சனி, 9 ஜனவரி, 2021

திருப்பாவை - 26 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி ஆறாவது பாசுரம்

(நாம் ஆறாவது ஐந்து பாசுரத்திற்கு வந்துவிட்டோம். முதல் ஐந்துப் பாசுரத்தில் நோன்பிற்கான விதிமுறைகளை தெரிவித்த ஆண்டாள் அடுத்த ஐந்தில் தன்னொத்த சிறுவயதுக் கன்னிகளை பாவை நோன்பிற்கு அழைக்கிறாள். அடுத்த ஐந்தில் சற்றே வயதில் பெரிய கன்னிகளை அழைக்கிறாள். பின்னர் நந்தகோபன், கண்ணனின் தாய் யசோதா, நப்பின்னை இவர்கள் எல்லோரையும் எழுப்பி கண்ணனை சந்திக்க அனுமதிக் கோருகிறாள். ஐந்தாவது ஐந்தில் கண்ணனை எழுப்பி தங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்கு தயார் படுத்துகிறாள். இப்பொழுதுக் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தெரிவிக்கப் போகிறாள். நாமும் பாசுரத்திற்குள் செல்வோம்.)


“கோதே, நம் பகவான் கண்ணன் சிங்காசனத்தின் சிம்மமாய் வீற்றிருக்கிறாரடி. நம் கோரிக்கைகளை தெரியப்படுத்தேன்.”


“பாவாய், நம் கண்ணன் கருமை நிறத்தவன், முகில்வண்ணன், கருமேகம் சூல்கொண்டு பெருமழை தருவது போல் அவன் நமக்கு அருள் மழை பொழியப் போகிறான். ‘மாலே, மணிவண்ணா….’


“கோதே, ‘மாலே’ என்பதில் திருமாலைக் குறிக்கின்றாயா. சென்ற பாசுரத்தில் ‘நெருப்பென்ன நின்ற நெடுமாலே' என்றாய் இப்பொழுது வெறும் மாலே என்கின்றாயே.”


“பாவாய், மால் என்பது திருமாலையும் குறிக்கும், கருணையையும் குறிக்கும், கறுமை நிறத்தவன் என்பதையும் குறிக்கும். அவன் நம்மிடத்தில் எப்பொழுதும் பரிவுடன் இருப்பான். ஒவ்வொரு சதுர் யுகத்தின் முடிவில் மகாப்பிரளயத்தில் நம்மையெல்லாம் காத்து அடுத்த யுகத்தில் படைத்து, காத்துக் கொண்டிருப்பவன் அல்லவா. சென்ற பாசுரத்தில் ஏன் ‘நெடுமால்’ என்று குறிப்பிட்டேனென்றால் கம்சனிடத்தில் மிகுந்த கருணை கொண்டிருந்தான் நம் கண்ணன். அவன் நினைத்தால் நரசிம்மம் போல் ஒரே நாழிகையில் கம்சனை வதம் செய்யலாம். கம்சனிடத்தில் நமக்கெல்லாம் காட்டும் கருணையைவிட நீண்ட பரிவைக் காட்டினான். அதனால் தான் ‘நெடுமால்’ என்று தெரிவித்தேன்.” 


“அற்புதம் கோதே, ‘மணிவண்ணா’ என்றது அலங்காரத்திற்காகத் தானே. ஏற்கனவே ‘பூவைப்பூவண்ணா’ என்றாய்.”


“பாவாய், நம் கண்ணன் மணியைப் போன்றவன். மிகவும் எளிமையானவன். ஒரு பெரிய வீடு இருக்கிறதென்றால் அதனை சுருக்கி நம் உள்ளங்கையில் வைத்துக் கொள்ள முடியுமா, முடியாதல்லவா. ஆனால் மணியை, ரத்தினத்தை, கோமேதகத்தை வைத்துக் கொள்ள முடியுமல்லவா. நம்மால் விளக்க முடியாத பெருமைகளையும் எல்லைகளையும் உடைய நம் பகவான், நம் பிரார்த்தனைக்கிணங்கி நம் உள்ளங்கைக்கு வந்துவிடுகிறானே. அதனால் தான் சொன்னேன் பாவாய். கண்ணா மணிவண்ணா நீ மார்கழி நீராட்டத்திற்கு வரவேண்டும்.” 


கண்ணன் திடுக்கிட்டு ஆண்டாளைப் பார்த்து,


“ஆண்டாள் மார்கழி நீராட்டமா. ஏதோ புதுவிதமாய் இருக்கிறதே. என்ன இது.”


“கண்ணா, அப்படிச் சொல்லாதே. இது ஏற்கெனவே இருக்கின்ற ஒரு நோன்புதான். நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஒரு நோன்புதான். எவற்றை பெரியோர்கள், முன்னோர்கள் கடைபிடித்தார்களோ அவற்றை நாம் கடைபிடிக்கத்தானே வேண்டும். கீதையில் நீயே ‘யத்ப்ரமானம்’ என்று அர்ஜூனனுக்கு விளக்கியிருக்கிறாயே. ‘மேலையார்கள் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்’...


“கோதே, மேலையார்கள் அதாவது முன்னோர்கள் செய்தவற்றை கேள் என்று சொல்லாமல் ‘வேண்டுவன’ என்று கூறியுள்ளாயே.”


“பாவாய், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியாது. நமக்கு எவை முடியுமோ அவற்றை ஒன்று விடாமல் செய்யவேண்டும்.”


கண்ணன் கோதையைப் பார்த்து புன்முறுவலுடன்…


“கோதே, என் வார்த்தைகளாலேயே என்னை மடக்கிவிட்டாய். உனக்கு என்ன வேண்டும்.”


“ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வள்ளலே, நாங்கள் ஏதோ புதுவித நோன்பு தொடரவில்லை ஏற்கனவே முன்னோர்கள் செய்தததைத் தான் தொடர்கிறோம். இதற்காக நீ எங்களுக்கு பரிசுகளை அளிக்க வேண்டும். உன்னையே ‘அருத்தித்து வந்தோம்’ வேறு யாரும் எங்களுக்கு உதவுவாரில்லை. இந்த பேரண்டத்தையே நடுங்க வைக்கும் பால் போன்ற நிறமுடைய ‘பாஞ்சன்யம்’ என்கின்ற சங்கு உன் திருக்கையில் வீற்றிருக்கிறதே, அதேபோன்று ஆயிரமாயிரம் சங்குகள் வேண்டும். அவை எங்கும் உன் நாமத்தையே ஒலிக்க வேண்டும். பெரும் பறையை அளிக்க வேண்டும், என் தந்தை போன்று பலரும் ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாடவேண்டும். வீதிகள் தோறும் விளக்குகள், தோரணங்கள், பந்தல்கள் போட்டிருக்க வேண்டும். அதற்கு நீ அருள வேண்டும்.”


கண்ணன் சற்றே விரித்த கண்களுடன்….


“ஆண்டாள் அவ்வளவுதானா, ஏதோ சிறியதாய் கேட்பாய் என்று நினைத்தேன் நீ என்னடாவென்றால் இவ்வளவு பெரிய பட்டியலுடன். ஒரு சங்கு தான் என்னிடம் உள்ளது. நீ ஆயிரமாயிரம் சங்குகள் என்கின்றாயே. என்னால் எப்படி முடியும். நீயே சொல்.”


“கண்ணா என் மணிவண்ணா, உன்னால் முடியாதது எதுவும் உள்ளதா. மகாபிரளயத்தில் ஒரு சிறிய ஆலின் இலையில் சின்னக் குழந்தையாய், முகுந்தனாய் உன் கால் கட்டை விரலை வாயினில் வைத்துக் கொண்டிருந்தாயே. ஆலின் இலை உன் எடையைத் தாங்கியதா அல்லது நீ அந்த ஆலின் இலையை கீழே அழுந்தாமல் தாங்க வைத்தாயா. இந்த அழகை என் தந்தையார்,

‘சீதக்கடலுள் அமுதன்ன தேவகி,

கோதைக் குழலாள் யசோதைக்குப் போத்தந்த

பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்

பாதக்கமலங்கள் காணீரே, பவளவாயீர் வந்து காணீரே.’

என்று தன் பிள்ளைத் தமிழில் பாடியருளினாரே. அந்த நிலையிலும் உன் அழகு அவ்வளவு அழகு. உன்னால் முடியாது என்றால் வேறு யாரால் கொடுக்க முடியும். அதனால் நீதான் அருள வேண்டும். மாலே, மணிவண்ணா.”


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே, கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.


(இந்தப் பாசுரத்தின் வியாக்யானத்தில், ஆண்டாள் கண்ணனிடம் ப்ரார்த்திக்கும் விஷயங்கள் அனைத்தும் அதாவது, வீதிகளெங்கும் விளக்குகள் தோரணங்கள் கட்டி, சங்கம் ஒலித்து, வேத பாராயண கோஷ்டிகள் எங்கும் நடத்தி பகவான் வீதியுலா வந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள வேண்டும் என்று குறிப்பதாக ஆசார்யர்கள் தெரிவித்திருப்பர்.)


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக