சனி, 21 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 222

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஆறாவது அத்தியாயம்

(பூதனா ஸம்ஹாரம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நந்தன், வழியில் போகும் பொழுதே வஸுதேவனுடைய வார்த்தை பொய்யாகாதென்று நிச்சயித்து, என்ன உத்பாதம் (தீய அறிகுறிகள்) நேரிடுமோவென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), பரமபுருஷனை சரணம் அடைந்தான். அப்பொழுது, இளம்பிள்ளைகளைக் கொல்லும் தன்மையுடைய பூதனை என்னும் ராக்ஷஸி கம்ஸனால் அனுப்பப்பட்டு, பட்டணங்களிலும், க்ராமங்களிலும், சேரிகளிலும் உள்ள சிசுக்களை (குழந்தைகளை) எல்லாம் வதிப்பதே பணியாகப்பெற்று, ஆங்காங்கு உலாவிக்கொண்டிருந்தாள். தன்னிடத்தில் மாறாத மனநிலைமையுடைய பக்தர்களுக்கு ப்ரபுவான பகவானுடைய குணங்களைக் கேட்பது, கீர்த்தனம் செய்வது முதலியன ராக்ஷஸர்களை அழிக்கும் திறமையுடையவை. ஜனங்கள், தங்கள் தங்கள் வ்யாபாரங்களோடு கூட, அந்தப் பகவானுடைய குணங்களைக் கேட்பது முதலியவற்றையும் நடத்தாது போவார்களாயின், அந்தந்த இடங்களில் தான் ராக்ஷஸிகள் நடையாடுவார்களன்றி, பகவானுடைய குணங்களைக் கேட்பது முதலியவற்றை விடாது நடத்தும் பெரியோர்களிருக்கும் இடங்களில், அவர்கள் தலைகாட்ட மாட்டார்கள். இனி ஒன்றான பகவான் வஸிக்குமிடத்தில் அவர்கள் நுழைய இடமில்லையென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

அந்தப் பூதனையென்னும் ராக்ஷஸி, ஒருகால் நந்தகோகுலத்திற்கு அருகாமையில் வந்து, நினைத்தபடி வடிவம் கொள்ள வல்லவளாகையால், ஆச்சர்யமான வேஷத்தினால் தன்னுருவத்தை மறைத்துக்கொண்டு, அதற்குள் நுழைந்தாள். அவள், பெருத்தழகிய நிதம்பங்களாலும் (முதுகுக்கும் இடுப்புக்கும் கீழே உள்ள உடலின் பகுதி), பெருத்த கொங்கைகளின் பாரத்தினாலும் வருந்தி முறிவதுபோன்ற நுண்ணிய இடையும், அழகிய ஆடையும், அசைகின்ற காதணிகளில் ஒளி படியப்பெற்று திகழ்கின்ற முன்னெற்றி மயிர்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்குகின்ற முகமும் அமைந்து, தலைச்சொருக்கில் மல்லிப் புஷ்பங்களை அணிந்து, அழகிய புன்னகையோடு கூடின கடைக் கண்களினின்று பரவுகின்ற நோக்கங்களால் இடைச் சேரியிலுள்ளவர்களின் மனத்தைப் பறித்தாள். கோபிமார்கள் அவளைக் கண்டு, “மிகுந்த அழகுடையவளும், கையில் தாமரைமலர் தரித்தவளுமாகிய ஒன்றான ஸ்ரீமஹாலக்ஷ்மியே தன் கணவனான பரமபுருஷனைக் காண இவ்விடம் வந்திருக்கிறாள்” என்று நினைத்தார்கள். பாலர்களை வதிக்கும் அந்தப் பூதனை, இடைச்சேரியில் ஆங்காங்குள்ள சிசுக்களைத் (குழந்தைகளைத்) தேடிக் கொண்டு, தெய்வாதீனமாய்த் தன்னுடைய அழகைக் கண்டு மெய் மறந்திருக்கிற கோபிகைகளால் தடுக்கப் படாமலே, நந்தனுடைய மாளிகையில் நுழைந்து, அஸத்துக்களுக்கு (தீயோருக்கு) ம்ருத்யுவும் (காலனும், மரணமும்), தன்னுடைய தேஜஸ்ஸை மறைத்துக்கொண்டு பஸ்மத்தில் (சாம்பலில்) மறைந்திருக்கிற அக்னி போன்றிருப்பவனுமாகிய பாலகனைப் படுக்கையில் கண்டாள். 

ஜங்கம ஸ்தாவர (ஜங்கமம் - அசையும் பொருள்; ஸ்தாவரம் - அசையா பொருள்) ரூபமான ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாக அவற்றின் மனோ பாவங்களையெல்லாம் அறிந்த அப்பரமபுருஷன், அப்பூதனை பாலர்களை வதிக்கும் பாவ க்ரஹமென்பதை அறிந்தவனாயினும், ஸங்கல்ப மாத்ரத்தினால் வதிக்க வல்லவனாயினும், இளமையை நடனஞ் செய்து ஒன்றும் பேசாதிருந்தான். பிறகு, அந்த ராக்ஷஸி, அப்பாலகன் துஷ்டர்களின் ப்ராணன்களைப் பறிப்பவனும், இயற்கையில் ஜகத்தின் சேஷ்டைகளையெல்லாம் அறிந்தவனும், தனக்கு ம்ருத்யுவாக (யமனாக) ஏற்பட்டிருப்பவனுமாகிய பரமபுருஷனென்பதை அறியாமல், தேச, கால, வஸ்து பரிச்சேதங்கள் (வரையறை) அற்றவனாயினும் மானிடத்தன்மையை அனுஸரித்து அளவுற்றவன் போன்றிருக்கிற அக்குழவியை, ஒன்றும் தெரியாத மூடன் உறங்குகின்ற ஸர்ப்பத்தைக் கயிறென்று மடியில் எடுத்து வைத்துக்கொள்வது போல, மடியில் எடுத்து வைத்துக்கொண்டாள். 

அப்பாலகனுடைய தாய்மார்களான யசோதை, ரோஹிணி இவ்விருவரும், கொடும் கருத்துடையளாயினும் மேலுக்கு மிகவும் அனுகூலமான சேஷ்டைகளுடையவளும், உறையில் சொருகப்பட்ட கூருள்ள கத்தி போன்றவளும், சிறந்த மடந்தையின் உருவம் தரித்தவளுமாகிய அப்பூதனையைக் கண்டும், அவளுடைய தேஜஸ்ஸினால் மதி (புத்தி) மயங்கி, தடுக்கப்பட்டவர்கள் போன்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்களன்றி அவளைத் தடுக்கவில்லை. அப்பால், கொடுந்தன்மையுடைய அப்பூதனை, அந்தக் குழந்தையை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு, வருந்தியும் செரிக்க முடியாத வீர்யமுடையதும், பொறுக்க முடியாததுமாகிய விஷம் பூசிய தன் முலையை அவன் வாயில் மடுத்து, அவனுக்கு பாலை ஊட்டினாள். பகவானும் கோபமுற்று, அவள் ஸ்தனங்களை (முலைகளை) இறுக்கிப் பிடித்து, ப்ராணன்களோடு (உயிரோடு) கூட ஸ்தன்யத்தைப் பருகினான். 

அப்பொழுது, அவள் ஸமஸ்த ப்ராண மர்மங்களிலும் (உயிர் நிலைகளிலும்) பீடிக்கப்பட்டு, “இவ்வளவோடு போதும்; சீக்ரம் விடு விடு” என்று மொழிந்து கண்களை மலர விழித்து, பாதங்களையும் புஜங்களையும் அடிக்கடி உதைத்து, உடம்பெல்லாம் புழுங்கப்பெற்று, கோஷமிட்டாள். மிகவும் கம்பீரமான வேகமுடைய அவளுடைய கோஷத்தினால், பர்வதங்களோடு கூடின பூமியும், ஸூர்யாதி க்ரஹங்களோடு கூடின ஆகாயமும், நடுக்கமுற்றன. பாதாளமும், திசைகளும், ப்ரதித்வனி (எதிரொலி) செய்தன. ஜனங்களெல்லாம் இடிவிழுகிறதென்று சங்கித்து, பூமியில் விழுந்தார்கள். அந்த ராக்ஷஸி, ஸ்தனங்களில் (முலைகளில்) பீடிக்கப்பட்டு, வாயைத் திறந்து கொண்டு, தன்னுருவத்தைப் பெற்று, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட வ்ருத்ராஸுரன் போல் இடைச்சேரி முழுவதும் நிரம்ப விழுந்தாள். அவளுடைய தேஹம் (உடல்) கீழே விழும் பொழுது, ஆறு க்ரோசங்களுக்கு (குரோசம் = 2 மைல்) இடையிலுள்ள மரங்களையெல்லாம் சூர்ணம் (பொடி) செய்தது. 

மன்னவனே! அச்சரீரம் பெரிய அற்புதமாயிருந்தது. கலப்பையளவு நீண்ட பயங்கரமான கோரைப் பற்களையுடைய முகமும், குகைகள் போன்ற மூக்குகளும், கண்ட சைலங்கள் (பெரிய பாறை) போல் பருத்துயர்ந்த முலைகளும், சிவந்து விரிந்த தலை மயிர்களும், பாழுங்கிணறுபோல் ஆழ்ந்த கண்களும், மணற்குன்று போன்ற பயத்தை உண்டாக்கும் ஜகனமும் (இடையின் பின்புறம்), உயரக்கட்டின அணைகள் போன்ற புஜங்களும், துடைகளும், பாதங்களும், ஜலம் வற்றின வெறும் மடு போன்ற வயிறும் உடைய அந்தப் பூதனையின் தேஹத்தைக் கண்டு, முன்னமே அவளுடைய மூச்சுக்காற்றுக்களாலும், கோஷத்தினாலும், ஹ்ருதயம், காது, தலை இவை பிளவுண்ட இடையர்களும் இடைச்சிகளும் நன்கு பயந்தார்கள். அவர்கள் எவ்விதத்திலும் பயமின்றி அவள் மேல் விளையாடிக்கொண்டிருக்கிற பாலகனைக் கண்டு, விரைந்தோடி வந்து, பரபரப்புடன் எடுத்துக் கொண்டார்கள். அனந்தரம் அந்தக் கோபிமார்கள், யசோதை, ரோஹிணி இவர்களுடன் கலந்து, அந்தப் பாலகனுக்கு கோ புச்ச ப்ரமணம் (நாற்புறத்திலும் பசுவின் வாலைச் சுற்றுவது முதலிய த்ருஷ்டிதோஷ பரிஹாரம்) முதலிய உபாயங்களால் எல்லா இடங்களிலும் ரக்ஷை (காப்பு) செய்தார்கள். முதலில், குழந்தைக்குப் பசுவின் மூத்ரத்தினாலும், பிறகு பசுவின் தூளாலும், ஸ்னானம் செய்வித்துக் கோமயத்தினால் (பசுவின் சாணம்) நெற்றி முதலிய பன்னிரண்டு இடங்களில் பன்னிரு நாமங்களால் ரக்ஷை (காப்பு) செய்தார்கள். 

அந்தக் கோபிமார்கள், பிறகு ஆசமனஞ்செய்து, முதலில் தங்கள் சரீரத்தில் கைகளிலும், மற்ற அங்கங்களிலும், தனித்தனியே அகரம் (“அ”முதல் “க்ஷ” வரையிலுள்ள எழுத்துக்களை ந்யாஸம் செய்து (மந்திரம் சொல்லி உடல் உறுப்புக்களைத் தொட்டு), அப்பால் குழந்தையின் சரீரத்தில் கைகளிலும், மற்ற அங்கங்களிலும், அக்ஷரங்களை ந்யாஸஞ் செய்து (மந்திரம் சொல்லி உடல் உறுப்புக்களைத் தொட்டு) “பிறவியற்ற பகவான் உன் பாதங்களையும், அணுஸ்வரூபனான ஜீவாத்மாவையும், உள்ளே புகுந்து நியமிக்கின்ற பகவான் உன் முழந்தாள்களையும், யஜ்ஞங்களால் ஆராதிக்கப்படுகிறவனும், யஜ்ஞங்களில் (யாகங்களில்) கொடுக்கிற ஹவிர் பாகங்களைப் (ஹோமம் செய்யப்படும் பொருட்களை) புசிப்பவனும், அவற்றிற்குப் பலன் கொடுப்பவனுமாகிய பகவான், உன் துடைகளையும், தன் பக்தர்களைக் கைவிடாத அச்சுதன் உன் கடித்தடத்தையும் (இடையையும்), ஹயக்ரீவன் உன் வயிற்றையும், கேசவன் உன் ஹ்ருதயத்தையும், ஈசன் உன்னுடைய மார்பையும், கழுத்தை ஸூர்யனும், கைகளை ஸ்ரீமஹாவிஷ்ணுவும், மூன்றடிகளால் உலகங்களையெல்லாம் அளந்த த்ரிவிக்ரமன் உன் முகத்தையும், ஈச்வரன் உன் சிரஸ்ஸையும் பாதுகாப்பார்களாக. 

சக்ராயுதம் தரித்த பகவான் முன்னிலும், கதையேந்தின பகவான் பின்னிலும், தனுஸ்ஸைத் தரித்த மதுஸூதனன், கத்தியைத் தரித்த அஜிதன் இவர்கள் பக்கங்களையும், சங்கம் தரித்த பகவான் ஆக்னேயம் (தென் கிழக்கு) முதலிய கோணங்களிலும், உபேந்த்ரன் மேலும், ஹலாயுதன் கீழும், ஸர்வாந்தராத்மாவான பரமபுருஷன் எல்லாப்புறங்களிலும், உன்னைப் பாதுகாப்பார்களாக. 

ஹ்ருஷீகேசன் உன்னுடைய இந்திரியங்களையும், நாராயணன் உன் ப்ராணன்களையும், ச்வேத த்வீப (எம்பெருமானான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளை மனதாலும் நினைக்காத பரமைகாந்திகள் வஸிக்கும் இடத்தின்) நாதன் உன் சித்தத்தையும், யோகேச்வரன் உன் மனத்தையும், ப்ருச்னி கர்ப்பன் (ப்ருச்னிக்குப் பிள்ளையாகப் பிறந்த பகவான் - இவ்விஷயம், க்ருஷ்ணன் தன் அவதாரத்தைப்பற்றி தேவகிக்குச் சொல்லுமிடத்தில் கூறப்பட்டது) உன் புத்தியையும், ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) பகவான் உன் அஹங்காரத்தையும் பாதுகாப்பார்களாக. 

விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது கோவிந்தனும், படுத்திருக்கும்பொழுது மாதவனும், நடக்கும்பொழுது வைகுந்தனும், உட்காரும்பொழுது ச்ரிய:பதியும் (மஹாலக்ஷ்மியின் கணவனான ஸ்ரீமஹாவிஷ்ணுவும்), புசிக்கும்பொழுது ஸமஸ்த க்ரஹங்களுக்கும் பயங்கரனான யஜ்ஞ புருஷனும், உன்னைப் பாதுகாப்பார்களாக. 

டாகினிகள் (துஷ்ட தேவதை), யாதுதானிகள் (தீய பிசாசு), கூஷ்மாண்ட க்ரஹங்கள் இவை முதலிய பாலக்ரஹங்களும் பூத, ப்ரேத, பிசாசர்களும், யக்ஷ, ராக்ஷஸ, வினாயகர்களும், கோடரை, ரேவதி, ஜ்யேஷ்டை, பூதனை, மாத்ருகை முதலியவைகளும், தேஹம், ப்ராணன், இந்த்ரியம் இவற்றை அழிக்கும் தன்மையுள்ள உன்மாத (பைத்தியம்) க்ரஹம் அபஸ்மார (காக்காய் வலிப்பு) க்ரஹம் முதலியவைகளும், ஸ்வப்னங்களில் (கனவுகளில்) புலப்படுகிற பெரிய உத்பாதங்களும் (தீய அறிகுறிகளும்), மற்றும் வ்ருத்த க்ரஹங்கள், பாலக்ரஹங்கள் எவ்வெவை உண்டோ அவைகளும், ஆகிய துஷ்ட க்ரஹங்களெல்லாம் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் நாம உச்சாரணத்தினால் (பெயரைச் சொல்வதால்) பயந்து நசித்துப்போமாக” என்று பலவாறு ரக்ஷை செய்தார்கள். 

நிலைநின்ற அன்புடைய கோபிகைகளால் இவ்வாறு ரக்ஷை செய்யப்பெற்ற புதல்வனை, தாயான யசோதை எடுத்து, முலை கொடுத்து, படுக்க விட்டாள். அவ்வளவில் நந்தன் முதலிய இடையர்கள் மதுரையினின்று கோகுலத்திற்கு வந்து, பூதனையின் தேஹத்தைக் கண்டு மிகவும் வியப்புற்றார்கள். “வஸுதேவன்  சொன்னபடியே இப்பொழுது உத்பாதம் (தீய அறிகுறி) உண்டாயிருக்கிறது, கண்டீர்களா? அவ்வஸுதேவன் பூர்வ ஜன்மத்தில் ரிஷியாகவோ, யோகீச்வரனாகவோ இருந்து இப்பொழுது இப்படி பிறந்திருக்க வேண்டும். இது நிச்சயம். இல்லாத பக்ஷத்தில், அவனுக்கு இது எப்படித் தெரியக்கூடும்? அல்லது ஒரு ரிஷியாவது, யோகீச்வரனாவது நமக்கு அவ்வாறு வஸுதேவனாய் வந்து புலப்பட்டிருக்கவேண்டும். ஆ! இதென்ன ஆச்சர்யம்” என்று கோபர்கள் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். 

பிறகு, அந்த இடையர்கள் அப்பூதனையின் சரீரத்தைக் கோடாலிகளால் கை வேறு கால் வேறாக,  தனித்தனியே வெட்டி, வெகு தூரத்தில் கொண்டுபோய்ப் போட்டுக் கட்டைகளை அடுக்கி, கொளுத்தினார்கள். ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்தன்யபானம் செய்த ஸம்பந்தத்தினால் (முலைப்பால் அருந்தி ஏற்படுத்திய தொடர்பால்), அந்த க்ஷணமே பாபங்களெல்லாம் தொலையப் பெற்ற அப்பூதனையின் சரீரத்தைக் கொளுத்தும்பொழுது, அதினின்று கிளம்பிவரும் புகை, அகிற் புகையின் வாஸனையோடு ஒத்த வாஸனை உடையதாயிருந்தது. உலகத்திலுள்ள இளைஞர்களையெல்லாம் வதித்துக்கொண்டிருந்தவளும், ரக்தத்தைப் புசிக்கும் ராக்ஷஸியுமாகிய பூதனை, வதிக்க வேண்டுமென்னும் எண்ணத்துடன், ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஸ்தன்யம் (முலைப்பால்) கொடுத்து, பெரியோர்கள் பெறும் பரமகதியாகிய முக்தியை அடைந்தாள். 

பரமாத்மாவான ஸ்ரீ க்ருஷ்ணனுக்கு மிகவும் அன்பிற்கிடமான ஏதேனும் ஒரு வஸ்துவை அன்புடைய அவன் தாய்மார்களைப் போல ச்ரத்தையோடும், பக்தியோடும் கொடுப்பவன் நல்ல கதியைப் பெறுவானென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? பகவான் உலகங்களால் புகழப்பட்ட ப்ரஹ்மாதிகளாலும், புகழத் தகுந்தவைகளும், பக்தர்களின் ஹ்ருதய கமலத்தில் (இருதய தாமரையில்) அமைந்திருப்பவைகளுமாகிய தன் பாதங்களால் அவளுடைய அங்கத்தை மிதித்தேறி ஸ்தன்ய பானம் செய்தான் (முலைப்பால் அருந்தினான்). அந்த ராக்ஷஸியும், மஹானந்த ஸ்வரூபனான அப்பரமபுருஷனோடு ஒத்திருக்கையாகிற முக்தியைப் பெற்றாள். 

(குறிப்பு – மஹாபலிக்கு, “ரத்னமாலா” என்று ஒரு மகள் இருந்தாள். மஹாபலி, வேள்வி நடத்திய போது, அவளும் அங்கிருந்தாள்!. யாக சாலையில், பகவான், வாமனராக, தேஜோ மயமாக நுழைந்த போது, ரத்னமாலா, அந்த தெய்வக் குழந்தையின் அழகால் கவரப்பட்டாள்!. “ஆஹா!.. இந்தப் பாலகன் என் மகனாக இருந்தால்...” என்று ஒரு எண்ண ஓட்டம் அவள் மனதுள் ஓடியது. ஆனால், அந்தோ!!. பகலுக்கும் இரவுக்கும் எத்தனை தூரம்?!!.. சிறிது பொழுதில், வாமனன், திரிவிக்ரமனானான்!!. மஹாபலி பாதாளம் சென்றான்!. பகவான், தன் தந்தையை வேடமிட்டு வஞ்சித்ததாக எண்ணிக் கோபம் கொண்டாள் ரத்னமாலா!!. அவளது கோபம், சீற்றமாக உருவெடுத்தது!!. தந்தையை வஞ்சித்தவனைக் கொல்ல வேண்டுமென்பதாக அவள் எண்ணம்!!.) அந்தப் பிறவி முடிந்தது!!. தொடர்ந்த பிறவியிலும் அசுரத் தன்மையுடனேயே பிறந்தாள்!!. “பவித்ரமற்றவள்” என்னும் பொருள் கொண்ட, “பூதனா” என்ற  பெயர் கொண்டாள்!. கம்சனின் சேவகர்களுள் முதன்மையானவள் ஆனாள்!!. இது பூதனையின் வரலாறு)

“உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்” 

என்று நம்மாழ்வார் பாடியபடி விஷப்பாலைக் கொடுத்துக் கண்ணனை அழிக்க வந்த பூதனையின் விஷப்பாலோடு சேர்த்து அவளது உயிரையும் உண்டு பூதனையை வதைத்தான் கண்ணன். 

இந்த லீலை நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன?

(பூதனை என்பவள்தான் அவித்யை எனப்படும் அறியாமை. நம் கர்ம வினைகளின் விளைவாக வந்த அந்த அறியாமை நம் ஞானத்தை மழுங்கச் செய்து பிறவிப் பிணியில் நம்மை அழுத்துகிறது. அவளது இரண்டு மார்பகங்கள் நான் என்னும் அஹங்காரமும், எனது என்னும் மமகாரமும் ஆகும். அறியாமையிலிருந்து தோன்றும் அஹங்காரமும் மமகாரமும் விஷம் போன்றவையாகும். இதிலிருந்து வெளிவர என்ன வழி என்றால், கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தோமாகில், அவன் பூதனையின் இரண்டு மார்பகங்களையும் உறிஞ்சியது போல், நம்முடைய அஹங்கார மமகாரங்களை முழுமையாக உறிஞ்சி எடுத்து, அந்தப் பூதனையை அழித்தது போல் நமது அறியாமையையும் அழித்து நமக்குப் பேரின்ப வாழ்வாகிய முக்தியை அருளுவான்.)

அந்தப் பகவானால் பருகப்பட்ட முலைப்பால்களையுடைய பசுக்களும், தாய்மார்களும், முக்தியைப் பெற்றார்களென்பதில் ஸந்தேஹம் உண்டோ? அந்தப் பசுக்களும், தாய்மார்களும் பிள்ளையென்னும் ஸ்னேஹத்தினால் முலைப்பால்களை மேன்மேலெனப் பெருக்க அவற்றையெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணன் நிரம்பப் பானம் செய்தானல்லவா? மோக்ஷம் முதலிய ஸமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுப்பதற்காகவன்றோ பகவான் தேவகிக்குப் பிள்ளையாக வந்து பிறந்தான். 

மன்னவனே! ஸ்ரீ க்ருஷ்ணனை ஓயாமல் பிள்ளையென்று பாவித்துக் கொண்டிருக்கிற அவன் தாய்மார்களுக்கு, தேஹாத்ம ப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்ற மனக்கலக்கம்) முதலிய அஜ்ஞானத்தினால் (அறியாமையினால்) விளைகிற ஸம்ஸாரம் மீளவும் உண்டாகாது. 

இடையர்கள், அந்தப் பிணப்புகையின் வாஸனையை முகர்ந்து “இதென்ன ஆச்சர்யம்! இதற்கு இப்படிப்பட்ட பரிமளம் எப்படி வந்தது” என்று மொழிந்து கொண்டே, இடைச்சேரியில் நுழைந்தார்கள். மதுரையினின்று வந்த நந்தன் முதலியவர் பூதனை வந்தது முதலியதையும், அவள் மரணம் அடைந்ததையும், குழந்தை க்ஷேமமாயிருப்பதையும் கேட்டு, மிகவும் வியப்புற்றார்கள். தேசாந்தரம் போய்வந்த ஆழ்ந்த மனமுடைய நந்தன், புதல்வனை எடுத்து உச்சி மோந்து, மிகுதியும் ஆநந்தம் அடைந்தான். 

பூதனை மோக்ஷம் அடைந்த இந்த வ்ருத்தாந்தத்தையும், ஸ்ரீ க்ருஷ்ணனுடைய அற்புதச் செயலையும், மனவூக்கத்துடன் கேட்கும் புருஷன், பூமியைப் பாதுகாக்கும் பொருட்டு அவதரித்த பரமபுருஷனாகிய அந்த ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் பக்தி உண்டாகப் பெறுவான். 

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக