திருப்பாவை - 27 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி ஏழாவது பாசுரம்

(இப்பாசுரம் மிகவும் இனிமையான பாசுரம். இப்பாசுரத்தை படித்தாலே நாக்கில் எச்சில் ஊரும். சிறுவயதிலிருந்து இன்று வரை இருபத்தி ஏழாவது பாசுரமான ‘கூடாரை வெல்லும்’ வரும்போது வீட்டில் நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் கட்டாயம் உண்டு. ஆண்டாள் கண்ணனிடம் தன் கோரிக்கைகளை பெரிதாய் வைத்தாள். கண்ணனும் அக்கோரிக்கைகளை நிறைவேற்றப் புகுமுன் அவை எதற்கு பயன்படும்? என்ன செய்வீர்கள்? என்று கேட்க ஆரம்பிக்கிறான். இப்பாசுரத்தில் ஆண்டாள் அவற்றை விவரிக்கிறாள்.)


கண்ணன் சற்றே விழிகள் உயர்த்தி ஆண்டாளை நோக்கி….


“ஆண்டாள், நீ கேட்ட கோரிக்கைகள் மிகவும் பெரியவை. என்னால் கொடுக்கமுடியும் என்று வேறு சொல்கிறாய். சரி அப்படியே இருக்கட்டும், இவற்றை பெறுவதால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது.”


“கண்ணா, மணிவண்ணா, சொல்கிறேன் கேளாய். ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’....


கண்ணன் சற்றே ஆழ்ந்து கேட்கலானான். ஆனால் வழக்கம்போல் கோதையின் தோழிக்கு சந்தேகம் வந்துவிட்டது.


“கோதே, ‘கூடாரை வெல்லும்’ என்று ஆரம்பிக்கிறாயே. கூடாதவரை அழித்த என்று இருந்தால் நன்றாய் இருக்குமே.”


“பாவாய், கூடாதவரை அழிக்கும் என்றோ அழித்த என்றோ பாடினால் அவனுடைய குணத்தை நாம் குறைத்துக் காண்பிப்பது போல் இருக்கும். இராமாயணத்தில் வாலி வதத்தை எடுத்துக் கொள், இராமன் மறைந்திருந்து வாலியின் மீது அம்பை எய்தினாலும் அதில் ஒரு நியாயம் இருப்பதை வாலியிடமே வாதித்து அவனை ஏற்றுக் கொள்ளச் செய்தான். பின்னர் வாலி தான் செய்த தவறை புரிந்துக் கொண்டு இராமனிடம் சரணடைந்தான். எதிராளியையும் அதாவது கூடாதவரையும் வெல்லும் பெருமையுடைய கோவிந்தா என்றேன். இன்னொரு அர்த்தத்தையும் கூறுகிறேன் கேளாய், பகவானை நம்மால் அனுக முடியுமா என்ற ஒரு தயக்கத்துடன் இருக்கும் பக்தர்கள் தூரத்தில் அவனோடு கூடாமல் இருப்பார்கள். அவர்களை தன் வசம் இழுத்து அவர்களுக்கும் கருணை மழை பொழிவான் நம் கோவிந்தன்.”


“கோதே, கோவிந்தா என்றுதான் விளிக்க வேண்டுமா.”


“பாவாய், கோ என்றால் பூமி., அதைக் காப்பவன் நம் நாரணன் அதனால் கோவிந்தன். கோ என்றால் பசுக்கள் அவற்றை காத்து நம் யதுகுலம் காத்தவன் அதனால் கோவிந்தன். கண்ணா உன்னை நான் கோவிந்தா என்றே அழைப்பேன். உன்னை இத்தனை நாட்கள் நாங்கள் பாடி பறையடித்து கொண்டு வந்தோம், என்ன சன்மானம் வேண்டும் என்று கேட்டாய். கூறுகிறேன் கேளாய்.” 


“கண்ணா, நாங்கள் பெறும் பரிசானது இப்பூமியில் இதுவரை யாரும் பெறாத அளவிற்கு இருக்க வேண்டும். சூடகம் அதாவது கைவளையல்கள் போன்றவை, தோளுக்கு இழகிய ரத்தினங்களால் ஆன மாலைகள், காதிற்கு தோடுகள், மேற்ச் செவிக்கு அலங்காரமான பூ, காலுக்கு காலனிகள் இதுபோன்ற பலவேறுப்பட்ட ஆபரணங்களையும் உன்னிடம் பெற்று நாங்கள் அணிவோம். புதிய பட்டாடைகள் அணிவோம், அதற்குப் பிறகு பாற்சோறு அதனை மூடினாற்போல் நெய்…”


கண்ணன் திடுக்கிட்டு ஆண்டாளைப் பார்த்து சிறிய புன்னகையுடன்….


“ஆண்டாள் போதுமா, நீ என்னடாவென்றால் இப்பாவை நோன்பின் தொடக்கத்தில் ‘பாலுண்ணோம் நெய்யுண்ணோம்’ என்று கூறினாய் இப்பொழுது….”


“கண்ணா, உன்னைப் பார்க்கும் வரை, எங்கள் கண்களுக்குக் கூட மையிட்டுக் கொள்ளவில்லை, மலர்களைச் சூடவில்லை. பால் பருகவில்லை, நெய் சுத்தமாக இல்லை. ஆனால் இப்பொழுதுதான் உன்னை சந்தித்துவிட்டோமே இனி எதற்கு அந்த கட்டுப்பாடுகள். பாத்திரம் முழுவதும் நெய்யால் மூடப்பட்ட பாற்சோறு, அவற்றை கையிலெடுத்ததும் நெய் முழங்கை வழிய உண்போம். எங்களுக்கு அந்த நெய் பாற்சோறைவிட நீ தானே ஆனந்தம் உன்னை நினைத்தே அவற்றை உண்போம். நாங்கள் எல்லோரும் கூடியிருந்து உன் நாம சங்கீர்த்தனத்தைப் பன்னிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் கோவிந்தா.”


(இப்பாசுரம், மிகுந்த ஆழ்ந்த வேதாந்தக் கருத்துக்களை கொண்டதாக ஆசார்யர்கள் தெரிவிப்பர். ‘மூட நெய் பெய்து’ என்பது ஆசார்ய கடாட்சம் என்று அர்த்தம். அவ்வாறு ஆசார்ய கடாட்சம் அடைந்தபின் ‘செவிப்பூவே' என்பது செவிக்கு அணியும் ஆபரணம் அது எதுவென்றால் ஆசார்யர்கள் நமக்கு உபதேசிக்கும் திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகம். இதை கேட்பதே செவிக்கு ஆபரணம். பகவானின் ஆலயத்திற்குச் சென்று அவனை வணங்குவதே நம் கால்களுக்கு அணியும் ஆபரணம். அவனைப் பார்த்து கைகள் குப்பிடுவதே கைகளுக்கு ஆபரணம். ‘கூடியிருந்து குளிர்ந்து’ என்பது மோட்சத்தைக் குறிப்பதாகும். வைகுண்டத்தில் நித்தியம் அவனுக்கு அனைவரும் கூடியிருந்து கைங்கர்யம் செய்வதை குறிப்பதாக ஆசார்யர்கள் உபன்யசிப்பர். இப்பாசுரத்தில் ஆண்டாள் எம்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ததாகவும் கூறுவர். அதனால்தான் நம் இல்லங்களில் இன்று சர்க்கரைப் பொங்கல்.)


கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை