திங்கள், 11 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 253

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தேழாவது அத்தியாயம்

(கேசி ஸம்ஹாரமும், நாரதர் வந்து ஸ்ரீக்ருஷ்ணனுக்கு மேல் நடக்க வேண்டிய கார்யங்களைக் கூறுதலும், வ்யோமாஸுர வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கம்ஸன் ஸ்ரீக்ருஷ்ணனை வதிக்கும்படி அனுப்பின கேசியென்னும் மஹாஸுரன், மனோ வேகமுடைய பெரிய குதிரையின் உருவம் பூண்டு, குளம்புகளால் பூமியைப் பிளப்பதும், பிடரி மயிர்களால் ஆகாயத்தில் ஆங்காங்கு நிறைந்திருக்கின்ற மேகங்களையும், விமானங்களையும் இப்படி அப்படி உதறித் தள்ளுவதும், கனைப்புகளால் எல்லோரையும் பயமுறுத்துவதும், செய்து கொண்டு, கோகுலத்திற்கு வந்தான். 

அகன்ற கண்களும், பொந்து போலப் பரந்த வாயும், நீண்டு பருத்துப் பெரியதுமான கழுத்தும் அமைந்து பெரிய நீலமேகம் போன்று ஸ்ரீக்ருஷ்ணனைக் கொல்ல வேண்டுமென்னும் கொடிய நினைவுடையவனும், ப்ரஸித்தி பெற்றவனுமாகிய அவ்வஸுரன், கம்ஸனுக்கு ஹிதம் (நன்மை) செய்ய விரும்பிக் கோகுலத்தை நடுங்கச் செய்து கொண்டு அதற்குள் நுழைந்தான். 

ஒரு பயமுமின்றி ஸுகமாயிருக்கின்ற கோகுலத்தைத் தன் கனைப்புகளால் பயப்படுத்துகின்றவனும், வால் மயிர்களால் மேகங்களைச் சுழன்று சிதறும்படி தள்ளுகின்றவனும், யுத்தம் செய்யத் தன்னைத் தேடிக் கொண்டு வருகின்றவனுமாகிய அக்கேசியைக் கண்டு, எதிரே வந்து, ஸ்ரீக்ருஷ்ணன் அவனைச் சண்டைக்கு வரும்படி அழைத்தான். அக்கேசியும், கோபத்தினால் ஸிம்ஹம் போலக் கர்ஜனை செய்தான். அப்பால், அவ்வஸுரன், தன்னை யுத்தத்திற்கு அழைக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு முகத்தினால் ஆகாயத்தைப் பருகுபவர் போன்று பெருங்கோபமுற்று, எதிர்த்தோடி வந்தான். எவர்க்கும் எதிர்க்க முடியாதவனும், கொடிய வேகமுடையவனும், கடக்க முடியாதவனுமாகிய அவ்வஸுரன், தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைப் பின்கால்களால் உதைத்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அந்த அடியைத் தன் மேல் படவொட்டாதபடி தப்பித்துக் கொண்டு, வஞ்சித்து, அவ்வஸுரனைத் தன்னை அடிப்பதற்காக நீட்டின பாதங்களில் பிடித்துக் கொண்டு, சுழற்றிக் கருடன் ஸர்ப்பத்தைச் சுழற்றியெறிவது போல அவலீலையாக (விளையாட்டாக) நூறு வில்லளவு தூரத்தில் வீசியெறிந்து  நின்றிருந்தான். 

அக்கேசி, கீழே விழுந்து, மூர்ச்சித்து, ப்ரஜ்ஞை (நினைவு) தெளியப் பெற்று, மீளவும் எழுந்து, கோபத்தினால் வாயைத் திறந்து கொண்டு, வலிவுடன் ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். அப்பொழுது, அந்த ஸ்ரீக்ருஷ்ணனும் பயமின்றிச் சிரித்துக் கொண்டே, ஸர்ப்பம் (பாம்பு) பாழியில் (பொந்தில்) நுழைவது போல, அந்தக் கேசியின் வாயில் இடக்கையை நுழைத்தான். அவ்வஸுரன், ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜத்தைப் (கையைப்) பற்களால் கடிக்கப் பார்க்கையில், அப்புஜத்தை (கையை) ஸ்பர்சித்த மாத்ரத்தில், அவனுடைய பற்களெல்லாம் பழுக்கக் காய்ச்சின இரும்பை ஸ்பர்சித்தாற் போல உடனே உதிர்ந்து போயின. அவ்வஸுரனுடைய தேஹத்தில், ப்ரவேசித்த மஹானுபாவனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜமோவென்றால், சிகித்ஸை செய்யாமல் (நோயை குணப்படுத்தாமல்) உபேக்ஷிக்கப்பட்ட (விட்டு விடப்பட்ட) ஜலோதர வியாதி (நீர் சேர்ந்து கொண்டு வயிறு பெரிதாகும் நோய்) போல் வளர்ந்தது. 

அக்கேசியஸுரன், மேன்மேலும் நன்கு வளர்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜத்தினால் (கையினால்) சுவாஸம் தடைபடப் பெற்று, பாதங்களை உதைத்து உடம்பெல்லாம் புழுங்கவும், கண்கள் சுழலவும்பெற்று, ப்ராணன்களை (உயிரை) இழந்து, மல விஸர்ஜனம் செய்து (ஆஸன வாய் வழியே மலம் விழுந்து), பூமியில் விழுந்தான். திரண்டு உருண்டு நீண்ட பாஹு தண்டங்களை (கைகளை) உடைய ஸ்ரீக்ருஷ்ணன், பக்வமான வெள்ளெரிப்பழம் போல வெடித்து, ப்ராணன்களை இழந்த அந்தக் கேசியின் சரீரத்தினின்று (உடலினின்று) தன் புஜத்தை (கையை) வாங்கிக் கொண்டு, சிறிதும் கர்வமின்றி, அனாயாஸமாகச் சத்ருவைக் (எதிரியைக்) கொன்று, புஷ்ப வர்ஷங்களைப் பொழிகின்ற தேவதைகளால் துதி செய்யப் பெற்றிருந்தான். மன்னவனே! பிறகு, பாகவத ச்ரேஷ்டரும், தேவ ரிஷியுமாகிய நாரதர் கம்பீரமான செயல்களையுடைய ஸ்ரீக்ருஷ்ணனிடம் வந்து ஏகாந்தத்தில் இவ்வாறு மொழிந்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- க்ருஷ்ண! க்ருஷ்ண! அளவுக்கு உட்படாத ஸ்வரூப (இயற்கைத் தன்மை) ஸ்வபாவங்கள் (குணங்கள்) உடையவனே! அளவற்ற ஆச்சர்ய சக்தியுடையவனே! ஜகத்திற்கெல்லாம்  நியாமகனே (நியமிப்பவனே)! நீயே ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாயிருந்து, ஸ்ருஷ்டி முதலிய கார்யங்களை நடத்துகின்றாய். ப்ரஹ்மாண்டத்திற்கும், அதிலுள்ள ஸமஸ்த வஸ்துக்களுக்கும், நீயே ஆதாரமாகையால், வாஸுதேவனென்று கூறப்படுகின்றாய். நீ எல்லாவற்றையும் ஆதாரமாகவுடையவன். பக்தர்களால் மிகவும் விரும்பப்படுகின்றவனே! (நீ உன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டே இவ்வாறு அவதரித்தாயன்றி, உங்களது அவதாரத்திற்கு வேறு காரணம் கிடையாது). சேதனர்களைப் (ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாக்களைப்) போல் கர்மத்திற்கு உட்பட்டு நடப்பவனல்ல. நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். கட்டைகளில் பற்றியெரிகின்ற அக்னி அவற்றின் தோஷங்கள் தீண்டப் பெறாதிருப்பது போல, ஸர்வாந்தராத்மாவாகிய நீ, அவற்றின் தோஷங்கள் தீண்டப் பெறாமல் என்றும் ஒருவாறாயிருப்பவன். 

அரணிக்கட்டையில் அக்னி மறைந்திருப்பது போல, நீ ஸமஸ்த பூதங்களுக்கும் உள்ளே புகுந்து, மறைந்து, அவைகளுக்குப் புலப்படாதிருக்கின்றாய். நீ, ஹ்ருதய குஹையில் வாஸம் செய்பவன்; எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரித்தவன்; ப்ரஹ்மன் முதலிய ஸமஸ்த ஜீவாத்மாக்களைக் காட்டிலும் விலக்ஷணனாகையால் (வேறானவனாகையால்), மஹா புருஷனென்று கூறப்படுகின்றாய். நீயே அந்த ஜீவாத்மாக்களுக்கு மேலான அதிபதி. இத்தகைய நீ, தன்னையே ஆதாரமாகவுடையவனாகி, தன் சரீரமான ப்ரக்ருதியின் (அசேதனமான மூல ப்ரக்ருதியின்) கார்யமாகிய மஹத்து முதலிய தத்வங்களைத் தானே தன் ஸங்கல்பத்தினால் முதலில் படைக்கின்றாய். 

ஜகதீச! ஸத்ய ஸங்கல்பனான (நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை உடையவனான) நீ, அந்தத் தத்தவங்களால் ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழு  வரையிலுள்ள இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் படைத்து, அதைக் காப்பதும், அழிப்பதும் செய்கின்றாய். அத்தன்மையுள்ள நீ, பூமிக்குப் பாரமாயிருக்கின்ற தைத்யர்கள், ப்ரமதகணங்கள் (பிறரை அடித்தல், கொல்லுதல் முதலிய கொடிய செயல்களைச் செய்யும் பூத கணங்கள்), ராக்ஷஸர்கள் இவர்களை அழிக்கும் பொருட்டும், ஸத் புருஷர்களை ரக்ஷிக்கும் பொருட்டும், அவதரித்திருக்கின்றாய். குதிரையின் உருவம் தரித்து வந்த கேசியென்னும் அஸுரனை இப்பொழுது நீ அனாயாஸமாக வதித்தாய். இது எங்களுக்குப் பெரிய ஆனந்தமாயிருக்கின்றது. இது எங்கள் பாக்யமே. 

தேவதைகள், இவனுடைய கனைப்பைக் (குதிரை எழுப்பும் ஒலியைக்) கேட்ட மாத்ரத்தில் பயந்து, ஸ்வர்க்கத்தைத் துறக்கின்றார்கள். ஆகையால், இந்தப் பாபிஷ்டனை நீ வதம் செய்தது யுக்தமே (ஸரியே). ப்ரபூ! நாளை மறு தினம், சாணூரன், முஷ்டிகன், இவர்களையும் மற்றும் பல மல்லர்களையும், குவலயாபீடமென்னும் யானையையும், கம்ஸனையும் நீ வதிக்க நான் பார்க்கப் போகிறேன். அதன் பிறகு, சங்கன், யவனன், முரன், நரகன் இவர்களை நீ வதிக்க  நான் பார்க்கப் போகிறேன். அப்பால், இந்த்ரனுடைய உத்யான வனத்தினின்று பாரிஜாத வ்ருக்ஷத்தைக் கொண்டு வரப் போகின்றாய். அதற்காக உன் மேல் எதிர்த்து வருகிற இந்த்ரனைப் பரிபவம் (அவமானம்) செய்யப் போகின்றனை. வீர்யத்தையே பந்தயம் முதலியனவாகக் கொண்டு வீரர்களான பீஷ்மகன் முதலியவர்களின் பெண்களாகிய ருக்மிணி முதலியவர்களை மணம்பு புரியப் போகின்றாய். 

ஜகத்பதி! ந்ருகனைச் (சாபத்தால் ஓணானான ந்ருகன் என்னும் மன்னனை) சாபத்தினின்று விடுவிக்கப் போகின்றாய். த்வாரகையில் ஜாம்பவதியை மணம் புரிவதுடன் ஸ்யமந்தக மணியையும் பெறப் போகின்றாய். மரணம் அடைந்த ப்ராஹ்மண புத்ரர்களை உன் ஸ்தானமாகிய வைகுண்ட லோகத்தினின்று கொண்டு வந்து கொடுக்கப் போகின்றாய். பிறகு, பௌண்ட்ரகனை வதிக்கப் போகின்றாய். அப்பால், காசிப்பட்டணத்தைக் கொளுத்தப் போகின்றாய். தந்தவக்த்ரனை வதிக்கப்போகின்றாய். தர்மபுத்ரனுடைய ராஜஸூய யாகத்தில் சிசுபாலனை வதிக்கப்போகின்றாய். இவற்றையெல்லாம் நான் பார்க்கப் போகின்றேன். மற்றும், நீ த்வாரகையில் வாசம் செய்து கொண்டு, பூமியில் பண்டிதர்களால் பாடத்தகுந்தவைகளான எந்த எந்தச் செயல்களை நடத்தப் போகின்றனையோ, அவற்றையெல்லாம் நான் பார்க்கப் போகிறேன். அப்பால், காலத்தைச் சரீரமாகவுடைய நீ அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்து, பூமி பாரத்தை தீர்க்கும் பொருட்டுப் பல அக்ஷௌஹிணிக் கணக்குள்ள ஸைன்யங்களை (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படையை) அழிக்க நான் பார்க்கப் போகிறேன். நீ, அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் அற்றிருக்கை) முதலிய குணங்கள் அமைந்து, கேவலம் ஜ்ஞானாநந்த ஸ்வரூபனாயிருப்பவன். அளவற்ற ஆநந்தமயமான தன் ஸ்வரூபத்தை அனுபவிக்கையால், ஸமஸ்த காமங்களும் நிறைவேறப் பெற்றவன்; அவாப்தஸமஸ்தகாமன் (தன் விருப்பங்கள் அனைத்தும்       நிறைவேறப் பெற்றவன்); ஸத்யஸங்கல்பன் (நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை உடையவன்); முயன்ற கார்யம் எதுவும் வீணாகப் பெறாத விசித்ர சக்தியுடையவன். 

தன் தேஜஸ்ஸினால், மாயையின் குணங்களான ஸத்வாதிகளுடைய ப்ரவாஹத்தை (வெள்ளப் பெருக்கை) என்றும் உதறியிருப்பவன்; ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); ஸர்வேச்வரன், இத்தகையனான உன்னைச் சரணம் அடைகின்றேன். நீ தன்னையே தனக்கு ஆதாரமாகவுடையவன்; பூமி முதலிய பூதங்களைக் கொண்டு தன் ஸங்கல்பத்தினால் தேவாதி ஸ்ருஷ்டியை நடத்தினவன். இப்பொழுது, லீலைக்காக மானிட உருவை ஏற்றுக் கொண்டிருக்கின்றாய். யாதவர்களுக்கும், வ்ருஷ்ணிகளுக்கும், ஸாத்வதர்களுக்கும், பாரவாஹியாய் (உயர்ந்தவனாய், சிறந்தவனாய்) இருக்கின்றாய். உன்னைச் சரணம் அடைகின்றேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பாகவத ச்ரேஷ்டராகிய நாரதமுனிவர் இவ்வாறு யாதவர்களுக்குப் பதியான ஸ்ரீக்ருஷ்ணனை நமஸ்கரித்து, அவனால் அனுமதி கொடுக்கப் பெற்று, அவனுடைய காட்சியினால் களிப்புற்றிருப்பினும், மீளவும் காண வேண்டுமென்னும் விருப்பம் மாறப் பெறாமலே திரும்பிச்சென்றார். கோகுலத்திற்கு சுகம் விளைப்பவனும், மஹானுபாவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனும், யுத்தத்தினால் கேசியை வதித்து, அன்பர்களான இடைப்பிள்ளைகளுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். ஒருகால், ஸ்ரீக்ருஷ்ணன் முதலில் அந்த இடைப்பிள்ளைகள் சிலர் திருடர்களென்றும், சிலர் அவர்களிடத்தினின்று காக்கிறவர்களென்றும் ஏற்படுத்திக் கொண்டு, நிலாயனமென்னும் விளையாட்டு விளையாடினார்கள். மன்னவனே! அவர்களில் சிலர் திருடர்களாயிருந்தார்கள், சிலர் அவர்களிடத்தினின்று காப்பவர்களாயிருந்தார்கள். மற்றவர் ஆடுகளாயிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு மூன்று வகையாகப் பிரிந்து விளையாடினார்கள். அப்பொழுது மயனுடைய பிள்ளையும் மஹாகாயனுமாகிய (மஹாகாயன் பெரிய சரீரமுடையவன்) வ்யோமனென்னும் அஸுரன், இடைப்பிள்ளைகளின் உருவம் போன்ற உருவந்தரித்துப் பெரும்பாலும் தான் திருடனாகவே இருந்து, ஆடுகளாயிருந்த இடைப்பிள்ளைகள் பலரையும் எடுத்துக் கொண்டு போனான். 

அவ்வாறு கொண்டு போன கோபர்களையெல்லாம் அம்மஹாசூரன் பர்வத குகையில் வைத்து, அதன் த்வாரத்தைப் பாறையால் மூடிவைத்தான். விளையாட்டில் நான்கு ஐந்து கோபர்களே மிகுந்திருந்தார்கள், அப்பொழுது, ஸத் புருஷர்களுக்குச் சரணங்கொடுப்பவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் அந்த வ்யோமாஸுரனுடைய கார்யத்தை அறிந்து, ஸிம்ஹம் செந்நாயைப் பிடிப்பது போல, கோபர்களை கொண்டு போகின்ற அவ்வஸுரனை வலிவுடன் பிடித்துக்கொண்டான். 

மஹா பலிஷ்டனாகிய அவ்வஸுரன் அப்பொழுது பெரிய பர்வதம் (மலை) போன்ற உண்மையான  தன்னுருவத்தைத் தரித்து, ஸ்ரீக்ருஷ்ணன் பிடித்துக்கொண்டதால் வேதனையுற்று வருந்தி, தன்னை அவனிடத்தினின்று விடுவித்துக் கொள்ள விரும்பியும், அதற்கு வல்லவனாகவில்லை. அப்பால், ஸ்ரீக்ருஷ்ணன் அவனை இரு புஜங்களாலும் (கைகளாலும்), நன்றாக இறுக்கிப் பிடித்துப் பூமியில் தள்ளி, ஆகாயத்தில் தேவதைகள் பார்த்துக் கொண்டிருக்கையில், பசுவைக் கொல்லுவது போலக் கொன்று விட்டான். பிறகு, குஹையில் மூடியிருந்த பாறையை அகற்றி பர்வத (மலை) குஹையில் அகப்பட்டுக் கொண்ட வருத்தத்தினின்று கோபர்களை விடுவித்து, தேவதைகளாலும், கோபர்களாலும், துதிக்கப் பெற்றுத் தன் கோகுலம் போய்ச் சேர்ந்தான். 

முப்பத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக