சனி, 28 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 224

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – எட்டாவது அத்தியாயம்

(நாமகரணமும், பாலக்ரீடையில் தாய்க்கு விச்வரூபம் காட்டுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! யாதவர்களுக்குப் புரோஹிதரும், மஹா தபஸ்வியுமாகிய கர்க்க முனிவர், வஸுதேவனால் தூண்டப்பட்டு, நந்தகோகுலத்திற்குச் சென்றார். நந்தன் அவரைக் கண்டு மிகவும் ஸந்தோஷமுற்று, எழுந்து எதிர்கொண்டு, நமஸ்காரம் செய்து, கைகூப்பி ஸாக்ஷாத் பகவானென்னும் புத்தியுடன் பூஜித்தான். அந்த நந்தன், அதிதி ஸத்காரம் (விருந்து உபசாரம்) செய்யப் பெற்று ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவரை, உண்மையும், ப்ரியமுமான வார்த்தையினால் மனக்களிப்புறச் செய்து, மீளவும் மொழிந்தான்.

நந்தன் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! விருப்பங்களெல்லாம் நிறைவேறப்பெற்று நிறைவாளராயிருக்கின்ற (வேண்டியது அனைத்தும் அடையப்பெற்றவராய் இருக்கின்ற) உமக்கு, எங்களால் என்ன ஆக வேண்டியிருக்கிறது? ஒன்றுமில்லை. நான் நிறைவாளனாயின், “தனிகர்களின் (பணக்காரர்களின்) வாசலைத் தேடி ஏன் வருகிறேன்?” என்றால், உம்மைப்போன்ற பெரியோர்கள், தங்கள் ஆச்ரமத்தினின்று வெளியில் திரிவது, சப்தாதி விஷயங்களில் மனவிருப்பமுற்று, மன இரக்கத்திற்கிடமான எங்களைப்போன்ற க்ருஹஸ்தர்களின் க்ஷேமத்திற்காகவேயன்றி, வேறு ப்ரயோஜனத்திற்காகவன்று. 

இந்த்ரியங்களுக்கு விஷயமாகாத வஸ்துக்களின் ஸ்வரூபத்தை அறிவதற்கு ஸாதனமாயிருப்பதும், க்ருஹ, நக்ஷத்ரங்களின் சாரங்களைத் தெரியப்படுத்துவதுமாகிய ஜ்யோதிஷ் சாஸ்த்ரத்தை நீரே நேராக இயற்றினீர். இந்த ஜ்யோதிஷ் சாஸ்த்ரத்தினால் மற்ற புருஷர்களும் கீழ் நடந்தது மேல் வரப்போகிறது இவற்றை அறிகின்றார்கள். ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! ஆகையால், நீர் இந்தப் பிள்ளைகளுக்கு நாமகரணம் (பெயர் சூட்டுதல்) முதலிய ஸம்ஸ்காரங்களைச் செய்ய உரியவராயிருக்கின்றீர். மனுஷ்யர்கள் அனைவர்களுக்கும், ப்ராஹ்மணன் ஜன்மத்தினால் குருவல்லவா? ஆகையால், நீர் இதை நடத்தியருள வேண்டும்.

கர்க்கர் சொல்லுகிறார்:- நான், யாதவர்களுக்கு ஆசார்யனென்று பூமியெங்கும் ப்ரஸித்தனாயிருப்பவன். நான், உன் பிள்ளைக்கு நாம கரணாதி (பெயர் சூட்டுதல் முதலிய) ஸம்ஸ்காரம் செய்வேனாயின், பாபிஷ்டமான மதியுடைய (பாப புத்தி உடைய) கம்ஸன், உன் பிள்ளையையும் தேவகியின் பிள்ளையென்றே நினைப்பான். “யது குலாசார்யனாகிய உம்மால் ஸம்ஸ்காரம் செய்ததைக் கொண்டு, ஒருகால் யாதவ குமாரனென்று அறிவானாயினும், வஸுதேவனுடைய பிள்ளையென்றும், தேவகியிடத்தில் பிறந்தவனென்றும், அக்கம்ஸன் எப்படி அறியமுடியும்?” என்றால், சொல்லுகிறேன். 

உனக்கும், வஸுதேவனுக்கும், உள்ள ஸ்னேஹம் ப்ரஸித்தமே. இது கம்ஸனுக்குத் தெரியாததன்றே. மற்றும், அக்கம்ஸன், அசரீரி வாக்கை நினைத்தும், தேவகியின் பெண்ணான யோகமாயையின் வார்த்தையைக் கேட்டும், “தேவகியின் எட்டாவது கர்ப்பம் பெண்ணாயிருப்பதற்கு உரியதன்று. பிள்ளையாகவே இருக்கவேண்டும். வஸுதேவன் என்னிடத்தில் பயந்து, தன் பிள்ளையைத் தன் ஸ்னேஹிதனான நந்தனிடம் ஒருவர்க்கும் தெரியாமல் வைத்திருக்கிறான். ஆகையால் தான் யாதவர்களுக்குப் புரோஹிதனான கர்க்கன், அப்புதல்வனுக்கு நாம கரணாதி ஸம்ஸ்காரங்களைச் செய்தான். தேவகியின் புதல்வி “உன் சத்ரு ஓரிடத்தில் வளர்கிறான் என்று சொன்னதும் அமைகின்றது” என்று சிந்தித்து, சிறிதும் ஸந்தேஹமின்றி, உன் புதல்வனைக் கொன்றாலும் கொன்று விடுவான். அது நமக்குப் பெரிய அநீதியாம்.

நந்தன் சொல்லுகிறான்:- இந்தக் கோகுலத்தில், என்னுடைய பந்துக்களுக்கும் தெரியாமல், ஏகாந்தமான (தனியான) இடத்தில், ஸ்வஸ்திவாசனம் செய்து (மங்கள வார்த்தைகள் கூறி), த்விஜாதிகளுக்கு (இரு பிறப்பினர்களான ப்ராஹ்மணாதிகளுக்கு) அவச்யமாய் நடத்த வேண்டிய ஸம்ஸ்காரத்தை மாத்ரம் நடத்துவீராக, வாத்ய கோஷம் முதலியன எவையும் வேண்டியதில்லை. 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ராஹ்மண ச்ரேஷ்டராகிய அந்தக் கர்க்கர், நந்தனால் வேண்டப்பட்டு, தானே செய்ய நினைத்திருந்தாராகையால், ஏகாந்தமான (தனியான) இடத்தில் ஒருவர்க்கும் தெரியாமல் மறைந்திருந்து, பாலகர்களுக்கு அந்த நாமகரண (பெயர் சூட்டும்) ஸம்ஸ்காரத்தை நடத்தி, நந்தனைக் குறித்து இவ்வாறு மொழிந்தார்.

கர்க்கர் சொல்லுகிறார்:- இந்த ரோஹிணியின் புதல்வன், நண்பர்களைத் தன் குணங்களால் களிப்புறச் செய்வானாகையால், ராமனென்று கூறப்படுவான். மிகுந்த பலமுடையவனாகையால், இவனைப் பலனென்றும், ஒரு காலத்தில் யாதவர்களுக்குள் ஒருவர்க்கொருவர் மனஸ்தாபம் (புரிதலில் குறைவு) நேருகையில் அவர்களை ஸமரஸப்படுத்தி ஒன்றுசேர்க்கப் போகிறானாகையால், ஸங்கர்ஷணனென்றும் வழங்குவார்கள். யுகங்கள் தோறும், திருவுருவங்களை ஏற்றுக்கொள்கிற இந்த உன் புதல்வனுக்கு, ஒவ்வொரு யுகத்தில் ஒரு வர்ணமாக, வெளுப்பு, சிவப்பு, மஞ்சள் என்ற இம்மூன்று வர்ணங்கள் உண்டாயிருந்தன. இப்பொழுது, கறுப்பு வர்ணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஆகையால், இவன் க்ருஷ்ணனென்று பெயர் பெறுவான். 

அழகனாகிய இப்புதல்வன், முன்பு ஒரு காலத்தில் வஸுதேவனுக்குப் பிள்ளையாகப் பிறந்திருந்தானாகையால், அறிஞர்கள் இவனை வாஸுதேவனென்று சொல்லுகிறார்கள். உன் புதல்வன், குணங்களுக்கும், செயல்களுக்கும், பொருந்தினவைகளான பல நாமங்களும், பல உருவங்களும் உடையவன். அவற்றையெல்லாம், என்னைப்போன்ற முனிவர்கள் அறிவார்களேயன்றி, மற்றவர்கள் அறிய மாட்டார்கள். இவன், உங்களுக்கு ஐஹிகம் (இந்த உலக ஸுகங்கள்), ஆமுஷ்மிகம் (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக ஸுகங்கள்) என்கிற இரு வகையான நன்மையையும் செய்வான்; கோபர்களையும், கோகுலத்தையும் களிப்புறச் செய்வான். இப்புதல்வனால், நீங்கள் பல வருத்தங்களையும் அனாயாஸமாகக் கடப்பீர்கள். 

கோகுல நாதனே! முன்பு ஜகத்தெல்லாம் அராஜகமாயிருக்கையில் (அரசன் இல்லாமல் இருக்கையில்), துஷ்டர்களால் (கொடியவர்களால்) பீடிக்கப்பட்ட ஸாதுக்கள், இவனால் பாதுகாக்கப் பெற்று, உத்ஸாஹத்துடன் வளர்ந்து, அந்தத் துஷ்டர்களை எல்லாம் வென்றார்கள். மிகுந்த பாக்யமுடையவனே! இந்த உன் பிள்ளையிடத்தில் ப்ரீதி செய்யும் மனுஷ்யர்கள், விஷ்ணுவின் பக்ஷத்தைத் தொடர்ந்தவர்கள் அஸுரர்களால் அவமதிக்கப்படாதிருப்பதுபோல, எத்தகைய சத்ருக்களாலும், பரிபவிக்க (அவமதிக்க) முடியாதிருப்பார்கள். நந்தனே! ஆகையால், இந்த உன் புதல்வன் குணம், செல்வம், புகழ், ப்ரபாவம் இவைகளால் நாராயணனோடு ஒத்தவன். இவனை மனவூக்கத்துடன் பாதுகாத்து வருவாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு கர்க்கர் தனக்கு மொழிந்து தன் க்ருஹத்திற்குப் போகையில், பிறகு நந்தன் ஸந்தோஷமுற்று, தன் விருப்பங்களெல்லாம் கைகூடின என்று நினைத்தான். இப்படி சிலகாலம் கழிகையில், ராமனும், கிருஷ்ணனும் ஆகிய இருவரும் கோகுலத்தில் முழந்தாள்களாலும், கைகளாலும், விளையாடத் தொடங்கினார்கள். கோகுலத்தின் சேறுகளில் பாதங்களை இழுத்துக் கொண்டு, அப்பாதங்களில் அணிந்த சதங்கைகளின் கோஷத்தினால் அழகாயிருக்குமாறு தவழ்ந்து, செல்கின்ற அந்த ராம, கிருஷ்ணர்கள், அந்தக் கால் சதங்கைகளின் த்வனியைக் (ஒலியைக்) கேட்டு, மனமகிழ்ந்து, வீதியில் நடையாடும் ஜனங்களைத் தொடர்ந்து, சில அடிகள் போவதும், ஒன்றுமறியாத குழந்தைகள் பயப்படுவது போலப் பயந்து தாய்மார்களிடம் திரும்பி வருவதுமாகி, விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

அவர்களின் தாய்மார்களான ரோஹிணி, யசோதைகள் மன இரக்கத்தினால் ஸ்தனங்களில் (முலைகளில்) பால் பெருகப்பெற்று, சேறாகிற அங்க ராகத்தினால் அழகியர்களான தம் புதல்வர்களைக் கைகளால் வாரியெடுத்து, மார்பில் அணைத்துக் கொண்டு, முலை கொடுத்து, அவர்கள் ஸ்தன்ய பானஞ் செய்கையில் (தாய்ப்பால் பருகுகையில்), அழகிய புன்னகையும், சிறிய பல் முளைகளும் அமைந்த அக்குழந்தைகளின் முகத்தைக் கண்டு பெருங்களிப்புற்றார்கள். பெண்டிர்கள் பார்த்துக் களித்து வியப்புறும்படியான குமார லீலைகளையுடைய அந்த ராம, க்ருஷ்ணர்கள்,  கோகுலத்துள் கன்றுகளின் வால்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றால் இங்கு மங்கும் இழுக்கப்பட்டு விளையாடுகையில், கோபிகைகள் வீட்டு வேலைகளையெல்லாம் துறந்து, வந்து அதைக் கண்டு சிரித்து, மனக்களிப்புற்றார்கள். விளையாட்டில் மிகவும் விருப்பமுற்று, நின்ற இடத்தில் நிலைகொள்ளாதபடி முழுவதும் தவழ்ந்தோடுகின்ற அக்குழந்தைகளை, மான் முதலிய கொம்புள்ள ஜந்துக்கள், அக்னி,  நாய் முதலிய கோரையுள்ள ஜந்துக்கள், சர்ப்பங்கள், மயில் முதலிய பஷிகள், ஜலம், முட்கள் இவற்றினின்று தடுக்கவும், அதே ஸமயத்தில் வீட்டு வேலைகளைச் செய்யவும் முடியாமல் தாய்மார்களான ரோஹிணி, யசோதைகளிருவரும் மிகவும் மனச்சோர்வடைந்தனர். 

ராஜ ச்ரேஷ்டனே! ராம, க்ருஷ்ணர்கள், ஸ்வல்ப (குறைந்த) காலத்திற்குள்ளாகவே ஒரு கால் முழந்தாள்களாலும், ஒரு கால் பாதங்களாலும்  கோகுலம் முழுவதும் விரைந்து திரியத் தொடங்கினார்கள். பிறகு, மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன் தன்னோடொத்த வயதுடைய இடைப் பிள்ளைகளோடும், பலராமனோடும், இடைச்சேரியிலுள்ள  மடந்தையர்களுக்கு மனக்களிப்பை விளைத்துக் கொண்டு, விளையாடினான். 

கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகியதான குழந்தைப் பருவ லீலைகளைக் கண்டு, அவனுடைய தாயான யசோதையிடம் வந்து, அவள் செவிப்பட இவ்வாறு மொழிந்தார்கள்.

கோபிகைகள் சொல்லுகிறார்கள்:- ஒருகால் நாம் கவனிக்காத ஸமயத்தில் கன்றுகளை அவிழ்த்து விடுகிறான். அவற்றிற்குடையவர்கள் வேண்டாமென்று முறையிடுகையில், அதைக் கேட்டுச் சிரிக்கின்றான். ருசியுள்ள தயிர், பால்களைத் திருடிச் சாப்பிடுகிறான். (இவனுக்கு வேண்டுமானால் கொடுக்கமாட்டோமா? இவன் திருட வேண்டுமா? கொடுத்தாலும், அதை உபேக்ஷித்து (பொருட்படுத்தாது), திருடியே சாப்பிடப் பார்க்கிறான்) திருடுவதற்குப் பல உபாயங்கள் செய்கிறான். தான் சாப்பிடுவதற்கு முன்னமே, குரங்குகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறான். அவை த்ருப்தி அடைந்து தான் கொடுப்பதை சாப்பிடாது இருக்குமாயின் பானையை உடைத்து விடுகிறான். ஒருகால், தயிர், வெண்ணெய் முதலியவை எவையும் அகப்படாது போமாயின், எங்கள் மேல் கோபித்துப் படுக்கையில் படுத்துறங்கும் குழந்தைகளை அழமூட்டி விட்டுப் போகின்றான். உயரத்தில் வைத்திருக்கும் தயிர், வெண்ணெய் முதலியவை கைக்கெட்டாதாயின், மணை, உரல் முதலியவற்றைக் கொண்டு வந்து போட்டு, அவற்றின் மேலேறி, எடுப்பதற்கு உரிய உபாயங்களைச் செய்கின்றான். அப்படி செய்தும் எட்டாத பக்ஷத்தில், பாத்ரங்களில் வைத்திருக்கும் தயிர், வெண்ணெய் முதலியவற்றை சாப்பிட விரும்பி, பாத்ரங்களில் கல் முதலியவற்றை வீசியெறிந்து, ஓட்டை பண்ணுகிறான். இவன் அந்த உபாயங்களெல்லாம் நன்றாகக் கற்றுணர்ந்தவன். 

இருட்டறையில் சென்று, திவ்ய ரத்னங்களால் அலங்காரஞ் செய்யப்பெற்று, ஒளியினால் வஸ்துக்களை விளங்கச் செய்வதுமாகிய தன்னுடம்பின் வெளிச்சத்தினாலேயே அங்குள்ளவைகளைக் கண்டறிகிறான். கோபிகைகள் வீட்டு வேலைகளில் ஊக்கமுற்றிருக்கிற ஸமயம் பார்த்து நுழைந்து, இவ்வாறு பற்பல சேஷ்டைகள் செய்கின்றான். இவ்வாறு செய்வதைக் கண்டு, “இவன் திருடன்” என்று சொல்வோமாயின், “நீ திருடி” என்னுமிவை முதலிய பல தீரவாதங்களைப் பேசுகிறான். நன்கு மெழுகி அலங்காரஞ் செய்த வீட்டில், மூத்ரம் பெய்வது முதலியன செய்கின்றான். திருட்டுக்கு வேண்டிய உபாயங்களால் பல கார்யங்கள் செய்திருப்பினும், உன்னருகாமையில் ஒன்றுமறியாத ஸாது போல் இருக்கிறான்.

(வெண்ணெய் என்பது நம் உள்ளத்தைக் குறிக்கிறது. பானை நம் உடலைக் குறிக்கிறது. நம் உடலாகிய பானையிலிருந்து உள்ளமாகிய வெண்ணெயைக் கண்ணன் திருடும் அழகைத் திருப்பாணாழ்வார் வெகு அழகாக,

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!”

என்று பாடினார். 

“அன்று ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்து வெண்ணெய் திருடியவன் இன்று அரங்கனாகத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கிறான். அங்கே ஆயர்பாடியில் பானை இருந்தது, வெண்ணெயைக் காணவில்லை. இங்கே அரங்கத்தில் என் உடல் இருக்கிறது, உள்ளத்தைக் காணவில்லை. ஏனெனில் பானையிலிருந்து வெண்ணெயைத் திருடினாற்போல், என் உடலிலிருந்து உள்ளத்தை இந்த அரங்கன் கொள்ளை கொண்டு விட்டான்!” என்று இப்பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

வெண்ணெயைப் போல் வெண்மையான, தூய மனத்துடன் வாழும் அன்பர்களின் மனங்களைக் கவர்ந்து செல்லும் உள்ளம் கவர் கள்வனாகக் கண்ணன் விளங்குவதை இதன்மூலம் அறிய முடிகிறது. ஆனால், வெண்ணெயோ, நம் உடலோ, மனமோ, உயிரோ இவை அனைத்துமே அவனது சொத்து தானே? அவன் சொத்தை அவன் எடுத்துக் கொள்வதை ஏன் திருட்டு என்று சொல்ல வேண்டும்? வெண்ணையைத் திருடியதாலோ, மோர், பாலைத் திருடியதாலோ, நம் மனங்களையும் ஆத்மாக்களையும் திருடியதாலோ, அவனைத் திருடன் என்று குறிப்பிடுவதில்லை. வேறு எதைத் திருடினான் அந்தக் கண்ணன்? வாதிராஜர் விடைகூறுகிறார்:

“ஸ்வபக்த புஞ்ஜார்ஜிதம் பாப வ்ருந்தம் திவானிசம் சோஹரதி ஸ்ம பால:”

“கண்ணன் வெண்ணெய் திருடிய கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்களின் பாபங்களைக் கண்ணன் திருடிச் சென்று விடுகிறான். நாம் செய்த பாபங்கள் அனைத்துமே நம் சொத்து தானே? நம் சொத்தாகிய பாபங்களை அவன் திருடிச் செல்வதால் தான் அவனைத் திருடன் என்று குறிப்பிடுகிறோம்!” என்று இந்த ஸ்லோகத்தில் வாதிராஜர் தெரிவிக்கிறார்.

அனைவருக்கும் விழுந்த அடி 

ஆயர்பாடியில் ஒரு வீட்டில் ஏலக்காய் பால் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மாட்டுக்குப் புண்ணாக்கோடு சேர்த்து ஏலக்காயையும் அதிக அளவில் அவர்கள் கொடுப்பதால், பால் கறக்கும் போதே ஏலக்காய் மணம் கமழுமாம். அந்த ஏலக்காய்ப் பாலைத் திருடுவதற்காக அவ்வீட்டுக்குள் கண்ணன் நுழைந்தான். பாலை எடுத்து அருந்தப் போனான். அதைக் கண்ட அவ்வீட்டு கோபிகை, ஒரு பிரம்பால் கண்ணனை அடித்தாள். அடித்ததும் என்ன ஆனது

பிள்ளைப் பெருமாள் சுவாமி கூறுகிறார்:

“கடிக்கும் பிறை வெவ்வாள் எயிற்றுக் காளியன்மேல்

நடிக்கும் பெரிய பெருமாள் திருவரங்கர் நறைகமழ்பால்

குடிக்கும் களவுக்கு மாறுகொண்டு ஓர் கோபிகை பற்றி 

அடிக்கும் போது பதினால் உலகும் அடிப்பட்டனவே!”

அந்தப் பெண் கண்ணனின் முதுகில் பிரம்பால் அடித்தவாறே, கண்ணனுக்கு வலிக்கவில்லை. ஆனால் பாதாள லோகம் தொடங்கி, சத்திய லோகம் வரை, ஈ எறும்பு தொடங்கி பிரம்மதேவர் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்த அடி விழுந்ததாம். அடிகொடுத்த அந்தப் பெண்ணுக்கும் அடி விழுந்தது. அனைவருக்கும் வலித்தது. இதன்மூலம் அனைத்து உலகங்களும் உயிர்களும் இறைவனுக்கு சரீரம், இறைவன் அனைத்துக்கும் ஆத்மா என்னும் வேதாந்த தத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. “யஸ்ய ப்ருதிவீ சரீரம், யஸ்ய ஆப சரீரம், யஸ்ய தேஜ சரீரம், யஸ்ய ஆத்மா சரீரம்” என்று சேதன - அசேதனங்கள் அனைத்தும் இறைவனுக்கு சரீரம் என்பதை பிருகதாரண்யக உபநிஷத் கூறுகிறது. “ஜகத் ஸர்வம் சரீரம் தே” என்ற ராமாயண சுலோகமும், “தானி ஸர்வாணி தத்வபு:” என்ற விஷ்ணு புராண ஸ்லோகமும், “ஸோபித்யாய சரீராத் ஸ்வாத்” என்ற மனுஸ்மிருதி சுலோகமும், “உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்” என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதே கருத்தைக் கூறுகின்றன. இந்த உடல்-உயிர் உறவு என்னும் வேதாந்தத் தத்துவத்தை இந்த லீலையின் மூலமாக வெகு எளிதில் நாம் புரிந்து கொள்ளும்படிக் கண்ணன் காட்டிவிட்டான்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு கோபிகைகள் வந்து இவர்கள் என்ன சொல்லுவார்களோ என்று பயந்தவன் போலக் கண்கள் நடுங்கப்பெற்று நிற்கின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய அழகிய திருமுகத்தைப் பார்த்துக்கொண்டே, பலவாறு முறையிடப்பெற்ற யசோதை, சிரித்த முகத்துடன் கூடி, ஏன் இப்படி செய்தாயென்று விரட்டவும்கூட விருப்பமுறாதிருந்தாள். (ஒருகால், கோபிகைகள் தனித்தனியே ஸ்ரீக்ருஷ்ணனை அவன் செய்த அபராதத்தைச் சொல்லும் பொருட்டு எடுத்துக்கொண்டு, யசோதையிடம் வந்து, அவன் அவளருகாமையில் இருக்கக் கண்டு, தாங்கள் கொண்டு வந்த க்ருஷ்ணனையும் காணாமல், எல்லாரும் வெட்கமுற்றுத் தத்தம் க்ருஹத்திற்குத் திரும்பிப்போனார்கள்.) 

ஒருகால் விளையாடிக்கொண்டிருக்கிற பலராமன் முதலிய இடைப்பிள்ளைகள் “க்ருஷ்ணன் மண் தின்றான்” என்று தாயான யசோதைக்குச் சொன்னார்கள். அவன் ஹிதத்தை விரும்பி, ஸ்ரீக்ருஷ்ணனைக் கையில் பிடித்துக் கொண்டு விரட்டி, பயத்தினால் நடுங்கி அக்குமிங்கும் மிரள மிரள விழிக்கும் கண்களையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை நோக்கி மொழிந்தாள். “அடக்கமற்ற மதி (புத்தி) உடையவனே! ஒருவர்க்குத் தெரியாமல் ஏன் மண் தின்றனை? உன் நண்பர்களான இப்பிள்ளைகள் சொல்லுகிறார்களே! உன் தமையனாகிய பலராமனும் சொல்லுகிறானே” என்றாள். 

ஸ்ரீக்ருஷ்ணன் அதைக் கேட்டு:- “அம்மா! நான் மண் தின்னவில்லை. இவர்களெல்லாரும் பொய் சொல்லுகிறார்கள். இவர்கள் சொல்லுவது உண்மையாயின், நீ நேரில் என் வாயைக் காண்பாய்” என்றான். இவ்வாறு சொல்லக்கேட்ட யசோதை, “அப்படியானால் வாயைத் திற” என்றாள். விளையாட்டிற்காக மானிடக்குழந்தையாய்த் தோற்றுகின்றவனும், அழியாத ஐச்வர்யமுடையவனும், ஷாட்குண்யபூர்ணனும், தன் பக்தர்களுடைய தீமைகளைப் போக்கும் தன்மையனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், யசோதையால் அவ்வாறு மொழியப்பெற்று, வாயைத் திறந்தான். 

அண்ட சராசரங்களையும் கண்ட யசோதை

அந்த யசோதை, ஜங்கம (அசையும் பொருட்கள்) ஸ்தாவரங்களும் (அசையாத பொருட்கள்), ஆகாயமும், திசைகளும், பர்வதங்கள், த்வீபங்கள் ஸமுத்ரங்கள் இவை அடங்கின பூலோகமும், வாயு, அக்னி, சந்த்ரன் நக்ஷத்ரங்கள், இவற்றோடு கூடின ஜ்யோதிர்மண்டலமும், ஆவரண ஜலமும், ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸும், அந்தரிக்ஷலோகமும் (வான் மண்டலமும்), ஸ்வர்க்கமும், அதலம் முதலிய கீழ் லோகங்களும், ஸாத்விக அஹங்காரத்தின் கார்யமான ஸ்ரோத்ரம் (காது) முதலிய பத்து இந்த்ரியங்களும், மனமும், தன்மாத்ரங்களும், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களும், ஆகிய ப்ரபஞ்சத்தை (உலகை) எல்லாம் கண்டாள். 

ஆத்மாக்கள், காலம், ஸ்வபாவம், கர்மம், வாஸனை இவற்றால் சரீரங்கள் பலவாறு பேதித்திருக்கப்பெற்று (வேறுபட்டு இருக்கப்பட்டு), விசித்ரமாயிருக்கின்ற இந்த ப்ரபஞ்சத்தையும், கண்டாள். தன் பிள்ளையின் தேஹத்தில், திறந்த வாயில், ஒரே தடவையில் கண்ட யசோதை “அவ்வளவும் ஸ்வப்னமோ (கனவோ)? அல்லது தேவமாயையோ? அல்லது என்னுடைய ப்ரமமோ? அல்லது இந்த என் புதல்வனுடைய ஸ்வபாவிகமான (இயற்கையான) ஒரு சக்தி விசேஷமோ” என்று மதி (புத்தி) மயங்கினாள். மீளவும் “புத்தி, மனத்தின் வ்யாபாரம், வாக்கு இவற்றால் உள்ளபடி விரைந்து ஊஹிக்க முடியாத இந்த ப்ரபஞ்சமெல்லாம் (உலகமெல்லாம்) எதை ஆதாரமாகவுடையதோ, எதனிடத்தினின்று உண்டாகின்றதோ, எதனால் ஜீவிக்கின்றதோ, எதனிடத்தில் மறைகின்றதோ, அப்படிப்பட்டதும், இன்னது இனியதென்று நிரூபிக்க முடியாததும், முமுக்ஷுக்களால் அடையத் தகுந்ததுமாகிய, பரமாத்ம ஸ்வரூபத்தை வணங்குகிறேன். 

“இந்த நந்தன் என் கணவன். இவன் என்னுடயை பிள்ளை. கோபர்களும், கோபிகைகளும், கோதனங்களும் என்னுடையவை. கோகுலத்திற்கு நாதனாகிய நந்தனுடைய ஸமஸ்த சொத்துக்களையும் நான் பாதுகாத்து வருகிறேன்” என்கிற இந்தக் கெட்ட புத்தி எனக்கு எவனுடைய ஸங்கல்பத்தினால் உண்டாயிற்றோ, அப்படிப்பட்ட பகவானே எனக்குக் கதி என்று கோபிகையான யசோதை உண்மையை அறிகையில், ஸமர்த்தனும், ஸர்வேச்வரனுமாகிய, அந்த ஸ்ரீக்ருஷ்ணன், புத்ர ஸ்னேஹத்தை மிகவும் விளைப்பதாகிய தன் மாயையைப் பரப்பினான். மாயையினால் அவளுடைய விவேகத்தை மறைத்தான்). அப்பொழுதே, அந்த யசோதை “இவன் பரமாத்மா” என்னும் புத்தி மாறப்பெற்று, பிள்ளையை மடியில் ஏறவிட்டு கொண்டு, முன் போலவே ஸ்னேஹம் (அன்பு, பரிவு) நிறைந்த மனமுடையவளாயிருந்தாள். 

வேதங்களின் பூர்வ பாகங்கள் (முன் பகுதிகள்), அவற்றின் உத்தர  பாகங்களான (பின் பகுதிகளான) வேதாந்தங்கள், ஸாங்க்யம், யோகம், பாஞ்சராத்ர ஸம்ஹிதைகள், இவைகளால் பாடப்பட்ட மஹிமையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை அவள் உள்ளபடி அறிந்தும், மீளவும் அவனுடைய மாயையினால் மதிமயங்கி, அவனைக் கேவலம் புதல்வனாகவே பாவித்திருந்தாள்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- அந்தணர் தலைவரே! நந்தனாவது, மிகுந்த பாக்யமுடைய யசோதையாவது இப்படி பெரும் பயனை விளைக்கும்படியான என்ன பாக்யம் செய்தார்கள்? ஸர்வேச்வரன் பிள்ளையாகப் பிறந்து, யசோதையிடம் தாய்ப்பால் பருகினானல்லவா? இதைவிட மற்றொரு பாக்யமுண்டோ? தாய், தந்தையர்களான தேவகி, வஸுதேவர்கள், ஸ்ரீக்ருஷ்ணனுடைய கம்பீரமான பால்ய சேஷ்டைகளை ஏன் அனுபவிக்கப் பெறவில்லை? உலகங்களின் பாபங்களைப் போக்கவல்லதான அந்த ஸ்ரீக்ருஷ்ண லீலையை, இப்பொழுதும் பண்டிதர்கள் பாடுகிறார்களல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அஷ்ட வசுக்களில் ச்ரேஷ்டனாகிய த்ரோணனென்பவன், ப்ரஹ்மதேவனால் “பகவான் பூபாரத்தை ஒழிக்கும் பொருட்டுப் பூமியில் அவதரிக்கப் போகிறான். அவனுக்குப் பால் கொடுக்கும்பொருட்டு, ரிஷிகள் பசுக்களாய்ப் பிறக்கப்போகிறார்கள். நீ அந்தப் பசுக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இடையர்களில் ஒருவனாகப் பிறக்கவேண்டும்” என்று மொழியப் பெற்று, தன் பார்யையான தாரையென்பவளுடன் அந்த ப்ரஹ்மதேவனுடைய கட்டளையை நிறைவேற்ற முயன்று, அவனைக் குறித்து “நாங்கள் பூமியில் பிறந்த பின்பு, எங்களுக்கு மஹாதேவனும், ஸர்வேச்வரனுமாகிய பரமபுருஷனிடத்தில் பக்தி உண்டாகும்படி அனுக்ரஹம் செய்ய வேண்டும். வேறு உபாயங்களால் கடக்க முடியாததும், ஸம்ஸாரத்தை விளைப்பதுமாகிய பாபத்தை, அந்தப் பக்தியினால் கடக்கக்கூடுமல்லவா?” என்றான். மஹானுபாவனாகிய அந்த த்ரோணன் “அப்படியே ஆகட்டும்” என்று ப்ரஹ்மதேவனால் மொழியப் பெற்று, இவ்வுலகத்தில், கோகுலத்தில் நந்தனென்னும் பெயர் பூண்டு பிறந்தான். அந்தத் தாரையென்கிற அவனுடைய பார்யை, யசோதையாகப் பிறந்தாள். பாரதனே! ஆகையால், இடையர்கள், இடைச்சிகள் இவர்களுக்குள், தம்பதிகளான யசோதா, நந்தர்களுக்குப் பிள்ளையாகத் தோன்றின பகவானிடத்தில் மிகவும் பக்தி உண்டாயிருந்தது. ஸ்ரீக்ருஷ்ணனும், ப்ரஹ்மாவின் கட்டளையை உண்மை செய்யும் பொருட்டு, பலராமனுடன் கோகுலத்தில் வாஸம் செய்து கொண்டு, தன்னுடைய லீலையினால் அவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைத்துக் கொண்டிருந்தான். 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக