செவ்வாய், 12 ஜனவரி, 2021

திருப்பாவை - 29 - கோமான் ஶ்ரீ பாலாஜி

இருபத்தி ஒன்பதாவது பாசுரம்

(இப்பாசுரம் கிட்டத்தட்ட இறுதிப் பாசுரம் போலவேத் தோன்றும். ஆண்டாள் இதுகாறும் கண்ணனிடம் பாவை நோன்பு நோற்றதின் நோக்கம், கிடைக்க வேண்டியவை, கிடைத்தவை எல்லாம் பட்டியலிட்டாள். இப்பாசுரத்தில் அதன் முழுப்பயனைத் தெரிவிக்கிறாள். வாருங்கள் பாசுரத்திற்கு செல்வோம்.)


கண்ணன் ஆண்டாளைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்து கேட்க ஆரம்பித்தான்.


“ஆண்டாள், பசுக்களோடு வாழ்க்கை, அறிவு ஏதும் இல்லை என்று தெரிவித்தாய். வேறு ஏதேனும் பாக்கி இருக்கிறதா.”


“கண்ணா, தங்களை சந்தித்ததும் என் நோன்பின் முழுப்பயனையும் அடைந்தேன். இருப்பினும் முக்கியமான ஒன்று உள்ளது. கூறுகிறேன் கேளாய். ‘சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து'...


ஆண்டாளின் தோழிக்கு வழக்கம்போல் சந்தேகம்.


“கோதே, ‘சிற்றஞ்சிறுகாலே’ என்றால் சின்னஞ்சிறிய கால் என்றா அர்த்தம்.”


“பாவாய், ‘காலே’ என்றால் கால்களை குறிக்கவில்லை. பொழுதினைக் குறிக்கிறேன். காலை, சிறுகாலை, சின்னஞ்சிறுகாலை என்று காலையையே வகைப்படுத்தி பார்க்கிறேன். அதிகாலை நேரத்தில் நீராடிவிட்டு நம் கண்ணனை சேவித்து…”


“கோதே, சேவித்து என்றால்…”


“பாவாய், சேவித்து என்பது வணங்குதல் என்ற அர்த்தத்தில் வழங்கப்படும் வார்த்தையடி. நாம் சிற்றஞ்சிறுகாலே நம் கண்ணனை சேவித்து அவனின் பொற்றாமரையடியே போற்றுவோம்.”


“கோதே, ‘பொற்றாமரையடி’ என்றாலே போதும் ‘பொற்றாமரையடியே’ என்று ஏன் ஏகாரத்துடன் விளித்துப் பாட வேண்டும்.”


“பாவாய், நமக்கு பகவான் நாராயணன் தான் அவன் திருவடிகளைத் தவிர யாரையும் வணங்குதல் வேண்டாம். அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனின் பொற்றாமரையடியே நமக்கு புகலிடம். அதனால் தான் விளித்துக் கூற வேண்டியதாயிற்று.”


ஆண்டாள், கண்ணனைப் பார்த்து புன்னகைத்து…


“கண்ணா மணிவண்ணா, உன் தாமரையடிகளையே போற்றுகின்றோம் அதற்கான காரணத்தை உனக்கு சொல்கிறேன் கேட்பாயாக. மாடுகள் மேய்த்து வாழ்க்கை நடத்தும் எங்கள் ஆயர் குலத்தில் பிறந்த நீ எங்களை விடக்கூடாது. உன்னைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் புகல்வதற்கு இல்லை. நாங்கள் உன்னுடைய ஏவலுக்காகக் காத்திருக்கிறோம். நீ இட்ட வேலையைச் செய்வோம். அதேபோன்று நாங்கள் செய்யும் கைங்கர்யத்தையும் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று நீ சொல்லக் கூடாது. இதையே உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். ‘இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா’...


கண்ணன் குறுக்கிட்டு….


“ஆண்டாள், உங்களை விட்டால் நானில்லை என்னை விட்டால் நீங்களும் இல்லை. நமது பந்தம் அப்படியானது. சரி இதுவரை ஒன்பது முறை ‘பறை பறை’ என்று பாடியுள்ளாயே உண்மையில் உனக்கு ‘பறை’ எனும் வாத்தியம் தான் வேண்டுமா. முதல் பாசுரத்தில் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்றாய். இருபத்திஎட்டாவது பாசுரத்தில் ‘நீ தாராய் பறை’ என்று பாடியுள்ளாய். எனக்கு கொஞ்சம் விளக்கேன்.”


“ஆகா கண்ணா, உனக்கே விளக்கமா. எல்லாம் அறிந்தவன் நீ. இப்பிறவிக்கும் ஈரேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உறவாக, உன்னோடு உழண்டு, உனக்கே தொண்டு செய்து ஜீவிக்க வேண்டும். இதையே பறை பறை என்று குறிப்பால் பாடியுள்ளேன், மேலும் மற்றைய நம் காமங்களையும் மாற்றேன்.”


“ஆண்டாள், ‘மற்றைய நம் காமங்கள் மாற்று’ என்கிறாயே. எந்த காமங்களை மாற்றச் சொல்கிறாய்.”


“கண்ணா, நாங்கள் எப்பிறவியிலும் அந்தந்த நேரத்திற்கு உண்டான காமங்கள் ஏதும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவை அனைத்தையும் அழிக்க உன்னிடம் கோரவில்லை. அவை அனைத்தும் இருக்கட்டும், அதையெல்லாம் திசைமாற்றி உன் மேல் மாற்று என்று தான் குறிப்பிடுகிறேன். ‘என் பாச நெஞ்சை மடைமாற்றி உன் சேவடிக்கே வைத்தருளேன்.’


“அற்புதம் ஆண்டாள். இதிலும் நீ என்னுடைய காமங்கள் என்று சொல்லாமல் ‘நம் காமங்கள்’ என்று கூறி நம்மிருவரையும் இணைத்துவிட்டாய். வாழ்க நீ.”


‘சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.’


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக