சனி, 28 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 225

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – ஒன்பதாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் உரலில் கட்டுண்ட வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஒருகால், வீட்டு வேலைக்காரிகள் அனைவரும் வேறு கார்யங்களால் தூண்டப்பட்டிருக்கையில், நந்தனின் மனைவியான யசோதை, தானே தயிர் கடையத் தொடங்கினாள். அவள், கவிகளால் நிபந்தனஞ் செய்யப்பட்ட (இயற்றப்பட்ட) அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பால்ய சரித்ரங்களை எல்லாம் நினைத்து, தயிர் கடையும் பொழுது பாடிக் கொண்டிருந்தாள். அழகிய புருவங்களையுடைய அந்த யசோதை, பெரிய கடித்தடத்தில் (இடுப்பில்) வெண்பட்டு வஸ்த்ரம் தரித்து, அதன்மேல் அரை நாண் மாலை அணிந்து, பிள்ளையிடத்தில் ஸ்னேஹத்தினால் ஸ்தனங்களில் பால் பெருகவும், உடம்பு அசையவும், கயிற்றை ச்ரமப்பட்டு இழுக்கின்ற கைகளில் வளைகள் ஒலிக்கவும், காதுகளில் குண்டலங்கள் குலுங்கவும், முகம் வேர்க்கவும், தலைச் சொருக்கினின்று மாலதிப் புஷ்பங்கள் சொரியவும் பெற்று, ஸ்ரீக்ருஷ்ண லீலைகளைப் பாடிக்கொண்டே தயிர் கடைந்தாள். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ணன் ஸ்தன்ய பானஞ் செய்ய (தாய்ப்பால் பருக) விரும்பித் தயிர் கடைகின்ற அந்த யசோதையிடம் வந்து, அவர்களுக்கு ப்ரீதியை விளைத்துக் கொண்டு மத்தைப் பிடித்துத் தயிர் கடைய வொட்டாமல் தடுத்தான். அவளும், அவனை மடியில் ஏறவிட்டு, புன்னகையோடு கூடின அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே, ஸ்னேஹத்தினால் பெருகுகின்ற ஸ்தன்யத்தைக் (முலைப் பாலைக்) கொடுத்தாள். அப்பொழுது, காய வைத்த பால் பொங்கி வழியக் கண்டு, த்ருப்தி உண்டாகப் பெறாமல் இன்னம் பருக வேண்டுமென்று விரும்புகிற அந்த ஸ்ரீக்ருஷ்ணனை விட்டு, விரைவுடன் எழுந்து சென்றாள். அவன், அதனால் கோபித்துச் சிவந்த உதட்டைப் பற்களால் கடித்துப் பொய்யாகவே கண்ணீர் பெருக்கி, கற்குழவியால் தயிர் கடையும் பாண்டத்தை உடைத்து, உள்ளே சென்று, வெண்ணையை எடுத்து ஏகாந்தமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

அப்பொழுது யசோதை, பால் நன்றாகக் காய்ந்திருக்கக் கண்டு, அதை இறக்கி மீண்டு வந்து, ததிபாண்டம் (தயிர்ப்பானை) உடைந்திருக்கக் கண்டு, அது தன் பிள்ளை செய்த கார்யமென்று உணர்ந்து, சிரித்தாள். அப்புதல்வனையும், அங்குக் காணவில்லை. அப்பால், யசோதை, உரலடியின் மேல் உட்கார்ந்து வெண்ணெயை குரங்குக்கு வேண்டியவளவு கொடுத்துக் கொண்டிருப்பவனும், திருட்டுத்தனம் தோன்றுமாறு பயந்து விழிக்கிற கண்களையுடையவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, தெரியாமல் மெல்ல மெல்லப் பின்னே சென்றாள். கையில் தடியை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்ற அந்த யசோதையைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணன் விரைவுடன் உரலினின்றும் எழுந்து, பயந்தவன் போல அப்புறம் ஓடினான். 

அப்பொழுது, அந்த யசோதை, தவத்தினால் தூண்டப்பட்ட யோகிகளின் மனமுங்கூட எவனை அணுக முடியாமல் மயங்குகின்றதோ, அப்படிப்பட்ட பரமபுருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைப் பின் தொடர்ந்தோடினாள், அழகிய இடையுடையவளும், நிதம்பங்களின் (பருத்த புட்டங்களின்) பாரத்தினால் நடை தடைபடப் பெற்றவளுமாகிய தாயான யசோதை, பின் தொடர்ந்து வேகத்தினால் அவிழ்ந்த தலைச் சொருக்கினின்று வழியெல்லாம் புஷ்பங்கள் இறையப் பெற்றுச் சென்று, அவனைப் பிடித்துக் கொண்டாள். அபராதஞ் செய்தவனும், மை கலைந்து நிரம்பின கண்களைக் கையினால் பிசைந்து கொண்டிருப்பவனும், பயத்தினால் தழதழத்த கண்களுடையவனும், “இவள் என்ன செய்வாளோ?” என்று தாயை உற்றுப் பார்க்கின்றவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கையில் பிடித்துக் கொண்டு, பயமுறுத்தி, அடிக்கத் தொடங்கினாள். பிள்ளையிடத்தில் ப்ரீதியுடைய அந்த யசோதை, பிள்ளை பயந்திருப்பதை அறிந்து, தடியை அப்புறம் போட்டு, அவன் ப்ரபாவத்தை அறியாமல், அவனைக் கயிற்றால் கட்ட விரும்பினாள். 

அவனுக்கு உள்ளும், புறமும், முன்னும் பின்னும் கிடையாது. அவன், ஜகத்தினுடைய முன்னும், பின்னும், உள்ளும், புறமும் நிறைந்திருப்பவன். ஜகத்திற்குக் காரணனாகையாலும், அதில் அந்தராத்மாவாய் அமைந்திருப்பவனாகையாலும் ஜகத்தெல்லாம் அவனே. அத்தகையனும் மானிட உருவம் பூண்டவனுமாகிய அப்பரமபுருஷனை, அந்தக் கோபிகை, தன் பிள்ளையாக நினைத்து, ப்ராக்ருதனான மற்றொரு குழவியைப் போலக் கயிற்றால் உரலில் கட்டினாள். 

யசோதை, அபராதஞ் செய்தானென்று அக்குழவியைக் கட்டும் பொருட்டுக் கொணர்ந்த கயிறு போராமல், இரண்டங்குலம் குறைந்தது. ஆகையால் அவள் மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் இணைத்தாள். அதுவும் போராமல் குறைந்தது. மீளவும் அத்தோடு மற்றொரு கயிற்றை இணைத்தாள். அதுவும் போரவில்லை. இவ்வாறு அவள் எத்தனை கயிறுகள் கொண்டு வந்து இணைக்கினும், அது போராமல் இரண்டங்குலம் குறைவாகவேயிருந்தது. அவள், இவ்வாறு தன் வீட்டிலுள்ள கயிறுகளையெல்லாம் கொண்டு வந்து, இணைத்துக் கொண்டிருந்தாளன்றி, அதினின்று மீளவில்லை. கோபிகைகள், அதைக்கண்டு வியப்புற்றிருக்கையில், அந்த யசோதை தானும் புன்னகை செய்து வியப்புற்றிருந்தாள். அப்பொழுது, உடம்பெல்லாம் புழுங்கி, தலைச் சொருக்கு அவிழ்ந்து பூமாலையும் கலைந்து, வருந்துகின்ற தன் மாதாவின் ச்ரமத்தைக் கண்டு, அவளிடத்தில் மனம் இரங்கி, தன்னைக் கட்டும்படி அனுகூலனாயிருந்தான். 

ப்ரஹ்ம தேவன் முதலிய லோக பாலர்களோடு கூடின இந்த ஜகத்தெல்லாம் எவனுடைய அதீனத்தில் இருக்கின்றதோ அப்படிப்பட்ட ஸர்வேச்வரன் ஸ்வதந்த்ரனென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? மன்னவனே! ஆயினும், அந்த ஸ்ரீக்ருஷ்ண ரூபியான பரம புருஷன் இவ்வாறு யசோதைக்குக் கட்டும்படி அனுகூலனாகி, தான் பக்த பராதீனனென்பதை (பக்தர்களுக்கு வசப்பட்டிருப்பவன் என்பதை) வெளியிட்டான். மோக்ஷம் கொடுப்பவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று, கோபிகை பெற்ற இந்த அனுக்ரஹத்தை, ப்ரஹ்மதேவனாவது, ருத்ரனாவது, சரீரத்திலேயே வஸிக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியாவது பெறவில்லை. கோபிகையின் புதல்வனாகிய இந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டுவதற்குத் தன்னையே ஓடமாகப் பற்றினவர்களும், தன்னிடத்தில் மிகுந்த பக்தியுடையவர்களுமான, ஞானிகளுக்கு எளிதில் அறியக்கூடியவனாயிருப்பது போல, மற்ற ப்ராணிகளுக்கு எளிதில் அறியக் கூடியவனல்லன். 

தாயான யசோதை, இவ்வாறு உரலில் கட்டி விட்டு, வீட்டு வேலைகளில் மனவூக்கமுற்றிருக்கையில், ஸமர்த்தனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், குபேரனுடைய பிள்ளைகளும், நலகூபரன், மணிக்ரீவன் என்று பெயர்கள் பெற்றவர்களும், முன்பு செல்வக் கொழுப்பினால் நேர்ந்த, நாரத முனிவருடைய சாபத்தினால் வ்ருக்ஷ (மர) ஜன்மம் பெற்று, யமளார்ஜுன (மருத) வ்ருக்ஷங்களாய் (மரங்களாய்) இருப்பவர்களுமான, இரண்டு யக்ஷர்களைக் கண்டான். 

(கண்ணனை யசோதை உரலோடு கட்டிய போது, அவளது கட்டுக்குக் கட்டுப்பட்டுக் கட்டுண்டு நின்றான் கண்ணன். துரியோதனாதியர் கண்ணனைக் கட்ட எண்ணிய போது, விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் வென்ற கண்ணன் ஒரு ஆய்ச்சியின் கயிற்றுக்குக் கட்டுப்பட என்ன காரணம்? அன்பு தான். ஆணவத்துக்கு இறைவன் கட்டுப்பட மாட்டான், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படுவான் என்பதையே இது காட்டுகிறது.

“பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள்

மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு 

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

என்று இதை நம்மாழ்வார் பாடுகிறார்.)

ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

3 கருத்துகள்:

  1. சுகர் சொல்கிறார் என்ற முதல் பாராவில் Spelling mistake உள்ளது

    வேலைக்காரிகள்
    திருத்தவும்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. சரியாகத் தான் உள்ளது ஸ்வாமி.

    பதிலளிநீக்கு