சிற்றூரல் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

அவர் ஒரு புலவர். எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்த நறுமணம் அவரது உள்ளத்தை மலரச் செய்தது. சுற்றும் முற்றும் பார்த்த அவர் தனக்கு மிக அருகாமலையிலேயே ஒரு தாழம்புதர் இருப்பதையும், அதில் அப்பொழுது தான் மலர்ந்திருந்த தாழம்பூவின் நறுமணந்தான் அது என்பதையும் உணர்ந்து கொண்டார். அந்த நறுமணத்தை அனுபவித்தவாறே மேலும் நடந்து கொண்டிருந்த அவருடைய நாசி சற்றுத் தொலைவிலிருந்து வேறோர் நறுமணத்தையும் நுகர்ந்தது. அந்த நறுமணம் முன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததை அவர் நன்கு கண்டார். ஆனால், அவர் அந்த சிறப்பான நறுமணத்திற்குக் காரணத்தை எளிதல் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நறுமணம் வரும் திசையை நோக்கி மெல்ல நடந்து, அந்த நறுமணத்திற்குக் காரணமான அந்தப் பொருளையும் கண்டார். பெரிய மரம் ஒன்று அங்கேயிருந்தது. அதில் கண்ணிற்குத் தெரியாத அளவில் பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறியப் பூக்களைக் கண்டார். முன்னம் கண்ட பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தை இந்த சிறிய பூக்களின் நறுமணத்தோடு ஒப்பிட்டு பார்க்க அவர் தவறினாரில்லை. இந்தச் சிறிய பூக்களின் நறுமணம் பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தைக் காட்டிலும் எத்தனை சிறந்ததாக இருக்கிறது என்று எண்ணிய அவரது கவியுள்ளம், உடனே ஒரு பாடலை வெளிப்படுத்தியது. அவ்விரு பூக்களின் உருவ வேறுபாடுகளும் அவைகள் தந்த நறுமணமும் அவரை உலக இயல்புக்கு இழுத்துச் சென்றது. இதுகாறும், அவர் தம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறார். உருவத்தில் பெரியவராய் காணப்படும் பலர் உலகத்தாருக்கு உபயோகமற்றவராய் உலவி வருவதையும், அதே சமயம் உருவத்தில் சிறியவராய் இருப்பவர்கள் உள்ளத்தினால் பெரியவராய் உலகத்தார் யாவருக்கும் மிக உபகாரமாய் இருப்பதையும் அவர் அப்பொழுது கண்ட அவ்விரு பூக்களும் அவருக்கு நினைப்பூட்டின. உடன் எழுந்தது ஒரு பாடல்,

“மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல் சிறியரென்றிருக்க வேண்டா” 

என்ன அருமையான பாடல். தாழம்பூவின் நறுமணத்தைக் காட்டிலும் சிறந்த மணம் வீசிக் கொண்டிருந்த அந்தச் சிறிய பூக்கள் மகிழம் பூக்கள்தான் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.


இவ்வாறு அந்த அவ்விருமலர்கள் தந்த அனுபவம், வேறோரு உவமைக்கும் அவரை இழுத்துச் சென்றது. கடல்! கருங்கடல்!! ஆனால் அதன் உவர்நீரை எவரும் விரும்புவதில்லை. அது கொடுக்கும் உப்புத் தண்ணீரை எவர்தான் குடிக்க முன்வருவார்கள். உலோபியின் செல்வம்போல் அந்தக் கடல் நீர் எவருக்கும், எக்காலத்துக்கும் உபயோகப்படுவதில்லை. ஒருவன் கடலின் எழலைப் பார்த்து களித்துக் கொண்டு நிற்கிறான். அதன் நிறமும், கரையிலாக் காட்சியும் அவனைப் பரவசமூட்டச் செய்கின்றன. அவனுக்குத் தாகம் ஏற்பட்டு விடுகிறது. கடல் நீரை ஒரு கை அள்ளிக் குடிக்கிறான். இது என்ன? ஏன் அவன் முகம் அவ்வாறு மாறுகிறது. அந்த உப்புநீரைக் குடித்த அவனுக்கு நீர் வேட்கை மேலும் அதிகரிக்கிறது. நல்ல நீரை அடைய வேண்டுமென்று அவன் மனம் நாடுகிறது. அந்தக் கடற்கரையின் மணற்பரப்பிலே ஓரிடத்தில் ஓரு நீரூற்று இருப்பதைத் தெய்வச் செயலாகக் காண்கிறான். அந்த நீரும் உப்பாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றினாலும் அவனது நீர் வேட்கை அவனை அந்த ஊற்று நீரை பருகும்படித் தூண்டுகிறது. அவன் ஆவலுடன் அந்த நீரைப் பருகுகிறான். என்ன ஆச்சரியம்! அந்த ஊற்று நீர் கற்கண்டு போல் இனிப்பதைக் காண்கிறான். இத்தனை பெரிய உவர்நீர்கடலின் பக்கத்திலும் இன்ப ஊற்று ஒன்று இருப்பது அவனுக்கு மிகவும் அதிசயத்தைக் கொடுக்கிறது. உருவத்தில் பெரிய கடல் உருவத்தில் சிறிய இந்த ஊற்றுக்கு எவ்விதத்திலும் நிகராக முடியாது என்ற உண்மை அனுபவத்தையும் கண்டு கொள்கிறான். இந்தப் பெரியக் கடல் நீர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பல உயிர்வாழ் இனங்களுக்குமே உதவக்கூடிய வகையில் இல்லாததையும் அவன் கண்டுகொள்ளத் தவறவில்லை. இந்த அனுபவத்தை நன்கு அறிந்திருந்த மேற்சொன்ன அந்தப் புலவரும் தம்முடைய பாடலின் பிற்பகுதியில் இந்த உண்மையை சேர்க்கத் தவறினாரில்லை. பாடலின் பிற்பகுதி எழுந்தது.


“கடல் பெரிது மண்ணீரு மாகா அதனருகே

சிற்றூரல் உண்ணீருமாகி விடும்.” என்பது தான் அந்தப் பாடலின் பிற்பகுதி.


செல்வம் மிகப் படைத்தவர்கள் யாவருமே சீமான்களாகி விட முடியாது. உற்றார், உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், உளம் உடைந்துத் தன்னிடம் வந்து நிற்பவர்களுக்கும் உதவும் உத்தமன் தான் உண்மையில் சீமான் என்று கருதப்படுவான். ஒருவன் வறுமையின்பால் கட்டுண்டு வசதியற்றவனாயிருக்கலாம். இருப்பினும் தன்னை வந்து அண்டியவர்களுக்குத் தன்னாலியன்றதைத் தட்டாமல் அளிக்கும் தயாள குணம் படைத்தவன் தான் தனவான் என்று கருதப்படுவான். இதுதான் முறை.


மேற்கூறியக் கருத்துக்கள் அடங்கிய அந்தப்பாடலை ஒருநாள் என் மகன் படித்துக் கொண்டிருந்தது என் செவிகளில் விழுந்தது. என்ன அற்புதமான பாடல்! என்ன அருமையான கற்பனைகள்! எத்தனைச் சிறந்த உவமை! இவையெல்லாம் சேர்ந்து என்னை சிந்தனைத் தொடரில் சிக்க வைத்து விட்டன. ஒரு சிறந்த வரலாற்றுச் சம்பவம் என் கண் முன் காட்சியளிக்க ஆரம்பித்தது. சிறந்த வரலாற்று நிகழ்ச்சிகளோ, நல்ல நீதிகளோ நமக்கு வேண்டுமென்றால் நாம் நமது இதிகாசங்களாகிய இராம காதையையும், மகாபாரதத்தையும் புகலடைதவன்றி வேறு என்ன செய்ய முடியும்? என்னுடைய சிந்தனையும் என்னை மகாபாரத நிகழ்ச்சி ஒன்றுக்கு இழுத்துச் சென்றது.


பரந்த வெளிக்கலைக்கூடம். பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியரானத் துரோணர் தமது ஆசனத்தில் வீற்றிருக்கிறார். மாபெரும் வீரர்களாகிய வீடுமன், விதுரன், கிருபன், பரித்தாமன் முதலியோர் அன்று நடக்கவிருக்கும் மாபெரும் போட்டியைக் காண்பதற்காக அங்கு கூடியிருக்கின்றனர். பாண்டவரில் சிறந்தவனாகிய பார்த்தன்தான் எந்த வித்தையிலும் வெற்றி பெற்று விளங்குகிறான். அதனால் அங்கு கூடியிருந்த யாவரும் ஒரே முகமாக அந்தக் காண்டீபன்தான் சிறந்த வீரன் என்றுத் தீர்ப்புக் கூறுகிறார்கள். அங்கிருந்த கூட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து ஒரு குரல் எழுகிறது. “நான் இந்தத் தீர்ப்பை ஒப்புக்கொள்ளமாட்டேன். இந்தப் பல்குணனைப் புறங்காட்ட என்னால் முடியும்” என்று கூறிக் கொண்டே அந்தச் சபை நடுவில் வந்து நிற்கிறான் தேரோட்டியின் மகனாகியக் கர்ணன் என்பவன். இந்தத் திடீர் அறைகூவலை எதிர்பார்த்திராத அந்த சபையோர் உண்மையிலேயே பரபரப்படைந்துவிட்டனர்.


அந்தப் புதியவனுடைய முகத்தோற்றமும், உடல் வனப்பும், அஞ்சா நெஞ்சமும், அவன் விடுத்த அறைகூவலும் அந்தத் துரோணரையே கலங்க வைத்துவிட்டது. அந்தக் கர்ணனோடு போட்டியில் இறங்கினால் தன் அபிமானத்திற்குரிய அர்ஜுனன் தோல்வியுற நேரினும் நேரிடலாம் என்று எண்ணிய துரோணர். அந்தக் கர்ணன் ஓர் தேர்ப்பாகனின் மகனென்றும், அந்தக் காரணத்தால் அவன் அர்ஜுனனுடன் போட்டியிடத் தகுதியற்றவன் ஆகிறான் என்றும் பகிரங்கப்படுத்திவிட்டார். பாண்டவர் பால் அதிலும் குறிப்பாக அர்ஜுனன் பால் தீராப் பகை கொண்டிருந்த துரியனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. கர்ணனின் கட்டுக்கோப்பான உடல் வலிமையில் நம்பிக்கை வைத்து அவனை உடனடியாக தன் ஆளுகைக்கு உட்பட்ட அங்க தேசத்திற்கு அதிபதியாக முடிசூட்டப் போவதாகச் சொல்லி அவ்வாறே அதே இடத்தில் செய்தும் விட்டான். இருப்பினும் கர்ணன் அர்ஜுனனோடு போட்டியிட அவனுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. அந்தி மயங்கி விட்டது என்ற ஒரே காரணத்தைச் சொல்லி அந்த போட்டிக்கு இடந்தர மறுத்துவிட்டார், துரோணாச்சாரியார். இந்த சம்பவத்திற்கும் நாம் மேலே கூறவிருக்கும் வரலாறுக்கும் சிறிது தொடர்பு இருப்பதன் காரணத்தினாலேயே இதை நாம் இங்கு விவரிக்க நேரிட்டது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


அங்க தேசாதிபதியாக துரியனால் முடிசூட்டப்பட்ட அந்தக் கர்ணன் முன்னம் இருந்ததைக் காட்டிலும் மிக்க வலிமை பெற்று விளங்கினான். ஏற்கனவே, அறம் செய்வதில் நாட்டம் கொண்டு தன்னை வந்தடைந்தவர்களுக்கு வரையாது கொடுக்கும் கருணை உள்ளம் படைத்த அவன், இப்பொழுது துரியனோடு சரிசமமாக பழக வாய்ப்பு கிட்டியதனாலும் தனக்கென வேண்டிய பொருள் தன் கைவசம் இருந்து வந்ததினாலும் முன்னைக் காட்டிலும் அதிகமாகவே வந்தடைந்தோர்க்கு அவர்கள் வேண்டியனவற்றை வேண்டும் மட்டும் கொடுத்து வர ஆரம்பித்தான். அதன் பயனாக ‘தானசூரகர்ணன்’ என்று உலகத்தாரால் பாராட்டுதல்களைப் பெற்ற உத்தமனாகவும் திகழ்ந்தான். அவனது அரண்மனையின்மேல் அன்னக்கொடி கட்டிப் பறந்தது. அவன் தனது காலைக் கடன்களை முடித்தவுடன் செய்யத் தொடங்கும் தான காரியங்கள் பகல் உச்சி வேளை வரையில் தொடர்ந்து நடந்தது கொண்டிருப்பது தினசரி வழக்கமாய்ப் போய்விட்டது.


பார்த்தான் துரியன். இளம் பிராயத்திலிருந்தே அவனுக்குப் பொறாமை குணம் அதிகமென்பது நாம் கதையில் படித்தறிந்த உண்மை. அதன் விளைவாகத்தான் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டதும் பின்னர் மாபாரதப்போர் நடந்ததும், துரியன் அழிந்ததும் என்று சொன்னால் அது மிகையாகாது.


கர்ணனால் செய்யப்பட்டு வரும் தான, தருமங்களையும், அதனால் அவன் புகழ் மக்கள் பலராலும் புகழ்ந்து பேசப்பட்டு வருவதையும் கண்ட அவனிடம் பொறாமைக் குணம் தலை தூக்க ஆரம்பித்தது. நாளடைவில் அந்த எண்ணம் அவனது மனதில் கர்ணன்பால் சற்று வெறுப்படையவும் செய்யக் காரணமாய் இருந்தது. “நான் இந்தப் பாரதத்தின் சக்கரவர்த்தி. என் நண்பனாகிய இந்தக் கர்ணனோ என்னால் முடிசூட்டப்பட்டு என் நாட்டின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே அரசனாக விளங்குகிறான். என் பொருட்களைக் கொண்டுதான் அளவுக்கு மிஞ்சித் தான தருமங்கள் செய்து கொடையாளி கர்ணன் என்று பெயர் வாங்கி வருகிறான். நான் மட்டும் அவனுக்கு சலுகை காட்டாவிட்டால் அவன் எவ்விடத்திலிருந்து பொருள் கொணர்ந்து தான தருமங்களைச் செய்ய முடியும்? என் செல்வத்தால் இந்தக் கர்ணன் புகழடைந்து வரும்பொழுது என் சொந்தப் பொருளைக் கொண்டு நான் ஏன் கொடையாளி என்ற பெயரைப் பெறுவதற்குப் பாடுபடக்கூடாது? என்று இவ்வாறெல்லாம் அந்தக் கண்ணிலியின் மைந்தன் தன் கருத்துள் எண்ணினான்.


துரியோதனனைப் போன்ற ஒரு நாட்டின் சக்கரவர்த்திக்கு செல்வத்திற்குப் பஞ்சமா? உடனடியாக அவன் தன் எண்ணங்களைச் செயலாற்ற முனைந்து விட்டான். திடீரென்று ஒரு நாள் காலை துரியோதனனின் அரண்மனை வாயிலில் அன்னக்கொடி கட்டிப் பறப்பதை மக்கள் கண்டனர். எவரெவர்க்கு எது எது தேவையோ அவைகளைக் கூசாமல் தன்னிடம் வந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஊரறிய, உலகமறிய பறை சாற்றிவிட்டான் அந்த அரவுக்கொடியோன். கர்ணனுக்குச் சமமாக இவ்வாறு ஒரு நல்வினையில் ஈடுபட்ட அவனுக்கு முன்னைக் காட்டிலும் இப்பொழுது மமதை சற்று தலைதூக்கியே இருந்தது. மக்களும் அன்னானின் கொடைத் தன்மையை வியந்து பேசலாயினர்.


இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. வழக்கம்போல் அன்றும் துரியோதனன் தன்னிடம் வந்து யாசிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியவாறெல்லாம் பொருட்களைக் கொடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தான். அங்கே வந்து சேர்ந்தார் ஒர் இருடி. அன்னாரின் தோற்றம் அந்தக் கயிலையம்பதியின் தோற்றம் போலேவே துரியோதனின் கண்களுக்குப் பட்டது. அவனது நீண்டு வளர்ந்திருந்த வெண்ணிறத் தாடியும் அவர் கட்டியிருந்த செஞ்சடையும் தவத்தினால் வாடி வளம்

குன்றியிருந்த அவரது திருமேனியும் அந்தத் தவத்தின் வலிமையினால் ஒளி வீசும் அவரது முகமும் துரியோதனனை அவர்பால் அன்புறச் செய்தன. தனது ஆசனத்தினின்றும் எழுந்திருந்து வந்தத் தவசியை அவருக்குரிய இருக்கையில் அமரச் செய்து அவர் தன்பால் வந்திருக்கும் காரணத்தைக் கூறும்படி வினயமுடன் கேட்டுக்  கொண்டான். அந்தத் தபோதனரும் கூற ஆரம்பித்தார்.


“மன்னவ! உன்னிடம் ஒரு பொருளை யாசிக்கும் பொருட்டுத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அவ்வாறு என்னால் யாசிக்கப்படவிருக்கும் பொருளும் உன் சக்திக்கு மேற்பட்ட ஒன்றல்ல. இருப்பினும் நான் கேட்கவிருப்பதும், உன்னால் தரப்பட போவதுமாகிய அந்தப் பொருள் என்னால் செய்யப்படவிருக்கும் வேள்விக்கு மிகமிகத் தேவையான ஒன்றாகும் என்பது மட்டும் உண்மை. அதனாலேயே சக்கரவர்த்தியாகிய உன்னிடம் அதைக் கேட்டுப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்று நயம்பட உரைத்தார் அந்தத் தவசி.


பார்த்தான் மன்னன். அந்த தவிசிக்கு தன் வாக்குறுதியில் நம்பிக்கையில்லையா? அல்லது அவர் கேட்கவிருக்கும் பொருள் தன் வரையறைக்கு மேற்பட்ட ஒன்றாக இருக்கக் கூடுமோ என்றெல்லாம் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தான் மனம் வைத்தால் தன்னால் முடியாதது என்ன இருக்கிறது என்ற தன்னம்பிக்கையுடன் அவன் வந்திருந்த வேதியரைப் பார்த்து, “மகனீயரே! தாங்கள் என்னிடம் பெற விரும்புவது யாதெனினும் அதை மனம் விட்டுச் சொல்லுங்கள். குருகுலத்தில் தோன்றிய எவனும் தன்னால் இயன்றதைச் செய்யத் தயங்கமாட்டான். தங்களுக்கு பொன் வேண்டுமா? பொருள் வேண்டுமா? மற்றென்ன தான் வேண்டும்? கூச்சமின்றி கூறுங்கள்” என்று உணர்ச்சியுடன் கூறினான் அந்த மகிபதி.


“அரசனே! உன்னைப் போன்ற ஒரு அரசன் அரசாட்சி நடத்தும்பொழுது என்னைப் போன்ற தவசிகளுக்கு என்ன குறை இருக்க முடியும்? நீ பொன் தரலாம். பொருள் தரலாம். மற்றெது வேண்டுமானாலும் தரலாம். ஆனால், அவைகளைக் கொண்டு எம் போன்றத் தவசிகள் என்ன செய்வதற்கு இருக்கிறது? என் போன்ற ஒருவன் உன்னைப் போன்ற ஒரு பார்த்திபனிடம் வரவேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால் அது அவர்கள் செய்யவிருக்கும் வேள்வியை நன்கு நடத்தித்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் இருக்குமே ஒழிய வேறு எதற்காகவும் இருக்காது. நானும் அதே நோக்கத்துடன்தான் உன்னிடம் வந்திருக்கிறேன். நீதான் யான் செய்யவிருக்கும் வேள்வியைச் செவ்வனே முற்றுவித்துத் தரவேண்டும்” என்று கூறி முடித்தார் அந்தத் தவசி.


“ப்பூ! இவ்வளவுதானா! தங்கள் வேள்விக்கு இடையூறாக நிற்பவர்கள் யாரென்பதை என்னிடம் சொல்லுங்கள் மனிதர்களா? மிருகங்களா? அது யாராயிருப்பினும் தங்களுடனேயே வந்திருந்து தங்கள் வேள்வியை தங்கு தடையின்றி பக்கத்திலிருந்து நடத்தி வைக்கிறேன். சொல்லுங்கள் மகனியரே” என்று ஆர்வத்துடன் பேசினான் அந்த மன்னன்.


தவசியின் முகத்தில் குறுநகை தவழ்ந்தது. புன்முறுவலுடன் பேச ஆரம்பித்தார். “அரசே! நீ நினைப்பதைப் போல் எவராலும் என் வேள்வி தடைபடவில்லை. வேள்விக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள் தேவையான அளவு எனக்குக் கிடைக்கவில்லை. அதை யாசிப்பதற்காகத்தான் மாமன்னனாகிய உன்னிடம் வந்தேன்” என்று கூறி பதிலளித்தார் அந்த முனிவர்.


“அப்படியா! தாங்கள் என்னிடம் யாசிக்கும் அந்தப் பொருள் யாது? இப்பொழுதே கூறுங்கள். நான் அதற்கு ஆவனவற்றைச் செய்கிறேன்,” என்றார் துரியோதனன்.


“கொடுப்பதாகச் சொல்லிவிட்டு பின்னர் மறுக்கமாட்டாயே?” என்று அவனை சந்தேகத்துடன் கேட்டார் அந்த முனி புங்கவர்.


“என்னை அப்படியா எண்ணிவிட்டீர்கள். உடனே, வேண்டியதைக் கேளுங்கள். இப்பொழுதே அனுப்பி வைக்கிறேன்” என்றான் மன்னன்.


முனிவரின் உள்ளக்களிப்பு அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த துரியனுக்கு தெள்ளத் தெளிய தெரிந்தது.


“வேள்விக்கு வேண்டிய மற்ற பொருள்கள் யாவும் என்னுடைய வேள்விச் சாலைக்கு வந்து சேர்ந்து விட்டன. ஆனால் மிகமிக அவசியமான ஒன்றுதான் கிடைக்கவில்லை. அதை இந்த வேளையில் உன் ஒருவனால்தான் கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் வேறு யாரிடமும் செல்லாமல் உன்னிடம் வரக் காரணமாயிருந்தது”


“அந்தப் பொருள் என்னவென்று சீக்கிரம் சொல்லுங்கள். இப்பொழுதே அதை ஏற்பாடு செய்கிறேன்.”


“மன்னர் மன்ன! வேள்வியில் முக்கியப் பங்கு கொள்வது தீ என்பதை நீ அறிவாய். அந்தத்தீயை வேள்வியின் ஆரம்பமுதல் முடிவு வரையில் காப்பாற்றுவதற்கு விறகுகள் மிகமிகத் தேவை என்பதையும் நீ நன்கு அறிவாய். நான் செய்யவிருக்கும் வேள்விக்கு சுமார் 20 வண்டி விறகுக் கட்டைகள் தேவைப்படலாம் என்று நான் மதிப்பிடுகிறேன். நீ அதைக் கொடுத்தருளினால் போதும்.”


மன்னன் நகைத்தான். “முனிபுங்கவரே! உம்மால் விரும்பப்படும் பொருள் மிகமிக எளியது என்பதை நான் உணருகிறேன். இப்பொழுது அடைமழைக்காலம். இரவும், பகலும், இடைவிடாது மழை பெய்து கொண்டிருப்பதைத் தாங்கள் அறியாதவரில்லை. வேள்விக்குத் தேவையானது நன்குலர்ந்த விறகுகள். இந்த மாரிக் காலத்தில் காய்ந்த கட்டைகளை எங்கிருந்து எங்ஙனம் பெற முடியும்? தயவுசெய்து ஒரு காரியம் செய்யுங்கள். வேள்வியைக் கோடை காலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று துரியோதனன் சொல்லி வரும் பொழுதே அந்த முனிவரின் முகம் வருத்தத்தால் மாறியதையும் அவர் மனதில் அதிருப்தி மனப்பான்மை நிலவுவதையும் கண்டுகொண்டான். முனிவர் சொன்னார்.


“மன்னவ! என் வேள்வி நான் குறிப்பிட்ட நாளிலேயே நடந்தேறியாக வேண்டும். ஏனெனில் என்னுடைய யாகத்தை நன்கு நடத்தி வைப்பதற்காக பல்வேறு இடங்களிலுள்ள என்னைப் போன்றத் தவசிகளுக்கு அழைப்புகள் விடுத்துவிட்டேன். நீ சொல்வதற்காக என் வேள்வியை வேறொரு காலத்திற்குத் தள்ளிப் போட்டு விட்டு அதன் பயனாய் அந்தத் தபோதனர்களின் சினத்திற்கு ஆளாக நான் தயாராக இல்லை. மன்னர் மன்னனாகிய உன்னால் இந்தச் சிறிய காரியம் கூடச் செய்ய இயலவில்லையென்றால் வேறு எதைத்தான் உன்னால் செய்துவிடமுடியும்? இதற்குக் கேட்பவர்களுக்கு கேட்பதையெல்லாம் கொடுப்பேன் என்று நீ பறைசாற்றிக் கொண்டிருக்க வேண்டியத் தேவையில்லையே”


அரவக்கொடியோனுக்கு சீற்றம் மேலிட்டதானாலும் எதிரே நிற்பவர் முற்றும் துறந்த முனிவர் என்ற உண்மையை மனத்துட்கொண்டு பணிவுடன், “முனிவரே என்னை மன்னிக்க வேண்டும். எதை, எவரிடத்தில், எந்தக் காலத்தில் கேட்டுப்பெற வேண்டும் என்ற ஒரு விதியும் உலகத்தில் உண்டு என்பதைத் தாங்கள் அறியாதவரல்ல. தாங்கள் அடைய விரும்பும் பொருளை இயற்கையின் காரணத்தால் தற்பொழுதுத் தங்களுக்குக் கொடுத்து உதவ சாத்தியமற்றவனாயிருக்கிறேன். மற்றொரு சமயம் வாருங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு வந்த அந்தப் புனிதத் தவசி, “நான் இடந்தெரியாமல் இங்கு வந்தது என்னுடைய தவறு. கர்ணனிடம் சென்றிருந்தால் இதற்குள்ளாக நான் கோரியதைப் பெற்றிருக்கலாம் அவன் ஒரு சிற்றரசன். உன்னுடைய பராமரிப்பில் இருப்பவன். நீயோ மன்னாதி மன்னன் என்று தவறான கணக்குப் போட்டு பாதை விட்டு பாதியில் வந்துவிட்டேன். நல்லது. இனி அவனிடம் சென்று பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.


துரியோதனன் வாய்விட்டு சிரித்தான். “என்னால் முடியாததை அந்தக் கர்ணன் செய்து விடுவானாம். அவன் மட்டும் எவ்வாறு செய்துவிட முடியும்? நானுந்தான் வந்து கேட்பவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன். ஆனால் அவனைத்தான் எல்லோரும் புகழ்கிறார்கள். இதுதான் உலக இயற்கை போலும்” என்று அவனது வாய் முணுமுணுத்தது.


துரியோதனனின் மாளிகையினின்றும் திரும்பிய இந்த மாமுனிவர் சூரியன் வானவீதியின் உச்சிக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். உச்சிவேளை வரைக்கும் செய்ய வேண்டிய தான தருமங்களை செய்து முடித்துவிட்டுப் பகல் போஜனத்திற்கு கர்ணன் சென்றிருப்பான் என்று அவர் மனதில் தோன்றியது. காலையிலேயே அவனிடம் தான் செல்லாமல் இருந்தது எத்தனைத் தவறான செயல் என்று அவர் மனம் சுட்டிக் காட்டியது. ஆயினும் கர்ணனுடைய நற்குணங்கள் யாவற்றையும் அந்த முனிவர் மக்களின் வாய்மொழியாகக் கேட்டறிந்திருந்தாராதலால் நான் அகாலமாகிய அந்த வேளையில் செல்லினும் தன்னை அந்தக் கர்ணன் கவனித்து வேண்டியவற்றைச் செய்து கொடுக்க மறுக்க மாட்டான் என்ற ஒரு திட நம்பிக்கையும் அவர் மனதில் தோன்றியது. அந்த நம்பிக்கையுடன் அவசர அவசரமாகக் கர்ணனின் திருக்கோயிலை அடைந்த அந்த முனிவர். அவர் எதிர்பார்த்திருந்தபடியே கர்ணனின் கொலு மண்டபம் காலியாகத்தான் இருந்தது. இரண்டு காவலர் மட்டுமே அங்கு காணப்பட்டனர். கர்ணனிடம் சேவை புரியும் சேகவர்கள் என்றால், அவர்களுடைய குண நலன்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அந்த உத்தமனின் உயர்குணங்களின் சாயை அந்த ஏவலாளர்களிடமும் நிரம்பிக் காணப்பட்டது.


அங்கு அந்த வேளையில் அந்த முனிவரைக் கண்ட அவ்விரு காவலர்களும் அவரை நல்ல மரியாதையுடன் வரவேற்று அங்கிருந்த ஒரு சிறந்த ஆசனத்தில் அமரச் செய்தனர். தங்கள் தலைவன் இதுவரைக்கும் அங்கிருந்து வழக்கம்போல் தான தருமங்களைச் செய்துவிட்டு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் அரண்மனைக்குள் சென்றிருப்பதாகக் கூறிய அவர்களில் ஒருவன் தான் சென்று உடனடியாகத் தங்கள் தலைவனை அழைத்து வருவதாகக்கூறி அரண்மனைக்குள் சென்றான்.


தான் வந்திருக்கும் நேரம் சரியானதல்ல என்பதையும் அந்த நேரத்தில் கர்ணனுக்குத் தான் கொடுக்கவிருக்கும் தொந்தரவு நேர்மையற்றது என்பதையும் உணர்ந்த அந்த முனிவர் அந்தக் காவலனைத் தடுத்து நிறுத்த எண்ணினார். ஆனால் மின்னல் வேகத்தில் உள்ளே சென்ற அந்தக் காவலன், திரும்பி வருவதற்கு முன்னர் கர்ணனே அங்கு வந்து நின்றான். முனிவர் வியப்பினால் வாயடைத்து விட்டார். ஆயினம் சற்று நிதானித்து கொண்டு கர்ணனை அவனது ஆசனத்தில் இருக்குமாறு பணிந்து அவனுக்குத் தனது ஆசிகளையும் வழங்கினார். கர்ணனே முதலில் பேச ஆரம்பித்தான்.


“சற்று நேரத்திற்கு முன்புகூட நான் இங்குதான் இருந்தேன். தங்களை அப்பொழுது நான் இங்கு காணவில்லை. யாருமேயில்லையென்று அறிந்துகொண்ட பிறகுதான் நான் உள்ளே சென்றேன். தங்களை நான் இதுகாறும் காக்க வைக்க நேரிட்டதற்காக இந்தச் சிறியவனை மன்னித்தருள வேண்டும்” என்று அந்த முனிவருக்கு முகமன் கூறும் வாயிலாக தனது பேச்சை ஆரம்பித்தான் அந்த வள்ளல். தன்னிடம் வந்திருக்கும் காரணம் என்னவென்று சொல்லும்படியும் பணிவுடன் கேட்டான்.


“கொடையாளியாகிய உன்னிடம் வருபவர்கள் எதற்காக வருவார்கள்? உன்னிடம் யாசித்து பொருள் பெற்றுப் போவதற்காகவே இந்த தவசியும் வந்திருக்கிறேன்!”


கர்ணனின் கண்கள் அகன்று விரிந்தன. “மாபெரும் தவசியாகிய தாங்கள் என்னிடம் யாசிக்கக் கூடிய பொருள் என்ன இருக்க முடியும்? தாங்களோ பொன்னையும், பொருளையும், மற்ற எவற்றையுமே துயர்வளிக்கும் பொருள்களாக கருதக்கூடியவர்கள். கடுந்தவத்தினால் கரும வினைகள் யாவற்றையும் கடந்து நிற்பவர்கள். தாங்கள் என்னிடம் கேட்டுப் பெறக்கூடிய அந்த அற்புதப் பொருள் என்னவென்பதை உடனடியாகச் சொல்லுங்கள். இப்பொழுதே செய்து முடிக்கிறேன்” என்று மனவெழுச்சியுடன் கூறினான் அங்கதேசத்ததிபதி.


“இப்படித்தான் அவனும் முதலில் கூறினான். ஆனால், கடைசியில் நான் விரும்பிய அந்தப் பொருளை அவன் தன்னால் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டான் என்று கூறிவந்த முனிவரை இடைமறித்துக் கர்ணன், “முதலில் கொடுப்பதாகச் சொல்லி பின்னர் மறுத்துவிட்ட அந்த மகாமேதை யாரென்பதை நான் அறியலாமா முனிவரே” என்று கோபம் பொங்கக் கேட்டான்.


“உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் என்று சொல்வார்கள் உலகத்தார். நான் சொல்வதைக் கேட்ட பிறகு உனக்கு என்னிடமே கோபம் வரலாம். ஏனென்றால் அவர் உனது உயரிய நண்பனாக இருக்கலாம். மேலும் அவன் ஒரு மாமன்னாகவும் இருக்கலாம்.” முனிவரின் ஏளனமான பதில் கர்ணனைச் சிந்திக்க வைத்தது. அப்படியும் இருக்குமா? என்று அவன் மனம் எண்ண ஆரம்பித்தது. அவன் பேச ஆரம்பித்தான்.


“தவச்சிரேட்டரே! தங்கள் வார்த்தையை நான் நம்பாமலில்லை. ஆயினும் நான் என் செவிகளையே நம்ப முடியாதவனாயிருக்கிறேன். நான் உலகிலேயே எனது உயிர் நண்பனாக ஒருவனைக் கருதுகிறேன் என்றால், அது துரியோதனனைக் தவிர வேறு யாராகவும் இருக்கமுடியாது. தங்கள் கூற்றுப்படி இந்தப் பரந்த பாரதத்தில் மாமன்னனாக தற்காலம் விளங்கி வருபவனும் அவன்தான். ஆனால் அந்த மாமன்னனாகிய என் சிறந்த நண்பன் தங்களைப் போன்ற தபோதனர்களுக்கு தந்த வாக்கைத் தகுந்த முறையில் முடித்துத்தர மறுத்துவிட்டான் என்றால், அந்தச் செய்தியை என்செவிகள் நம்ப மறுக்கின்றன. தயை கூர்ந்து என்னை சற்றுத் தெளிய வையுங்கள்” என்று பரிவு தோன்ற கேட்டு நின்றான், அந்தக் கொடையான்.


“வருத்தப்படாதே கர்ணா! என் சொற்களால் உன் மனம் புண்பட நேரிட்டதென்றால் அதற்காக என்னை மன்னித்துவிடு. நான் அந்த மாமன்னனிடம் பொன்னோ, பொருளோ கேட்கவில்லையே. நீ முன்னாலேயே சொன்னாயல்லவா? அதைப் போல் எங்களைப் போன்ற முற்றும் துறந்த முனிவர்களுக்கு பொன்னும், பொருளும், மணியும் எதற்கு? நான் தெய்வத்தின் திருவருளை முன்னிட்டு செய்து முடிக்கத்திட்டமிட்டுள்ளேன். அந்த வேள்வியை நல்ல முறையில் நடத்தி வைக்க வருமாறு என்போன்றத் தவசிகள் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டேன். அவர்களும் குறிப்பிட்ட காலத்தில் வேள்விக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அந்த வேள்வியை நான் அந்தக் குறித்த காலத்தில் முடிக்காவிட்டால் அவர்களுடைய கோபத்திற்கும், சாபத்திற்கும் நான் ஆளாக நேரிடும். என் போன்றோர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதுதான் உன்போன்ற மன்னர்களின் கடமையாகும் என்பதை நீ நன்கு அறிவாய். மன்னாதி மன்னனாக இருக்கிறானே அந்த துரியோதனன். அவனால் எனது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்ற திட  நம்பிக்கையுடன் அவனிடம் சென்றேன். நான் முன்னரே கூறியபடி முதலில் அந்தப் பொருளைத் தருவதாகச் சொன்ன அவன் கடைசியில் தன்னால் அது இயலாத காரியம் என்று கூறி என்னை அனுப்பிவிட்டான். அந்த மன்னாதி மன்னனாலேயே முடியாது என்று மறுக்கப்பட்ட அந்தப் பொருளைத் தருவதற்கு நீ மட்டும் இசைவாய் என்று எவ்வாறு நான் நம்புவது.!”


முனிவரின் இந்த வார்த்தைகள் அந்த வள்ளலின் இதயத்தில் கூரிய அம்புபோல் பாய்ந்தன.


“பெரியவரே! இதுவரை நான் என்னை உணரத் தொடங்கியது முதல் என்னால் முடிந்த பொருளை என்னிடம் யாசிப்பவர்களுக்கு தர மறுத்தது கிடையாது. மேலும் முதலில் தன்னால் தரப்பட்டது என்று கூறப்பட்ட பொருள் எதுவாயினும் பின்னர் அதைத் தரமறுத்து விடுபவன் எவனாயினும் சரி. அவன் மீளா நரகத்தில் புகுவான் என்பதை நான் நன்கறிவேன். தாங்கள் என்னிடம் கேட்டுப் பெறவேண்டியது எதுவானாயினும் சரி, அப்பொருள் என் உயிராக இருந்தாலும் அதை நான் தங்களுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன் கேளுங்கள் சாமி!” என்று துயரம் தொண்டையை அடைக்கக் கூறினான் அந்தத் தூயவன்.


தன் முன் மனங்கலங்கி நிற்கும் அந்த மாவீரனைக் கண்டத் தவசி, தான் வந்த காரியம் கைகூடுவது நிச்சயம் என்று உறுதி செய்துகொண்டார். கர்ணனை பார்த்து அவர் சொல்ல ஆரம்பித்தார்.


“கர்ணா! நான் உன்னிடம் வேண்டிப்பெற விரும்பியது என்னவென்பதை நீ அறிந்தால் அதைத் தர உன்னால் இயலாது என்றுதான் நீ சொல்ல நேரிடும். ஏனென்றால் என்னுடைய முந்தைய அனுபவம் என்னை அவ்வாறு எண்ணச் செய்கிறது.” என்று கூறி வந்த முனிவரை பேசாமல் தடுத்து நிறுத்திவிட்டு கர்ணன் பேச ஆரம்பித்தான்.


“தபோதனரே! தாங்கள் விரும்புவது என் உயிரேயானாலும் நான் அதைக் கொடுப்பதற்காகச் சொன்னேனல்லவா. தாங்கள் கேட்கத் தயங்குவதைப் பார்த்தால், அவ்வாறு தாங்கள் விரும்பும் பொருள் என் உயிரினும் மேம்பட்டதாக இருக்குமோ என்ற ஐயத்தை என்னுள் தோற்றுவிக்கிறது. இனியும் தாமதம் செய்யாதீர்கள். தாங்கள் விரும்பும் அந்தப் பொருள் என்னவென்பதை இப்பொழுதே சொல்லுங்கள். உடனடியாகச் செய்து முடிக்கிறேன்.” என்று அவன் ஆர்வத்துடன் சொல்லி முடித்தான்.


கர்ணனின் அந்தப் பக்குவ நிலையைக் கண்ட அந்தத் தவசிக்குப் பரமதிருப்தி ஏற்பட்டது. “கர்ணா! நான் செய்ய மேற்கொண்டிருக்கும் வேள்விக்கு இருபது வண்டிகளுக்குக் குறையாமல் நன்கு உலர்ந்த விறகு வேண்டியதாயிருக்கிறது. அதைத்தான் உன்னிடம் கேட்க வந்தேன். என் வேள்விக்கு மிக முக்கியத் தேவையான அந்தப் பொருளை நீயும் கொடுக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது? என்று அச்சத்தினால்தான் நான் அதை உன்னிடம் தயக்கத்துடன் கேட்டேன்,” என்று கூறி முடித்தார்.


முனிவரின் அந்தச் சொற்களைக் கேட்ட கர்ணன் பெருமிதத்துடன் புன்முறுவலாகத் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான். “இவ்வளவு தானா? சுவாமீ! இதற்குத்தானா இத்தனைத் தயக்கம். தங்கள் வேள்வி தங்கு தடையின்றி நடக்கும் என்பதை உறுதியாக நம்புங்கள். அதற்கான தங்களால் வேண்டப்பட்ட தேவையான விறகுகள் நாளை மறுநாளே தங்களுக்கு வந்து சேரும் என்பதை மனக்களிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”


முனிவரின் மனம் பூரித்தது. அவரது அகத்தில் முற்பட்ட மகிழ்ச்சி அவரது ஒளி பொருந்திய முகத்தில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. ஆயினும் முனிவர் மறுபடியும் கர்ணனைப் பார்த்துச் சொன்னார். “வந்தவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலே! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! நான் விரும்பியதை நீ மறுக்காமல் தந்துவிட்டதாகச் சொல்லிவிட்டாய். எதையும் இதுவரை மறுத்தறியாத நீ அந்தப் பழக்கத்தின் காரணமாக அவ்வாறு எனக்கு வாக்களித்துவிட்டாய் என்றே நான் கருதுகிறேன். காலத்தை அறியாமல் கேட்டதை கொடுப்பதாகக்கூறி விட்டாய். நான் திரும்பிச் சென்ற பிறகு நீ கொடுப்பதாகச் சொன்ன அந்தப் பொருள் கிடைத்தற்கரிய ஒன்று என்று எனக்குச் சொல்லி அனுப்பிவிட்டால் நான் என்ன செய்வது? குறிப்பிட்ட முகூர்த்தத்தில் நான் எனது வேள்வியைத் தொடங்கியாக வேண்டுமே?” என்று வருத்தத்துடன் அந்த முனிவர் கூறினார்


“கர்ணனிடம் காலம் ஒன்றும் செய்ய முடியாது. இது மாரிக் காலமாயிற்றே? வேள்விக்குத் தேவையான உலர்ந்த கட்டைகளைக் கர்ணன் எங்கிருந்து, எவ்வாறு கொடுத்து உதவ முடியும் என்பதுதானே தங்கள் மனதிலுள்ள சந்தேகம். அதைப்பற்றித் தாங்கள் வருத்தப்படவேண்டாம். தங்கள் வேள்விக்கு வேண்டிய பொன்னும், பொருளும் நன்குலர்ந்த விறகுக்கட்டைகளுடன் விரைவில் தங்களிடம் வந்து சேரும். இதில் தங்களுக்கு சிறிதும் சந்தேகம் வேண்டாம்.” என்று கூறிய கர்ணனைப் பார்த்து வியந்தவாறே ஆசிகளும் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் அந்தத் தவசி.


கர்ணன் சொல்லியிருந்தபடியே முனிவர் வந்து சென்ற இரண்டு நாட்களில் கர்ணனின் மாளிகையிலிருந்து பொன்னோடும், பொருளோடும் இருபது வண்டிகள் நிறைய நன்கு காய்ந்த விறகுக் கட்டைகள் வண்டி வண்டியாக வேள்விச் சாலைக்கு விரைந்து சென்று கொண்டிருந்ததை வியப்புடன் நோக்கினர் மக்கள். இந்தச் செய்தியறிந்த மாமன்னனாகிய துரியோதனன் மாபெரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டான்.  


வந்திருந்த முனிவரால் வேள்வியின் பொருட்டு வேண்டிய காய்ந்த விறகைக் கொடுத்து உதவுவதாக கூறிவிட்டு தன் அரண்மனையின் உட்சென்ற அந்தக் கொடை வள்ளல் கர்ணன் தன்னால் வாக்களிக்கப்பட்ட அந்த விறகுக்கட்டைகளுக்காக என்ன செய்வதென்றோ, எவ்வாறு கொடுப்பதென்றோ சிறிதும் தயங்கவில்லை. தன் மாளிகையின் பின்பக்கம் சென்ற அவன், அவன் பணியாட்களைக் கூப்பிட்டு அந்த மாளிகையின் பின்புறக் கட்டிடத்தை முழுதும் இடித்து தள்ளி அதில் பதிந்துள்ள உயர்தர மரக்கட்டைகளை ஒரு சமமாகப் பிளந்து அவைகளை வண்டிகளில் ஏற்றி உடனடியாக முனிவரின் வேள்விச் சாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்திரவிட்டது அந்தப் பணியாட்களுக்கே வியப்பைக் கொடுத்தது என்றாலும், அந்தக் கொடையாளியின் கொள்கையை நன்கு அறிந்திருந்த அந்தப் பணியாட்கள் அவனுடைய அந்த செயலைக் கண்டு அதிக அளவில் ஆச்சரியப்படவில்லை.


கர்ணனின் இந்த மாபெரும் தீரச்செயலைக் கேட்டறிந்த துரியோதனன் தன் அறிவீனத்தை உணர்ந்தான். தனக்குக் கர்ணனுக்குத் தோன்றியதைப் போல எண்ணத் தோன்றவில்லையே என்றும் வருந்தினான். தன்னிடம் இத்தனைச் செல்வங்கள் இருந்தும் தன்னை நாடி வந்த ஒரு தபோதனருக்கு தான் தன்னைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்டதற்காக நாணினான். என்ன விருப்பினும் கர்ணன் தன்னைவிட கொடையில் சிறந்தவன் என்ற உண்மையை அவனுக்கு அவன் உள்ளம் உணர்த்திற்று. தன்னைப் போன்ற உலகத்தாருக்கு உபயோகமற்ற ஒரு கடலின் அருகே கர்ணனைப் போன்ற ஒரு சிற்றூரல் இருப்பது எத்தனை விந்தையானது என்று அவன் மனம் சிந்தித்தது. ‘சிற்றூரல்’  ‘சிற்றூரல்’ என்று அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை