திருப்பாவை - 28 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி எட்டாவது பாசுரம்

(ஆண்டாள் சென்ற பாசுரத்தில் ‘கோவிந்தா’ என்று அழைத்தாள். இப்பாசுரத்திலும் அடுத்து வரும் பாசுரத்திலும் ‘கோவிந்த நாமம்’ தான். எப்பேற்ப்பட்ட நாமம் அது. நாமிருப்பதோ இப்பூவுலகில் அதை காப்பவன் கோவிந்தன். கண்ணன் என்னவெல்லாம் செய்வீர்கள் என்றதும் ஒரு பெரிய பட்டியலேப் போட்டாள் ஆண்டாள். அதைக் கேட்டதும் கண்ணன் அவர்களின் நிலை மற்றும் அவர்களின் செயல்கள் பற்றி அறிய ஆசைப்பட்டான். இதனை அறிந்த ஆண்டாள் இப்பாசுரத்தில் தாங்கள் யார் என்ன செய்கிறோம் என்பதை அறிவிக்கிறாள்.)


கண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ஆண்டாளை ஒரு புன்னகையுடன் ஒரு பார்வை வீசிவிட்டு,


“ஆண்டாள் இவ்வளவு பெரிய பட்டியலைப் போடுகின்றாயே. மேலும் நிறைய விஷயங்கள் எல்லோரைக் காட்டிலும் தெளிவாகப் பேசுகின்றாய். நீ எங்கிருந்து வருகிறாய், என்னவெல்லாம் செய்கிறாய்.”


“கண்ணா, நாங்கள் ஆயர்க்குலச் சிறுமிகள். நாங்கள் பிறந்தது முதல் பசுக்களோடே எங்கள் வாழ்க்கை. அவைகளோடு கானகம் செல்வோம் அங்கிருக்கும் கனிகளை உண்டு பசுக்களுக்கும் தருவோம். எங்களுக்கு அவ்வளவு பெரிய அறிவில்லை, ஞானமுமில்லை. நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் செய்த தவப்பயன் விளைவாய் நீ எங்கள் குலத்தினில் பிறந்திட்டாய். பெரும் புன்னியம் செய்தோம். ‘குறை ஒன்றுமில்லாத கோவிந்தா…..’


“கோதே, இவ்வளவு நேரம் நீ சொன்னவை நம்மைப் பற்றி இருந்தது. திடீரென்று குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்கின்றாயே. குறை கோவிந்தனுக்கா, நமக்கா.”


“பாவாய், என்ன தவறு செய்கிறாய். குறை கோவிந்தனுக்கா. அவனோடு சேர்ந்ததால் நமக்கு என்றும் குறையில்லை. அவனது நாமத்துக்கே குறைவில்லை.”


கண்ணன் குறுக்கிட்டு…


“ஆண்டாள் எனக்கும் குறையிருக்கிறது.”


“கண்ணா, குறையா உங்களுக்கா என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்.”


“ஆம் ஆண்டாள், நான் இராமாவதாரம் எடுத்தபோது, சீதை என் கைத்தலம் பற்றியபோது எனக்கு ‘மைத்துனன் பொரியிட’ எனக்கு மைத்துனனே இல்லை. அதேபோல் இந்த அவதாரத்திலும் எனக்கு சிறு குறை இருக்கின்றது. திரௌபதி கௌவரவர்கள் சபையினிலே துச்சோதனனால் மானப் பங்கப்பட்டபோது என்னால் உடனேச் சென்று அவளுக்கு உதவிட முடியவில்லையே. இவை எனக்கு குறை தானே ஆண்டாள்.”


“இல்லை கண்ணா, இவை இரண்டும் குறையேயில்லை. இராமவதாரத்தில் உனக்கு மைத்துனன் இல்லை என்று கவலை கொள்கிறாயே, கிருஷ்ணாவதாரத்தில் எத்தனை மைத்துனர்கள் உனக்கு கிடைத்தார்கள். சரி திரௌபதிக்கு உதவிட முடியவில்லை என்றாயே, அவள் அச்சபையில் எல்லோர் முன்னிலையிலும் மானபங்கப்படாமல் காத்ததே உன் கோவிந்த நாமத்தை அவள் உச்சரித்ததால் தானே கண்ணா. அவ்வளவு பெருமை வாய்ந்தது உன் கோவிந்த நாமம்.”


“அருமை ஆண்டாள். என்னை ஏதாவது சமாதானம் சொல்லி சமாளித்துவிடுகிறாய் என்னை ஆண்டவளே.”


“கண்ணா, இதுவரை நாங்கள் கடைப்பிடித்த பாவை நோன்பின் உண்மையான நோக்கம் உன்னோடு எங்களுக்கிருக்கும் உறவு என்றும் தொடர வேண்டும் என்பதுதான். நாங்கள் சிறுமிகள் அறியாதவர்கள் உன்னை சிறு பேரிட்டு அழைத்தாலும் எங்களிடம் கோவம் கொள்ளாதே. நாங்கள் வேண்டிக் கொள்ளும் பறையைத் தருவாய் கண்ணா. மணிவண்ணா. கோவிந்தா.”


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை