ஞாயிறு, 10 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 252

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தாறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் வ்ருஷபாஸுரனை வதித்தலும், நாரதரால் தூண்டப்பட்ட கம்ஸன், ஸ்ரீக்ருஷ்ணனை அழைத்துக் கொண்டு வரும்படி அக்ரூரனை அனுப்புதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஸ்ரீக்ருஷ்ணன் கோகுலத்தையெல்லாம் களிப்புறச் செய்து கொண்டிருக்கையில், அரிஷ்டனென்னும் அஸுரன் வ்ருஷபத்தின் (காளையின்) உருவம் தரித்து, பெரிய முசுப்பும் (திமிலும்), பெரிய உருவமும் உடையவனாகி, குளப்படிகளால் (காலடிகளால்) பூமியைப் பிளந்து நடுங்கச்செய்து கொண்டு, கோகுலத்திற்கு வந்தான். 

அவ்வஸுரன், எருதுகள் கர்ஜிப்பது போல மிகவும் கடோரமாகக் (கரகரத்த குரலில்) கர்ஜிப்பதும், பாதத்தினால் பூமியைக் கீறுவதும், வாலைத் தூக்கிக்கொண்டு கொம்பின் நுனியால் கோட்டை முதலிய உயர்ந்த இடங்களைக் குத்திக் கிளப்புவதும், இடையிடையில் சிறிது மல மூத்ரங்களை விடுவதுமாகி, கண்களை இமைகொட்டாமல் விழித்துக் கொண்டு, இடைச்சேரியினுள் நுழைந்தான். 

ராஜனே! இந்த அரிஷ்டனுடைய கடோரமான (கரகரத்த) கர்ஜனையைக் கேட்ட மாத்ரத்தில், பசுக்களின் கர்ப்பங்களும், ஸ்த்ரீகளின் கர்ப்பங்களும், பயத்தினால் அகாலத்தில் கலைந்தன; ஸ்ரவித்துப் போயின (நழுவின). இவனுடைய முசுப்பின் (திமிலின்) மேல் மேகங்கள் பர்வதம் (மலை) என்று நினைத்து தங்கின. கூரான கொம்புகளையுடைய அவ்வரிஷ்டாஸுரனைக் கண்டு, கோபிகைகளும், கோபர்களும் பயந்தார்கள். ராஜனே! பசுக்கள் அவ்வஸுரனைக் கண்டு பயந்து, கோகுலத்தினின்று ஓடிப்போயின. அங்குள்ள கோபர்களும், கோபிகைகளும், “க்ருஷ்ணா! க்ருஷ்ணா!” என்று முறையிட்டுக்கொண்டே, அவனைச் சரணம் அடைந்தார்கள். 

அப்பால்,  மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், கோகுலமெல்லாம் பயத்தினால் தழதழத்திருப்பதைக் கண்டு, “பயப்பட வேண்டாம்” என்னும் இனிய உரையினால் ஸமாதானப்படுத்தி, வ்ருஷபாஸுரனை யுத்தத்திற்கு வரும்படி அழைத்தான். “அட! மந்த புத்தியனே (அறிவு அற்றவனே)! இளைஞர்களையும், பசுக்களையும் பயப்படுத்துவதனால் என்ன ப்ரயோஜனம்? துஷ்டர்களில் தலைவனே! உன்னைப்போன்ற துர்ப்புத்தியுடைய துஷ்டர்களின் கொழுப்பை அடக்குவதற்காகவே நான் இதோ இருக்கின்றேன். ஆகையால், இங்கு வருவாயாக” என்று மொழிந்து, தன்னைப் பற்றினவர்களின் மன வருத்தங்களைப் போக்கும் தன்மையனும், அவர்களைக் கைவிடாதவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், உள்ளங்கையால் தோளைத் தட்டி, அரிஷ்டனுக்குக் கோபத்தை விளைத்துக்கொண்டு, ஸர்ப்பத்தின் (பாம்பின்) உடல் போன்ற தன் புஜத்தை (கையை) நண்பனுடைய தோள் மேல் சாய்த்து நின்றான். 

அப்பால், அவ்வரிஷ்டாஸுரன், ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு கோபிக்கும்படி செய்யப்பட்டு, குளம்பினால் பூமியைக் குற்றிக் கிளரிக்கொண்டு, உயரத் தூக்கப்பட்ட வாலால் மேகங்கள் சுழலப் பெற்று, கோபமுற்று, ஸ்ரீக்ருஷ்ணனைக் கிட்டி வந்தான். அவன் கொம்புகளின் நுனியை முன்னே தெரித்துக் கொண்டு, இமை கொட்டாத சிவந்த கண்களுடையவனாகி, ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, இந்த்ரன் விடுத்த வஜ்ராயுதம் போல விரைவுடன் அவன்மேல் எதிர்த்தோடி வந்தான். அப்பொழுது, ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், அந்த அரிஷ்டாஸுரனைக் கொம்புகளில் பிடித்துக் கொண்டு, ஒரு யானை மற்றொரு யானையைத் தள்ளுவது போல, பதினெட்டு அடிகள் பின்னே தள்ளினான். அவ்வாறு பகவானால் பின்னே தள்ளுண்டு விழுந்த அவ்வரிஷ்டாஸுரன், விரைவுடன் எழுந்து, உடம்பெல்லாம் புழுங்கப் பெற்று, கோபத்தினால் மெய்மறந்து, பெருமூச்செறிந்து கொண்டு, மீளவும் ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்தோடினான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணனும், தன்னை எதிர்த்து வருகின்ற அவ்வஸுரனை, கொம்புகளில் பிடித்துக் கொண்டு, காலால் அமுக்கி, பூமியில் விழத்தள்ளி, ஈரத் துணியை முருக்கிப் பிழிவது போல முருக்கிக் கசக்கி, அவன் கொம்புகளைப் பிடுங்கிக் கொண்டு, அதனால் அவனை அடித்தான். அவனும், அடியுண்டு விழுந்தான். மற்றும், அவன் மல மூத்ரங்களை விடுவதும், ரத்தத்தைக் கக்குவதும், பாதங்களை உதறுவதும் செய்து, கண்கள் சுழலப்பெற்று, ப்ராணன்கள் (உயிர்) கிளம்பிப் போகையாகிற வருத்தத்தை அடைந்தான்; உடனே, ம்ருத்யுவின் (யமனின்) க்ருஹத்திற்குப் போய்ச் சேர்ந்தான். 

தேவதைகள், ஸ்ரீக்ருஷ்ணன் மேல் புஷ்பங்களை இறைத்து, அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு அரிஷ்டாஸுரனைக் கொன்று, தன் ஜாதியர்களான இடையர்களால் துதிக்கப்பெற்று, கோபிகைகளின் கண்களுக்கு மிகுந்த ஸந்தோஷத்தை விளைத்துக் கொண்டு, பலராமனுடன் கோகுலத்திற்குள் நுழைந்தான். இவ்வாறு கோகுலத்தில் அற்புதமான செயலுடைய ஸ்ரீக்ருஷ்னன், அரிஷ்டாஸுரனை வதித்து வாழும்காலத்தில், தேவ ரிஷியாகிய நாரதர், கம்ஸனிடம் வந்து மொழிந்தார்.

ஸ்ரீ நாரதர் சொல்லுகிறார்:- தேவகியின் எட்டாவது கர்ப்பமாகிய கன்னிகை, யசோதையின் புதல்வியே. யசோதையின் பிள்ளையென்று ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீக்ருஷ்ணன் தேவகியின் எட்டாவது கர்ப்பம். பலராமன், தேவகியின் ஏழாவது கர்ப்பம். வஸுதேவன், உன்னிடத்தினின்று பயந்து, அந்த ராம க்ருஷ்ணர்களைத் தன் நண்பனான இந்த நந்தகோபனிடத்தில் கொண்டு போய் வைத்தான், அவர்களே அரிஷ்டன் முதலிய உன் ப்ருத்யர்களை (சேவகர்களை) வதித்தார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கம்ஸன், நாரதர் மொழிந்த இவ்வசனத்தைக் கேட்டு, கோபத்தினால் இந்திரியங்கள் (புலன்கள்) எல்லாம் கலங்கப்பெற்று, வஸுதேவனைக் கொல்ல விரும்பி, கூரான கத்தியை எடுத்தான், அப்பால், அவன் நாரத மஹர்ஷியால் வேண்டாமென்று தடுக்கப்பெற்று, அவ்வஸுதேவனுடைய பிள்ளையே தனக்கு ம்ருத்யுவென்பதை (யமன் என்பதை) நாரதருடைய உபதேசத்தினால் அறிந்து, இருப்புச் சங்கிலிகளால் வஸுதேவனை அவன் பார்யையாகிய தேவகியுடன் பந்தனம் செய்து (கட்டி) வைத்தான். பிறகு, நாரதர் புறப்பட்டுப் போகையில், கம்ஸன் கேசியென்னும் ராக்ஷஸனை அழைத்து, “நீ போய் ராம க்ருஷ்ணர்களை வதித்து வருவாய்” என்று சொல்லி அனுப்பினான். பிறகு, முஷ்டிகன், சாணூரன், சலன், தோஸலகன், முதலிய மந்திரிகளையும், யானைப் பாகர்களையும் அழைத்து, நல்வார்த்தை சொல்லி, உத்ஸாஹப்படுத்தி இவ்வாறு மொழிந்தான்.

கம்ஸன் சொல்லுகிறான்:- ஓ வீரத்தன்மையுள்ள சாணூரனே! ஓ முஷ்டிகனே! மற்றுமுள்ள வீரர்களே! இதைக் கேட்பீர்களாக. வஸுதேவனுடைய பிள்ளைகளாகிய ராம க்ருஷ்ணர்கள், கோகுலத்தில் இருக்கின்றார்களல்லவா? அவர்கள் எனக்கு ம்ருத்யுக்கள் (யமன்கள் - மரணம்) என்று தெய்வத்தினால் அறிவிக்கப்பட்டார்கள். ஆகையால், நீங்கள் அவர்களை எந்த உபாயத்தினாலாவது இங்கே அழைத்துக் கொண்டு மல்ல லீலையினால் (மல்லர் விளையாட்டால்) வதிக்க வேண்டும். மல்லர்கள் விளையாட்டாகிற யுத்தம் செய்வதற்குரிய ஒரு மல்யுத்த அரங்கத்தை (மல்யுத்த களத்தை) ஏற்படுத்தி, அதில் ஆஸனங்களை அமைத்து வைப்பீர்களாக. நகரத்து ஜனங்களும், நாட்டு ஜனங்களும் ஆகிய அனைவரும் அவ்வாஸனங்களில் உட்கார்ந்து, யதேஷ்டமாக (விருப்பப்படி) மல் யுத்தத்தைக் காண்பார்களாக. 

“ஓ, யானைப் பாகனே! மிகுந்த மதியுடையவனே! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! மதஜலம்  பெருகப்பெற்ற (மதம் கொண்ட), துதிக்கையின் சோபையால் விளங்கும் முகமுடைய, குவலயாபீடமென்னும் யானையை யுத்தரங்கத்தின் (மல்யுத்த களத்தின்) வாசலில் வைத்து, அதன் துதிக்கையில் இரும்புத் தடியைக் கொடுத்து வைக்க வேண்டும். வஸுதேவனுடைய பிள்ளைகளான ராம க்ருஷ்ணர்கள் வருவார்களாயின், அவர்களை அந்தக் குவலயாபீடத்தினால் வாசலிலேயே வதிக்கவேண்டும்” என்றான். அப்பால், அதைக்கேட்ட யானைப்பாகன், மதிமயங்கிக் கம்ஸனை நோக்கி “மஹாராஜனாகிய உனது பகினியின் (சகோதரியின்) புதல்வர்களான ராம க்ருஷ்ணர்களை நான் எவ்வாறு வதிப்பேன்” என்றான். யானைப்பாகனால் இவ்வாறு மொழியப்பட்ட துர்ப்புத்தியுடைய (கெட்ட புத்தி உடைய) கம்ஸ மன்னவன், கூட்டமாகச் சேர்த்திருக்கின்ற எல்லோரும் கேட்கும்படி மொழிந்தான்.

கம்ஸன் சொல்லுகிறான்:- நான் சொல்லப்போகிற இவ்விஷயத்தை எல்லோரும் கேட்பீர்களாக. கேட்டு இதை மனத்தில் நிறுத்திக் கொள்வீர்களாக. நான் முதலே பிடித்துப் பந்துக்களிடத்தில் த்வேஷத்துடன் நடப்பதற்குக் காரணம் சொல்லுகிறேன்; கேளுங்கள். மிகுந்த பாக்யமுடையவளும், தாமரை மலர் போன்ற கண்களுடையவளுமாகிய என் தாய், ஒருகால் மந்தமாருதம் (தென்றல்) வீசப் பெற்றதும், அசோகம், மகிழ், பாக்கு, புன்னை முதலிய மரங்கள் புஷ்பித்திருப்பதுமாகிய (பூத்திருப்பதுமாகிய) பெரிய ஒரு உத்யானத்தில் (தோட்டத்தில்), உலாவிக் கொண்டிருந்தாள். அந்த உத்யானத்தில், வண்டினங்கள் சுழன்று கொண்டிருந்தன. குயிலினங்கள் நிறைந்து கூவிக் கொண்டிருந்தன. மயிலினங்கள் நர்த்தனம் (நடனம்) செய்து கொண்டிருந்தன. குரங்குகள் பெரிய ஆரவாரத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. இவ்வாறு அழகாயிருக்கின்ற அவ்வுத்யானம் (தோட்டம்), அப்பொழுது வஸந்த காலமாகையால் மிகவும் அழகாயிருந்தது. பற்பல வகையான வ்ருக்ஷங்கள் (மரங்கள்) அதன் அழகை வளர்த்தன. பதிவ்ரதையும் ருதுஸ்னானம் செய்து (மாதவிடாய் முடிந்து நீராடி) நன்கு அலங்கரித்துக் கொண்டிருப்பவளுமாகிய என் தாய், இத்தகைய அவ்வுத்யானத்தில் (தோட்டத்தில்) உலாவிக்கொண்டிருக்கும் பொழுது, காம வேதனையால் (காதல் ஆசை கிளர்ச்சியால்) பரிதபித்து, தன் கணவனை நினைத்தாள். அப்பொழுதே அவ்வுத்யானத்தில் (தோட்டத்தில்) பிறர்க்குத் தெரியாமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த த்ரமிளனென்னும் பெயருடைய ஒரு கந்தர்வன், அவ்வாறு என் தாய் தனியே உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவன் ஸமஸ்த ப்ராணிகளுடைய மனக் கருத்தையும் உள்ளபடி அறியும் திறமை உடையவனாகையால், அவளுடைய மனோபாவத்தையும் அறிந்து, புன்னகையோடு கூடின உரையும், நோக்கமும் அமைந்து, உக்ரஸேனனுடைய உருவம் போன்றதுமாகிய உருவத்தைத் தரித்து, காம விகாரத்தினால் (காதல் ஆசை கிளர்ச்சியால்) வருந்தி, பதிவ்ரதையும் இஷ்டப்படி ஸஞ்சரித்துக்கொண்டிருப்பவளுமாகிய என் தாயைக் கிட்டினான். 

அவள், அவனுடைய உண்மையை அறியாதவளாகையால், அவனுடன் கலந்து, அவ்வனத்தில் விளையாடினாள். பதிவ்ரதையாகிய அவள், அவனுடைய மனக் கருத்து முதலிய அடையாளங்களால் அவன் தன் கணவனைக்காட்டிலும் வேறுபட்டவனென்பதை அறிந்து, மிகவும் வருந்தி, கண்களும் மனமும் கலங்கப் பெற்று, “துஷ்டனே (கொடியவனே)! நீ யாவன்? துர்ப்புத்தியுடைய (கெட்ட புத்தி உடைய) நீ, பெரியோர்களால் நிந்திக்கத் தகுந்த இத்தகைய பாப கார்யம் செய்தனையே” என்றாள். நீண்ட புஜ தண்டங்களையுடைய (கைகளை உடைய) அந்த த்ரமிளனென்னும் கந்தர்வன், இவ்வாறு மொழிகின்ற அவளை மெல்ல மெல்ல தன் வார்த்தைகளால் ஸமாதானப்படுத்திக் கொண்டு, மொழிந்தான்.

கந்தர்வன் சொல்லுகிறான்:- பெண்மணி! நாங்கள் கந்தர்வர்கள்; தேவதைகளோடு ஒத்தவர்கள்; இந்த்ரனுடைய பரிசாரகர்கள் (உதவியாளர்கள்). மங்கள ஸ்வபாவமுடையவளே! நாங்கள் மனுஷ்யர்களால் அனுபவிக்கத்தகுந்த உங்களைப் போன்ற மனுஷ்ய ஸ்த்ரீகளுக்கு எளிதில் கிடைக்கக் கூடியவர்களல்லோம். பிறத்தல், சாதல் முதலிய பல வருத்தங்களுக்கிடமான மானிடர்களுக்கும், அவை எவையும் தீண்டப்பெறாத தேவதைகளுக்கும், நெடுவாசி (பெரிய வேறுபாடு) உண்டு. ஆகையால், நாங்கள் வேண்டினாலும் கூடக் கிடைக்கக் கூடியவர்களல்லோம்.

கம்ஸன் சொல்லுகிறான்:- என் தாய் இவ்வாறு மொழிகின்ற அந்தக் கந்தர்வனை நோக்கிக் கோபத்தினால் இந்திரியங்கள் (புலன்கள்) கலங்கப்பெற்று, மீளவும் மொழிந்தாள்.

கம்ஸனின் தாய் சொல்லுகிறாள்:- இவ்வாறு துஷ்ட கார்யத்தைச் செய்து, மீளவும் எதுக்காக என்னை நல்ல வார்த்தை சொல்லுகிறாய்? பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம், சந்த்ரன், ஸூர்யன், திசைகள், காலம், தர்மம், காலை, மாலை, ஸந்த்யைகள் (பகல் இரவு (இரவு பகல்) இரண்டிற்கும் இடைப்பட்ட காலம்) ஆகிய இவை ப்ராணிகளின் புண்ய பாபங்களுக்கு ஸாக்ஷிகள். இவைகளையெல்லாம் பொருள் செய்யாமல், துர்ப்புத்தியுடைய (கெட்ட புத்தி உடைய) நீ என்னை மலினமாக்கினை (குற்றமுடையவளாக்கினாய்)! காட்டின் இடையிலிருக்கின்ற தாமரையோடையை மத்த கஜம் (மதம் கொண்ட யானை) கலக்கிப் பாழ்செய்வது போல, உத்யான வனத்தினிடையில் இருக்கின்ற பரிசுத்தையான என்னை, நீ லோக, வேத மர்யாதைகளைக் கடந்து, மலினம் செய்தனை (அழுக்காக்கினாய்). தேவர்களில் அதமனே (தாழ்ந்தவனே)! அத்தகைய துர்ப்புத்தியுடைய (கெட்ட புத்தி உடைய) நீ, என்னை என்னென்று நல்வார்த்தை சொல்லுகின்றாய்?

கம்ஸன் சொல்லுகிறான்:- என் தாய் இவ்வாறு மொழிகையில், அக்கந்தர்வன் சாபம் கொடுப்பாளோ என்னவோ என்று பயந்து, மீளவும் அவளைக் குறித்து மொழிந்தான்.

கந்தர்வன் சொல்லுகிறான்:- தாமரையிதழ் போன்ற கண்களுடையவளே! மனுஷ்ய ஸ்த்ரீகளோடு தேவதைகள் புணர்வது அனுலோமமென்றும் (உயர்ந்த ஜாதி ஆண் தாழ்ந்த ஜாதி பெண்ணுடன் சேர்தல்), தெய்வ மடந்தையர்களோடு மனுஷ்யர்கள் புணர்வது ப்ரதிலோமமென்றும் (தாழ்ந்த ஜாதி ஆண் உயர்ந்த ஜாதி பெண்ணுடன் சேர்தல்) பெரியோர்கள் கூறுகிறார்கள். தாமரை மலரின் மணமுடையவளே! ஆகையால், நான் அபராதம் செய்தவனல்லேன். மற்றும், என்னுடைய ஸங்கமத்தினால் (சேர்த்தியினால்) உனக்குச் செல்வம், மதி, மிகுந்த உத்ஸாஹம் இவையுடைய புதல்வன் பிறப்பான். எவ்விதத்திலும் என் வீர்யம் வீணாகாது, என் வார்த்தையும் பொய்யாகாது.

கம்ஸன் சொல்லுகிறான்:- பெரும் புகழுடைய என் மாதா, இவ்வாறு கூறுகின்ற அக்கந்தர்வன் மேல் மிகுந்த கோபமுடையவளாகி, மிகவும் கிடைக்க அரிதான பதிவ்ரதா தர்மத்தை இழக்க நேரிட்டமையால் வருந்தி, மொழிந்தாள்.

கம்ஸனின் தாய் சொல்லுகிறாள்:- நீ லோக, வேத மர்யாதைகளைக் கடந்தவன்; ஸதாசாரத்தை (நன்னடத்தையை) உதறினவன்; லோகத்திலும், வேதத்திலும், நிஷேதிக்கப்பட்ட (தடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட) நடத்தையில் இருப்பவன். இத்தகைய உன் வீர்யத்திற்குப் பிறக்கும் பிள்ளை, கொடுந்தன்மையுடையவனும், ஸாஹஸம் முதலிய துர்க்குணங்கள் அமைந்தவனும், நற்குணங்கள் அற்றவனும், தேவதைகள், ப்ராஹ்மணர்கள், தாபஸர்கள் (தவம் செய்பவர்கள்) இவர்களால்  நிக்ரஹிக்கத் (தண்டிக்கத்) தகுந்தவனுமாய் இருப்பானாக.

கம்ஸன் சொல்லுகிறான்:- அவள் இவ்வாறு கோபமுற்றுச் சொல்லிக்கொண்டிருக்கையில், அக்கந்தர்வன் சாபங் கொடுப்பாளோ என்று பயந்து, “ஆனால் அவன் உன் பந்துக்களுக்கே (உறவினர்களுக்கே) சத்ருவாய் (எதிரியாய்) இருப்பானாக” என்று மொழிந்து, அந்தர்த்தானம் அடைந்தான் (மறைந்தான்). அவன் போன பின்பு, பெரும் புகழுடைய என்மாதா, தன் வ்ருத்தாந்தம் ஒருவர்க்கும் தெரியாதபடி, க்ருஹத்திற்குப் போய்ச் சேர்ந்தாள். அப்பால், அவள் கர்ப்பந்தரித்து, ப்ரஸவ காலம் நேருகையில், என்னைப் பெற்றாள் என்று ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த மஹானுபாவரான  நாரத மஹர்ஷி இந்த வ்ருத்தாந்தத்தை (கதையை) ஒருகால் எனக்கு மொழிந்தார். அது முதற்கொண்டு, நான் பந்துக்களில் துஷ்டத்தனமுடைய அவரவர்களை த்வேஷித்துக் (பகைத்துக்) கொண்டிருக்கிறேன். அவர்களும், என்னை த்வேஷிக்கிறார்கள். இது உங்களுக்குத் தெரிந்த விஷயமேயல்லவா? 

ஆகையால், துர்ப்புத்தியுள்ள உக்ரஸேனன், கெடு நினைவுள்ள தேவகன், துஷ்டனாகிய வஸுதேவன் இவர்களையும் அவர்களைச் சேர்ந்த மற்றுமுள்ள துர்ப்புத்திகளையும், நான் வதம் செய்யினும், எனக்குத் தோஷம் உண்டாகாது, ஏனென்றால், நான் கந்தர்வனிடத்தினின்று பிறந்தவனேயன்றி, உக்ரஸேனனிடத்தினின்று பிறந்தவனன்று. ஆகையால், நான் ராம க்ருஷ்ணர்களைக் கொல்ல வேண்டுமென்று மன இரக்கமின்றிக் கட்டளையிடுகின்றேன். 

இந்த வஸுதேவாதிகளும், மிகுந்த பலமுடைய குவலயாபீடமென்னும் யானையினால் வதிக்கப்பட்ட இளைஞர்களான அந்த ராம க்ருஷ்ணர்களை உபஹாரமாகக் கொண்டு, பரலோகத்தில் வைவஸ்வதன் முதலிய தேவதைகளை உத்தேசித்துச் செய்யவேண்டிய பூஜையை நடத்தி, அவர்கள் போன வழியைத் தொடர்ந்து போவார்களாக. வஸுதேவன், உக்ரஸேனன், நந்தன், தேவகன், இவர்களும், கோபாலர்களும், யாதவர்களும் அவர்களைத் தொடர்ந்த மற்றவர்களும், வதிக்கப்படுகின்ற தங்கள் குழந்தைகளைக் கண் குளிரக் காண்பார்களாக. மற்றும், காட்டிலுள்ள ஜனங்களையும் வரவழையுங்கள். அவர்களும் வந்து, மல்யுத்தத்தை யதேஷ்டமாகப் (விருப்பப்படி) பார்க்கட்டும். அட! யானைப்பாகனே! நல்லியற்கை உடையவனே! நீ குவலயாபீடமென்னும் யானையை மல்யுத்த அரங்கத்தின் (களத்தின்) வாசலில் கொண்டு வந்து வைத்திரு. அதைக் கொண்டு என் சத்ருக்களான (எதிரிகளான) அப்பாலகர்களை வதித்து விடு. சதுர்த்தசியினன்று விதிப்படி தனுர்யாகத்தைத் (வில் யாகத்தைத்) தொடங்கி நடத்துங்கள். நம் விருப்பங்களைப் பெய்கின்ற பூத நாதனான ருத்ரனைக் குறித்துப் பரிசுத்தமான பசுக்களை வெட்டுங்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நீதி சாஸ்த்ரத்தின் கருத்தை அறிந்த அக்கம்ஸன், இவ்வாறு மந்திரிகள் முதலியவர்களுக்கு ஆஜ்ஞாபித்து (கட்டளை இட்டு), யதுச்ரேஷ்டனான அக்ரூரனை அழைத்து, தன் கையினால் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, இனிதாக மொழிந்தான்.

கம்ஸன் சொல்லுகிறான்:- ஓ தானபதீ (தானம் செய்வதில் பின் வாங்காத மஹானுபாவனே!) எனக்கு ஸ்னேஹிதர்களால் ஆக வேண்டிய கார்யம் ஒன்று இருக்கிறது. அதை, எனது ஸ்னேஹிதனாகிய நீ, ஆதரவுடன் நடத்தவேண்டும். போஜர்களிலாவது, வ்ருஷ்ணிகளிலாவது (போஜர், வ்ருஷ்ணி குலங்களில்) உன்னைக்காட்டிலும் மிகுந்த ஹிதமானவன் எவனும் கிடையாது. ஆகையால், இந்த்ரன், விஷ்ணுவை அடைந்து தன் விருப்பம் நிறைவேறப் பெற்றாற் போல, நானும் மிகப்பெரிய கார்யங்களையும் நிறைவேற்ற வல்லவனாகிய உன்னை அடைந்து, என் மனோரதம் கைகூடப் பெற விரும்புகிறேன். நீ, நந்தகோகுலத்திற்குப் போவாயாக. 

அங்கு வஸுதேவனுடைய பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களை இந்த ரதத்தின் மேல் ஏற்றிக்கொண்டு வருவாயாக. கால தாமதம் செய்ய வேண்டாம். விஷ்ணுவைப் பற்றினவர்களான தேவதைகள், அந்த வஸுதேவ புத்ரர்களை எனக்கு ம்ருத்யுவாக ஏற்படுத்தியிருக்கிறார்களல்லவா? ஆகையால், உபஹாரங்களோடு கூடிய நந்தன் முதலிய கோபர்களுடன் அவர்களை இவ்விடம் அழைத்துக் கொண்டு வருவாயாக. உன்னால் இவ்விடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட அவர்களை, நான் ம்ருத்யுவைப் (யமனைப்) போன்ற இந்தக் குவலயாபீடமென்னும் யானையினால் வதிப்பிக்கிறேன். ஒருகால் அந்த யானையிடத்தினின்று தப்பித்துக் கொள்வார்களாயின், இடிகள் போன்ற சாணூராதி மல்லர்களைக் கொண்டு வதிப்பிக்கிறேன். 

அவர்களை முடிந்து போகையில், வருத்தமுற்றிருக்கின்ற வஸுதேவன் முதலிய அவர்களது பந்துக்களான வ்ருஷ்ணிகளையும், போஜர்களையும், தாசார்ஹர்களையும் (அந்த அந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்) கொன்று விடுவேன். கிழத்தனம் வந்த பின்பும் இன்னும் ராஜ்யத்தை விரும்புகிற என் தந்தையான உக்ரஸேனனையும், அவன் ப்ராதாவான தேவகனையும், மற்றும் எனக்கு எவரெவர் த்வேஷிகளோ (பகைவர்களோ) அவர்கள் எல்லோரையும் வதித்து விடுவேன். 

நண்பனே! இவ்வாறு செய்கையில், பின்பு இப்பூமண்டலம் சத்ருக்களாகிற (எதிரிகளாகிற) முள்ளுகளெல்லாம் தொலைந்து, சுத்தமாய் விடும். ஜராஸந்தன் எனக்குக் குரு. த்விவிதனென்னும் வானரன், எனக்கு மிகவும் அன்பிற்கிடமரன நண்பன். சம்பரன், நாகன், பாணன் இவர்களும் என்னிடத்திலேயே மிகுந்த நட்புடையவர்கள். நான் அவர்களைக் கொண்டு தேவ பக்ஷத்திலுள்ள மன்னவர்களையெல்லாம் வதித்து, பூமியை ஆண்டு வருவேன். நீ, என் மனத்திலுள்ள இந்த விஷயங்களையெல்லாம் நன்றாக ஆராய்ந்தறிந்து, பாலர்களான ராம க்ருஷ்ணர்களைச் சீக்ரத்தில் இவ்விடம் அழைத்துக்கொண்டு வருவாயாக. இங்கு நடக்கும் தனுர்யாகத்தைப் பார்ப்பதற்காகவும், மதுராபுரியின் அழகைப் பார்ப்பதற்காகவும், நான் அழைத்துக் கொண்டு வரச் சொன்னதாகச் சொல்லி அழைப்பாயாக.

கம்ஸன் இவ்வாறு மொழியக்கேட்ட அக்ரூரன் சொல்லுகிறான்:- தன்னுடைய மரணமாகிற கெடுதியைப் போக்கடித்துக் கொள்ள வேண்டும் என்கிற உன் நினைவு அழகியதே. ஆயினும், தெய்வமே பலன் கொடுக்க வேண்டுமாகையால், பலன் ஸித்திக்கிலும், ஸித்திக்காமல் தவறிப்போயினும், அவற்றில் கலக்கமின்றி இரண்டையும் ஸமமாகப் பாவித்துக்கொண்டு, கார்யங்களைச் செய்ய வேண்டும். இவ்வுலகத்தில் ஜனங்கள், தாங்கள் விரும்பும் ப்ரயோஜனங்கள் தெய்வத்தினால் தடுக்கப்பட்டிருப்பினும், அவற்றைப் பெறவேண்டுமென்று மேன்மேலென முயற்சி செய்கின்றார்கள். கடைசியில், ஸுகத்திற்காகச் செய்த முயற்சியால் துக்கத்தை அடைகின்றார்கள். ஒருகால், தெய்வம் அனுகூலமாயிருக்குமாயின், ஸுகத்தையும் பெறுகின்றார்கள். பிறனுக்குத் துயரத்தை விளைவிக்க வேண்டுமென்று முயன்று, தாங்களே துயரத்தை அடைவதும் உண்டு. பிறனோவென்றால், ஸுகத்தையே அடைவான். ஆயினும், நான் உன்னுடைய கட்டளையின்படி நடக்கின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அக்ரூரன் இவ்வாறு மொழிகையில் கம்ஸன் அவனைப் பார்த்து, “நல்லது நான் போய்வருகிறேன்” என்று அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, மந்திரிகளையும் கட்டளையிட்டு அனுப்பித் தன் க்ருஹத்திற்குப் போனான். அக்ரூரனும் கம்ஸனால் விடப்பட்டு,  தன் க்ருஹத்திற்குப் போனான்.

முப்பத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக