ஶ்ரீமத் பாகவதம் - 218

 தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – இரண்டாவது அத்தியாயம்

(பகவான் தேவகியின் கர்ப்பத்தில் புகுந்திருத்தலும், ப்ரஹ்மாதி தேவதைகள் - அவளை ஸ்தோத்ரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அப்பொழுது, ப்ரலம்பன், பகன், சாணூரன், த்ருணவர்த்தன், மஹாசனன், முஷ்டிகன், அரிஷ்டன், த்விவிதன், பூதனை, கேசி, தேனுகன் இவர்களோடும், பாணன், நரகன் முதலிய மற்றும் பல அஸுர ராஜர்களோடும் கூடி, மஹா பலிஷ்டனாகிய ஜராஸந்தனையும் உதவியாகப் பற்றி, கம்ஸன் யாதவர்களுக்கு உபத்ரவத்தைச் (தீங்கு) செய்து கொண்டு வந்தான். யாதவர்களும் அந்தக் கம்ஸனால் பீடிக்கப்பட்டு, அவ்விடத்தை விட்டுக் குருக்ஷேத்ரம், பாஞ்சாலம், கேகயம், ஸால்வம், விதர்ப்பம், நிஷதம், மகதம், கோஸலம் முதலிய தேசங்களுக்குச் சென்றார்கள். சில பந்துக்கள், அவனையே அனுஸரித்துப் பணிந்து வந்தார்கள். அவ்வாறு கம்ஸன் தேவகியினுடைய ஆறு கர்ப்பங்களைக் கொல்லுகையில், விஷ்ணுவின் அம்சமாகிய அனந்தன், அந்தத் தேவகிக்கு ஸந்தோஷத்தையும், துக்கத்தையும் விளைத்துக் கொண்டு, அவளுக்கு ஏழாவது கர்ப்பமாய்த் தோன்றினான். 

ஸமஸ்த ஜகத்திற்கும் அந்தராத்மாவான பகவானும், தன்னையே நாதனாகப் பற்றியிருக்கின்ற யாதவர்களுக்குக் கம்ஸனிடத்தினின்று பயம் நேர்ந்திருப்பதை அறிந்து, தன் யோகமாயையை நோக்கித் “தேவீ! பத்ரே! நீ இடையர்களாலும், பசுக்களாலும், அலங்கரிக்கப்பட்ட பரதகோகுலத்திற்குப் போவாயாக. அங்கு, வஸுதேவனுடைய மனைவியாகிய ரோஹிணி இருக்கின்றாள். மற்றுமுள்ள அவனுடைய மனைவிகளும், கம்ஸனிடத்தினின்று பயந்து, ஆங்காங்குப் பர்வத (மலை) குஹை முதலிய இடங்களில் மறைந்து வஸித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, என்னுடைய அம்சமாகிய ஆதிசேஷன், தேவகியின் ஏழாவது கர்ப்பமாய்த் தோன்றியிருக்கிறான். அந்தக் கர்ப்பத்தை இழுத்துக்கொண்டு, ரோஹிணியின் வயிற்றில் சேர்ப்பாயாக. 

மங்கள ஸ்வபாவமுடையவளே! பிறகு நான், என்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்துடன், தேவகிக்குப் பிள்ளையாய் வந்து பிறக்கப்போகிறேன். நீயும் நந்தனுடைய பத்னியாகிய யசோதையிடத்தில் பிறக்க வேண்டும். அவரவர் விரும்புகிற வரங்களையெல்லாம் கொடுப்பவர்களில் தலைமையுள்ள உன்னை, மனுஷ்யர்கள் பலவகை உபஹாரங்களாலும், மற்றும் பலவித பூஜைகளாலும், ஆராதிப்பார்கள். மற்றும், உனக்குப் பூமியில் ஆலயங்களையும், துர்க்கை, பத்ரகாளி, விஜயை, வைஷ்ணவி, குமுதை, சண்டிகை, க்ருஷ்ணை, மாதவி, கன்னிகை, மாயை, நாராயணி, ஈசானை, சாரதை, அம்பிகை என்னுமிவை முதலிய நாமங்களையும் ஏற்படுத்துவார்கள், தேவகியின் கர்ப்பத்தினின்று உன்னால் இழுக்கப்பட்டமையைப் பற்றி அந்தச் சேஷனை, ஸங்கர்ஷணனென்றும், உலகங்களுக்கெல்லாம் ஸந்தோஷத்தை விளைப்பவனாகையால் ராமனென்றும், மிகுந்த பலமுடையவனாகையால் பலபத்ரனென்றும், சொல்லுவார்கள்” என்று கட்டளையிட்டான். 

இவ்வாறு பகவானால் கட்டளையிடப்பெற்ற அந்த யோகமாயையும், அப்படியே ஆகட்டுமென்று அவனுடைய வார்த்தையைச் சிரஸில் (தலையில்) வஹித்து (தாங்கி), ப்ரதக்ஷிணம்செய்து (வலம் வந்து), பூமிக்கு வந்து, அப்படியே செய்தாள். பிறகு, யோகமாயை தேவகியின் கர்ப்பத்தை ரோஹிணியிடம் கொண்டு சேர்க்கையில், பட்டணத்திலுள்ள ஜனங்கள் “தேவகியின் கர்ப்பம் உருக்குலைந்து நழுவிற்று” என்று கதறினார்கள். அப்பால், பக்தர்களுக்கு அபயம் கொடுக்கும் தன்மையனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய, பகவான் தேவதைகளின் அம்சத்தினால் பிறந்த வஸுதேவனுடைய மனத்தில், ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் (எண்ணத்தினால்) ப்ரவேசித்தான் (நுழைந்தான்). பகவானுடைய தேஜஸ்ஸைத் தரித்திருக்கிற வஸுதேவன், ஸூர்யன் போல் திகழ்வுற்று இத்தகையெதென்று நிரூபிக்கமுடியாத பேரொளியுடன் கூடி, கம்ஸன் முதலியவர்களுக்கு வருந்தியும் பொறுக்க முடியாதிருந்தான். பிறகு தேவகி, வஸுதேவனால் ஆதானஞ் செய்யப்பட்டதும் (வைக்கப்பட்டதும்), பகவானது ஸங்கல்ப ஜ்ஞானம் (எண்ணம்) நழுவாதிருக்கப்பெற்றதும், ஜகத்தையெல்லாம் தனக்குச் சரீரமாகவுடையதும், ஜகத்திற்கெல்லாம் தான் அந்தராத்மாவாய் இருப்பதுமாகிய, பகவானாகிற கர்ப்பத்தை, கிழக்கு திக்கு மேகத்தில் மறைந்திருக்கின்ற ஆனந்தகரனான (மகிழ்விப்பவனான) சந்த்ரனைப் போலத் தன் வயிற்றில் தரித்தாள். 

ஜகத்திற்கெல்லாம் ஆதாரனான பரமபுருஷனுக்கும் ஆதாரமாயிருக்கின்ற அந்தத் தேவகி, அக்னி ஜ்வாலை போன்றிருப்பினும், கம்ஸனுடைய சிறைச்சாலையில் அடைப்புண்டிருக்கையில், வேதத்திற்கு இணங்காத அறிவுடைய மூர்க்கனிடத்தில் (முட்டாளிடத்தில்) மகிழ்ச்சி அற்று இருக்கும் ஸரஸ்வதி (அறிவு) போல, விளக்கமற்றிருந்தாள். ஒருவராலும் வெல்ல முடியாத பரமபுருஷனைக் கர்ப்பத்தில் தரிக்கின்றவளும், தன்னொளியினால் க்ருஹத்தை விளங்கச் செய்கின்றவளும், பரிசுத்தமான புன்னகையுடன் திகழ்கின்றவளுமாகிய, அந்தத் தேவகியைக் கம்ஸன் பார்த்து “என் ப்ராணன்களைப் பறிப்பதற்காகப் பகவான் இவளுடைய கர்ப்பத்தில் புகுந்திருக்கிறான். இந்தத் தேவகி, இதற்கு முன்பு இவ்வளவு ஒளியுடன் விளங்கவில்லை. இப்பொழுது, இவளுடைய ஒளி விலக்ஷணமாய் (வேறுபட்டதாய்) இருக்கின்றதாகையால், இவளுடைய கர்ப்பத்தில் விஷ்ணு ப்ரவேசித்திருக்கிறானென்பதில் ஸந்தேஹமில்லை. தேவதைகளின் கார்யத்தை முக்யமாக நிறைவேற்றும் தன்மையுடைய இவ்விஷ்ணு, என் பராக்ரமத்தை அழிக்காதிருக்குமாறு நான் இவ்விஷயத்தில் சீக்ரமாகச் செய்யவேண்டியது என்ன? இவளை வதிக்கலாமென்று பார்த்தால், இவள் ஸ்த்ரீயாயிருக்கிறாள்; மேலும் கர்ப்பிணி; கர்ப்பிணியான ஸ்த்ரீயை வதித்தால், அது புகழையும், செல்வத்தையும் அனுகூலமான ஆயுளையும் அழித்து விடும். கர்ப்பிணியை வதித்தவன், தான் ஜீவித்துக் கொண்டிருப்பினும், செத்தாற்போலவே. எவன் தேஹத்தையே ஆத்மாவாக அபிமானித்து, அதற்காக மிகவும் கொடிய செயல்களைச் செய்கின்றானோ, அவன் செத்த பின்பு அவனை மனுஷ்யர்கள் சபிப்பார்கள். அவன் பேரிருள் சூழ்ந்த நரகத்தை அடைவான். இது நிச்சயம்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, சிந்தித்து, தான் அவளை வதிக்கவல்லவனாயினும், கர்ப்பிணியை வதிக்கையாகிற மிகவும் கொடிய கார்யத்தினின்று தானே மீண்டு, அந்த விஷ்ணுவின் பிறவியை எதிர்பார்த்து, அவனிடத்தில் இடைவிடாமல் த்வேஷத்தை (பகைமையை) வளர்த்துக்கொண்டிருந்தான். 

அவன், உட்காருவது, படுப்பது, நிற்பது, புசிப்பது, உலாவுவது, பருகுவது முதலிய எல்லா ஸமயங்களிலும் விஷ்ணுவையே சிந்தித்துக்கொண்டிருந்து, ஜகத்தெல்லாம் அவ்விஷ்ணு மயமாகவே தோன்றக் கண்டான். அப்பொழுது, ப்ரஹ்ம தேவனும், ருத்ரனும், மற்றுமுள்ள தேவதைகளும், கந்தர்வாதிகளான உபதேவதைகளும், நாரதர் முதலிய முனிவர்களும், அவ்விடம் வந்து, தேவகியின் கர்ப்பத்தில் அமைந்திருக்கின்ற ஸர்வஜ்ஞனான பரமபுருஷனை வேத வாக்யங்களால் ஸ்தோத்ரம் செய்தார்கள்.

தேவதைகள் சொல்லுகிறார்கள்:- பரம புருஷ! நீ ஸத்யஸங்கல்பன் (நினைத்ததை நிறைவேற்ற வல்லவன்); சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள், அறிவற்ற ஜடப் பொருட்கள் கொண்ட) ஜகத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); ப்ரக்ருதி (ஜடப்பொருட்களின் மூல காரணமான மூலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மாக்கள்), காலங்களைச் சரீரமாகவுடையவன்; சேதனா சேதன ரூபமான ப்ரபஞ்சத்திற்குக் (உலகிற்குக்) காரணன்; விகாரமற்ற (மாறுபாடு அற்ற) பரம வ்யோமமென்கிற (பரம ஆகாசம் என்கிற) பரமபதத்தில் வாஸம் செய்பவன்; விகாரமற்ற ஜீவாத்மாக்களைக் காட்டிலும் விகாரமற்றவன்”. (ஜீவாத்மாக்களுக்கு, ப்ரக்ருதியைப்போல் ஸ்வரூபம் மாறுதலாகிற விகாரம் (மாறுபாடு) இல்லையாயினும், ஸ்வபாவம் மாறுகையாகிற (அறிவில் ஏற்றத்தழ்வு என்கிற) விகாரம் (மாறுபாடு) உண்டு. உனக்கு அதுவும் கிடையாது) நீ சந்த்ர, ஸூர்யர்களுக்கு நிர்வாஹகன் (நியமிப்பவன்). அவர்களையே கண்களாக உடையவன்; புண்ய கர்மங்களுக்கும், பொய் பேசாமையாகிற ஸத்யத்திற்கும், நிர்வாஹகன் (நியமிப்பவன்); ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும், விகாரம் (மாறுபடு) அற்றவன். இப்படிப்பட்ட உன்னை சரணம் அடைகின்றோம். 

விதையும், முளையும் போல, மாறி மாறி வருகின்ற இந்த ப்ரபஞ்சமாகிற வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு) நீ ஒருவனே ஆதாரமாயிருக்கின்றாய். ஸுக, துக்கங்கள், இதற்கு இரண்டு பழங்கள். ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களே இதற்கு மூன்று வேர்கள், இந்த வ்ருக்ஷம் (மரம்), தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களென்கிற நான்கு ரஸங்களும், பூத ஸுக்ஷ்மங்களாகிற (ஆகாசம் முதலிய ஐந்து பூதங்கள் தோன்றுவதற்கு முந்தய நிலை) ஐந்து விழுதுகளும், ஆறு இந்த்ரியங்களாகிற (புலன்களாகிற) உருவங்களும், ரக்த (ரத்தம்) மாம்ஸாதி (தசை முதலிய) தாதுக்களாகிற (மூல தத்வங்களாகிற) ஏழு தோல்களும், கைகள், கால்கள், தலை, கழுத்து, மார்பு, வயிறு என்னும் இவ்வெட்டு அவயவங்களாகிற எட்டுக்கிளைகளும், ஒன்பது த்வாரங்களாகிற ஒன்பது பொந்துகளும், ப்ராணன்களும், உப ப்ராணன்களுமாகிற பத்து இலைகளும், ஜீவாத்ம, பரமாத்மாக்களாகிற இரண்டு பக்ஷிகளுமுடையது. 

சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள், அறிவற்ற ஜடப் பொருட்கள் கொண்ட) இந்தப் ப்ரபஞ்சமாகிற (உலகமாகிற) வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு) நீ ஒருவனே உற்பத்தி காரணன். நீயே இதை ஸம்ஹரிக்கின்றாய் (அழிக்கின்றாய்). இதனுடைய ஸ்திதியை (நீடிப்பை, காத்தலை) நடத்துகிறவனும் நீயே. ஜீவாத்மாக்கள், உன் மாயையால் மதி (புத்தி) மயங்கி, அறிவற்று, உன்னைப் பலவாறு காண்கிறார்கள். இந்த ப்ரபஞ்சமெல்லாம் தானேயாகி அமைந்திருக்கின்ற உன்னை அறியாமல், ப்ரபஞ்சத்திலுள்ளவற்றை எல்லாம் வெவ்வேறாக நினைக்கின்றார்கள். ஜ்ஞான ஸ்வரூபனும் (அறிவு வடிவானவனும்) ஸர்வாந்தராத்மாவுமாகிய (எல்லாவற்றின் உள்ளும் இருந்து நியமிப்பவனுமான) நீ ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான இந்த ப்ரபஞ்சத்தின் க்ஷேமத்திற்காகச் சுத்த ஸத்வ (ரஜஸ், தமஸ் கலப்பில்லாத ஸத்வ) மயமாகி, ஸாதுக்களுக்கு ஸுகத்தையும், துஷ்டர்களுக்கு அடிக்கடி துக்கங்களையும், விளைக்கவல்ல பல அவதாரங்களைச் செய்கின்றாய். தாமரைக்கண்ணனே, சில பண்டிதர்கள், சுத்த ஸத்வ மயமான திவ்யமங்கள விக்ரஹமுடைய உன்னிடத்தில், ஸமாதியினால் மனத்தை  நிலை நிறுத்தி, பெரியோர்களால் தமக்கு உதவி செய்யப்பட்ட உன் பாதாரவிந்தங்களாகிற ஓடத்தைக் கொண்டு ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தை குளம்படியைப்போல (பசுவின் கால் குளம்பைப் போல) அலக்ஷ்யமாகத் தாண்டுகிறார்கள். நித்ய விபூதியென்று கூறப்படுகிற பரமபதத்தை வாஸஸ்தானமாக (இருப்பிடமாக) உடையவனே! உன்னிடத்தில் மிகுந்த பக்தியுடைய பெரியோர்கள் தாண்ட முடியாமல் பயங்கரமான ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தை, உன் பாதாரவிந்தங்களாக ஓடத்தினால் தாங்கள் தாண்டி, அதை இவ்விடத்திலேயே வைத்துப் போகிறார்கள். (தாங்கள் தாண்டினது மாத்ரமல்லாமல், மற்றவர்களுக்கும் ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவதற்கு இதுவே உபாயமென்று உன் பாதாரவிந்தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டுப் போகிறார்கள்).

இவ்வாறு நீ ஸத்புருஷர்களை அனுக்ரஹிக்கும் தன்மையனாயிருக்கின்றாய். தாமரையிதழ் போன்ற கண்களுடையவனே! வேறு சிலர் தங்களைத் தாங்களே முக்தியடைந்தவர்களென்று வீணாக அபிமானித்து (நினைத்து), உன்னிடத்தில் பக்தியில்லாமையால், மனத்தூய்மையின்றி ப்ரயாஸப்பட்டு (மிகவும் கஷ்டப்பட்டு), வர்ணாச்ரமாதி ரூபமான (ப்ராஹ்மண ஜாதி, ஸன்யாஸ ஆச்ரமம் போன்ற) சிறந்த பதவியைப் பெற்றும், உன் பாதாரவிந்தங்களைப் பணியாமல், அந்தப் பதவியினின்று கீழ் விழுகின்றார்கள். மாதவனே! உன் பக்தர்களோவென்றால், அவர்களைப் போல நல்வழியினின்று ஒரு காலும் நழுவுகிறதில்லை. உன்னிடத்தில் நிலை நின்ற பக்தியுடையவர்களாகி, உன்னால் பாதுகாக்கப்பட்டு, தடைகளை உண்டாக்கும் ஸேனைத் தலைவர்களின் தலைகளின் மேல் திரிகின்றார்கள். (தடையின்றி பக்தியோகத்தை நடத்தி உன்னைப் பெறுகிறார்களென்பது கருத்து). நீ உலகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு சுத்த ஸத்வ மயமான உருவங்களை ஏற்றுக்கொள்கின்றாய்.

நீ ஸங்கல்பத்தினாலேயே உலகங்களைப் பாதுகாக்க வல்லவனேயாயினும், உன் பக்தர்கள் வேதங்களில் விதிக்கப்பட்ட யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்கள், உபாஸனம், தவம், ஸமாதி இவைகளால் உன்னை ஆராதிக்கும் பொருட்டே, நீ பல உருவங்களை ஏற்றுக்கொள்கின்றாய். அவ்வுருவங்கள், ப்ராணிகளுக்கு நன்மைகளை விளைக்கின்றன. ஜகத்காரணனே! ஜ்ஞானத்தை விளைத்து, அஜ்ஞானத்தினால் விளைகிற அஹங்கார (நான்) மமகாரங்களைப் (எனது) போக்குவதும், சுத்த ஸத்வ மயமாயிருப்பதும், உனக்கு அஸாதாரணமுமாகிய இத்தகைய உருவங்களை நீ ஏற்றுக் கொள்ளாதிருப்பாயாயின், இவ்வுலகத்திலுள்ளவர்கள் தங்கள் தங்கள் குணங்களின் தோற்றங்களுக்குத் தகுந்தபடி உன்னைத் தேவ மனுஷ்யாதிகளோடு ஸமானனென்று (ஒத்தவன் என்று) அனுமானிப்பார்களன்றி (நினைப்பார்களே அன்றி), நீ அவர்களைக் காட்டிலும் வேறானவன் என்பதை அறியமாட்டார்கள். 

நீ, வேத வாக்யங்களாலும், அவற்றைத் தொடர்ந்த மனத்தினாலும், ஊஹிக்கத் தகுந்த ஸ்வபாவமுடையவன். எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிப்பவன். உன்னுடைய குணங்களும், செயல்களும், பிறவிகளும், காமரூபங்களும் விலக்ஷணமாகையால் (வேறுபட்டவையாகையால்), இப்படிப்பட்டவையென்று நிரூபிக்க முடியாதவை. ஆயினும், யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களில் உச்சரிக்கிற அக்னி, இந்த்ராதி சப்தங்கள், அந்த அக்னி இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர்யாமியான உன்னுடைய நாமங்களேயென்று நினைத்து, அத்தகைய உன்னை ஆராதிக்கிறார்கள். தேவனே! மற்றும், உன்னுடைய ஆராதன ரூபமான யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களைச் செய்து, உன்னிடத்தில் பக்தி உண்டாகப் பெற்ற பெரியோர்களே உன்னுடைய குணம், செயல் முதலியவை விலக்ஷணங்களென்று (வேறுபட்டவை, உயர்ந்தவை என்று) அறிவார்களன்றி, மற்றவர் அறியமாட்டார்கள். 

நாதனே! எவனேனும் மங்களத்தை விளைக்கவல்ல அஸாதாரணமான உன்னுடைய நாமங்களையும், உருவங்களையும், பிறர் சொல்லக் கேட்பதும், கேட்பவர்களுக்குச் சொல்வதும், நாமங்களை நினைப்பதும், உருவங்களை த்யானிப்பதும், செய்து கொண்டு, உட்காருவது, திரிவது, புசிப்பது, முதலிய செயல்களிலும், உன்னுடைய பாதாரவிந்தங்களில் நிலை நின்ற மனமுடையவனாயிருப்பானாயின், அவன் மோக்ஷமாகிற பெரிய நன்மையைப் பெறுவானன்றி, மீளவும் ஸம்ஸாரத்திற்கு ஆளாக மாட்டான். தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குந்தன்மையனே! எங்களுக்குப் பெரிய ஸந்தோஷமாயிற்று. ஏனென்றால், ஸர்வேச்வரனான உன்னுடைய பிறவியாலும், அடிவைப்பாலும், இப்பூமியின் பாரம் நீங்கினாற் போலவே. மற்றும், த்வஜம், வஜ்ரம், அங்குசம் (த்வஜம்-கொடி; வஜ்ரம்-வஜ்ராயுதம்; அங்குசம்-மரவெட்டி) முதலிய ரேகைகள் (கோடுகள்) அமைந்து, ரமணீயங்களான (அழகான) உன் அடி வைப்புக்களால் அலங்கரிக்கப்பட்டதும், உன்னால் அருள்புரியப் பெற்றதுமாகிய இப்பூமியை,  நித்ய விபூதியைப் (ஸ்ரீவைகுண்டத்தைப்) போல் நாங்கள் பார்க்கப் போகிறோம். இதெல்லாம் எங்களுக்கு ஸந்தோஷமல்லவா? 

ஜகதீசனே! நீ ஜீவாத்மாக்களைப் போல கர்மத்தினால் விளையும் பிறவியற்றவன். ஆயினும், உன்னுடைய பிறவிக்குக் காரணம் விளையாட வேண்டுமென்கிற உன்னுடைய  ஸங்கல்பத்தையொழிய மற்றொன்றும் எங்களுக்குத் தெரியவில்லை. இத்தன்மை மற்ற எவர்க்கும் கிடையாது. இஃதென்ன ஆச்சர்யம்! ஸம்ஸார பயத்தைப் போக்கும் தன்மையனே! நீ, ஜகத்திற்கு ஆதாரனும், அந்தராத்மாவுமாகிய உன்னுடைய ஸங்கல்பத்தினாலல்லவோ, ப்ரக்ருதியைக் கொண்டு இந்த ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகின்றாய். அந்த ஸங்கல்பமே, உன்னுடைய பிறவிக்குக் காரணமென்று நாங்கள் நினைக்கின்றோம். நீ முன்பு, மத்ஸ்யம் (மீன்), குதிரை, ஆமை, பன்றி, ந்ருஸிம்ஹம், க்ஷத்ரியன், ப்ராஹ்மணன், தேவன் முதலிய ஜாதிகளில் அவதரித்து, எங்களையும், மூன்று லோகங்களையும், பாதுகாத்தாற்போல, இப்பொழுதும் பூமியின் பாரத்தைப் போக்கி, எங்களைப் பாதுகாப்பாயாக. யாதவ ச்ரேஷ்டனே! உனக்கு நமஸ்காரம்.

அம்மா! நம்முடைய நன்மைக்காக, ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸாக்ஷாத் பரமபுருஷன், உன்னுடைய கர்ப்பத்தில் ப்ரவேசித்திருக்கின்றான். மரணமடையப் போகிற கம்ஸனிடத்தினின்று, நீ பயப்பட வேண்டாம். உன் பிள்ளை யாதவர்களையெல்லாம் பாதுகாக்கப் போகின்றான். (இவ்வாறு தேவதைகள் தேவகியின் கர்ப்பத்திலுள்ள பரமபுருஷனை ஸ்தோத்ரம் செய்து, தேவகியைக் குறித்து சொல்கிறார்கள்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தேவதைகள் அந்தப் பரமபுருஷனை தங்கள் புத்திக்கு எட்டின அளவு ஸ்தோத்ரம் செய்து, ப்ரஹ்ம, ருத்ரர்களை முன்னிட்டுக்கொண்டு, ஸ்வர்க்கலோகம் போய்ச் சேர்ந்தார்கள்.

இரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை