தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஏழாவது அத்தியாயம்
(சகடாஸுரனை முறித்தலும், த்ருணாவர்த்தனை மாய்த்தலும், வாயில் விச்வரூபம் காட்டுதலும்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- எங்கும் நிறைந்த பரமபுருஷனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு துஷ்டர்களைத் தொலைப்பது, அவர்களுக்கு மோக்ஷம் கொடுப்பது முதலியவற்றையும் மற்றும் பல செயல்களையும் செய்து கொண்டும், இடையர்களுக்கும், இடைச்சிகளுக்கும் ஸுகத்தை விளைத்துக் கொண்டும், கோகுலத்தில் வளர்ந்து வந்தான்.
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் தன்மையனும், ஸர்வலோக (எல்லா உலகங்களையும்) நியாமகனுமாகிய (நியமிப்பவனுமான) பகவான், மத்ஸ்யம் முதலிய எந்தெந்த அவதாரங்களால் எந்தெந்தச் செயல்களைச் செய்தானோ, அவையெல்லாம் செவிக்கினியவைகளும், மனத்திற்கு மஹா ஆனந்தத்தை விளைப்பவைகளுமாய் இருக்கின்றன. ஆயினும், எவனேனும் இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய சேஷ்டையைக் கேட்பானாயின், அவனுடைய மனச்சோர்வும், சப்தாதி விஷயங்களைப் பற்றின பலவகை விருப்பமும், பறந்தோடுகின்றன. சீக்ரத்தில் மனம் பரிசுத்தமாகின்றது. பகவானிடத்தில் ப்ரீதியும், அவன் பக்தர்களிடத்தில் ஸ்னேஹமும் உண்டாகின்றன. ஆகையால், உமக்குத் திருவுள்ளமாயின், அழகியதான அந்த ஸ்ரீக்ருஷ்ண சரித்ரத்தையே எமக்குச் சொல்வீராக. மனுஷ்யனாய் வந்து அவதரித்து, மனுஷ்ய ஜாதியை அனுஸரித்து நடக்கிற ஸ்ரீக்ருஷ்ணன், இன்னம் என்னென்ன அற்புதமான பாலசேஷ்டைகளைச் செய்தானோ, அவற்றையும் எங்களுக்கு மொழிவீராக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால் உத்தானத்தைப் (உத்தானம் – எழுந்து நிற்கை) பற்றின உத்ஸவத்திற்காக ஸ்னானம் நடத்துகிற அன்று, ஜன்ம நக்ஷத்ரமாகிய ரோஹிணி நக்ஷத்ரமும் சேருகையில், அம்மஹோத்ஸவத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிற கோபஸ்த்ரீகளோடு கூடிய நல்லொழுக்கமுடைய யசோதை, பல வாத்ய கோஷங்களுடனும், ப்ராஹ்மணர்கள் வந்தோதுகிற மந்த்ர கோஷங்களுடனும், தன் புதல்வனுக்கு அபிஷேகம் செய்தாள். நந்தன் மனைவியான யசோதை, அன்னாதிகளையும், வஸ்த்ரங்களையும், பூமாலைகளையும், அவரவர் விரும்புகிற மற்றும் இஷ்ட வஸ்துக்களையும், பசுக்களையும் கொடுத்துப் பூஜிக்கப்பட்ட அந்தணர்களால் ஸ்வஸ்தி வாசனம் செய்வித்து (மங்கள வார்த்தைகள் கூறச்செய்து), மஞ்சனமாட்டி, அங்க ரக்ஷாதிகள் (உடல் உறுப்புக்களுக்கு காப்பு) செய்யப் பெற்றவனும், கண்ணுறக்கமுற்றவனுமாகிய தன் புதல்வனைப் படுக்கவிட்டு, உறங்கப் பண்ணினாள். உதார மனமுடைய அந்த யசோதை, உத்தான மஹோத்ஸவத்தில், பெரிய மனக்களிப்புடன் உலாவலுற்று வந்த கோபர்களைப் பூஜித்துக் கொண்டிருக்கையில், தூங்கியெழுந்து அழுகின்ற தன் புதல்வனுடைய அழுகுரலைக் கேளாதிருந்தாள்.
அந்தக் குழந்தை, ஸ்தன்ய பானம் செய்ய (தாய்ப்பால் அருந்த) விரும்பி அழுது கொண்டே, தன் பாதங்களை உயர உதைத்தது. அப்பொழுது, அஸுரனால் ஆவேசிக்கப்பெற்ற சகடத்தின் (வண்டியின்) கீழ் இட்டுத் தொங்குகின்ற தொட்டிலில் சயனித்திருக்கும் சிசுவாகிய (குழந்தையாகிய) ஸ்ரீக்ருஷ்ணனுடைய தளிர் போன்ற ம்ருதுவான பாதத்தினால் உதைப்புண்ட அச்சகடம், அதில் வைத்திருந்த பல ரஸங்கள் அமைக்கப் பெற்ற வெண்கலம் முதலிய பாத்ரங்கள் உடைந்து, சக்ரங்களும், இருசும் (அச்சும்) தலைகீழாக மாறி உருண்டு, நுகத்தடி முறிந்து, கீழ் மேலாய் விழுந்தது. யசோதை முதலிய கோபஸ்த்ரீகளும், உத்தான (குழந்தை எழுந்து நிற்கும்) மஹோத்ஸவத்திற்கு (திருவிழாவிற்கு) வந்த மற்ற மடந்தையர்களும், நந்தன் முதலிய கோபர்களும், அந்த அற்புதத்தைக் கண்டு மனங்கலங்கி “எப்படி சகடம் (வண்டி) தானே தலை கீழாக விழுந்தது?” என்று பேசிக் கொண்டார்கள். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இவ்வாறே மொழிந்து கொண்டு மிகவும் வருந்தி, மதி (புத்தி) மயங்கி, மன வருத்தத்துடன் சுற்றிலும் சூழ்ந்து கொண்டார்கள். அப்பொழுது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பாலகர்கள், சகடம் (வண்டி) விழுந்ததற்குக் காரணம் தெரியாமல், மதி (புத்தி) மயங்கி வருந்துகிற அந்தக் கோபர்களையும், கோபிமார்களையும் குறித்து “இச்சகடம் (வண்டி) அழுகின்ற இக்குழந்தையின் பாதத்தினால் உதைக்கப்பட்டு விழுந்தது; இதில் எந்த ஸந்தேஹமும் இல்லை” என்று மொழிந்தார்கள். அந்தக் கோபர்கள் அதைக் கேட்டும், அறியாத பிள்ளைகளின் சொல்லென்று நம்பவில்லை. அக்குழந்தையின் அளவற்ற பலத்தை அவர்கள் அறியவில்லை. அப்பால் யசோதை, அழுகின்ற அப்புதல்வனை எடுத்துப் பால க்ரஹமென்று (கிரஹ பீடை என்று) சங்கித்து (ஸந்தேஹப்பட்டு) ப்ராஹ்மணர்களை வரவழைத்து ரக்ஷோக்னமான (ராக்ஷஸர்களை அழிக்கும்படியான) மந்த்ரங்களால் ஸ்வஸ்தி வாசனம் செய்வித்து (மங்கள வார்த்தைகள் கூறச்செய்து), ஸ்தன்ய பானம் செய்வித்தாள் (தன் முலைப்பாலைப் பருகச் செய்தாள்).
(கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்னும் அசுரன், மாட்டு வண்டி வடிவில் வந்து தொட்டிலில் கிடக்கும் கண்ணன் மேல் பாய்ந்து கண்ணனை அழிக்கத் திட்டமிட்டான். ஆனால், “பொன்றச் சகடம் உதைத்தாய்” என்று ஆண்டாள் பாடியபடி, தன் திருவடிகளால் உதைத்து அந்தச் சகடாசுரனைச் ஸம்ஹாரம் செய்தான் கண்ணன்.
இது உணர்த்தும் தத்துவம் என்ன?
சகடாசுரனின் வடிவமான மாட்டு வண்டிச் சக்கரம் என்பது நமது பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தைக் குறிக்கிறது. சக்கரம் சுழல்வது போல், “புனரபி ஜனனம் புனரபி மரணம்” என்று இந்தப் பிறப்பு இறப்பு சுழற்சியில் நாம் உழல்கிறோம். கண்ணனின் திருவடிகளை நாம் சரணடைந்தால், அந்தச் சக்கரத்தை உடைத்து நொறுக்கியது போல், நம் பிறவிச் சுழற்சியாகிய சக்கரத்தையும் உடைத்து நமக்குப் பேரின்பப் பெருவாழ்வை அருளுவான்.)
பிறகு, ப்ராஹ்மணர்கள் மனவூக்கத்துடன், எட்டுத்திசைகளிலும் பலிகளை இட்டு, பலிஷ்டர்களான (பலம் பொருந்திய) இடையர்களைக் கொண்டு அந்தச் சகடத்தை (வண்டியை) முன் போலவே ஸ்தாபித்து, அதற்கு வேண்டிய கருவிகளையும் அமைத்து, ஹோமஞ் செய்து, தயிர், அக்ஷதை, குசம் (தர்ப்பை), ஜலம் இவைகளால் அர்ச்சனை செய்தார்கள். நந்தகோபன், அஸுயை, பொய், வஞ்சனை, பொறாமை, ஹிம்ஸை, கர்வம் இவையற்றவர்களும், ஸத்யசீலர்களுமான அந்தணர்கள் செய்யும் ஆசீர்வாதங்கள் ஒரு காலும் வீணாகமாட்டாவென்று தெரிந்து, ப்ராஹ்மணர்களைக் கொண்டு ஸாமவேதம், ருக்வேதம், யஜுர்வேதம் இவற்றைச் சேர்ந்த மந்திரங்களால் ஸம்ஸ்காரம் செய்யப் பெற்றவைகளும் (பண்படுத்தப்பட்ட, தூய்மை செய்யப்பட்டவையும்), பரிசுத்தமான ஓஷதிகள் இடப் பெற்றவைகளுமான ஜலங்களால் குழந்தைக்கு ஸ்னானம் செய்வித்து, ஸ்வஸ்தி வாசனமும் செய்து, மனவூக்கத்துடன் ஹோமமும் செய்வித்து, அந்தணர்களுக்கு அறுசுவைகளாகிற பெருங்குணமுடைய அன்னத்தை அளித்தான். மற்றும், அவன் குழந்தையின் க்ஷேமத்திற்காகப் புதிய வஸ்த்ரம், பூமாலை, பொற்சங்கிலி இவற்றால் அலங்காரம் செய்யப் பெற்றவைகளும், குணங்களெல்லாம் அமைந்தவைகளுமான, பசுக்களை அந்தணர்களுக்குக் கொடுத்தான்.
மந்த்ரங்களை உணர்ந்த அவ்வந்தணர்களும், மனவூக்கத்துடன் அக்குழந்தைக்கு ஆசீர்வாதங்களைச் செய்தார்கள். அப்பொழுது, அவர்கள் செய்த அவ்வாசீர்வாதங்களெல்லாம், ஒரு காலும் பொய்யாகவில்லை. அவையெல்லாம் அவ்வப்படியே நிச்சயமாகப் பலித்தன. நல்லொழுக்கமுள்ள யசோதை ஒரு கால் புதல்வனை இடையில் ஏற்றிச் சீராட்டிக் கொண்டிருக்கையில், திடீரென்று அக்குழந்தை பர்வத (மலை) சிகரம்போலக் கனக்க, பாரத்தினால் வருந்தி, வியப்புற்றுக் குழந்தையைப் பூமியில் வைத்து, உத்பாத (தீய அறிகுறி) சங்கையினால் (ஸந்தேஹத்தினால்) உலகத்தின் செயல்களுக்கெல்லாம் நிர்வாஹகனான (நியமிப்பவனான) பரமபுருஷனை த்யானித்தாள்.
அப்பொழுது, த்ருணாவர்த்தனென்னும் பெயருடைய ஓர் அஸுரன் கம்ஸனால் தூண்டப்பட்டு, சுழற்காற்றாக வந்து, வெறுந்தரையில் உட்கார்ந்திருக்கின்ற அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போயினான். அவன் வரும்பொழுது, கோகுலம் முழுவதும் சுழற்காற்றாக வீசி, தூட்களால் இடைச்சேரியிலுள்ள எல்லாருடைய கண்களையும் மறைத்து, பயங்கரமான பெரிய சப்தத்தினால் பத்துத் திசைகளையும் நிறைத்துக் கொண்டு வந்தான். அப்பொழுது, கோகுலம் முழுவதும் ஒரு முஹூர்த்த காலம் தூளாலும், இருட்டினாலும், நிறைந்திருந்தது. அக்காலம், யசோதை தன் புதல்வனை எவ்விடத்தில் வைத்தாளோ, அவ்விடத்தில் அவனைக் காணவில்லை. மற்றும், அப்பொழுது சுழற்காற்றாக வீசுகின்ற த்ருணாவர்த்தனால் எறியப்பட்ட பெருமணல்களால் பீடிக்கப்பட்டு, மதிமயங்கி, எவனும் தன்னையாவது, பிறனையாவது, காணப் பெறவில்லை.
இவ்வாறு, மிகவும் கொடிய சுழற் காற்றினால் விடா மழை போலத் தூள் பெய்து கொண்டிருக்கையில், தாயான யசோதை, பிள்ளை போன வழியைக் காணாமல், பெண் பிள்ளையாகையால் மிகவும் மன இரக்கத்திற்கிடமாய் இருக்குமாறு அப்புதல்வனை நினைத்துப் பூமியில் விழுந்து, கன்றை இழந்த பசுவைப் போல் கதறினாள். அப்பால், சுழல் காற்று மண் மழையின் வேகம் இவை சிறிது குறைந்திருக்கையில், அவளுடைய அழுகுரலைக் கேட்டுக் கோபிகைகள் மிகவும் மனவருத்தமுற்று, முகத்தில் கண்ணீர் பெருகப் பெற்று, அவ்விடம் வந்து, அந்த நந்தகுமாரனைக் காணாமல் அழுதார்கள்.
சுழற்காற்றின் உருவங்கொண்ட த்ருணாவர்த்தன், ஸ்ரீக்ருஷ்ணனைப் பறித்துக் கொண்டு போகும் பொழுது வேகம் அடங்கப்பெற்று, மிக்க வருத்தத்துடன் ஆகாயம் சென்று, ஸ்ரீக்ருஷ்ணன் பெரும் பாரமாயிருக்கையால், அவனை தரித்துக்கொண்டு, அப்புறம் போக முடியாதிருந்தான். அந்தப் பாலகன், மஹாபலிஷ்டனாகிய தனக்கும் தரிக்க முடியாமல் பெரும் பளுவாயிருக்கையால், கல்லென்றே நினைத்து, அக்குழந்தையால் கழுத்தில் திடமாகப் பிடியுண்டு, அவனை விடுவிக்கவும் முடியாதிருந்தான். கழுத்தில் பிடித்துக் கொண்டதனால் செயலற்றுக் கண்கள் பிதுங்கி, வெளிவரப் பெற்ற அஸுரன், இன்னது இனியதென்று தெரியாதபடி சில பேச்சுக்களைப் பேசி ப்ராணன்களை இழந்து, குழந்தையுடன் கோகுலத்தில் வந்து விழுந்தான். ஆகாயத்தினின்று பாறையின் மேல் விழுந்து, அவயவங்களெல்லாம் சிதறப் பெற்று, ருத்ரனுடைய பாணத்தினால் பிளவுண்ட த்ரிபுரம் போல, மிகவும் பயங்கரமாயிருக்கின்ற அவ்வஸுரனை, அங்குக் கூட்டங் கூடி அழுது கொண்டிருக்கிற கோபிகைகள் கண்டார்கள்.
அப்பால் அவர்கள், அவ்வஸுரனுடைய மார்பில் தொங்கிக் கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனை எடுத்துக் கொண்டு வந்து, தாயான யசோதையிடம் கொடுத்து வியப்புற்றார்கள். அஸுரனால் ஆகாய மார்க்கத்தில் கொண்டு போகப் பெற்றும் க்ஷேமமாய் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற புதல்வனைப் பெற்று, கோபிமார்களும், நந்தன் முதலிய கோபர்களும் மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்கள். “ராக்ஷஸன் கொல்லுவதற்குக் கொண்டு போயும், இப்பாலகன் க்ஷேமமாய் மீண்டு வந்தானே! ஆ! இதென்ன ஆச்சர்யம்! கொடுந்தன்மையுடைய துஷ்டன், தன்னுடைய பாபத்தினாலேயே அடியுண்டு மாண்டு போனான். ஸாதுவோவென்றால், பிறரையும் தன்னைப் போல் ஸமமாகப் பார்க்கும் தன்மையனாகையால், பயத்தினின்று விடுபட்டான்.”
(யசோதை கண்ணனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்த போது, திடீரென்று வந்த புயல்காற்று கண்ணனைத் தூக்கிச் சென்றது. அந்தப் புயல் தான் கம்சனால் ஏவப்பட்ட திருணாவர்த்தாசுரன் என்னும் அசுரன். ஆனால் கண்ணனோ, தனது எடையை அதிகரித்துக் கொண்டே போகவே, பாரம் தாங்க முடியாமல், விழி பிதுங்கி, ரத்தம் கக்கிப் பூமியில் விழுந்து மாண்டான் அந்த அசுரன்.
இது உணர்த்தும் தத்துவம் என்ன?
நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ரஜோ குணம் தான் இந்த திருணாவர்த்தாசுரன். அதிகமான கோபம், காமம் கொண்டு செயல்படுவதை ரஜோ குணம் என்று குறிப்பிடுவார்கள். திருணாவர்த்தாசுரன் கண்ணனையே தூக்கிச் சென்றது போல், ரஜோ குணத்தால் ஏற்படும் காமமும், கோபமும் நம் பக்தியையும், நற்குணங்களையும் நம்மிடமிருந்து ஒரு நொடியில் அபகரித்துச் சென்று விடும். கண்ணனின் திருவடிகளை நாம் பற்றினால், திருணாவர்த்தாசுரனை அழித்தாப்போலே, ரஜோ குணத்தை அழித்து, நம் மனதில் தூய பக்தி வளரும்படி அருள்புரிவான்.)
“நாம் என்ன தவம் செய்தோமோ ? என்ன பகவத் ஆராதனம் செய்தோமோ? குளம், கிணறு வெட்டுவித்தல் முதலிய பூர்த்த கர்மங்கள் என்னென்ன செய்தோமோ? என்ன யாகம் செய்தோமோ? என்ன தான தர்மம் செய்தோமோ? நாம் பூர்வ ஜன்மத்தில் ப்ராணிகளிடத்தில் த்ரோஹ (கெடுதல் செய்யும்) புத்தியின்றி எல்லாவற்றிலும் நட்புடன் இருந்து, என்ன புண்யம் செய்தோமோ? ஏனென்றால், குழந்தை ராக்ஷஸனிடம் அகப்பட்ட பின்பு மீளவும் பிழைத்து வர வழியுண்டோ? அவ்வாறு மரணம் அடைந்தானென்றே நிச்சயிக்க வேண்டிய இப்பாலகன், தன் பந்துக்கள் அனைவரும் ஸந்தோஷம் அடையும்படி தெய்வாதீனமாய் பிழைத்து வந்து சேர்ந்தானல்லவா? இது நம்முடைய புண்ய பலமேயன்றி வேறில்லை” என்ற இவ்வுரைகளையும், மற்றும் பல உரைகளையும், அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நந்தகோபன், ப்ருஹத்வனத்தில் (பெரும் காட்டில்) இத்தகைய அற்புதங்களையும், இன்னும் பல அற்புதங்களையும், பலவாறு கண்டு, வியப்புற்று மீளவும், வஸுதேவன் மொழிந்தது உண்மையேயாயிற்று என்று புகழ்ந்தான்.
ஸ்ரீக்ருஷ்ணன் கொட்டாவி விடும் பொழுது, விச்வரூபம் காண்பித்தல்.
ஒருகால் யசோதை, குழந்தையை மடியில் எடுத்து விட்டுக் கொண்டு, பிள்ளையிடத்திலுள்ள ஸ்னேஹத்தினால் பால் பெருகி வருகின்ற முலையை அவனுக்கு ஊட்டினாள். மன்னவனே! தாயான அம்மாதரசி, வயிறார ஸ்தன்ய பானஞ் செய்த அப்புதல்வனுடைய அழகிய புன்னகையோடு கூடின முகத்தைப் பார்த்துச் சீராட்டிக் கொண்டிருக்கையில், கொட்டாவி விடுகின்ற அக்குழந்தையின் வாயில் ஜகத்தையெல்லாம் கண்டாள். ஆகாயம், த்யாவா (ஸ்வர்க்கம்), பூமி, நக்ஷத்ரங்களின் தொகுதி, திசைகள், ஸூர்யன், சந்த்ரன், அக்னி, காற்று, ஸமுத்ரங்கள், த்வீபங்கள், பர்வதங்கள் (மலைகள்), நதிகள், வனங்கள், ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான பூதங்கள், ஆகிய இவற்றையெல்லாம் தன் பிள்ளை வாயுள் கண்டாள். மன்னவனே! மான் குட்டியின் கண்கள் போன்ற கண்களையுடைய அந்த யசோதை, புதல்வனுடைய முகத்தில் இவ்வாறு ப்ரபஞ்சத்தையெல்லாம் கண்டு, உடம்பு நடுங்கப் பெற்று, கண்களை மூடிக் கொண்டு, மிகவும் வியப்புற்றாள்.
ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.