வெள்ளி, 13 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 217

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முதலாவது அத்தியாயம்

(தேவகியை வதிக்க முயன்ற கம்ஸனை வஸுதேவன் உபாயத்தினால் விடுவித்தலும், நாரதருடைய உபதேசத்தினால் அவன் அவ்விருவரையும் சிறையில் அடைத்தலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- “சந்த்ர - ஸூர்யர்களின் வம்சங்களுடைய விஸ்தாரத்தையும் (விரிவையும்), அவ்விரண்டு வம்சங்களில் பிறந்த ராஜாக்களின் அற்புத சரித்ரத்தையும் மொழித்தீர். முனிச்ரேஷ்டரே! மிகுதியும் தர்மசீலனான யதுவின் வம்சத்தையும் பரக்கச்சொன்னீர். அந்த யதுவின் வம்சத்தில், தன்னுடைய அம்சமாகிய பலராமனுடன் அவதரித்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீர்யங்கள் அமைந்த சரித்ரங்களை எங்களுக்குச் சொல்வீராக”. ஸமஸ்த பூதங்களையும் பாதுகாப்பவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய, பகவான் யதுவின் வம்சத்தில் அவதரித்து, எந்தெந்த வீரச்செயல்களை நடத்தினானோ, அவற்றையெல்லாம் எங்களுக்கு விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொல்லவேண்டும். “சொன்னதெல்லாம் விஷ்ணுவின் வீர்யங்களேயல்லவா (வலிமை, பராக்ரமம்)! மீளவும் அவற்றை ஏன் கேட்கிறாய்?” என்னில் சொல்லுகிறேன். 

உத்தம ச்லோகனான பகவானுடைய  குணானுவாதமாகிற (குணானுவாதம் - குணங்களை தொடர்ந்து சொல்லுகை) அம்ருதத்தைக் கேட்பதற்கும், பசு ஹிம்ஸை செய்யும் பாவியைத் தவிர மற்ற எவன்தான் வெறுப்புறுவான்? சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) விருப்பமாகிற தாஹம் அற்றவர்கள், இந்த அம்ருதத்தைப் புகழ்வார்கள். இது, ஸம்ஸாரமாகிற நோய்க்கு, அருமருந்தாயிருக்கும். மற்றும், இது செவிக்கும், மனத்திற்கும், இனிதாயிருக்கும். என் பாட்டன்மார்களான பாண்டவர்கள், இந்த ஸ்ரீக்ருஷ்ணனையே ஓடமாகக்கொண்டு, தேவதைகளையும் ஜயிக்க வல்லவர்களான பீஷ்மர் முதலிய மஹா வீரர்களாகிற திமிங்கிலங்கள் சூழ்ந்திருக்கையால் வருந்தியும் தாண்ட முடியாத கௌரவர்களின் ஸைன்யமாகிற (படையாகிற) ஸமுத்ரத்தைக் குளம்படி (மாட்டின் கால் குளம்பு அளவு) போலாக்கித் தாண்டினார்கள். மற்றும், இந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னைச் சரணமடைந்த என் தாயான உத்தரையின் வயிற்றில் புகுந்து, சக்ராயுதத்தை ஏந்திக்கொண்டு, அஸ்வத்தாமாவின் அஸ்த்ரத்தினால் தஹிக்கப்பட்டதும், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஸந்தான பீஜமுமாகிய (வம்ச விதையான), இந்த என் சரீரத்தைக் காத்தான். இவ்வாறு மஹோபகாரகனான (பெரிய உதவி செய்பவனான) அந்த ஸ்ரீ க்ருஷ்ணனுடைய குணானுவாதத்தினின்று க்ருதஜ்ஞனாகிய (க்ருதஜ்ஞ்ன் - செய்த உதவியை அறிந்தவன்; நன்றி மறவாதவன்) நான் எப்படி மீளுவேன்? 

அறிஞரே, ஆகையால் ஸமஸ்த ப்ராணிகளுக்கும் உள்ளே புகுந்து, அந்தர்யாமியாயிருந்து (உள்ளே இருந்து நியமிப்பவனாய்), ரக்ஷணத்தையும் (காத்தலையும்), வெளியில் கால ஸ்வருபத்தினால் ஸம்ஹாரத்தையும் (அழித்தலையும்) நடத்துகின்றவனும், தன் ஸங்கல்பத்தினால் மனுஷ்யனாய் வந்து அவதரித்தவனுமாகிய, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரச்செயல்களைச் சொல்வீராக. ஸங்கர்ஷணனுடைய அவதாரமான பலராமன் ரோஹிணியின் புதல்வனென்றும், அவனையே தேவகியின் புதல்வனேன்றும் மொழிந்தீர். தேஹாந்தரமில்லாமல் (வேறு உடல் இல்லாமல்) ஒரே தேஹத்தில் (உடலில்), ரோஹிணி, தேவகி ஆகிய இருவர்களின் கர்ப்பத்திலும் ஸம்பந்தம் அந்தப் பலராமனுக்கு எப்படி உண்டாயிற்று? ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் தந்தையாகிய வஸுதேவனுடைய க்ருஹத்தினின்று, எதற்காகக் கோகுலம் போனான்? பக்தர்களைப் பாதுகாக்கும் தன்மையுள்ள அந்தப் பகவான், பந்துக்களான யாதவர்களுடன், எங்கு வாஸம் செய்தான்? கோகுலத்திலும், மதுரையிலும், அவன் வஸிக்கும் பொழுது, என்னென்ன செய்தான்? தன் தாய்க்கு நேரே உடன்பிறந்தவனும், வதிக்கத்தகாதவனுமாகிய, கம்ஸனை ஏன் கொன்றான்? மானிட உருவம் பூண்டு, வ்ருஷ்ணிகளுடனும், யாதவர்களுடனும், த்வாரகையில் எத்தனை வர்ஷங்கள் வஸித்திருந்தான்? அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு எத்தனை பத்னிகள் இருந்தார்கள்? ஸ்ரீக்ருஷ்ண வ்ருத்தாந்தங்களில் உமக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. நீர் எல்லாமறிந்தவர். ஆகையால், கேட்க வேண்டும் என்னும் பேராவலுடைய எனக்கு, நான் கேட்ட விஷயங்களையும், நான் கேளாத விஷயங்கள் எவை எவை உண்டோ அவற்றையும், சொல்லவேண்டும். நான் ப்ராயோபவேசத்தில் (மரணம் வரை உண்ணா நோன்பில்) இழிந்து, தண்ணீரையும் கூடப்பருகாதிருப்பினும், உம்முடைய முகமாகிற தாமரை மலரினின்று பெருகி வருகின்ற பகவானுடைய கதையாகிற அம்ருதத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன். ஆகையால் மிகவும் பொறுக்க முடியாத இந்தப் பசியும்கூட என்னை வருத்தவில்லை.

ஸூத புத்ரர் சொல்லுகிறார்:- சௌனகரே! சாதுவாகிய பரீக்ஷித்து மன்னவன் இவ்வாறு வினவினதைக் கேட்டு, மஹானுபாவரும் (பெரிந்தகையும், மரியாதைக்குரியவரும்) பாகவத ச்ரேஷ்டருமாகிய, ஸ்ரீசுக முனிவர் அம்மன்னவனைப் புகழ்ந்து, கலிகாலத்தினால் விளையும் பாபங்களையெல்லாம் போக்கவல்ல ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தை, விஸ்தாரமாகச் (விரிவாகச்) சொல்லத்தொடங்கினார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜ ரிஷிகளில் சிறந்த பரீக்ஷித்து மன்னவனே! உன் புத்தி நன்கு விவேகமுற்றிருக்கின்றது. ஏனென்றால், உனக்கு வாஸுதேவனுடைய கதையையே கேட்கவேண்டுமென்று நிலைநின்ற புத்தி உண்டாயிருக்கின்றதல்லவா! வாஸுதேவனுடைய கதையைப்பற்றி வினவுதலும்கூட, அவ்வாஸுதேவனுடைய ஸ்ரீபாததீர்த்தமாகிய கங்காஜலம்போலச் சொல்லுகிறவன், வினவுகிறவன், கேட்கிறவர்கள் ஆகிய மூவரையும் புனிதம் செய்யும். நேரே அவனுடைய கதையைக் கேட்கிறவர்களைப்பற்றிச் சொல்லவேண்டுமோ? 

மன்னவனே! மதித்து (கர்வமுற்று), மன்னவர்களென்னும் வேஷம் பூண்ட, அஸுரர்களின் ஸைன்யங்களுடைய (படைகளுடைய) பற்பலவாயிரம் கூட்டங்களாகிற பெரும்பாரத்தினால் பீடிக்கப்பட்ட பூமிதேவி, ப்ரஹ்மதேவனைச் சரணமடைந்தாள். அவள், பசுவின் உருவம் தரித்து, வருந்தி, கண்ணும், கண்ணீருமாய்க் காண்போர்க்கு மன இரக்கம் உண்டாகும்படி அழுதுகொண்டு, ப்ரஹ்மாவின் அருகாமையில் நின்று, ஸ்தோத்ரம் செய்து, அவனுக்குத் தன் துக்கத்தை நன்றாக விண்ணப்பம் செய்தாள். ப்ரஹ்மதேவனும், அந்த வ்யஸனத்தை (துக்கத்தை) அறிந்து, தேவக்கூட்டங்களோடும், அந்தப் பூமியோடும், ருத்ரனோடும் கூட, க்ஷீர ஸமுத்ரத்தின் கரைக்குச் சென்றான். அவ்விடத்தில் சென்று, ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவும், பரமபுருஷனுமாகிய, ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் புருஷ ஸுக்தத்தினால் ஸ்தோத்ரம் செய்து, மன ஏக்கத்துடன், த்யானித்தான். அப்பொழுது, அந்த ப்ரஹ்மதேவனுக்கு, ஆகாயத்தில் ஓர் அசரீரி வாக்கு செவிப்பட்டது. அவன் அதைக் கேட்டு, தேவதைகளை நோக்கி “தேவதைகளே! த்யானத்தில் என் செவிக்குப்பட்ட பரமபுருஷனுடைய வார்த்தையைச் சொல்லுகிறேன்; கேளுங்கள். அதைக் கேட்டவுடன் சீக்ரத்தில் அப்படியே நடத்தவேண்டும். காலதாமதம் செய்யலாகாது. 

முன்னமே பகவானுக்குப் பூமியின் வருத்தம் தெரியுமாம். ஈச்வரர்களான நமக்கும் ஈச்வரனாகிய அந்தப் பகவான், தன் கால சக்தியினால், பூமியின் பாரத்தைப் போக்குவதற்கு பூமியில் அவதரிக்கப் போகிறான். அதற்குள்ளாக, நீங்கள் உங்களுடைய அம்சங்களால், யாதவர்களிடத்தில் பிறப்பீர்களாக. ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரம புருஷன், தானே நேரில் வஸுதேவ க்ருஹத்தில் அவதரிக்கப்போகிறான். அவனுடைய சுஸ்ரூஷைக்காக (பணிவிடைக்காக), தெய்வ மடந்தையர்கள், தங்களுடைய அம்சங்களால் பூமியில் பிறப்பார்களாக. ரிஷிகளும், அந்தப் பகவானுடைய கட்டளையின்படி, பால் முதலியவற்றைக் கொடுத்து, அவனைக் களிக்கச்செய்யும் (மகிழ்விக்கும்) பொருட்டு, பூமியில் பசுக்களாய்ப் பிறக்கவேண்டும். அந்த வாஸுதேவனுடைய அம்சமும், ஆயிரம் முகங்களுடையவனும், புண்ய பாபகர்மங்களுக்கு உட்படாத நித்ய ஸூரிகளில் தலைவனுமாகிய ஆதிசேஷனும், அந்தப் பகவானுக்கு ப்ரியம் செய்யும் பொருட்டு, முன் தோன்றலாய் அவதரிக்கப்போகிறான். மற்றும், ஜகத்திலுள்ள (உலகிலுள்ள) சேதன (ஜீவ) வர்க்கங்களையெல்லாம் மதி (புத்தி) மயங்கச் செய்வதும், மேன்மைக் கிடமுமாகிய, அவ்விஷ்ணுவின் மாயையும் நியாமகனாகிய (நியமிப்பவனான) அந்தப் பகவானால் நியமிக்கப்பட்டு, அவனுடைய ப்ரயோஜனத்திற்காக, அவனது அம்சத்தினால் பிறக்கப் போகின்றது” என்று மொழிந்தான். 

ப்ரஜாபதிகளான தக்ஷாதிகளுக்கும் ப்ரபுவாகிய ப்ரஹ்மதேவன், பகவானுடைய கட்டளையைத் தேவதைகளுக்குத் தெரிவித்து, பூமியையும் இனிய உரைகளால் ஆச்வாஸப்படுத்தி, சிறப்புடைய தன் லோகத்திற்குச் சென்றான். 

முன்பு யாதவர்களுக்கு ப்ரபுவாகிய சூரஸேன மன்னவன், மதுரையில் வஸித்துக்கொண்டு, மாதுர தேசங்களையும், சூரஸேன தேசங்களையும், அனுபவித்து வந்தான். ஆகையால், அந்த மதுராபுரி, யது வம்சத்து ராஜாக்கள் அனைவர்க்கும் ப்ரதான பட்டணமாயிருந்தது. அந்தப் பட்டணத்தில் என்றும் பகவானுடைய ஸன்னிதானம் மாறாதிருக்கும். ஒருகால், சூரனுடைய பிள்ளையாகிய வஸுதேவன், அந்தப் பட்டணத்தில் விவாஹம் நடக்கப்பெற்றுத் தேவகியென்கிற தன் பார்யையுடன், தன் க்ருஹத்திற்குப் போகும் பொருட்டு, ரதத்தின் மேல் ஏறிக்கொண்டான். அப்பால், உக்ரஸேனனுடைய பிள்ளையாகிய கம்ஸன், தனது உடன் தோன்றலான தேவகிக்கு ப்ரியம் செய்ய விரும்பி, ஸ்வர்ணமயமான பல்லாயிரம் தேர்களால் சூழப்பட்டு, வஸுதேவன் ஏறிக்கொண்டிருந்த தேர்க்குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டு, தானே ஓட்டத் தொடங்கினான். அப்பொழுது உக்ரஸேனனுடைய ப்ராதாவான (ஸகோதரனான) தேவகன், பெண்ணிடத்தில் ப்ரீதியுடையவனாகையால், பொற்சங்கிலிகளால் அலங்காரம் செய்யப்பெற்ற பதினாயிரம் யானைகளையும், அத்தகைய பதினையாயிரம் குதிரைகளையும், பதினெண்ணாயிரம் தேர்களையும், நன்கு அலங்கரித்துக் கொண்டிருப்பவர்களும், ஸுகுமாரைகளுமான (ஸுகுமாரைகள் - மேன்மைக்கிடமான அங்கமுடையவர்கள்; அல்லது இயற்கையில் கொடுமையின்றி நன்மையமைந்தவர்கள்) இருநூறு தாஸிகளையும், அத்தனை வாஹனங்களையும், பெண்ணுக்குப் பரிசிலாகக் கொடுத்தான். 

மணப்பெண்ணும் மணவாளனுமாகப் புறப்படும் பொழுது, மங்களத்திற்காகச் சங்க வாத்யங்களும், ம்ருதங்க வாத்யங்களும், துந்துபி வாத்யங்களும், ஒரே ஸமயத்தில் முழங்கின. இவ்வாறு புறப்பட்டுக் குதிரைகளின் கயிறுகளைப் பிடித்துத் தானே ரதத்தை ஓட்டுகிற கம்ஸனுக்கு, வழியில் “அட! கம்ஸா! மூடனே! நீ இப்பொழுது எவளை அழைத்துக்கொண்டு போகின்றனையோ, அப்படிப்பட்ட உன்னுடன் தோன்றலாகிய இந்தத் தேவகியின் எட்டாவது கர்ப்பம் உன்னை வதிக்கப்போகின்றது” என்று ஓர் அசரீரி வாக்கு செவிப்பட்டது. போஜர்களின் குலத்தை நிந்தைக்கிடமாகும்படி செய்கிறவனும், மூர்க்கனும், பாபிஷ்டனுமாகிய அக்கம்ஸன் கையும் கத்தியுமாய், தன்னுடன் பிறந்தவளை வதிக்க முயன்று, அவள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டான். நிந்தைக்கிடமான கார்யத்தைச் செய்ய முயன்றவனும், கொடியனும், வெட்கமற்றவனுமாகிய, அந்தக் கம்ஸனை, மிகுந்த மதி (புத்தி) உடைய வஸுதேவன், நல்வார்த்தைகளால் ஸமாதானப்படுத்த முயன்று, இவ்வாறு மொழிந்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- நீ சூரர்களால் புகழத்தகுந்த குணமுடையவன்; போஜ வம்சத்தரசர்களுக்குப் புகழை விளைப்பவன். இப்படிப்பட்ட நீ ஸ்த்ரீயும், உடன் பிறந்தவளுமாகிய, இவளை விவாஹம் நடந்து க்ருஹப்ரவேசமாகும் ஸமயத்தில், வதிக்க முயல்கின்றாயே; இது உனக்குத் தகுமா? வீரனே! ப்ராணிகளுக்கு, தேஹத்தோடு (உடலோடு) கூடவே, ம்ருத்யுவும் (மரணமும்) உண்டாகின்றது. ஆனால், அது காலத்தை மாத்ரமே எதிர்பார்க்கின்றது. ஆகையால், இப்பொழுதாவது, நூறு வர்ஷங்கள் சென்ற பின்னாவது, ப்ராணிகளுக்கு மரணம் நேருவது நிச்சயமே. அதைத் தடுக்க முடியாது. “நூறு வர்ஷங்கள் சென்ற பின்பு, கிழத்தனத்தினால் - சிதிலமான சரீரத்திற்கு, மரணம் நேருவது இஷ்டமே. இப்பொழுது, மிகவும் மங்களமான இச்சரீரம் போகுமாயின், மீளவும் இப்படிப்பட்ட சரீரம் கிடைப்பதரிது. ஆகையால், இந்த மரணத்தை நான் தடுக்க வேண்டியது அவச்யமே” என்று நீ சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். இத்தேஹம் (இந்த உடல்) மரணமடையத் தொடங்குமாயின், அதிலுள்ள ஜீவன் தான் முன்பு செய்த கர்மத்திற்கு உட்பட்டு, அதற்குப் பலனாக ஏற்பட்ட வேறொரு சரீரத்தைப் பெற்றே, முன் சரீரத்தைத் துறக்கின்றான். இந்தச் சரீரம் போன பின்பு, வேறொரு சரீரம் நேருவதில் ஸந்தேஹமில்லை. ஆனால், அவனவன் செய்த புண்ய பாப கர்மங்களுக்குத் தகுந்தபடி, நல்லதும் கெட்டதுமாயிருக்கும். நீ இப்பொழுது இத்தகைய பாப கர்மத்தைச் செய்வாயாயின்,  உனக்கு ஜன்மாந்தரத்தில், ஹீன சரீரம் (கெட்ட, தாழ்ந்த உடலுடன் பிறவி) நேருமேயன்றி, நல்ல சரீரம் நேராது. ஆகையால், இப்பொழுது நீ உனக்கு உண்டாயிருக்கின்ற மரண பயத்தைத் துறந்து, உன்னுடன் பிறந்தவளுடைய ப்ராணன்களைப் பாதுகாக்கையாகிற புண்ய கர்மத்தைச் செய்வாயாயின், ஜன்மாந்தரத்தில் இதைக்காட்டிலும் மங்களமான சரீரத்தைப் பெறுவாய். 

அட்டையென்னும் நீர்ப்புழு, தானிருக்குமிடத்தை விட்டு, மற்றோரிடம் போக முயற்சி கொள்ளுமாயின், ஒரு பாதத்தினால் இருப்பிடத்தைப் பிடித்து கொண்டு, மற்றொரு பாதத்தினால், மற்றோரிடத்தைத் தாவிப் பிடிக்கின்றது. இவ்வாறே, ஜீவனும் மரணமடைகிற சரீரத்தைத் துறக்கும் பொழுது, தன் கர்மத்திற்கு உரியதான மற்றொரு சரீரத்தைப் பெறுகின்றான். மற்றும், நடக்கும் புருஷன் ஒரு காலால் பூமியில் நின்றுகொண்டு, மற்றொரு காலைத் தூக்கிவைப்பது போல, ஜீவிக்கும் புருஷன், சாயை (நிழல்) போல மரணம் தொடரப்பெற்றே, ஜீவித்துக்கொண்டிருக்கிறான்.  கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் பெற விரும்பி, அதை மனத்தினால் சிந்தித்துக்கொண்டு, ஆசையினால், புத்தியில் ஆவல் உண்டாகப்பெற்ற ஜீவன், ஸ்வப்னத்தில் (கனவில்) படுத்திருக்கும் சரீரத்தைப் போன்ற சரீரத்தையாவது, அதைக்காட்டிலும் விலக்ஷணமான (வேறான) சரீரத்தையாவது, காண்கின்றான்; அப்பால் சரீரத்தைப்பற்றின நினைவும் தொலையப்பெறுகின்றான். ஆகையால், அந்தச் சரீரத்தின் வியோகத்தைப் (அழிவைப்) பற்றின பயத்தையும் அடைகிறதில்லை. 

இவ்வாறே, இஹலோக (இந்த உலக) ஸுகத்தையும், பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகத்தையும், மனத்தினால் சிந்தித்துக்கொண்டிருக்கும் புருஷன், தன் கர்மத்திற்குத் தகுந்தபடி ஈச்வரனால் படைக்கப்பட்ட ஏதோ ஒரு சரீரத்தைப் பெறுகிறான்; முன் சரீரத்தைப் பற்றின நினைவும் மாறப் பெறுகிறான். ப்ராணிகளின் மனம், கர்ம வாஸணையால் தூண்டப்பட்டு, ஸங்கல்ப (எண்ணம், விகல்பங்களுக்கு (மாறுபாடு) இடமாகி, ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற) குண ஸ்வரூபமான ப்ரக்ருதியின் பரிணாமங்களாகிய சப்தாதி விஷயங்களில், எதை எதை நினக்கின்றதோ, அதைப்பற்றின விருப்பம் மாறப் பெறாமல், அதனோடு கூடவே பிறக்கிறார்கள். இதுவே ஜீவாத்மாக்களுக்கு ஸம்ஸாரமென்பது. ஒரே விதமாயிருக்கின்ற இந்த ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸு ஜலத்திலும், பூமியின் பரிணாமங்களான கண்ணாடி முதலியவைகளிலும், ப்ரதிபலித்துக் காற்று வேகத்தினாலும், அந்த ஜலம் கண்ணாடி முதலியவற்றின் சிறுமை, பெருமை முதலியவைகளாலும் பலவாகத் தோற்றுகின்றது. அவ்வாறே, இந்த ஜீவன், இயற்கையில் தேவ, மனுஷ்யாதி ஆகாரங்கள் (வடிவுகள்) அற்றவனாயினும், தன்னுடைய கர்மங்களுக்குத் தகுந்தபடி ப்ரக்ருதியின் பரிணாமங்களான பூத ஸூக்ஷ்மங்களால் ஏற்பட்டவைகளும், ஸத்வாதி குண ஸ்வரூபங்களுமான சரீரங்களில், சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பத்துடன் புகுந்து, “நான் தேவன், நான் மனுஷ்யன்” என்று பலவாறு ப்ரமிக்கின்றான். 

வஸ்துவின் உண்மை இதுவாகையால், இதை அறிந்த புருஷன், தன் க்ஷேமத்தை விரும்பி, ஒருவனுக்கும் த்ரோஹம் செய்யலாகாது. இப்படி இருப்பானாயின், அவனுக்கு எதினின்றும் பாபம் உண்டாகாது. த்ரோஹம் செய்பவனுக்கு, பிறனிடத்தினின்று பயம் உண்டாகும். ஒருகால் இவ்வுலகத்தில் பயம் நேராது போயினும், அவனுக்குப் பரலோக பயம் தீராது. இவள் உனக்குப் பின் பிறந்தவள்; ஒன்றும் அறியாதவள்; மன இரக்கத்திற்கிடமாக இருப்பவள்; உனக்குப் பெண் போன்றவள்; மங்கள ஸ்வபாவமுடையவள். தீனர்களிடத்தில் (ஏழை, புகலற்றவர்களிடத்தில்) மன இரக்கமுடையவனே! நீ இவளை வதிக்கலாகாது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தக் கம்ஸன், இவ்வாறு நல்வார்த்தைகளாலும், இஹ (இந்த உலக) பரலோக (வேறு உலக) பயங்களை அறிவிக்கிற பேத (புத்தியை மாற்றும்) வாக்யங்களாலும் வதத்தினின்று மீளும்படி தூண்டப்பெற்றும், கொடியனாகையாலும், அஸுர ஸ்வபாவனாகையாலும், அதினின்று மீளவில்லை. அந்தக் கம்ஸன், அவளைக் கொன்றே தீர வேண்டுமென்று பிடிவாதமுற்றிருப்பதை அறிந்து வஸுதேவன், ஆலோசித்து, அக்காலத்திற்கு உரியதான இவ்வுபாயத்தை நிச்சயித்தான். “நேர்ந்திருக்கின்ற ம்ருத்யுவை (மரணத்தை) புத்தியுள்ள புருஷன், தன் புத்திபலமுள்ள வரையில் உபாயத்தை ஆலோசித்து, பரிஹரித்துக் (விலக்கிக்) கொள்ள வேண்டும். அப்படி யத்னம் (முயற்சி) செய்தும் அது மீளாது போமாயின், அதற்குமேல் அது அவனுடைய அபராதமன்று. ஆகையால், இவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளைக் கொடுக்கிறேனென்று ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்து, மன இரக்கத்திற்கிடமாய் இருக்கின்ற இவளை இந்த மரணத்தினின்று விடுவிக்கிறேன். 

எனக்குப் பிள்ளைகள் பிறந்து, அவர்களுக்கு ம்ருத்யுவாகிய (மரணமாகிய) இக்கம்ஸனும் மரணமடையாதிருப்பானாயின், பிள்ளைகளைக் கொடுத்து விடுகிறேன். ஒருகால், எனக்குப் பிள்ளை பிறவாமல் போயினும், பிள்ளை பிறப்பதற்கு முன்னமே இவன் மரணமடைவானாயினும், நான் இப்பொழுது ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்வதில் பாதகமில்லை. ஒருகால் எனக்குப் பிறக்கும் பிள்ளையே இக்கம்ஸனுக்கு ம்ருத்யுவாகக் கூடுமல்லவா? தெய்வத்தின் கதி நம்மால் அறியமுடியாது. நேர்ந்த மரணமும் நிவர்த்திக்கும் (நீங்கும்). (மார்க்கண்டேயனுக்கு நேர்ந்த மரணம் நீங்கிற்றல்லவா?) வரதானத்தினால் (பிறர் அளித்த வரத்தினால்) நிவர்த்தித்த (நீங்கிய) ம்ருத்யுவும் (மரணமும்) ஒரு கால் மீண்டு வரும். (ஹிரண்யகசிபு, ராவணன் முதலியவர்க்கு அவ்வாறு நடந்ததல்லவா?) ஒருகால் விபரீதமாக நேர்ந்தாலும், நான் செய்யும் ப்ரதிஜ்ஞைக்கு (சபதத்திற்கு) தோஷமில்லை. என் பிள்ளைக்கு நேரும் மரணம், என் ப்ரதிஜ்ஞையினால் (சபதத்தினால்) உண்டாகிறதன்றே. அது அவனுடைய கர்மாதீனமல்லவா? வனத்தில் மரங்களில் தீ பற்றி எரியும் பொழுது, ஸமீபத்திலுள்ள மரத்தில் பற்றாதிருப்பதும் உண்டு; தூரத்திலுள்ள மரத்தில் அண்டிப் பற்றி எரிவதும் உண்டு. அதற்குக் காரணம் அத்ருஷ்டமேயொழிய (தலைவிதி, வினையின் பின் விளைவு) மற்றொன்றும் அன்று. 

அவ்வாறே, ஜீவாத்மாக்களுக்குத் தேஹ (உடல்) ஸம்பந்தம் (தொடர்பு) உண்டாவதற்கும், உண்டாயிருக்கிற தேஹ ஸம்பந்தம் நிவர்த்திப்பதற்கும் (நீங்குவதற்கும்) அத்ருஷ்டமே காரணமன்றி, மற்றொன்றும் நிரூபிக்க முடியாது. அவரவர் கர்மத்தின்படி நடக்கிறதாகையால், நான் ப்ரதிஜ்ஞை (சபதம்) செய்வதில் தோஷமில்லை” என்று தன் புத்திக்கு எட்டின வரையில் ஆலோசித்து நிச்சயித்துக்கொண்டு, பாப கார்யத்தைச் செய்ய முயன்றிருக்கிற அந்தக் கம்ஸனை வெகுமதித்து, தான் நினைத்திருப்பதை அவனுக்குத் தெரிவிக்க முயன்றான். 

வஸுதேவன் தாமரை மலர் போன்ற தன் முகத்தை மலரச்செய்து, மன வருத்தமுற்றிருப்பினும், அதை வெளிக்குக் காட்டாமல் சிரித்துக்கொண்டே, வெட்கமற்ற கம்ஸனைக் குறித்து “நல்லியற்கையுடையவனே! உனக்கு இவளிடத்தினின்று பயம் கிடையாதல்லவா? இவளுடைய பிள்ளைகளிடத்தினின்று உனக்குப் பயம் நேருமென்றல்லவோ அசரீரி வாக்கு சொல்லிற்று. உனக்கு எவர்களிடத்தினின்று பயம் உண்டாயிருக்கின்றதோ, அப்படிப்பட்ட இவளுடைய பிள்ளைகளை, உனக்கு நான் கொடுத்து விடுகிறேன். நீ அவர்களைக் கொன்றாலும் ஸரி; கொல்லாமல் விட்டாலும் ஸரி. என் மேல் அபராதமில்லை (தவறு இல்லை)” என்றான். 

அப்பால் கம்ஸன், அவ்வஸுதேவனுடைய வாக்யத்தின் அபிப்ராயத்தை (பொருளை) அறிந்து, நன் மனமுடைய தன் பகினியின் (பகினி - உடன் பிறந்தவள்) வதத்தினின்று மீண்டான். பிறகு, வஸுதேவனும் ஸந்தோஷமடைந்து, அந்தக் கம்ஸனைப் புகழ்ந்து, தன் க்ருஹத்திற்குச் சென்றான். அப்பால், கர்ப்பந்தரிக்கும்படியான காலம் நேருகையில், ஸமஸ்த தேவதா ஸ்வரூபையான தேவகி, வர்ஷந்தோறும் ஒருபிள்ளை வீதம் எட்டுப்பிள்ளைகளையும், ஒரு பெண்ணையும், பெற்றாள். அப்பொழுது, வஸுதேவன் பொய் பேசுவதற்கு மிகவும் பயந்தவனாகையால், தான் செய்த ப்ரதிஜ்ஞையைப் (சபதத்தைப்) பாதுகாக்க முயன்று, மன வருத்தத்துடன் கீர்த்தீமானென்னும் பேருடைய முதற் பிள்ளையைக் கம்ஸனிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். 

ஸாதுக்களுக்கு எது தான் பொறுக்க முடியாது? ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிந்தவர்கள், எதைத்தான் விரும்புவார்கள்? தேஹம் (உடல்), தேஹானுபந்திகள் (உடலுடன் தொடர்பு உடையவை) ஆகிய இவற்றில் எதையும் விரும்பமாட்டார்களல்லவா? அல்ப ஸ்வபாவமுடையவர்கள் (குறுகிய, தாழ்ந்த தன்மை உடையவர்கள்) எதைத்தான் செய்யமாட்டார்கள்? எப்படிப்பட்ட பாப கார்யத்தையும் செய்வார்கள். ஜிதேந்த்ரியர்கள் (புலன்களை வென்றவர்கள்) எதைத்தான் துறக்க மாட்டார்கள்! ஆகையால், ஆழ்ந்த மனமுடைய வஸுதேவன், தன் பின்ளையைக் கம்ஸனிடம் கொண்டு போய்க் கொடுத்தான். அந்தக் கம்ஸனும், வஸுதேவன் ஸுக துக்கங்கள் இரண்டையும் துல்யமாக நினைத்திருப்பதையும், ஸத்யம் தவறாதிருப்பதையும் கண்டு மனக்களிப்புற்று, சிரித்துக்கொண்டே “இந்தக் குமாரன் திரும்பிப்போகட்டும். இவனிடத்தினின்று எனக்கு மரண பயம் இல்லை. உங்களுடைய எட்டாவது பிள்ளையிடத்தினின்றல்லவோ எனக்கு மரணம் ஏற்பட்டிருக்கின்றது” என்றான். அப்பால் வஸுதேவன், அப்படியே என்று அதை அங்கீகரித்துப் பிள்ளையை எடுத்துக்கொண்டு சென்றான். ஆயினும் பாபிஷ்டனும், நிலையற்ற மனமுடையவனுமாகிய அந்தக் கம்ஸனுடைய வார்த்தையை அவன் அபிநந்திக்கவில்லை (வரவேற்கவில்லை, பாராட்டவில்லை, மகிழ்ச்சி அடையவில்லை). 

ஒருகால் நாரத முனிவர் கம்ஸனிடம் வந்து “இடைச்சேரியிலுள்ள நந்தன் முதலிய இடையர்களும், அவர்களுடைய பத்னிகளும், வஸுதேவன் முதலிய வ்ருஷ்ணி வம்சத்தவர்களும், தேவகி முதலிய அவர்களுடைய பத்னிகளும், நந்தன், வஸுதேவன் இவ்விருவர்களுடைய ஜ்ஞாதிகளும் (பங்காளிகளும்), பந்துக்களும், நண்பர்களும் ஆகிய அனைவரும் தேவதைகளின் அம்சங்களால் பிறந்தவர்களாகையால், தேவதைகளே. கம்ஸனைத் தொடர்ந்தவர்கள், அனைவரும் அஸுரர்களின் அம்சத்தினால் பிறந்தவர்களாகையால், அஸுரர்களே. ஆகையால்தான் உலகங்களுக்கு உபத்ரவத்தை (துக்கத்தை) விளைவிக்கின்றார்கள்” என்னும் இவ்விஷயத்தையும், பூமிக்குப் பாரமாயிருக்கின்ற மன்னவர்களாகிற தைத்யர்களைப் பகவான் வதிக்க முயற்சி கொண்டிருப்பதையும் அவனுக்குச் சொன்னார். 

நாரத மஹர்ஷி புறப்பட்டுப் போனவுடன், கம்ஸன் யாதவர்கள் தேவதைகளின் அம்சத்தினால் பிறந்தவர்களென்பதையும், பகவான் தன்னை வதிப்பதற்காகத் தேவகியின் கர்ப்பத்தில் அவதரிக்கப் போகிறானென்பதையும் அறிந்து, தேவகி, வஸுதேவன் இவர்களுக்கு விலங்கிட்டுச் சிறைச்சாலையில் அடைத்து, பரம புருஷனென்னும் ஸந்தேஹத்தினாலும், அவர்களால் தனக்கு உபத்ரவம் (தீங்கு) நேருமென்னும் சங்கையினாலும் (ஸந்தேஹத்தினாலும்), அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம், அவ்வப்பொழுது வதித்துக்கொண்டிருந்தான். உலகத்தில், அரசர்கள் பெரும்பாலும் பிறருடைய ப்ராணன்களால் தங்கள் ப்ராணன்களுக்கு த்ருப்தியை விளைப்பவர்களாகி, மன இரக்கமில்லாத வேடர்கள் போன்று, தாய், தந்தைகளையும், உடன் தோன்றல்களையும், பிள்ளைகளையும், ஸ்னேஹிதர்களையும், குழந்தைகளையும் கொல்லுவார்கள். 

கம்ஸன், தான் பூர்வ ஜன்மத்தில் காலநேமியென்னும் மஹாஸுரனாகப் பிறந்து, விஷ்ணுவினால் வதிக்கப்பட்டதை அறிந்து, அவ்விஷ்ணுவினிடத்தில் பக்ஷபாதமுள்ள (ஈடுபாடு உடைய) யாதவர்களோடு விரோதித்துக் கொண்டிருந்தான். மஹாபலமுடைய அக்கம்ஸன், போஜர் அந்தகர் முதலிய யாதவர்களுக்கு ப்ரபுவும், தனக்குத் தந்தையுமாகிய உக்ரஸேனனயும், சிறையில் அடைத்துச் சூரஸேன தேசங்களைத் தானே அனுபவித்து வந்தான். 

முதலாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக