ஶ்ரீமத் பாகவதம் - 220

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – நான்காவது அத்தியாயம்

(கம்ஸன் யோகமாயையின் வாக்யத்தைக் கேட்டுப் பயந்து, மந்திரிகளுடன் ஆலோசித்து, உலகத்திலுள்ள குழந்தைகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிடுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வஸுதேவன் சிறைச்சாலையில் புகுந்து முன்போலவே இருக்கையில், உள்ளும் புறமுமுள்ள வாசல்களெல்லாம் முன்போலவே மூடிக் கொண்டன. அந்த சிறைச்சாலையைப் பாதுகாக்கும் புருஷர்கள், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு விழித்துக்கொண்டு எழுந்து, விரைந்தோடி கம்ஸனிடம் சென்று, தேவகியின் கர்ப்பத்தினின்று சிசு (குழந்தை) பிறப்பதையே பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் கம்ஸனுக்குச் சிசு (குழந்தை) பிறந்த வ்ருத்தாந்தத்தை (விஷயத்தை) அறிவித்தார்கள். போஜவம்சத்து அரசனாகிய அக்கம்ஸன், இது ஸமயமென்று நினைத்து, அவசரமாகப் படுக்கையினின்று தழதழத்து, அடிகள் தடை படவும், தலைமயிர்கள் அவிழ்ந்து அலையவும் பெற்று விரைவுடன் ஸுதிக்ருஹத்திற்கு (ப்ரஸவ இடத்திற்கு) வந்தான். நல்லியற்கையுடைய தேவகி, தன் ப்ராதாவான கம்ஸன் வருவதைக் கண்டு வருந்தி, மன இரக்கத்திற்கிடமாகி, கேட்போர் மனம் கரையும்படி மொழிந்தாள்.

தேவகி சொல்லுகிறாள்:- மங்கள ஸ்வபாவமுடையவனே! இக்குழந்தை உனக்கு மருமகளாக வேண்டும். பெண்ணாகப் பிறந்த இக்குழந்தையை வதிக்கலாகாது. நீ தெய்வத்தினால் என் புதல்வர்களுக்கு ம்ருத்யுவாக (மரணமாக) ஏற்படுத்தப்பட்டு, அக்னி போல் ஜ்வலிக்கின்ற என் பிள்ளைகள் பலரையும் கொன்றாய். ப்ராதாவே! இந்த ஒரு பெண்ணை மாத்ரம் எனக்குக் கொடுப்பாயாக. ப்ரபூ! நான் உனக்குப் பின் பிறந்தவள்; உன்னால் தயை (இரக்கம்) செய்யத் தகுந்தவள்; பிள்ளைகள் பலரும் மாண்டு வருத்தமுற்றவள். ஆகையால், அப்பனே! மந்தபாக்யையாகிய (பாக்கியம் குறைந்த) எனக்குக் கடைசியில் பிறந்த இப்புதல்வியை மாத்ரம் கொடுப்பாயாக. 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு புதல்வியை புஜங்களால் (கைகளால்) மார்பில் அணைத்துக்கொண்டு, மிகவும் மன இரக்கத்திற்கிடமாய் இருக்குமாறு கண்ணும் கண்ணீருமாய்ப் புலம்புகின்ற தேவகி வேண்டிக் கொண்டிருப்பினும், துர்ப்புத்தியாகிய (கொடிய புத்தி உடைய) கம்ஸன் அவளை விரட்டி, அவள் கையினின்று அக்குழந்தையைப் பிடுங்கிக் கொண்டான். அவன், அப்பொழுதுதான் பிறந்திருக்கின்ற உடன்தோன்றலின் புதல்வியாகிய அக்குழந்தையைப் பாதங்களில் பிடித்துக்கொண்டு, தன் ப்ரயோஜனத்தையே (பயனையே) நினைத்து, ஸ்னேஹத்தைத் (அன்பைத்) துறந்து, கல்லின் மேல் தூக்கி அடித்தான். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தங்கையாகிய அப்பெண், அந்தக் கம்ஸனுடைய ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) உயரக்கிளம்பி, அப்பொழுதே தன் ஸ்வரூபத்தை (இயற்கைத் தன்மையை) ஏற்றுக்கொண்டு, ஆகாயத்தில் சென்று, ஆயுதங்களோடு கூடின நீண்ட எட்டுப் புஜங்கள் (கைகள்) அமைந்து, திவ்யமான பூமாலை, வஸ்த்ரம், சந்தனம், குங்குமம் முதலிய பூச்சு ரத்னங்கள் இழைத்த ஆபரணங்கள் ஆகிய இவற்றை அணிந்து, தனுஸ்ஸு, சூலம், பாணம், கேடயம், கத்தி, சங்கம், சக்ரம், கதை இந்த ஆயுதங்களைத் தரித்து, சிறப்புடைய பல உபஹாரங்களை ஏந்திக்கொண்டிருக்கிற ஸித்தர், சாரணர், கந்தர்வர், அப்ஸர மடந்தையர், கின்னரர், உரகர் ஆகிய இவர்களால் துதிக்கப்பெற்று, கம்ஸனை நோக்கி “மதி கேடனே (புத்தி கெட்டவனே)! என்னைக் கொன்றாலும் உனக்கு என்ன ப்ரயோஜனம்? மூடா! அசரீரி வாக்கினால் முன்பு சொல்லப்பட்டவனும், உன்னை அழிப்பவனுமாகிய, உன் சத்ரு (எதிரி) ஏதோ ஓரிடத்தில் உண்டாகி, வளர்ந்து வருகின்றான். அதில் ஸந்தேஹம் வேண்டாம். மன இரக்கத்திற்கிடமான சிசுக்களை (குழந்தைகளை) வீணாக நீ ஹிம்ஸிக்கவேண்டாம்” என்று மொழிந்து, பூஜிக்கத்தகுந்த பெருமையுடைய அந்த யோகமாயை, பல திருநாமங்களையுடைய பல இடங்களில் தானும் துர்க்கை, காளி முதலிய பல நாமங்களைப் பூண்டு, வாஸம் செய்து வந்தது. கம்ஸன் அந்த யோகமாயை மொழிந்ததைக் கேட்டு, மிகவும் வியப்புற்று, தேவகீ வஸுதேவர்களைச் சிறைச்சாலையினின்று விடுவித்து, வணக்கத்துடன் மொழிந்தான்.

கம்ஸன் சொல்லுகிறான்:- ஓ என்னுடன் பிறந்தவளே! ஓ என் மணவாளனே! நான் ராக்ஷஸன்போல் வந்து, உங்கள் பிள்ளைகள் பலரையும் ஹிம்ஸித்தேன். நான் பாபிஷ்டன் (பாபி). ஆ! இதென்ன வருத்தம்! மன இரக்கமின்றிப் பந்துக்களையும், நண்பர்களையும் துறந்து, துஷ்ட ஸ்வபாவனாகி (கெட்ட தன்மையனாகி), உங்கள் புதல்வர்களைக் கொன்ற அப்படிப்பட்ட மஹாபாபிஷ்டனாகிய நான், எந்த லோகங்களை அடைவேனோ? நான் கேவலம் ஸ்தாவர (மரம், செடி, கொடி) ஜன்மம் (பிறவி) பெறுவேனன்றி வேறில்லை. நான் ப்ரஹ்மஹத்யை (ப்ராஹ்மணனைக் கொலை) செய்தவன் போல, ஜீவித்திருந்தும் (உயிருடன் இருந்தும்) செத்தாற் போலவே. முன்பு தெய்வம் “இவளுடைய எட்டாவது கர்ப்பம் உன்னை வதிக்கப்போகிறது” என்று சொல்லிற்று. இப்பொழுது “உனக்கு ம்ருத்யு (மரணம்) ஏதோ ஓரிடத்தில் உண்டாயிருக்கின்றான்” என்று சொல்லிற்று. ஆகையால், மனுஷ்யர்கள் மாத்ரமே என்பதில்லை; தெய்வமும் கூட மனுஷ்யர்களைப்போல் பொய் பேசுகிறது. இந்தத் தெய்வத்தின் வார்த்தையை நம்பியல்லவோ நான், என் உடன்தோன்றலின் பிள்ளைகளைக் கொன்று, பாபிஷ்டனானேன். 

மிகுந்த விவேகமுடையவர்களே! மரணம் அடைந்த உங்கள் பிள்ளைகளைப் பற்றி நீங்கள் சோகிக்க வேண்டாம். அவர்கள் தங்களுடைய கர்மத்தினால் மரணம் அடைந்தார்களேயன்றி, வேறில்லை. அவரவர் செய்த கர்மத்தின் பலனை, அவரவர்களே அனுபவிக்க வேண்டுமல்லவா? ஆகையால் ஜந்துக்கள் (பிராணிகள்), தத்தம் கர்மங்களுக்குத் தகுந்தபடி தூண்டுகிற தெய்வத்திற்கு உட்பட்டு, ஸர்வ காலத்திலும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். கர்மானுகுணங்களை (வினைப் பயனைப்) பெற்று, சுற்றிக்கொண்டேயிருப்பார்கள். பூமியினின்று மேற்கிளம்பின தூட்கள், சேருவதும், பிரிவதுமாயிருப்பதுபோல், பூதங்களும் ஒருகால் சேருவதும், ஒருகால் பிரிவதுமாயிருக்கும். பூமியினின்று உண்டான தூட்கள், சேருவதும் பிரிவதுமாயிருப்பினும், பூமி ஒருவாறாகவே இருப்பதுபோல், பூதங்களின் பரிணாமமான (மாற்றங்களான) சரீரங்கள், ஜன்ம (பிறப்பு) மரணாதி (இறப்பு) விகாரங்களைப் (மாறுதல்களைப்) பெறினும், அவற்றைத் தரித்துக்கொண்டிருக்கும் ஜீவாத்மா, வேறுபாடின்றி ஒருவாறாகவே இருப்பான். தேஹங்களுக்கு ஜன்ம (பிறப்பு) மரணாதி (இறப்பு) விகாரங்களுக்கு (மாறுதல்களுக்கு) இடமாயிருக்கை இயற்கையாகையால், அவற்றைப்பற்றிச் சோகிக்க வேண்டியதில்லை. ஜீவாத்மாவுக்கு விகாரமே (மாறுதலே) இல்லாமையாலும், நித்யனாகையாலும் (அழிவற்றவனாகையாலும்), அவனைப்பற்றியும் சோகிக்க வேண்டியதில்லை. இவ்வாறு தேஹத்திற்கும், ஆத்மாவுக்கும் உள்ள பேதத்தை ஆராய்ந்தறியானாயின், தேஹத்தையே (உடலையே) ஆத்மாவென்று ப்ரமிப்பான். அந்த ப்ரமம் (மனக்கலக்கம்) நீங்காத வரையில், தேஹ ஸம்பந்தமும், தேஹ வியோகமுமாகிற (சரீரம் நீங்குதல்) ஜன்ம மரணங்களோடு கூடிய ஸம்ஸாரம் நீங்காது; “நான் கொல்லுகிறேன்; கொல்லப்பட்டேன்” என்கிற ப்ரமமும் (மனக்கலக்கமும்) மாறாது. ஆகையால், மங்கள ஸ்வபாவம் (நல்ல தன்மை) உடையவர்களே! 

உங்கள் புதல்வர்களை நான் வதித்திருப்பினும், நீங்கள் அவர்களைப்பற்றிச் சோகிக்க வேண்டாம். ப்ராணிகள் அனைவரும் கர்மத்திற்குட்பட்டு, தாங்கள் தாங்கள் செய்த கர்மத்தின் பலனாக ஏற்பட்ட ஜன்ம மரணங்களை, அவச்யம் அனுபவித்தே தீரவேண்டும். எதுவரையில் தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவின் ஸ்வரூப நிலைமையை உள்ளபடியறியாமல் “நான் - அடியுண்டேண்; நான் அடிக்கின்றேன்” என்று ப்ரமத்தினால் (மனக்கலக்கத்தினால்) தேஹ தர்மத்தை ஆத்மாவினிடத்தில் ஏறிட்டு  நினைக்கிறானோ அதுவரையில், அந்த ப்ரமம் (மனக்கலக்கம்) உடையவன்  அறிவற்ற மூடனாகத் தன்னை வதிக்கப்படுகிறவனாகவும், வதிக்கிறவனாகவும், பாவித்து அவற்றால் விளையும் சோகம், பாபம், முதலியவற்றை அனுபவிப்பான். ஆகையால், சாதுக்களும் பந்துக்களிடத்தில் வாத்ஸல்யம் (பரிவு) உடையவர்களுமாகிய நீங்கள், என்னுடைய துர்ப்புத்தித்தனத்தைப் பொறுப்பீர்களாக.

(குறிப்பு - கம்சன் முந்தைய பிறவியில் காலநேமி என்ற பெயரில் அசுரனாக வாழ்ந்து வந்தான், ஹிரண்யகசிபுவின் மகனாக இருந்த காலநேமிக்கு ஆறு மகன்கள்: ஹம்ஸன், ஸுவிக்ரமன், கிராதன், தமனன், ரிபுர்மர்தனன், கிரோதஹன்தா. ஆறு கர்பர்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் போர்க் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த ஆறு அசுரர்களும் ஹிரண்யகசிபுவின் சகவாசத்தைக் கைவிட்டு, பிரம்மதேவரை திருப்தி செய்வதற்கான கடும் தவத்தில் ஈடுபட்டனர். தவத்தில் திருப்தியுற்ற பிரம்மதேவர் அவர்களுக்கு வரமளிக்க முன்வந்தபோது, தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள், மனிதர்கள், முனிவர்கள் ஆகியோரால் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தை அவர்கள் வேண்டினர். பிரம்மதேவரும் அந்த வரத்தினை அவர்களுக்கு நல்கினார். ஆனால் இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஹிரண்யகசிபு மிகவும் கோபம் கொண்டான். கடுங்கோபத்தில் அவன் அவர்களுக்கு சாபமிட்டான், “என்னுடைய சகவாசத்தைக் கைவிட்டு தேவர்களிடம் சென்று வரம் கேட்கிறீர்களா? உங்களின் மீது எனக்கிருந்த பாசம் முழுவதுமாக அகன்று விட்டது. ஆயினும், என்னைக் கைவிட்டு தேவர்களை அணுகிய குற்றத்திற்காக, நான் உங்களுக்கு சாபமிடுகிறேன். நீங்கள் வருங்காலத்தில் உங்களுடைய தந்தையின் (என்னுடைய) கையினாலேயே மரணமடைவீர்கள்.” ஹிரண்யகசிபுவின் அந்த சாபத்தின் விளைவாக, அந்த ஆறு அசுரர்களும் தேவகியின் வயிற்றில் பிறந்தனர். அவர்களது தந்தையான காலநேமி கம்சனாகப் பிறந்து அந்த ஆறு அசுரர்களையும் கொலை செய்தான். இவ்வாறாக, அந்த ஆறு அசுரர்களும் தங்களது தந்தையினாலேயே கொல்லப்பட்டனர். மேலும், இந்த ஆறு அசுரர்களும் ஹிரண்யகசிபுவின் பேரன்களாகப் பிறப்பதற்கு முன்பாக, மரீசியின் மகன்களாக இருந்தனர் என்பதும், பிரம்மதேவரால் சபிக்கப்பட்டு அவர்கள் அசுரர்களாக பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கம்ஸன், மணவாளனான வஸுதேவனையும், உடன்பிறந்தவளான தேவகியையும் பார்த்து இவ்வாறு மொழிந்து, அப்பால் கண்ணும் கண்ணீருமாய், அவர்களுடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டான். பிறகு, யோகமாயையின் வார்த்தையினால் இவர்கள் தோஷமற்றவர்களென்று நம்பி தன் ஸ்னேஹத்தைக் (அன்பைக்) காட்டிக்கொண்டு, அந்தத் தேவகி வஸுதேவர்களை விலங்கினின்று விடுவித்தான். தேவகி, இவ்வாறு பச்சாத்தாபம் (செய்த தவறுக்கு வருத்தம்) உண்டாகப்பெற்ற ப்ராதாவான (ஸஹோதரனான) கம்ஸனிடத்தில் பொறுமை கொண்டு, கோபத்தைத் துறந்தாள். வஸுதேவனும் பொறுத்து சிரித்துக் கொண்டே, கம்ஸனைப் பார்த்து “மிகுந்த மதியுடையவனே! மஹா பாக்யசாலி! நீ சொல்லுவதெல்லாம் வாஸ்தவமே (உண்மையே). மஹாராஜனே! ப்ராணிகளுக்கு “நான் அடியுண்டேன்; நான் அடிக்கிறேன்” என்னும் புத்தி, தேஹாத்ம ப்ரமமாகிற (இவ்வுடலே ஆத்மா என்கிற மனக்கலக்கமாகிற) அஜ்ஞானத்தில் (அறியாமையால்) உண்டானதே. தேஹாத்மப்ரமம் (இவ்வுடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மை தோற்றாமையால் உண்டானது. அந்த அகம்பாவத்தினால்தான், சத்ரு (எதிரி) என்றும், மித்ரன் (நண்பன்) என்றும் பேத (வேறுபாடு) புத்தி உண்டாகின்றது. ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட தேஹத்தை ஆத்மாவாக பாவித்து, சோகம், ஸந்தோஷம், பயம், த்வேஷம், லாபம், மோஹம், மதம் இவை தொடரப்பெற்று, அசேதனங்களான கட்கம் முதலிய வஸ்துக்களால் அசேதனத்தை அழிக்கின்ற ஈச்வரனைக் காண்கிறதில்லை; தானென்றும், பிறனென்றும் பேதத்தையே (வேறுபாட்டையே) காண்கின்றார்கள்; அவரவர் கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸர்வேச்வரன் அவர்களுக்கு ஜன்ம (பிறப்பு), மரணாதிகளை (இறப்பு) விளக்கின்றானாகையால், ஒருவனாலும் மற்றொருவனுக்கு ஒருவித அபராதமும் உண்டாகிறதில்லை. ஆகையால், நீ மொழிந்தது உண்மையே என்றான். 

இவ்வாறு கம்ஸன், தேவகீ வஸுதேவர்களால் விச்வாஸம் (நம்பிக்கை) அமைந்திருக்கும்படி மொழிந்து, அனுமதி கொடுக்கப்பெற்று, தன் க்ருஹத்திற்குச் சென்றான். அப்பால், அந்த ராத்ரி கழிந்து, பொழுது விடிகையில், கம்ஸன் மந்திரிகளை அழைத்து யோகமாயை மொழிந்ததையெல்லாம் அவர்களுக்குச் சொன்னான். தேவதைகளுக்குச் சத்ருக்களும், தேவதைகளின் மேல் கோபமுடையவர்களும்,  நன்மை தீமைகளைப் பற்றின விவேகம் நன்கு நேரப் பெறாதவர்களும், தைத்யர்களுமாகிய அக்கம்ஸனுடைய மந்திரிகள், அவனைப் பார்த்து  இவ்வாறு மொழிந்தார்கள்.

மந்திரிகள் சொல்லுகிறார்கள்:- போஜ வம்சத்தரசர்களில் சிறந்தவனே! யோகமாயை இவ்வாறு மொழிந்ததாயின், பட்டணங்கள், க்ராமங்கள், இடைச்சேரிகள் முதலிய இடங்களில் சென்று, பிறந்து பத்து நாள் கழிந்தவைகளும், கழியாதவைகளுமான சிசுக்களை (குழங்தைகளை) எல்லாம் இப்பொழுது வதித்து விடுவோம். உன் தனுஸ்ஸின் நாண் கோஷங்களைக் கேட்ட மாத்ரத்தில் ஓயாமல் பயந்து, யுத்தம் செய்யப் பின்வாங்குகிறவர்களான தேவதைகள், எவ்வளவு ப்ரயத்னங்கள் (முயற்சிகள்) செய்யினும், நமக்கு என்ன கெடுதியைச் செய்யப்போகிறார்கள்? பாணங்களை ஓயாமல் தொடுத்து விடுகிற உன்னுடைய பாண ஸமூஹங்களால் (அம்புக் கூட்டங்களால்) அடியுண்டு, பிழைத்தால் போதுமென்று விரும்பி ஓடிப்போவதே தங்களைப் பாதுகாப்பதற்கு உரிய மேல் உபாயமென்று நிச்சயித்து, தங்கள் ஸ்தானங்களைத் துறந்து, மூலைக்கொருவராக ஓடிப்போனார்கள். சில தேவதைகள் உன்னிடத்தினின்று, ஆயுதங்களைத் துறந்தும், சில தேவதைகள் அரையாடையும், தலைமயிர் முடுச்சும் அவிழ்ந்து கலைந்தும், பயந்தோமென்று சொல்லிக்கொண்டு, கைகளைக் குவித்து நின்றார்கள். 

ஆயினும், நீ அஸ்த்ர, சஸ்த்ரங்கள் மறந்தவர்களையும், ரதமற்றவர்களையும், பயத்தினால் வணங்கினவர்களையும், யுத்தத்தை விட்டு வேறு ப்ரயோஜனங்களில் மனம் சென்றவர்களையும், யுத்தத்தினின்று திரும்பிப் போகிறவர்களையும், தனுஸ்ஸு முறிந்து யுத்தம் செய்யாதவர்களையும் அடிக்கிறதில்லையாகையால், தேவதைகள் பயந்து, உன்னிடத்தினின்று தப்பிப்போனார்களேயன்றி, எதிர்த்து யுத்தம் செய்திருப்பார்களாயின், அன்றே முடிந்திருப்பார்கள். வீட்டில் மாத்ரமே சூரர்களும், யுத்தம்தவிர மற்ற இடங்களில் வீரவாதம் பேசுகிறவர்களுமாகிய தேவதைகளால், என்ன செய்யமுடியும்? ஸாதாரண தேவதைகளின் கதை அப்படி இருக்கட்டும். உன்னிடத்தில் பயந்து ஜன ஸஞ்சாரமில்லாத (மக்கள் நடமாட்டம் இல்லாத) இடத்தில் வாஸம் செய்கிற விஷ்ணுவினாலாவது, காட்டில் வஸிக்கிற ருத்ரனாலாவது, அல்ப வீர்யனான (குறைந்த பலமுடைய) இந்த்ரனாலாவது, தவம் செய்யும் மன இரக்கத்திற்கிடமான ப்ரஹ்மதேவனாலாவது, என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்யமுடியாது. 

ஆயினும் சத்ருக்களாகையால் (எதிரிகளாகையால்), தேவதைகளை நாம் உபேக்ஷிக்கலாகாது (ஒதுக்கலாகாது) என்று நினைக்கின்றோம். ஆகையால், அவர்களை வேரோடு பிடுங்கி  நாசம் செய்வதற்கு உன் ப்ருத்யர்களான (அடியவர்களான) எங்களை நியமிப்பாயாக. சரீரத்தில் உண்டாகியிருக்கும் வ்யாதியை உபேக்ஷிப்போமாயின் (பொருட்படுத்தாது விட்டோமாயின்), அது வேரூன்றி எவ்விதத்திலும் போக்க முடியாதிருப்பது போலவும், யோகிகள் இந்திரியங்களை உபேக்ஷிப்பானாயின் (பொருட்படுத்தாது விட்டு விடுவனாயின்), அவை விஷயங்களில் தாழ்ந்த பின்பு, மீட்க முடியாதிருப்பது போலவும், சத்ருவை (எதிரியை) உபேக்ஷித்திருப்போமாயின் (பொருட்படுத்தாது விட்டிருப்போமாயின்), அவன் பலம் வளரப்பெற்று, அப்பால் அசைக்கவும் முடியாதிருப்பான். வர்ணாச்ரமங்களுக்குத் தகுந்தபடி வேதங்களால் நிரூபிக்கப்படுகிற தர்மங்களுக்கு நிர்வாஹகனான (நியமிப்பவனான) ஸ்ரீமஹாவிஷ்ணுவே தேவதைகளுக்கு மூலம். அவனை அழித்தோமானால், தேவதைகளை அழித்தாற்போலவே ஆகிவிடும். கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்திருக்கின்ற அவ்விஷ்ணுவை, நம்மால் எவ்வாறு அழிக்க முடியும் என்றால், வேதங்கள், பசுக்கள், ப்ராஹ்மணர்கள், தவம், தக்ஷிணைகளோடு கூடின யாகங்கள் ஆகிய இவையே அவ்விஷ்ணுவுக்கு மூலமாகையால், இவற்றை அழித்தோமாயின், அவனை அழித்தாற் போலாய்விடும். ஆகையால், மன்னவனே! பலவகை உபாயங்களாலும், வேதமோதும் தன்மையர்களும், பரப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்து உபதேசிக்கும் திறமையுடையவர்களும், தவமுடையவர்களும், யாகம் செய்பவர்களுமாகிய ப்ராஹ்மணர்களையும், யாகாதி கர்மங்களுக்கு வேண்டிய நெய் முதலியவற்றைக் கறப்பவைகளான பசுக்களையும் வதிப்போம். 

ப்ராஹ்மணர்கள், பசுக்கள், வேதங்கள், தவம், ஸத்யம், தமம், சமம், ச்ரத்தை, தயை, பொறுமை, யாகங்கள் இவையெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சரீரம். அவ்விஷ்ணு, தேவதைகளுக்கு ப்ரபு. அஸுரர்களை த்வேஷிக்கும் (வெறுக்கும்) தன்மையன்; ஹ்ருதய குஹைகளில் மறைந்து ஸஞ்சரித்துக் கொண்டிருப்பவன். ப்ரஹ்ம தேவன், ருத்ரன், இந்திரன் முதலிய லோகபாலர்கள் ஆகிய இவர்களோடு கூடின ஸமஸ்த தேவதைகளும், அவ்விஷ்ணுவையே ஆதாரமாகவுடையவர்கள். ஆகையால், ரிஷிகளை ஹிம்ஸிக்கையே, அவ்விஷ்ணுவை வதிப்பதற்குரிய உபாயமாம். ரிஷிகளை வதித்தோமாயின், அவர்களைச் சரீரமாகவுடைய விஷ்ணு அழிந்து போவான். அவன் அழிந்து போகையில், அவனை ஆதாரமாகவுடைய தேவதைகள் தாமே அழிந்து போவார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கெடுமதியுடைய (கெட்ட புத்தி உடைய) அக்கம்ஸன், அவ்வாறு துர்ப்புத்திகளான (கொடிய புத்தி உடைய) தன் மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து, காலபாசத்தினால் கட்டுண்டு, ப்ராஹ்மண ஹிம்ஸையையே (துன்புறுத்துவதே) ஹிதமாக (நன்மை என்று) நினைத்தான். அப்பால், ஸாதுஜனங்களை ஹிம்ஸிப்பதற்காக (துன்புறுத்துவதற்காக), அதையே ப்ரியமாகவுடையவர்களும், காமரூபர்களுமான (விரும்பிய உருவத்தை எடுக்க வல்லவர்களான), தானவர்களைத் திக்குக்களில் (எல்லா திசைகளிலும்) செல்லும்படி நியமித்து, தான் க்ருஹத்திற்குச் சென்றான். அப்பால், ரஜோகுணத்தை இயற்கையாகவுடையவர்களும், தமோகுணத்தினால் மூடப்பட்ட மனமுடையவர்களுமாகிய அந்தத் தானவர்கள், ம்ருத்யு (மரணம்) ஸமீபித்திருக்கப் பெற்று, ஸத்புருஷர்களுக்கே மன வருத்தத்தை நடத்திக்கொண்டு வந்தார்கள். பெரியோர்களிடத்தில் அபசாரப்படுவார்களாயின், அது அந்த ப்ராணிகளின் ஆயுள், செல்வம், புகழ், தர்மம் தர்மத்தினால் பெறக்கூடிய புண்யலோகம், விருப்பங்கள் ஆகிய இந்நன்மைகளையெல்லாம் போக்கி, மரணத்தையும் விளக்கும். 

நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை