புதன், 13 ஜனவரி, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 254

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – முப்பத்தெட்டாவது அத்தியாயம்

(அக்ரூரன் நந்தகோகுலம் போகும்பொழுது வழியில் ஸ்ரீ க்ருஷ்ணானுபவத்தைப் பற்றி மனோரதித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் அக்ரூரனை ஸத்கரித்தலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவானிடத்தில் ஆழ்ந்த மதியுடைய அக்ரூரனும், அன்றைய தினம், இரவு மதுரையில் இருந்து, மற்றை நாள் விடியற்காலையில் ரதத்தில் ஏறிக்கொண்டு, நந்த கோகுலத்திற்குப் போனான். மிகுந்த பாக்யமுடைய அவ்வக்ரூரன், பகவானிடத்தில் மிகுந்த பக்தி உண்டாகப்பெற்று,  வழியில் போய்க் கொண்டே, இவ்வாறு சிந்தித்தான். “நான் என்ன மங்கல கார்யம் செய்தேனோ? மேம்பட்ட தவம் என்ன செய்தேனோ?” ஸத்பாத்ரமான (தானம் பெறுவதற்கு  தகுதி உடைய சிறந்த) புருஷனுக்கு என்ன தானம் செய்தேனோ? ஏனென்றால், இப்பொழுது  நான் கேசவனைப் பார்க்கப் போகிறேனல்லவா? இல்லாத பக்ஷத்தில், இது எனக்கு எப்படி நேரும்? கீழ் ஜாதியில் பிறந்தவனுக்கு வேதம் சொல்லுவது எவ்வாறு கிடைக்க அரிதோ, அவ்வாறே சப்தாதி விஷயங்களில் சுழித்த (ஆழ்ந்து ஈடுபட்ட) மனமுடைய எனக்கு, உத்தம ச்லோகனான பகவானுடைய இத்தகைய தர்சனம் கிடைப்பது அரிதே. 

ப்ரஹ்மாதி தேவதைகளும்கூட அவனை வெறுமனே புகழ்ந்து மனத்தினால் சிந்திக்க வேண்டுமேயன்றி காணமாட்டார்கள். அத்தகைய பரமபுருஷனுடைய தர்சனம் எனக்கு எவ்வாறு கிடைக்கும்? அல்லது இப்படி அன்று. நீசனாகிய (தாழ்ந்தவனாகிய) எனக்கும்கூட அச்சுதனுடைய தர்சனம் கிடைக்கும். ஏனென்றால், ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகின்ற புல் முதலியவற்றில் ஒன்று ஒருகால் கரையேறுவதும் உண்டல்லவா? அவ்வாறே கர்ம வசத்தினால் காலமாகிற ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகிற ஜீவாத்மாக்களுக்குள் ஒருவன், ஒருகால் கரையேறக்கூடும். இப்பொழுது, என்னுடைய அமங்கலமெல்லாம் (தீமைகள் எல்லாம்) பறந்து போயிற்று. இப்பொழுது, என்னுடைய ஜன்மமும் ஸபலமாயிற்று. ஏனென்றால், யோகிகளுக்கும் கூட த்யானிக்கக்கூடியதேயன்றிக் காணக்கூடாததான பகவானுடைய அடித்தாமரையை, நான் வணங்கப் போகிறேனல்லவா? 

கம்ஸன் இப்பொழுது எனக்கு மிகவும் மேம்பட்ட அனுக்ரஹம் செய்தான். ஆ! என்ன ஆச்சர்யம்! நான் அவனால் அனுப்பப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தத்தைப் பார்க்கப்போகிறேனல்லவா! முன்புள்ள பெரியோர்கள், பூமியில் மானிட உருவம் பூண்டு, அவதரித்த இந்தப் பகவானுடைய பாதாரவிதங்களின் நக மண்டலங்களுடைய (நகங்களின்) காந்தியினால் எவ்விதத்திலும் கடக்க முடியாத பாபமாகிற அந்தகாரத்தைக் கடந்தார்கள். (இப்பகவானுடைய பாதங்களை த்யானித்த மாத்ரத்தில், பெரியோர்கள் பாபங்களைக் கடந்தார்களென்றால், அப்பகவானுடைய பாதார விந்தங்களை நேரில் காணப் போகிற என்னுடைய பாபங்கள் தொலைந்தன என்பதில் ஸந்தேஹம் உண்டோ?) ப்ரஹ்ம தேவன், ருத்ரன் முதலிய தேவதைகள், ஸ்ரீமஹாலக்ஷ்மி, பக்தர்கள், முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்டதும், அனுசரர்களான (உடன்  பின் செல்பவர்களான, நண்பர்களான) கோபாலர்களுடன் பசு மேய்க்கும் பொருட்டு வனத்தில் ஸஞ்சரிப்பதும், கோபிகைகளின் கொங்கைகளிலுள்ள குங்குமக் குழம்புகளால் அடையாளம் செய்யப்பட்டதுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தத்தை, நான் காணப்போகிறேன். 

அழகிய கபோலங்களும் (கன்னங்களும்), அத்தகைய மூக்கும், புன்னகையோடு கூடின கண்ணோக்கமும், செந்தாமரை மலர்போல் சிவந்த கண்களும் அமைந்து, சுரி குழல்களால் சூழப்பட்டிருப்பதுமாகிய முகுந்தனுடைய முகத்தை நான் பார்க்கப் போகிறேன். இது நிச்சயம். இந்த ம்ருகங்கள் எனக்கு ப்ரதக்ஷிணமாய்ப் போகின்றன. (இந்தச் சுபசகுனம் (நல் அறிகுறி) வீண்போகாது.) பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவம் பூண்டவனும், மேலான லாவண்யமுடையவனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தர்சனம் எனக்கு இப்பொழுது  நேருமாயின், என் கண்களுக்குப் பயன் உடனே உண்டாகுமென்பதில் ஸந்தேஹமில்லை.

இப்பரமபுருஷன், தன் சரீரங்களான ப்ரக்ருதி புருஷர்களை ஸாக்ஷாத்கரிப்பவன்; ஜீவனைப்போல் தேஹத்தை (உடலை) ஆத்மாவாக ப்ரமிப்பதற்குக் காரணமான அஹங்காரமற்றவன். மற்றும், இவன் தனக்கு அஸாதாரணமான அளவற்ற ஜ்ஞானமாகி, தேஜஸ்ஸினால் அஜ்ஞானமாகிற தமஸ்ஸையும் (இருட்டு, தமோ குணம்), ஸ்வதந்த்ரவஸ்து (பகவானுக்கு உட்படாமல் தன்னிச்சையாக செயல்பட வல்ல பொருள்) உண்டென்கிற பேதத்தையும், உதறியிருப்பவன்; மற்றும், தன் சரீரமான ப்ரக்ருதியைக் கொண்டு அது பரிணமிக்கும்படி ஸங்கல்பித்து, தானே ஆதாரமாயிருந்து, ப்ராணன்கள், இந்திரியங்கள், புத்தி, இவற்றைப் படைத்து, இவற்றால் போகத்திற்கிடமான தேஹங்களில் ஊஹிக்கப்படுகிறான். இவனுடைய குணங்களும், செயல்களும், பிறவிகளும், சொல்லுவதும், கேட்பதும், செய்கின்ற ஸகல ஜனங்களின் பாபங்களையும் போக்கும் திறமையுடையவை; மிகவும் மங்கலமாயிருப்பவை. 

இத்தகைய குணம், செயல், பிறவி இவற்றை மொழியும் சொற்கள், ஜகத்தைப் பிழைப்பித்து, விளங்கச் செய்து, புனிதம் செய்கின்றன. இவற்றின் ஸம்பந்தமற்ற சொற்கள், பல அழகுகள் அமைந்திருப்பினும், சவத்திற்குச் (பிணத்திற்குச்) செய்யும் அலங்காரங்களோடு ஒத்தவைகளேயாம். எவன் இத்தகைய ஸர்வேச்வரனென்றும், மஹாவிஷ்ணு என்றும் கூறப்படுகிறானோ, அவனே யாதவ குலத்தில் ஸ்ரீக்ருஷ்ணனாய் அவதரித்திருக்கின்றான். அவன், தன்னால் ஏற்படுத்தப்பட்ட தர்ம மர்யாதைகளைப் பாதுகாப்பவர்களான தெய்வப் பிறப்பினர்களுக்கு க்ஷேமத்தை விளைக்க முயன்று, ஸமஸ்த மங்கலங்களுக்கும் இருப்பிடமும், தேவதைகளால் பாடப்பட்டதுமாகிய தன் புகழைப் பரவச் செய்து கொண்டு, கோகுலத்தில் இருக்கின்றான். 

ஸத் புருஷர்கள் தன்னைப் பெறுதற்குத் தானே உபாயமாயிருப்பவனும், அவர்களுக்கு ஹிதம் (நன்மை) செய்பவனும், மூன்று லோகங்களிலும் அழகான உருவம் தரித்திருப்பவனும், கண் படைத்தவர்களுக்கு மஹோத்ஸவத்தை விளைப்பவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு இனிய வாஸஸ்தானமுமாகிய (இருப்பிடமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணனை நான் இப்பொழுது நிச்சயமாய்ப் பார்க்கப் போகின்றேன். எனக்கு விடியற்காலங்கள் நன்மையை விளைக்கும்படி அருள்புரிந்தன. (இரவெல்லாம் நல்ல பொழுதாக விடிந்தன, நான் அங்கு சென்று இந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டவுடன், ரதத்தினின்றும் இறங்கி, ஜகதீச்வரர்களும் புருஷோத்தமர்களுமாகிய ராம க்ருஷ்ணர்களின் பாதார விந்தங்களை வணங்குவேன். 

யோகிகளும் கூட இந்தப் பாதார விந்தங்களை தங்கள் ஸத்தை (இருப்பு) ஸித்திக்கும் பொருட்டு, புத்தியால் பாவிக்கிறார்களன்றி, கண்ணால் கண்டதில்லை. (அத்தகைய பாதார விந்தங்களை கண்களால் காணப் பெற்ற நான் என்ன பாக்யசாலியோ) மற்றும், அந்த ராம க்ருஷ்ணர்களோடு அவர்களுடைய நண்பர்களான கோபர்களையும் வணங்குவேன். அப்பால், ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணன்  தன் பாதார விந்தங்களில் விழுந்திருக்கின்ற என் சிரஸ்ஸில் காலமாகிற ஸர்ப்பத்தின் வேகத்தினால் பயந்து தன்னைச் சரணம் அடையும் ஜனங்களுக்கு அபயம் கொடுப்பதும், தாமரை மலர் போன்றதுமாகிய தன் கரத்தை வைப்பான். இந்த்ரனும், பலி சக்ரவர்த்தியும் இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஹஸ்தத்தில் (கையில்) அர்க்யம் கொடுத்து, மூன்று லோகங்களுக்கும் ப்ரபுக்களாயிருக்கையாகிற மேன்மையைப் பெற்றார்களல்லவா? செங்கழு நீர் மலரின் பரிமளமுடைய இந்த ஹஸ்தம் (கை), விளையாடல்களால் இளைப்புற்ற கோபிகைகளின் ச்ரமத்தைத் தன் ஸ்பர்சத்தினால் போக்கிற்றல்லவா? (அப்படிப்பட்ட தன் ஹஸ்தத்தை (கையை) ஸ்ரீக்ருஷ்ணன், என் சிரஸ்ஸில் வைப்பானாயின், எனக்கு வேறு பயன் என்ன வேண்டும்?)  

நான் கம்ஸனால் அனுப்பப்பட்டவன்; அவனுடைய ப்ருத்யனுமாய் (சேவகனுமாய்) இருக்கின்றேன்; ஆயினும், ஸ்ரீக்ருஷ்ணன் என்னிடத்தில் சத்ருவென்னும் (எதிரி என்னும்) புத்தியைக் கொள்ளமாட்டான். அவன் எல்லாவற்றையும் அறிந்தவன்; ஒரே காலத்தில் எல்லாச் சரீரங்களையும் அறிந்து, அவற்றை நியமித்துக் கொண்டிருப்பவன். மற்றும், அவன் நம்மனத்திற்கு உள்ளும் புறமும் வஸித்துக் கொண்டு மலர்தலும், குவிதலுமின்றி ஒருவாறாயிருப்பதும், நிர்மலமுமான தன் ஞானத்தினால் அம்மனத்தின் கருத்தையெல்லாம் காண்கின்றான். நான் வெளியில் மாத்ரம் கம்ஸனை அனுஸரிக்கிறேனன்றி, உள்ளூர ஸ்ரீக்ருஷ்ணனையே அனுஸரித்திருக்கின்றேன். ஹ்ருதயத்தில் வாஸம் செய்கின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு, இது தெரியுமாகையால், என்னைச் சத்ருவென்று (எதிரி என்று) நினைக்கமாட்டான். மற்றும், அதே ஸ்ரீக்ருஷ்ணன் தன் பாதமூலத்தில் மனவூக்கத்துடன் கைகுவித்துக்கொண்டிருக்கின்ற என்னைப் புன்னகை அமைந்து கருணையில் நனைந்திருக்கின்ற கண்ணால் காண்பானாயின், அப்பொழுதே நான் பாபங்களெல்லாம் தொலையப்பெற்று, சங்கையின்றி (ஸந்தேஹம் இன்றி) நிலைநின்ற சந்தோஷத்தை அடைவேன். 

மிகுந்த நண்பனும், பந்துவும் தன்னை விட வேறு தெய்வம் உண்டென்று நினையாதவனுமாகிய என்னை அந்த ஸ்ரீக்ருஷ்ணன் நீண்ட புஜ தண்டங்களால் (கைகளால்) அணைத்துக் கொள்வான், அப்பொழுதே, என் சரீரம் பரிசுத்தமாக்கப்படுமல்லவா? அதனால், என்னுடைய கர்மபந்தமும் அறுந்து போய்விடும். பெரும் புகழனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஆலிங்கனம் செய்யப் பெற்று, வணங்கி, அஞ்சலித்துக் கொண்டிருக்கின்ற என்னை “அக்ரூர! அப்பா!” என்று அழைப்பான். அப்பொழுதன்றோ என்னுடைய ஜன்மம் ஸபலமாகும் (பயன்பெறும்). மிகவும் மஹானுபாவனாகிய பகவானால் எவன் ஆதரிக்கப் பெற மாட்டனோ, அவனுடைய ஜன்மத்தைச் சுடவேண்டுமல்லவா? 

எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்குந்தன்மையுள்ள அப்பரமபுருஷனுக்கு, அன்பிற்கிடமாயிருப்பவனாவது, மிகுந்த நண்பனாவது, த்வேஷிக்கத் (பகைக்கத்) தகுந்தவனாவது, உபேக்ஷிக்கத் (ஒதுக்கத்) தகுந்தவனாவது ஒருவனும் இல்லை. அவனுக்கு, அத்தகைய பேத (வேற்றுமை) புத்தி கிடையாது. ஆயினும், பக்தர்கள் தன்னை எவ்வாறு பணிகின்றார்களோ, அப்படியே தானும் அவர்களைப் பணியும் தன்மையன். கல்ப வ்ருக்ஷம் தன்னை அடைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் ப்ரயோஜனங்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றது; தன்னைப் பணியாதவர்களுக்கு அவ்வாறு செய்கிறதில்லை. அவ்வாறே இந்தப் பரமபுருஷனும் தன்னை ப்ரீதியோடு பணிகின்றவர்களை,  தானும் ப்ரீதியோடு தொடர்கின்றான். 

இதனால், அவனுக்கு விஷமம் உண்டென்று சொல்ல முடியாதல்லவா? மற்றும், யாதவ ச்ரேஷ்டனும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்கு தமையனுமாகிய பலராமன், தன் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கின்ற என்னைப் புன்னகையுடன் வாரியெடுத்து அணைத்து, என்னைக் குவித்த கைகளில் பிடித்து, மாளிகைக்குள் அழைத்துக் கொண்டு போய்,  எனக்கு அர்க்யம் முதலிய ஸத்காரங்களெல்லாம் செய்து, தன் பந்துக்கள் மேல் கம்ஸன் செய்யும் த்ரோஹத்தைப் பற்றி வினவுவான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்வபல்கனுடைய பிள்ளையாகிய அக்ரூரன், இவ்வாறு வழி முழுவதும் சிந்தித்துக் கொண்டே ரதத்தின்மேல் ஏறி, கோகுலம் போய்ச் சேர்ந்தான். மன்னவனே! அப்பொழுது, ஸூர்யனும் அஸ்தமய பர்வதத்தை அடைந்தான். அவ்வக்ரூரன், அந்தக் கோகுலத்தில் ஸமஸ்த லோகபாலர்களின் கிரீடங்களால் ப்ரீதியுடன் பணியப்பட்ட பாதார விந்தங்களின் பராகங்களையுடைய (தூள்களை உடைய) ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடி வைப்புக்களைக் கண்டான். அவை, பூமிக்கு அலங்காரங்களாயிருந்தன; மற்றும், தாமரை மலர், மாவெட்டி, இவை முதலிய ரேகைகளாகிற அடையாளங்களால் அறியக் கூடியவைகளாயிருந்தன. அவன், அந்த அடிவைப்புக்களைக் கண்ட மாத்ரத்தினால் ஸந்தோஷம் அடைந்து, மிகவும் பரபரப்புற்று, ப்ரீதியினால் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்று, கண்ணீர்த் துளிகளால் கலங்கின கண்களுடையவனாகி, ரதத்தினின்றும் இறங்கி, “இவை நம் ப்ரபுவான ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களின் பராகங்களல்லவா (தூள்கள் அல்லவா)” என்னும் எண்ணத்துடன் அவற்றில் விழுந்து, புரண்டான். 

பகவானுடைய குணங்களைச் சொல்லுவதனாலாவது, அவனுடைய திருவுருவங்களையும் மற்ற அடையாளங்களையும் காண்பது கேட்பது முதலியவற்றாலாவது, தன்னிலைமை மாறப் பெறுகையாகிற இவ்வளவே இவ்வுலகத்தில் தேஹம் படைத்தவர்கள் பெறக்கூடிய புருஷார்த்தம். ஆகையால், ஸ்ரீக்ருஷ்ணனுடைய அடி வைப்புக்களைக் கண்ட மாத்ரத்தில் அவற்றில் விழுந்து புரளும்படியான நிலைமை உண்டாகப் பெற்றமை, அவ்வக்ரூரனுடைய பாக்ய மஹிமையேயன்றி, வேறன்று. ஆனால், ஜம்பத்தினாலாவது, பயத்தினாலாவது, சோகத்தினாலாவது, அவ்வாறு செய்வானாயின், அது புருஷார்த்தமாகாது. 

அவ்வக்ரூரன், நெடு நேரம் புரண்டு, மீளவும் ரதத்தில் ஏறிக்கொண்டு, பசுக்களுக்கு நாதனான ஸ்ரீக்ருஷ்ணனும், பலராமனும் எங்கே இருக்கின்றார்களென்று வினவிக் கொண்டே, வேகமாகச் சென்றான். அப்பால், அவன் கோகுலத்தில் பசுக்கள் கறக்குமிடத்தில் இருக்கின்ற ராம க்ருஷ்ணர்களைக் கண்டான். அவர்களில் ஒருவன், பீதாம்பரத்தையும், மற்றோருவன் நீலாம்பரத்தையும் உடுத்தி இருந்தார்கள். (ஸ்ரீக்ருஷ்ணன் பீதாம்பரம் உடுத்தவனாகையாலும், பலராமன் நீலாம்பரம் உடுத்தவனாகையாலும், இவ்வவாறு உவமை கூறப்பட்டது) மற்றும், அவர்கள் சரத் காலத்தில் (இலையுதிர் காலத்தில்) மலர்ந்த  தாமரை மலர் போன்ற  கண்களுடையவர்களும், பாலர்களும், ஒருவன் கறுப்பும், ஒருவன் வெளுப்பாயிருப்பவர்களும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும், சோபைக்கும் இடமாகிய புஜ தண்டங்களும், அழகிய முகமும் அமைந்து, மிகவும் அழகாயிருப்பவர்களும், யானைக்குட்டிகள் போல நடப்பவர்களும், த்வஜம், வஜ்ரம், மாவெட்டி, தாமரை மலர் இந்த ரேகைகளால் அலங்காரம் செய்யப் பெற்ற அடிகளால், கோகுலத்தை விளங்கச் செய்பவர்களும், மஹானுபாவர்களும், தயையும், புன்னகையும் அமைந்த கண்ணோட்டமுடையவர்களும், மேம்பட்ட அழகிய விளையாடல்களை உடையவர்களுமாகி, ஸ்னானம் செய்து, நிர்மலமான வஸ்த்ரங்களை உடுத்தி, சந்தனம் பூசி, வனமாலையும், மற்றும் பல பூ மாலைகளும் அணிந்திருந்தார்கள். புருஷ ச்ரேஷ்டர்களும், ஆதி புருஷர்களும், ஜகத் காரணர்களும், ஜகத்தையெல்லாம்  தாமேயாயிருப்பவர்களும், ஜகத்தை பாதுகாக்கும் பொருட்டு ஸங்கல்பத்தினால் அவதரித்தவர்களுமாகிய அத்தகைய ராம க்ருஷ்ணர்களை அக்ரூரன் கண்டான். 

மன்னவனே! இடையில் ஸ்வர்ண ரேகையுடைய மரகத பர்வதம் போன்ற ஸ்ரீக்ருஷ்ணன், இடையில் மைப் பூசின வெள்ளி மலை போன்ற பலராமன், ஆகிய இவ்விருவரும் தங்கள் தேஹ காந்தியால் திசைகளை எல்லாம் இருளற்று விளங்கச் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த அக்ரூரன் அக்கணமே ரதத்தினின்று இறங்கி, ப்ரேமத்தினால் தழதழத்து, ராம க்ருஷ்ணர்களின் பாதங்களில் தண்டம் போல விழுந்தான். பகவானைக் கண்ட ஆனந்தத்தினால் நீர் தளும்பின கண்களுடையவனாகி, உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகப் பெற்று, ஸந்தோஷத்தின் மிகுதியால் தன் பெயரைச் சொல்ல முடியாதிருந்தான்.  தன்னை வணங்கினவர்களிடத்தில் வாத்ஸல்யமுடைய மஹானுபாகனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வக்ரூரனுடைய நிலைமையை அறிந்து, சக்ராயுதம் பிடித்த அடையாளமுடைய கையினால் அவனை அருகாமையில் இழுத்து, ப்ரேமத்துடன் அணைத்துக் கொண்டான். 

அப்பால், பலராமனும் நமஸ்கரித்த அக்ரூரனை ஆலிங்கனம் செய்து, மனக்களிப்புற்று, தன் கையால் அவன் கையைப் பிடித்து, தம்பியாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடன் க்ருஹத்திற்குள் அழைத்துக் கொண்டு சென்றான். பிறகு, நல்வரவாகுக என்று வினவி, அவ்வக்ரூரனுக்கு மேலான ஆஸனம் அளித்து, விதிப்படி பாதங்களை அலம்பி, மது பர்க்கம் (தேன் கலந்த பழம்) கொண்டு வந்து கொடுத்தான். அனந்தரம் (பிறகு), அதிதியாகிய (விருந்தாளியாகிய) அவ்வக்ரூரனுக்கு ஆவலுடன் பசுவை தானமாகக் கொடுத்து, இளைப்புற்றிருக்கின்ற அவனுக்கு ச்ரத்தையுடன் அறுசுவைகளும் அமைந்து, மற்றும் பல குணங்களும் நிறைந்து பரிசுத்தமுமாகிய அன்னத்தையும் அளித்தான். பிறகு, ஏலக்காய், லவங்கம், கற்பூரம் முதலிய முகவாஸனைகளாலும், சந்தனம் முதலிய கந்தங்களாலும், பூமாலைகளாலும், தாம்பூலம் முதலிய மற்றும் பல உபசாரங்களாலும், போஜனம் செய்த அவ்வக்ரூரனுக்கு, ப்ரேமத்துடன் மேலான ஸந்தோஷத்தை விளைத்தான். 

பிறகு, நந்தகோபன் இவ்வாறு ஸத்கரிக்கப்பட்ட அவ்வக்ரூரனைப் பார்த்து, அனுக்ரஹமென்பதையே அறியாதவனும், கொடியனுமாகிய கம்ஸன் ஜீவித்திருக்கையில், கொலையாளியால் பாதுகாக்கப்பட்ட ஆடுகள் போல, நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? தன் பகினி (சகோதரி), வேண்டாமென்று முறையிட்டுக் கொண்டிருக்கையில், அவளுடைய குழந்தைகளை இவன் வதித்தானல்லவா? இவன் தன் ப்ராணன்களின் த்ருப்தியைத் தேடுவதிலேயே மிக்க மன ஊக்கமுடையவன்; துஷ்டன். இத்தகையனான கம்ஸனுடைய ப்ரஜைகளாகிய உங்களுக்கு க்ஷேமமென்பது எவ்வாறு இருக்குமென்று சிந்திக்கிறோம் (நீங்கள் ஜீவித்திருப்பதே அருமையாயிருக்க, க்ஷேமம் ஏது) என்று க்ஷேமம் வினவினான். 

முப்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக