் (உலகம்) உண்டாவதற்கு முன்பும் அழியாதிருப்பதும், ஸத்வாதி குணங்கள் தீண்டப்பெறாததும், வளர்தல், குறைதல் முதலிய விகாரங்களின்றி (மாறுபாடுகள் இன்றி) என்றும் ஒருவாறாயிருப்பதும், ஆகாசம் முதலிய பஞ்சபூதங்களின் குணங்களான ஒலி, முதலிய விசேஷங்களற்றதும், ஸ்வயம்ப்ரகாசமும் (தானே தோன்றுவதும்), சோக (துக்கம்), மோஹாதி (மயக்கம், கலக்கம் முதலிய) விகாரங்கள் (மாறுபாடுகள்) அற்றதும், புண்ய, பாப ரூபமான வ்யாபாரங்களற்றதும், என்றும் குவியாது மலர்கின்ற ஜ்ஞான தீபமுடையதும், ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும், அளவற்றதுமான யாதொரு பரமாத்ம ஸ்வரூபத்தை வேதாந்தங்கள் நிரூபிக்கின்றனவோ, அப்படிப்பட்ட பரமாத்மா மஹாவிஷ்ணு ஸாக்ஷாத் பரமபுருஷன் நீயே. இரண்டு பரார்த்தங்கள் அடங்கிய (இரண்டு பரர்த்தங்கள் - த்விபரர்த்தம் - ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரர்த்தம் எனப்படும். க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள் த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள் த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள் கலி யுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரர்த்தம் எனப்படும் ப்ரஹ்மாவின் ஆயுட்காலம்.) ப்ரஹ்ம தேவனுடைய ஆயுள் முடியும் காலமாகிய ப்ராக்ருத ப்ரளயத்தில், ப்ருதிவி (பூமி) முதலிய மஹாபூதங்கள் கால வேகத்தினால், தங்கள் காரணங்களில் மறையும் க்ரமத்தில், பூதாதியான தன்மாத்ரைகளிலும், தன்மாத்ரைகள் அஹங்கார தத்வத்திலும், அது தனக்குக் காரணமான மஹத்தத்வத்திலும், அதுவும் தனக்குக் காரணமான அவ்யக்தத்திலும், அவ்யக்தம் அக்ஷரத்திலும், அக்ஷரம் தமஸ்ஸிலும், தமஸ்ஸு உன்னிடத்திலும் மறைகையில், நீயொருவனே மிகுந்து நிற்கின்றாய். அதனால், நீ சேஷனென்னும் பெயர் பெறுகின்றாய். 

ஸூக்ஷ்ம (பெயர் உருவம் அற்ற) தசையை (நிலையை) அடைந்து, அவ்யக்தமென்னும் பெயருடைய ப்ரக்ருதியைச் சரீரமாகக் கொண்டவனே! நிமிஷம் (கண் இமை கொட்டும் காலம்) முதல் ஸம்வத்ஸரம் (வருடம்) வரையிலுள்ள இக்காலம், ப்ரஹ்மாதிகளையும் அடக்கியாளும்படியான மேன்மையுடையது. இக்காலத்தினாலல்லவோ நீ ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகின்றனை. அப்படிப்பட்ட இக்காலத்தை, உன்னுடைய சேஷ்டை (செயல்) என்று சொல்லுகிறார்கள். இவ்வாறு காலத்தையும் கூட அடக்கியாள்பவனும், க்ஷேமத்தை விளைப்பவனுமாகிய, உன்னை சரணம் அடைகின்றேன். 

பிறத்தல், சாதல் முதலிய ஸம்ஸார (உலகியல்) துக்கங்களை அனுபவிக்கும் புருஷன், ஸம்ஸாரமாகிற (உலகியல் வாழ்க்கையாகிற) மஹா ஸர்ப்பத்தினின்று பயந்து, அதினின்று விடுபட விரும்பி, எல்லா லோகங்களையும் ஓடித் திரிந்தும், அந்தப் பயம் நீங்கப் பெற்றதில்லை. அவனே தெய்வாதீனமாய் உன் பாதாரவிந்தங்களை சரணம் அடைவானாயின், அந்தப் பயம் நீங்கப் பெற்று, தான் செய்ய வேண்டிய செயல்களுமின்றி, சிந்தையற்று ஸுகமாயிருக்கிறான். அந்த ஸம்ஸாரமாகிய (உலகியல் வாழ்க்கையாகிற) ஸர்ப்பம், அவனிடத்தினின்று பயந்தோடுகின்றது. இவ்வாறு ஸம்ஸாரமாகிய (உலகியல் வாழ்க்கையாகிற) மஹாபயத்தைப் போக்கி, மோக்ஷமாகிற பெரிய நன்மையைக் கொடுக்கும் தன்மையுள்ள உனக்கு, ஸம்ஸாரிக (உலக) ஸுகங்களைக் (இன்பங்களைக்) கொடுப்பது ஒரு பொருளோ? அப்படிப்பட்ட நீ கொடுமையினால் பயங்கரனான கம்ஸனிடத்தினின்று பயந்திருக்கின்ற எங்களைப் பாதுகாப்பாயாக. நீ உன் ப்ருத்யர்களின் (அடியார்களின்) பயத்தைப் போக்கும் தன்மையனல்லவா? பரமபுருஷனென்பதை வெளியிடுவதும், யோகிகளால் தியானிக்கத் தகுந்ததுமாகிய இவ்வுருவத்தை, என்னைப்போன்ற மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்களுடைய (மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கள் – வெறும் சதையாலான கண்களையுடையவர்கள்; அறிவுக்கண் அற்றவர்கள்) கண்களுக்குக் காட்ட வேண்டாம்.  

மதுஸூதனா! பாபிஷ்டனாகிய (பாபியான) இக்கம்ஸன், என்னிடத்தில் நீ பிறந்திருப்பதை அறிய வேண்டாம். தைர்யமற்ற (உறுதி அற்ற) மதி (புத்தி) உடைய நான், உன்னுடைய அவதாரத்தைப் பற்றிக் கம்ஸனிடத்தினின்று பயப்படுகின்றேன். ப்ரபஞ்சத்தையெல்லாம் சரீரமாகக் கொண்டு, அதற்கு அந்தராத்மாவாகி, அதெல்லாம் தானேயென்னும்படி விளங்கும் தன்மையனே! சங்கம், சக்ரம், கதை, தாமரைமலர், ஸ்ரீ மஹாலக்ஷ்மி இவற்றால் பெரிய அழகமைந்ததும், நான்கு புஜங்களுடையதும், ப்ராக்ருத (ஸாதாரண) ஜனங்களுக்கு நேராததுமாகிய இவ்வுருவத்தை, மறைத்துக்கொள்வாயாக. நாதனே! ஜகத் ஸ்ருஷ்டியின் (உலக படைப்பின்) ஆரம்பத்தில், உன்னுடைய நாபி கமலத்தில்  (தொப்புள் தாமரையில்), இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் (உலகத்தையெல்லாம்) தரித்துக்கொண்டிருக்கின்றாய். அப்படிப்பட்ட நீ, என் கர்ப்பத்தில் பிறந்தாயென்பது மனுஷ்ய லோகத்தின் ரீதியை அனுஸரித்துச் செய்த கார்யமேயன்றி, மற்றொன்றும் அன்று. இவ்வுலக ரீதியை அனுஸரிக்க வேண்டிய அவச்யமில்லாதிருப்பினும், இப்படி நீ செய்தது மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. உன் மஹிமையை என்னென்று சொல்லுவேன்!

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு மாதா பிதாக்களால் துதி செய்து வேண்டப்பெற்ற அந்தப் பகவான், தன்னுடைய அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டினதற்குக் காரணத்தைச் சொல்ல முயன்று பூர்வ வ்ருத்தாந்தத்தைச் சொன்னான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- இதற்குக் கீழ் மூன்றாவது ஜன்மத்தில், ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், நீ ப்ருச்னியென்னும் பேருடைய ஒரு பெண்ணாய் இருந்தாய். உன் கணவனான இவ்வஸுதேவன், அப்பொழுது பரிசுத்தனான ஸுதபஸ்ஸென்னும் ப்ரஜாபதியாயிருந்தான். அப்பொழுது நீங்கள், நான்முகனால் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பட்டு, மனத்தையும், மற்ற இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு, பெரிய தவம் நடத்திக்கொண்டிருந்தீர்கள். க்ரமமாக ஏற்படுகின்ற மழை, காற்று, வெயில், பனி முதலிய ருது தர்மங்களையெல்லாம் பொறுத்து, பராணவாயுவை அடக்கி, மனமலங்களெல்லாம் தீரப்பெற்று, மரங்களினின்றும் உதிர்ந்த இலைகளையும், காற்றையும், ஆஹாரமாகக்கொண்டு, என்னிடத்தினின்று வரங்களை விரும்பி, ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்கள் தீண்டப் பெறாத மனத்தினால் என்னை ஆராதித்தீர்கள். மங்கள ஸ்வபாவமுடையவளே “நீங்கள் என்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தி, ஒருவராலும் வருத்தியும் நடத்த முடியாத பெருந்தவத்தை நடத்திக்கொண்டிருக்கையில், தேவமானத்தினால் பன்னீராயிரம் வர்ஷங்கள் கடந்தன. பாபமற்றவளே! வரங்கொடுப்பவர்களில் சிறந்தவனும், ஸர்வ காலமும் உங்கள் பக்தியுடன் த்யானிக்கப்பட்டவனுமாகிய நான், உங்கள் தவத்தினாலும் ச்ரத்தையினாலும் ஸந்தோஷம் அடைந்து, நீங்கள் விரும்பும் வரங்களைக்கொடுக்கும் பொருட்டு நான்கு புஜங்கள் முதலிய சிஹ்னங்களோடு (அடையாளங்களுடன்) கூடின இவ்வுருவத்துடன் உங்களுக்குத் தோன்றி “உங்களுக்கு இஷ்டமான வரங்களை வேண்டுங்கள்” என்று மொழிகையில், நீங்கள் என்னைப்போன்ற புதல்வனை விரும்பினீர்கள். 

சப்தாதி விஷயங்களை அனுபவித்தறியாதவர்களும், பிள்ளையில்லாதவர்களும், தம்பதிகளுமாகிய நீங்கள், என் மாயையால் மதி (புத்தி) மயங்கி, மோக்ஷத்தை விரும்பவில்லை. நீங்கள், என்னைப்போன்ற பிள்ளையைப் பெறுகையாகிற வரத்தையே பெற்று, நான் போன பின்பு, மனோரதம் (விருப்பம்) கைகூடி, சப்தாதி விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது, ரூபம் (உருவம்), ஔதார்யம் (வள்ளல் தன்மை) முதலிய குணங்களால் எனக்கு நிகரான மற்றொருவனையும் காணாமல், நானே உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்து, ப்ருச்னிகர்ப்பனென்று பெயர் பெற்றிருந்தேன். அந்த நீங்களே அடுத்த ஜன்மத்தில், கச்யபரும், அதிதியுமாகப் பிறந்திருந்தீர்கள். அப்பொழுது அதிதியாகிய உனக்கு, கச்யபரிடத்தினின்று மீளவும் நான் பிள்ளையாகப் பிறந்து, இந்த்ரனுக்குத் தம்பியாகையால் உபேந்த்ரனென்றும், வாமன (சிறிய) உருவமுடையவனாய் இருந்தேனாகையால், வாமனனென்றும் ப்ரஸித்தனாயிருந்தேன். அப்பொழுது, அதிதியும், கச்யபருமாயிருந்த நீங்களே, இப்பொழுது தேவகி வஸுதேவர்களாகப் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த மூன்றாம் ஜன்மத்தில், மீளவும் நான் அதே உருவத்துடன் பிள்ளையாகப் பிறந்தேன். 

நல்லொழுக்கமுடைவளே! நான் சொன்னது உண்மையேயல்லவா? முன்பும் இவனே நமக்குப் பிள்ளையாகப் பிறந்தானென்று தெரியும் பொருட்டு, உங்களுக்கு இவ்வுருவத்தைக் காட்டினேன். இப்படியில்லாமல், ஸாதாரணமான மனுஷ்ய உருவத்துடன் பிறப்பேனாயின், என்னுடைய அவதார ஞானம் உங்களுக்கு உண்டாகாது. நீங்கள் என்னை எப்பொழுதும் பிள்ளையென்று பாவித்துக் கொண்டிருப்பினும், சிற்சில ஸமயங்களில் பரப்ரஹ்மமென்று பாவித்து, என்னிடத்தில் நிலைநின்ற நட்புடையவர்களாகி, சிறப்புடையதான என் கதியைப் பெறுவீர்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீஹரி இவ்வாறு மொழிந்து பேசாதிருந்தான். பிறகு, தாய் தந்தைகளான தேவகீ வஸுதேவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்கையில், அப்பொழுதே தன் மாயையினால் ஸாதாரணமான சிசுவைப் போன்றிருந்தான். பிறகு, வஸுதேவன் பகவானால் தூண்டப்பட்டு, அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு, ஸூதிக்ருஹத்தினின்று (ஸுதிக்ருஹம் – பிறப்பு நிகழ்ந்த இடம்) வெளிப்புறப்பட விரும்பும் பொழுது, கோகுலத்தில் நந்தனுடைய பார்யையாகிய யசோதை, ப்ரக்ருதிக்கு அபிமான தேவதையான யோகமாயையாகிற புதல்வியைப் பெற்றாள். 

அப்பொழுது, அந்த யோகமாயை, தன் மஹிமையால் த்வாரபாலர்களையும், பட்டணத்து ஜனங்களையும், புத்தி முதலிய ஸமஸ்த இந்த்ரியங்களும் பறியுண்டு படுத்து உறங்கும்படி செய்தது. மற்றும், அப்பொழுது த்வாரங்களெல்லாம் பெரிய கதவுகளை மூடி இரும்புப் பூட்டுகளையும் சங்கிலிகளையும் இட்டுத் தாண்டிப்போக முடியாதிருந்தன. வஸுதேவன், ஸ்ரீக்ருஷ்ணனை எடுத்துக்கொண்டு நந்த கோகுலத்திற்குப் புறப்படுகையில் அந்த த்வாரங்களெல்லாம், ஸூர்யோதயத்தில் இருள் பறந்தோடுவது போல, தாமே திறந்துகொண்டன. அப்பொழுது, மேகம் மெல்ல மெல்லக் கர்ஜனை செய்துகொண்டு, மழை பெய்தது. ஆதிசேஷன் தன் பணங்களால் (படங்களால்) அந்த மழை ஜலத்தைத் தடுத்துக்கொண்டு, வஸுதேவனைப் பின்தொடர்ந்தான். மேகம் விடாமழையாகப் பெய்து கொண்டிருக்கையில், ஆழ்ந்த ஜல ப்ரவாஹத்தின் (வெள்ளத்தின்) வேகத்தினால் அலைகள் கிளம்பி,  நுரைகளும் உண்டாகப்பெற்று, மிகவும் பயங்கரமான பலவாயிரம் நீர்ச்சுழிகள் நிறைந்திருக்கின்ற யமுனா நதி, ஸமுத்ரம் ஸ்ரீராமனுக்கு வழிவிட்டாற் போல, வஸுதேவனுக்கு வழிவிட்டது. அப்பால் வஸுதேவன், நந்த கோகுலத்திற்குச் சென்று, அங்கு இடையர்களெல்லோரும் யோகமாயையினால் உடம்பு தெரியாமல் உறங்குவதைக் கண்டு, யசோதையின் படுக்கையில் தன் புதல்வனை வைத்து, அவளுடைய பெண்ணான யோகமாயையை எடுத்துக்கொண்டு, மீளவும் தன் க்ருஹத்திற்கு வந்து, அப்பெண் குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டு, முன் போலவே பாதங்களில் விலங்கைப் பூட்டி, கதவையும் அடைத்துப் பேசாதிருந்தான். நந்தனுடைய மனைவியாகிய யசோதையோவென்றால், குழந்தை பிறந்ததை மாத்ரம் அறிந்தாளன்றி, ச்ரமத்தினாலும், யோகமாயையின் மஹிமையால் ஏற்பட்ட உறக்கத்தினால் நினைவு மாறப்பெற்றிருந்தமையாலும், அது பிள்ளையென்றும், பெண்ணென்றும், அதன் அடையாளங்களை உற்றுப் பார்க்கவில்லை. 

(ஸ்ரீகிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது. எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. ‘கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது.

அனைவருக்கும்  தெரிந்த புராண வரலாறுதான் இது. இதில் பலருக்குத் தெரியாத கதை எது என்று இனி பார்ப்போம்…

ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது, ஏன் இந்த மழை பெய்ய வேண்டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்?

இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. ரூபகோஸ்வாமி எழுதிய ‘பிருந்தாவன கீதை’ எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது.

ஒருமுறை, கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்து தலை நாகமாக மாறினான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன்.

பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை யமுனை. இவள் சூரியபகவானின் புத்திரி. கங்காதேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்று முதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார்.

யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்து வரை வந்தபோதும்கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீகிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்த போது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன.

இதன்மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள்.)

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை