தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஐந்தாவது அத்தியாயம்
(நந்தன் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஜாதகரணம் நடத்தி, மதுரையில் வஸுதேவனுடன் கலந்து பேசுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- உதாரமான (பரந்த) மனமுடைய நந்தன் பிள்ளை பிறக்கையில் ஸந்தோஷம் அடைந்து, வேதங்களை உணர்ந்த அந்தணர்களை வரவழைத்து, தான் ஸ்னானம் செய்து அலங்கரித்துக் கொண்டு, ஸ்வஸ்தி வாசனம் (நன் மங்கள சொற்கள் கூறுவித்து)செய்வித்து, விதிப்படி ஜாதகர்மத்தை நடத்தி, பித்ருக்களையும் தேவதைகளையும் பூஜித்தான். அப்பால், நன்கு அலங்காரம் செய்யப் பெற்ற இருபதினாயிரம் பசுக்களையும், ரத்ன ஸமூஹங்களாலும், ஸ்வர்ணங்களாலும், வஸ்த்ரங்களாலும் அலங்கரித்து பர்வதம் போல் குவித்த ஏழு எள்ளுக் குவியல்களையும் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தான். ஜீவாத்மா, பரமாத்ம உபாஸனத்தினால் (த்யானத்தினால்) ஹேய (கெட்ட) ஸம்பந்தமற்று பரிசுத்தனாவதுபோல, பயிரிட வேண்டிய உரிய காலத்தினால் பூமியும், நீராடலால் உடலும், தூய்மையால் அழுக்கும், வேதம் கூறும் ஸம்ஸ்காரங்களால் கர்ப்பமும், தவத்தால் ஐம்பொறிகளும், வேள்வியால் அந்தணர்களும், தானத்தால் செல்வமும், த்ருப்தியால் மனமும் தூய்மை அடைகின்றன. ஆத்மா ஆத்ம வித்யையால் சுத்தி அடைகிறது.
அந்த நந்தன் தான் ஸ்னானம் செய்து, ஸ்வஸ்திவாசனம் நடத்தி (நன் மங்கள சொற்கள் கூறுவித்து), பசு, ஸ்வர்ணம் முதலிய தானங்களையும் கொடுத்தான். அப்பொழுது ப்ராஹ்மணர்கள், ஸ்வஸ்தி மந்த்ரங்களைப் படித்தார்கள். புராணம் சொல்லுகிற ஸுதர்களும், வம்சாவளி படிக்கிற மாகதர்களும், ஸ்துதி பாடகர்களான வந்திகளும் மற்றும் ஸங்கீத பாடகர்களும் புராணாதிகளைப் பாடினார்கள். பேரி வாத்யங்களும், துந்துபி வாத்யங்களும் அடிக்கடி முழங்கின. கோகுலத்தில் வாசல்களும், முற்றங்களும், வீடுகளின் உட்புறங்களும், நன்றாக விளக்கி, தெளித்து, விசித்ரமான த்வஜங்களாலும், பதாகைகளாலும், பூமாலைகளாலும், புதிய வஸ்த்ரங்களாலும், தளிர்த்தோரணங்களாலும், அலங்காரம் செய்யப் பெற்றிருந்தன. பசுக்களும், எருதுகளும், கன்றுகளும், மஞ்சள், எண்ணெய் இவை பூசப்பெற்று, அற்புதமான தாதுக்கள், மயில் தோகைகள், பூமாலைகள், புதிய வஸ்த்ரங்கள், பொற்சங்கிலிகள் இவை இடம்ப்பெற்று விளங்கின.
இடையர்களெல்லாரும், விலையுயர்ந்த வஸ்த்ரங்களையும், ஆபரணங்களையும், கவசங்களையும், தலைப்பாகைகளையும், அணிந்து, கைகளில் பலவகை உபஹாரங்களை (அன்பளிப்புப் பொருட்களை) ஏந்திக் கொண்டு நந்தனுடைய மாளிகைக்கு வந்தார்கள். பருத்தழகிய இடையின் பின்புறமுடைய இடைப்பெண்களும், யசோதைக்குப் பிள்ளை பிறந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, மனக்களிப்புற்று, ஆடையாபரணங்களாலும், மெய்சந்தனம் முதலியவைகளாலும் தங்களை அலங்கரித்துக்கொண்டு, தாமரை மலர் போன்ற முகங்களில் புதிய குங்குமங்களாகிற தாதுகள் திகழப்பெற்று, பற்பல உபஹாரங்களை (காணிக்கைகளை) ஏந்திக் கொண்டு, கொங்கைகள் குலுங்க விரைந்து வந்தார்கள். காதுகளில் நன்றாகத் துடைத்து நிர்மலமாய் விளங்குகின்ற ரத்னகுண்டங்களையும், கழுத்தில் பதகங்களையும், அரையில் அற்புதமான ஆடைகளையும், கைகளில் வளைகளையும் அணிந்து, நந்தனுடைய மாளிகைக்கு விரைந்து செல்கிற இடைப்பெண்கள், நடைவேகத்தினால் அவிழ்ந்து அலைகின்ற தலைச் சொருக்கினின்று வழியில் பூமழை பொழியவும், தலை மயிர்களும், கொங்கைகளும், முத்துமாலைகளும், அசைவதனால் ஒரு வகையழகு திகழவும் பெற்று விளங்கினார்கள். அந்தக் கோபிகைகள் அப்பாலகனைப் பார்த்து, “எங்களை நெடுங்காலம் பாதுகாப்பாயாக” என்று ஆசீர்வாதங்களைச் செய்து, மஞ்சள் பொடிகளையும், எண்ணையையும், கந்தப்பொடி முதலிய மற்றும் பலவகைப் பொடிகளையும், ஜலத்தையும் ஒருவர் மேல் ஒருவர் இறைத்துக் கொண்டு, பாடினார்கள். ஸர்வலோகேச்வரனான ஸ்ரீக்ருஷ்ணன், பலராமனோடு நந்த கோகுலத்தை அடைகையில், அம்மஹோத்ஸவத்திற்காக அற்புதமான பல வாத்யங்கள் முழங்கின. இடையர்களும் ஸந்தோஷம் அடைந்து, தயிர், பால், நெய், ஜலம், வெண்ணெய் இவற்றை ஒருவர் மேல் ஒருவர் இறைப்பதும், பூசுவதும், தூவுவதுமாய் விளையாடினார்கள்.
பெரும்புகழனும் ஆழ்ந்த மனமுடையவனுமாகிய நந்தனோவென்றால், அந்த ஸுதர் முதலியவர்களுக்கும், பரதசாஸ்த்ரம் முதலிய வித்யைகளால் ஜீவிக்கிற மற்றுமுள்ள ப்ராணிகளுக்கும், ஆடை, ஆபரணம், பசுக்கள் இவற்றையும், அவரவர் விரும்புகிற மற்ற விருப்பங்களையும் கொடுத்து, அவரவர்களை உரியபடி பூஜித்தான். வஸுதேவனுடைய மனைவியாகிய மிகுந்த பாக்யமுடைய ரோஹிணியும், தங்கள் க்ருஹ (இல்ல) தேவதையான விஷ்ணுவின் ஆராதனத்திற்காகவும், தன் பிள்ளையினுடைய நன்மைக்காகவும், திவ்யமான வஸ்த்ரங்களையும், பூமாலைகளையும், கண்டாபரணம் முதலிய ஆபரணங்களையும் அணிந்து, நந்தனாலும் மற்ற கோபர்களாலும் அபிநந்திக்கப் (வரவேற்கப், மகிழ்விக்கப்) பெற்று, நடமாடிக் கொண்டிருந்தாள். ஸ்ரீக்ருஷ்ணன் ப்ரவேசித்தவன்று முதல் நந்த கோகுலம் எல்லா ஸம்ருத்திகளும் நிறைந்து, பரமபுருஷன் வஸித்துக் கொண்டிருக்கையால் மஹோத்ஸவம் முதலிய பல நற்குணங்கள் அமைந்து, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் விளையாடுமிடம் போன்றிருந்தது.
குரு வம்சத்தை வளர்ப்பவனே! நந்தன் கோபர்களுக்குக் கோகுலத்தைப் பாதுகாக்கும்படி ஏற்பாடு செய்து, கம்ஸனுக்கு வர்ஷம் தோறும் செலுத்த வேண்டிய கப்பத்தைக் கொடுக்கும் பொருட்டு, மதுரைக்குச் சென்றான். அப்பொழுது, வஸுதேவன் ப்ராதாவைப் போல (உடன் பிறந்தவனைப் போல) மிகவும் ஸ்னேஹத்திற்கிடமாகிய (அன்பிற்கிடமாகிய) நந்தன் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, ராஜனாகிய கம்ஸனுக்குக் கப்பம் செலுத்தி விட்டதையும் தெரிந்து கொண்டு, அந்த நந்தன் இறங்கியிருக்குமிடத்திற்குப் போனான். நந்தனும், அவ்வஸுதேவன் வந்ததைக் கொண்டு ப்ராணன் (மூச்சுக்காற்று) வந்தால் தேஹம் (உடல்) எழுந்திருக்குமாறு விரைவுடன் எழுந்திருந்து, ஸந்தோஷம் அடைந்து, ப்ரீதியினால் தழதழத்து, மிகவும் அன்பிற்கிடமான வஸுதேவனைப் புஜங்களால் அணைத்துக் கொண்டான். பிறகு, நந்தனால் பூஜிக்கப்பட்ட வஸுதேவன், ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அந்நந்தனைப் பார்த்து, ஆதரவுடன் ஆரோக்யமாவென்று விசாரித்து, புதல்வர்களிடத்தில் மனம் செல்லப் பெற்று, இவ்வாறு மொழிந்தான்.
வஸுதேவன் சொல்லுகிறான்:- அப்பனே! நெடுநாளாகப் பிள்ளையில்லாதிருந்து, மூப்பையும் அடைந்து, “இனி நமக்கு ஸந்தானம் (வாரிசு) உண்டாகாது” என்று அந்த ஆசையினின்றும் கூட மீண்டிருந்த உனக்கு, தெய்வாதீனமாய் இப்பொழுது பிள்ளை பிறந்ததென்பது எனக்கு மிகவும் ஸந்தோஷமாயிருக்கின்றது. சக்ரம் போலச் சுழன்று கொண்டிருக்கின்ற இந்த ஸம்ஸாரத்திலிருக்கும் புருஷன், தான் மீளவும் (“ஆத்மாவை புத்ரநாமாசி” என்கிற ச்ருதியையும், “ஜாயதே அஸ்யாம் பதிரிதி ஜாயா” என்கிற ஜாயா சப்தத்தின் வ்யுத்பத்தியையும் (பொருளையும்) நினைத்து இவ்வாறு சொல்லுகிறது. “ஆத்மாவை” என்கிற ச்ருதிக்குத் தானே பிள்ளையாகப் பிறக்கிறானென்று பொருள். கணவன் தானே பார்யையிடத்தில் பிள்ளையாகப் பிறக்கிறானாகையால், பத்னிக்கு ஜாயை என்னும் பெயர் உண்டாயிருக்கிறது என்று ஜாயா சப்தத்தின் பொருள்.) பிள்ளையாய்ப் பிறக்கிறான் என்பது ஸந்தோஷத்திற்கிடமான விஷயமல்லவா? மற்றும் நீ இப்பொழுது எனக்குப் புலப்பட்டது பெரிய ஸந்தோஷம்.
அன்பிற்கிடமானவர்களைக் காண்பது அரிதல்லவா? இதே ஜன்மத்தில் நான் உன்னைக் கண்டது, எனக்கு மீளவும் பிறந்தாற் போலிருக்கிறது. நான் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து கொண்டேயிருப்பினும், கம்ஸ பயத்தினின்று விடுபட்டமையை ஆலோசித்தால், மீளவும் பிறந்தாற் போலிருக்கின்றது. கம்ஸனால் சிறையில் அடைப்புண்ட எனக்கு உன் காட்சி மிகவும் அரிதாயிருந்ததல்லவா? ஆகையால், நான் சிறையினின்று விடுபட்டு, உன்னைக் கண்டமை எனக்குப் பெரிய ஸந்தோஷமாயிருக்கின்றது.
நண்பனே! ப்ரவாஹத்தில் அடித்துக் கொண்டு போகிற கட்டை முதலியவை ஓரிடத்தில் சேர்ந்திருக்க முடியாதது போல, பற்பல கர்மங்களுடையவர்களும், அந்தக் கர்ம வேகத்தினால் பற்பல இடங்களில் சுற்றும்படி தூண்டப்படுகிறவர்களுமாகிய ப்ராணிகள், நட்புடையவர்களாயினும், மனக்களிப்புடன் ஓரிடத்தில் கலந்திருப்பது அரிது. அப்பனே! அது நிற்க, பசுக்களுக்கு அனுகூலமாயிருப்பதும், ரோகங்களுக்கு இடம் கொடாததும், ஜலம், புல், கொடி, செடி முதலியவை அளவற்றிருப்பதும், மிகுந்த விஸ்தாரமுடையதும், ஸ்னேஹிதர்களுடன் உன்னால் வாஸம் செய்யப் பெற்று வருவதுமாகிய அவ்வனம் க்ஷேமமாயிருக்கின்றதா? அப்பா! உன்னுடைய கோகுலத்தில், என் புதல்வன் (பலராமன்) தாயுடன் கூடி உன்னால் உபலாலனம் (சீராட்டல்) செய்யப் பெற்று, உன்னையே தந்தையாகப் பாவித்துக் கொண்டு க்ஷேமமாயிருக்கிறானா? ஒருவன் தர்ம, அர்த்த, காமங்களால் நிறைவாளனாயிருப்பினும், அவனிடத்தில் நட்புடைய அவனுடைய பந்துக்கள் அவற்றை அனுபவித்து வருவார்களாயின், அப்பொழுதுதான் அவை பயன்பெறும். அவர்கள் வருத்தமுற்றிருப்பார்களாயின், அந்தத் தர்ம அர்த்த காமங்கள் பயனற்றவைகளேயாம்.
நந்தன் சொல்லுகிறான்:- அப்பனே! உனக்குத் தேவகியிடத்தில் பிறந்த பல புதல்வர்களும் கம்ஸனால் கொல்லப்பட்டார்களே. ஆ! இதென்ன வருத்தம்! கடைசியில், ஒரு கன்னிகை மிகுந்தது. அதுவும் கூட ஸ்வர்க்க லோகம் போயிற்றே. இவ்வுலகத்திலுள்ள ஜனங்களெல்லாம் விதி வசத்தால் ஸுக துக்கங்களை உடையவை. ஜனங்களை எல்லாம் விதியே அடக்கி ஆள்கின்றது. தனக்கு ஸுக துக்காதிகளெல்லாம் விதியினால் ஏற்பட்டது என்று நினைத்து, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மாவின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிகிறவன், தேஹத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்த மற்றவர்களைப் பற்றியும் உண்டாகிற ஸுக துக்கங்களால் மதிமயங்கப் பெறமாட்டான்.
வஸுதேவன்சொல்லுகிறான்:- நண்பனே! மன்னவனுக்கு வர்ஷம் தோறும் செலுத்த வேண்டிய கப்பம் செலுத்தியாய் விட்டது. என்னையும் பார்த்தாயிற்று. இனி, இங்கு நெடுநாள் இருக்க வேண்டாம். கோகுலத்தில், பல உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாகின்றன. ஆகையால், நீ சீக்ரம் புறப்பட்டுப் போவாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு வஸுதேவனால் சொல்லப்பட்ட நந்தன் முதலிய கோபர்கள், அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, எருதுகள் கட்டப் பெற்ற வண்டிகளின் மேல் ஏறிக் கொண்டு கோகுலம் சென்றார்கள்.
ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.